Tuesday, December 21, 2010

கொசோவோ: பயங்கரவாதமே வெல்லும்!

சமீபத்தில் சர்வதேச செய்திகளில் அடிபட்ட விடயம் கொசோவோ பொதுத் தேர்தல் பற்றியது. செர்பியாவிடம் இருந்து பிரிந்த குட்டி நாடான கொசோவோவின் சுதந்திரத்தை குறிப்பிட்ட சில மேலைத்தேய நாடுகள் மட்டுமே அங்கீகரித்துள்ளன. கொசோவோ பிரிவினைக்கு நேட்டோ படைகளின் இராணுவ பலம் மட்டுமல்ல, கொசோவோ விடுதலைப் படையின் (Ushtia Çlirimtare ë Kosovës) ஆயுதப்போராட்டமும் ஒரு காரணம். (கொசோவோ மக்களுக்கு யார் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார்கள் என்று அவர்களே முரண்பட்டுக் கொள்வது வேறு விடயம்.)
கூட்டாக இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டதால், KLA தலைவர் ஹாசிம் தாச்சி பிரதமராக வர வேண்டும் என்று நேட்டோ தலைமை எதிர்பார்த்தது. ஆனால் விதி வேறு விதமாக தீர்மானித்தது. சுதந்திர கொசோவோவில் நடந்த பொதுத் தேர்தலில், ஆயுதம் ஏந்தாத மிதவாத கட்சி அமோக வெற்றி பெற்றது. இதனால் தீவிரவாத KLA ஆட்சி அமைக்கும் வாய்ப்பு தவறிய போதிலும், உண்மையான அதிகாரம் அவர்கள் கைகளில் இருந்தது. முன்னால் KLA போராளிகள், புதிய கொசோவோ போலிஸ் படையினராக மாற்றப்பட்டனர். என்ன வித்தியாசம்? சீருடை மட்டும் தான் மாறியது. கொசோவோ விடுதலைப் படை, கொசோவோ ஜனநாயகக் கட்சியாகியது.

தற்போது நடந்து முடிந்த தேர்தலில் ஹாசிம் தாச்சியின் கட்சி வெற்றியீட்டியதால், அவர் பிரதமராக தெரிவானார். முன்னை நாள் ஆயுதக்குழுவின் தலைவர், இன்று ஜனநாயக பாராளுமன்றத் தலைவரானார். ஆனால் ஆயுதப்போராட்ட கால அக்கிரமங்களின் ஊழ்வினைப்பயன் இன்னும் விரட்டுகின்றது. ஹாசிம் தாச்சியை ஒட்டு மொத்த கொசோவோ மக்களின் காவிய நாயகனாக கொண்டாடிய ஐரோப்பிய ஒன்றியத்தின் கமிஷன் கூட, அவரை குற்றவாளி என்கிறது. சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகள் கமிஷன் வெளியிட்ட அறிக்கை, ஹாசிம் தாச்சியின் இருண்ட மறுபக்கத்தை காட்டுகின்றது. Parliamentary Assembly of the Council of Europe (PACE) அமைப்பின் சுவிஸ் பிரதிநிதி வெளியிட்ட உண்மைகள், புதிய பிரதமரின் முகத்தில் கரியைப் பூசியது. "90 களில் இயங்கிய Drenica என்ற மாபியா கிரிமினல் குழுவின் முக்கிய புள்ளி, இன்றைய பிரதமர் ஹாசிம் தாச்சி.
கொசோவோ அல்பேனிய கிரிமினல்களைக் கொண்ட Drenica வின் முக்கிய தொழில், மனிதர்களைக் கடத்துவது, கொலை செய்வது, அவர்களின் உடல் உறுப்புகளை எடுத்து விற்பது. அநேகமாக இந்த கிரிமினல்களால் கொல்லப்பட்டவர்கள் அப்பாவி செர்பிய பொதுமக்கள். இந்த செய்திகள் எல்லாம் பத்து வருடங்களுக்கு முன்னமே செர்பிய ஊடகங்களில் வெளிவந்திருந்தன. ஆனால் மனித உரிமைகளின் காவலர்களான அமெரிக்காவும், ஐரோப்பாவும் அவற்றை அலட்சியப் படுத்தின. அன்று சர்வாதிகாரி மிலோசொவிச்சை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த ஹாசிம் தாச்சி மேற்குலகில் ஹீரோவாக பார்க்கப்பட்டார்.
முன்னாள் யூகோஸ்லேவிய போர்க்குற்ற நீதிமன்ற நீதிபதி கார்லா டெல் பாண்டே ஒரு புத்தகம்("The Hunt") எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவிக்கும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. கொசோவோவை சேர்ந்த அல்பேனிய மாபியா குழுவினர், செர்பியர்களை அயல்நாடான அல்பேனியாவுக்கு கடத்திச் சென்றுள்ளனர். அங்கே அவர்களை கொன்று, உடல் உறுப்புகளை அறுவைச் சிகிச்சை செய்து வெட்டி எடுத்துள்ளனர். அல்பேனியாவின் திரானா விமான நிலையம் ஊடாக, உடல் உறுப்புகள் இஸ்ரேலுக்கும், மேற்குலக நாடுகளுக்கும் அனுப்பப்பட்டன. அன்று அல்பேனியர்களின் குற்றங்களை விசாரிப்பதற்கு, மேற்குலக நாடுகள் ஆர்வம் காட்டவில்லை. செர்பியர்கள் என்ன குற்றம் இழைத்திருக்கிறார்கள் என்று விசாரிப்பது மட்டுமே, யூகோஸ்லேவிய போர்க்குற்ற நீதிமன்றத்தின் கடமையாக இருந்துள்ளது.

கொசோவோ யுத்தம் வெடித்த பொழுது, சேர்பியப் படைகள் போர்க்குற்றங்கள் புரிந்துள்ளதை யாரும் மறுக்கவில்லை. செர்பியப்படைகள் அல்பேனிய பொது மக்களை கொலை செய்து, வீடுகளை எரித்து, அவர்களை வெளியேற்றியது. இவை எல்லாம் சர்வதேச ஊடகங்களில் விலாவாரியாக பேசப்பட்டன. உலகத்தில் எல்லோரும் சேர்பியர்களின் கொடுமைகளை மட்டும் கேள்விப்பட்டனர். ஆனால் கொசோவோவை நேட்டோப் படைகள் ஆக்கிரமித்த பின்னர் என்ன நடந்தது? அதைப் பற்றி எந்த ஊடகமும் பேசவில்லை. ஹாசிம் தாச்சி தலைமையிலான KLA ஆயுதபாணிகள், இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். செர்பியர்கள் மட்டுமல்ல, ஜிப்சி இன மக்களும், அடித்து விரட்டப்பட்டனர். அல்பெனியர்களைத் தவிர்ந்த வேறு எந்த இனத்தவருக்கும், "சுதந்திர கொசோவோவில்" இடம் இல்லை என்பதே KLA யின் கொள்கை.

ஹாசிம் தாச்சியின் KLA ஆரம்ப காலத்தில் ஒரு பயங்கரவாத குழுவாகவே செயற்பட்டு வந்தது. செர்பிய அரசு மட்டும் இதனை கூறவில்லை, அமெரிக்க அரசும் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் KLA பெயரை சேர்த்திருந்தது. பயங்கரவாத இயக்கமாக கருதப்பட்ட KLA யின் ஆரம்ப கால தாக்குதல்கள் சில:
பொதுமக்கள் பயணம் செய்த பேரூந்து வண்டி மீது தாக்குதல். 40 பேர் பலி. செர்பிய பாடசாலை மீது தாக்குதல், 6 சிறுவர்கள் பலி. 1999 ல் Prizren நகரில் KLA தாக்குதலில் 300 செர்பியர்கள் படுகொலை செய்யப்படனர். அவர்களில் கிறிஸ்தவ பாதிரிகளும் அடக்கம். கன்னியாஸ்திரிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்கள். கிறிஸ்தவ தேவாலயங்களில் இருந்த சுருவங்கள் நொறுக்கப்பட்டன. ஒரு சேர்பியப் பொதுமகனின் வெட்டப்பட்ட தலையுடன் KLA ஆயுதபாணிகள் நிற்கும் போட்டோ மேலே உள்ளது. இது மட்டுமல்ல, சொந்த அல்பேனிய இனத்தை சேர்ந்த இளம்பெண்களை கடத்திச் சென்று, இத்தாலி விபச்சார விடுதிகளில் விற்றுள்ளனர்.

இன்று ஹாசிம் தாச்சியை குற்றவாளியாக காட்டும் தகவல்கள், மேற்குலகின் ஒப்புதல் இன்றி கசியவில்லை. ஐரோப்பிய ஒன்றியம், கொசோவோவை சுதந்திர நாடாக அங்கீகரிக்குமாறு செர்பியாவை நிர்ப்பந்தித்து வருகின்றது. செர்பியர்களை திருப்திப் படுத்தவும், தாம் நடுநிலையானவர்கள் என்பதைக் காட்டவும், இப்போது இந்தக் தகவல்களை பகிரங்கப் படுத்தியிருக்கலாம்.
மேலதிக தகவல்களுக்கு:
Serbian Prosecutor Investigating Reports of Organ Trafficking During War in Kosovo
The horrors of the yellow house in Burrel N Albania.

3 comments:

RMD said...

//ஒட்டு மொத்த கொசோவோ மக்களின் காவிய நாயகனாக கொண்டாடிய ஐரோப்பிய ஒன்றியத்தின் கமிஷன் கூட, அவரை குற்றவாளி என்கிறது//

ந்ல்ல பதிவு,


விடுதலை போராட்டமாக ஆரம்பிக்கப் பட்ட பல இயக்கங்கள் உண்மையிலேயே இந்த மாதிரி செய்கிறார்களா அலல்து ஊடகங்கள் அவர்களை தவறாக காட்டுகின்றதா என்பதும் ஒரு குழப்பமான விஷயமே. நம்மை பாதித்த சில விஷயங்களை இப்பதிவு ஞாபகப் படுத்தியது.

1)செர்பியா=இலங்கை, கொசாவோ=ஈழம்

2)செர்பியா =சோவியத், கொசாவோ=ஆப்கானிஸ்தான்

என்று ஒன்று படுத்தி பார்த்தால் நிறைய ஒற்றுமை வருகிறது.

இருந்தாலும் ஏகாதிபத்திய சார்பு ஊடகங்கள் நினைத்தால் ஒருவரை மஹாத்மா அல்லது மனித விரோதியாக காட்ட முடியும்.

ஒரு போரில் முதல் பலி உண்மை(சொன்னது யார்?) என்று சொன்னது நிஜமாகிவிட்டது.

Jayaprakashvel said...

கூட்டாக இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டதால், KLA தலைவர் ஹாசிம் தாச்சி பிரதமராக வர வேண்டும் என்று நேட்டோ தலைமை எதிர்பார்த்தது. ஆனால் விதி வேறு விதமாக தீர்மானித்தது. சுதந்திர கொசோவோவில் நடந்த பொதுத் தேர்தலில், ஆயுதம் ஏந்தாத மிதவாத கட்சி அமோக வெற்றி பெற்றது. இதனால் தீவிரவாத KLA ஆட்சி அமைக்கும் வாய்ப்பு தவறிய போதிலும், உண்மையான அதிகாரம் அவர்கள் கைகளில் இருந்தது.

தற்போது நடந்து முடிந்த தேர்தலில் ஹாசிம் தாச்சியின் கட்சி வெற்றியீட்டியதால், அவர் பிரதமராக தெரிவானார். முன்னை நாள் ஆயுதக்குழுவின் தலைவர், இன்று ஜனநாயக பாராளுமன்றத் தலைவரானார்.


Above two parts of ur article are seems to be contradictory. Could you clarify which party has won the elections?

Kalaiyarasan said...

//Above two parts of ur article are seems to be contradictory. Could you clarify which party has won the elections?//

கொசோவோவில் ஏற்கனவே ஒரு மிதவாத அரசியல் கட்சி இருந்தது. இப்ராஹீம் ருகோவா தலைமை தாங்கிய Democratic League of Kosovo மிலோசொவிச் காலத்திலேயே தேர்தலிகளில் போட்டியிட்டு வந்த காந்தியவாத கட்சி. ஹாசிம் தாச்சியினது ஒரு ஆயுதமேந்திய தீவிரவாதக் குழுவாக மட்டுமே இருந்து வந்தது. நேட்டோ படைகள் கொசோவோவை தனி நாடாக பிரித்து விட்ட பின்னர் பொதுத் தேர்தல் நடத்தப் பட்டது. ஹாசிம் தாச்சி Democratic Party of Kosovo என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து போட்டியிட்டார். ஆனால் பெரும்பான்மை வாக்காளர்கள் இப்ராஹீம் ருகொவவை பிரதமராக தேர்ந்தெடுத்தார்கள். இம்முறை நடந்த தேர்தலில் தான் ஹாசிம் தாச்சியின் கட்சி அதிக வாக்குகளை பெற்றது.