Wednesday, September 17, 2008

பாகிஸ்தானில் எல்லை கடந்த ஏகாதிபத்தியவாதம்

தாலிபான் வேட்டையில் இறங்கிய அமெரிக்க துருப்புகள், பாகிஸ்தானின் எல்லை கடந்தும் யுத்தத்தை விரிவாக்கியதால், தற்போது பாகிஸ்தானிய இராணுவத்துடன் மோதும் நிலை உருவாகியுள்ளது. அமெரிக்க இராணுவ நடவடிக்கையில், சாதாரண பாகிஸ்தான் பொதுமக்களும் கொல்லப்பட்டதால், அந்நாடு முழுவதும் அமெரிக்க எதிர்ப்புணர்வு அதிகரித்துள்ளது. இதனால் எப்பாடுபட்டாகிலும் அமெரிக்க படைகளின் நகர்வுகளை தடுக்கும்முகமாக, பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இரண்டு அமெரிக்க ஹெலிகப்டர்கள் மீது, பாகிஸ்தான் இராணுவம் எச்சரிக்கை வேட்டுகளை தீர்த்ததாக சொல்லப்படுகிறது. அமெரிக்க, பாகிஸ்தானிய அரசாங்கங்கள் அத்தகைய சம்பவம் நடைபெறவில்லை என்று மறுத்த போதும், நேரே கண்ட சாட்சிகள் அதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

பாகிஸ்தானிய வலதுசாரி மதவாத கட்சிகள், அமெரிக்க இராணுவத்துடன் போருக்குப் போக தயாராக இருந்தாலும், ஆளும்வர்க்கம் மோதல் நிலைக்கு தயங்குகின்றது. அமெரிக்கா உலகில் பலமிக்க இராணுவ வல்லரசு என்பதால் போரிட்டு வெல்லமுடியாது என்ற காரணம் மட்டுமல்ல, சர்வதேச ஆதரவு கிட்டாது என்பதாலும் அமெரிக்க அத்துமீறல்களை பாகிஸ்தான் அரசு பொறுத்துக் கொள்கின்றது. மேலும் புதிய அரசியல் சக்தியாக உருவாகியிருக்கும் "பாகிஸ்தானிய தாலிபான்" ஆதரவாளர்கள் ஒருபுறம் தாலிபானின் ஆயுதப்போராட்ட ஆதரவு பிரச்சாரத்தை முன்னெடுத்த போதும், மறுபுறம் குறிப்பாக அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பஞ்சாப் மாகாணம் போன்ற கிழக்கு பாகிஸ்தானில் , பயங்கரவாத தாக்குதல்களால் தாலிபானை எதிரிகளாக பார்க்கும் போக்கு தீவிரமாகி வருகின்றது.

வடமேற்கு எல்லை மாகாணம், மற்றும் வாசிரிஸ்தான் ஆகிய பஷ்டூன்(பட்டாணி) மொழி பேசும் மக்கள் மத்தியிலேயே தாலிபான் ஆதரவு அதிகம். பொதுவாக ஆப்கானிய தாலிபானும், பாகிஸ்தானிய தாலிபானும் பஷ்டூன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களது வாழ்விடம் முன்பு ஆங்கிலேய காலனிய அரசினால் பிரிக்கப்பட்டது. அப்போதிருந்தே ஒன்றுபட்ட பஷ்டூன் தாயகத்திற்கான தேசியமும் தோன்றியிருந்தது. பெரும்பான்மை பஷ்டூன் மக்கள் கல்வியறிவற்ற, மதநம்பிக்கையுள்ள ஏழைமக்கள் என்பதால், அவர்களிடையே தாலிபான் போன்ற அமைப்பு வளர்ச்சியடைந்ததில் வியப்பில்லை.

ஆப்கானிஸ்தானில் சோவியத் இராணுவம் வெளியேறிய பிறகு, தமக்குள் சண்டையிட்ட முஜாகிதீன் குழுக்கள், நாட்டை சுடுகாடாக்கினர். அதுவரை மும்முரமாக போரை பின்னால் நின்று நடத்திக்கொண்டிருந்த அமெரிக்கா, தமது வேலை முடிந்தது என்று ஆப்கானிஸ்தான் அவலத்தை கண்டுகொள்ளாமல் விட்டது. அந்த தருணத்தில் தாலிபான் மட்டுமே நாட்டில் சட்டம், ஒழுங்கை கொண்டுவந்து, பொதுமக்கள் மத்தியில் பாதுகாப்பு உணர்வை உருவாக்கினர்.

2001 ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து ஆக்கிரமித்த அமெரிக்காவுக்கு, தாலிபன் மீது அதிக அக்கறை இருக்கவில்லை. அமெரிக்க இராணுவம் அல் கைதா உறுப்பினர்களை வேட்டையாடுவதிலேயே தனது கவனத்தை குவித்தது. அப்போது பாகிஸ்தான் அதிபராக இருந்த முஷாரப், தானும் அல் கைதா வேட்டையில் குதிப்பதாக அமெரிக்காவை குஷிப்படுத்தினார். அவ்வப்போது பாகிஸ்தானில் ஒளித்திருந்த முக்கிய அல் கைதா தலைவர்களை பிடித்துக் கொடுத்து பாராட்டு பெற்றதுடன், பலகோடி டாலர்கள் வெகுமானமாக பெற்று பெட்டியை நிரப்பிக் கொண்டார்.

அல் கைதாவின் கதை முடிந்தது என்று முஷாரப்பால் நம்ப வைக்கப்பட்ட அமெரிக்கா தனது படைகளை பெருமளவு விலக்கி, இராக்கிற்கு அனுப்பி வைத்தது. அந்த காலகட்டத்தில் புத்திசாலியான முஷாரப் தந்திரமாக காய் நகர்த்திக் கொண்டிருந்தார். ஒரு பக்கம் அமெரிக்கர்களுடன் கூட்டுச்சேர்ந்து பயங்கரவாதத்திற்கு எதிரான போர், மறு பக்கம் தாலிபான் பாகிஸ்தானை பின்தளமாக பாவிக்க அனுமதி என்று இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருந்தார். பாகிஸ்தானின் வெளிவிவகார கொள்கையை பொறுத்தவரை, தந்து பரமவைரியான இந்தியாவை ஆப்கானிஸ்தானை நெருங்க விடாமல் தடுத்து, அங்கே பாகிஸ்தான் சார்பு ஆட்சியாளர்களை அமர்த்த வேண்டும் என்பதே குறிக்கோள். அதற்கு நம்பிக்கையானவர்களாக தாலிபான் கருதப்பட்டது. உளவு நிறுவனமான ISI க்குள்ளும், தாலிபான் பாகிஸ்தானில் பயிற்சி முகாம்களை தொடர்ந்து வைத்திருக்க ஆதரவு இருந்தது.

வளர்த்தகடா மார்பில் பாய்ந்தது போல, தாலிபான் முஷாரப்பையும் குறிவைத்து தாக்கிய போது தான், பாகிஸ்தான் அரசு தாலிபானை எதிரியாக பார்த்தது. தொடர்ந்து செம்மசூதி முற்றுகையில் மதவாத கடும்போக்காளர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னர், தாலிபானை அடக்கும் வேலையில் இராணுவம் இறங்கியது. இருப்பினும் இராணுவ அடக்குமுறை, பாகிஸ்தானிய தாலிபானை வளர்க்கும் ஊக்கியாக மாறிவிட்டது. பெருகிய மக்கள் ஆதரவு, ஆயுதமேந்திய உறுப்பினர் தொகை அதிகரிப்பு இவற்றால் தாலிபானும் முன்னை விட தீவிரமாக செயற்பட்டது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா அரைகுறையாக விட்டுச்சென்ற வேலையை, ஐரோப்பிய நாடுகளின் இராணுவங்கள் பொறுப்பு எடுத்தன. ஐரோப்பிய அரசாங்கங்கள் தமது மக்களுக்கு உண்மையை கூறாது, தவறான தகவல்களை கொடுத்தே படைகளை அனுப்பி வைத்தனர். ஆப்கானிஸ்தானில் பாடசாலைகள் கட்டவும், அபிவிருத்திப் பணிகளுக்குமே தமது இராணுவம் செல்வதாக கூறினார். ஆனால் தற்போது தாலிபான் தாக்குதல்களில் பல ஜேர்மனிய,பிரெஞ்சு, நெதர்லாந்து படையினர் கொல்லப்பட்ட பின்னர் தான், தாம் ஆப்கானிய சகதிக்குள் மாட்டிக்கொண்ட உண்மை தெரிய வந்தது.

இன்று போர் தீவிரமாகி, தாலிபான் முன்னேறிக் கொண்டிருக்கும் வேளை, அமெரிக்க இராணுவம் மீண்டும் சண்டையிட வந்திருக்கிறது. தாலிபான் பாகிஸ்தானை பின்தளமாக பாவித்து, அங்கிருந்து ஆப்கானிஸ்தானுக்குள் ஊடுருவி தாக்கி விட்டு ஓடுவதாக நம்பும் அமெரிக்கா, தாலிபான் உற்பத்தி மையமான பாகிஸ்தானுக்குள் சென்றே அவர்களை வேட்டையாடி அழிக்க எண்ணுகின்றது. அப்படி நடக்கும்வேளை பாகிஸ்தான் இராணுவத்துடனான மோதல் கூட தவிர்க்க முடியாது.

அமெரிக்காவின் எல்லை கடந்த இராணுவ நடவடிக்கை ஏற்கனவே வரலாற்றில் ஒருமுறை இடம்பெற்றுள்ளது. வியட்நாம் போரில், "வியட் கொம்" போராளிகள் கம்போடியா, லாவோசை பின்தளமாக பயன்படுத்துவதை தடுக்க அந்நாடுகள் மீது அமெரிக்க விமானங்கள் குண்டுகளை வீசின. அதன் விளைவாக பல்லாயிரம் அப்பாவி மக்கள் மரணமடைய, வெகுண்டெழுந்த மக்கள் அமெரிக்காவுக்கு எதிரான ஆயுதமேந்திய புரட்சி இயக்கங்கள் பின்னால் அணிதிரண்டனர். அதே போல அமெரிக்க இராணுவம் ஆப்கானிஸ்தானை மட்டுமல்ல பாகிஸ்தானையும் சீரழித்து விட்டே திரும்பிச்செல்லும்.

___________________________________________________
இஸ்லாமாபாத்தின் இயலாமையும், இஸ்லாமிய இயக்கவியலும்
___________________________________________________

1 comment:

Unknown said...

அந்த தருணத்தில் தாலிபான் மட்டுமே நாட்டில் சட்டம், ஒழுங்கை கொண்டுவந்து, பொதுமக்கள் மத்தியில் பாதுகாப்பு உணர்வை உருவாக்கினர்

Taliban's rule was horrible.Women
could not move freely.why dont you write this as well.