இலங்கையில் இறுதியில் கம்யூனிசம் வென்றது!
யாழ்ப்பாணத்திற்கு சென்ற பிரதமர் ஹரிணி, மறைந்த கம்யூனிச தோழர் மணியம் வீட்டுக்கு விஜயம் செய்துள்ளார். தோழர் மணியம், சண்முகதாசன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுபினர். அதே கட்சியில் இருந்து பிரிந்த இளைஞர் அணி தான் பிற்காலத்தில் JVP என்ற பெயரில் இயங்கியது.
இருப்பினும், அன்றைய JVP யினருக்கு, தாய்க் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களுடன் நட்பு ரீதியிலான தொடர்புகள் இருந்துள்ளன. யாழ்ப்பாணத்தில், குறிப்பாக சுன்னாகம் பகுதியில் JVP செயற்பட்டு வந்தது. பிற்காலத்தில், JVP யின் ஆயுதமேந்திய கிளர்ச்சியை ஈவிரக்கமின்றி ஒடுக்கிய அரச அடக்குமுறை காரணமாக யாழ்ப்பாண கம்யூனிஸ்ட் தோழர் களுடனான தொடர்புகள் முற்றாக துண்டிக்கப் பட்டு விட்டன.
அண்மைக்காலமாக JVP பல வெகுஜன அமைப்புகளை இணைத்து NPP என்ற பெயரில் தேர்தலில் போட்டி இட்டதும், பிரதமர் ஹரிணி NPP சார்பில் போட்டியிட்டு அதிகப் படியான மக்களின் விருப்பு வாக்குகளை பெற்றவர் என்பதும் அனைவரும் அறிந்ததே.
தோழர் மணியம் குறித்து பேஸ்புக்கில் விஜய பாஸ்கரன் எழுதிய சுருக்கமான பதிவு:
தோழர் மணியம் மறுபடியும் வந்துவிட்டார்.
//தோழர் கே ஏ சுப்பிரமணியம் வட இலங்கையின் முக்கியமான கம்யூனிஸ்ட் செயற்பாட்டாளர். ஒரு முழுமையான கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்து மறைந்தவர். அவருடைய திருமணத்தால் சொந்தங்களை இழந்தார். சொந்த தாயின் மரணத்துக்கும் அழைக்கப்படவில்லை. தெரிவிக்கப்படவும் இல்லை. போராட்டங்களால் இருந்த வேலைகளையும் இழந்தார். வறுமை வரவேற்று இறுக அணைத்தபோதும் கொள்கை மாறாத மனிதராக வாழ்ந்து மறைந்தவர். அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லத்தை பிள்ளைகள் பொதுமக்கள் பாவனைக்கான நூலகமாக மாற்றி பயன்பாட்டுக்கு விட்டுள்ளனர்.
சில தினங்கள் முன்பாக அமிர்தலிங்கம் நினைவாக அவரது பிள்ளைகள் அவர் வாழ்ந்த வீட்டை நினைவு சின்னமாக மாற்றி ஆளுனர் வேதநாயகன் அவர்களால் திறந்து வைத்தனர். இந்த இரண்டு நிலையங்களும் ஒரே பகுதிகளில் அமைந்துள்ளன.
1966 ஒக்டோபர் 21 இல் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் தோழர் மணியம் அவர்களும் முக்கியமானவர். இதற்காக நடந்த ஊர்வலத்தில் மணியம் பொலிசாரால் கடுமையாக தாக்கப்பட்டார். இந்த பொலிஸ் படையை தாக்குதலுக்கு எஸ்.பி. சுந்தரலிங்கம் முக்கிய காரணம். அதன் பின்னணியில் அமிர்தலிங்கம், அன்றைய அமைச்சர் எம் திருச்செல்வம்( நீலனின் அப்பா) இருந்தார்கள்.
இந்த போராட்டம் உச்சம் பெற மணியம் போன்ற தோழர்களும் பின்னணியில் நின்றார்கள். இதை அறிந்த அமிர்தலிங்கம் இது கம்யூனிச போராட்டம் என பாராளுமன்றத்தில் கத்தினார்.
சங்கானை சங்காயாக மாறிவிட்டதாக பேசினார்.இந்த சூழ்ச்சிகரமான பேச்சு தோழர் மணியத்தையும் உள்ளடக்கியதாக இருந்தது.1970 தேர்தலில் வட்டுக்கோட்டையில் அமிர்தலிங்கம் தோற்கடிக்கப்பட்டார். அதற்கு தோழர் மணியமும் ஒரு காரண கர்த்தா.
காலம் செல்ல கம்யூனிச அமைப்புகள் உடைந்தபோதும் மணியம் வறுமையோடு அதே பாதையில் பயணித்தார். பல உயிராபத்துகளையும் சந்தித்தார்.
அன்று தோழர்கள் மீது பொலிஸ் ஏவ காரணமாக இருந்த அமிர்தலிங்கம் பின்னாளில் அதே பொலிஸ் அராஜகத்தை எதிர்த்து நிற்கும் நிலைக்கு ஆளானார். இறுதியில் சுட்டுத் தள்ளப்பட்டார். அந்தக் கொலைக்காக பரிதாபம் கொள்ள இன்றுவரை யாருமே இல்லை.
ஆனால் இன்று மணியம் வாழ்ந்த இடத்தைத் தேடி கடற்தொழில் அமைச்சர் நாட்டின் பிரதமர் என தேடி வந்துள்ளனர். மறைந்துபோன தோழர் மணியம் மீண்டும் எழுந்துவிட்டார். மணியம் அவர்களின் வரலாறு மீண்டு வருகிறது. அவரோடு கூடவே பயணித்த அம்மாவுக்கு இறுதிக் காலத்தில் வாழ்ந்த வாழ்வுக்கு அர்த்தம் கொடுத்துள்ளது.//
நன்றி:
- Vijaya Baskaran