Tuesday, December 07, 2010

தமிழகத்தின் சிங்கள தொப்புள்கொடி உறவுகள்(பகுதி : இரண்டு )


தமிழ், சிங்கள மொழிகளில் இனம் என்ற வார்த்தையே கிடையாது. பண்டைய சிங்களவர்களும், தமிழர்களும் மத, சாதிய வேறுபாடுகளை அறிந்திருந்தனர். ஆனால் வெவ்வேறு மொழி பேசுபவர்களை தனித்தனி இனங்களாக பார்க்கும் வழக்கம், ஆங்கிலேயரின் வருகைக்குப் பின்னர் தான் ஆரம்பமாகியது. ஆங்கில மொழிச் சொல்லான "Race ", ஆங்கிலம் கற்ற தமிழர்களால் "இனம்" என்று மொழிபெயர்க்கப்பட்டது. அது எவ்வளவு தூரம் சரியான மொழிபெயர்ப்பு என்று அவர்கள் கவலைப்படவில்லை.

தமிழில் சாதி என்றும், சிங்களத்தில் ஜாதிய என்றும் இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக இலங்கை மக்கள் பாகுபடுத்தப் பட்டனர். இன்று ஒவ்வொரு இலங்கைப் பிரஜையினதும் பிறப்புச் சான்றிதழிலும் அவ்வாறே குறிப்பிடப் படுகின்றது. முன்பு அந்த இடத்தில் சாதிப் பெயரை பதிந்து வந்தார்கள். காலப்போக்கில் அது அநாகரீகம் என்று கருதியதால், சிங்களவர், இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர், முஸ்லிம் என்றெல்லாம் பதிகிறார்கள். அந்தச் சொற்களைக் கூட சாதிக்கு மாற்றீடாக தான் பயன்படுத்துகிறார்களே ஒழிய, இனம் என்ற அர்த்தத்தில் அல்ல.

இனம் என்ற பாகுபாடு, பிற்காலத்தில் பல்லாயிரம் மக்கள் கொல்லப்படும் இரத்தக்களரிக்கு இட்டுச் செல்லப் போகின்றது என்பதை அன்று பலர் உணரவில்லை. ஒரு வேளை கடவுளுக்கு நிகரான சக்தி படைத்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் உணர்ந்திருப்பார்கள். சிங்கள இனவாதம், தமிழ் இனவாதம் இரண்டினதும் அடிப்படை, மக்களை இனங்களாக பிரித்துப் பார்ப்பதிலே தான் தங்கியுள்ளது.

ரஷ்யாவில் வெற்றியடைந்த போல்ஷெவிக் கம்யூனிஸ்ட் கட்சியின் தாக்கத்தால், உலகம் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தோன்றின. தொழிற்துறை அபிவிருத்தி காரணமாக பல்லினத் தொழிலாளர் வர்க்கம் கொழும்பை மையமாகக் கொண்டு தோன்றியிருந்தது. கம்யூனிச, சோஷலிசக் கட்சிகளின் தொழிற்சங்க நடவடிக்கைகள் அதிகரித்தன. தொழிலாளர் வர்க்கம் தனது உரிமைகளை, பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளருடன் போராடிப் பெற்றுக் கொண்டிருந்தனர்.

இலங்கையில் வேறெந்த கட்சிகளையும் விட கம்யூனிஸ்ட், சோஷலிசக் கட்சிகள் பெரும்பான்மைப் பலத்துடன் காணப்பட்டன. ரஷ்யாவை பின்பற்றி இலங்கையிலும் புரட்சி வெடிக்குமோ என அஞ்சிய பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் சிங்கள, தமிழ் மத்தியதர வர்க்கத்திற்கு இனவாதத்தை கற்றுக் கொடுத்தார்கள். அன்று பற்ற வைக்கப்பட்ட இனவாதத் தீ அறுபது ஆண்டுகளாக கொழுந்து விட்டு எரிகின்றது, என்பதை அறிந்து ஆங்கிலேயர்கள் அகமகிழ்ந்திருப்பார்கள்.

பிரிட்டிஷ் இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் போய்க் கொண்டிருந்தது. அன்றைய மலேசியாவை விட வளர்ச்சி அடைந்த பொருளாதாரத்தைக் கொண்டிருந்ததால், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தொழில் வாய்ப்பு தேடி வந்தார்கள். (இவர்களை மலையக பெருந்தோட்டத் தொழிலாளரிடம் இருந்து வேறு படுத்திப் பார்க்க வேண்டும்.) அவர்களில் பெரும்பான்மையானோர் தமிழ் நாட்டுத் தமிழர்கள் என்ற போதிலும், கணிசமான அளவு மலையாளிகளும், தெலுங்கர்களும் புலம்பெயர்ந்து வந்தார்கள்.

ஆரம்பத்தில் மலையாள, தெலுங்கு சமூகங்கள் தமிழை தாய் மொழியாக பேசி வந்தனர். இனப்பிரச்சினை கூர்மையடைந்த பின்னர், பலர் சிங்களத்தை தாய்மொழியாக்கிக் கொண்டுள்ளனர். ஒரு பகுதி கொழும்பு வாழ் இந்தியத் தமிழர்களும், தமிழை விட சிங்களத்திற்கு முன்னுரிமை கொடுப்பதை நானே நேரில் பார்த்திருக்கிறேன். தமிழகத் தொப்புள்கொடி உறவுகள் சிங்களவர்களாக மாறியதை வரலாறு நெடுகிலும் காணலாம். மேலே குறிப்பிட்டது மிக அண்மைய உதாரணம் மட்டுமே.

சிங்களவர்கள் தாமே இலங்கையின் பூர்வீக மக்கள் என்றும், தமிழர்கள் வந்தேறு குடிகள் என்றும் நம்புகின்றனர். மறுபக்கத்தில் தமிழர்கள் தாமே இலங்கையின் பூர்வீக மக்கள் என்றும், சிங்களவர்கள் வந்தேறு குடிகள் என்றும் நம்புகின்றனர். இரண்டு பக்கமும் இருக்கும் இனவாதிகள் அத்தகைய பிரச்சாரங்களை இன்றும் முன்னெடுத்து வருகின்றனர். உண்மையில் பெரும்பான்மை சிங்களவர்களும், தமிழர்களும் இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய சான்றுகள் உள்ளன.

இன்றைக்கும் பூர்வீக மக்களாக இனங்காணப் படக் கூடியவர்கள் வேடுவர்கள் மட்டுமே. அவுஸ்திரேலிய அபோரிஜின் பழங்குடி போல, இன்றைக்கும் நாகரீகத்துக்கு முந்திய கலாச்சாரத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை விட இயக்கர், நாகர், ராட்சதர்கள் ஆகிய இனங்கள் பண்டைய இலங்கையில் வாழ்ந்துள்ளன. இன்றைக்கும் பல ஊர்ப் பெயர்கள் அதற்கு சான்று பகர்கின்றன.

இந்தியாவில் இருந்து வந்து குடியேறியவர்கள், ஒன்றில் பழங்குடியினரை அழித்து விட்டார்கள், அல்லது அவர்களுடன் ஒன்று கலந்து விட்டார்கள். இன்றுள்ள சிங்கள, தமிழ் மொழிகள் பேசும் மக்கள், அத்தகைய கலப்பினத்தை சேர்ந்தவர்கள். மரபுரிமையை ஆராய்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்த முடிவுகள் இவை. (Genetic affinities of Sri Lankan populations.)

"அனுராதபுரத்திலே கலிங்கவாசர் குலம் விஜயனில் இருந்து ஐந்து தலைமுறைக்குள் அற்றுப் போக, கலிங்கரும் நாகரும் கலந்த மிசிர குலத்தரசர்களே அதன் பின் அரசாண்டு வந்தார்கள். தமிழரசரும் பலமுறைகளில் அனுராதபுரத்தை வெற்றி கொண்டு அரசாண்டு வந்தார்கள். அதனால் தமிழ்க் குடிகளும் இலங்கையில் குடியேறின. நாகரும், இயக்கரும், கலிங்கரும் கலந்தே சிங்களர் ஆயினார்கள். இலங்கை குடிச்சனங்களை சிங்களர் எனும் பெயரால் வழங்கத் தொடங்கியது தொட்டு நாகர், இயக்கர், கலிங்கர் எனும் நாமங்கள் வழக்கிழந்தன." (யாழ்ப்பாண சரித்திரம், சே.இராசநாயகம் )

இலங்கையை ஆண்ட சிங்கள அரசர்கள், இந்தியாவில் பாண்டிய நாட்டுடன் நெருங்கிய உறவைப் பேணி வந்தனர். பாண்டியர்களுக்கும், சிங்கள அரசர்களுக்கும் இடையில் திருமண பந்தங்கள் கூட ஏற்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான பாண்டிய மணப்பெண்கள், பரிவாரங்களுடன் அனுப்பப்பட்டதாக, இலங்கை வரலாற்றில் பலவிடங்களில் குறிப்பிடப் படுகின்றது. தமிழர்களான பாண்டியர்களின் வழித்தோன்றல்கள் சிங்களவர்களாக மாறி விட்டார்கள். சோழர்களின் படையெடுப்பை, சிங்கள-தமிழ் இன முரண்பாடுகளின் தோற்றமாக (சிங்கள) இனவாதிகள் காட்டுகின்றனர். எல்லாளன் - துட்ட கைமுனு போர் கூட அரசுரிமைப் போட்டியே தவிர, இன அடிப்படையிலான போர் அன்று.


உலகில் தேசிய இராணுவங்கள் 19 ம் நூற்றாண்டின் பின்னரே தோன்றின. பண்டைய காலத்தில் கூலிப் படைகளையே மன்னர்கள் போரில் ஈடுபடுத்தினார்கள். இலங்கையும் அதற்கு விதி விலக்கல்ல. சிங்கள மன்னர்கள் தமக்கிடையிலான போரில் தமிழகக் கூலிப் படைகளை பயன்படுத்தினார்கள். அந்தக் காலத்தில் சிங்கள அரசர்கள் போருக்கு தேவையான வீரர்களை தமிழ் நாட்டில் சென்று திரட்டுவது சர்வ சாதாரணம்.

உண்மையில் தென்னிந்தியாவில் நிலவிய பாண்டிய- சோழ மன்னர்களுக்கு இடையிலான பகைமையின் தொடர்ச்சியே இலங்கை மீதான படை நடவடிக்கைகள். சில நேரம், சிங்கள அரசர்கள் தென்னிந்தியா வரை படையெடுத்து சென்றிருக்கிறார்கள். அப்போதெல்லாம் பாண்டியர்கள் அவர்களது கூட்டாளிகளாக இருந்துள்ளனர்.
"... பராக்கிரமவாகு இலங்காபுரித் தண்டநாதனுடன் ஒரு சிங்களப் படையை அனுப்பி பராக்கிரம பாண்டியனுக்கு உதவி புரிந்தான்." (யாழ்ப்பாணச் சரித்திரம்)

இலங்கையில் சோழர்களின் ஆட்சியை ஒரு ஏகாதிபத்தியக் காலமாகவே கருத வேண்டும். ஏனெனில் சோழரின் ஆதிக்கத்தை எதிர்க்கத் துணிந்த சிங்கள சிற்றரசர்கள் மட்டுமல்ல, தமிழ் சிற்றரசர்களும் அடக்கப்பட்டார்கள். "இலங்கை முழுவதும் சோழர் ஆட்சிக்குள் அமைந்தும், சமாதானம் எப்போதும் இருந்ததில்லை. சிங்கை நகர் அரசருஞ் சிங்கள அரசருங் கூடி சோழருடன் சமர் விளைவிக்க நேருங் காலங்களில், சோழ அரசர் படையுடன் வந்து கலகம் விளைவித்தாரை கொன்றும் வென்றுஞ் செல்வர்." (யாழ்ப்பாண சரித்திரம்)

இங்கே சிங்கை நகர் என்பது நல்லூரை தலைநகராக கொண்ட (ஈழத்) தமிழரின் சிற்றரசு ஆகும். ராஜராஜ சோழன் ஈழத்தில் அடிமைகளாக பிடித்து வந்தவர்களைக் கொண்டு தஞ்சை பெரிய கோயிலைக் கட்டியதாக சோழர்களே எழுதி வைத்த குறிப்புகள் தெரிவிக்கின்றன.

1365 ல் தஞ்சை, மதுரையை சேர்ந்த, வெள்ளாளர் என்ற சாதியினரின் இலங்கை நோக்கிய புலம்பெயர்வு பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. தென்னிந்தியா அந்தக் காலத்தில் விஜய நகரத்தால் ஆளப்பட்டது. விஜயநகர சாம்ராஜ்யவாதிகள் தெலுங்கர்கள் என்பதால், தமிழ்நாட்டு நிர்வாகத்தில் தெலுங்கு பாளையக்காரர்களை நியமித்தார்கள்.

இதனால் அதிகாரம் இழந்த வெள்ளாளர்கள் இலங்கை சென்று குடியேற ஆரம்பித்தார்கள். அவர்கள் தமிழ்ப் பிரதேசங்களில் மட்டுமல்லாது, சிங்களப் பிரதேசங்களிலும் சென்று குடியேறினார்கள். சிங்களப் பிரதேசங்களில் குடியேறிய தமிழக வெள்ளாளர்கள், கொவிகம (அல்லது கொய்கம) என்ற சிங்கள சாதியினராக மாறி விட்டனர்.

".... இம் மாற்றங்களால் தம் பதவிகளை இழந்த தமிழ் வேளாண் தலைவர்கள், தங்கள் அடிமை, குடிமைகளுடன் பாண்டிய, சோழ, பல்லவ தேசங்களை நீங்கி, இலங்கைக்கு வந்தார்கள். ..... இப்போது சிங்கள வெள்ளாளராக மாறியிருக்கும் அவர்களை நீக்கி, யாழ்ப்பாணத்திலே வந்து குடியேறிய வெள்ளாளர்களைப் பற்றியே கயிலாய மாலை கூறும்: ....." (யாழ்ப்பாண சரித்திரம்)சிங்களவர்கள், தமிழர்கள், இரண்டு சமூகங்களிலும் வெள்ளாளர்கள் 50 % அளவில் இருக்கலாம் எனக் கணக்கிடப் பட்டுள்ளது. பெரும்பான்மை சாதியாக இருப்பதால், அவர்களின் ஆதிக்கம் தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. சிங்கள அரசர்கள் பௌத்த மதத்தை பின்பற்றினாலும், அவர்களது கலாச்சாரம் பிராமணிய வர்ணாச்சிரம மரபைக் கொண்டிருந்தது. அதனால் சத்திரிய வம்சத்தவர்களான சிங்கள அரசர்கள், வெள்ளாளர்களை சூத்திரர்கள் என்று ஒதுக்கி வைத்தார்கள். தென்னிலங்கையை ஆண்ட விஜயவாகு என்ற மன்னன், சிவனொளிபாத மலைக்கு செல்லும் வழியில், ஒவ்வொரு சாதிக்கும் புறம்பான தங்குமடங்களை ஏற்படுத்தி இருந்தான்.

சிங்களவர்கள் அனைவரும் விஜயனின் வம்சாவழியினர் என்பது போல சிங்கள இனவாதிகள் பரப்புரை செய்கின்றனர். அது பிற்காலத்தில் சிங்கள இனம் என்ற ஒன்றை உருவாக்கும் நோக்கோடு புனையப்பட்ட கதைகளில் ஒன்று. (விஜயனின் வருகைக்கும், அப்படி ஒருவர் வாழ்ந்ததற்கும் சரித்திர ஆதாரங்கள் இல்லை.) மகாவம்சம் கூட விஜயனும் அவனது தோழர்களினதும் கதையைத் தான் கூறுகின்றதே தவிர, அவர்கள் தான் சிங்களவர்களின் முன்னோர்கள் என்று கூறவில்லை.

இருபதாம் நூற்றாண்டில் பாலஸ்தீனத்தில் குடியேறிய யூதர்கள் பைபிள் கதைகளை ஆதாரமாக காட்டி, இஸ்ரேலுக்கு உரிமை கொண்டாடினார்கள். சிங்கள தேசியவாதிகள், 19 ம் நூற்றாண்டிலிருந்து தான், விஜயனை தேசிய நாயகனாக்கினார்கள். யூதர்களுக்கு ஆப்பிரகாம் போல, சிங்களவர்களுக்கு விஜயன். சிங்களத் தேசியவாதிகள் விற்கும் வரலாற்றுப் புளுகுகளை, தமிழ் தேசியவாதிகளும் வாங்கி விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் "சிங்களவர்களின் வரலாறு" என்று பொதுமைப் படுத்தக் கூடிய வரலாறு கிடையாது. சிங்களவர்களின் மத்தியில் இன்றைக்கும் காணப்படும் ஒவ்வொரு சாதியும், தனக்கென தனியான வரலாற்றைக் கொண்டுள்ளன. சிங்கள சாதிகள் எல்லாமே தென்னிந்தியாவை பூர்வீகமாக கொண்டுள்ளன. அதனை நிரூபிக்கும் செவி வழிக் கதைகள் அந்தந்த சமூகத்தினர் மத்தியில் நிலவி வருகின்றன.

*******

இந்த தொடரின் முதலாவது பகுதியை வாசிக்க:
இலங்கை அரசியலில் "வெள்ளாள-கொவிகம" ஆதிக்கம்

7 comments:

காகிதப்பூ said...

சிங்களவர்களனைவரும் விஜயனின் வழித்தோன்றல்கள் எனக்கூறமுடியாது. விஜயனின் வம்சம் என்று
வைத்துக் கொண்டாலும் அவர்கள் அனைவரும் பாண்டிய பெண்களை மணந்த தாகவே மஹாவம்சம் கூறுகின்றது.
இலங்கை வேடரின் மொழி, சிங்களம் மற்றும் தமிழிலும் அடிப்படையில் வேறுபட்டது. சிங்களம் இந்தோ ஆரிய மொழியாக இருப்பதிலிருந்து கணிசமானளவு குடிபெயர்வு வட இந்தியாவிலிருந்து வந்திருப்பதை அறியலாம். அதே நேரம், பாண்டியர்களும் சேரர்களும் விஜயனுக்கு முன் இல‌ங்கையை அறிந்திருபதற்கான சாத்திய கூறுகள் உண்டு, ஏனெனில் அவர்கள் அக்காலப் பகுதியில் கடல் வணிகத்தில் சிறந்து விளங்கியுள்ளார்கள்.நீங்கள் கூறுவது போல எல்லோரும் தொப்பிள் கொடி உறவுதான்

காகிதப்பூ said...

For your attention
http://www.karava.org/the_lion_myth

காகிதப்பூ said...

சிங்களவர்களனைவரும் விஜயனின் வழித்தோன்றல்கள் எனக்கூறமுடியாது. விஜயனின் வம்சம் என்று
வைத்துக் கொண்டாலும் அவர்கள் அனைவரும் பாண்டிய பெண்களை மணந்த தாகவே மஹாவம்சம் கூறுகின்றது.
இலங்கை வேடரின் மொழி, சிங்களம் மற்றும் தமிழிலும் அடிப்படையில் வேறுபட்டது. சிங்களம் இந்தோ ஆரிய மொழியாக இருப்பதிலிருந்து கணிசமானளவு குடிபெயர்வு வட இந்தியாவிலிருந்து வந்திருப்பதை அறியலாம். அதே நேரம், பாண்டியர்களும் சேரர்களும் விஜயனுக்கு முன் இல‌ங்கையை அறிந்திருபதற்கான சாத்திய கூறுகள் உண்டு, ஏனெனில் அவர்கள் அக்காலப் பகுதியில் கடல் வணிகத்தில் சிறந்து விளங்கியுள்ளார்கள்.நீங்கள் கூறுவது போல எல்லோரும் தொப்பிள் கொடி உறவுதான்

மனசாட்சி said...

சிறப்பாக முன்னெடுத்து செல்கின்றீர்கள் தொடருங்கள் !

//விஜயனின் வருகைக்கும், அப்படி ஒருவர் வாழ்ந்ததற்கும் சரித்திர ஆதாரங்கள் இல்லை.//

சரி, மகாவம்சத்தின் பிரகாரம் விஐயன் தம்பபன்னியை அடைந்த போது குவேனி நூல் நூற்றுக்கொண்டிருந்தாள் என்று சரித்திரம் கூறுகின்றது.

குவேனி ஒரு அரக்கர் குள பெண் என்றும் கூறுகின்றனர். சில இடத்தில் அவள் ஒரு திராவிட இனம் என்றும் படித்திருக்கின்றேன். என்னுடைய சந்தேகம்...

1. விஜயனின் வருகைக்கு முன் இலங்கையில் வாழ்ந்த சமூகம் யார் ?
2. குவேனி பேசிய மொழி மற்றும் இந்தியாவில் இருந்து வந்த விஜயனின் மொழி என்ன ?
3. இன்றய மகியங்கனைப் பகுதியில் வாழும் வேடுவர்களோ பரம்பரை பரம்பரையாக சிங்களம் பேசுகின்றனர். அப்படியாயின் இயக்கர், நாகர் பேசிய மொழி சிங்களமா ?
4. பாளி மொழி இலங்கைக்கு எப்போது வந்தது ? பௌத்த மதத்தின் வருகைக்கு முன்னரா அல்லது பின்னரா ?

இன்னும் சில சந்தேகங்கள் உள்ளன பின்னர் கேட்கின்றேன்.

Kalaiyarasan said...

1. விஜயனின் வருகைக்கு முன் இலங்கையில் வாழ்ந்த சமூகம் யார் ?

நாகர்கள்: தீபெத்தோ இந்திய இனத்தை சேர்ந்தவர்கள். (சீனர்கள் போன்றிருப்பார்கள்) ஒரு காலத்தில் நாகர்கள் இந்தியா முழுவதும் வாழ்ந்திருக்கலாம்.
இயக்கர்கள்: கருமை நிற மேனியர். ஆதி திராவிட இனமாக இருக்கலாம்.
ராட்சதர்கள்: இவர்களும் ஆதி திராவிட இனமாக இருக்கலாம். இராவணனின் இனம்.

2. குவேனி பேசிய மொழி மற்றும் இந்தியாவில் இருந்து வந்த விஜயனின் மொழி என்ன ?

குவேனி இயக்கர் குலப் பெண் என்று மகாவம்சம் கூறுகின்றது. அந்தக் காலத்தில் தமிழுக்கும், சிங்களத்திற்கும் முந்திய "ஈழ மொழி" பேசப் பட்டது. அதுவும் ஒரு ஆதி திராவிட மொழியாக இருக்கலாம். விஜயன் என்பது இந்தியாவில் இருந்து வந்த குடியேற்றக்காரரை குறிப்பிடலாம். அவர்கள் பாளி மொழி பேசினார்கள். பாளி மொழி சமஸ்கிருதத்திற்கு முந்தியது.

3. இன்றய மகியங்கனைப் பகுதியில் வாழும் வேடுவர்களோ பரம்பரை பரம்பரையாக சிங்களம் பேசுகின்றனர். அப்படியாயின் இயக்கர், நாகர் பேசிய மொழி சிங்களமா ?

வேடுவர் பேசும் மொழி புராதன இலங்கையை சேர்ந்த மொழியாக இருக்கலாம். அது சிங்களமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் வாழும் சூழலைப் பொறுத்து அவர்களின் மொழி மாறியிருக்கலாம். சிங்களம் கூட ஈழ மொழி, தமிழ், பாளி கலந்து உருவான மொழி தானே.

4. பாளி மொழி இலங்கைக்கு எப்போது வந்தது ? பௌத்த மதத்தின் வருகைக்கு முன்னரா அல்லது பின்னரா ?

பௌத்த மதத்தின் வருகைக்கு முன்னரே வந்திருக்கலாம். ஆனால் பௌத்த மதம் வெகுஜன மக்களின் பாளி மொழியை பயன்படுத்தியது.

MANO நாஞ்சில் மனோ said...

இப்பிடியெல்லாம் கதை இருக்கா!!!

ஆச்சர்யமா இருக்கே!!!

எஸ் சக்திவேல் said...

சிங்கள இனவெறியால் பாதிக்கப்பட்ட "பறத் தமிழர்கள்" அகதி முகாமிலும் தமக்குள்ளே சாதி பார்த்து ஒதுங்கிக் கொண்டார்கள்
ரசித்தேன் !