Sunday, March 15, 2009

கிரீஸின் மனித உரிமை மீறல்கள்: ஐரோப்பாவின் களங்கம்

கிரீஸ் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆரம்ப கால அங்கத்துவ நாடுகளில் ஒன்று. அதே நேரம் ஐரோப்பாவில் மனித உரிமைகள் மீறப்படும் குற்றச் சாட்டுகளிலும் கிரீஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அண்மையில் ஆப்கானிய அகதி ஒருவரை போலிஸ் நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்து கொன்ற சம்பவம் அம்பலத்திற்கு வந்துள்ளது. பெப்ருவரி 15 ம் திகதி இடம்பெற்ற அந்த ஆப்கானிய அகதியின் மரணம் தொடர்பாக, அவரின் உறவினர்கள் கிரேக்க போலீசாரை குற்றவாளிகளாக நிறுத்தி உள்ளனர். சம்பந்தப்பட்ட நபர் குளியறையில் தற்கொலை செய்து கொண்டதாக கிரேக்க போலிஸ் தெரிவித்துள்ளது. இருப்பினும் உடலில் காணப்படும் தழும்புகள், அந்த அகதியை போலீசார் சித்திரவதை செய்து கொன்றிருக்கலாம், அல்லது சித்திரவதை காரணமாக தற்கொலைக்கு தூண்டப்பட்டிருக்கலாம் என அவரின் உறவினர்கள் நம்புகின்றனர். கிரீஸ் நாட்டு சட்டப்படி போலிஸ் சித்திரவதை செய்வது சட்டவிரோதம் என்பதுடன், நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும்..

வழக்கை பதிவு செய்தவர்கள் சார்பான சட்டத்தரணி கூறும் போது, "சடலத்தை ஒப்படைக்க 6 மாதங்கள் எடுக்கலாம் என போலீசார் கூறியதாகவும், ஆனால் இறுதிக் கிரியைகளுக்காக உடலை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்புவதற்கு தருமாறு கேட்டிருப்பதாகவும்" தெரிவித்தார். கிரேக்க பொலிசாரினால் அகதிகள் அடிக்கடி தாக்கப்படுவதை சுட்டிக்காட்டும் "சர்வதேச மன்னிப்புச் சபை" போன்ற மனித உரிமை ஸ்தாபனங்கள், போலிஸ் மீதான நடவடிக்கை எடுப்பதில் உள்ள சட்டச் சிக்கல்களை கோடிட்டுக் காட்டியுள்ளன.

இதே நேரம் மதச் சகிப்புத்தன்மை இல்லாத மேற்குலக நாடாகவும் கிரீஸ் உள்ளது. ஓட்டோமான் துருக்கியர்கள் கிரீசை ஆட்சி செய்த காலத்திற்கு பின்பு, அதாவது 200 ஆண்டுகளுக்குப் பின்னர், இதுவரை புதிய மசூதிகள் எதுவும் அங்கே கட்டப்படவில்லை. உலகமயமாக்கப்பட்ட உலகில், கிரீசில் இருக்கும் சுமார் ஒரு லட்சம் முஸ்லீம்கள், தொழுகை நடத்துவதற்கு பள்ளிவாசல் இல்லாமல் சிரமப்படுகின்றனர். ஏதென்ஸ் நகரில் புறநகர்ப் பகுதி ஒன்றில் பாகிஸ்தானிய குடிவரவாளர்கள், ஒரு வீட்டின் நிலக்கீழ் அறையை மசூதியாக பயன்படுத்தி வந்துள்ளனர். அவ்விடத்தில் அதிகளவான பாகிஸ்தானியர்கள் கூடுவதைக் கண்ட அயலார்கள் பொலிசிற்கு முறைப்பாடு செய்தனர். போலிஸ் விசாரணையின் போது அந்த வீட்டில் சட்டவிரோத மசூதி இயங்குவதை கண்டறிந்த பின்னால், வீட்டின் உரிமையாளருக்கு 90000 யூரோக்கள் தண்டப்பணம் செலுத்துமாறு நகரசபை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

உள்ளூர் மனித உரிமைகள் நிறுவனமொன்று,இந்த விடயத்தில் அரசாங்கத்தில் இருக்கும் வலதுசாரிகள், இனவாதக் கண்ணோட்டத்தில் கடுமையான நடவடிக்கை எடுப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த சில கிரேக்கர்கள், "எங்களை நிறவெறியர்கள் என்று அழையுங்கள். பரவாயில்லை. நாம் விட்டுக் கொடுக்க மாட்டோம்." என கருத்து தெரிவித்தனர். 2004 ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற போது, சர்வதேச கவனம் கிரீஸின் மீது குவிந்திருந்த வேளை, அரசே ஒரு மசூதி கட்டித் தருவதாக வாக்களித்தது. இருப்பினும் கிரேக்க கிறிஸ்தவ சபையினரின் கடுமையான எதிர்ப்புக் காரணமாக, அந்த திட்டம் பின்னர் கிடப்பில் போடப்பட்டது. அதே போல உலகம் முழுவதும் தனது செலவில் மசூதி கட்டிக் கொடுக்கும் சவூதி அரேபியாவின் கோரிக்கைக்கும், பின்னர் என்ன நடந்தது என்று தெரியவில்லை.

கிரேக்க மக்களின் வாழ்க்கையிலும், அரசாங்கத்திலும், கிரேக்க கிறிஸ்தவ சபையின் செல்வாக்கு அதிகமாக காணப்படுவதால், அங்கே பிற மதங்களுக்கு சுதந்திரம் கிடைப்பதில்லை. இஸ்லாமிய மதத்திற்கு மட்டும் இந்த நிலைமை என்றில்லை. கிரீஸின் கூடப்பிறந்த தம்பி முறை கொண்டாடும் சைப்பிரசில், பௌத்தர்கள் தமக்கென புத்த கோயில் கட்ட விண்ணப்பித்த போது, "வாகன தரிப்பிட வசதி இல்லை" என்ற காரணம் காட்டி நிராகரிக்கப்பட்டது. இந்த நாடுகளில் இந்துக்கள் சொற்ப தொகையில் வாழ்வதால் அவர்களின் கோயில் கட்டும் ஆசையும் நிறைவேறப்போவதில்லை.

கிரீஸின் மனித உரிமைகள் பாதுகாக்கும் சட்டங்கள் நடைமுறைக்கு வர வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுத்து வருகின்றது. அந்த நாட்டில் புகலிடம் கேட்கும் அகதிகளில் ஒரு வீதமானோர் மட்டுமே அங்கீகரிக்கப்படுகிறனர். இருப்பினும் ஐரோப்பிய கோட்டைக்குள் நுழைய விரும்புவர்கள் கிரீசிற்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

2 comments:

ttpian said...

Oh allah!
Who is ruling Greece?
Mahindha Brothers?

Kalaiyarasan said...

ttpian, Greece is rulled by the Conservative elite, which allow little change in the society.