Sunday, August 04, 2013

மாவிலாறு முதல் வெலிவேரியா வரை : இலங்கையின் தண்ணீருக்கான யுத்தம்"மக்களின் அமைதி வழியில் போராடும் உரிமையை மதிக்க வேண்டும்." இவ்வாறு அமெரிக்க தூதுவராலயம் இலங்கை அரசை கேட்டுக் கொண்டுள்ளது. தென்னிலங்கையில், வெலிவேரியா பகுதியில், ஒரு தொழிற்சாலை வெளியேற்றிய நச்சுக் கழிவுகளால், குடிநீர் மாசடைந்ததால், அந்தப் பகுதி மக்கள் கிளர்ந்தெழுந்து போராடினார்கள்.

போராட்டத்தை அடக்குவதற்காக, பாதுகாப்புப் படையினர் அத்துமீறி நடந்து கொண்டதால் இருவர் கொல்லப் பட்டனர். அமெரிக்க தூதுவராலய அறிக்கை, பாதுகாப்புப் படையினரின் அத்துமீறலையும், அவர்களை ஏவிவிட்ட இலங்கை அரசையும் கண்டிக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. மாறாக, "வருத்தம்" மட்டும் தெரிவித்துள்ளது. மேலும், குடிநீர் மாசடைவதற்கு காரணமான தொழிற்சாலை பற்றியும் எந்தக் குறிப்பும் இல்லை.

ஏற்கனவே, கேரளாவில், பிளாச்சி மாடாவில், கொக்க கோலா நிறுவனம் குடிநீர் பற்றாக்குறையை ஏற்படுத்தி இருந்தது. அதனால், அங்குள்ள மக்கள் கொக்க கோலா நிறுவனத்தை எதிர்த்து போராடினார்கள். அந்தப் போராட்டமும் பாதுகாப்புப் படையினரால் அடக்கப் பட்டது. அப்போதும் அமெரிக்கா வெறும் "கவலை" மட்டுமே தெரிவித்திருந்தது. அடுத்த உலகப் போர் தண்ணீருக்காக நடக்கும் என்று பல அறிஞர்கள் எதிர்வு கூறி இருந்தனர். தண்ணீருக்கான போர் ஏற்கனவே ஆரம்பித்து விட்டது.

கம்பஹாவில் உள்ள தொழிற்சாலை ஒன்று  வெளியேற்றிய நச்சுக் கழிவுகள், கம்பஹா மாவட்ட நீர் நிலைகளில் கலந்துள்ளதால், தண்ணீர் மாசடைந்துள்ளது. ஏறக்குறைய 5000 கிணறுகள் பாவிக்க முடியாதளவு மாசடைந்துள்ளன. கிணற்று நீரை பரிசோதித்த உள்ளூர் சுகாதார ஆணையாளர், தொழிற்சாலைக் கழிவினால் தான் நீர் மாசடைந்துள்ளது என்பதை உறுதிப் படுத்தியுள்ளார். இது குறித்து, அரச அதிகாரிகளிடம் செய்த முறைப்பாட்டுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. அதனால், சிறி தம்ம தேரோ என்ற பௌத்த பிக்கு சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்திருந்தார்.

அவர் தமிழர்களுக்கு அல்லது முஸ்லிம்களுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்திருந்தால், அனைத்து ஊடகங்களும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டிருக்கும். சமூக வலைத்தளங்களிலும் இந்த நிமிடம் வரையில் ஆயிரக் கணக்கானோர் பகிர்ந்து கொண்டிருந்திருப்பார்கள். ஆனால், சிறி தம்ம தேரோ உண்ணாவிரதம் இருந்தது, அந்தப் பிராந்தியத்தில் சுற்றுச் சூழலை மாசு படுத்திய தனியார் வர்த்தக நிறுவனத்தை எதிர்த்து ஆகும்.

அதனால் தான், இந்த தகவல் எந்த ஊடகத்திலும் வரவில்லை. ஏனென்றால் அது தான் வர்க்க பாசம்.சிங்கள இனவாதிகளும், தமிழ் இனவாதிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். அவர்கள் எப்போதும் இனவாதத்தை நம்பித் தான் அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான், முதலாளித்துவத்தினால் பொது மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றிய, இது போன்ற தகவல்களை வேண்டுமென்றே புறக்கணித்து வருகின்றனர்.

ஆபத்தில் உதவுபவனே ஆருயிர் நண்பன். வெலிவேரியா மக்கள் போராட்டத்தை ஒடுக்கிய ஸ்ரீலங்கா அரசுக்கு ஆதரவாக, சில வலதுசாரி தமிழ் தேசியவாதிகள் பேசி வருகின்றனர். பொதுவாகவே, அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும், ஆர்வலர்களும், தென்னிலங்கையில் அரசுக்கெதிரான மக்கள் போராட்டம் நடக்கும் காலங்களில், வாய் மூடி மௌனிகளாக இருப்பது வழக்கம். இது போன்ற இக்கட்டான தருணங்களில், தமது உற்ற தோழனான ஸ்ரீலங்கா அரசை எதிர்க்க கூடாது என்ற வர்க்க பாசம், அவர்களின் வாய்களை திறக்க விடாமல் செய்துள்ளது. சிலர் இதனை "சிங்களவர்களின் குடும்பப் பிரச்சினை" என்று பிரச்சாரம் செய்வது வேடிக்கையானது.

வெலிவேரியாவில், ஒரு தொழிற்சாலை வெளியேற்றிய நச்சுக் கழிவுகள் குடிநீரை மாசு படுத்தியதாலேயே, இந்தப் போராட்டம் வெடித்தது, என்ற உண்மையை மறைக்கப் பார்க்கிறார்கள். அதைச் சொன்னால், "ஸ்ரீலங்கா அரசு முதலாளித்துவ நலன்களை பேணுவதற்காக உள்ளது. முதலாளிகளுக்கு பிரச்சினை ஏற்பட்டால், சிங்கள படைகள் தமது சொந்த இன மக்கள் மீதே துப்பாக்கிப் பிரயோகம் செய்வார்கள்," என்பன போன்ற உண்மைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டி வரும். வலதுசாரி தமிழ் தேசியவாதிகளும் முதலாளித்துவ ஆதரவாளர்கள் என்பதால், அவர்களின் வேஷமும் கலைந்து விடும். தமிழ்க் குறுந்தேசியவாதிகளும், சிங்கள பேரினவாதிகளும் ஒன்று சேர்ந்து, உழைக்கும் வர்க்க மக்களை இன அடிப்படையில் பிரித்து வைத்திருக்கும் சூழ்ச்சி அம்பலப் பட்டு விடும்.

உலகில் எந்தத் தேசியவாதியும், தனது சொந்த தேசிய இனத்தின் வர்க்க அடிப்படையையும், பொருளாதாரப் பிரச்சினைகளையும் புரிந்து கொள்வதில்லை. தமிழ் தேசியவாதிகளும் அதற்கு விதிவிலக்கல்ல. பொருளியல் துறையில் முதுமானிப் பட்டம் பெற்ற தமிழ் தேசியவாதிகளும் நிறையப் பேர் இருக்கின்றனர். அவர்கள் கூட, தமது சொந்த தமிழ் இன மக்களின் போராட்டத்திற்கு, பொருளாதார பிரச்சினைகளும் காரணம் என்பதை கூறுவதில்லை. குறைந்த பட்சம், அது பற்றிய விழிப்புணர்வை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதில்லை. அவர்கள் உண்மையில் தமிழ் மக்களின் சேவகர்களா, அல்லது முதலாளித்துவ அடிமைகளா?

யாழ் குடாநாடு முழு இலங்கையிலும், மிகவும் வரட்சியான மாவட்டங்களில் ஒன்று. வரண்ட மண்ணைக் கொண்ட யாழ் குடாநாட்டில், மக்கள் தொகை அடர்த்தி அதிகம். குடிநீருக்கான தட்டுப்பாடு காரணமாக அடிக்கடி சாதிக் கலவரங்கள் நடக்கும் இடமாக இருந்தது. எழுபதுகளில் மழை வீழ்ச்சிக் குறைவு, முழு இலங்கையையும் பாதித்திருந்தது. இலங்கையின் மிக நீளமான ஆறான மகாவலி கங்கையை, யாழ்ப்பாணத்திற்கு திருப்பி விடும் அரசின் திட்டம், இறுதியில் திருகோணமலை வரையில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்த உதவியது. அத்தகைய காலகட்டத்தில் தான், தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டம் தொடங்கியது என்ற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்?முப்பதாண்டுகளாக நடந்த ஈழப்போரின் இறுதிக் கட்டப் போர், தண்ணீர் பிரச்சினையால் தொடங்கியது என்ற உண்மையை இன்று பலர் மறந்து விட்டார்கள். கிழக்கு மாகாணத்தில், புலிகள் மாவிலாறு அணைக் கட்டை மூடியதால் ஏற்பட்ட நெருக்கடியை தொடர்ந்து, போர் வெடித்தது. கிழக்கு மாகாணத்தில், சிங்களவர் தமிழர்களுக்கு இடையிலான இனப் பிரச்சினைக்கு, தண்ணீர் ஒரு மூல காரணம். 

சிங்களக் குடியேற்றவாசிகள், தமிழர்களின் வயல் நிலங்களுக்கு செல்லும் தண்ணீரை திசை திருப்பி விடுவார்கள். தண்ணீரை பங்கு போடுவதில் தொடங்கும் தகராறு, இனக் கலவரம் வரையில் சென்று முடிவதுண்டு. புலிகள் மாவிலாறு அணைக்கட்டை மூடியதால், பெரும்பாலும் சிங்கள விவசாயிகளே பாதிக்கப் பட்டனர். ஸ்ரீலங்கா அரசும் அதைக் காரணமாக காட்டியே போரை தொடங்கியது. பின்னர் புலிகள் அணைக்கட்டை திறந்து விட சம்மதித்த போதிலும், ஸ்ரீலங்கா அரச படைகள் குண்டு வீசுவதை நிறுத்தவில்லை.

மாவிலாறில் தொடங்கிய குண்டு வீச்சுகள், முள்ளிவாய்க்காலில் தான் ஓய்ந்தன. அதற்குள் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் தமிழ் உயிர்கள் பலியாகி விட்டன. ஈழப்போரின் இறுதிக் கட்டப் போர் நடந்த மாவிலாறு, நந்திக் கடல், முள்ளிவாய்க்கால் எல்லாமே, நீர் நிலைகள் சம்பந்தப்பட்டுள்ளமை ஒரு துயரமான ஒற்றுமை. இலங்கையில் இரத்தத்தை விட தண்ணீர் கனமானது. அந்த நாட்டில், கடந்த பத்தாண்டுகளாக ஆறுகள், குளங்கள் வற்றி விட்டிருந்தன. அதற்குப் பதிலாக இரத்தம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

21 ம் நூற்றாண்டின் உலகப்போர், மண்ணுக்காக அல்லாது, தண்ணீருக்காக நடக்கும் என்று பல அறிஞர்கள் எதிர்வு கூறி இருந்தனர். இலங்கையின் விஷயத்தில் அது மெய்ப்பிக்கப் பட்டு விட்டது. இலங்கை மட்டுமல்ல, சிரியாவில் நடக்கும் யுத்தமும் தண்ணீருக்கானது தான். அந்த நாட்டில், ஆறு வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட வரட்சி காரணமாக, நாட்டுப்புறங்களில் வாழ்ந்த மக்கள், பெரிய நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்தனர். அரசு மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யத் தவறியதால், அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. அது இன்று வரையில் ஒரு இலட்சம் உயிர்களை பலி வாங்கிய மாபெரும் இரத்தக் களரியில் முடியும் என்று, யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

இலங்கையில் மாவிலாறில் தொடங்கிய தண்ணீருக்கான யுத்தம், முள்ளிவாய்க்காலில் முடியவில்லை. அது வெலிவேரியாவில் தொடர்ந்தது. வெலிவேரியாவில் தொழிற்சாலை வெளியேற்றிய நச்சுக் கழிவுகளால், கிணற்று நீர் மாசடைந்ததால் மக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் குதித்தனர். வெலிவேரியா கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த ஊர். அங்கே பல கிராமங்களில், ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது.

பிரச்சினைகள் தொடங்குவதற்கு முன்னரே, பல கிராமங்களில், அரசு மக்களுக்கு தேவையான குடிநீரை பவுசர்கள் மூலம் விநியோகிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தது. கம்பஹா மட்டுமல்ல, இலங்கையின் பல பாகங்களிலும் நீர் நிலைகள் வற்றி வருகின்றன. ஆயிரம் வருடங்களாக, விவசாயிகளுக்கு நீர்ப் பாசனம் செய்து வந்த குளங்களின் தண்ணீர் அளவு கூட குறைந்து வருகின்றது.

தென்னிலங்கையில் தோன்றியுள்ள தண்ணீருக்கான நெருக்கடி, வட இலங்கையை பாதிக்காது என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களின் அறியாமை வியக்க வைக்கின்றது. ஏற்கனவே வன்னிப் பகுதியில், தண்ணீருக்கான மக்களின் போராட்டம் ஆரம்பித்து விட்டது. வட மாகாணத்தில், வன்னியில் மட்டுமே நீர் வளம் அதிகமாக உள்ளது.

வட தமிழீழமாக கருதப்படும் அந்தப் பிரதேசத்தில் மட்டுமே ஆறுகளும், ஏரிகளும் காணப் படுகின்றன. வடக்கை ஆக்கிரமித்துள்ள இராணுவம், நிலங்களை மட்டும் அபகரிக்கவில்லை. நீர் நிலைகளையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதற்காக, அவற்றிற்கு அருகில் இராணுவ முகாம்களை அமைத்துள்ளன. மிகப் பெரிய இரணைமடு குளத்திற்கு அருகில், வன்னிக்கான விமான நிலையம் கட்டப் பட்டுள்ளது.

சிங்கள இராணுவம், வட இலங்கையை ஆக்கிரமித்திருப்பது பற்றியும், அதன் அத்துமீறல்கள் பற்றியும், தமிழ் தேசிய அரசியல்வாதிகள் மேற்கத்திய நாடுகளில் முறையிட்டு வருகின்றனர். யாழ்ப்பாணத்தில், வன்னியில் நடக்கும் சிங்களக் குடியேற்றங்கள் குறித்தும் அவர்கள் ஆதாரங்களுடன் எடுத்துக் கூறியுள்ளனர். ஆனால், இன்று வரையில் எந்தவொரு மேலைத்தேய நாடும், அவர்களது முறைப்பாட்டை ஏற்றுக் கொண்டு, சிங்களப் பேரினவாத அரசின் மீது நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. யாராவது ஏன் என்ற கேள்வியை கேட்டார்களா?

முள்ளிவாய்க்கால் பேரழிவு மட்டுமல்ல, ஈழத்தின் மீதான சிங்களத்தின் ஆக்கிரமிப்பும் மேற்கத்திய நாடுகளின் ஆசீர்வாதத்துடன் தான் நடந்து வருகின்றன. மேலெழுந்தவாரியாக பார்த்தால், இது தமிழ் இனத்தை அழிக்கத் துடிக்கும் சிங்கள இனவாத சதியாக தோன்றும். ஆனால், அதற்குப் பின்னால் மறைந்திருக்கும் ஏகாதிபத்தியத்தின் கரங்கள் யார் கண்களுக்கும் புலப் படுவதில்லை. 

ஏகாதிபத்தியத்திற்கு தமிழ் மக்கள் மேல் வெறுப்போ, சிங்கள மக்கள் மேல் பாசமோ கிடையாது. அதன் நோக்கம் இலங்கையின் வளங்களை மறுகாலனிய ஆக்கிரமிப்புக்குள் கொண்டு வருவது. ஏகாதிபத்தியம் சிங்கள - தமிழ் உழைக்கும் மக்களுக்கு சொந்தமான வளங்களை சுரண்டுவதற்கான வசதி செய்து கொடுப்பது தான், ஸ்ரீலங்கா அரசின் தலையாய கடமை ஆகும்.

No comments: