Thursday, January 06, 2011

ஒரு தேசிய இனத்தை உருவாக்குவது எப்படி?


"ஒரு தேசிய இனம் தேசியத்தை உருவாக்குவதில்லை. மாறாக, ஒரு தேசியமே தேசிய இனத்தை உருவாக்குகின்றது." - சரித்திரவியலாளர் Eric Hobsbawm

சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் வரை, "தேசிய இனம்" என்றால் என்னவென்று எவருக்கும் தெரியாத காலம் ஒன்றிருந்தது. ஒரே மொழி பேசும் மக்கள், இனம், தேசிய இனம் எல்லாம் பிற்காலத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டவை தான். முந்திய காலங்களில் மக்கள் தாம் சார்ந்த மதத்துடன், இனக்குழு, சாதி, பிரதேசம், குடும்பம் இவற்றுடன் சேர்த்து பார்க்கப்பட்டனர். அவற்றையே தமது அடையாளமாக காட்டிக் கொண்டனர். உலகில் எந்த மூலையிலும், "தேசிய இனம்" என்ற ஒரு பிரிவு இருக்கவில்லை. நூறு வருடங்களுக்கு முன்னர், "சிங்களவர்களும், தமிழர்களும் தனிதனி தேசிய இனங்கள்." என்று எவராவது கூறினால், எல்லோரும் அவருக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று நினைப்பார்கள். புராதன காலத்தில் பௌத்த, இந்து மதங்கள் மட்டுமே பிரதேசம் கடந்து, சாதிப் பாகுபாட்டைக் கடந்து மக்களை ஒன்றிணைத்தன.

"தேசியம்" என்றால் இப்படித்தான் இருக்கும் என்று வரையறுப்பது கடினம். அதன் அர்த்தம் காலத்துக்கு காலம் மாறிக் கொண்டு வந்துள்ளது. பிரெஞ்சுப் புரட்சியின் போது கூறப்பட்ட தேசியம், பிரான்சின் அதிகார எல்லைக்கு உட்பட்ட அனைத்து பிரஜைகளையும் குறித்தது. பிற்காலத்தில் "தேசியம்", "இனம்" இரண்டும் ஒன்றாக சேர்க்கப்பட்டது. ஒரே மொழி பேசும், ஒரே கலாச்சாரம் கொண்ட மக்களை தேசிய இனம் என்றார்கள். மேற்கொண்டு அந்த அர்த்தத்திலேயே தேசியத்தை ஆராய வேண்டியிருக்கின்றது. ஐரோப்பாவில் 18 ம் நூற்றாண்டின் இறுதியிலும், 19 ம் நூற்றாண்டு முழுவதும், இன்று நாம் காணும் அடிப்படையைக் கொண்ட நவீன தேசங்கள் உருவாகின. தொழிற்புரட்சி, பொருளாதார வளர்ச்சி என்பன, தேச பரிபாலனத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்தன. புதிய ஆளும் வர்க்க பிரதிநிதிகளுக்கு, மக்களை ஆள்வது முன்னர் எப்போதும் இல்லாதவாறு கடினமாக இருந்தது. முன்பு மதமும், நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பும், இந்திய உபகண்டத்தில் சாதியமைப்பும் மக்களை ஒரு கட்டுக்கோப்புக்குள் அடக்கி வைத்திருந்தது. அத்தகைய சமூக அமைப்பு முதலாளித்துவ பொருளாதாரம் வளருவதற்கு தடைக்கல்லாக இருந்தது. மேலும் பிரெஞ்சுபுரட்சியின் பின்னர், ஐரோப்பிய நாடுகளின் ஆளும் வர்க்கம், தாராளவாத சித்தாந்தமே சிறந்தது என்று நம்பினார்கள்.

மக்களின் விசுவாசத்தைப் பெறுவதற்கு, மேலிருந்து அவர்களை ஆளுவதற்கு தேசியவாதம் சிறந்த தத்துவமாகப் பட்டது. தேச எல்லைக்குள் பொதுவான மொழி ஒன்று உருவாக்கப்பட்டது.பெரும்பான்மையான தேசிய அரசுகளில் ஆளும் வர்க்கம் எந்தப் பிரதேசத்தை சேர்ந்ததோ, அந்தப் பிரதேச மொழி பொது மொழியாகியது. ஒரு நாட்டின் எல்லைக்குள் வாழும் மக்கள் மத்தியில் ஒற்றுமையுணர்வை தோற்றுவிக்க பொது மொழி பயன்பட்டது. மேலும் பொதுவான பண்பாடு, வரலாறு என்பன உருவாக்கப்பட்டன. அதற்கு முன்னர், ஒவ்வொரு பிரதேச மக்களும் தமக்கென தனியான கலாச்சாரத்தை, வரலாற்றைக் கொண்டிருந்தனர். அவை சில நேரம் ஒன்றுக்கொன்று முரணானதாகவும் இருக்கலாம், அல்லது ஒரே மாதிரியாகவும் இருக்கலாம். தேசிய அரசு அவற்றை மேவிகொண்டு ஆதிக்க கலாச்சாரம் ஒன்றை தோற்றுவித்தது. தேசிய அரசு தோன்றின காலத்தில் இருந்து ஒரே மாதிரியானதாக வரலாறு மாற்றி எழுதப்பட்டது.

தேசியவாதம் எங்கே, எப்படித் தோன்றியது? பிரிட்டனும், பிரான்சும் நூறு ஆண்டுகளாக போரில் ஈடுபட்டிருந்தன. அந்தக் காலத்தில் ஐரோப்பிய நாடுகள் ஒன்றுக்கொன்று யுத்தம் செய்வது சர்வசாதாரணம். பிரிட்டனின் அரச பரம்பரையும், பிரெஞ்சு அரச பரம்பரையும் தமக்கிடையிலான முரண்பாடுகளை தீர்த்துக் கொள்ளத்தான் போரில் ஈடுபட்டார்கள். ஆனால் நூறாண்டு காலப் போர் நீடிப்பதற்கு ஏதாவதொரு சித்தாந்தம் தேவைப்பட்டது. அது "நாட்டுப்பற்று" என்ற வடிவம் எடுத்தது. நூறாண்டு காலப் போரின் முடிவில் பிரிட்டிஷ், பிரெஞ்சு "நாட்டுப் பற்றாளர்கள்" உருவாகியிருந்தனர். கிறிஸ்தவ நாடுகளில் தந்தை வழிக் கலாச்சாரம் வேரூன்றியிருந்தது. (கிறிஸ்தவ மதத்தில் கடவுள் ஒரு ஆணாக கருதப்படுகிறார்.) அதனால் ஒரு தேசிய அரசு "தந்தையர் நாடு" என்று அழைக்கப்பட்டது. தாய்வழிக் கலாச்சாரம் கொண்ட கீழைத்தேய நாடுகளில் அது "தாய் நாடு" என்று மொழிபெயர்க்கப்பட்டது.

19 ம் நூற்றாண்டில் "வெகுஜன தேசியவாதம்" தோன்றியது. அதாவது பொதுவான மொழி, கலாச்சாரம் என்பன மக்கள் மயப்பட்டன. அதன் அடிப்படையில், "தேசிய உணர்வு", "இனம்" என்பன மையப்படுத்தப் பட்டன. "இனம்" என்ற ஒன்று புதிதாக தோன்றிய பின்னர், ஒரு இனத்தை சேர்ந்த மக்கள், மற்ற இனத்தை சேர்ந்தவர்களை அன்னியர்களாகப் பார்த்தனர். அன்னியப்பட்ட இனங்கள் மத்தியில் அவநம்பிக்கையும், சந்தேகமும் தோன்றியது. ஒரு இனத்தின் அவலத்திற்கு, மற்ற இனம் மீது பழி போடப்பட்டது. பழிச் சொல்லுக்கு ஆளாகும் இனம் ஒரே நாட்டை சேர்ந்த சிறுபான்மையினமாக இருக்கலாம். அல்லது வேறொரு தேசத்தை சேர்ந்த இனமாக இருக்கலாம். ஒரே தேசத்திற்குள், உழைக்கும் வர்க்கம் முதலாளிகளுடன் சமரசத்தை பேண வேண்டும். (தேசிய ஒற்றுமைக்கு மிக அவசியம்) அதனால் பொருளாதார பிரச்சினைகளுக்கும் மற்ற இனத்தின் மீது பழி போடப்பட்டது. உதாரணத்திற்கு, ஜெர்மனியில் 20 ம் நூற்றாண்டு வரையில் அத்தகைய அந்நியர்களை வெறுக்கும் தேசியவாதம் நிலவியது. அதன் விளைவுகளும் உலகறிந்தவை தான்.

(தொடரும்)

1 comment:

மார்கண்டேயன் said...

மிக நல்ல ஆய்வு, ஏதோ ஒரு மாயை ஒன்றை உருவாக்கி ஆள்பவர்கள் குளிர் காய்கிறார்கள், வளரட்டும் உங்களின் இந்தத் தொடர் வலிமையான கருத்துக்களுடன் வழக்கம் போல,

வாழ்த்துகளுடன்,
மார்கண்டேயன்.
http://markandaysureshkumar.blogspot.com