Monday, December 26, 2011

புத்தரின் பல்லுக்காக போரிட்ட, சிங்கள-தமிழ் மன்னர்கள்

[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது! - 11]
(பதினோராம் பாகம்)


இன்று ஈழத்தமிழரின் பூர்வீகமான வாழிடங்களில் சிங்களமயமாக்கல் நடைபெறுகின்றது. இதே போன்றதொரு கலாச்சார மேலாதிக்கம், இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்திய இலங்கையிலும் இடம்பெற்றது. அது ஆரிய மயமாக்கும் நடைமுறையாக ஆரம்பித்தது.

அந்தக் காலத்தில், சிங்கள மன்னர்கள் மட்டுமல்லாது, தமிழ் மன்னர்களும் தம்மை ஆரியர்கள் என்று அழைத்துக் கொள்வதில் பெருமைப் பட்டனர். யாழ்ப்பாண இராஜ்யத்தை சிங்கை ஆரியன் என்ற மன்னன் ஆண்டு வந்துள்ளான். இவன் பெயரிலேயே "சிங்கமும், ஆரியனும்" இருப்பது கவனிக்கத் தக்கது. ஆரியச் சக்கரவர்த்திகள் என்ற பெயரில் ஒரு அரச பரம்பரையினர், நீண்ட காலமாக வட இலங்கை ஆட்சியாளராக இருந்துள்ளனர். இவர்கள் கண்டி ராஜ்யத்துடன் சிறந்த ராஜதந்திர உறவுகளை பேணி வந்துள்ளனர். ஆரியச் சக்கரவர்த்திகள், இராமநாதபுரத்தை சேர்ந்த தமிழ்ப் பிராமணர்கள் என்றும், பாண்டிய மன்னனின் தளபதிகளாக ஈழத்திற்கு அனுப்பப் பட்டவர்கள் என்றும், ஒரு வரலாற்றுக் குறிப்பு கூறுகின்றது. (Aryacakravarti dynasty - http://en.wikipedia.org/wiki/Aryacakravarti_dynasty)

ஆரியச் சக்கரவர்த்திகள், மலேயாவில் இருந்து படையெடுத்து வந்த சந்திரபானுவின் வம்சாவளியினர் என்று இன்னொரு குறிப்பு தெரிவிக்கின்றது. ஆரியச் சக்கரவர்த்திகளின் பூர்வீகம் குறித்து, இரண்டு வேறுபட்ட கதைகள் கூறப்பட்டாலும், இரண்டிலும் சில ஒற்றுமைகள் உள்ளன. "யாழ்ப்பாண ராஜ்யத்தை ஆண்ட, ஆரியச் சக்கரவர்த்தி அரச பரம்பரையினர் ஈழத் தமிழர் அல்ல, மாறாக அந்நியர்கள்", என்பது உறுதியாகத் தெரிகின்றது. மகாவம்சத்திலும் சந்திரபானு தலைமையிலான மலேயா நாட்டு படையினர் தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்த கதை வருகின்றது.

இதில் குறிப்பிடத் தக்க அம்சம் என்னவெனில், மகாவம்ச கால சந்திரபானுவும், சரித்திர கால ஆரியச் சக்கரவர்த்தியும் புத்தரின் புனிதப் பல் பாதுகாக்கப் பட்ட பேழையை அபகரித்துச் சென்றுள்ளனர். ஏனெனில், "புத்தரின் புனிதப் பல் யாரிடம் இருக்கிறதோ, அவர்களே இலங்கையை ஆள்வார்கள்." என்பது தொன்று தொட்டு நிலவி வரும் நம்பிக்கை. யாழ்ப்பாண ராஜ்யத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள், தம்மை "புத்த மதக் காவலர்கள்" என்று காட்டிக் கொள்வதில் பெருமைப் பட்டுள்ளனர். இன்றைக்கு, பௌத்த மதத்திற்கு அரச அந்தஸ்து கொடுத்து கௌரவிக்கும், சிறிலங்கா ஆட்சியாளர்களைப் போன்று தான், அன்றைய "ஈழத் தமிழ் மன்னர்களும்" நடந்து கொண்டனர்.

முன்னொரு காலத்தில், இலங்கை முழுவதும் ஒரே மாதிரியாக நடந்து கொண்டிருந்த ஆரிய மயமாக்கல், பௌத்த மதம் ஸ்தாபிக்கப் பட்ட பின்னர், இரண்டு கிளைகளாக பிரிந்தது. ஒன்றில் இந்துமயமாக்கல், அல்லது பௌத்தமயமாக்கல் என்று வடிவம் மாறியது. இவ்விரண்டு மதங்களும், இலங்கை மக்களின் தொன்மையான பாரம்பரியத்தை சிதைத்து, அழித்து விட்டன. பண்டைத் தமிழனின் பெருமைகள் யாவும் தொலைந்து போனதற்கு காரணம், (ஆரிய) இந்து மதம். இந்த உண்மையை மறுக்கும் தமிழர் எவராக இருந்தாலும், அவர் சிங்கள-பௌத்த மேலாதிக்கத்தையும் மறைமுகமாக ஆதரிக்கின்றார் என்றே பொருள் படும்.

சில வருடங்களுக்கு முன்னர், மிகுந்த பொருட் செலவில் கட்டப்பட்ட, ரம்பொடை (மலையகம்) அனுமார் சிலை, திருகோணமலை உருத்திரன் சிலை, என்பன ஆரியமயமாக்கல் இன்றைக்கும் துடிப்புடன் நடந்து வருவதை எடுத்துக் காட்டுகின்றன. சிங்கள-பௌத்த பேரினவாத அரசுக்கும், விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற இந்து மத அடிப்படைவாத அமைப்புகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவு காரணமாகவே இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. ஒரு காலத்தில் இராவணின் இருதய பூமியாக கருதப்பட்ட மலைநாட்டில், அனுமார் சிலை கட்ட வேண்டிய அவசியம் என்ன? புராதன நாகரீகத்துடன் சம்பந்தப்பட்ட திருகோணமலை சிவன் கோயிலின் அருகில், உருத்திரன் சிலை எப்படி வந்தது? உருத்திரனும், சிவனும் ஒன்றல்ல என்பதும், உருத்திரன் வேத கால ஆரியரின் தெய்வம் என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது.

வடக்கே, இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் உள்ள நயினாதீவில், பிரசித்தி பெற்ற நாகபூஷணி அம்மன் ஆலயம் உள்ளது. யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் உள்ள தீவுகள் எல்லாம், ஒரு காலத்தில் இந்தியாவுடன் இருந்த நிலத் தொடர்பை நினைவு படுத்துகின்றன. அந்த நிலத்தின் பெரும்பகுதியை, கடல் அழித்து விட்டாலும், மேடான பகுதிகளான இந்தத் தீவுகள் மாத்திரம் எஞ்சி விட்டன. நயினாதீவின் நாகபூஷணி அம்மன் கோயில், இலங்கையில் நவீன வரலாற்றுக் கால கட்டத்திற்கு முன்பிருந்தே வழிபடப் பட்டு வந்துள்ளது. இன்று அந்தப் பழமை வாய்ந்த கோயில் நமது என்று, இந்துக்களும், பௌத்தர்களும் உரிமை கோருகின்றனர்.


உண்மையில், நாகபூஷணி அம்மன், பௌத்தர்களுக்கோ அல்லது இந்துக்களுக்கோ சொந்தமான தெய்வம் அல்ல! இலங்கையில் ஒரு காலத்தில் நாகர்கள் என்றொரு இனத்தவர்கள் வாழ்ந்தனர். தோற்றத்தில், பர்மா,அல்லது தாய்லாந்துக் காரர்கள் போலிருப்பார்கள். பண்டைய நாகர் இனத்தவர்கள் நாக பாம்பை கடவுளாக வழிபட்டனர். நயினாதீவு மட்டுமல்ல, வற்றாப்பளை (முல்லைத்தீவு) நாக தம்பிரான் கோயிலும், இந்து மதத்திற்கு முந்திய சமய நம்பிக்கைகளுக்கு சான்று பகர்கின்றன. பண்டைய நாகர் இனத்தவர்கள், பிற்காலத்தில் சிங்களவர்களாகவும், தமிழர்களாகவும் மாறி விட்டனர். அதற்கு காரணம், மதம். இந்தியாவில் இருந்து இறக்குமதியான இந்து மதமும், பௌத்த மதமும், இலங்கைத் தீவின் பூர்வீக மக்களை இரண்டாகப் பிரித்தன.

உலகில் இன்றைக்கும் துலங்காத மர்மங்கள் பல உள்ளன. தென்னிலங்கையில் உள்ள மலை ஒன்றின் உச்சியில், ராட்சத கால் பாதம் ஒன்றின் அடையாளம் பதிந்துள்ளது. இந்துக்களைப் பொறுத்த வரையில் அது சிவனின் பாதம். அதனால், "சிவனொளிபாத மலை" என்று அழைக்கின்றனர். பௌத்தர்களுக்கோ அது புத்தரின் காலடித் தடம். சிங்களத்தில் "ஸ்ரீ பாத" என்று அழைக்கின்றனர். முஸ்லிம்கள், அதனை முதல் மனிதன் ஆதாமின் பாதம் என்று நம்புகின்றனர். அதனால், முஸ்லிம்களுக்கு அது "ஆதாமின் மலை". (அரபு மொழியில் ஆதாம் என்பதற்கு மனிதன் என்றும் அர்த்தம் உண்டு.)

மொரோக்கோ நாட்டை சேர்ந்த யாத்ரீகரான இபுன் பதூதா, அந்த மலைக்கு விஜயம் செய்துள்ளார். மலையடிவாரத்தில் கிரேக்க பேரரசன் அலெக்சாண்டர் வந்து தங்கியதற்கான தடயம் இருந்ததாக குறித்து வைத்துள்ளார். (The Travels of Ibn Batuta - http://sripada.org/ibn-batuta.htm) அலெக்சாண்டர் இலங்கை வந்த தகவலை, எந்தவொரு சரித்திர ஆவணமும் பதிவு செய்யாதது ஆச்சரியத்திற்கு உரியது. இபுன் பதூதா, மலையடிவார குகையில், "இஸ்கந்தர்" என்ற பெயரைக் கண்டதாக எழுதுகின்றார். (துருக்கி, அரபி மொழிகளில் அலெக்சாண்டரை, "இஸ்கந்தர்" என்று அழைப்பார்கள்.) சிந்துபாத்தின் கதைகளிலும் இந்த மலை பற்றிய குறிப்பு வருகின்றது. இன்றைய ஈரானை சேர்ந்த மாலுமியான சிந்துபாத், கடற்பயணங்களின் பொழுது இலங்கை மன்னனின் விருந்தாளியாக தங்கியிருந்துள்ளார். அப்பொழுது ஆதாமின் மலையை சென்று பார்த்துள்ளார்.

முதன் முதலாக, சிவனொளிபாத மலையை கண்ட கிறிஸ்தவர், போர்த்துகேய காலனிய படைகளுடன் வந்திருந்த எழுத்தாளர் Diego de Couto ஆவார். கிறிஸ்தவ மதத்தை பொறுத்த வரையில், ஆதாம் வாழ்ந்த ஏடன் தோட்டம், இன்றைய ஈராக்கில் உள்ளது. அதனால், கிறிஸ்தவ போர்த்துக்கேயர்கள் அதனை ஆதாமின் காலடித் தடம் என்பதை நம்பவில்லை. அவர்கள் அதனை, "புனித தோமஸின் மலை" என்று அழைத்தனர். (தோமஸ் இந்தியா வந்த இயேசுவின் சீடர்களில் ஒருவராவார்.) 19 ம் நூற்றாண்டில், ஆங்கிலேயர்கள் ஆதாமின் மலை என்று பெயர் மாற்றினார்கள். இன்றைக்கும், கிறிஸ்தவர்கள் அந்தப் பெயரிலேயே அழைத்து வருகின்றனர். ஆனால், எந்தக் காரணத்தால் அந்தப் பெயர் வந்ததென்று அவர்களுக்கும் தெரியாது. "சொர்க்கத்தில் வாழ்ந்த ஆதாமும், ஏவாளும், கடவுளால் விலக்கப் பட்ட கனியை புசித்தனர். அதனால் கோபமுற்ற கடவுள், இருவரையும் பூமிக்கு நாடு கடத்தி விட்டார். ஆதாம் வந்திறங்கிய இடம் செரண்டிப் (இலங்கை) எனும் நாடாகும்." இந்த தகவல் திருக்குரானில் எழுதப் பட்டுள்ளது. (Holy Qur'An, Surah Al-Baqarah )

இறைதூதர் முகமதுவின், காலத்தில் அல்லது அதற்குப் பிறகாவது, அரேபியாவில் வாழ்ந்தவர்கள், இலங்கையில் உள்ள ஆதாம் மலை பற்றி அறிந்து வைத்திருந்தனரா? ஆமாம். முகமதுவுக்கு முன்னரும், பின்னரும், அரேபிய நாட்டு வணிகர்கள் தென்னிந்தியாவுடனும், இலங்கையுடனும் வர்த்தகத் தொடர்பு வைத்திருந்தனர். அரேபியர்கள் முஸ்லிம்களாக மாறிய பின்னர் தான், அவர்களுக்கும் ஆதாமின் கதை மீதான ஆர்வம் ஏற்பட்டது. (கி.பி. 620-850)கேரளாக் கரையில், முசிறியில் வந்திறங்கிய, ஷேக் செயுதீன் தலைமையிலான அரபு வணிகர்கள், ஆதாம் மலையை தரிசிக்க செல்வதாக தெரிவித்துள்ளனர். (The Perumal and the Pickle - http://historicalleys.blogspot.com/2008/12/perumal-and-pickle.html)

அன்று கேரளாவை ஆட்சி செய்த, "தமிழ் மூவேந்தர்களுள்" ஒருவரான சேரமான் பெருமாள், அரபு வணிகர்களின் தொடர்பு காரணமாக முஸ்லிமாக மாறியுள்ளார்.(Cheraman Perumal - http://en.wikipedia.org/wiki/Cheraman_Perumal) சேரமான் பெருமாள் முஸ்லிமாக மாறிய கதை, இன்றைக்கும் கேரளா முஸ்லிகள் மத்தியில் பேசப் பட்டு வருகின்றது. கொடுங்களூரில் உள்ள சேரமான் மசூதி, இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே பழமையான மசூதிகளில் ஒன்றாகும். (மெதீனாவுக்கு அடுத்ததாக, ஜும்மா (வெள்ளிக்கிழமை) தொழுகை நடக்கும் இரண்டாவது பழைய மசூதி.) சேரமான் ஜும்மா மசூதியின் சிறப்பம்சம் என்னவெனில், அது ஒரு இந்துக் கோயில் போன்று காணப்படுவது தான்! மெக்காவை நோக்கி இருக்கும் வழமையான மசூதிகளுக்கு மாறாக இதற்கு கிழக்கு வாசல் உள்ளது. விளக்கு வைத்தல், சாம்பிராணி புகை காட்டுதல், போன்ற இந்து மத சம்பிரதாயங்கள் இன்றைக்கும் பின்பற்றப் படுகின்றன.

இலங்கையில் இன்றைக்கும் வாழும் பழங்குடி இனமான வேடுவர்கள், "முதல் மனிதன்" பற்றி என்ன சொல்கிறார்கள்? அவர்களது கர்ண பரம்பரைக் கதைகளின் பிரகாரம், முதல் மனிதன் வேற்றுக் கிரகத்தில் இருந்து வந்துள்ளான். அந்த வேற்றுக் கிரகவாசி வந்திறங்கிய இடமே சிவனொளி (ஸ்ரீ/ஆதாம்) பாத மலை உச்சியாகும். (Vedda People - http://www.vedda.org/) ராட்சத உருவம் கொண்ட வேற்றுக் கிரகவாசி, மலையில் இருந்து இறங்கி வந்த பொழுது, யானைகளும், பூதங்களும் (கற்கால விலங்கினங்கள்?) இளைப்பாறும் இடம் ஒன்றைக் கண்டான். அந்த இடமே கதிர்காமம் ஆகும். மகாவம்சம் எழுதப் பட்ட காலத்திலும், கதிர்காமத்திற்கு "கஜர கம" என்ற பெயர் இருந்தது. "கஜர" என்பது பூதம் என்று அர்த்தம் வரும் சமஸ்கிருதச் சொல். "கம" என்றால் ஊர்.

கற்காலத்தில் வாழ்ந்து பின்னர் அழிந்து விட்ட, அளவிற் பெரிய நியண்டேர்தால் (Neanderthal) மனிதர்களும், மம்மூத் (Mammoth) வகை யானைகளும் இலங்கையில் வாழ்ந்தமையை மேற்படி கதை உறுதிப் படுத்துகின்றது. இன்னொரு சுவாரஸ்யமான தகவல் ஒன்றுண்டு. கண்டியில், தலதா மாளிகையில் வைக்கப் பட்டுள்ள புத்தரின் பல் என்ற வஸ்து, உண்மையில் மனிதப் பற்களைப் போன்று தெரியவில்லை. "ஒரு சுட்டுவிரல் அளவு நீளமான ராட்சதப் பல்லை, எவ்வாறு புத்தருக்கு பொருத்திப் பார்க்க முடியும்?" என்று யாரும் சந்தேகம் எழுப்புவதில்லை. உண்மையில் அதுவொரு, கற்கால மனிதனின், அல்லது விலங்கின் பல்லாக (அல்லது தந்தம்) இருக்க வேண்டும். பிற்கால மனிதர்கள், அந்த தந்தத்தை வைத்திருந்தால், தமக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று நம்பியிருக்கலாம். பழங்குடியின தலைவர்கள் அதன் சக்தியினால் தமது குலத்தை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதாக நம்ப வைத்திருப்பார்கள்.


புராதன கால மக்களின் நம்பிக்கைகள், வேறு வடிவில், மதம் என்ற பெயரில் தொடர்கின்றன. "சிங்கள மன்னர்களும்", "தமிழ் மன்னர்களும்", புத்தரின் புனிதப் பல்லை கைப்பற்றுவதற்காக போரிட்டதில் அதிசயம் ஒன்றுமில்லை. இருபதாம் நூற்றாண்டின் இனவாதிகள், அந்த வரலாற்றை திரித்து தமது அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்தி வருகின்றனர். "தமிழ் மன்னர்கள், புத்தரின் புனிதப் பல்லை கொள்ளையிட்ட மத துவேஷிகளாக" சித்தரிப்பது சிங்கள இனவாதிகளது அரசியல். மறு பக்கத்தில், "சிங்களவர்களை அடக்கி, புத்தரின் புனிதப் பல்லையும் கைப்பற்றிய தமிழ் மன்னர்களின் வீர தீரச் செயல்களை" தமிழ் இனவாதிகள் கூறிப் பெருமைப் படுகின்றனர். இன்றுள்ளோர் தமது அரசியல் அபிலாஷைகளுக்காக, வரலாற்றை எப்படித் திரிக்கின்றனர், என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம்.

ஐரோப்பியர்கள் ஆதியில் இருந்தே கிறிஸ்தவர்களா? அரேபியர்கள் ஆதியில் இருந்தே முஸ்லிம்களா? தமிழர்கள் ஆதியில் இருந்தே இந்துக்களா? சிங்களவர்கள் ஆதியில் இருந்தே பௌத்தர்களா? அறியாமையின் காரணமாக, அநேகமானோர் அவ்வாறு நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இனம், மதம், மொழி என்று தாங்களும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். சுமார் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னர், இலங்கையில் "ஒரு குகையில் வாழ்ந்த ஆதி மனிதர்கள்" பற்றிய கதை, மேற்கு ஆசிய நாடுகள் வரையில் பரவியிருந்தது. அந்தக் கதை பின்னர் திரிபடைந்து, விவிலிய நூலிலும், திருக் குரானிலும் குறிப்பிடப் பட்டது. இலங்கையில் வாழும், சிங்களவர்களோ, அல்லது தமிழர்களோ, அது குறித்து அறிந்திருக்கவில்லை என்பது ஆச்சரியத்திற்கு உரியது. அதற்கு காரணம், இந்து, பௌத்தம் ஆகிய இரண்டு மதங்களின் ஆதிக்கம், மக்களின் சிந்தனையை கட்டுப் படுத்துகின்றது. இந்து, பௌத்த மதங்கள் இருட்டடிப்பு செய்த குகை மனிதர்களின் மர்மம் என்ன?

(தொடரும்)

மேலதிக தகவல்களுக்கு:

The Travels of Ibn Batuta
Aryacakravarti dynasty
The Perumal and the Pickle
Cheraman Perumal
Sri Lanka's forest-dwellers the Veddas or Wanniyalaeto

- மகாவம்சம் (தமிழில்: ஆர்.பி.சாரதி, கிழக்கு பதிப்பகம்)
- சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு (கலாநிதி க. குணராசா)
- இலங்கை வரலாறு (பேராசிரியர் செ.கிருஷ்ணராஜா)
------------------------------------------------------------

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1.இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!
2.திபெத்தில் தோன்றிய இந்து மத சின்னங்கள்
3.சீனாவுடைய சிவனே போற்றி! தாந்திரிய மதத்தின் இறைவா போற்றி!!
4.சிவபெருமானின் "சைவ மத பாலியல் புரட்சி"
5.காஷ்மீரத்து திருமூலரின் சோஷலிச திருமந்திரம்
6.தமிழ் இலக்கணம் எழுதிய சீன தேச முனிவர்
7.பழனி முருகன்: தமிழக- சீன நட்புறவுக் கடவுள் !
8.கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி?
9.தமிழர் தொலைத்த விமானம் செய்யும் தொழில்நுட்பம்
10.எல்லாளனை வீழ்த்திய, "தமிழ்த் துரோகக் கடவுள் கந்தன்!"

8 comments:

EKSAAR said...

இஸ்லாத்தில் ஆதாம் மலை பற்றிய குறிப்புகள் இல்லை. குறித்த சூறாவில் இலங்கையை குறிக்கும் செய்தி எதுவுமில்லையே?

EKSAAR said...

அந்த மலையில் இருக்கும் கால் அடையாளம் உண்மையான மனிதனுடையது என்றால் அம்மனிதனுக்கு பெரிய பல் இருந்திருக்கலாம்தானே

iRFAN said...

புனித குர்ஆனில் எந்த அத்தியாயமும் ஆதம்(அலை) அவர்கள் இலங்கையில் இறக்கப்பட்டார்கள் என்று கூறவில்லை. இருப்பினும் இலங்கைவாழ் முஸ்லிம்களின் ஏன் அனைத்துலக முஸ்லிம்களிடம் ஆதம்(அலை)இலங்கையில்தான் இறக்கப்பட்டார் என்றொரு ஆழமான நம்பிக்கை இருக்கிறது.இருப்பினும் இதற்கான போதிய சான்றுகள் இருப்பதாக தோன்றவில்லை(இருக்கலாம் எனக்குத் தெரியாது). ஒருவேளை இலங்கையை அகழ்வாராய்ச்சிக்கு உட்படுத்தினால் தக்க சான்றுகள் கிடைக்கக்கூடும். இலங்கை முஸ்லிம்கள் சுவர்க்கத்தை "சுவனம்" அல்லது "சுவனபதி" என்று அழைக்கிறார்கள். இலங்கைக்கும் சொர்ணதீப என்று ஒரு பெயருண்டு. சுவனத்தில் இருந்து வந்த மனிதன் சிலவேளை "சுவனன்" அல்லது "சுவன்" என்று அழைக்கப்பட்டிருக்கலாம். அது பிற்காலத்தில் "சிவன்" என்று திரிபடைந்து இருக்கலாம். இப்படி நோக்கினால் "சுவனகர்கள்" "சோனகர்கள்" என்றும் ஒரு வேளை "சோ+நாகர்கள்" என்றும் சிந்திக்க முனையலாம்.இவை வெறும் யூகங்களேயன்றி போதிய தெளிவுகள் இல்லை. இன்னும் பல சுவாரஸ்யமான விடயங்கள் நான் ஏற்கனவே சொன்ன "இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம்" என்ற நூலில் உள்ளது. கலையரசன், இலங்கையின் பூர்வீகத்தை ஆராய்வதே இங்கு முக்கியம் மதங்கள் வேறு வேறு கருத்துக்களை கொண்டிருக்கலாம். சந்தர்ப்பம் கிடைத்தால் இந்த புத்தகத்தையும் வாசித்து உங்கள் கருத்தை சொல்லுங்கள். எப்படியோ தெளிவு வந்தால் நன்மைதான்.. http://idrees.lk/?p=441

அரபுத்தமிழன் said...

பதிவு ஒவ்வொன்றும் அருமை
//ஐரோப்பியர்கள் ஆதியில் இருந்தே கிறிஸ்தவர்களா? அரேபியர்கள் ஆதியில் இருந்தே முஸ்லிம்களா? தமிழர்கள் ஆதியில் இருந்தே இந்துக்களா? சிங்களவர்கள் ஆதியில் இருந்தே பௌத்தர்களா?// சரியான கேள்வி.

அரபுத்தமிழன் said...

சகோ இர்ஃபான் சொல்வதும் சரியாகப் படுகிறது (சுவன்..சிவன்)
சிவனின் இரு பிள்ளைகள் பழத்திற்காகச் சண்டை போட்டது
ஆதமின் இரு பிள்ளைகள் பெண்ணிற்காகச் சண்டை போட்டது.

suvanappiriyan said...

சிறந்த பகிர்வு. பல விபரங்கள் தெரிந்து கொண்டேன்.

J.P Josephine Baba said...

ஆதமின் இரு பிள்ளைகள் பெண்ணிற்காகச் சண்டை போட்டது/// புதுக்க்கதையாக உள்ளது?

ramalingam india said...

இலங்கை பற்றி மிக உபயோகமான தகவல்கள் நன்றி