Tuesday, June 06, 2017

கோடை விடுமுறையில் சிறார்களுக்கான பொதுவுடைமை ஒன்றுகூடல்


ஐரோப்பிய அரசியல் கட்சிகள், கோடை கால விடுமுறை நாட்களை பயன்படுத்தி ஒன்றுகூடல்களை நடத்துவது வழக்கம். அதில் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், தொடர்புள்ள அமைப்புகள் பங்குபற்றும். அரசியல் கலந்துரையாடல்கள் மட்டுமல்லாது, இசை நிகழ்ச்சிகள், பிள்ளைகளுக்கான விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறும்.

ஜெர்மனியின் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியான MLPD இன் கோடை கால ஒன்றுகூடலில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது. (3-4 ஜூன் 2017) அங்கு வருபவர்கள் தமது கூடாரங்களை கொண்டு வந்து புல்தரையில் தங்க வேண்டும். நாங்களும் ஒரு கூடாரத்தை கொண்டு சென்று தங்கினோம். அது இயற்கையோடு ஒன்றுகலந்து வசிப்பதைப் போலிருந்தது. மழை, வெயில், குளிர் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டோம்.

Camping எனப்படும் கூடாரத்தில் தங்கும் அனுபவம் எனக்கும் புதிது. நானும் எனது மகனும் ஒரு கூடாரத்தில் தங்கி இரண்டு நாள் நிகழ்வுகளில் கலந்து கொண்டோம். ஜெர்மனி முழுவதிலும் இருந்து, நூற்றுக் கணக்கான குடும்பங்கள், பிள்ளைகளுடன் வந்து தங்கி இருந்தனர். முதல் நாள் நடந்த ஆர்ப்பாட்ட ஊர்வலங்களிலும் கலந்து கொண்டனர். பலர் கைக்குழந்தைகளையும் எடுத்து வந்திருந்தனர்.


இறுதி நிகழ்வாக, முன்னாள் சோஷலிச நாடுகளில் இருந்ததை போன்று, சிறுவர்களுக்கான Rotfüchse பயனீர் (Pioneer = சாரணர்கள்) அமைப்பின் அணிநடை இடம்பெற்றது. சோஷலிச நாடுகளில் நடப்பதைப் போன்று, சில பருவ வயது இளைஞர்கள் மேள தாளத்துடன் முன்னே செல்ல, சிறுவர்கள் அணிவகுத்து சென்றனர். உலகில் நடக்கும் போர்களுக்கு எதிரான உரையாற்றினார்கள்.

இதனை சில வலதுசாரிகள் "சிறுவர் துஸ்பிரயோகம்" என்று அவதூறு செய்யலாம். போரினால் ஏற்படும் பேரழிவுகளுக்கு எதிராக சிறுவர்கள் பேசுவது "துஸ்பிரயோகம்" என்றால், "இலட்சக் கணக்கான மக்கள் பலியாகக் காரணமான போர்கள் புனிதமானவையா?"   என்ற கேள்வி எழுகின்றது.


மரப் பலகைகளை கொண்டு சிறுவர்கள் தயாரித்த விளையாட்டுப் புகையிரத வண்டி கண்ணைக் கவருவதாக வடிவமைக்கப் பட்டிருந்தது. "புரட்சிகளே வரலாற்றின் ரயில் எஞ்சின்கள்" என்ற கார்ல் மார்க்ஸின் வாசகம் பொறிக்கப் பட்ட போஸ்டரும் ஒட்டப் பட்டிருந்தது.

நூறு வருடங்களுக்கு முன்னர், லெனினும் தோழர்களும் சுவிட்சர்லாந்தில் இருந்து ஜெர்மனி, பின்லாந்து வழியாக ரஷ்யாவுக்கு புகையிரத வண்டியில் சென்றடைந்தனர். அந்த குறிப்பிட்ட நிகழ்வு ரஷ்யப் புரட்சியின் தொடக்கமாக அமைந்திருந்தது. 

அதே போன்ற புகையிரத வண்டியை தான் விளையாட்டுத் திடலில் வடிவமைத்திருந்தனர். சிறுவர்கள் மகிழ்வுடன் அதிலேறி விளையாடினார்கள். புகையிரதவண்டி பூர்த்தியானதும், பழைய புரட்சிப் பாடல்களின் ஜெர்மன் மொழிபெயர்ப்பை ஒருவர் கிட்டார் இசைத்துப் பாடினார்.

அங்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆர்வலர்கள் கலந்து கொண்ட போதிலும், எந்தவொரு அசம்பாவிதமும் நடக்கவில்லை. ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு உதவிக் கொள்ளும் பொதுநல மனப்பான்மையை காண முடிந்தது. எல்லோரும் நாகரிகமாக நடந்து கொண்டனர். யாருமே மற்றவர்களின் உடைமைகளுக்கு ஆசைப் படவில்லை.ஜெர்மனியின் மேற்குப் பகுதியில், நெதர்லாந்து எல்லையோரம் உள்ள கேள்சென்கிர்ஷன் (Gelsenkirchen)  நகரில், வழமையாக குதிரையோட்ட போட்டிகள் நடக்கும் திடலில் நடந்த ஒன்றுகூடலுக்கு, கம்யூனிஸ்ட் கட்சியுடன் சம்பந்தப் படாத வெளியாட்களும் வந்திருந்தனர். உள்ளூர் பத்திரிகையில் வெளியான விளம்பரத்தை பார்த்து விட்டும் சிலர் வந்திருந்தனர்.

அங்கு நடந்த பொதுக் கூட்டங்களுக்கு மொழிபெயர்ப்பாளராக கலந்து கொண்ட ரஷ்யப் பெண்மணி ஒருவர், சோவியத் யூனியன், ஸ்டாலினுக்கு எதிரான கருத்துக்களை கொண்டிருந்தார். ஆனால், MLPD நடத்தும் இதுபோன்ற நிகழ்வுகள் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்திருந்தார். இவர் போன்ற கம்யூனிச எதிர்ப்பாளர்கள் பலரும் அங்கு வந்து தமது தப்பெண்ணங்களை மாற்றிக் கொண்டனர்.

அங்கு வந்திருந்த எல்லோரும் ஜெர்மானியர்கள் அல்ல. MLPD கட்சியுடன் தொடர்புடைய நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து நாடுகளை சேர்ந்த மாவோயிச கட்சிகளை சேர்ந்தோரும் கலந்து கொண்டனர். அதை விட, குர்திஸ்தான், துருக்கி, பிலிப்பைன்ஸ், சிரியா, ஆப்கானிஸ்தான், டோகோ (ஆப்பிரிக்கா) என்று பல்வேறு உலக நாடுகளை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

ஸ்டெபன் என்கல் 


MLPD கட்சியின் ஸ்தாபகரும், முன்னாள் சுரங்கத் தொழிலாளியுமான ஸ்டெபன் என்கல் கலந்து கொண்ட கூட்டம் இடம்பெற்றது.


வோல்க்ஸ்வாகன் மக்கள் நீதிமன்றம் 
அது மட்டுமல்லாது, வோல்க்ஸ்வாகன் தொழிற்சாலையின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை விமர்சிக்கும் மக்கள் நீதிமன்ற அமரவும் இடம்பெற்றது. இதில் ஜெர்மனியின் போராட்டக் குணாம்சம் மிக்க தொழிற்சங்கமும் கலந்து கொண்டது.


ஒன்றுகூடலுக்கு வரும் ஒவ்வொருவரும், வாசலில் நுழைவுக் கட்டணம் செலுத்திய பின்னர், உணவுத் தேவைக்காக கூப்பன்கள் வாங்க வேண்டும். அதாவது, தம்மிடமுள்ள யூரோ நாணயத்தை கொடுத்து கூப்பன் துண்டுகளை வாங்க வேண்டும். அது மட்டுமே திடலில் செல்லுபடியாகும்.

உணவுச்சாலையில் சாப்பிடவும், குடிபானங்கள் அருந்தவும், புத்தகங்கள், கைப்பணிப் பொருட்களை வாங்குவதற்கும், அந்த கூப்பன் துண்டுகள் தேவை. அவற்றை விற்கும் கடைகள், நாம் கொடுக்கும் கூப்பன் துண்டுகளை கொடுத்து காசாக மாற்றிக் கொள்ளும்.

எதற்காக காசுக்கு பதிலாக கூப்பன் துண்டுகள் பாவிக்கப் படுகின்றன? இதில் இரண்டு நோக்கங்கள் இருப்பதாக தெரிய வருகின்றது. பொதுவுடைமை சமுதாயத்தில் பணம் பாவனையில் இருக்காது. அதற்கு முன்னோடியாக இந்த நடைமுறை பின்பற்றப் படுகின்றது.

இரண்டாவதாக, குறிப்பிட்ட கட்சி மட்டுமல்ல, அந்தக் கட்சியுடன் நல்லுறவைப் பேணும் பிற அமைப்புகளும்,  தனிநபர்களும் தமது கடைகளை போட முடியும். ஆனால், வருமானத்தில் ஒரு பகுதி கட்சி நிதிக்கு செலுத்த வேண்டும்.

பணம் பாவனையில் இருந்தால் அதைக் கண்காணிப்பது கடினம். விற்பனையாளர்கள் எவ்வாறேயினும் வாடிக்கையாளரின் கூப்பன் துண்டுகளை காசாக்க வேண்டி இருப்பதால், வியாபாரத்தில் எவ்வளவு வருமானம் ஈட்டப் பட்டது என்பது தெரிய வரும்.

நமது தாயகத்தில் இயங்கும் பொதுவுடைமைக் கட்சிகளும் இந்த உதாரணத்தை நடைமுறைப் படுத்தலாம். இதன் மூலம், மக்கள் விடுமுறையை பிரயோசனமான முறையில் கழிப்பதுடன், பொதுவுடைமை சமுதாயம் பற்றிய புரிந்துணர்வு ஏற்படவும் வழிவகுக்கும்.

******

ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியான MLPD, எஸ்சென் நகரில் நடத்தி வரும் சோஷலிசத்திற்கான வருடாந்த பேரணி.சர்வதேச தோழர்கள் கலந்து கொண்ட மேடையில் இசைக்கப் பட்ட பிரபல பாஸிச எதிர்ப்புப் பாடல்:  

துருக்கி/குர்திய இசை நடனம்:

No comments: