Monday, December 12, 2011

தமிழ் இலக்கணம் எழுதிய சீன தேச முனிவர்


[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது !]
(ஆறாம் பாகம்)

கைலாய மலையில், சிவபெருமானின் திருமணத்திற்காக உலக மக்கள் எல்லாம் திரண்டிருந்தனர். அதனால், பூமியின் பாரம் அதிகமாகி, வட பகுதி தாழ்ந்து தென் பகுதி உயர்ந்தது. பூமியை மீண்டும் சமப் படுத்துவதற்காக, சிவபெருமான் அகத்தியரை அழைத்து தென் திசை நோக்கி அனுப்பி வைத்தார். அகத்தியர் தென் திசை பயணமாகும் வழியில் விந்திய மலை குறுக்கிட்டது. அகத்தியர், தான் தெற்கே சென்று வடக்கே திரும்பும் வரையில், விந்திய மலை தாழப் பதிந்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அகத்தியர் திரும்பி வராததால், அப்போது தாழ்ந்த விந்திய மலை இன்றும் உயரம் குறைந்து காணப்படுகின்றது. தெற்கே போகும் வழியில், வாதாபி, வில்வலவன் என்ற இரு அசுரர்களை சமாளிக்க வேண்டியேற்பட்டது. அகத்தியர் கமண்டலத்தில் கொண்டு வந்த கங்கை நதி நீரை, காகம் வடிவில் வந்த விநாயகர் தட்டி ஊற்றி விட்டதால் தான், காவிரி ஆறு உருவானது. மேலேயுள்ள குறிப்புகள், அநேகமாக எல்லா தமிழ் இந்துக்களுக்கும் தெரிந்த புராணக் கதைகளில் இருந்து பெறப்பட்டவை.

தமிழகத்தில் பதினெண் சித்தர்களில் முக்கியமானவராகவும், "அகத்தியம்" எனப்படும் தமிழ் இலக்கண நூலை எழுதியவராகவும், அகத்தியர் போற்றப் படுகிறார். சித்தர்களின் சாதியையும் மறக்காமல் ஆராய்ந்தவர்கள், அகத்தியர் ஒரு வெள்ளாளர் என்று கூறுகின்றனர். உண்மையில், அகத்தியர் ஒரு "மர்ம ஆசாமியாக" கருதப் படுகின்றார். ஏனெனில், தமிழகத்து சித்தர்கள் பற்றி வேறு பல வரலாற்றுக் குறிப்புகள் மூலம் உறுதிப் படுத்த முடிகின்றது. ஆனால், அகத்தியர் பற்றி புராணங்கள் மட்டுமே பேசுகின்றன. இருந்த போதிலும், அகத்தியருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப் பட வேண்டிய காரணம் என்ன? மேலேயுள்ள புராணக் கதையில் இருந்தே அதனை புரிந்து கொள்ளலாம். எமது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களில் இருந்து, கனவுகள் தோன்றுவது போல, சரித்திரத்தில் நடந்த சம்பவங்கள் புராணக் கதைகளினுள் மறைந்து கிடக்கின்றன. கற்பனையை பிரித்தெடுப்பதன் மூலம், அன்று நடந்த நிகழ்வுகளைப் புரிந்து கொள்ளலாம்.

கலியுகம் பிறப்பதற்கு முன்னர் அகத்தியர் வாழ்ந்ததாக, அவரைப் பற்றிய புராணம் குறிப்பிடுகின்றது. அகத்தியரின் காலம், கி.மு. 6 ம், அல்லது 7 ம் நூற்றாண்டாக இருக்க வாய்ப்புண்டு. அந்தக் காலகட்டத்தில் தான் வட இந்தியப் பிரதேசங்கள் ஆரிய ஆதிக்கத்தின் கீழ் வந்தன. அப்போதும், தென்னிந்தியா போரில் வெல்ல முடியாத சுதந்திரப் பிரதேசமாக இருந்துள்ளது. தென்னிந்தியாவையும், வட இந்தியாவையும் பிரிக்கும் விந்திய மலை அதற்கு தடையாக இருந்தது. தென்னிந்தியா மீதான அடுத்த கட்ட படையெடுப்பை நடத்துவதற்கு முன்னர், அந்தப் பிரதேசத்தைப் பற்றிய புலனாய்வுத் தகவல்கள் தேவைப் பட்டன. அதற்காக அகத்தியர் என்ற ஒரு உளவாளியை அனுப்பி வைத்தார்கள். அகத்தியர், விந்திய மலையை தாண்டும் பாதையை கண்டுபிடித்தார். இன்று கர்நாடகா மாநிலத்தின் வட பகுதியில் அமைந்திருக்கும் வாதாபி நாட்டின் மன்னனை சூழ்ச்சியால் வென்றார். அகத்தியரின் வழித் தடத்தை பின்பற்றிய ஆரிய படைகள், மெல்ல மெல்ல தென்னிந்தியா ஆக்கிரமித்திருக்கும்.

அன்னியப் படைகள் ஆக்கிரமித்த மண்ணில் வாழ்ந்த மக்களின் மனங்களை வெல்லும் நோக்குடன் சில கதைகள் பரப்பப் பட்டன. தெற்கில் ஓடும் காவிரி ஆற்றுக்கு, வடக்கே ஓடும் கங்கை நதியுடன் தொடர்புள்ளதாக கதை கட்டி விடப்பட்டது. பூகோள ரீதியாக அது சாத்தியமில்லை என்று, அன்று தென்னிதியாவை ஆக்கிரமித்தவர்களுக்கும் தெரிந்திருக்கும். அதனால், அகத்தியரின் கமண்டல நீரை, விநாயகர் தட்டி ஊற்றியதாக கதை இயற்றினார்கள். அதே போன்று, அகத்தியர் ஒரு வட நாட்டு ஒற்றர் என்ற உண்மை தெரியக் கூடாது என்பதற்காக, தென்னிந்தியர்களின் கடவுளான சிவபெருமான் அனுப்பி வைத்ததாக கூறினார்கள். ஆரியரின் வருகைக்கு முந்திய, சங்க கால தொல்காப்பியர் எழுதிய தமிழ் இலக்கணத்தை, அகத்தியர் சமஸ்கிருதத்திற்கு ஏற்றவாறு திருத்தி எழுதி இருப்பார். இவை எல்லாம், வடக்கே இருந்து தெற்கு வரையில் ஆரிய கலாச்சாரத்தை பரப்புவதற்காக புனையப் பட்ட கதைகள். இது போன்ற கதைகளை, இன்றைக்கும் ஆக்கிரமிப்பாளர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அன்றைக்கு மதத்தின் பெயரால் அரசியல் ஆதிக்கம் நிலைநாட்டப் பட்டது.

இந்து மத நம்பிக்கையாளர்கள், எனது கூற்றுகளை கற்பனை என்று ஒதுக்கித் தள்ளலாம். அதே நேரம், புராணக் கதைகளும் கற்பனையே என்று அவர்கள் ஒப்புக் கொண்டாக வேண்டும். அவை உண்மை என்றால், பூமி தட்டை என்று (வடக்கு தாழ, தெற்கு உயர்ந்தது அதனால் தான்) நம்புகிறார்களா? அது போக, சிவபெருமானின் திருமண விழாவையும், அகத்தியரின் தெற்கு நோக்கிய பயணத்தையும் தொடர்பு படுத்தும் கதை தமிழர்களுக்கு மட்டுமே சொல்லப்படுவதன் காரணம் என்ன? பெங்களூர் சித்த மருத்துவ கல்லூரியை சேர்ந்த Dr. Mandayam Kumar செய்த ஆய்வு வேறொரு கதையைக் கூறுகின்றது.
( SAGE AGASTHYA – FOREMOST OF THE SIDDHAS by Dr. Mandayam Kumar of the Siddha Medical Research Institute, Bangalore) அகத்தியர் பற்றிய தமிழ் நாட்டுக் கதைகளை மட்டுமல்லாது, வட நாட்டுக் கதைகளையும் தனது ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார். அகத்தியர் பற்றி வட நாட்டில் நிலவும் கதைகளில், கடற்கோள் (சுனாமி) தாக்குதல் காரணமாக காணாமற் போன குமரி கண்டம் பற்றிய குறிப்புகள் வருகின்றன. பழந்தமிழரின் பெருமைக்கு சான்றாக விளங்கும் தரவுகளை தமிழ்ப் புராணக் கதை மறைக்க வேண்டிய காரணம் என்ன?

சித்தர்கள் எனப்படுவோர், ஆரிய-பிராமண ஆதிக்கத்தை எதிர்த்த திராவிட (பூர்வீக இந்தியர்கள்) புத்திஜீவிகள் ஆவர். (சைவ சமயத்தின் நெருக்கடியான நிலையும் சீர்திருத்தக் குறிப்புகளும், மறைமலை அடிகள்,& இந்து சமய வரலாறு, N.C. கந்தையா பிள்ளை) திருமூலரும், அகத்தியரும் தமிழர்கள் அல்ல. இருவரும் வட நாட்டில் இருந்து வந்தவர்கள்.(The coronation Tamil dictionary , N. Kadirvelu Pillai, Kanchi Nagalinga Mudaliar)தமிழகத்திற்கு வந்த அகத்தியர் பற்றி திருமூலர் கேள்விப் பட்டிருந்தார். ஆனால், இருவருக்கும் இடையில் சில கொள்கை முரண்பாடுகள் காணப்பட்டன. ஆகவே, வடக்கே இருந்து வந்த "ஆரிய அகத்தியர்" எவ்வாறு சித்தர் குழுமத்தில் ஒருவராகக் கருதப் படுகிறார்? அகத்தியர் தன்னை ஆரியராக இனங் காட்டியிருக்க மாட்டார். அவரது "வித்தியாசமான முகத் தோற்றம், பேசிய மொழி, கல்வி கற்ற இடம்" என்பன (இது குறித்து பின்னர் விரிவாகப் பார்ப்போம்), அவரது உண்மையான அடையாளத்தை மறைக்க உதவியிருக்கலாம். வட நாட்டு புராணக் கதைகள் அவரை குஜராத்தில் பிறந்த தூய ஆரிய இனத்தை சேர்ந்தவராக குறிப்பிடுகின்றன.

தமிழர்கள், அகத்தியர் வெள்ளாள சாதியில் பிறந்ததாக கூறுகின்றனர். அகத்தியரின் வருகைக்கு பின்னர், தமிழகத்தில் ஆரிய ஆதிக்கம் நிலைநாட்டப் பட்டிருக்கும். அந்நியர்களான ஆரிய ஆக்கிரமிப்பாளர்கள், உள் நாட்டில் தம்மோடு ஒத்துழைத்த தமிழர்களின் ஒரு பிரிவினரின் உதவியுடன் தான் ஆட்சி நடாத்தி இருப்பார்கள். அந்தப் பிரிவினர் (ஆரியர் ஆதரவில் உயர்சாதியான வெள்ளாளர்கள்?)அகத்தியரை தமது ஆன்மீகக் குருவாக ஏற்றுக் கொண்டிருப்பார்கள். அகத்தியர் பற்றிய தமிழ்ப் புராணக் கதைகள் எல்லாம், அந்நியருடன் ஒத்துழைத்த தமிழர்களால், பிற்காலத்தில் இயற்றப் பட்டிருக்கலாம். சைவ சித்தாந்தமும், அகத்தியர் புராணமும், தமிழர்களை "இந்து மதம்" எனும் வட நாட்டு ஆரிய கலாச்சாரத்திற்குள் ஒன்று சேர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளன.

அகத்தியர், கி.மு. 7673 ம் ஆண்டு, புராதன ஆரிய இனத்தை சேர்ந்த பார்கவா முனிவருக்கும், இந்துமதிக்கும் மகனாகப் பிறந்தார். அவர் இன்றைய சீனாவின் மாநிலங்களான திபெத், மஞ்சூரியா ஆகிய இடங்களில் கல்வி கற்றுள்ளார். சில காலம் மலேயாவில் வசித்து விட்டு, கடல் கடந்து குமரி கண்டம் வந்துள்ளார். அன்றைய குமரி கண்டமானது, தென்னிந்தியாவில் இருந்து அந்தார்ட்டிகா வரை விரிந்திருந்தது. அதன் மையப் பகுதியாக இலங்கை இருந்துள்ளது. குமரி கண்டம் முழுவதும் இராவணனின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது. இராவணன், குமரிக் கண்டத்தின் ஒரு பகுதியை தானமாக கொடுத்துள்ளான். திருகோணமலை, கதிர்காமம் போன்ற இடங்களுக்கு விஜயம் செய்த அகத்தியர், அங்கு முருகனிடம் சித்த வைத்தியத்தை கற்றுக் கொண்டார். சித்த வைத்தியம் குறித்த அறிவை பெற்றுக் கொண்ட அகத்தியர், மீண்டும் சீனா சென்றுள்ளார். சீனாவின் மஞ்சூரியாவிலும், பிற பகுதிகளிலும் சித்த வைத்தியம் கற்பிக்கும் பாடசாலைகளை நிறுவினார்.

வட நாட்டாரின் புராணக் கதையிலும் இயற்கை அனர்த்தம் பற்றிய குறிப்புகள் வருகின்றன. தெற்கே குமரி கண்டத்தின் ஒரு பகுதியை கடல் விழுங்கியது. வடக்கே ஆர்க்டிக் பனி உருகியது போன்ற பேரழிவுகள் குறிப்பிடப் படுகின்றன. முன்பு மஞ்சூரியாவில் இருந்த இந்துக்களின் புனிதஸ்தலமான கைலாய மலை, பிற்காலத்தில் திபெத்திற்கு இடம் மாறுகிறது. ஒரு காலத்தில், சீனாவின் வட மாநிலமான மஞ்சூரியாவில் வாழ்ந்த "இந்துக்கள்" (பிராமணர்கள்), பிற்காலத்தில் தென் மாநிலமான திபெத்திற்கு இடம் பெயர்ந்து வந்துள்ளனர் என்பது இத்தால் பொருள் கொள்ளப் பட வேண்டும். பிராமணர்கள் அல்லது ஆரியரின் மூதாதையர் துருக்கிய இனத்தவர்கள், வெளித் தோற்றத்தில் சீனர்கள் போன்றிருப்பார்கள். அதாவது, மத்திய ஆசியாவை சேர்ந்த துருக்கிய இனங்களை சேர்ந்தவர்கள். மஞ்சூரியாவிற்கு அருகில் உள்ள மொங்கோலியா நாட்டில், இந்து தெய்வங்களின் படங்கள், இந்து புராணக் கதைகள் ஆகியன இன்றைக்கும் அழியாமல் பாதுகாக்கப் படுகின்றன. இது குறித்து இந்த தொடரின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டுள்ளேன்.

இயற்கை அனர்த்தங்களால் ஏற்பட்ட பூகோள மாற்றங்கள் காரணமாக, அகத்தியர் தமிழகத்தை தெரிவு செய்கிறார். தனது இறுதிக் காலத்தில் தமிழம் வந்து, அங்கிருந்த சித்தர்களுடன் தொடர்பேற்படுத்திக் கொள்கிறார். அகத்தியர் சித்த வைத்தியத் துறையை வளர்ப்பதற்காக கல்லூரிகளை நிறுவுகிறார். தமிழகத்தில் இருந்த படியே, மலேயா, சீனா, அரேபியா, போன்ற தூர தேசங்களுக்கும் சென்று சித்த ஞானத்தை போதிக்கிறார். இறுதியாக, திருவனந்த புறத்தில் சமாதி அடைகிறார். இது வரை கூறப்பட்ட அகத்தியர் கதையில், முக்கியமாக ஒன்றைக் கவனிக்க வேண்டும். அகத்தியர் தனது ஆரம்பக் கல்வியை சீனாவில் கற்றுள்ளார். குமரி கண்டத்தில் (இலங்கையில்) சித்த வைத்தியத் துறை உன்னத வளர்ச்சி அடைந்திருக்கிறது. அதனை கேள்விப் பட்ட அகத்தியர் இலங்கை வந்து, முருகனிடம் சித்த வைத்தியம் படித்துள்ளார். அந்த அறிவை போதிப்பதற்காக, சீனா சென்று பாடசாலைகள் அமைத்துள்ளார். தமிழகத்திற்கு வந்து சித்தர்களை நிறுவன மயப் படுத்தியுள்ளார். அதுவரை காலமும் தமிழில் எழுதப்பட்ட சித்த வைத்திய குறிப்புகளை, சீன மொழியில் மொழிபெயர்த்துள்ளார். (அதே நேரம், சித்தர்களின் குறிப்புகள் கிரேக்கம், அரபு, ஹீபுரு, மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன என்பதையும் மறுப்பதற்கில்லை.)

அகத்தியருக்கும் சீனாவுக்கும் இடையிலான நெருக்கத்தை வைத்துப் பார்க்கும் பொழுது, அகத்தியர் ஒரு சீனராக இருக்கலாம் என்ற சந்தேகம் எழலாம். சீனாவில் ஆரம்பக் கல்வி கற்ற அகத்தியருக்கு சீன மொழி தெரியாது என்று கூற முடியாது. மேலும், "தமிழ் பேசினார்கள்", என்பதற்காக, சித்தர்கள் எல்லாம் தமிழர்கள் என்று வாதிடலாம் என்றால், அகத்தியர் ஒரு சீனர் என்று வாதிட முடியாதா? மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர், தென்னிந்தியாவில் உள்ள சித்த மருத்துவ இரகசியங்களை அறிவதற்காக சீன மன்னர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர். இதனை பல்வேறு சீன இலக்கியங்களை ஆதாரமாகக் கொண்டு, பிரித்தானியா கலைக்களஞ்சியம் பதிவு செய்துள்ளது. அகத்தியர் ஒரு சீன தேச உளவாளி என்ற சந்தேகங்களும் நிலவின. ஆனால், அன்றைய காலகட்டத்தையும் கவனத்தில் எடுக்க வேண்டும். வட இந்தியா முழுவதும், பண்டைய திராவிட இராச்சியங்கள் ஆரியப் படைகளால் கைப்பற்றப் பட்டு ஆக்கிரமிக்கப் பட்டன. அந்நேரத்தில், விந்திய மலைக்கு தெற்கே, குறிப்பாக தமிழகத்தில் திராவிட பாரம்பரியமும், புராதன அறிவியலும் பாதுகாக்கப் பட்டது. அந்த அறிவியல் செல்வத்தை அடைவதற்காக, வட நாட்டில் இருந்து ஊடுருவல்கள் நடந்திருக்க வாய்ப்புண்டு.

அகத்தியர் ஒரு சீனர் என்பதற்கு வேறு என்ன ஆதாரம்? தமிழகத்தில் அகழ்வாராய்ச்சி மூலம் கண்டெடுக்கப் பட்ட அகத்தியரின் சிலைகளை ஒரு தடவை உற்று நோக்குங்கள். அகத்தியரின் முகம், சீனர்களின் முகம் போலத் தோன்றவில்லையா? மேலும் அகத்தியர் குள்ளமான முனிவர் என்று அனைத்து புராணங்களிலும் எழுதப் பட்டுள்ளது. பொதுவாகவே சீனர்கள் குள்ளமானவர்கள் என்பதை நான் இங்கே கூறத் தேவையில்லை. அகத்தியர் மட்டுமே ஒரேயொரு சீன நாட்டு சித்தர் அல்ல. தமிழகத்தில் வாழ்ந்த பதினெட்டு சித்தர்களில், இன்னும் இருவர் சீனர்கள். இவை யாவும், பண்டைய தமிழகத்திற்கும், சீனாவுக்கும் இடையில் நிலவிய நெருங்கிய உறவை எடுத்துக் காட்டுகின்றன. நாம் உண்ணும் சோறு கூட, அறுந்து போன சீனத் தொடர்பை தினந்தோறும் நினைவூட்டிக் கொண்டிருக்கிறது. அவற்றை எல்லாம் தமிழர்களான நாங்கள் மறந்து விட்டோம்.

(தொடரும்)


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1.இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!
2.திபெத்தில் தோன்றிய இந்து மத சின்னங்கள்
3.சீனாவுடைய சிவனே போற்றி! தாந்திரிய மதத்தின் இறைவா போற்றி!!
4.சிவபெருமானின் "சைவ மத பாலியல் புரட்சி"
5.காஷ்மீரத்து திருமூலரின் சோஷலிச திருமந்திரம்

13 comments:

பாஹிம் said...

இன்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே இலங்கையிலிருந்து எகிப்துக்கு மிளகு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. உரோமரும் எகிப்தியரும் அரபியரும் சீனாவுடன் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கையைத் தங்குமிடமாகவும் கொண்டிருந்தனர். எனவே, தமிழருக்கும் சீனரும் அக்காலத்திலேயே தொடர்பு இருந்திருக்க வேண்டுமென்பது புலனாகின்றது. எனினும் அகத்தியர் சீனர் தானென்று உறுதியாகக் கூற முடியாத அதேவேளை அவர் தமிழரென்றும் கூற முடியவில்லை. இன்றைக்குத் தமிழ் பேசுவோர் அனைவரும் தூய திராவிடரென்று கூற முடியாது. ஏனெனில், இஸ்லாத்துக்கு முந்திய காலத்திலேயே இலங்கையிலும் சேரநாட்டிலும் அரபியர்கள் தங்கி வாழ்ந்ததுடன் திருமணத் தொடர்புகளையும் கொண்டிருந்தனர். அப்போதிருந்தே நடந்த அவ்வாறான இனக்கலப்பு ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னரும் தூய திராவிட இனமொன்று இருக்க முடியாமலாக்கியுள்ளது. இலங்கையின் தொடக்க குடிகளும் தமிழகத்துத் தொடக்க குடிகளும் அந்தமான் தீவினரும் பப்புவா தீவினரும் அவுத்திரேலிய தொடக்க குடிகளும் மேலை ஆபிரிக்கர்களும் ஒத்த தன்மைகளைக் கொண்டருக்கின்றனர். எனினும் பொதுவாகக் காணப்படும் தமிழர் சிங்களவர் மலையாளிகள் போன்றோரில் பல்வேறு இனங்களின் கூறுகள் கலந்திருப்பது புலப்படுகின்றது. இன்றைய நிலையில், உலகின் பல்வேறு பகுதிகளிலும் சிதறியுள்ள சிறிய இனக் குழுக்குள் சிலவற்றைத் தவிர, தூய இனம் என்று எவரும் தம்மைக் கூறிக்கொள்ள முடியாது. தமிழரில் ஏற்கனவே அரபியரும் யவனரும் சிங்களவரும் ஆரியரும் ஆபிரிக்கரும் எனப் பலரும் கலந்து அதனைக் கலப்பினமாக்கி விட்டுள்ளனர்.

Thava said...

பொது அறிவை வளர்க்க கூடிய வரலாற்று தகவலை பதிவாக வழங்கியதற்க்கு மிக்க நன்றிகள்.

எஸ் சக்திவேல் said...

போகிறபோக்கில் ஆபிரகாம் லிங்கனும் சீனர் என்று வரும் போலுள்ளது.

அரபுத்தமிழன் said...

இந்தத் தொடர் பெரும் ஆச்சர்யங்களைத் தந்து கொண்டிருக்கிறது.
கலையரசனின் கடின உழைப்புக்கு பாராட்டுதலும் நன்றிகளும்.

திண்டுக்கல் தனபாலன் said...

இதுவரை அறியாத பல தகவல்கள். அருமை!
பகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"

பாஹிம் said...

தமிழுக்குச் சேவை செய்த பிற மொழிக்காரர் - சீனர், அரபியர், சிங்களவர், சமசுகிருதத்தினர், ஆங்கிலேயர், இத்தாலியர், பிரெஞ்சுக்காரர், மலாயர் என்று பலர் உள்ளனர். இன்று ஏழாம் அறிவு திரைப்படம் பார்த்து விட்டுத் தமிழர் பெருமை அல்லது தமிழ்ப் பெருமை பேசும் பலருக்குத் தூய தமிழில் எழுதவோ பேசவோ தெரியவில்லை. கேவலம் சமசுகிருதத்தை வெகுவாகக் கலந்து விட்டு, அதைப் பிரிக்கத் தெரியாமல் தமிழர் பெருமை பேசுகின்றனர். தமிழில் குறிப்பிட்ட பொருள் கொள்ளத் தக்க தவிர்க்க முடியாத சொற்களைப் பயன்படுத்துவது ஏற்கத் தக்கது. எனினும், சிங்களச் சொற்களைப் பயன்படுத்திக் கொண்டு சிங்களத்தை எதிர்ப்பதும் அரபுச் சொற்களைப் பயன்படுத்திக் கொண்டு யூதர்களை ஆதரிப்பதும் கேவலமானது. செம்மொழிப் பெருமை பேசும் பலருக்குச் செம்மொழியைக் காப்பாற்றத் தெரியவில்லை.

Kalaimahan said...

இருபதாம் நூற்றாண்டுப் பெருங்கவிஞன் பாரதி “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்“ என்றார். இன்று தமிழை உயரியதாய் வனாளாவக் குரைக்கும் சிலர், தமிழின் உண்மை ஏதென்றுகூட அறிவதில்லை. பிறமொழிகளைக் கொச்சைப்படுத்துகின்றனர். மொழிகள் மக்களுக்கே அன்றி மாக்களுக்கன்று. பாஹிம் சொல்வதுபோல, செம்மொழி என்று உரைத்தால் மட்டும்போதாது. அதனை நடைமுறையில் கொண்டுவர ஆவன செய்யற்பாலது. கலையகம் தமிழில் ஆய்வு ரீதியாக நற்பணி செய்கிறது - கற்போருக்குத் தீனிபோடுகிறது. புதுப்புது அறிவியல் கருத்துக்களை நுகர ஆவன செய்கிறது. இனி மாணாக்கருக்குத் தமிழ்சொலும்போது, தமிழ் இலக்கணம் எழுதிய சீன தேச முனிவர் பற்றியும் தகவல் கொடுக்கலாமே! - பணிசிறக்க வாழ்த்துக்கள்!

முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்' said...

கலையரசன், வணக்கம்.

தங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மடல் அனுப்பியுள்ளேன். அதற்கான பதிலை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றேன்.

முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்' said...

மதிப்பிற்குரிய கலையரசன் அவர்களுக்கு, வணக்கம்.

தங்கள் பதிவுகளை “கலையகம்” என்னும் வலைப்பதிவில் கண்டேன்.
வரலாற்றுத் தரவுகளைக் கொண்டமைந்த தங்கள் பதிவுகள் என்னை மகிழ்ச்சியிலாழ்த்தின.

நான், தமிழ் மருத்துவத்தை ஆய்வுசெய்து ‘முனைவர்’ பட்டம் பெற்றுள்ளேன்.
அடுத்து,
தமிழ் மருத்துவத்தின் வரலாற்றையும்,
சித்தர்களின் காலத்தையும் வரையும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

ஆனால்,

இதுவரையில் எந்த சித்தரின் காலத்தையும் குறிப்பிட முடியவில்லை.

தங்களின் கட்டுரையில், அகத்தியரின் காலத்தையும், அவர் பல மருத்துவ நூல்களைச் சீன மொழிக்கு மொழிமாற்றம் செய்தார் என்பதைக் குறிப்பிட்டுள்ளீர்கள். அவற்றிக்கான சான்றுகள் எவை என்பதைத் தயவுகூர்ந்து தெரிவிக்க வேண்யுகிறேன்.

அக்காலத்தில், தமிழ் மருத்துவத்தின் நூல்கள் ஏதேனும் ஒன்றிரண்டின் பெயர்களை அறிய முயற்சிக்கிறேன். அதற்கும் தங்களின் உதவியை நாடுகிறேன்.

தமிழ்நாட்டில் தமிழ் மருத்துவத்திற்கென்று ஒரு பல்கலைக் கழகம் வேண்டும் என்று முயற்சி செய்துகொண்டு வருகின்றேன்.
அதற்கு, மேற்கூறியவாறு, தமிழ் மருத்துவத்தின் வரலாறும் சித்தர்களின் காலத்துடன் கூடிய வரலாறும் தேவைப்படுகின்றன.

தங்களின் கட்டுரையில் குறிப்பிடப்பெறும் ‘பிரிட்டன் கலைக்களஞ்சியத்தின் தொகுதி எண், பக்கம் எண். என்பவற்றைத் தெரிவித்தால் நலமாக இருக்கும்.

எனது வேண்டுகோளினை மதித்து, பதிலளிக்க வேண்டுகிறேன்.

Kalaiyarasan said...

அன்புடன் முனைவர் இரா.வாசுதேவனுக்கு,


இந்தக் கட்டுரை எழுதுவதற்கு தேவை பட்ட விபரங்கள் யாவும் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றின் இணைப்புகளை இங்கே தருகின்றேன்.
1.The Encyclopaedia Of Indian Literature, Siddha Literature (Tamil), Page 4092

2. http://murugan.org/bhaktas/agastyar.htm

நன்னயம் said...

" சிங்களச் சொற்களைப் பயன்படுத்திக் கொண்டு சிங்களத்தை எதிர்ப்பதும் "

பாகிம் அடிப்படை மொழி அறிவு கூட இல்லாமல் தனது கருத்தை கூறியுள்ளார். தமிழில் உள்ள சிங்கள சொற்களை விட சிங்களத்தில் உள்ள தமிழ் சொற்கள் பல மடங்கு அதிகம்.

http://en.wikipedia.org/wiki/Tamil_loanwords_in_Sinhala

எதையும் கருத்து கூற முன் சற்று ஆராய்ந்து விட்டு கூறவும் பாகிம்

mahiram said...

unga informations pala fake and anti tamil a iruku tamilarkalaey anaithu kalaikalilum siranthu vilankinarkal athai parthu pala makkal tamil naduku vanthu katru kondarkal

bogar tamilnadil piranthu pinar cheenavirku sendrathaka than varalaru undu
ipadi pala makkal cheenavirku sendrathaka than varalaru undu but neenga chinese than tamilarku culture sollikudutha mathiri pesuringa

krishnakannan said...

அன்புடையீர்,
வணக்கம். மனதை செம்மையாக்கி, காதலாகி, கசிந்து, கண்ணீர் மல்கி, ஞானப்பழமாய் மிளிர்வோம். வாரீர்.
ஓம் ஸ்ரீ சத்குரு அகத்தியர் 108 போற்றியை தினமும் சொல்வதால், மனம் தெளிந்து செம்மையாகும்; .நம் வாழ்க்கை மேம்படும்.

https://youtu.be/WRT8WG1KVRo

இக்காணொளியை அமைதியான இடத்தில் அமர்ந்து நிதானமாக ஆழ்ந்து கேட்டீர்களெனில், உங்களை அறியாமல் உங்கள் மூச்சு சீராகி, ஆழ்ந்த தியான நிலைக்கு செல்வதை உணரலாம். ஹெட் போன் (Head phone) பயன்படுத்துவது சாலச் சிறந்தது
நன்றி