Thursday, January 09, 2020

மேசியா : "இயேசு கிறிஸ்து ஒரு ஈரானியர்!"


Messiah:
"இயேசு கிறிஸ்து ஒரு ஈரானியர்!" 
"இயேசு இன்று எம் மத்தியில் வாழ்ந்தால், அவர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்திருப்பார்!!"

நெட்பிலிக்ஸ் (Netflix) தளத்தில் புதியதொரு தொடர் ஒளிபரப்பாகிறது. மேசியா என்ற அந்தத் தொடர் முற்றிலும் மாறுபட்ட கதையமைப்பைக் கொண்டது. இயேசு கிறிஸ்து அல்லது அவர் போன்ற ஒரு மீட்பர் இன்று எம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்தால், உலகம் அவரை எப்படிப் பார்க்கும் என்ற கற்பனையை வைத்து இதைத் தயாரித்துள்ளனர். அதிலும் தற்காலத்தில் நடக்கும் உலக அரசியலை களமாகக் கொண்டு இந்தக் கதை நகர்கிறது.

சிரியாவில், டமாஸ்கஸ் நகரில் ISIS முற்றுகைக்குள் அகப்பட்டுக் கொண்ட பாலஸ்தீன அகதிகள் மத்தியில் ஒருவர் அன்பையும் சமாதானத்தையும் பற்றிப் பிரசங்கம் செய்து கொண்டிருக்கிறார். அவர் சாதாரண மக்களைப் போன்று ஜீன்ஸ், டி சேர்ட் அணிந்திருக்கிறார். மக்கள் அவரது பிரசங்கத்தை கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது, பாலைவன மணல் சூறாவளி வீசுகிறது. அதனால் ISIS படையினர் அழிக்கப் பட பாலஸ்தீன அகதிகள் தப்பிப் பிழைக்கிறார்கள்.

இந்த அற்புதத்தை நேரில் கண்ட மக்கள், பிரசங்கம் செய்தவரிடம் தெய்வ சக்தி இருப்பதாக நம்புகிறார்கள். அதனால் அவரை "அல் மசீ" என்று அழைக்கிறார்கள். அரபி மொழியில் அல் மசீ என்பது ஆங்கிலத்தில் மேசியா எனப்படும். (தமிழில் மீட்பர் என்று சொன்னாலும் அது மிகச் சரியான அர்த்தம் அல்ல. இறைவனின் தூதுவர் என்ற அர்த்தமும் உள்ளது.)

அல் மசீ, பாலஸ்தீன அகதிகளை இஸ்ரேலை நோக்கி வழிநடத்திச் செல்கிறார். எல்லையை அடைந்ததும், இஸ்ரேலிய படைகள் தடுத்து நிறுத்துகின்றன. தாயகம் திரும்பும் பாலஸ்தீன அகதிகளை உள்ளே விட மறுக்கின்றனர். எல்லை தாண்டிச் சென்ற அல் மசீ கைது செய்யப் படுகிறார். அகதிகள் எல்லையில் தற்காலிக முகாம் அமைத்து பசியிலும், பிணியிலும் வாடுகின்றனர். அவர்களுக்கு இஸ்ரேலிய தொண்டு நிறுவனங்கள் உதவுகின்றன.

இஸ்ரேலிய ஷின் பெட் புலனாய்வுத் துறையினர் அல் மசீயை சிறையில் அடைத்து வைத்து விசாரணை செய்கின்றனர். அவர் தனது சொந்தப் பெயரை சொல்ல மறுக்கிறார். அரபி, ஹீபுரு, ஆங்கிலம் பேசுகிறார். அவர் ஒரு யூதரா, இஸ்லாமியரா, அல்லது கிறிஸ்தவரா? எதுவுமே புரியவில்லை. எதற்குமே பதில் கூற மறுக்கிறார்.

இதே நேரம் ஒரு சி.ஐ.ஏ. பெண் அதிகாரி அல் மசீ என்ற இந்த ஆசாமி உண்மையில் யார் என்று ஆராய்வதற்காக அமெரிக்காவில் இருந்து இஸ்ரேலுக்கு வருகிறார். இஸ்ரேலின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தேவையில்லாமல் தலையிடுவதாக புலனாய்வுத்துறை அதிகாரி குற்றம் சாட்டுகிறார். இதற்கிடையே திடீரென ஒரு நாள் மேசியா மறைந்து விடுகிறார். இதனால் சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரியின் வேலை பறிபோகிறது.

சில தினங்களுக்குப் பின்னர் அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் அடித்த சூறாவளியில் மேசியா தோன்றுகிறார். அங்குள்ள மக்களும் மேசியாவுக்கு தெய்வ சக்தி இருப்பதாக நம்புகிறார்கள். அவரை ஒரு நவீன கால இயேசு கிறிஸ்து போன்று பார்க்கிறார்கள். இதனால், ஊடகங்கள் கவனம் செலுத்துகின்றன. அமெரிக்க அரசு அவரை சட்டவிரோத குடியேறி என்று குற்றம் சுமத்தி பிற அகதிகளுடன் சிறையில் அடைத்து வைக்கிறது. அனால், அவர் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி அகதித் தஞ்சம் கொடுத்து விடுவிக்கிறார்.

இதற்கிடையே சந்தேகக் கண்ணுடன் விசாரித்துக் கொண்டிருக்கும் சி.ஐ.ஏ. பெண் அதிகாரி, அவர் ஓர் ஈரானியர் என்ற உண்மையை கண்டுபிடிக்கிறார். அவரது உண்மையான பெயர், கல்வி கற்ற இடங்கள், மருத்துவக் குறிப்புகள் எல்லாம் கிடைக்கின்றன. இவற்றை வைத்துக் கொண்டு, இந்த மர்ம ஆசாமி மேசியா போன்று நடித்து ஊரை ஏமாற்றும் பேர்வழி என நிறுவ முயற்சிக்கின்றனர்.

மேசியா தன்னைப் பின்தொடர்பவர்களை தலைநகர் வாஷிங்டன் நோக்கி அழைத்துச் செல்கிறார். அங்கே இயேசு கிறிஸ்து மாதிரி தண்ணீர் மேலே நடந்து அற்புதம் செய்து காட்டுகிறார். இதனால் மேசியாவின் புகழ் அமெரிக்கா முழுவதும் பரவுகிறது. ஆனால் சி.ஐ.ஏ. மேற்கொண்டு விசாரிக்கிறது. "இவர் என்ன நோக்கத்திற்காக அமெரிக்கா வந்திருக்கிறார்? அமெரிக்காவில் ஒரு புரட்சி நடத்த திட்டமிடுகிறாரா? இவர் ரஷ்யாவின் ஆளா? இவர் ஒரு பயங்கரவாதியா? இவர் ஒரு மனநோயாளியா?" என்று பல கேள்விகளை எழுகின்றன.

ஒரு தடவை அமெரிக்க ஜனாதிபதியே மேசியாவை நேரில் கண்டு பேசுகிறார். அப்போது மேசியாவின் நோக்கம் என்ன என அறிய விரும்புகிறார். 
- "உலகம் முழுவதும் உள்ள அமெரிக்கப் படைகளை விலக்கிக் கொண்டால் சமாதானம் உண்டாகும்." என மேசியா பதில் கூறுகின்றார். 
- "அமெரிக்கப் படைகள் இருப்பதால் தான் அந்தப் பிராந்தியத்தில் சமாதானம் நிலவுகிறது" என்கிறார் ஜனாதிபதி. 
- "ஐரோப்பியர்கள் தான் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் எல்லைகளை பிரித்து விட்டார்கள். அந்த நாடுகளில் சர்வாதிகாரிகளை பதவியில் அமர்த்தி மக்களை ஒடுக்கினார்கள்..." மேசியாவின் பதிலைக் கேட்டு ஜனாதிபதி வாயடைத்துப் போகிறார். 
- "அமெரிக்க இராணுவத்தை திருப்பி அழைக்க மறுத்தால் என்ன நடக்கும்?" என்று கேட்கிறார். 
- "கடவுளின் கோபத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும். இயற்கைப் பேரழிவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்..." 
"பயமுறுத்தலா?" 
"இல்லை, எச்சரிக்கை!" 
அடுத்து வந்த சில தினங்களில் அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது.

அமெரிக்க அரசு தொடர்ந்தும் மேசியா ஒரு மோசடிப் பேர்வழி என்று நிரூபிக்க முயற்சிக்கிறது. அவரது பெயரைக் கெடுப்பதற்காக மனநோயாளி என்ற மருத்துவ சான்றிதழ் கொண்ட இரகசிய ஆவணங்களை ஊடகங்களுக்கு கசிய விடுகிறார்கள். அரசாங்கமே அவரைக் கடத்திச் சென்று இஸ்ரேலிடம் ஒப்படைக்க முயற்சிக்கிறது.

இந்த தொலைக்காட்சித் தொடர் இரண்டு வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது. அன்று வாழ்ந்த இயேசு கிறிஸ்துவும் எம்மைப் போன்ற ஒரு சாதாரண மனிதராகத் தான் இருந்திருப்பார். அதே இயேசு இன்று எம் மத்தியில் வாழ்ந்தாலும் கண்டுகொள்ளாமல் புறக்கணித்திருப்போம். அன்றைய இயேசு ரோம ஏகாதிபத்தியத்தை எதிர்த்த மாதிரி, இன்றைய இயேசு அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்திருப்பார்.

இந்தத் தொடரில் மேசியா பேசும் வசனங்கள் யாவும் மிக எளிமையான தத்துவார்த்த அடிப்படை கொண்டவை. ஆன்மீகத்தின் பெயரால் மூடி மறைக்கப்படும் உண்மைகளையும் இலகுவாக புரிய வைக்கிறது.

No comments: