Friday, July 10, 2020

ஈழத் தமிழ்த் தேசியம் என்றால் என்ன? - ஒரு விவாதம்


ஈழத் தமிழ் அரசியலை ஆழமாக ஆராயும் இணையக் கலந்துரையாடல் (5 July 2020) பேஸ்புக்கில் பார்க்கக் கிடைத்தது. (https://www.facebook.com/tamildebaterscouncil/videos/574320763283712) இதுபோன்ற விவாதத்தை இதுவரையில் இலங்கையில் எந்த ஊடகமும் செய்யவில்லை. ஒரு மகத்தான பணியை இணையத்தில் நிறைவேற்றிய இலங்கை வாழ் தமிழ் விவாதிகள் கழகத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதில் முதலில் உரையாடிய அஷோக்பரன், குருபரன் இருவரும் சட்ட வல்லுனர்கள். ஆகவே ஆரம்பத்தில் தமிழர்களின் சுயநிர்ணயம் தொடர்பாக சட்டரீதியான நிலைப்பாடுகளை ஆராய்ந்து விட்டு, இறுதியில் அரசியல் தீர்வு முக்கியம் என்று ஒருமித்த கருத்து நிலைப்பாட்டுக்கு வந்தனர்.

ஒரு பேச்சுவார்த்தைக்கு செல்லும் பொழுது விட்டுக்கொடுக்கவும் தயாராக இருக்க வேண்டும் என்பதை ஒத்துக் கொள்ளும் குருபரன், முஸ்லிம்களின் தனித்துவத்தை அங்கீகரிக்க வேண்டும் என்றும், சிங்களவர்களும் தமிழர் தாயகத்தில் வாழ விட வேண்டும் என்ற யதார்த்த நோக்கில் பேசினார். அத்துடன் சாதி ஒழிப்பு, பெண் உரிமை தொடர்பாக பெரியாரின் திராவிடர் கழக கொள்கைகளை பின்பற்றுவது சிறந்தது என்பதையும் ஏற்றுக் கொண்டார். அத்துடன் ஈழத்தமிழரின் தொன்மையான வரலாறு என்ற அடிப்படையில் சுயநிர்ணய உரிமை கோரவில்லை என்றும், சமீபத்திய அரசியல் வரலாற்று விளைவுகளின் ஊடாக சுயநிர்ணய உரிமை கோரிக்கையை முன்வைப்பதாகவும் சொன்னார்.

குருபரன் இந்தளவு தூரம் முற்போக்காக பேசினாலும், இது குறித்து எத்தனை தமிழ்த்தேசியவாதிகள் அறிந்து வைத்திருக்கிறார்கள், அல்லது ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது கேள்விக்குறி. குருபரன் தான் ஒரு உறுப்பினர் அல்ல என்று அடிக்கடி மறுத்து வந்தாலும், அவர் எப்போதும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (TNPF) சார்பாகவே பேசி வந்துள்ளார். அந்தக் கட்சியில் தான் குறுகிய மனப்பான்மை கொண்ட இனவாதிகளும், மதவாதிகளும், சாதியவாதிகளும் நிறைந்து காணப்படுகின்றனர். ஆகவே மேற்படி முற்போக்கான கருத்துக்களை தெரிவிப்பதற்கு, குருபரன் தவிர வேறெந்த தமிழ்த்தேசியவாதியாவது முன்வருவாரா என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.

இலங்கை என்ற ஒற்றையாட்சியை மையப் படுத்திய சட்டத்தில், குருபரன் எதிர்பார்க்கும் "தமிழர் தாயகம்" என்பதை குறிக்கோளாக கொண்ட "புறவய" அல்லது "அகவய" சுயநிர்ணய உரிமை சாத்தியமில்லை என்பது உண்மை தான். அஷோக்பரன் சுட்டிக் காட்டியது போன்று இதனை மேலிருந்து திணிக்க முடியாது. அடிமட்டத்தில் அரசியல் மாற்றங்கள் ஊடாக எட்டப் பட வேண்டும்.

பிரித்தானியாவில் உள்ளது போன்று ஒற்றையாட்சி அலகின் கீழான சமஷ்டி அமைப்பு குறித்து அஷோக்பரனும், குருபரனும் நீண்ட நேரமாக உரையாடினார்கள். அவ்வாறான ஒரு தீர்வு இலங்கைக்கு பொருத்தமாக இருக்கும் என்பது அஷோக்பரனின் எதிர்பார்ப்பு. ஆனால், அது இலங்கையில் சாத்தியமல்ல என்று கூறிய குருபரன், அதற்குக் காரணம் சிங்கள- பௌத்த பேரினவாத கருத்தியல் என்றும் பதிலளித்தார்.

நான் இந்த இடத்தில் ஸ்கொட்லாந்து சுயநிர்ணயம் தொடர்பாக குருபரனுக்கு விளக்கம் கொடுக்கலாம் என நினைக்கிறேன். பிரித்தானியா என்ற பொதுப் பெயரின் கீழ், இங்கிலாந்து மன்னராட்சியானது ஸ்கொட்லாந்து மன்னராட்சியை பெயரளவில் தனக்கு சமமான அரசாக இணைத்துக் கொண்டது. இருப்பினும் ஸ்கொட்லாந்தில் கடந்த முன்னூறு வருட காலமாக இங்கிலாந்தின் மேலாதிக்கம் இருந்து வந்துள்ளது. இங்கிலாந்தின் ஆங்கிலேய- புரட்டஸ்தாந்து பேரினவாதம், ஸ்கொட்டிஷ் கத்தோலிக்க மக்கள் மீது அதிகாரம் செலுத்தியது. இன்றைக்கும் ஸ்கொட்லாந்தில் மட்டுமல்லாது வேல்சிலும் ஆங்கிலம் தான் பிரதானமான மொழியாக பேசப் படுகின்றது.

இருபதாம் நூற்றாண்டின் இறுதி வரையில் ஸ்கொட்டிஷ் தேசியவாத இயக்கம் அடக்கப் பட்டு வந்தது. தன்னாட்சி, தனியான பாராளுமன்றம் இருந்தாலும் பிரித்தானியா முழுவதையும் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் கட்சிகளின் செல்வாக்கு அதிகம். அதைவிட ஸ்கொட்லாந்தில் கணிசமான அளவில் குடியேறியுள்ள ஆங்கிலேய இனத்தவரையும் கணக்கில் எடுக்க வேண்டும். வெளிவிவகாரம் மட்டுமல்லாது, பொருளாதார ரீதியாகவும் ஸ்கொட்லாந்து இங்கிலாந்துக்கு கீழே கட்டுப்பட்டுள்ளது. இருப்பினும் பிரிட்டன் உலகை காலனிப் படுத்திய காலத்தில் ஸ்கொட்டிஷ்காரர்களின் பங்களிப்பு காரணமாக தமக்கென தன்னாட்சிப் பிரதேசத்தை பெற்றுக் கொண்டனர். ஆகவே ஒரு காலனியாதிக்க நாட்டில் இருந்த நிலைமையை, முன்பு காலனியாக இருந்த இலங்கையுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது.

விவாதத்தில் கலந்து கொண்ட இன்னொரு சட்ட வல்லுனரான அம்பாறையை சேர்ந்த சிவகுமார் நவரத்தினம், ஈழத்தமிழ்த் தேசிய அரசியலில் புறக்கணிக்கப் பட்டு வந்த ஒரு விடயத்தை தொட்டுக் காட்டினார். அம்பாறை என்பது கிழக்கு மாகாணதின் தென் கோடியில் தமிழர் வாழுமிடம் என்பது பலருக்கு தெரியாமல் இருப்பதை சுட்டிக் காட்டினார். மட்டக்களப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட அம்பாறைக்கு கொடுக்கப் படுவதில்லை. மேலும் அவர் மலையகத் தமிழரின் தனித்துவத்தை அங்கீகரிக்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துக் கூறினார்.

இந்த இடத்தில் அஷோக்பரன் கூறிய சில கருத்துக்களை விமர்சிக்க வேண்டி உள்ளது. அவர் ஒரு தமிழ்த்தேசியவாதி அல்ல. இலங்கையின் ஒற்றையாட்சியின் கீழ் தீர்வைக் காண விரும்பும் தாராளவாதி. முஸ்லிம்களும், மலையகத் தமிழர்களும் தமக்கென தனியான தேசியத்தை கட்டமைத்துக் கொண்டது அவர்களது தெரிவு என்றும், வடக்குத் தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் அவர்களை ஒதுக்கவில்லை என்றும் வாதாடினார். இதில் பாதியளவு மட்டுமே உண்மை உள்ளது.

ஆரம்பத்தில் தந்தை செல்வாவின் தமிழரசுக் கட்சியும், தொண்டமானின் இந்திய தொழிலாளர் காங்கிரஸ் கட்சியும் ஒற்றுமையாக செயற்பட்டு வந்தன. இருப்பினும் எழுபதுகளின் இறுதிப் பகுதியில் தொண்டமான் தன்வழி தனிவழி என்று சென்று விட்டார். அதனை வடக்குத் தமிழ்த்தேசியவாதிகள் முழுமனதாக ஏற்றுக் கொள்ளவில்லை. "தொண்டமான் ஒரு துரோகி" என்று வசைபாடிக் கொண்டிருந்தார்கள். இதில் யார் சரி, பிழை என்று நான் சொல்ல வரவில்லை. மலையக அரசியல் தனியாக பிரிந்தமைக்கு, வடக்குத் தமிழ்த்தேசிய அரசியல் தலைவர்களின் புறக்கணிப்பும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அதுவே முஸ்லிம்கள் குறித்த நிலைப்பாடாகவும் இருந்தது. கூட்டணி முதல் புலிகள் வரை முஸ்லிம் காங்கிரசின் இருப்பை ஜீரணிக்க முடியாதவர்களாக இருந்துள்ளனர்.

கடைசியாக பேச வந்த விரிவுரையாளர் மீநிலங்கோ அன்றும் இன்றும் பேசப்பட்டு வரும் தமிழ்த் தேசிய அரசியலானது மேட்டுக்குடி (பூர்ஷுவா) தன்மை கொண்டது என்பதையும், அது அடித்தட்டு மக்களின் அபிலாஷைகளை கவனத்தில் எடுக்கவில்லை என்றும் வாதாடினார். அதற்கு உதாரணமாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் யாழ்ப்பாணத்தில் நடந்த சுருட்டுத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் போன்ற தகவல்கள் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்யப் படுகின்றன. அது மட்டுமல்ல, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இயங்கி யாழ்ப்பாண வாலிபர் சங்கத்தின் முற்போக்கான அரசியல் கோரிக்கைகளும் புறக்கணிக்கப் பட்டு வந்துள்ளன.

மீநிலங்கோ தனது உரையில் சுயநிர்ணய உரிமை குறித்து சரியான நிலைப்பாடு இருக்க வேண்டும் என்றும், "ஆகவயம்", "புறவயம்" என்று, நாமாகவே உலகில் இல்லாத ஒரு விடயத்தை உருவாக்கி விட்டு வாதிடக் கூடாது என்றார். இது தொடர்பாக லெனின் கூறிய வரைவிலக்கணத்தை எடுத்துக் காட்டி விளங்கப் படுத்தினார். ஒவ்வொருவருக்கும் விவாகரத்து உரிமை இருக்கிறது என்பதற்காக மணம் முடிக்கும் பொழுதே அதைப் பற்றிப் பேசுவதில்லை. அந்த உரிமையை வைத்துக் கொண்டு சேர்ந்து வாழ முயற்சிக்கிறார்கள். இங்கு சேர்ந்து வாழ்வது எப்படி என்பது தான் முக்கியமே தவிர பிரிந்து செல்வதல்ல. மேலும் இதற்கு முன்னர் அஷோக்பரனும், குருபரனும் நடத்திய வாதாட்டத்தில் சிலாகித்துப் பேசப் பட்ட பிரான்ஸ் நாட்டின் மறுபக்கம் பற்றி எடுத்துக் கூறினார். பிரான்சில் பேசப்பட்டு வந்த சிறுபான்மை மொழிகளை அடக்கி ஒடுக்கி பிரெஞ்சு மொழி திணிக்கப் பட்டது வரலாறு. அத்தகைய பேரினவாத பிரான்ஸ் நாட்டை ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்கு உதாரணம் கற்பிப்பது ஒரு நகைப்புக்குரிய விடயம்.

No comments: