Monday, March 16, 2009

யேமன்: நேற்று நண்பர்கள், இன்று எதிரிகள்


யேமென் நாட்டில் உல்லாசப்பிரயாணிகள் சிலர் மீண்டும் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளனர். ஷிபம் என்ற இடத்தில் நடந்த தாக்குதலில் நான்கு கோரிய பிரசைகள் கொல்லப்பட்டனர். Unesco வினால் பண்டைய காலாச்சார பாரம்பரியம் மிக்க நகரமாக பாதுகாக்கப்படும் "ஷிபம்" உல்லாசப்பிரயாணிகளை அதிகளவில் கவர்ந்து வருகின்றது. மிக வறுமையான மத்திய-கிழக்கு நாடான ஏமனில், தீவிரவாதம் இன்னமும் குறைந்தபாடில்லை.

2000 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 12 ம் திகதி ஏடன் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்கக் கடற்படைக் கப்பல் "யு.எஸ்.எஸ் கோல்" மீது வெடிமருந்து நிரப்பிய சிறிய படகொன்று மோதிச் சிதறுண்டது. ஒரு தற்கொலைக் குண்டுதாரி அந்தப் படகை ஓட்டி வந்து மோதியிருக்கலாம் என நம்பப்படும் அந்தத் தாக்குதலில் 17 அமெரிக்கக் கடற்படையினர் கொல்லப்பட்டனர். அந்தச் சம்பவத்திலிருந்து சர்வதேசக் கவனம் அரபிக்குடா நாட்டின் ஓரத்தில் இருக்கும் யேமன் என்ற நாட்டின் மீதும் பதிகின்றது. அல்-கைதாவைப்பற்றி அப்போது அதிகமானோர் அறியாதிருந்த காலமது. ஆப்கானிஸ்தானில் தளமமைத்திருந்த அல்-கைதா இயக்கத்தின் அரசியற் பிரச்சாரப் பிரிவு வெளியிட்ட வீடியோவில் யு.எஸ்.எஸ் கோல் தாக்குதலும் பதிவு செய்யப்பட்டிருந்தது.

ஆப்கானிஸ்தானில் சோவியத் இராணுவத்தை எதிர்த்துச் சண்டையிட்ட தொண்டர்படையில் பெருமளவு யேமனியர்களும் சேர்ந்திருந்தனர். இன்றைய சர்வதேசத் திரையரங்கின் பிரதான வில்லன் ஒசமா பின்லாடனின் குடும்பமும் யேமனியர்தான். ஆப்கானிஸ்தானில் சோவியத் இராணுவம் வெளியேறியபின் யுத்தம் முடிவடைந்து நாடுதிரும்பிய யேமனியத் தொண்டர்கள் இன்று அல்-கைதா உறுப்பினர்களாகவிருப்பதும் பின்லாடனுக்கு விசுவாசமாகவிருப்பதும் ஆச்சரியப்படக்கூடிய விடயங்களல்ல. ஆனால், யேமன் உள்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை முன்பு இணைபிரியா நண்பர்களாகவிருந்த யேமன் ஜனாதிபதியும் பின்லாடன் விசுவாசிகளும் இன்று எதிரிகளாக மாறியிருப்பதுதான் ஆச்சரியம். நண்பர்கள் பகைவர்களான அரசியலைப் புரிந்து கொள்ள வரலாற்றைச் சிறிது பின்னோக்கிப் பார்ப்போம்.

இஸ்லாம் தோன்றுவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய நாகரீகத்தைக் கண்ட பெருமைக்குரியது யேமன். கிறிஸ்தவர்களாகவும், யூதர்களாகவும் இருந்த யேமனியர்கள் பிற்காலத்தில் பரவிய இஸ்லாமிய மதத்தில் பெரும்பான்மையாகச் சேர்ந்தனர். இன்றுகூட சிறுசிறு இனக்குழுக்களாக யேமனிய சமூகம் பிளவுபட்டிருந்தாலும், பல இனக்குழுத்தலைவர்கள் மதகுருக்களாகவும் தமது மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துகின்றனர். வடக்கு யேமனில் இந்த நிலை இன்னும் மாறவில்லை. தெற்கு யேமன் இதற்கு மாறான போக்கைக் கொண்டுள்ளது. 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த ஏடன் துறைமுகத்தைக் கைப்பற்றிய, அங்கிருந்து பல தெற்கு யேமன் பகுதிகளை ஆக்கிரமித்த ஆங்கிலேயர்கள் தமது காலனிய ஆட்சியை ஆரம்பித்தனர். இந்தக் காலனிய காலகட்டத்தில் ஆங்கிலக் கல்வி கற்ற, படித்த யேமனியர்கள் காலணியாட்சியை எதிர்த்தனர். கம்யூனிஸ்டுகளால் தலைமை தாங்கப்பட்ட விடுதலைப்போர், பிரிட்டிஷ் காலணியாதிக்கத்தை தூக்கியெறிந்துவிட்டு, 1967ம் ஆண்டு யேமன் மக்கள் குடியரசைப் பிரகடனம் செய்தது. மாக்ஸீய-லெனினிச சித்தாந்தத்தின் அடிப்படையில் அரசமைந்த ஒரேயொரு அரபுநாடும் அதுதான்.

தொடர்ந்து சோவியத் யூனியனின் உதவியால் நாடு அபிவிருத்தி செய்யப்பட்டது. வீடுகள், வைத்தியசாலைகள், பாடசாலைகள் பரவலாகக் கட்டப்பட்டன. ஆண்-பெண் பிள்ளைகளுக்குச் சமமான நவீன கல்வியளிக்கப்பட்டது. சோசலிஸ அரசாங்கம் அதிககாலம் நீடிக்க முடியவில்லை. 1991 ல் சோவியத் யூனியனின் வீழ்ச்சி மட்டும் காரணமல்ல. அதற்கு முன்பே ஆட்சியதிகாரத்திற்காக கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடந்த போட்டி, தெருக்களில் துப்பாக்கிச்சண்டை போடுமளவிற்கு மோசமடைந்தது. சோவியத் சார்பு, சீனச் சார்பு கம்யூனிஸ்டுக்களுக்கிடையில் நடந்த உள்நாட்டு யுத்தத்தால் முழு தேசமும் பாதிக்கப்பட்டது. பலவீனமடைந்த அரசாங்கம் இறுதியில் வடக்கு யேமனுடன் இணைவதற்குச் சம்மதித்தது. தென்யேமனியர்கள் அரசு அதிகாரம் சமஷ்டிமுறையில் பகிரப்படவேண்டுமென எதிர்பார்த்தார்கள்.

ஒரு சில மாதங்களிலேயே எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. ஈராக் குவைத்மீது படையெடுத்து ஆக்கிரமித்திருந்தது. சர்வதேச அரங்கில் யார் ஈராக் பக்கம் ? யார் அமெரிக்கா பக்கம் என கணக்கெடுப்பு நடந்தது. துரதிஸ்டவசமாக யேமன் ஈராக்கின் பக்கம் நின்றது. ஆத்திரமடைந்த அயல் நாடான சவூதி அரேபியா தனது நாட்டில் வேலைபார்த்த இலட்சக்கணக்கான யேமன் தொழிலாளர்களை எந்தவொரு நட்ட ஈடும் கொடுக்காமல் வெளியேற்றியது. ஒரே நாளில் வெளிநாட்டு உழைப்பாளிகளின் வருமானம் வருவது நின்றுபோனதுடன் உள்நாட்டில் வேலையற்றோர் தொகையும் அதிகரித்தது. ஏற்கெனவே வறிய நாடான யேமனுக்கு இது பலத்த அடி.

இதன் தாக்கம் பலவிடங்களிலும் எதிரொலித்தது. பொருட்களின் விலைகள் உயர்ந்தன. நகரங்களில் உணவிற்காகக் கலகங்கள் ஏற்பட்டன. தென் யேமனியர்கள் தாம் நன்றாக ஏமாற்றப்பட்டுவிட்டதாக உணர்ந்தனர். முன்னர் சோசலிச நலன்புரி அரசின்கீழ் கிடைத்த வேலையற்றோர் ஊதியம் போன்ற பல சலுகைகள் இப்போது பகற்கனவாய்ப் போய்விட்தைக் கண்டனர்.தென்யேமனிய அரசியல்வாதிகளும், அதுவரை கலைக்கப்படாதிருந்த அவர்களது இராணுவமும் பிரிவினை கோரிக் கிளர்ச்சி செய்தனர். வடயேமன் ஜனாதிபதி சாலே கிளர்ச்சியாளர்கள்மீது இராணுவத்தை ஏவிவிட்டார். அப்போதுதான் ஆப்கானிஸ்தானிலிருந்து நாடு திரும்பியிருந்த அல்-கைதா போராளிகள் வடயேமன் இராணுவத்துடன் கூட்டுச்சேர்ந்து கொண்டு கிளர்ச்சியாளரை அடக்கினர். பெரும் அழிவை ஏற்படுத்திய அந்த உள்நாட்டு யுத்தம் முன்னாள் தென்யேமன் தலைநகர் ஏடன் நகர முற்றுகையுடன் முடிவுக்கு வந்தது. வடயேமன் படைகளுக்கு உதவியழித்த பிராந்திய வல்லரசான சவூதி அரேபியா, இஸ்லாமிய மதத்தலைவர்கள், இஸ்லாமிய மதவாதக் கட்சி ஆகியன கம்யூனிஸ்ட்டுக்களை பூண்டோடு அழித்த மகிழ்ச்சியில் திழைத்தனர்.

உள்நாட்டுப்போரை அடுத்து நடந்த பொதுத்தேர்தலில் ஜனாதிபதி சாலேயின் கட்சி மாபெரும் வெற்றிபெற்றது. அதோடு கூட்டுச்சேர்ந்த மதவாத "இஸ்லா" கட்சி இரண்டாமிடத்திற்கு வந்தது. இன்று மாறிவிட்ட உலகில் இதே இஸ்லா கட்சி அரசுடன் முரண்பட்டுநிற்கிறது. முன்பு சவூதி அரேபியா இந்தக்கட்சியை ஆதரித்தது. இப்போது இக்கட்சி அல்-கைதா உறுப்பினர்களின் ஆதரவுத்தளத்தில் இயங்கிவருகின்றது. கடந்த தசாப்தத்தில் யேமன் இவ்வாறு பல எதிர்பாராத மாற்றங்களை கண்டுள்ளது. சென்ற ஆண்டின் இறுதி நாட்களில் நடந்த மூன்று அமெரிக்கக் கிறிஸ்தவ மதப் பிரச்சாரகர்களின் கொலை, சோசலிசக் கட்சித் தலைவரொருவரின் கொலை போன்றவற்றை செய்தவர்கள் தாம் இஸலாக் கட்சி உறுப்பினர்கள் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இத்தகைய நிகழ்வுகள் ஜனாதிபதிக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், பயங்கரவாதத்தை அடக்குமாறு கூறும் அமெரிக்க அரசின் நெருக்குதல் ஒருபுறம், தனது ஆட்சிக்கு இதுவரை பக்கபலமாகவிருந்த மதவாத நண்பர்கள் மறுபுறம் என தர்மசங்கட நிலைக்கு இவர் தள்ளப்பட்டுள்ளார். ஏற்கெனவே ஜனாதிபதி சாலே சர்வாதிகாரி என்று பெயரெடுத்துள்ளார். மதவாதிகளுக்கெதிரான நடவடிக்கை அவரது ஆதரவுத் தளத்தை பாதிப்பதுடன், மக்கள் மத்தியில் சர்வாதியாரியாக நிச்சயப்படுத்தப்படுவார். சாவே வரவர அமெரிக்கா பக்கம் சரிந்து வருவதால் நாட்டின் பிற அரசியற் சக்திகளிடமிருந்து அந்நியப்பட்டு, தனிமைப்பட்டு நிற்பதால் அவருக்குச் சர்வாதிகாரி என்ற பெயர் சரியாகப் பொருந்துகிறது.

மேற்கத்தைய தொடர்பு சாதனங்களில் யேமன் பற்றிய செய்திகள் வருவது அவர்கள் நாட்டுப்பிரஜைகள் பாதிக்கப்படும்போது மட்டும்தான். 1990 ம் ஆண்டுக்குப் பிறகு யேமன் போகும் உல்லாசப் பயணிகள் தொகை அதிகரித்துள்ளது. அதேநேரம் ஐரோப்பிய உல்லாசப் பிரயாணிகள் அடிக்கடி கடத்தப்பட்ட சம்பவங்கள் பல நடந்துள்ளதால் யேமன் பாதுகாப்பாற்ற நாடாகத் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடத்தப்பட்ட பல மேற்கத்தைய உல்லாசப்பயணிகள் ஆபத்தான சூழலில் பணயம் வைக்கப்படவில்லை. பலர் எதிர்பார்த்ததற்கு மாறாக அவர்கள் மிக நன்றாகக் கவனிக்கப்பட்டார்கள். இத்தகைய சமபவங்கள் நகரில் இருந்து தூரத்தில் நாட்டுப்புறங்களிலேயே நடப்பதுண்டு. நாட்டுப்புறக் கிராமங்கள் பல இனக்குழுக்கள் வாரியாகப் பிரிந்துள்ளன. சாதிச் சமூகங்கள் போல தனித்தனிப் பெயர்களால் அழைக்கப்படும் இவ்வினக்குழுக்களுக்கென சில கிராமங்களை உள்ளடக்கிய தனியான பிரதேசமும் அதற்கென ஒரு தலைவரையும் கொண்டுள்ளன. இந்தத் தலைவரின் கீழ் சிறு ஆயுதக்குழுவும் இருக்கும். பண்டைய காலத்தில் இருந்து யேமனிய சமூகம் இவ்வாறு வாழ்ந்து வருகிறது.


நாட்டுப்புறங்களை பார்வையிடப்போகும் உல்லாசப்பிரயாணிகள் ஏதோவொரு இனக்குழுவிற்குச் சொந்தமான பிரதேசத்திற்குள் போய்விட்டால் அந்தப்பகுதி ஆயுதக்குழுக்கள் அவர்களைக் கடத்திக் கொண்டு போய்விடும். அப்படிக் கடத்தப்பட்ட வெளிநாட்டவர்கள் கிராமங்களில் உள்ளூர் மக்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டு, அவர்களைக் பொறுப்பேற்கும் குடும்பங்களில் விருந்தினர்போல பராமரிக்கப்பட்டனர். இதனால் உல்லாசப் பிரயாணிகள் உள்ளூர் மக்களின் அவலமான வாழ்க்கையை , வசதிக்குறைபாடுகளை நேரடியாகப் பார்க்க முடிந்தது. இந்தக் காலத்தில் கடத்தல் பற்றிய செய்தி வெளிநாடுகளில்தெரியவர நெருக்குதலால் சங்கடப்படும் அரசாங்கம் கடத்தல்காரருடன் பேச வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகும். கடத்தல்காரரின் பெரும்பாலான கோரிக்கைகள் சிறைகளில் இருக்கும் தமது தலைவரை விடுவிக்குமாறோ, அல்லது தமது குடியிருப்புகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தருமாறோ கேட்பதாகவேதானிருக்கும். இந்தக் கோரிக்கைகளுக்கு அரசாங்கத்தைப் பணியவைத்தபின்பு உல்லாசப் பயணிகள் விடுவிக்கப்பட்டனர். இந்தக் கடத்தல் நாடகங்களால் தமக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதை உணர்ந்த உல்லாசப் பயணிகள் கடத்தல்காரருடன் ஒத்தழைத்து வந்தனர். எட்டு வருடங்களுக்கு முன்பு நடந்த துயரச்சம்பவம் ஒன்று இந்த ஒத்துழைப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது. பயணக்கைதிகளை விடுவிக்க அனுப்பப்பட்ட இராணுவத்திற்கும் , ஆயுதக்குழுவிற்குமிடையில் நடந்த சண்டையொன்றில் சில வெளிநாட்டவரும் மரணமடைந்த பின்பு உல்லாசப்பிரயாணிகளின் வருகையில் வீழ்ச்சியேற்பட்டது.

மேலே கூறப்பட்ட தகவல்கள் யேமன் பற்றி வெளியுலகில் நிலவும் பல தவறான அபிப்பிராயங்களைத் தெளிவாக்குகின்றன. உல்லாசப்பிரயாணிகள் கடத்தப்படும்போதெல்லாம், இது இஸ்லாமியத்தீவிரவாதிகள் செயல் என்று மேற்கத்தையச் செய்தி ஊடகங்கள் எடுத்த உடனேயே சொல்லிவிடுகின்றன. அதன் பின்னணிபற்றி ஆராய்வது கிடையாது. யேமனின் பல பகுதிகள் இன்னமும் அபிவிருத்தி செய்யப்படாமல் பினதங்கிய நிலையில் காணப்படுகின்றன. மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் இப்போதும் அரசாங்கம் அல்-கைதாப் பயங்கரவாதிகளை அடக்குவதுபற்றிப் பேசிக்கொண்டிருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக வன்முறையைப் பாவித்து, அரசாங்கத்திற்கு அபிவிருத்தி பற்றி நினைவுபடுத்தும் சிறுசிறு ஆயுதக்குழுக்கள், தமது சக்தியை ஒன்றுதிரட்டி இஸ்லாமிய மத அடிப்படைவாத இயக்கமாக மாறினால் அதன் விளைவுகள் பாரதூரமாகவிருக்கும். அதைத் தான் இப்போது யேமென் அறுவடை செய்து கொண்டிருக்கிறது.

2 comments:

கிட்டுவின் மருமோ(மக)ன் said...

யேமினிகள் என்பவர்கள் லைலா மஜ்னு கதையில் வரும் மஜ்னு வழிவந்தவர்கள் ,அவர்களுக்கு உப்பும் மீனும் கொடுத்து ,உன்ன உணவும் கால்நாடைகளையும் பெற்று ஐரோப்பிய நாடுகளுக்கு வாசனை திரவிய பொருட்களை ஒட்டகத்தில் ஏற்றி ஜித்தா கடற்கரயில் கப்பலில் ஏற்றிய அடியாள் , துபாய் வணிகர்களின் கையாள் மற்றும் தூரத்து உறவினன்தான் சவூதிய அரபியர்கள் ,மெக்கா விற்கு அருகில் உள்ள Thaif மற்றும் மேற்கு மாகாண பகுதிகளில்(ஜித்தா) வாழ்ந்த பூர்விக யேமினிகள் (இஸ்லாமியர்கள் ).பதுக்கள்-கறுப்பின பூர்விக குடிகள் (இஸ்லாமியர்கள்) அரபியர்களின் லைலாக்களால் வளைக்கப்பட்ட மஜ்னூன் ஆகிவிட்டார்கள் .இஸ்லாத்தின் மண முறைப்படி ஓரளவு ஜொள்ளுவிட்ட எமினிய சொந்ததிடம் கரைந்துவிட்ட சவுதியர்கள் .பின்னர் அறிவியல் வளர்ச்சியால் பெட்ரோலியம் கிடைத்த பிறகு ,தலைநகரைஜித்தவிலிருந்து
நட்டநடு பாலைவனத்தில்(யேமினிகள் பலத்திற்கு பயந்து ) அமெரிக்க உதவியோடு நிர்மாணித்து ரியாத் என்னபெயரிட்டு வாழ்கின்றனர் .ஈரான்-ஈராக் போருக்கு பலியிடப்பட்டது எமினி (இஸ்லாமிய) உறவினர்களே மேலோங்கி வாழ்ந்த மேற்கு மாகானத்திலிருந்து துடைக்கப்பட்டர்கள் .யேமினிகள் ,சவுதியர்கள் இடம் அண்டிவாழ வில்லை,இருவவரும் மாமன் மச்சான்களே!(அரபியர்கள் ),இவர்களை பிரித்தது அறிவியலே (பெட்ரோல் அரசியலே) .ஆகவே அறிவியல்த்தான் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் .
நம்மூரில் காதல் தலைவன் மஜ்னு ,தற்போதைய சவுதியில் மஜ்னூன் (பைத்தியம்).

களத்திலிருந்து
கிட்டுவின் மருமோன் (மருமகன்)

Kalaiyarasan said...

Kituvin, புதிய தகவல், அறியத் தந்தமைக்கு நன்றி.