Friday, December 25, 2009

இஸ்ரேலிய இராணுவத்தின் இரகசியங்கள்

(போர்க்களமான புனித பூமி, பகுதி 3)
உங்களுக்கும், குடும்பத்திற்கும் அரசாங்க செலவில் வசதியான வீடும், சமூக கொடுப்பனவுகளும், கூடவே ஒரு துப்பாக்கியும் வேண்டுமா? இஸ்ரேலில் குடியேறினால் அதெல்லாம் கிடைக்கும். ஒரேயொரு நிபந்தனை: யூதராக இருக்க வேண்டும். உலகில் யார் வேண்டுமானாலும் யூதராக மதம் மாறி, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன நிலத்தில் சென்று குடியேறலாம். உலகின் எந்த மூலையில் இருந்து வந்தாலும், ஒரு யூதர் இஸ்ரேலிய பிரஜையாக கருதப்படுவார். ஆனால் ஆயிரம் ஆண்டு காலம், அந்த மண்ணிலேயே வாழும் பாலஸ்தீனருக்கு அந்த உரிமை கிடையாது. ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் அத்துமீறி குடியேறிய யூதர்களுக்கு சிறந்த பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. யூத குடியேற்றக் கிராமங்களுக்கு அரசாங்கம் பல சலுகைகளை, மானியங்களை வழங்கி வருகின்றது. குடியேறிகளுக்கு கட்டாய இராணுவ சேவையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. யூத குடியேற்றவாசிகள் பெரும்பாலும் யூத மத அடிப்படைவாதிகளாக இருப்பது வியப்புக்குரியதல்ல. "இது யூதரின் நாடு. அரபுக்களுக்கு இங்கே இடமில்லை." என்று சொல்லும் இனவெறியர்கள். ஆதாரம்? "அது தான் பைபிளில் எழுதியிருக்கிறதே." என்பார்கள்.

இஸ்ரேலிய படை (IDF), பாலஸ்தீன கிராமங்கள், நகரங்களுக்கிடையில் சோதனைச் சாவடிகள் அமைத்து மக்களை துன்புறுத்தி வருகின்றது. இதனால் ஒவ்வொரு பாலஸ்தீன கிராமமும், நகரமும் தடுப்பு முகாமாக மாறி வருகின்றது. பாலஸ்தீனம் பிரிட்டிஷாரின் பாதுகாப்ப்புப் பிரதேசமாக இருந்த காலத்தில் இயங்கிய பயங்கரவாத இயக்கமான "ஹகனா", பின்னர் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையாகியது. இஸ்ரேலிய இராணுவம் ஒரு ஆக்கிரமிப்பு இராணுவம் மட்டுமல்ல, உண்மையில் இஸ்ரேல் என்ற தேசத்தை ஆட்சி செய்வதும் அது தான். அரசாங்க பட்ஜெட்டில், ஆண்டு தோறும் 20 % இராணுவ செலவினங்களுக்கு ஒதுக்கப்படுகின்றது. இதைவிட ஒவ்வோர் ஆண்டும் 1.8 பில்லியன் டாலர்களை அமெரிக்கா வழங்குகின்றது. (அமெரிக்காவின் ஆயுத தொழிற்சாலையில் இருந்து இஸ்ரேல் தனக்கு வேண்டிய ஆயுதங்களை நேரடியாக வாங்கலாம்.) இதைவிட இன்னொரு வகை வருமானமும் உண்டு. நாசிகள் செய்த பாவத்திற்கு பரிகாரமாக, ஆண்டுதோறும் மில்லியன் டாலர்களை ஜெர்மன் அரசு நஷ்டஈடாக வழங்குகின்றது. இது தான் இஸ்ரேலிய இராணுவ மேலாதிக்கத்தின் இரகசியம்.

இஸ்ரேல் ஒரு பாராளுமன்ற ஜனநாயக நாடு என கூறப்படுகின்றது. ஆயினும் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், பிரதம மந்திரி எல்லோருமே இராணுவத்தில் கடமையாற்றி ஓய்வுபெற்றவர்கள். இதனால் அரசாங்கத்திற்கும், இராணுவத்திற்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்புண்டு. இராணுவத்தில் இருந்தவர்களே அரசுப் பதவிகளை அலங்கரிப்பதால், அங்கே உண்மையில் இராணுவ ஆட்சியே நடக்கின்றது. இஸ்ரேலிய ஆட்சியாளர்கள் வெளிநாட்டு பாசிச அமைப்புகளுடனும் நல்லுறவைப் பேணி வந்தனர். தென்னாபிரிக்காவின் முன்னாள் நிறவெறி ஆட்சியாளர்கள், லெபனானில் பலாங்கிஸ்ட், ஆகியோருடனான தொடர்புகள் இங்கே குறிப்பிடத் தக்கவை. இஸ்ரேலிய இனவெறிக் கொள்கையின் உச்சமாக "அரபுக்களை மட்டுமே தேடிப்பிடித்து கொல்லும்", உயிரியல் ஆயுதங்களை தயாரிக்க எத்தனித்தனர். அரபுக்களும், யூதர்களும் ஒரே மரபணுக்களை கொண்டிருப்பதால், அந்த திட்டம் கைவிடப்பட்டது. முன்பு ஹிட்லர் இது போன்ற உயிரியல் ஆயுதம் ஒன்றை தயாரிக்க விரும்பியது நினைவுகூரத்தக்கது. இஸ்ரேலில், உயிரியல், இரசாயன ஆயுதங்கள் மட்டுமல்ல, அணு குண்டுகள் கூட இரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேலிய இராணுவத்தில் யூதர்கள் மட்டுமே பணியாற்ற முடியும். இஸ்ரேலிய குடியுரிமை பெற்ற பத்து லட்சம் அரபு மக்களுக்கு அந்த உரிமை இல்லை. 1948 ம் ஆண்டு யுத்தத்தில், வீடிழந்த பாலஸ்தீன அகதிகள் 60 வருடங்களாக அயல்நாட்டு அகதி முகாம்களில் வாழ்கின்றனர். அவர்களது தாயகம் திரும்பும் உரிமையை இஸ்ரேல் அங்கீகரிக்கவில்லை. அதே நேரம் உலகம் முழுவதிலும் இருந்து வந்து குடியேறும் யூதர்களுக்கு, வந்த உடனேயே குடியுரிமை வழங்கப்படுகின்றது. இஸ்ரேலின் அரசியல் யாப்பு, யூதர்கள் மட்டுமே குடியேறலாம் எனக் கூறுகின்றது. இவ்வாறு சட்டம் போட்டு இனப்பாகுபாடு காட்டும் ஒரேயொரு நாடு இஸ்ரேல் மட்டும் தான்.

சிலர் நினைப்பது போல யூதர்கள் ஒரு தனியினம் அல்ல. அது ஒரு மதத்தைக் குறிக்கும் சொல். ஐரோப்பாவில் இருந்து வந்த யூதர்கள் வெள்ளை நிறத்தவராகவும், எத்தியோப்பியாவில் இருந்து வந்த யூதர்கள் கருமை நிறம் கொண்டோராயும், மத்திய கிழக்கில் இருந்து வந்தவர்கள் அரபுக்கள் போன்றும் தோன்றுகின்றனர். வெளிப்படையாக தெரியும் வேறுபாடுகளே, யூதர்கள் ஒரே இனத்தை சேர்ந்தவர்களல்ல என நிரூபிக்க போதுமானவை. அவர்கள் எந்த நாட்டில் இருந்து வந்தார்களோ, அந்த நாட்டு மொழியையே தாய் மொழியாக பேசுகின்றனர். இரண்டாவது தலைமுறை மட்டுமே ஹீபுரு மொழியை தாய்மொழியாக கொண்டுள்ளது.

யூத மதத்தின் படி, ஒரு யூத ஆண் வேற்று மத பெண்ணை மணம் முடிக்கலாம். ஆனால் யூத பெண்ணுக்கு அந்த உரிமை இல்லை. மத ரீதியாக பார்த்தால், யூதத்திற்கும், இஸ்லாமுக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. பைபிளில் முதலாவது தீர்க்கதரிசியாக கருதப்படும் ஆப்பிரகாமுக்கு இரண்டு புதல்வர்கள். ஒன்று, இசாக். மற்றது, இஸ்மாயில். இசாக்கின் வழித்தோன்றல்கள் யூதர்கள் என்றும், இஸ்மாயிலின் வழிதோன்றல்கள் அரபுக்கள் என்றும் நம்பப்படுகின்றது. இரு மதத்தவரும் கண்டிப்பாக தெய்வ உருவங்களை வழிபடுவதில்லை. ஆபிரகாமை சுன்னத்து செய்து கொள்ளுமாறு இறைவன் கட்டளையிட்டதாகவும், அதையே யூதரும், முஸ்லிம்களும் பின்பற்றுவதாக நம்பப்படுகின்றது. இரு மதத்தவரின் உணவுப் பழக்கங்கள் ஒரே மாதிரியானவை. (யூதருக்கு: கோஷர், முஸ்லிம்களுக்கு: ஹலால்) பன்றி இறைச்சியை இரு மதங்களும் தடை செய்கின்றன. ஹீபுரு, அரபி, இரண்டும் செமிட்டிக் மொழிக் குடும்பத்தை சேர்ந்தவை. யூதரும், அரேபியரும் செமிட்டிக் இன மரபணுக்களைக் கொண்டுள்ளனர்.

அப்படியானால் பிரிவினை எங்கே தோன்றியது? யாரால் தோற்றுவிக்கப்பட்டது?

இஸ்ரேலிய-பாலஸ்தீன பிரச்சினையை தற்காலிகமாக தீர்த்து வைக்க அமெரிக்கா முன்வரலாம். நிரந்தர தீர்வைக் காண்பதற்கு யாரும் இன்னும் மனமொத்து வரவில்லை. அதற்கு காரணம், மத்திய கிழக்கின் அபரிதமான எண்ணெய் வளம். உலகில் தொழில்துறைக்கு எண்ணெய் மிக மிக அவசியம். அத்தகைய எண்ணெய் வளம் கொண்ட அரபு நாடுகள் ஒன்று சேர்ந்தால், உலகில் யாராலும் அசைக்க முடியாத வல்லரசாகும். அவ்வாறான ஒரு வல்லரசு தோன்றுவதை, அமெரிக்காவும், ஐரோப்பாவும் கற்பனை செய்யவும் விரும்பவில்லை. அதைத் தடுக்க உருவானது தான் நவீன இஸ்ரேல். இஸ்ரேலில் அரசியல் ஆதிக்கம் செலுத்துபவர்கள், வெள்ளையின ஐரோப்பிய யூதர்கள். இதனால் இஸ்ரேல் ஒரு ஐரோப்பிய குடியேற்ற நாடாகவே மேற்குலகில் கணிக்கப்படுகின்றது.

(தொடரும்)

முன்னைய பதிவுகள்:
பகுதி 2: தனி நாடு கண்ட யூதர்களும், தாயகம் இழந்த பாலஸ்தீனியரும்

பகுதி 1: போர்க்களமான புனித பூமி


குறிப்பு:
[உயிர் நிழல் (ஏப்ரல்-யூன் 2002 ) சஞ்சிகையில் பிரசுரமானது. சில திருத்தங்களுடன் வலையேற்றம் செய்யப்படுகின்றது.]

8 comments:

வடுவூர் குமார் said...

”நிலமெல்லாம் ரத்தம்” படித்த பிறகு இவர்கள் வாழ்கை எவ்வளவு சோகமானது என்று எனக்கு புரிய ஆரம்பித்தது.

kalagam said...

சிறப்பான தொடர்

அப்படியே முடிஞ்சவுடன் புத்தகமாக வெளியிட்டால் எல்லோருக்கும் பயனுள்ளது.

kalagam
kalagam.wordpress.com

சிங்கக்குட்டி said...

என்னென்ன கொடுமைகள் இந்த உலகில்.

ஆனால், ஏன் இது மனித வாழ்வில் மட்டும்! என்று இறைவன் மீது சில நேரம் கோவம் வருகிறது.

Kalaiyarasan said...

கலகம், புத்தகமாக வெளியிடுவது சம்பந்தமான உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன். மெயிலில் தொடர்பு கொள்ளவும்.

ബൂപതി said...

உண்மையில் யாரும் யூதராக மதம் மாறமுடியாது . யூத இனக்குழுவே யூத மதம்.

வஜ்ரா said...

//
இஸ்ரேலிய இராணுவத்தில் யூதர்கள் மட்டுமே பணியாற்ற முடியும். இஸ்ரேலிய குடியுரிமை பெற்ற பத்து லட்சம் அரபு மக்களுக்கு அந்த உரிமை இல்லை.
//

அப்பட்டமான பொய்.

http://www.haaretz.com/hasen/spages/1027745.html

யூதர்கள் அல்லாத தூரூஸ் மத அரபிக்கள், கிருத்தவ அரபிக்கள், ஏன் இஸ்லாம் மத அரபிக்கள் கூட idf ல் இருக்கிறார்கள்.

அனைத்து இஸ்ரேலிய குடிமக்களுக்கும் இராணுவப்பணி கட்டாயம் என்று சட்டம் உள்ளது.

//
இவ்வாறு சட்டம் போட்டு இனப்பாகுபாடு காட்டும் ஒரேயொரு நாடு இஸ்ரேல் மட்டும் தான்.
//

உலகம் முழுதும் சட்டம் போட்டு கட்டம் கட்டி இனப்பாகுபாடு பார்த்து இன அழிப்பு செய்தால் அந்த இனம் இப்படித்தான் பதில் கொடுக்கும்.

//
இஸ்ரேலிய-பாலஸ்தீன பிரச்சினையை தற்காலிகமாக தீர்த்து வைக்க அமெரிக்கா முன்வரலாம்.
//

இஸ்ரேல் பாலஸ்தீனப்பிரச்சனையை அமேரிக்கா எதுக்குத் தீர்க்கவேண்டும் ?
அவர்கள் பிரச்சனையை அவர்களே தீர்த்துக்கொண்டால் தான் தீரும். அடுத்தவனை நம்பினால் அவன் குட்டையை குழப்பி அதில் மீன் பிடிப்பான்.

//
"இது யூதரின் நாடு. அரபுக்களுக்கு இங்கே இடமில்லை." என்று சொல்லும் இனவெறியர்கள். ஆதாரம்? "அது தான் பைபிளில் எழுதியிருக்கிறதே."
//

யூதர்கள் மட்டுமா அப்படிச் சொல்கிறார்கள் ?
இஸ்லாமியர்கள் சொல்வதில்லையா ? அதுக்கு ஆதாரம் குரானைக் காட்டுவதில்லையா ?

வஜ்ரா said...

//
உண்மையில் யாரும் யூதராக மதம் மாறமுடியாது . யூத இனக்குழுவே யூத மதம்.
//

முடியும்.

ஆனால் அதற்காக நீங்கள் கடுமையான பயிற்சி எல்லாம் எடுத்துக்கொள்ளவேண்டும்.

பழமைவாதிகள் ஏற்காவிட்டாலும், சில சீற்திருத்த மதப்போதகர்கள் மத மாற்றத்தை ஏற்கின்றனர். (காஞ்சி சங்கராச்சார்யார் ஏற்கமாட்டார் ஆனால் ஆரிய சமாஜம் ஏற்கும்..அது போல)

http://en.wikipedia.org/wiki/Conversion_to_Judaism

ராஜ நடராஜன் said...

//உலகில் தொழில்துறைக்கு எண்ணெய் மிக மிக அவசியம். அத்தகைய எண்ணெய் வளம் கொண்ட அரபு நாடுகள் ஒன்று சேர்ந்தால், உலகில் யாராலும் அசைக்க முடியாத வல்லரசாகும். அவ்வாறான ஒரு வல்லரசு தோன்றுவதை, அமெரிக்காவும், ஐரோப்பாவும் கற்பனை செய்யவும் விரும்பவில்லை. அதைத் தடுக்க உருவானது தான் நவீன இஸ்ரேல். //

இஸ்ரேல் இரண்டாம் உலகப் போரின் ஹிட்லரின் தத்துக் குழந்தை.அரேபிய எண்ணெய் வளம் இம்பீரியலிசமும் அகண்ட அரேபியா சிதறிய பின் வளர்ச்சி அடைந்தது.

சதாம் ஹுசைன் காலத்து ஈராக் அமெரிக்கா,பிரிட்டன் சொன்ன பேச்சைக் கேட்காமல் சட்டாம்பிள்ளையானதை விரும்பவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்.