Monday, January 17, 2011

விக்கிலீக்ஸ் உள்ளே, ராஜபக்ச வெளியே!

அமெரிக்க அரசின், வெளிவிவகார பொறுப்புகளை கவனிக்கும் அதிகாரிகள் பதிவு செய்து வைத்திருந்த இரகசிய தகவல்களை, விக்கிலீக்ஸ் கசிய விட்டு வருகின்றது. விக்கிலீக்ஸ் ஆரம்பத்தில், ஈராக்கில் அமெரிக்க இராணுவத்தின் அத்துமீறல்களை வெளிக்கொணர்ந்தது. அண்மைக் காலமாக உலக நாடுகளுடன் அமெரிக்கா கொண்டுள்ள இராஜதந்திர உறவுகளை நெருக்கடிக்கு உள்ளாக்கும் தகவல்கள் கசிய விடப் பட்டுள்ளன. அமெரிக்க நண்பர்களான மேற்கு ஐரோப்பிய நாடுகள் உட்பட, சீனா, ரஷ்யா, ஈரான், லெபனான் ஆகிய நாடுகள் குறித்து அமெரிக்கா கொண்டிருந்த கருத்துக்கள் வெளிவருகின்றன. இவை யாவும், இராஜதந்திர உறவுகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, இதுவரை வெளிப்படையாக பேசப்படாதவை. கேபிள்கள் மூலம் தனிச்சுற்றுக்கு விடப்பட்ட தகவல்கள், இன்று அனைவரும் பார்க்கும் வண்ணம் தெருவிலே வீசப் படுகின்றன. அந்த வகையில், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இலங்கை அரசியல் நிலைமை குறித்து தெரிவித்த தகவல்களும் வெளிவந்துள்ளன. இந்த கேபிள்கள் கொழும்பில் இருந்து அமெரிக்காவுக்கு இரகசியமாக அனுப்பப்பட்டவை.

அமெரிக்க தூதரகம் இலங்கை நிலவரம் பற்றி, குறைந்தது ஐயாயிரம் அல்லது பத்தாயிரம் கேபிள்கள் இதுவரை வெளியாகி உள்ளன. இவை யாவும் பிரிட்டனின் கார்டியன் நாளேட்டின் வசம் உள்ளன. விக்கிலீக்ஸ் இவற்றை பொது மக்கள் பார்வையிடலாம் என்று பகிரங்கப் படுத்தி உள்ள போதிலும், தெரிந்தெடுக்கப் பட்ட கேபிள்கள் மட்டுமே வெளியாகின்றன. நாங்கள் யாரும் எமது வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு, ஐயாயிரம் கேபிள்களை வாசித்து கொண்டிருக்கப் போவதில்லை. அதனால் கார்டியன் அவ்வப்போது வெளிவிடும் கேபிள் தகவல்கள் மட்டுமே, அனைத்து அச்சு, இலத்திரனியல் ஊடகங்களிலும் மறுபிரசுரமாகின்றது. விக்கிலீக்சிடம் இருந்து அவற்றைப் பெற்றுக் கொண்ட கார்டியன், தான் விரும்பும் தகவல்களை மட்டும் தேர்ந்தெடுக்கின்றது. தான் விரும்பும் நேரத்தில் அவற்றை வெளியிட்டு வருகின்றது. விக்கிலீக்ஸ் டெர் ஸ்பீகல் (ஜெர்மனி) போன்ற பிற நாட்டு ஊடகங்களுக்கும் ஒரே நேரத்தில் அனுப்பி வைத்துள்ளது. ஆயினும் காலனிய தொடர்பு காரணமாக, இங்கிலாந்து ஊடகங்களுக்கு இலங்கை மீதுள்ள அக்கறை, பிற நாட்டு ஊடகங்களுக்கு இல்லை.

இலங்கை நிலவரம் தொடர்பாக இதுவரை குறைந்தது ஐந்து கேபிள் தகவல்களை கார்டியன் வெளியிட்டுள்ளது. (இன்னும் வெளிவராதவை ஆயிரக்கணக்கில் உள்ளன.) முதலாவது கேபிள், இலங்கை அரசுத் தலைவர்கள் போர்க்குற்றவாளிகள் என்று அறிவித்தது. போர்க்குற்ற விசாரணை குறித்து தமிழர்கள் கருத்து என்ன? என்று ஆராய்ந்தது. இரண்டாவது கேபிள், இலங்கை அரசுடன் சேர்ந்தியங்கிய ஈ.பி.டி.பி., கருணா குழு போன்றவர்களின் குற்றங்களை எடுத்துக் கூறியது. வர்த்தகர்களை கடத்தி கப்பம் வசூலிப்பது மட்டுமல்ல, பாலியல் தொழில் போன்ற கிரிமினல் குற்றங்கள் மூலம் பணம் சம்பாதிக்கிறார்கள் என்றது. மூன்றாவது கேபிள், புலிகளின் மனித உரிமை மீறல்களை பட்டியலிட்டது. வன்னியில் இடம்பெற்ற கட்டாய ஆட்சேர்ப்பு, வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களுக்கு வரும் நிதியை TRO மூலம் எடுத்துக் கொண்டமை, ஆகியவற்றை கூறியது. நான்காவது கேபிள், இந்திய அதிகாரி ஒருவரின் கருத்தைக் கூறியது. இலங்கை அரசும், புலிகளும் சர்வதேச சமூகத்தை மதிப்பதில்லை என்று அவர் போர் தீவிரமடைந்திருந்த காலத்தில் குற்றஞ்சாட்டி இருந்தார். ஐந்தாவது கேபிள், போருக்குப் பின்னர் மனித உரிமை மீறல்கள் குறைந்து விட்டதாகவும், பெருமளவு அகதிகள் மீள்குடியேற்றப் பட்டு விட்டனர் என்றும், இலங்கை அரசுக்கு பாராட்டுப் பத்திரம் வாசித்தது.

2007 ல் அனுப்பப்பட்ட கேபிள்கள் காலத்தால் முந்தியவை. அதாவது இறுதி யுத்தம் ஆரம்பமாகி முழு வீச்சில் நடந்தது கொண்டிருந்த காலம் அது. முதலில் இலங்கை குறித்து இந்தியா கொண்டிருந்த கருத்துக்கள் சில. மோகன் என்ற இந்திய வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் கூறிய தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தெற்காசிய நிபுணரான அவர் இலங்கைப் பிரச்சினை குறித்து கூறியதாவது: "இலங்கை நிலவரம் மோசமாக உள்ளது. இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் சர்வதேச சமூகத்தை அநேகமாக மதிப்பதில்லை. தமிழ் நாட்டிலிருந்து புலிகள் ஆயுதம் கடத்துவதை தடுக்க, இலங்கை, இந்திய கடற்படைகள் பாக்கு நீரிணையில் கூட்டாக ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளன." ( US embassy cables: Indian officials tell US neither Sri Lanka government nor Tamil Tigers respect international community , Friday, 27 April 2007, 12:27 C O N F I D E N T I A L SECTION 01 OF 02 NEW DELHI )

அன்று போரில் ஈடுபட்ட இரு தரப்பினரும் யார் சொல்வதையும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை. முள்ளிவாய்க்கால் முடிவு வரை, பிடிவாதமாக போரை தொடர்ந்தனர். இலங்கையில் போரை இந்தியா வழிநடத்திக் கொண்டிருந்தது. அதே நேரம், தன்னை நடுநிலைமையாளனாக காட்டுவதற்கு முயன்றது. அமெரிக்காவின் தெற்காசிய பிரதிநிதியாக இந்தியா செயல்பட்டுள்ளமையை கேபிள் தகவல் மூலம் அறிய முடிகின்றது. இலங்கைப் பிரச்சினையில் அமெரிக்காவின் வெளிவிவகார கொள்கைக்கு ஏற்றவாறு தான் இந்தியா நடந்து கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து ஆயுதக் கடத்தலை தடுப்பதற்கான, கடற்படை கூட்டு ரோந்து நடவடிக்கை பற்றியும் சுட்டிக்காட்டத் தக்கது. புலிகளுக்கான ஆயுதக் கடத்தலை தடுத்து பலவீனப்படுத்திய, இலங்கை, இந்திய கூட்டு நடவடிக்கைக்கு அமெரிக்காவும் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் சீனா ராஜபக்சவுடன் நெருக்கமாகி வருவதை அதே கேபிளில் குமார் தெரிவித்துள்ளார்.

2007 ல், அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் ஒ.பிளேக் அனுப்பிய கேபிள், இலங்கை இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் தமிழ் துணைப்படைகளை கடுமையாக விமர்சிக்கின்றது. "புலிகளில் இருந்து பிரிந்த கருணா குழு, ஈபிடிபி போன்ற துணைப்படைகள், புலிகளின் ஆதரவாளர்களை கடத்திச் செல்வதிலும், நீதிக்குப் புறம்பான கொலைகளிலும் ஈடுபட்டிருந்தனர். இந்த ஆயுதக்குழுக்களுடன் தொடர்பில்லை என்று கூறும் இலங்கை அரசு, மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டில் இருந்து தப்பிக் கொள்கின்றது. யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு தெரு மூலையிலும் ஒரு இராணுவவீரனை நிறுத்து வைக்க முடிந்தளவு, படையினர் நிலை கொண்டுள்ளனர். முகமூடி அணிந்த நபர்கள் சட்டவிரோத கொலைகளில் ஈடுபடும் தருணம் பார்த்து காவலில் உள்ள படையினர் ஓய்வெடுக்கின்றனர். கொலை நடந்த இடத்தில் போலிஸ் விசாரணை நடந்தாலும் யாரும் கைது செய்யப்படுவதில்லை. ஈபிடிபி சந்தேகநபர்கள் பின் விளைவுகளை பற்றி கவலையின்றி கொலைகளில் ஈடுபடுகின்றனர். சிறுவர்களை கடத்தி இந்தியா, மலேசியாவுக்கு அடிமைகைகளாக அனுப்புவதாகவும், பெண்களை பாலியல் தொழிலாளர்களாக இராணுவத்திற்கு அனுப்புவதாகவும், ஈபிடிபி மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டுள்ளன. (SRI LANKA: GSL COMPLICITY IN PARAMILITARY , Classified By: Ambassador Robert O. Blake, Friday, 18 May 2007, 09:22)

ஈழப்போரின் ஆரம்ப காலங்களில் அதிகளவு பொது மக்களை படுகொலைகளை புரிந்த இலங்கை இராணுவம் காலப்போக்கில் அதனை குறைத்துக் கொண்டது. அன்று சிங்கள இராணுவத்தின் கண்களுக்கு தமிழர்கள் எல்லோரும் பயங்கரவாதிகளாக தெரிந்தார்கள். பிற்காலத்தில் புலிகளை முதன்மை எதிரிகளாக கருதிய தமிழ் துணைப்படைகள் உருவாகின. இந்த தமிழ் துணைப்படைகளின் உதவியின்றி இராணுவம் போரை வென்றிருக்க முடியாது. புலி உறுப்பினர்களை, ஆதரவாளர்களை இனம் காண்பதற்கும், அழிப்பதற்கும் அவர்களின் உதவி அவசியமாகப் பட்டது. சட்டவிரோத ஆயுதக்குழுக்களை பயன்படுத்துவதன் மூலம், ஒரு இறைமையுள்ள தேசத்தின் அரச படைகள் பொறுப்பில் இருந்து தப்பிக் கொள்கின்றன. சிறுவர்களை கடத்தி விற்றது, பெண்களை பாலியல் தொழில் ஈடுபடுமாறு கட்டயப்படுத்தியது போன்றன இதற்கு முன்னர் வெளிவராத புதிய தகவல்கள். அன்றிருந்த போர்ச் சூழல், கிரிமினல் குற்றவாளிகளுக்கு பல வாய்ப்புகளை வழங்கி இருந்தது. போர் நடந்த காலத்தில் மக்கள் ஆயுதமேந்திய நபர்களுக்கு அடிபணிந்து நடக்க வேண்டி இருந்தது. ஆயுதம் வைத்திருந்தவர்கள் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு பணம் சம்பாதித்தது அங்கிருந்த மக்களுக்கு தெரிந்த விடயம். கருணா குழு வர்த்தகர்களை கடத்தி சென்று கப்பப்பணம் வாங்கியதையும் மேற்படி கேபிள் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்கா போன்ற "ஜனநாயக நாடுகள்" தாம் யாரையும் ஆதரிப்பதில்லை என்று காட்டுவதற்காக, இரு தரப்பு குற்றங்களை பட்டியல் போடுவதுண்டு. அதனை "நடுநிலை தவறாமை" என்று கூறிக் கொள்கிறார்கள். அதன் படி இன்னொரு கேபிள் புலிகள் இழைத்த குற்றங்களை அமெரிக்க அரசுக்கு அறிவிக்கின்றது. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னியில் குடும்பத்திற்கு ஒரு பிள்ளை என்று கட்டாய ஆட்சேர்ப்பு நடந்துள்ளது. அது மட்டுமல்ல, சர்வதேச தொண்டு நிறுவனங்களின் பணப்பரிமாற்றம், எவ்வாறு புலிகளின் வன்னி நிர்வாகத்திற்கு திருப்பி விடப்பட்டது என்று தெரிவிக்கின்றது. TRO என்ற புலிகள் சார்பு தொண்டு நிறுவனம், அல்லது புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த உள்ளூர் தொண்டு நிறுவனங்களின் கணக்கிற்கு அனுப்பப்பட வேண்டுமென கட்டாயப் படுத்தப்பட்டது. புலிகளின் ஆயுதக் கொள்வனவுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி பயன்படுத்தப்பட்டது. வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் ஊடாக கிடைத்த நிதி, உள்நாட்டு நிர்வாக செலவினங்களுக்கு பயன்பட்டது." (SRI LANKA: TAMIL TIGERS SIPHON OFF PART OF INTERNATIONAL RELIEF FUNDS , Classified By: Ambassador Robert O. Blake, Tuesday, 12 June 2007, 03:23)

புலிகளின் யுத்த நிறுத்த மீறல்களை, கண்காணிப்புக் குழு கண்டு கொள்ளாமல் விட்டிருந்ததாகவும், அதே கேபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகள் மீண்டும் யுத்தத்தில் குதிக்கக் கூடாது என்பதற்காக, சர்வதேச சமூகம் புலிகள் அமைப்பிற்கும் சாதகமாக நடந்து கொண்டது. இலங்கை அரசுடனான பேச்சுவார்த்தையில் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும், என எதிர்பார்த்தன. புலிகளின் அத்துமீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் அப்போதே எழுப்பப்பட்ட போதிலும், யுத்த நிறுத்த ஒப்பந்தம் முறியக் கூடாது என்பதில் கவனமாக இருந்துள்ளனர். ஆயினும் சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புக்கு மாறாக, இலங்கை அரசும், புலிகளும் போரில் குதித்தன. அத்தகைய தருணத்தில் புலிகளுக்கு உதவுவது, பிரிவினைவாதத்தை ஆதரிப்பது போலாகும். இதனால் அமெரிக்கா, இலங்கை அரசு பக்கம் சாய்ந்தது. உண்மையில் இறுதிப்போரின் போது இடம்பெற்ற தமிழினப் படுகொலையில் அமெரிக்க அரசுக்கும் பங்குண்டு. அவர்களைப் பொறுத்தவரை, இனப்படுகொலை போரில் தவிர்க்கவியலாத அம்சம் என்று நம்பினார்கள். (அமெரிக்க அரசு வெளிப்படையாக பேசாத போதிலும், சில அரசியல்வாதிகளும், ஊடகவியலாளரும் அந்தக் கருத்தை தெரிவித்தனர்.) சமீபத்தில் வெளியான கேபிள், போர்க்குற்றங்களை விசாரிப்பதில் அமெரிக்கா எந்தளவு அசிரத்தையாக இருந்துள்ளது என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

"ராஜபக்ச சகோதரர்களும், சரத் பொன்சேகாவும் போற்குற்றத்திற்கு பொறுப்பாளிகள். ஆனால் போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு இந்த அரசாங்கம் பதவியில் இருக்கும் வரையில் எந்தவொரு விசாரணையும் நடைபெறப் போவதில்லை. அரசுத் தலைவர்கள் நேரடியாக பொறுப்பேற்க வேண்டும் என்பதாலே, இலங்கை அரசு போர்க்குற்றங்களை விசாரணைக்கு எடுக்கத் தயங்குவதன் காரணம். இலங்கை அரசுப் படைகள் புரிந்த போர்க்குற்றம் சம்பந்தமான விசாரணைகள், இந்த அரசு பதவியில் இருக்கும் வரை நடக்கப்போவதில்லை. போர்க்குற்ற விசாரணையை, போரில் வெற்றியீட்டிய வீர நாயகர்களுக்கு எதிரான சர்வதேச சதியாகவே, இலங்கை அரசு கருதுகின்றது. இலங்கையின் இராணுவ, அரச அதிகாரிகளும், ஆட்சியில் இருக்கும் ராஜபக்ச சகோதரர்களும், எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகாவும் போர்க்குற்றங்களுக்கான பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கும். புலிகள் அமைப்பின் சிரேஷ்ட தலைவர்கள் பெருமளவில் கொல்லப்பட்டு விட்டனர். கனிஷ்ட தரத்திலான ஆயிரக்கணக்கான புலிகள் அரச படைகளினால் சிறைப்பிடிக்கப் பட்டுள்ளனர். எதிர்காலத்தில் போர்க்குற்ற விசாரணைக்கு, அரசு இவர்களையும் கொண்டு வந்து நிறுத்துமா என்பது குறித்த தெளிவில்லை. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அறிவிப்புக்கு பின்னர், "குற்றங்களை விசாரிக்கும் ஆணைக்குழு" ஒன்றை இலங்கை அரசு நியமித்தது." (SRI LANKA WAR-CRIMES ACCOUNTABILITY: THE TAMIL PERSPECTIVE, Classified By: AMBASSADOR PATRICIA A. BUTENIS, Friday, 15 January 2010, 12:23 )

இதற்கு முந்திய கேபிள்களை விட, இவ்வருடம் ஜனவரி மாதம் அனுப்பிய கேபிள் பெரும் மாற்றத்தை உண்டுபண்ணியுள்ளது. பாதுகாப்புப் படைகளுக்கு பொறுப்பானவர்கள் என்ற வகையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்சவும் போர்க்குற்றங்களுக்கும் பொறுப்பேற்க வேண்டும். அமெரிக்க தூதுவர் தனது மேலாளர்களுக்கு அனுப்பிய கேபிள், தர்க்கரீதியிலான நியாயத்தை முன்வைக்கும் அதே வேளை, அமெரிக்காவின் அழுத்தம் தொடர்வதையும் காட்டுகின்றது. இலங்கை அரசு புலிகளுக்கு எதிரான போரை, அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் ஓர் அங்கமாக காட்டிக் கொண்டிருந்தது. ஆனால் அமெரிக்காவை பொறுத்த வரையில், புலிகள் அல்கைதாவின் கூட்டாளிகள் அல்ல. புலிகளின் செயற்பாடுகள், அமெரிக்க நலன்களுக்கு எதிரானதாக இருக்கவில்லை. மறுபக்கத்தில், இலங்கைப் பிரச்சினையில் சர்வதேச சமூகத்தின் அலட்சியப் போக்குக்கும் அதுவே காரணமாக அமைந்தது. அமெரிக்கா ராஜபக்ச சகோதரர்கள் மீது போர்க்குற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள போதிலும், அவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தும் என எதிர்பார்க்க முடியாது. இன்னொரு கேபிளின் படி, போர்க்குற்ற விசாரணை குறித்து ஐ.நா. என்ன கருத்தைக் கொண்டுள்ளது? என்று அமெரிக்கா வினவியுள்ளது. இராஜதந்திர மொழியில் இது அமெரிக்க அரசின் மெத்தனப் போக்கை குறிக்கும். ஏனெனில், உண்மையிலேயே குற்றவாளிகளை கூண்டில் நிறுத்த வேண்டுமென்றால், அமெரிக்காவே ஐ.நா. ஆசனத்தில் இருந்து கொண்டு அதனை செய்து முடிக்கும்.

ராஜபக்சாவை குற்றவாளி என்று அமெரிக்க தூதுவர் எழுதிய குறிப்புகளை கொண்ட கேபிள் பிரசுரமான நேரம் அவதானிக்கத் தக்கது. ராஜபக்சவின் லண்டன் விஜயத்தின் போது, சனல் 4 தொலைக்காட்சி போர்க்குற்றம் சம்பந்தமான வீடியோவை ஒளிபரப்பியது. இன்னொரு பக்கத்தில் பிரிட்டன் வாழ் தமிழரின் ஆர்ப்பாட்டம், அவரது ஒக்ஸ்போர்ட் உரையை இரத்து செய்ய வைத்தது. ஜனாதிபதியினது தனிப்பட்ட விஜயம் என்ற போதிலும், இந்த நிகழ்வுகள் யாவும் சர்வதேச கவனத்தை ஈர்த்தன. "ஜனாதிபதி ராஜபக்சவின் அவமானகரமான இராஜதந்திர தோல்வி," என்று இலங்கை ஊடகங்களே விமர்சித்தன. சனல் 4 தொலைக்காட்சியின் போர்குற்ற வீடியோ ஒளிபரப்பும், ஜனாதிபதியின் லண்டன் விஜயமும் "தற்செயலாக நடந்த நிகழ்வுகள்" என்று அந்த தொலைக்காட்சி அறிவித்தது. அதே காலத்தில், இன்னொரு "தற்செயல் நிகழ்வாக" கார்டியன் பத்திரிகை விக்கிலீக்ஸ் கேபிளை பிரசுரித்தது. இராஜதந்திர நெருக்கடிகளை ஏற்படுத்தக் கூடிய அந்த கேபிள் தகவல் குறித்து அமெரிக்க, இலங்கை அரசுகள் கருத்தேதும் கூறவில்லை. அதே நேரம், விக்கிலீக்ஸ் கேபிள் ஏற்படுத்திய தாக்கம், சில நாட்களின் பின்னர் உணரப்பட்டது.

முதலாவதாக, பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸின் இலங்கை விஜயம் இரத்து செய்யப்பட்டது. வெளிவிவகார அமைச்சர் ஹேக் தடுத்து விட்டதாகவும், இலங்கை அரசின் போர்க்குற்ற ஆதாரங்கள் மேலே வருவதும் காரணம் என்றும் கூறப்பட்டது. இலங்கைக்கும், பிரிட்டனுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள், முன்னர் என்றும் இல்லாதவாறு மோசமடைந்துள்ளது. மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது பதவிக்காலம் ஆரம்பமான போது, பிரிட்டிஷ் பிரதமர் கமரூன் அனுப்பிய கடிதம் ஒன்று இன்னமும் வெளியிடப் படவில்லை. ஜனாதிபதியாக பொறுபேற்கும் ராஜபக்சவுக்கு வாழ்த்துச் செய்தியை அறிவிக்கும் அதே வேளை, "எவ்வாறு ஆட்சி நிர்வாகம் நடத்தப்பட வேண்டும்" என்று புத்திமதிகளை கூறுவதாக அந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளதாம். ஏற்கனவே, பிரிட்டன் காலனித்துவ மனோபாவத்துடன் நடந்து கொள்வதாக அதிருப்தி நிலவுகின்றது. இன்னொரு சம்பவத்தில், பதவி விலகிச் செல்லும் பிரிட்டிஷ் தூதுவரின் விருந்துபசாரத்தில் கலந்து கொள்ள ஜனாதிபதி மறுத்து விட்டார். (The Sunday Times, 19 December 2010) இதற்கிடையே விக்கிலீக்ஸ் கசிய விட்ட அமெரிக்க தூதரக கேபிள் ஒன்று, பிரிட்டனின் இலங்கை மீதான அக்கறையை வெளிச்சம் போட்டுக் காட்டியது. "பிரிட்டனில் வாழும் மூன்று லட்சம் தமிழ் வாக்களர்களை குறி வைத்து நடந்து கொள்வதாக," அமெரிக்க தூதரகத்தில் கடமையாற்றிய ரிச்சார்ட் மில்ஸ் எழுதியுள்ளார். ( WikiLeaks: David Miliband 'championed aid to Sri Lanka to win votes of Tamils in UK', The Telegraaf, 20 December 2010)

இரண்டாவதாக, ஆறு மாதங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஐ.நா. ஆலோசனைக் குழுவுக்கு இலங்கை வர அனுமதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளனவா என்பதை கண்டறிவதற்காக, ஐ.நா. செயலாளர் பான் கி மூன் நியமித்த குழுவை, முன்னர் இலங்கை அரசு எதிர்த்து வந்தது. ஆலோசனைக் குழு உறுப்பினர்களுக்கு இலங்கை வர விசா தர மறுத்து வந்தது. அமைச்சர் விமல் வீரவன்ச ஐ.நா. அலுவலகத்தை முற்றுகை இட்டு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி இருந்தார். இலங்கை அரசின் தற்போதைய மாற்றத்திற்கு காரணம் என்ன? உண்மையில் நியமிக்கப்பட்ட ஆலோசனைக்குழு போர்க்குற்ற விசாரணைக்குழு அல்ல என்று, பான் கி மூனே அன்றே தெரிவித்திருந்தார். இன்று வரை, ஐ.நா. எடுத்துள்ள அதிக பட்ச நடவடிக்கை அது. போர்க்குற்றம் என்ற பெயரில் எந்தவொரு தலையீட்டையும் இலங்கை அரசு கடுமையாக எதிர்த்து வந்தது. இருப்பினும் சர்வதேச அழுத்தங்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அண்மைய விக்கிலீக்ஸ் கேபிளின் படி, ராஜபக்ச சகோதரர்களும் சாட்சியமளிக்க அழைக்கப்படலாம்.

இதன் அர்த்தம், "இலங்கை அரசு போர்க்குற்ற விசாரணைக் கூண்டில் ஏற்றப்படுவது நிச்சயமாகி விட்டது," என்பதல்ல. ஐ.நா. ஆலோசனைக் குழுவின் வருகையானது, சில சமரசங்களுக்குப் பின்னரே எட்டப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. ராஜபக்ச மட்டுமல்ல, பான் கி மூன் கூட சில அழுத்தங்களுக்கு ஏற்ப செயற்பட வேண்டியுள்ளது. ஐ.நா. ஆலோசனைக்குழு, இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகளை ஆராயவிருப்பதாக பான் கி மூன் அறிவித்துள்ளார். தென்னாபிரிக்காவில் நடந்ததைப் போல, இனங்களுக்கு இடையில் நல்லுறவு ஏற்பட வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டாலும், போர்க்குற்றங்களை மூடி மறைக்கவும் நல்லிணக்க ஆணைக் குழு குழு பயன்படலாம். இதுவரை நல்லிணக்க ஆணைக் குழு முன், சாட்சியம் அளித்த மக்கள் இலங்கை இராணுவம் புரிந்த குற்றங்களைப் பற்றியும் விபரமாக எடுத்துக் கூறியுள்ளனர். ஆனால் அவை தலைமையில் இருப்பவர்களை சம்பந்தப் படுத்தப் போவதில்லை. மேலும் நல்லிணக்கக் குழு நடந்த குற்றங்களை பதிவு செய்து வைக்குமே தவிர, குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்காது. போர் நடந்த காலத்தில் இராணுவம், புலிகள் என்ற இரு தரப்பினர் இழைத்த குற்றங்களையும் பாதிக்கப்பட்ட மக்கள் எடுத்துக் கூறினர். இருப்பினும், அவர்களின் வாக்குமூலத்தின் படி, இது வரை எவரும் தண்டிக்கப்படவில்லை. ஐ.நா. ஆலோசனைக்குழுவும் அதே பாதையில் பயணம் செய்யும் போலத் தெரிகின்றது.

அமெரிக்கா போன்ற பலம் மிக்க சர்வதேச சமூகம், ராஜபக்ச சகோதரர்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி தண்டனை வழங்கும் என்று எதிர்பார்ப்பது நிராசையாகும். ஏனெனில் போற்குற்றத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இன்னும் பலர் இருக்கின்றனர். தமிழர் தரப்பில், இலங்கை அரசு, படையினரைத் தவிர, வேறு யாரும் கண்ணுக்கு புலப்படுவதில்லை. (தமிழ் ஊடகங்களும் அதிகம் ஆராய்வதில்லை.) சர்வதேச நீதிமன்றம் ஒன்று, இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை விசாரிக்க தொடங்கினால், இராணுவத்தினர் பிடித்து வைத்துள்ள புலிகள் அமைப்பின் தலைவர்கள் மீதும் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்படும். அதற்கான சாத்தியம் இருப்பதை விக்கிலீக்ஸ் கேபிளில் அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுளார்.(SRI LANKA WAR-CRIMES ACCOUNTABILITY: THE TAMIL PERSPECTIVE, Classified By: AMBASSADOR PATRICIA A. BUTENIS, Friday, 15 January 2010, 12:23 ) மேலும் ஐ.நா. சபை கூட, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவதை தவிர்க்கவியலாது. நடேசன் தலைமையில் சரணடைந்த புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தை ஒரு முறை நினைவுபடுத்திப் பார்க்கவும். சரணடைதலை மேற்பார்வையிடச் செல்லவிருந்த ஐ.நா. அதிகாரி விஜய் நம்பியார் சாட்சியமளிக்க அழைக்கப்படலாம். அந்த தருணத்தில் கொழும்பிலேயே தங்கி விட்ட நம்பியார் கடமை தவறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் யூகோஸ்லேவிய நீதிமன்ற அமர்வில், அமெரிக்கா ஒரு காலத்தில் போர்க்குற்றவாளி மிலோசொவிச்சுக்கு உதவிய தகவல்கள் அம்பலமாகின. அதனால் விழிப்புற்ற அமெரிக்கா, சதாம் ஹுசைன் மீதான விசாரணைகளை சர்வதேச நீதிமன்றம் வரை எடுத்துச் செல்லவில்லை. ராஜபக்ச விவகாரத்திலும் அதனை எதிர்பார்க்கலாம்.

போர்க்குற்றங்களை விசாரிப்பது சம்பந்தமாக, இலங்கையில் வாழும் தமிழர்களும், புலம்பெயர்ந்த தமிழர்களும் கருத்து முரண்பாடுகளை கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. அதனையும் விக்கிலீக்ஸ் கேபிளில் விரிவாக வாசிக்கலாம். (SRI LANKA WAR-CRIMES ACCOUNTABILITY: THE TAMIL PERSPECTIVE, Classified By: AMBASSADOR PATRICIA A. BUTENIS, Friday, 15 January 2010, 12:23 ) இலங்கையில் தமிழ் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்த அமெரிக்க தூதுவர், போர்க்குற்ற விசாரணைக்கு அவர்களின் ஒத்துழைப்பு கிட்டாததை குறிப்பிட்டுள்ளார். தமிழ்க்கட்சிகள் போர்க்குற்ற விசாரணைகளை வரவேற்கும் அதே சமயம், தமது அச்சத்தையும் வெளிப்படுத்தி உள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் பாராளுமன்றத்தில் தான் இது பற்றி விவாதிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். பின்விளைவுகளையிட்டு அவர் அஞ்சுகிறார். போர்க்குற்ற விசாரணைகள் நடந்தால், அது தமிழர்களுக்கே பாதகமாக அமையும் என்று பலரும் ஒருமித்த குரலில் கூறுகின்றனர். விசாரணைக்கு சாட்சியமளிக்க செல்பவர்களுக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் உயிராபத்து ஏற்படும் என்ற அச்சம் ஒரு காரணம். அதே நேரம், பெரும்பான்மை சிங்களவர்கள் தமிழர்கள் மீது வஞ்சம் தீர்க்க முற்படலாம் என்ற எதிர்காலம் குறித்த கவலை கொண்டுள்ளனர். ராஜபக்ச மட்டுமல்ல, பெரும்பான்மை சிங்கள மக்களும் இராணுவ வீரர்களை நாயகர்களாக கருதுகின்றனர். பெரும்பான்மை தமிழர்கள் புலிகள் மீது எந்தளவு மதிப்பு வைத்துள்ளனரோ, அந்தளவு மதிப்பு இராணுவம் மீது சிங்களவர்களுக்கு உண்டு. ஆகவே, "போரில் வென்ற எமது நாயகர்களை தமிழர்கள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிறார்கள்..." என்ற ஒரு செய்தி போதும், சிங்கள பேரினவாதிகளின் செல்வாக்கு அதிகரிக்கும். அதன் விளைவு, அப்பாவி தமிழ் மக்களை பழிவாங்குவது வரை போனாலும் யாராலும் தடுக்க முடியாது. புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு அப்படி எந்த விதமான பாதிப்பும் வரப்போவதில்லை. சர்வதேச சமூகம் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு அரணாக நிற்கும் என்று எதிர்பார்ப்பது, ஒரு சிறந்த நகைச்சுவை. ஏற்கனவே முள்ளிவாய்க்கால் வரை நடந்த இனப்படுகொலையை தடுக்காமல் கைகட்டி வேடிக்கை பார்த்த சர்வதேச சமூகம், இனியும் தமிழருக்கு உதவும் என்று எதிர்பார்ப்பது மடமை.

2007 ம் ஆண்டு கேபிள்கள் வெளியான நேரம் தான் இலங்கையில் போர் தீவிரமடையத் தொடங்கியது. போர்க்காலத்தில் மனித உரிமை மீறல்கள் அதிகரிக்கும், போர்க்களத்தில் படையினரின் குற்றங்கள் அதிகரிக்கும், என்பது ராஜபக்ச நிர்வாகத்திற்கு நன்றாகவே தெரியும். அதனால் முன்கூட்டியே வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டன. அரச ஊடகங்களைத் தவிர்ந்த பிற ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டது. எதிர்காலத்தில் போர்க்குற்ற விசாரணை என்ற ஒன்று வருமானால், இவர்கள் மூலமே ஆதாரங்கள் திரட்டப்படும் என்பதை சரியாக கணித்திருந்தனர். இருப்பினும் அரசு தானே அறிவித்த, பொது மக்களுக்கான பாதுகாப்பு வலையம் மீதே கனரக ஆயுதங்களைப் பாவித்தமை, சரணைடைந்த போராளிகளை சுட்டுக் கொன்றமை, போன்ற குற்றங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. படையினர் போர்க்குற்றங்களைப் புரிந்தால், அவர்களுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்த அதிகாரிகளும், அமைச்சரும் பொறுப்பாளிகள் என்பது வெள்ளிடைமலை. போர் முடிந்த பின்னர், ராஜபக்ச சகோதரர்கள் மட்டுமல்ல, சரத் பொன்சேகா போன்ற இராணுவ தளபதிகளும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு பயமின்றி சென்று வந்தார்கள். யாரும் கைது செய்யப்படவுமில்லை. விசாரிக்கப்படவுமில்லை. அதற்கான முயற்சிகள் கூட எடுக்கப்படவில்லை.

அண்மையில் ராஜபக்ச தனது பரிவாரங்களுடன் பிரிட்டன் வந்து போகும் வரை, பிரிட்டிஷ் அரசு எந்தத் தொந்தரவும் செய்யவில்லை. இவ்வளவுக்கும் அவர்கள் லண்டனில் தங்கி நின்ற நாட்களில், சனல் 4 முதல் விக்கிலீக்ஸ் வரை போர்க்குற்ற செய்திகளை வெளியிட்டு பரபரப்பூட்டின. இந்த சம்பவம் நடந்து சில நாட்களின் பின்னர், விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே பிரிட்டனில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார். ஒரு அவுஸ்திரேலியப் பிரஜையான அசாஞ்சேயை தன்னிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்கா கேட்டுக் கொண்டிருந்தது. அசாஞ்சே உலகில் மிக முக்கியமாகத் தேடப்படும் கிரிமினல் குற்றவாளியாக, அல்லாது போனால் பயங்கரவாதியாக கருதப்பட்டார். இத்தனைக்கும் அசாஞ்சே எந்தவொரு போர்க்குற்றத்திலும் ஈடுபடவில்லை. இதுவரை ஒருவரையேனும் கொலை செய்யவில்லை. அமெரிக்க அரசு அசாஞ்சே முக்கியமான குற்றவாளியாக கருதக் காரணம், அவர் ஈராக்கில் அமெரிக்காவின் போர்க்குற்றங்களை நிரூபிக்கும் ஆவணங்களை பகிரங்கப்படுத்தினார். விக்கிலீக்ஸ் "அமெரிக்கப் பிரஜைகள் (அதாவது, போர்க்குற்றவாளிகள்) உயிருக்கு ஆபத்தை உண்டாக்கி விட்டதாக" ஒபாமா குற்றஞ்சாட்டினார். "இரகசிய ஆவணங்கள்" (அதாவது, போர்க்குற்ற ஆதாரங்கள்) பகிரங்கப் படுத்தப் படுவதால், தேசத்தின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் என்றார்.

விக்கிலீக்ஸ் அமெரிக்க நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால், ஊடக தர்மத்தை மீறி சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. ராஜபக்ச அமெரிக்க நலன்களை அனுசரித்து நடந்து கொள்வதால், அவரை சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுகின்றது. நம்மில் பலர், ஊடகங்கள் தெரிவிப்பதைப் போலத் தான் உலகம் இயங்கிக் கொண்டிருப்பதாக நம்பிக் கொண்டிருக்கிறோம். அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்குலக நாடுகள் தமது நலன்களுக்காக பிற நாடுகளில் தலையிடுகிறோம் என்று, ஒரு நாளும் வெளிப்படையாக கூறுவதில்லை. "மனித உரிமைகளை மதிப்பது", "ஜனநாயகத்தை மீட்பது" போன்ற மனதை மயக்கும் சொற்தொடர்களை பாவிப்பார்கள். ஒரு கொள்கைக்காக போராடுவதாக காட்டிக் கொள்ளும் போக்கு, எப்போதும் பயனளிப்பதில்லை. இலங்கை விவகாரத்தில் மேற்குலக நாடுகள் இதனை உணர ஆரம்பித்துள்ளன. அதனாலேயே அதிக அழுத்தம், நெருக்குவாரங்களை பிரயோகிப்பதில்லை. இலங்கை அரசியல் தலைவர்கள், "மேற்குலக நாடுகளின் மிரட்டல்களுக்கு அடிபணியப் போவதில்லை," என்று வீராவேசமாக மேடையில் முழங்குவார்கள். ஆனால் பொருளாதார சீர்திருத்தம் யாவும், மேற்குலகின் விருப்பப் படியே நடந்து கொண்டிருக்கிறது. பொது மக்களின் அத்தியாவசிய தேவைகளான, இலவசக் கல்வியை, இலவச மருத்துவ வசதியை, தனியாரிடம் தாரை வார்ப்பதற்கு, ராஜபக்ச அரசு தயாராகத் தான் இருக்கிறது. (தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூட ஆதரவளிக்கின்றது.) ஆனால் மக்கள் தான் எதிர்க்கிறார்கள்.

போர்க்குற்ற விசாரணையை நடைமுறைப்படுத்தி, ராஜபக்சவை குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதற்கு மேற்குலகம் தயாராக இல்லை. அமெரிக்க தூதுவர் போர்க்குற்ற விசாரணை குறித்து ஆராய்ந்து அனுப்பிய கேபிள் இதனை தெளிவாக உணர்த்துகின்றது. "புலம்பெயர்ந்த தமிழர்கள் போர்க்குற்ற விசாரணைகள் உடனடியாக ஆரம்பமாக வேண்டுமென்று எதிர்பார்க்கின்றார்கள். ஆனால் இலங்கை வாழ் தமிழர்களைப் பொறுத்த வரை, அது நடைமுறைச் சாத்தியம் அல்லாதது மட்டுமல்ல, எதிர்மறையான தாக்கத்தை உருவாக்கும் எனக் கருதுகின்றனர். சர்வதேச சமூகம் இதனை முன்னெடுக்க வேண்டுமென சில தமிழர்கள் எதிர்பார்க்கின்றார்கள். ஆனால் அவ்வாறான எந்த முயற்சியும் ராஜபக்சவுக்கும், அவரது கூட்டாளிகளுக்கும் சாதகமாகவே முடியும். சர்வதேச சமூகம், இலங்கைக்கும், அதன் நாயகர்களுக்கும் எதிராக சூழ்ச்சி செய்வதாக தீவிர பரப்புரைகளை மேற்கொள்வார்கள்." (SRI LANKA WAR-CRIMES ACCOUNTABILITY: THE TAMIL PERSPECTIVE, Classified By: AMBASSADOR PATRICIA A. BUTENIS, Friday, 15 January 2010, 12:23 )(ஜனவரி மாத "காலச்சுவடு" இதழில் பிரசுரமானது.)

2 comments:

Colvin said...

மிகவும் சிறப்பான கட்டுரை. யதார்த்தத்தை எடுத்துரைக்கிறது. அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும், ஐ.நா நடவடிக்கை எடுக்கும் என நபபாசை கொண்டிருப்போர் இக்கட்டுரையை படிப்பார்களானால் தெளிவடைவது நிச்சயம்.

வாழ்த்துக்கள் நண்பரே.இதுபோன்ற கட்டுரைகளை தொடர்ந்து வெளியிடுங்கள்.

abu abdhullah said...

உங்களுடைய பதிவுகளை தொடர்ந்து பார்வையிடுகிறேன் துணிவும் நேர்மையும் காணமுடிகிறது.தொடரட்டும் உங்கள் பணி.