Saturday, March 14, 2009

கிரீஸில் புரட்சிகர ஆயுதப்போராட்டம் ஆரம்பம்


ஏதென்ஸ் நகரத்தில், அமெரிக்காவின் சர்வதேச வங்கியான City Bank தலைமைக் கட்டிடத்தை கார்க் குண்டு வைத்து தகர்க்க முயற்சி. 125 கிலோ குண்டு வெடித்தாலும் சேதம் அதிகம் இல்லை. பத்திரிகைகளுக்கு அனுப்பபட்ட புரட்சிகர யுத்தம் என்ற அமைப்பின் உரிமை கோரல் கடிதம், "நிதி நெருக்கடிக்கு பொறுப்பான, சர்வதேச மூலதனத்தின் கிரிமினல் தலைமையகம் City Bank..." என்று தமது செயலை நியாயப்படுத்தி உள்ளது. இன்று லட்சக்கணக்கில் வேலையிழந்து வரும் மக்கள் பலர் புதிதாக துளிர் விடும் தீவிரவாதத்திற்கு ஆதரவு தெரிவிப்பது இரகசியமல்ல. புரட்சிகர யுத்தம் தனது கடிதத்தில், "முதலாளித்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்களையும், அரசியல்-பொருளாதார மேட்டுக்குடியினரையும், இலக்கு வைக்கப் போவதாக" எச்சரித்துள்ளது.

பெப்ரவரி மாதம் இதைத்தவிர வேறு சிறு வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அரசிற்கு ஆதரவு வழங்கும் பிரபல வெகுஜன தொலைக்காட்சி காரியாலயம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உரிமை கோரும் குறுந்தகடு, சில மாதங்களுக்கு முன்னர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட 15 வயது சிறுவனின் சமாதி மீது கண்டெடுக்கப்பட்டது. அதிலும் ஊழல் அரசிற்கு ஆதரவளிக்கும் ஊடகவியலாளருக்கு கொலைப்பயமுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்குப் பிற அரச அதிகாரிகள், தொழிலதிபர்கள் ஆகியோரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சில முன்னணி ஊடகவியலாளர்களும் தாக்குதல் பட்டியலில் அடங்குவதாக தெரிய வந்துள்ளது. ஏதென்ஸ் நகர ரயில் நிலையமொன்றில் தரித்து நின்ற ரயிலில் இருந்த பயணிகளை முகமூடி அணிந்த ஆயுததாரிகள் அப்புறப்படுத்தி விட்டு ரயில் பெட்டிகளுக்கு தீவைத்துள்ளனர். பிறிதொரு சம்பவத்தில், தென் மேற்குப் பகுதி ரயில் தண்டவாளங்கள் நாசமாக்கப்பட்டிருந்தன. இவற்றால் ரயில் திணைக்களத்திற்கு மில்லியன் கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.


எழுபதுகளில் ஆரம்பித்து அடுத்து வந்த பத்தாண்டுகளாக கிரீசை அதிர வைத்த நவம்பர் 17 என்ற புரட்சி இயக்க உறுப்பினர்கள் அனைவரும் தொண்ணூறுகளின் இறுதியில் கைது செய்யப்பட்ட பின்னர், கிரீசில் இனிமேல் தீவிரவாதம் தலையெடுக்காது என்றே பலரும் நம்பி இருந்தனர். ஆனால் கடந்த வருடம் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்ட கிரீஸ், கடந்த டிசம்பர் மாதம் தினசரி கலவரங்களை சந்தித்து வந்தது. கலவரங்களில் சில தீவிரவாத இளைஞர்கள் மட்டும் அல்லாது, பொது மக்களும் கணிசமான அளவில் பங்கு பற்றி இருந்தனர்.

பொலிசிற்கு கல்லெறியும் 12, 13 வயது சிறுவர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறியது. தமது பிள்ளைகளுக்கு என்ன நடக்குமோ என்ற அச்சத்தில், தவிர்க்கவியலாது பெற்றோரும் அரச எதிர்ப்பு கலவரங்களில் பங்கேற்றனர். அரசு நிலமையை பொறுமையாக கையாண்டது. "இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படி கலகம் செய்வார்கள்? அவர்களே களைத்துப் போய் கைவிட்டு விடுவார்கள்." என்று கணக்குப் போட்டது. வீதிகளில் பொலிசிற்கு கல் வீசும் போராட்டம் தற்போது ஓய்ந்து விட்டது உண்மை தான். ஆனால் அதுவே சில இளைஞர்களை ஆயுதமேந்தி போராடும் நிலைக்கு தள்ளி உள்ளது. "இந்த புதிய தலைமுறை புரட்சியாளர்கள் மிகவும் தீவிரமானவர்கள். அதனால் நாட்டில் மீண்டும் இரத்தம் சிந்தும் போர் வெடிக்கலாம்." என பல கிரேக்கர்கள் அச்சமடைந்துள்ளனர்.

Death threat to Greek media as terrorists plot bomb havoc
Greek terror group: Citibank attacked over crisis

2 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

உலகச் செய்திகளை செம்மையாக தொகுத்து கொடுத்து இருக்கிறீர்கள்... வங்கி துரை பலமான பாதிபிற்குட்பட்டு இருப்பது உண்மை... ஒன்று அதிகமான அழுத்தங்களோடு வேலை செய்தாக வேண்டும்... இல்லை என்றால் வீட்டுக்கு போய்விட வேண்டும் அது தான் நிலைபாடு... இதன் விளைவு மக்கள் ஆளும் கட்சியிடம் தமது கோப தாபங்களை காட்டும் நிலையில் உள்ளது. இதனால் உலக நாடுகளில் பிரச்சனைகள் துளிர் எடுக்கின்றன... மேலும் இது போன்ற செய்திகளை எதிர்ப்பார்க்கிறேன் நண்பரே...

Kalaiyarasan said...

மேலும் இது போன்ற செய்திகள் கிடைக்கும் போது நிச்சயம் பதிவிடுவேன் நண்பரே. எனக்குத் தெரிந்த அளவில் தமிழில் இப்படியான செய்திகள் வருவது மிகக் குறைவு.