Tuesday, October 14, 2008

காஸ்ட்ரோ பார்வையில் அமெரிக்க நிதி நெருக்கடி

சமூகங்களுக்கும், நாடுகளுக்குமிடையிலான வர்த்தகமானது, மனிதர் உற்பத்தி செய்த பண்டங்களினதும், சேவைகளினதும் பரிமாற்றமாக உள்ளது. உற்பத்தி சாதனங்களின் சொந்தக்காரர்கள் லாபத்தையும் தமக்கே உரித்தாக்கி கொள்கின்றனர். முதலாளித்துவ தேசத்தின் தலைவர்களாக வீற்றிருக்கும் இந்த வர்க்கமானது, தாம் வணங்கும் தெய்வமான சந்தையின் மூலம் தமது வளத்தை பெருக்கிக் கொள்கின்றது.

ஒவ்வொரு நாட்டிலும் பலமானதிற்கும், பலவீனமானதிற்குமிடையில் போட்டி நிலவுகின்றது. தேவையான அளவு உணவு உள்ள, பாடசாலை செல்லக்கூடிய, எழுத வாசிக்க தெரிந்த, அனுபவங்களை சேகரித்துக் கொண்ட, அதிக வளங்களைக் கொண்ட வசதி படைத்தவர்கள் ஒரு புறம். இந்த வசதி எல்லாம் கிடைக்காத மக்கள் மறு புறம். ஏழை-பணக்கார நாடுகளுக்கு இடையேயான வித்தியாசமும் இது போன்றதே.


ஐரோப்பிய வெள்ளையர்கள் தமது கனவுகளுடனும், பேரவா கொண்டும் ஸ்தாபித்த அதி உயர் முதலாளித்துவ தேசம்(அமெரிக்கா) இன்று நெருக்கடிக்குள் சிக்கியிருக்கிறது. ஆனால் இது குறிப்பிட்ட வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் சாதாரண நெருக்கடியல்ல. உலகம் முழுவதும் (அமெரிக்க) மாதிரி வளர்ச்சியை வரித்துக் கொண்ட காலத்தில் இருந்து எழுந்த மிக மோசமான நெருக்கடியாகும். அபிவிருத்தியடைந்த முதலாளித்துவத்தின் தற்கால நெருக்கடி, ஒரு சில நாட்களில் ஏகாதிபத்தியம் அதன் தலைமையை மாற்றிக்கொள்ள போகும் காலகட்டத்தில் வந்துள்ளது.

ஐக்கிய அமெரிக்காவில் நிறவாதம் மிக ஆழமாக வேரூன்றியுள்ளது. ஒரு கறுப்பன் தனது மனைவி பிள்ளைகளுடன் வெள்ளை மாளிகையில் குடியேறப்போவதை லட்சக்கணக்கான வெள்ளையின மனங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. "வெள்ளை" மாளிகை என்று மிகச் சரியாகத் தான் பெயரிட்டுள்ளனர். மார்டின் லூதர் கிங், மல்கம் எக்ஸ் போன்று நீதிக்காக பாடுபட்டவர்களுக்கு கிட்டியது போல, ஜனநாயக கட்சி வேட்பாளர் அந்த விதிக்குள் மாட்டாதது ஒரு அற்புதம் தான்.


பதவி விலகும் ஜனாதிபதி புஷ், $10.3 டிரில்லியன் கடன் சுமையை பொது மக்களின் முதுகின் மீது ஏற்றி விட்டு செல்கிறார். தனது எட்டு வருட பதவிக்காலத்தில், புஷ் இரட்டிப்பாக்கிய கடன் தொகையை கணக்கிடுவதாயின்; ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வேலை செய்யும் ஒருவர், ஒரு நிமிடத்திற்கு நூறு டாலர் தாளாக எண்ணுவாராகில், வருடம் 300 நாட்களாக வேலை செய்தால், 715,000 வருடங்களுக்கு பின்னர் தான் முழுத் தொகையையும் எண்ணி முடிப்பார்.
தற்போது புஷ் நிர்வாகம் சோஷலிசத்திற்கு வழங்கும் பங்களிப்பு பற்றி நாம் அதிசயப்படலாம். ஆனால் நாம் அது போன்ற எந்த மாயைக்குள்ளும் சிக்கக்கூடாது. வங்கி நடைமுறைகள் யாவும் வழமைக்கு திரும்பிய பின்னர், ஏகாதிபத்தியவாதிகள் வங்கிகளை மீண்டும் தனியார் நிறுவனங்களுக்கு விற்று விடுவார்கள்.


எந்தவொரு சமூக கட்டமைப்பிலும் முதலாளித்துவம் தன்னை மறுவார்ப்பு செய்து கொள்ளும், ஏனெனில் அது மனித அகத்தூண்டுதலிலும், தன்முனைப்பிலுமே கட்டப்பட்டுள்ளது. மனித சமூகம் இந்த முரண்பாட்டிலிருந்து விடுபடுவதைத் தவிர, தப்புவதற்கு வேறு வழி இல்லை. கியூபாவில் பங்குச் சந்தை இல்லை. சந்தேகத்திற்கிடமின்றி நாம் பகுத்தாய்ந்து, சோஷலிச வழியில் எமது அபிவிருத்திக்கான நிதியை செலவிடுவோம்.


தற்போதைய நெருக்கடியும், அமெரிக்க நிர்வாகம் தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ள கொண்டுவரும் இரக்கமற்ற அளவீடுகளும் ஏற்படுத்தப்போவது; பணவீக்கத்தையும், தேசிய நாணய மதிப்புக் குறைவையும், இன்னும் அதிக வருந்த வைக்கும் சந்தை இழப்புகளையும், ஏற்றுமதிக்கான குறைந்த விலையையும், சமமற்ற பரிமாற்றத்தையும் ஆகும். அதே நேரம், அவர்கள் மக்கள் உண்மையை புரிந்து கொள்ள வைப்பதுடன், மக்களிடையே அதிக விழிப்புணர்வையும், இன்னும் கிளர்ச்சியையும், புரட்சியையும் கூட உருவாக்குவார்கள்.
இந்த நெருக்கடி எவ்வாறு விருத்தியடையப் போகின்றது என்பதையும், இன்னும் சில நாட்களில் ஐக்கிய அமெரிக்காவில் என்ன நடக்கப் போகின்றது என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

-Fidel Castro Ruz, October 11, 2008

(நன்றி, "கிரான்மா" வார இதழ், கியூபா )
THE LAW OF THE JUNGLE
(சுருக்கப்பட்ட தமிழாக்கம்)
________________________________________

Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.


Burned Feeds for kalaiy

2 comments:

மு. மயூரன் said...

மிக்க நன்றி கலையரசன்.

தொடர்ச்சியாக வலைப்பதிவிலும் தமிழரங்கத்தினூடாகவும் உங்களைப்படித்துவந்தாலும் அவ்வப்போது பின்னூட்டமிட்டு உங்களை உற்சாகப்படுத்த எல்லா நேரங்களிலும் முடிவதில்லை.

இரு சிறிய ஆலோசனைகள்

உங்கள் பாணி கட்டுரைகளுக்கு மூல உசாத்துணைகளுக்கான தொடுப்புக்கள் மிகவும் அவசியமானது.

எடுத்துக்காட்டாக இக்கட்டுரைக்கு, காஸ்ட்ரோவின் மூல உரைக்கான தொடுப்பு தரப்பட்டிருக்க வேண்டும்.

மற்றது பின்னூட்டப்பெட்டியிலிருக்கும் word verification அவ்வளவு அவசியமில்லாதுபோனால் எடுத்து விடுங்கள்.

Kalaiyarasan said...

உங்கள் ஆதரவுக்கும், ஆலோசனைக்கும் நன்றி, மாயூரன். தாங்கள் சுட்டிக்காட்டிய குறையை நிவர்த்தி செய்துள்ளேன். மேற்கொண்டு இனிவரும் கட்டுரைகளுக்கு தேவைப்படும் மூலத்தரவுகளுக்கான தொடுப்புகளை குறிப்பிடுகிறேன்.