Tuesday, March 31, 2009

புதிய தாலிபான் யுத்த தந்திரங்கள்

"நான் தனிப்பட்ட முறையில் அந்த அமெரிக்க இராணுவ முகாம் கொமாண்டருடன் உரையாடியிருக்கிறேன். எமது ஊருக்கு அருகில் அந்த முகாம் இருந்தது. 22 ம் திகதி டிசம்பர் மாதம்(2002) நள்ளிரவு திடீரெனச் செல்கள் விழுந்து வெடிக்கும் சத்தம் கேட்டது. அடுத்த நாள் நான் போய் பார்த்த போது, முகாம் முற்றிலும் சேதமாகியிருந்தது. யாரும் உயிரோடு தப்பியதாகத் தெரியவில்லை. " - பாகிஸ்தான் எல்லையிலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் இருந்த "மஷடத் கொட்" இராணுவ முகாம் தாக்குதல் சம்பவம் பற்றி ஒரு வயோதிபர் பத்திரிகையாளரிடம் விபரித்தபோது கூறியவை இவை.

ஆப்கானிஸ்தானை அமெரிக்கப்படைகள் ஆப்கானியத் துணைப்படைகளுடன் இணைந்து கைப்பற்றிய போது எதிர்காலக் கொரில்லா யுத்தம் பற்றிக் குறைத்து மதிப்பிட்டிருந்தனர். தலிபான் பிரதிநிதிகள் தமக்கு வெளிநாடுகளில் இருந்து நவீன ஆயுதங்கள் வந்து சேர்ந்துள்ளதாகவும் அவை இதுவரை போரில் பயன்படுத்தப்படவில்லையென்றும் தெரிவித்துள்ளனர். எப்படியோ இந்தச் செய்தி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. தலிபான் உறுப்பினர்களை நன்கு அறிந்த பஷ்ரூன் இனக் குழுத்தலைவர்கள் ஆயுதத் தளபாடங்கள், வெடிமருந்துகள் தாராளமாக இருப்பதாகக் கூறுகின்றனர். மேலும் என்பதுகளில் நடந்த கெரில்லாப் போரைப்போல தற்போதும் அமெரிக்கப் படையினரை தாக்கி ஆயுதங்களைக் கைப்பற்றும் நிலைமை இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

மெல்ல மெல்ல அமைப்பை மீளக்கட்டமைத்துவரும் தலிபான்கள் தலைமறைவாக வாழவேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதனால் மக்களுக்கும் அவர்களுக்குமிடையில் பெருத்த இடைவெளியிருக்கின்றது. இந்த இடைவெளியைக் குறைக்க இரகசிய நடமாடும் வானொலி நிலையங்கள் இயங்கிவருகின்றன. தற்போது ஒருசில பகுதிகளில் மட்டுமே இந்த ஒலிபரப்பு கேட்கக்கூடியதாகவுள்ளது. இதன்மூலம் அந்நியப்படைகளை வெளியேற்ற ஜிகாத்திற்கு தயாராகுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுகின்றது.

வானொலிச் சேவையைவிட துண்டுப்பிரசுரங்கள் மூலமும் அறிவித்தல்கள், தாக்குதல்களுக்கு உரிமை கோரல்கள் என்பன அறிவிக்கப்படுகின்றன. இந்தத் துண்டுப்பிரசுரங்கள் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டு ஆயிரக்கணக்கில் பரப்பப்படுகின்றன. அண்மையில் வந்த துண்டுப்பிரசுரம் ஒன்று தற்கால ஆப்கான் பிரதமர் கர்சாய்க்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது. கர்சாயும் பிற அரசாங்க உறுப்பினர்களும் ஆப்கானியர்கள் அல்ல என்றும் அந்நியப்படைகளுக்குக் குறிவைக்கும்போது அவர்களும் சேர்ந்தே தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தது. பஷ்ரூன் மொழியில் எழுதப்படும் இந்தப் பிரசுரங்கள் கர்சாய் அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டாம் என்றும், அந்நியப்படைகளுடன் தொடர்பு கொள்பவர்கள், வியாபாரம் செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் பொதுமக்களை எச்சரிக்கின்றன. பிரிட்டிஷ் செய்தி நிறுவனம் ரொய்ட்டர் கூட மேற்படி செய்திகளை உறுதிசெய்துள்ளது: "தெற்கு ஆப்கானிஸ்தான் நகரமொன்றின் மக்கள் ஒருநாள் அதிகாலை விழித்தபோது முக்கிய சந்திகளில் திடீர்ச் சுவரொட்டிகளைக் கண்டார்கள். அதில் அமெரிக்க சார்பு கர்சாயின் பொம்மை அரசாங்கத்தை ஆதரிப்பவர்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. " (ரொய்ட்டர்).

ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்க இராணுவத்திற்குத் தேவையான எரிபொருளை பக்கத்து நாடான ஈரானில் இருந்து வாங்கலாம். ஆனால் அமெரிக்கா அதனை விரும்பவில்லை. இதனால் பாகிஸ்தானியக் கம்பனிகளுக்கு அமெரிக்க இராணுவத்திற்கு பெட்ரோல் விநியோகம் செய்யும் வாய்ப்புக் கிட்டியுள்ளது. தாலிபான் போராளிகள், விநியோகப் பாதையைத் தடுக்கும் நோக்கோடு, பாகிஸ்தானில் இருந்து எண்ணை ஏற்றிக்கொண்டு வரும் பவுசர்களையும், ட்ரக் வண்டிகளையும், தீயிடுகின்றனர்.

தலிபான் தனது போர்த் தந்திரங்களை மாற்றிவருவதாக அமெரிக்கப் படைகளின் தலைமைச் செயலாளர் அமெரிக்காவில் தெரிவித்தார். "கண்டஹார் தெருக்களில் நாம் நடக்கும்போது எம்மைக் கடந்து போபவர்கள் தலிபான்களாகத் தெரிகின்றனர்" என்று கூறினார், அங்கு முகாமிட்டுள்ள "கிறீன்பெரட்" கொமாண்டோப் பிரிவின் வீரர் ஒருவர். இராணுவ நடமாட்டம் பற்றி உளவுபார்க்கச் சிறுவர்களைப் பயன்படுத்துகின்றனர் தலிபான் கொரில்லாக்கள். ஒருமுறை வழியில் நடந்த திடீர் மோதலின் பின்பு தான், தாம் பின்தொடரப்படுவதை உணர்ந்ததாகத் தெரிவித்தார் ஒரு கிறீன்பெரட் வீரர். முன்பு பிக்-அப் வாகனங்களில் பவனி வந்த தலிபான் கொரில்லாக்கள் தற்போது மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்துகின்றனர். சாதாரண குடிமக்கள் போல கழுதைகளையும் இரகசியமாக ஆயதங்களைக் கடத்தப் பயன்படுத்துகின்றனர். ஏற்கெனவே யுத்த தந்திரங்களில் அதிக பயிற்சி பெற்றிருந்த அல்கைதா போராளிகள் பிரமாண்டமான அமெரிக்க இராணுவ பலத்திற்கு ஈடுகொடுக்கக் கற்றுள்ளனர். "பறக்கும் யுத்தக்கப்பல்" என்றழைக்கப்படும் நான்கு எஞ்சின்கள் பூட்டிய AC-130 வருவதை சத்தத்தால் அறிந்து பதுங்கிக் கொள்வதுடன், இரவில் பார்க்கும் கண்ணாடிக்கும் புலப்படாதவாறு தம்மைப் போர்வையால் போர்த்திக் கொள்கின்றனர்.

அதேபோல ஆளற்ற வேவு விமானம் வருவதையோ அல்லது ஏவுகணைகள் ஏவப்பட்டதையோ சத்தத்தைக் கொண்டு அறிந்து தப்பிக் கொள்ளுமளவிற்கு அறிந்து வைத்துள்ளனர். அமெரிக்காவின் அதியுயர் தொழில் நுட்பத்தை சாதாரண உத்திகளைப் பயன்படுத்தி சமாளிப்பதாக இராணுவச் சஞ்சிகையொன்று சரியாகவே குறிப்பிட்டெழுதியிருந்தது. இதைவிட தொலைபேசியையோ, சாதாரண வயர்லெஸ் கருவிகளையோ பாவிப்பதை அல்கைதா உறுப்பினர்கள் தவிர்த்து வருகின்றனர். அவற்றிற்குப் பதிலாக மரபுவழித் தகவற் பரிமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். ஒரு மறைவிடத்திலிருந்து கைவிடப்பட்ட செய்மதித் தொலைபேசிக் கருவிகளை கண்டுபிடித்த பின்னர் அமெரிக்க இராணுவமும் இதனைப்புரிந்து கொண்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கங்கள் தவிர வேறுசில அமைப்புகளும் அரசை எதிர்க்கின்றன. மாவோயிச "ஆப்கானிஸ்தான் விடுதலை இயக்கம்" , "ஆப்கானிஸ்தான் பெண்களின் புரட்சிகர அமைப்பு" என்பன தலிபான் ஆட்சிக்காலத்திலிருந்தே தலைமறைவாக இயங்கிவருகி;ன்றன. இஸ்லாமிய வாதத்தை நிராகரித்து சோஸலிசக் கொள்கைகளை முன்னெடுக்கும் இந்த அமைப்புகள் இன்றுவரை மிகப் பலவீனமான நிலையியே உள்ளன. முன்பு சி.என்.என், பி.பி.சி தொலைக்காட்சிகளில் அடிக்கடி பார்க்கக்கூடியதாகவிருந்த தலிபான் ஆட்சியின் கீழ் ஆப்கானிஸ்தான் வீடியோப்படங்களில் பல இரகசியமாக ஊடுருவிய புரட்சிகரப் பெண்கள் அமைப்பினால் எடுக்கப்பட்டவை. அன்று அந்த வீடியோக்களை தனது தலிபான் எதிர்ப்புப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திக்கொண்டது அமெரிக்கா. இதற்கு "நன்றியறிதலாக" புதிய ஆப்கான் அரசு அமைக்கும்போது புரட்சிகரப் பெண்கள் அமைப்பிற்கு அழைப்பு அனுப்பாமல் புறக்கணித்தது. அப்படியிருந்தும் ஒரேயொரு பெண் அமைச்சரை தொடர்பு கொண்ட இந்த அமைப்பினர் பெண்களின் முன்னேற்றத்திற்கான பல திட்டங்களை முன்வைத்தபோது "அதற்கான நேரம் இன்னும் வரவில்லை. இதையெல்லாம் அவர்கள் (அரசாங்கத்திலுள்ள மத அடிப்படைவாதிகள்) ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்." என்று அந்த அமைச்சர் தட்டிக்கழித்தாராம்.

மதச்சார்பற்ற சோஷலிசவாதிகளை ஆதரிப்பதைவிட, மத அடிப்படைவாதிகள் மீண்டும் தலையெடுப்பதையே அமெரிக்கா விரும்புகின்றது. முன்பு தலிபான்களுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கியதைப்பற்றி ஒரு பிரஞ்சுப்பத்திரிகை அமெரிக்க அதிகாரியொருவரை விசாரித்தபோது அவர் சொன்ன பதில்: "எது முக்கியமானது? தலிபான்களா அல்லது சோவியத் யூனியனின் வீழ்ச்சியா? ஒரு சில பித்துப்பிடித்த இஸ்லாமியவாதிகளா அல்லது பனிப்போரில் இருந்து மத்திய ஆசியாவை விடுதலை செய்தலா?" (Le Nouvelle Observateur, 15.01.1998)

No comments: