Saturday, August 03, 2013

புலம்பெயர்ந்த மண்ணில் இன விடுதலைப் போராட்டம் நடத்தலாமா?

[மொலுக்கு இனப் பிரச்சினை : டச்சு காலனிய துரோகத்தின் கதை]

(இறுதிப் பகுதி)


புலம்பெயர்ந்த மொலுக்கர்களின் ஆயுதப் போராட்டம், ஆறு தாக்குதல்களின் பின்னர் முடிவுற்றள்ளது. இறுதியாக 'அசன்' நகரில் உள்ள மாகாண சபை கட்டிடத்தை ஆக்கிரமித்தார்கள். அங்கே வேலை செய்த ஊழியர்களையும், மாகாண சபை உறுப்பினர்களையும் பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தார்கள். அப்போது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற அவசரத்தில் ஒரு கொலை நடந்தது. ஆனால், இந்த முறையும், நெதர்லாந்து அரசு விட்டுக் கொடுக்கவில்லை. பணய நாடகம் முடிவுக்கு வந்து, மொலுக்கர்களும் சிறைப் பிடிக்கப் பட்டார்கள்.

ஈழத் தமிழர்களின் ஏக பிரதிநிதியாக கூறிக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள், அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும், அவர்களை நோக்கி மையப் படுத்தினார்கள். ஆனால், மொலுக்கர்கள் மத்தியில் அப்படியான மையவாத அமைப்பு எதுவும் இருக்கவில்லை. மொலுக்கு இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்தை எந்த இயக்கமும் கட்டுப்படுத்தவில்லை.  

ஒவ்வொரு ஆயுதமேந்திய தாக்குதலையும், ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற சிறு சிறு குழுக்களே நிறைவேற்றின. அவர்களுக்கு இடையில் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. ஒரே கொள்கை மட்டுமே அவர்களை ஒன்றிணைத்தது. ஒரே மாதிரி செயற்பட வைத்தது. இந்தக் காலத்தில் அவற்றை "சிலிப்பர் செல்" (Sleeper Cell) என்று அழைப்பார்கள். அதனால் தான், இதுவரையில் எந்தவொரு ஆயுதபாணி நடவடிக்கையையும், டச்சு புலனாய்வுத் துறையால் முன் கூட்டியே கண்டுபிடிக்க முடியவில்லை.  

புலம்பெயர்ந்த மொலுக்கர்கள், நெதர்லாந்தில் ஒரு ஆயுதப் போராட்டம் நடத்துவதற்கு தூண்டுகோலாக இருந்த புறக் காரணிகளையும் கவனிக்க வேண்டும். எழுபதுகளில் பாலஸ்தீன விடுதலைப் போராட்டமும், அதற்கு ஆதரவான சர்வதேச கம்யூனிஸ்ட்களின் போராட்டமும் தீவிரமடைந்திருந்தது. PFLP போன்ற இடதுசாரி பாலஸ்தீன இயக்கத்துடன் தொடர்புடைய, ஐரோப்பிய இடதுசாரி இளைஞர்கள் பலர் இருந்தனர். அவர்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கை காரணமாக, ஐரோப்பிய நகரங்களில் பல குண்டுத் தாக்குதல்கள் நடந்துள்ளன. விமானங்கள் கடத்தி பணயம் வைக்கப் பட்டன.

குறிப்பாக ஜப்பானிய தீவிரவாதிகளின் தாக்குதல் ஒன்று நெதர்லாந்தில் இடம்பெற்றது. பாலஸ்தீன போராட்டத்திற்கு ஆதரவான ஜப்பானியர் ஒருவர் பிரான்சில் பிடிபட்டார். போலி கடவுச் சீட்டுகள், ஆயுதங்கள் கடத்திய குற்றச் சாட்டில் கைது செய்யப் பட்டு சிறை வைக்கப் பட்டிருந்தார். அதற்குப் பதிலடியாக, மூன்று ஜப்பானிய ஆயுதபாணிகள் நெதர்லாந்தில் உள்ள பிரெஞ்சு தூதுவராலயத்தினுள் நுழைந்தார்கள். தூதுவரையும் பிற ஊழியர்களையும் துப்பாக்கி முனையில் பணயம் வைத்தார்கள். இறுதியில் பிரெஞ்சு அரசு, அவர்களின் கோரிக்கைக்கு இணங்கியது. தான் பிடித்து வைத்திருந்த ஜப்பானியரை விடுதலை செய்து, ஒரு மில்லியன் டாலர் பணமும் கொடுத்து, தனியான ஜெட் விமானம் ஒன்றில் தப்பியோட உதவியது. 

ஜப்பானிய ஆயுதபாணிகளை ஏற்றிச் சென்ற விமானத்தை தரையிறக்க, அன்றைய ஈராக்கிய அரசு ஒத்துக் கொண்டது. அதே போன்று, தம்மையும் ஒரு நாடு ஏற்றுக் கொள்ளும் என்று மொலுக்கு ஆயுதபாணிகள் எதிர்பார்த்தனர். ஜப்பானியர்களின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட காரணம் என்ன? அவர்கள் இடதுசாரி சிந்தனை கொண்ட ஆயுதபாணிகள் என்பதால், பாலஸ்தீன விடுதலை இயக்கங்கள், பாலஸ்தீன போராட்டத்திற்கு ஆதரவான அரபு நாடுகள், மற்றும் சோஷலிச நாடுகள் உதவ முன்வந்தன. மேலும், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பல இடதுசாரி தீவிரவாதக் குழுக்கள் இயங்கிக் கொண்டிருந்தன. ஆகையினால், ஆயுதபாணிகளின் கோரிக்கைகளை அரசு ஒரு தடவை ஏற்றுக் கொள்ளா விட்டாலும், வேறு ஒரு நாட்டில், வேறு ஒரு இயக்கம் தாக்குதல் நடத்த தயாராக இருந்தது. 

மொலுக்கு இளைஞர்களின் போராட்டம், ஒரு தேசியவாதப் போராட்டம் ஆகும். அதற்கும் சர்வதேச அமைப்புகளுக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. ஆனால், இந்தோனேசியாவில் போரிட்டுக் கொண்டிருந்த மொலுக்கு விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகள், ஆப்பிரிக்காவில் உள்ள பெனின் நாட்டுடன் சிறந்த உறவுகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். அதனால் உலகில் பெனின் மட்டுமே, தென் மொலுக்கு குடியரசை ஒரு இறைமையுள்ள தனி நாடாக அங்கீகரிக்க முன்வந்தது.  

நெதர்லாந்தில் ஆயுதபாணித் தாக்குதல்களில் ஈடுபட்ட மொலுக்கு இளைஞர்கள், பெனின் தங்களை ஏற்றுக் கொள்ளும் என்று நம்பினார்கள். பணயக் கைதிகளை பிடித்து வைத்துக் கொண்டு, நெதர்லாந்து அரசை வற்புறுத்தி ஒரு விமானத்தை அமர்த்திக் கொண்டு, பெனின் நாட்டுக்கு தப்பிச் செல்ல முடியும் என்று கனவு கண்டார்கள். ஆனால், அந்தக் கனவு இறுதி வரையில் நனவாகவில்லை. அவர்களை பணயக் கைதிகளுடன் தப்பியோட நெதர்லாந்து அரசு சம்மதித்திருக்குமா என்பது ஒரு புறமிருக்க, தீவிரவாத இளைஞர்களை பொறுப்பேற்க பெனின் அரசு தயாராக இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. 

ஆயுதமேந்திய தாக்குதல்கள் நடந்த காலங்களில், மொலுக்கு குடிமக்கள் மீது குறிப்பிட்டளவு அடக்குமுறை பிரயோகிக்கப் பட்டது. மொலுக்கு குடியேறிகள் அடர்த்தியாக வாழும் நெதர்லாந்துக் கிராமங்கள் சுற்றி வளைக்கப் பட்டன. ஆயுதங்களை தேடி, வாகனங்கள், வீடுகள் சோதனையிடப் பட்டன. 1977 ம் ஆண்டு, ரயிலைக் கடத்தியவர்கள், சரணடைந்த பின்னரும் சுட்டுக் கொல்லப் பட்டமை தான், அரசின் உச்சக்கட்ட  அடக்குமுறை ஆகும். அந்தச் சம்பவங்கள், இப்போதும் மொலுக்கர்கள் மனதில் மாறாத வடுக்களாக மாறி விட்டன. அன்று நடந்த படுகொலைகளை விசாரிப்பதற்கு, விசாரணைக் குழு ஒன்று அமைக்க வேண்டும் எனக் கோரி வருகின்றனர். நெதர்லாந்து அரசு, போர்க் குற்றத்திற்காக தனது சொந்தப் படையினரை தண்டிக்க முன் வருமா என்பது சந்தேகமே.

மொலுக்கு இளைஞர்களின் ஆயுதப் போராட்டம், வெறும் பழிவாங்கும் நடவடிக்கையாகவோ, அல்லது இனவாதப் போராட்டமாகவோ இருக்கவில்லை. அது ஒரு அரசியல் தத்துவார்த்த போராகவும் இருந்தது. ரயிலை பணயம் வைத்திருந்த காலத்தில், தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பணயக்கைதிகளை சிறந்த முறையில் பராமரித்தார்கள். அவர்களுக்கு தமது போராட்டத்தின் நியாயத்தை எடுத்துரைத்தார்கள். பணயக் கைதிகள் வாசிப்பதற்காக, மொலுக்கு இனத்தவரின் பிரச்சினைகள் பற்றிய நூல்களை கொண்டு சென்று கொடுத்தார்கள். 

ஆயுதபாணிகள், தமது பக்க நியாயத்தை வெளிப்படுத்த தம்மாலான முயற்சிகளை செய்த போதிலும், அது பெரும்பான்மை டச்சு மக்களின் மனதை மாற்றவில்லை. பணயக்கைதிகளாக வைக்கப் பட்டிருந்தவர்களும், பெரும்பான்மை டச்சுப் பிரஜைகளும், அந்த நடவடிக்கைகளை "அர்த்தமற்ற பயங்கரவாதமாக" கருதினார்கள். பலர் மனதில் மொலுக்கர்களுக்கு எதிரான துவேஷமும் மேலெழுந்து வந்தது. அதிர்ஷ்டவசமாக எந்த விதமான அசம்பாவிதமும் நடக்கவில்லை. மொலுக்கு இளைஞர்களின் ஆயுதபாணி நடவடிக்கைகளின் பின்னரே, டச்சுப் பிரஜைகள் பலர், மொலுக்கர்களின் தேசிய இனப் பிரச்சினையை முதன் முதலாக அறிந்து கொண்டார்கள்.

ஒரு சிறுவர் பாடசாலையில் நடந்த பணய நாடகம், மொலுக்கு மக்களின் போராட்டத்திற்கு பாதகமாக அமைந்திருந்தது. அங்கே நிறைய மொலுக்கு பிள்ளைகளும் படித்ததால், ஆசிரியர், பெற்றோருக்கு மொலுக்கர்களை பற்றிய நல்ல அபிப்பிராயம் இருந்தது. "சில பொறுப்பற்ற இளைஞர்களின் செயல்" அவர்களுக்கு சினத்தை ஏற்படுத்தியது. முதலாவது காரணம், அவர்கள் பணயம் வைத்தது ஒரு சிறுவர் பாடசாலை. இரண்டாவது காரணம், தீவிரவாத இளைஞர்கள் தாம் வாழ்ந்த அதே ஊரில் இருந்த பாடசாலை ஒன்றைத் தான் தேர்ந்தெடுத்திருந்தனர். 

நல்ல மனம் படைத்த டச்சு பிரஜைகள் சிலர், ரயில் பணய நாடகத்திற்கு பின்னர், மொலுக்கு மக்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டனர். சமூக முன்னேற்ற அமைப்புகளை உருவாக்க உதவினார்கள். ஆனால், அதற்காக பெரிய விலை கொடுக்க வேண்டி இருந்தது. அவர்களது உறவினர்கள் யாரும் ஆதரிக்கவில்லை. "எதிரிகளுடன் கூட்டுச் சேர்ந்த துரோகிகள்" போன்று கருதி, ஒதுக்கி வைத்தார்கள். 

கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலத்திற்குப் பிறகு, நெதர்லாந்தில் நடந்த மொலுக்கு இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் மறு ஆய்வு செய்யப் பட்டது. தொலைக்காட்சி நிலையங்கள், நேரடி கலந்துரையாடல்களை ஒழுங்கு படுத்தின. தாக்குதலில் ஈடுபட்ட, தற்போது விடுதலையான முன்னாள் தீவிரவாதி, நிலைமையை கையாண்ட அரசாங்க மந்திரி, மற்றும் முன்னாள் பணயக் கைதி, ஆகியோர் பங்குபற்றிய நிகழ்ச்சிகளினால் எந்தத் தீர்வையும் காண முடியவில்லை.

நெதர்லாந்து அரசு, தனது அன்றைய நிலைப்பாட்டை இன்றைக்கும் மாற்றிக் கொள்ளவில்லை. அனைத்து மேற்கத்திய நாடுகளும், புலம்பெயர்ந்த சமூக மக்களின் பிரச்சினை தொடர்பாக பின்வரும் அரசியல் நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றன.: 
"இன விடுதலைப் போராட்டம், ஆயுதப் போராட்டம் போன்ற விடயங்களை, உங்கள் தாயகத்திலேயே வைத்துக் கொள்ளுங்கள். புலம்பெயர்ந்த மண்ணில் அது வேண்டாம்."

(முற்றும்)

உசாத்துணை:
1. De Molukse Acties, Peter Bootsma
2. Ambon, Kolonisatie, dekolonisatie en neo-kolonisatie, Ernst Utrecht
3. Een jaar in de Molukken, H.R. Roelfsema
4. Knipselkrant van de afdeling Voorlichting der provincie Drente

Web Sites:
http://www.republikmalukuselatan.nl/nl/content/home.html


இந்தத் தொடரின் முன்னைய பகுதிகள்:
1.மொலுக்கு இனப் பிரச்சினை : டச்சு காலனிய துரோகத்தின் கதை
2.இந்தோனேசிய மொலுக்கு தீவுகளில் குடியேறிய இந்தியர்கள்
3.புலம்பெயர்ந்த தமிழர்களும், மொலுக்கர்களும் - ஓர் ஒப்பீடு
4.நாடு கடந்த மொலுக்கு அரசாங்கத்துடன் முரண்படும் இளையோர்
5.ரயிலைக் கடத்தி பணயம் வைத்த தனி நாட்டுக் கோரிக்கையாளர்கள்

No comments: