Wednesday, March 18, 2009

போக்கிரிகளின் புகலிடம் அமெரிக்கா! - ஒரு வரலாறு


ஐரோப்பிய நாடுகளில் வந்து குடியேறும் மக்கள், வறுமை காரணமாக புலம்பெயர்ந்த பரதேசிகள், என்ற எண்ணம் ஐரோப்பியரின் மனதில் உள்ளது. அவர்கள் பெரும்பான்மை சமூகத்துடன் ஒத்துப்போகாது, தமது பிற்போக்கு கலாச்சாரத்தை கட்டிபிடித்துக் கொண்டு இருப்பதாகவும், அதிகளவு குற்றச்செயல்களில் ஈடுபடுவதாகவும் தப்பெண்ணம் நிலவுகின்றது.

இதே ஐரோப்பியர்கள் ஒரு காலத்தில் அமெரிக்கா சென்று குடியேறிய போது, அங்கே ஏற்கனவே தம்மை நிலைப்படுத்திக் கொண்ட ஆங்கிலேய-அமெரிக்க பெரும்பான்மை சமூகத்தால் சந்தேகக்கண்ணுடன் பார்க்கப்பட்டனர். தற்போது குடிவரவாளர்களை தடுக்க கடுமையான சட்டங்களை இயற்றுவதில், பெருமை கொள்ளும் நாடு நெதர்லாந்து. அந்த நாட்டு மக்களின் அமெரிக்கா நோக்கிய குடி அகல்வு பற்றிய வரலாறு, இன்றைய நிலைமையுடன் அதிசயத்தக்க விதமாக பொருந்திப் போகிறது.

நியூ யார்க் நகரம் ஒரு காலத்தில் நியூ ஆம்ஸ்டர்டாம் என்ற பெயரைக் கொண்டிருந்தது. அந்த நகரம் டச்சுக் காலனியவாதிகளால் ஆங்கிலேயருக்கு விற்கப்பட்டதால் அந்த பெயர் மாற்றம். 1840 ம் ஆண்டிலிருந்து, 1940 ம் ஆண்டு வரை 2 லட்சமும், இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன் குறைந்தது பத்தாயிரம் பேராவது நெதர்லாந்தில் இருந்து அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் சென்று குடியேறி உள்ளனர். ஆங்கிலேய கலாச்சார ஆதிக்கம் நிலவிய அமெரிக்காவிலும், கனடாவிலும் இந்த ஒல்லாந்துக் குடியேறிகள் இருகரம் கூப்பி வரவேற்கப்பட்டனர். கடும் உழைப்பாளிகளாகவும், புரட்டஸ்தாந்து மத நம்பிக்கை உடையவர்களாகவும் விரும்பப்பட்டனர்.

ஆனால் தாயகமான நெதர்லாந்தில், அமெரிக்கா சென்று குடியேறுபவர்களுக்கு என்றைக்குமே  நல்ல பெயர் இருக்கவில்லை. நாட்டை விட்டு வெளியேறுபவர்கள் கிரிமினல்களாகவும், தேசத் துரோகிகளாகவும் தூற்றப்பட்டனர். அல்லது எந்த வேலையும் செய்யாத உதவாக்கரைகளாக கணிக்கப்பட்டனர். வட அமெரிக்க நீராவிக் கப்பல் நிறுவனம் (N.A.S.M.) என்ற கப்பல் போக்குவரத்து சேவை, புகலிடம் தேடுவோரை அமெரிக்கா கொண்டு சென்றது. அந்தக் கப்பல் சேவைக்கு உள்ளூர் மக்கள் "Neem Alle Schurken Mee" (அனைத்துப் போக்கிரிகளையும் கொண்டு செல்) என்ற வேடிக்கையான பெயர் இட்டனர்.

இரண்டாம் உலகப்போர் வரையில் பெரும்பான்மை ஐரோப்பிய நாட்டு மக்கள் வறுமையில் வாடினர். நெதர்லாந்தும் அதற்கு விதிவிலக்கல்ல. விவசாய சமூகத்தை கொண்ட நாட்டில், நட்டமடைந்த விவசாயிகள் அமெரிக்கா சென்று குடியேறினால் தமக்கு நல்ல காலம் பிறக்கும் என நம்பினர். அவர்களை அமெரிக்கா அனுப்பி வைத்துக் கொண்டிருந்த முகவர்கள், அங்கே சென்றால் ஏக்கர் கணக்கில் நிலமும், சொந்த வீடும் கிடைக்கும் என ஆசை காட்டினர். இருப்பினும் அமெரிக்காவில் கால் பத்தித்த மறுகணமே பிறருடைய வயல்களில் விவசாயக் கூலிகளாக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டனர். சொந்த நாட்டில் விவசாயிகளாக இருந்தவர்கள், அமெரிக்கா வந்து விவசாயக்கூலிகளான துர்ப்பாக்கிய நிலை நேர்ந்த போதும், சம்பாதித்து சேர்க்கும் பணத்தில் வீடும், நிலமும் வாங்கும் கனவுகளில் மிதந்தனர்.

நெதர்லாந்துக் குடிவரவாளரின் பின்தங்கிய நிலைமைக்கு, ஆங்கில மொழித் தேர்ச்சி இன்மையும் ஒரு காரணம். விவசாயத் தொழிலாளிகளுக்கான வீட்டு வசதியும் திருப்திகரமானதாக இருக்கவில்லை. மின்சாரமோ, குடிநீரோ இல்லாத, சிறிய மரப்பலகை வீட்டை, ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டி இருந்தது. ஆண்கள் வயல்களில் வேலை செய்கையில், பிள்ளைகள் பாடசாலை செல்கையில், பெண்கள் வீடுகளுக்குள்ளே அடைந்து கிடந்தனர். இதனால் ஆங்கிலம் கற்க, சூழலை தெரிந்து கொள்ள வாய்ப்பற்ற பெண்கள் பின்தங்கிய நிலையில் இருந்தனர்.

குடிவரவாளர்களை பெரும்பான்மை சமூகத்துடன் ஒன்ற விடாது தடுப்பதில் மத நிறுவனங்களின் பங்கு அளப்பரியது. இன்று ஐரோப்பிய முஸ்லீம் பிரசைகளை, இஸ்லாமிய மதம் தனிமைப்படுத்தி வைத்திருக்கின்றது, என குற்றஞ்சாட்டுவது போல, அப்போதும் அமெரிக்காவில் சிறுபான்மை மத நிறுவனங்கள் சந்தேகக்கண்ணுடன் நோக்கப்பட்டன. ஆமாம், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் எல்லோரும் ஒரே கலாச்சார பாரம்பரியத்தை கொண்டிருக்கவில்லை.

ஆரம்பத்தில் நெதர்லாந்துக் கத்தோலிக்க குடியேறிகள் மட்டுமே அமெரிக்க பெரும்பான்மை சமூகத்தின் தேவாலயங்களை ஏற்றுக் கொண்டனர். அதற்கு மாறாக புரட்டஸ்தாந்து பிரிவுகளைச் சேர்ந்த மக்கள், புகலிடத்திலும் குழுவாதத்தை தொடர்ந்தனர். அமெரிக்காவில் ஒல்லாந்து சமூகத்தை பிரதிநிதித்துவப் படுத்திய புரட்டஸ்தாந்து திருச்சபைகள், பிள்ளைகளுக்கு டச்சு மொழியை போதிக்கும் பாடசாலைகளாகவும் அமைந்திருந்தன. தமது தேவாலயங்களில் அமெரிக்க கொடியை பறக்கவிட மறுத்தது போன்ற விடயங்கள், பெரும்பான்மை அமெரிக்கரை எரிச்சலூட்டியது. சில தேவாலயங்கள் எரிக்கப்பட்டன.

நெதர்லாந்தில் இருந்து அமெரிக்கா சென்று குடியேறிய மக்களில் பெரும்பான்மையினர் சீர்திருத்தப்பட்ட புரட்டஸ்தாந்து சபைகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அரச மதமான புரட்டஸ்தாந்து கிறிஸ்தவத்துடன் முரண்பட்டு, சுதந்திரமான சிறு குழுக்களாக இயங்கி வந்தனர்.(1834-1886) "சீர்திருத்தப்பட்ட புரட்டஸ்தாந்து தேவாலயங்கள்" என்ற பெயரில் இயங்கி வந்த மத நிறுவனங்களை அன்றைய அரசாங்கம் பொறுத்துக் கொள்ளவில்லை. இந்த அமைப்புகளை சட்டவிரோதம் என அறிவித்தது. பிரார்த்தனை கூட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கியது.

தேவாலயங்களில் பிரார்த்தனை நடக்கும் வேளை, போலிஸ் உள்நுளைந்து வழிபாட்டாளர்களை விரட்டியது. பாதிரிகளை கைது செய்து சிறையில் அடைத்தது. இவ்வாறு அரச அடக்குமுறைக்கு உள்ளான கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த மக்கள், அமெரிக்காவில் புகலிடம் தேட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானது வியப்பல்ல. இன்று மதச் சுதந்திரம், மத நல்லிணக்கம் பற்றி உலகம் முழுக்க போதிக்கும் அதே நெதர்லாந்து நாட்டில் தான் இவ்வளவும் நடந்துள்ளன. ஆமாம், "ஜனநாயக" நாடுகளின் வரலாற்றில் இது போன்ற இருண்ட பக்கங்கள் நிறைய உள்ளன.


Web Sites:
Dutch Americans
Dutch Reformed Church
Dutch Heritage Village in America

8 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

எனக்கு மிகவும் புதிய தகவல். ஒப்பந்தக் கூலிகளாக கூட்டிவரப்பட்ட கதைகள் தாம் மலேசிய தமிழர்களுக்கும் உண்டானது. அதைப் பற்றிய செய்திகளை மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நினை எனும் புத்தகத்தில் கண்டேன்.

Kalaiyarasan said...

நன்றி விக்னேஷ்,

மலேசியாவில் தமிழர்கள் ஒப்பந்தக் கூலிகளாக சென்ற நிலைமை வித்தியாசமானது. அடிமைகளை விட சற்று அதிகமான நிலையே கூலி உழைப்பாளிகளுடையது. இதனால் தான் இவர்களின் அடுத்த சந்ததியை சேர்ந்த பலர் பிற்காலத்தில் சமூகத்தில் பின்தங்கி இருக்க வேண்டி இருந்தது.

அதற்கு மாறாக அமெரிக்கா சென்ற ஐரோப்பியர்களுக்கு குடியேறிகள் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டது. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முன்னேற எந்த தடையும் இருக்கவில்லை. அதனால் பிற்காலத்தில் வெள்ளையின அமெரிக்க சமூகமாக இரண்டறக் கலந்து விட்டனர்.

Anonymous said...

neengal sonnathu pola intha madham sarntha ataku murgalia thaandi vandhadhanaal than avargal valarandha nadugalagavum sunthathira nadalagavum vialganu kindrana.Avargalin pazhaya thavarugalai solli indru nadam thavarugalai niyaya padatha mudiyathu

Kalaiyarasan said...

உங்களது வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, நண்பரே.
நான் இங்கே எந்த தவறையும் சுட்டிக் காட்டவுமில்லை, நான் அதனை நியாயப்படுத்தவுமில்லை. அன்றைய காலத்தில் மேற்குலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் அவற்றை தவறாக நினைக்கவே இல்லை. அவர்களின் பாரம்பரியமே அப்படித்தான் இருந்தது. அந்த வழி வந்தவர்களுக்கு உலகத்திற்கு போதிக்க என்ன தகுதி இருக்கிறது? என்பது தான் இங்கே எழும் கேள்வி.

ரவி said...

நல்ல தகவல்

Kalaiyarasan said...

நன்றி,செந்தழல் ரவி.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Kalaiyarasan said...
This comment has been removed by the author.