Sunday, October 03, 2021

யாழ் வட்டுக்கோட்டையில் சாதிவெறித் தாக்குதல்!

 

செப்டம்பர் 19, இரவு, யாழ். வட்டுக்கோட்டையில் 20 - 30 பேர்களைக் கொண்ட ஒரு வன்முறைக் கும்பல் அப்பாவித் தமிழ் மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியது. இதுவரை காவல்துறை தாக்குதலில் சம்பந்தப்பட்ட ஒருவரை தவிர மற்றவர்களை கைது செய்ய படவில்லை. இத்தனைக்கும் அனைத்து குற்றவாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இது நடந்து 12 நாட்கள் ஆகியும், இன்று வரையில் எந்தவொரு தமிழ் ஊடகத்திலும் செய்தி வெளிவரவில்லை. இத்தனைக்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து 4 தமிழ் தினசரிப் பத்திரிகைகள் வெளிவருகின்றன. இரண்டு தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் இயங்குகின்றன.

இந்த தகவல் ஊடகங்களில் வெளிவராத காரணம் என்ன? அரசின் செய்தித் தணிக்கையா? பின்னணியில் சிங்கள பௌத்த பேரினவாத அடக்குமுறை இருக்கிறதா? ஏன் இதைப் பற்றி எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் வாய் திறக்கவில்லை? எந்தவொரு தமிழ்தேசிய கட்சியும் கண்டனம் தெரிவிக்கவில்லை?

காரணம்: அந்த வன்முறைக் கும்பல் வெள்ளாள ஆதிக்க சாதியை சேர்ந்தவர்கள். அங்கு நடந்தது ஒரு சாதிவெறித் தாக்குதல்.




**********

இந்த சம்பவம் குறித்து விதை குழுமம் தொகுத்து வழங்கிய அறிக்கை:
 
வட்டுக்கோட்டை சாதி வெறித்தாக்குதல் பற்றிய அறிக்கை
https://vithaikulumam.com/2021/09/30/30092021/?fbclid=IwAR1KfIljdzXfQ7uY0QDBKJYKLMbnqnYbhx_E5i_dtlJeGxAfSelwfuUlSU8

வட்டுக்கோட்டை தெற்குப் பகுதியில் உள்ள முதலி கோயிலடிக்குப் பக்கத்தில் அரசடி என்ற கிராமத்தில் கடந்த 19.09.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த சாதி வெறித் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை விதை குழுமச் செயற்பாட்டாளர்கள், நேரில் சென்று சந்தித்து உரையாடிய விடயங்களை இங்கு தொகுத்திருக்கிறோம். கைகள் வெட்டப்பட்டிருக்கும் இன்பநாதன் அவர்களின் வீட்டில் அந்தப் பிரதேச மக்களைச் சந்தித்தோம். பொலிஸ் ஒருவர் அந்த வீட்டுக்காரர்களின் பாதுகாப்பிற்காக வெளியிலிருந்தார்.

முதியவரும் இளைஞரும் ’முதல்ல தடியள் பொல்லுகளாலை அடிபட்டாங்கள், சுள்ளித்தடியோடை நிண்டம், பிறகு இப்ப வாளோடை வாறாங்கள், சுள்ளித்தடியோடை நிக்கிறம், இன்னும் கொஞ்சக்காலம் போக துவக்காலை சுடுவாங்கள், அப்பவும் சுள்ளித்தடியோடதான் நிக்கப்போறம்’. வெட்டப்பட்ட கையும் விரல்களும் மஞ்சள் நிற துணியில் ஏணைக்குள் கிடக்குமாறு அசைய இன்பநாதன் பேசிக்கொண்டிருந்தார். கிழிக்கப்பட்ட கையும் விரலுமாக அதன் வலியோடு அதே நேரம் உணர்ச்சிவசப்படாத உரத்த குரலோடு அவருடைய வார்த்தைகளிருந்தன. “பிள்ளையளை வேலைக்கு விட்டிட்டு உயிரைக்கையில பிடிச்சுக்கொண்டு இருக்க வேண்டிக்கிடக்கு. சும்மா வாற பெடியளை மறிச்சு, காடுகளுக்கை கூட்டிக்கொண்டுபோய் வச்சு அடிப்பாங்கள். பந்தடிக்கப்போற பெடியள், பட்டம் விடப்போன பெடியள் எண்டு எல்லாரையும் மறிச்சு ‘நளவனெண்டு’ சொல்லி அடிக்கிறாங்கள். நாங்கள் சண்டைக்குப் போகேலாதுதானே, அவங்கள் வெளிநாட்டுக்காசு; வேலைக்கு போகத் தேவையில்லை. குடிச்சிட்டு என்னவும் செய்யலாம். நாங்கள் அப்பிடியில்லை, நாங்கள் ஒவ்வொரு நாளும் வேலைக்குப் போகோனும். எங்களாலை சண்டை பிடிச்சுக்கொண்டே இருக்கேலாது.

அவங்களுக்கு நளவரைக் கொல்லோனும். இஞ்சை எங்களுக்கு மட்டுமில்லை செம்பாட்டன் தோட்டமெண்டால் அப்பிடி, மூளாயெண்டால் அப்பிடி, தொல்புரமெண்டால் அப்படி, சுழிபுரம் எண்டால் அப்பிடி, எல்லா இடமும் அப்பிடித்தான். தொடந்து இது நடந்துகொண்டிருக்கு, இண்டைக்கு நேற்றில்லை பல வருசமா இது நடந்துகொண்டுதானிருக்கு. எனக்குத் தனிய எண்டால் என்ர பிரச்சினைய நான் பாப்பன், இஞ்ச வா எனக்கடியப்பா எண்டு சொல்லுவன், ஆனால் எனக்கு மட்டுமில்லைத்தானே இஞ்ச நடக்கிறது. உந்த வேலித் தகரத்தப் பாருங்கோ. அந்தப்பக்கம் வேளாமாக்களின்ர வேலி, இது எங்கடை வேலி, வெறியிலை அடிக்கிறவன் அந்தப்பக்கம் இருக்கிறதையுமெல்லோ சேர்த்து அடிச்சுப்பிரிச்சிருப்பான். பாருங்கோ, அவங்கட ஆக்களின்ர தகரத்திலை ஒரு காயமிருக்கோ?

நாங்கள் இஞ்ச கிடங்குக்க இருக்கிற எலி மாதிரி. அவங்கள் எங்களைச்சுத்தி இருக்கிறாங்கள், வெக்கத்தை விட்டுச்சொல்லுறன் போற வாற எண்டாலே பயம். எங்கடையள் வேலைக்குபோய் பின்னேரம் ஆத்துப்பறந்து, செத்துப்பிழைச்சுத்தானுங்கோ வரும் வேலையாலை. அப்ப அதிலை மறிச்சு அடிப்பாங்கள், நொட்டைக் காரணங்கள் சொல்லுவாங்கள், வேலிலை குளை முறிச்சனியோ, மாங்காய் ஆஞ்சனியோ எண்டு அடிப்பாங்கள், பிள்ளையள் மூஞ்சை முகரை எல்லாம் வீங்கிப்போய் வருங்கள். ஏன் அடிச்சனி எண்டு போய்க் கேட்டால், பெட்டையளுக்கு விசில் அடிச்சவங்கள் எண்டு சொல்லுவாங்கள். வேலிக்குள்ளால எட்டிப் பார்த்தவங்கள், களை முறிச்சவங்கள் எண்டுவாங்கள். அவங்களுக்கு எங்கடை ’சாவுக்குச்சாட்டு வேணும்’ அவ்வளவுதான். கோயில், குளம், திருவிழாக்கள் எண்டால் நல்லா நடக்கும். அங்கையும் அடிபிடிதான். அங்கையும் எங்கடை பெடியளுக்குத்தான் அடிப்பாங்கள், குடிச்சிட்டு மட்டும் அடிபடுறவங்கள் தங்கடை பெடியளுக்கும் சேர்த்துத்தானே அடிப்பாங்கள், இவங்கள் தேடிவந்து ‘நளவனெண்டு’ சொல்லி அடிக்கிறாங்கள் எண்டால், உது என்ன?

என்ர மருமோன் அண்டைக்கு ஒருநாள் சும்மா வந்தவன், அண்டைக்கு அவனை கத்தியாலை குத்தக் கலைச்சுக்கொண்டு வந்தாங்கள், மனிசி ஓடிப்போய் அவனைக் கட்டிப்பிடிக்காட்டி குத்தியிருப்பாங்கள். தங்கடை வெறிக்கு டேஸ்ட் நாங்கள்தான், ஒரு சவாரிக்குப்போனால் சண்டை, திருவிழாக்குப் போனால் சண்டை. அம்பது வயசு எனக்கு, கோட்சும் தெரியா பொலிசும் தெரியாது, ஆனால் உவங்களுக்கு நூறு கேஸ் கிடக்கு பொலிசிலை, உவங்கள் கொல்லுவாங்கள், எல்லாத்தையும் காசாலை உச்சிப்போடலாம் எண்டு தைரியம் உவங்களுக்கு”

இளைஞர் ஒருவர் அன்றைக்கு சம்பவத்தை விளக்கத்தொடங்கினார்.

அண்டைக்கு நானும் இவனும் வேலைக்குப்போய்ட்டு சைக்கிள்ளை வந்து கொண்டிருந்தனாங்கள், பேபிகடை முடக்கிலை திரும்பும்போது அவங்கள் நிண்டு பாத்தவங்கள், நாங்கள் போக மோட்டபைக்கில பின்னாலை வந்து தள்ளிவிட்டாங்கள். நாங்கள் தடுமாறி கிழுவம் வேலிக்கும் போஸ்ட்டுக்கும் நடுவில போய் விழுந்திட்டம், எழும்பி ஏன் அண்ணை தள்ளின்னீங்கள் எண்டு கேட்டம். அதுக்கு ‘எங்கையடா பம்மிப்பம்மிப் போறீங்கள், நீங்களோ வேலிலை கள்ளக் குளை முறிச்ச’ எண்டு கேட்டாங்கள். நாங்கள் ஏன் முறிக்கிறம், நீங்கள் கண்டனீங்களோ நாங்கள் முறிச்சதை எண்டு கேட்டம். குளை முறிக்கிறது நீங்கள் எண்டு நினைச்சுத் தள்ளின்னாங்கள் எண்டிச்சினம். அதுக்கேன் தள்ளுவான் கேட்டிருக்கலாம்தானே, நாங்களேன் குளை முறிக்கிறம் நாங்கள் என்ன விசரோ எண்டு கேட்டம். சரி விடுங்கோ நாங்கள் போறம் எண்டு வெளிக்கிட சைக்கிளை மறிச்சு முன் சில்லைத் தூக்கித் தூக்கிக் குத்திக்கொண்டு நிக்கிறார். ஆளுக்கு வெறி. நிக்கேலாத வெறி, நான் அப்பாட்டை அடிச்சுச் சொன்னன் இப்பிடி மறிக்கிறாங்கள் எண்டு.”

மகன்கள் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி இருப்பதைத் தெரிந்துகொண்டு இன்பநாதன் விரைந்து போயிருக்கிறார்.

‘’பிள்ளையள விடுங்கோ, உங்களுக்குத் தெரிஞ்ச பிள்ளையள்தானே எண்டு நாயிலும் கேவலமாக் கெஞ்சின்னான். ஒருமாதிரிப் பிள்ளையளைக் கொண்டு வாறதுக்குள்ள அவங்கடை ஆக்கள் நிறையப்பேர் வந்திட்டாங்கள். நான் கெஞ்சிக் கூத்தாடிச் சமாளிச்சுக் கொண்டிருக்க, அவங்கள்ள ஒருத்தன் கெல்மெட்ட களட்டி அடிக்க வந்திட்டான். நான் குறுக்க விழுந்து மறிச்சு சமாளிச்சு பிள்ளையளைக் கொண்டு வந்து சேர்க்கிறதுக்குள்ள, மோட்டச் சைக்கிளாலை கொண்டுவந்து சைக்கிள்ளை ஏத்திப்போட்டான். மகன் என்னை பிடிச்சு அங்காலை எறியாட்டி நான் துலஞ்சிருப்பன்.

என்னத்துக்காக இடிச்சனியள் எண்டு நாங்கள் கேக்கப் போக, ரெண்டு பேர் ஆட்டோவிலை வந்து ‘என்னதுக்கடா நளவா, பீனாண்டியள் இஞ்சாலை வாறியள்’ எண்டு கேட்டுக்கொண்டு பெரிய கல்லாலை எறிய வெளிக்கிட நாங்கள் ஓடி வந்திட்டம். அவங்கள் ரோட்டிலை லைட்ட நிப்பாட்டிட்டு எங்கட பக்கம் வாறாங்கள்.” என்றார் இளைஞர். அப்போதுதான் இன்பநாதன் அந்த இருளில் பளபளப்பாகத் தூக்கிக் காட்டிய வாளைப் பார்த்த சம்பவத்தைப் பற்றி விபரிக்கத் தொடங்கினார்.

“எனக்கு விளங்கீட்டு இவங்கள் வாளோடதான் வாறாங்கள் எண்டு, நான் வாளைக் கண்டிட்டன். அவன் வாளைத் தூக்கிக் காட்டுறான். டேய் பு…. யில் நளமே இந்தா பத்துத்தலை உறுளுமடா எண்டுகொண்டு வாறான். வாள் பளிச் பளிச்செண்டு மின்னுது. கதைச்சு சமாளிக்கத்தானே வேணும் எண்டு, முன்னாலை போனன், அண்ணை இஞ்ச வாவண்ணை கதைப்பம் எண்டு நான் கேட்டு முடிக்க முதல் கையுக்கு வெட்டிப் போட்டான், விரலும் பறந்து இந்த வெட்டும் விழுந்திட்டு. நான் பைப்ப எடுத்து விசுக்காட்டி அண்டைக்கு என்ர தலை போயிருக்கும். பெடியனுக்கு வெட்ட ஓங்கப் பெடியன் தகரத்தாலை விழுந்து அங்காலை ஓடிட்டான். அதுக்குப் பிறகு அடி நடக்குது, சும்மா சறாம் புறாமெண்டு தகரங்களை உந்த நீட்டுக்கு வேலியளை வெட்டி விழுத்திக்கொண்டு போறாங்கள். வேலியைக் கொழுத்தடா, வீட்டை கொழுத்தடா எண்டு கத்துறாங்கள்.

திருவிழா, சவாரி போன்ற நிகழ்வுகளிலும், வீதிகளில் போகும் போதும் இளைஞர்களுக்கு அடிப்பது துன்புறுத்துவது முதலான கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருந்த கிராம மக்கள், தீடீரென இன்பநாதன் வாளால் வெட்டப்பட்டு, ‘நளவருடைய’ தகர வேலிகளும், கதவுகளும் நொறுக்கப்படுமென்பதையும் எதிர்பார்த்திருக்கவில்லை. இருட்டுக்குள் அவர்கள் பதுங்க, இருபது நிமிடங்களுக்கு மேல், ஆமியும் இயக்கமும் சண்டையில் ஒரு இடத்தைக் ‘கட்டுப்பாட்டில்’ வைத்திருப்பது போல் அவ்விடத்தை வைத்துக்கொண்டு ஆதிக்க வெள்ளாளர்கள் ஆடிய சதிரை இன்பநாதன் அவர்கள் விபரிக்க விபரிக்க குரல் நடுங்கியது.

“அவங்களுக்கு சண்டை செய்து பழக்கம் தானே, அவங்களிட்ட வாள் இருக்கு எங்களிட்டப் பாளைக்கத்தி கிடக்கு, அது எங்கடை தொழில் செய்யிற ஆயுதம், அதுக்கு உவங்கள் பயம், ஆனால் நாங்கள் தொழிற்செய்யிற ஆய்தத்தால குத்துவெட்டுக்குப் போமாட்டம். அதோட எங்கள் எல்லாரிட்டையும் ஆயுதம் இல்லை. ஒவ்வொருத்தர் ஒவ்வொரு தொழிற் செய்யிறம்தானே. அவங்களுக்கு நாங்கள் அடங்கி இருக்கோணும் எண்டு நினைக்கிறாங்கள். ஆனா எங்களுக்குச் சண்டைக்கு விருப்பமில்லை. எங்களை எல்லாருக்கும் நல்லாவே தெரியும். பழக்கமான முகங்கள்தான். அடிக்கிறவங்கள்தான். ஆனால் இப்பிடி வெட்டிற அளவுக்கு போவாங்கள் எண்டு நாங்கள் நினைக்கேல்லை. பிள்ளைத்தாச்சி பிள்ளையள் ஒருபக்கம், குழந்தைப்பிள்ளையள் ஒருபக்கம், குமர் பிள்ளையள் ஒருபக்கம் ஓடிப் பதுங்குதுகள், கத்துதுகள், பிள்ளைத் தாச்சிப் பிள்ளைய வேலிக்காலை தள்ளி ஓட விட்டம்.

கல்லுமழை. அப்பிடியே ஒரு பத்து நிமிசம் கடகத்துக்க கல்லுக் கொண்டு வந்து எறிஞ்சாங்கள். மழை மாதிரிக் கல்லு வருது. இந்தக் கொட்டிலெல்லாம் சரி. எல்லாரும் வீட்டுக்குள்ள ஓடிட்டம். அவங்கள் சண்டேலை நல்லா ஊறினவங்கள் எல்லாரும் கெல்மெட் போட்டுத்தான் வருவாங்கள். அண்டைக்கு ஓடேல்ல எண்டா பெடியளை வெட்டி இருப்பாங்கள். அந்தக் கதவு, வேலிகளை என்ன செய்திருக்கிறாங்கள் பாருங்கோ. எங்களுக்குச் சண்டேலை விருப்பமில்லை. அவங்களுக்கு அதுதான் வேணும். நாங்கள் ஒரு வழக்கெடுக்கேலா, எங்களுக்கு ஒரு பிரச்சினையெண்டு ஒரு இடத்த போகேலா, ஜனநாயகம், ஜனநாயகம் எண்டுறாங்களே, ஜனநாயகம் எண்டால் என்ன?”

இன்பநாதனின் நினைவு என்பது அவருக்கு விபரம் தெரிந்த இருபத்தைந்து வருடங்களில் இருந்து பின்னிக்கொண்டு மேலெழுந்து வெட்டப்பட்ட அவருடைய கைவரை ஏறுகின்றது. ஒவ்வொரு முறையும் தாக்கப்பட்ட அவருடைய முன்னோர்களை அவர் நேரடியாக நினைவுகூரவில்லை. அவருக்கு அவர்களை ஞாபகம் இருக்குமோ தெரியாது, ஆனால் அடிகளும், கொடுமைகளும் ஞாபகத்தில் இறுகிப்போயிருந்தது. முன்னோரைக்காட்டிலும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளே பெரிய ஞாபகமாகவிருந்தது.

இரண்டு தாய்மார்கள்

சம்பவம் நடந்து பத்து நாட்களாகிவிட்டது. ஒரு கெட்டித்து இறுகிய கோவமும், இழந்து விட்ட நிம்மதியின் நடுக்கமும் அவர்களுக்குள் பரவியிருந்தது. பொருமி வெடித்த கோபமும், கெலித்த உடலுமாக அவர்கள் பேசினார்கள். அவை அங்கிருந்த ஆண்களைக் காட்டிலும் செறிந்து, உறுதி பெற்றிருந்தன. ’இதேமாரி எங்கடையாக்கள் அங்க போய் செய்திருந்தால் இண்டைக்கு பொலிஸ் வந்து எங்கடை வீட்டை நிண்டு எங்களைப் பிடிச்சு உலுப்பி இருக்கும். எங்க புரிசனக் கொண்டா, பிள்ளையைக் கொண்டா எண்டு. இதெல்லாம் இவ்வளவு காலமும் இப்பிடியே நடந்துகொண்டு இருக்கு, இண்டைக்கு நேற்றே இது நடக்குது? நீதி நியாயத்துக்கு இந்த நாட்டிலை இடமே இல்லை. இப்ப லொக்டவுன் எடுக்க பள்ளிகூடம் தொடங்கப் போகுது, பிள்ளையளை எப்பிடித் தனிய விடுறது. வேலையள் தொடங்கப்போகுது, ஆனால் எங்கட பிள்ளையளுக்கு ஆர் உத்தரவாதம், இது இதோட முடிஞ்சிடும் எண்டு விட்டிட்டு இருக்கேலுமோ? பாதுகாப்பிருக்குமோ? இதுகென்ன முடிவு? ஆரிட்டக் கேக்கிறது?

சும்மா நிண்ட எங்கட அம்பைய்யா பாவம், அண்டைக்கு நடந்த சம்பவத்திலை அடிச்சுப்போட்டாங்கள், நெத்திலை குத்தி இருக்கு, ஏலாத மனிசன், இப்ப புத்தி மாறி நிக்குது. வயசு போன ஆள் என்ன கேட்டது. அண்டைக்கு பொம்பிளையள ஓடியிருக்காட்டி துண்டு விழுந்திருக்கும், நிண்டிருந்தால் கட்டாயம் வெட்டி இருப்பாங்கள். நாங்கள் ரெண்டுபேரும் போய்க் கதைச்சனாங்கள் அவையளோடை, சின்னப் பெடியங்கள் வந்த இடத்தை ஏதோ தெரியாமச் செய்திருப்பாங்கள். நீங்கள் மன்னிச்சுக் கொள்ளுங்கோ தம்பியவை இந்தப்பிரச்சினை வேண்டாம், பேசாம விடுங்கோ அவையளும் போகட்டும் நீங்களும் போங்கோ எண்டு கெஞ்சிப் பாத்தனாங்கள். எங்களை உங்களுக்குத் தெரியும்தானே, எண்டு மன்னிப்பெல்லாம் கேட்டுக் கெஞ்சிப்போட்டு வந்தனாங்கள். வந்தால் பிறகுதான் உது நடந்தது.

எனக்கு நல்லாத் தெரியும் அவங்கள் எங்கடை பொம்பிளையளை மதிக்கிறேல்ல, எங்கடையாக்கள் எண்டாலே அவைக்கு இழக்காரம் இருக்கிது. எனக்கு உதுகள் பிடியாது. என்ர வீட்டு மனிசனும் என்னை எடி எண்டு கதைக்கிறேல்ல, மரியாதையாத்தான் கதைக்கிறது, ஆனால் அவை எங்கள கேவலமா வாங்கடி போங்கடி எண்டு கதைக்கிறாங்கள். இன்னும் என்னென்னவோ சொல்லக் கூடாததெல்லாம் சொன்னாங்கள். நீங்கள் ஆர்? தமிழர் தானே. நீங்களே இப்பிடிக்கேட்டால், அடுத்தவன் நாளைக்கு வந்து எங்களை என்ன செய்திட்டு போவான். நீங்கள் இப்பிடிச் செய்தால். சிங்களவன் செய்வான். அவன் அந்நியன். ஆனா இவங்கள் நிக்கிறாங்கள் பத்து கழுத்த விழுத்துவம், வீடெல்லாம் கொழுத்துவம் எண்டு. அப்ப நாங்கள் எல்லாம் ஆர்?

கேற்றை உடைக்கிறாங்கள், வெளியிலை கத்துறாங்கள் நாங்கள் பொம்பிள்ளைப் பிள்ளையள், குழந்தையள வச்சுக்கொண்டு இருக்கிறம், லைட்ட அணைச்சுப்போட்டு அறைக்க வச்சுப்பூட்டிக் கொண்டு கிடக்கிறம். ‘நான் ஆண்டவரைத்தான் மண்டாடின்னான். ஐய்யோ உள்ளுக்க வந்திடக்கூடாதெண்டு’ எங்கடை கதவென்ன இரும்போ ஐயா, இதைக் கொத்திட்டுவரக் கனநேரமோ எடுக்கும்? நான் பின்வேலியைக் காலாலை உதஞ்சு, விழுத்தி என்ர பிள்ளையளைக் காப்பாற்றின்னான். குமர்ப் பிள்ளையள் என்ர பிள்ளையள், அண்டைக்கு என்ன பாடுபட்டிருக்கிங்கள் சொல்லுங்கோ?

என்ர மனிசன் ஒரு சோலிக்கும் போமாட்டுது, ஏன் சும்மா பிரச்சினையெண்டு இரவிலை அம்மா வீட்டிலை போய்தான் எல்லாரும் படுக்கிற. இப்ப கூட்டம் கூட்டமாத் தான் எல்லாரும் படுக்கிறது. அண்டைக்கு எங்கட ஆக்களிட்ட ஒருத்தரிட்டையும் ஆயுதமில்லை, வெறுங்கையோட நிண்டவை. இவங்கள் இப்பிடிச்செய்வாங்கள் எண்டு ஆர் எதிர்பார்த்த? தம்பி நாங்கள் என்னெண்டாலும் செய்யிறம் இதுக்கொரு தீர்க்கமான முடிவு எடுத்துத்தாங்கோ, வாறனியள் வந்து சும்மா கதைச்சுப்போட்டுப் போற மாதிரி இருக்கக்கூடாது. திரும்பவும் இதுக்க இதுமாதிரி ஒரு பிரச்சினை வருமெண்டால் அதுக்குப்பிறகு இஞ்ச ஒருத்தரும் வரக்கூடாது, சொல்லிப்போட்டன். பொம்பிளையள் விடவும் மாட்டம் வர.

இரண்டு இளைஞர்கள்

அடிகளையும், சாதிவசைகளையும், சமாளித்துச் சமாளித்துச் சோர்ந்துபோன அவர்களுடைய அன்றாடம் முகங்களை விடியவிடாமல் செய்திருந்தது. “பொலிஸ் கோட், கேஸ் வழக்கு ஒண்டும் நிக்காது. இப்ப கூடக் கோட்டுக்குப் போயிருக்குத்தான், ஆனால் என்ன நடக்குமோ எப்பிடி முடியுமோ எண்டு எங்களுக்கு நம்பிக்கையில்லை. சடஞ்சு போடுவாங்கள் எண்டுதான் பயமாக் கிடக்கு. எங்கடை பெடியள் அடிச்சா திருப்பி அடிக்கோணும் தடுக்கோணும் எண்டுதான் நினைக்கிறாங்களே தவிர உண்மையா சண்டைக்கு போற மனநிலையிலை ஒருத்தரும் இல்லை.

நிறையப்பேருக்கு அடிச்சிருக்கிறாங்கள். ஆனால் நாங்கள் சமாளிச்சுத்தான் போக வேணும். இல்லாட்டி நாங்கள் நாளைக்கு வேலைக்குப் போகேலா. அந்தக் காலத்திலை இருந்து அவங்களுக்கு நாங்கள்தான் வேலைக்குப் போறனாங்கள். நாங்கள் குடும்பத்தைப் பாக்க உழைக்கோணும், ஆனால் அவங்களுக்கு அப்பிடியில்லை. வெளிநாட்டுக்காசு கிடக்கு. அவைக்கு ஜெயிலுக்கு போறதும் வெளியிலை வாறதும் ஒரு பிரச்சினையில்லை. அவங்கள் நிறையப் பேருக்கு அடிச்சிருக்கிறாங்கள். பைக்கிலை போகேக்க கலைச்சுக்கொண்டு வருவாங்கள், திருவிழா, சவாரி எண்டால் சண்டை, அடி. எங்கடையாக்கள் கொஞ்சம் படிச்சு உத்தியோகம் அது இது எண்டு போனால் ஒரு இழக்காரம், எரிச்சல் ‘கொம்மா எங்கட வீட்டிலைதான் வேலை செஞ்சவா’ எண்டு நக்கல்.

பள்ளிக்கூடங்களிலை எங்கடை பிள்ளையள் படிக்கிறேல்ல எண்டு கொம்பிளைண்ட். ஏனெண்டு போய்ப் பாத்தால், எங்கடை பிள்ளையள் ஒழுங்கா வாறேல்ல எண்டினம். நாங்கள் ஏன் பிள்ளையள் போறேல்ல எண்டு பாத்தால், பிள்ளையள் ஐஞ்சு நிமிசம் பிந்திப்போனாலும் வீட்ட போய் தாய் தேப்பனைக் கூட்டிக்கொண்டு வாங்கோ எண்டுவாங்கள், பிள்ளையள் வீட்ட வந்தால் தாய் தேப்பன் கூலி வேலை, வயல் வேலை எண்டு போய்டும், பிள்ளையள் அவை இல்லாம எப்பிடிப்போறதெண்டு பள்ளிக்கூடம் போகாம நிண்டிடும். இதுதான் நடக்கும். இஞ்ச மட்டுமில்லை சுத்தி இருக்கிற துணைவி, மூளாய், செம்பரட்டை, பொன்னாலை எல்லா இடத்திலையும் இதே கோலம் தான். கம்பசுக்கு போய், அரசாங்க வேலையள் கிடைக்கிற பெடியள், பிள்ளையள் கொஞ்ச நாளிலையே இஞ்சாலை இருக்கேலா எண்டு ஊரை விட்டு போயிடுவினம். அதனால ஊர் அப்பிடியேதான் கிடக்கு.”

இவ் உரையாடலின் போது அந்த இரவின் சூட்டை உணர முடிந்தது. யாரை யார் காப்பாற்றுவது என்று திணறியபடி வாழ்ந்து கொண்டிருகிறார்கள். இரவில் ஏதாவது நடந்தாலும் என்று உறவினர்கள் சேர்ந்து தங்குகிறார்கள். இவ்வளவு கொடூரமான ஒரு சாதி வெறித் தாக்குதல் எமது சமூகத்தின் மனச்சாட்சியை உலுக்கவில்லை. இது சும்மா குழுச் சண்டை என்பதாகச் சித்தரித்துக் கடந்து கொண்டிருக்கிறோம். வெள்ளாள சாதியைச் சேர்ந்த சிலர் குடிப்பதற்கும் கொண்டாட்டங்களுக்குமாக அரசடியில் ஒரு வீட்டை வைத்திருக்கிறார்கள். அவர்கள் குடித்திருக்கும் போது கிடைக்கும் நளவர் சாதியைச் சேர்ந்த இளைஞர்களையும் வேறு வெளியாட்களையும் அடிப்பது தான் அவர்களின் பொழுதுபோக்கு. எந்தக் காரணங்களும் இன்றித் தாக்குவார்கள். வெள்ளாள சாதியைச் சேர்ந்த ஒரு குழுவினரே இத்தகைய செயல்களினாலும் வன்முறைகளாலும் அந்தக் கிராம மக்களை அச்சுறுத்தி வருகிறார்கள். அத்தகைய மோசமான குழுவினரை அவ்விடத்தை விட்டு அகற்றும் வல்லமையோ அல்லது அம்மக்கள் மீதான அக்கறையோ பெரிதாக யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

பெரும்பாலன ஊடகங்கள் பயங்கரமான ஒரு சாதி வெறித் தாக்குதலை, குடி வெறித் தாக்குதலாகச் சுருக்கியிருக்கிறார்கள். பொதுச் சமூகத்தின் கவனத்தை சாதிய ஒடுக்குமுறைகள் தொடர்பான பிரச்சினைகளை நோக்கித் திருப்புவதில் அரசியற் தரப்பினருக்கும் பெரும்பாலான ஊடகங்களிற்கும் அக்கறையிருப்பதில்லை. அது அவர்களின் நலன்களைப் பாதிக்கும். ஆகவே சமூக நீதியின் மேலும் மக்களின் சுயமரியாதை மீதும் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் அம்மக்களின் துயரையும் அன்றாடம் அவர்கள் எதிர்கொள்ளும் அச்சத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். காலந்தோறும் தங்கள் பிள்ளைகளுக்கு அடித்தவர்களிடம் சென்று, தவறு செய்யாத மகன்களைக் காப்பாற்ற அப்பாக்களும் அம்மாக்களும் எத்தனை தடவை மன்னிப்புக் கேட்டிருக்கிறார்கள். நாம் அவர்களையும் அவர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கின்ற சாதிய ஒடுக்குமுறையையும் அகற்ற முன்வரவேண்டும். இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்குச் சட்ட ரீதியான தண்டனையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் இழந்த சொத்துக்களிற்கான இழப்பீடும் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக சமூகநீதியின் பால் அக்கறைகொண்டவர்கள் அனைவரும் உணர்வுத் தோழமையுடன் ஒன்றிணைந்து குரலெழுப்ப வேண்டும்.

சாதிய ஒடுக்குமுறைகள் தொழிற்படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், இடங்களிலும் அதற்கெதிராக உணர்வுத் தோழமையுடன் ஒன்றிணைவதே அம்மக்களுக்கான சமூகநீதிக்கான முதற்படியாகும். நாம் கண்ணை மூடிக் கொண்டு இங்கு சாதியில்லை, சாதியில்லை என்று சொல்லிக்கொண்டிருப்பதால் சாதி ஒருபோதும் ஒழிந்துவிடாது. சாதி ஒழிப்பென்பதே சமூக விடுதலைக்கும் சமத்துவத்திற்கும் சுயமரியாதைக்கும் முதற்படி. சமத்துவமும் சுயமரியாதையும் நிறைந்ததோர் சமூகம் என்பதே சமூகநீதி. அதற்கான போராட்டமே சமூக விடுதலைக்கான செயற்பாடு. இவற்றை உணர்ந்து சமூகத்தில் நிலவும் ஒடுக்குமுறைகளை அவற்றின் வேர்களில் இருந்து நுட்பமாக அறிவதே அரசியல்மயப்படுதலின் முதற்படி. நம் மீது திணிக்கப்படும் ஒடுக்குமுறைகளை இனங்கண்டு, அந்த ஒடுக்குமுறைக் களைவது பற்றிய அறிதலும் செயலாற்றலுமே அரசியல்மயப்படுதல். சாதியால் ஒடுக்கப்படுகின்ற மக்கள் சாதி எப்படி அவர்களை ஒடுக்குகின்றது என்பதை அறிவு பூர்வமாகக் கற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக இளைஞர்களும் சிறுவர்களும் அவர்களுடைய கல்வியில் அதிக கவனம் செலுத்துவதுடன் அக்கல்வியை அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய சுயமரியாதையையும் சமூக நீதியையும் பெற்றுக்கொள்வதற்கான கருவியாகக் கையாளவேண்டும்.

ஆதிக்க சாதியில் பிறந்தவர்களும் தங்களது சொந்த சாதி நலன்களிலே மட்டும் மூழ்கிக் கிடக்காமல் சாதி ஒடுக்குமுறையையும், தாம் எப்படி ஒடுக்குமுறையாளர்களாக இருக்கிறார்கள் என்பதையும் கற்று உணர்ந்து கொள்ள வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களின் இன்றைய நிலைக்கு தமது முன்னோர்களும் தாமும் எப்படிக் காரணங்களாய் இருக்கிறோம் என்பதை அறிந்து அவற்றை மாற்ற முன்வர வேண்டும். இங்கு ஒவ்வொரு சாதியிலும் தனக்கு மேல் கீழென்று சாதிகள் இருக்கிறது என்று மூட நம்பிக்கை கொண்டு அப்படியே இருக்கிறார்கள். ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று நம் குழந்தைகளை அறிவூட்டிய பாரதியாரின் நூற்றாண்டு நினைவு வருடத்தில் நாம் இந்தச் சாதி வெறித் தாக்குதலை நம் கண் முன்னே காண்கிறோம். நமது சமூகம் சாதிய இழிவுகளிலிருந்து மீண்டெழ அறிவார்ந்து சிந்திக்கவும் ஒடுக்கப்படும் மக்களைக் காக்கவும் அவர்களுக்கான சமூக நீதியும் சுயமரியாதையும் மீட்கப்படவும் நம்மாலான ஒவ்வொரு காலடியையும் எடுத்து வைக்க வேண்டும். நமது சமூகத்திலிருந்து சாதி ஒழிக்கப்பட வேண்டும். சமூக நீதி வென்றெடுக்கப்பட வேண்டும்.

தோழமையுடன்

விதை குழுமம்

Saturday, August 21, 2021

1953 மக்கள் எழுச்சி - இலங்கையில் வர்க்கப் போராட்டம்


இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த ஏகாதிபத்திய- முதலாளிய ஐக்கிய தேசியக் கட்சி (UNP), மார்க்சியவாதிகளையும், கம்யூனிஸ்டுகளையும் தனது பிரதானமான எதிரிகளாகக் கருதியது. இலங்கையில் அன்று நடந்து கொண்டிருந்தது ஒரு வர்க்கப் போராட்டமே அன்றி, இனப் போராட்டம் அல்ல. சிங்கள- தமிழ் பூர்ஷுவா வர்க்க புத்திஜீவிகள், இன்றைக்கும் இந்த உண்மையை மறைத்து, வரலாற்றை திரித்து எழுதி வருகின்றனர். 

பிரிட்டிஷ் காலனியாகவிருந்த இலங்கை 1948 ல் சுதந்திரமடைந்த பின்னரும், பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு விசுவாசமாக இருந்தது. அத்துடன் வளர்ந்து கொண்டிருந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனும் நெருக்கமான உறவுகளை கொண்டிருந்தது. இலங்கை அரசின் அமெரிக்க சார்புத்தன்மை காரணமாக, அது ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்புரிமை பெற முடியவில்லை. சோவியத் யூனியன் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து வந்தது. 

1953 ம் ஆண்டு வரையில் இலங்கை அரசு தீவிர கம்யூனிச எதிர்ப்புக் கொள்கையை பின்பற்றி வந்தது. அந்த வருடத்தில் இருந்து தனது கடும்போக்கு நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு கம்யூனிச நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொண்டது. அதற்குப் பிறகே ஐ.நா.வில் அனுமதிக்கப் பட்டது. 

1950 - 1953 வரை அமெரிக்க ஏகாதிபத்தியம் முன்னெடுத்த கொரிய யுத்தம் நடந்து கொண்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் இலங்கையின் பிரதானமான ஏற்றுமதிப் பொருட்களான தேயிலை, ரப்பருக்கு அதிக கேள்வி உருவானது. ஏற்றுமதி அதிகரிப்பு காரணமாக ஈட்டிய வருமானத்தினால் இலங்கையின் பொருளாதாரம் வளர்ந்ததுடன், அரச கஜானாவிலும் பெருந்தொகைப் பணம் சேர்ந்திருந்தது. ஆனால், யுத்தம் முடிந்தவுடன் சந்தை வாய்ப்புகளும் குறைந்து விட்டன. இதனால் வரவை விட செலவு அதிகரித்தது. கஜானா காலியாகிக் கொண்டிருந்தது. பல நிறுவனங்கள் நட்டத்தில் ஓடிக் கொண்டிருந்தன. 

இந்த தருணத்தில் தான் ஒரு கம்யூனிச நாடான சீனா இலங்கைக்கு உதவ முன்வந்தது. சீனாவின் அரிசிக்கு பதிலாக இலங்கையின் ரப்பரை பண்டமாற்று செய்து கொள்ளும் ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டது. இதனால் இலங்கை தேசம் திவாலாவதில் இருந்து காப்பாற்றப் பட்டது எனலாம். இருப்பினும் பொருளாதார பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டிருந்தன. 

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கை அரசுக்கு முன் இரண்டு தெரிவுகள் இருந்தன. ஒன்று, பணக்கார வர்க்கத்திடம் அதிக வரி அறவிடுவது. இரண்டாவது ஏழை வர்க்கத்திற்கு கொடுத்து வந்த அரச மானியங்களை குறைப்பது. முதலாளிய ஆதரவு UNP அரசு இரண்டாவதை தேர்ந்தெடுத்தது. அதன் மூலம் இலங்கையை ஆள்வது ஒரு முதலாளித்துவ அரசு தானென்பதை நிரூபித்தது. 

அரசு மக்களுக்கு வழங்கி வந்த அனைத்து சலுகைகளும் ஒன்றில் குறைக்கப் பட்டன, அல்லது நிறுத்தப் பட்டன. அரிசிக்கு வழங்கி வந்த மானியத்தை நிறுத்தி விட்டது. இதனால் இலங்கை மக்களின் அன்றாட உணவுப் பொருளான அரிசியின் விலை மூன்று மடங்கு அதிகரித்தது. சீனியின் விலையும் கூடியது. பாடசாலை மாணவர்களுக்கு வழங்கிய மதிய உணவு நிறுத்தப் பட்டது. கல்வி, மருத்துவ துறைகளுக்கான அரசு செலவினங்கள் குறைக்கப் பட்டன. தபால், தந்தி, பஸ்/ரயில் போக்குவரத்து கட்டணங்கள் கூட்டப் பட்டன. 

மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான அரச செலவினைக் குறைப்புகளால் பெருமளவில் பாதிக்கப் பட்டவர்கள் உழைக்கும் வர்க்க மக்கள் ஆவர். இழப்பதற்கு எதுவுமற்ற பாட்டாளிவர்க்க மக்கள் வாழவே முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட பொழுது, "ஏழைகள் தமக்கான உணவை தாமே தேடிக் கொள்ள வேண்டும்" என்று அன்றைய நிதி அமைச்சர் ஜே.ஆர். ஜெயவர்த்தனே ஆணவத்துடன் அறிவித்தார். 

சர்வதேச சந்தையில் ஏற்பட்ட  பொருளாதார நெருக்கடிக்கு சம்பந்தமில்லாத, ஏழை உழைப்பாளிகளை தண்டித்த இலங்கை அரசு, அதற்குக் காரணமான பெரும் மூலதன தொழிலதிபர்களுக்கு பரிவு காட்டியது. பணக்காரர்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கப் பட்டன. வணிகத்தில் நட்டமடைந்த நிறுவனங்களுக்கு மீட்பு நிதி வழங்கப் பட்டது. 

அரசுக்கு எதிரான மக்களின் கோபாவேசம், 23 ஜூலை 1953 அன்று ஒரு கொதிநிலைக்கு வந்திருந்தது. கொழும்பு காலிமுகத்திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் இரண்டு இலட்சம் மக்கள் ஒன்று திரண்டார்கள். நவீன கால இலங்கை வரலாற்றில், பெருந்தொகையான மக்கள் ஒன்று கூடியமை அதுவே முதல் தடவை ஆகும். 

அந்தக் கூட்டத்தை வழிநடத்திய ட்ராட்ஸ்கிச லங்கா சமசமாஜக் கட்சியும், சோவியத் சார்பு கம்யூனிஸ்ட் கட்சியும் ஒரு பொது வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தன. 12 ஆகஸ்ட், நாடளாவிய பொது வேலைநிறுத்தம் நடத்த தீர்மானிக்கப் பட்டது. தமிழ் முதலாளிய வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்திய தமிழரசுக் கட்சி சம்பிரதாயபூர்வமான ஆதரவு தெரிவித்திருந்தாலும், போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. வடக்கு கிழக்கில் நடந்த வேலைநிறுத்தப் போராட்டத்தையும், இடதுசாரி தொழிற்சங்கங்கள் தான் முன்னெடுத்திருந்தன. 

12 ஆகஸ்ட் 1953, இலங்கை வரலாற்றில் முன்னொருபோதும் நடந்திராத மக்கள் எழுச்சி ஏற்பட்டது. நாடு முழுவதும் தொழிலாளர்கள் மட்டுமல்லாது, அரசு ஊழியர்களும் வேலைக்கு செல்லவில்லை. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் எல்லோரும் இன, மத பேதமின்றி ஒரே வர்க்கமாக ஒன்றிணைந்து போராடினார்கள். குறிப்பாக தொழிலாளர் வர்க்கம் பெருந்தொகையாக வாழும் கொழும்பு முதல் காலி வரையிலான மேற்குக் கரையோரப் பிரதேசம் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்தது. 

இடதுசாரிக் கட்சிகளால் வழிநடத்தப்பட்ட இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் கொழும்பு நகரத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். வீதிகளில் ஒன்று கூடிய பெருந்தொகையான மக்கள், போலீஸ்காரர்களை எதிர்த்து போரிட்டனர். எண்ணிக்கையில் குறைந்த அளவில் இருந்த போலிஸ் படை, மக்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் பின்வாங்கியது. 

பல இடங்களில் தந்திக் கம்பிகள் அறுக்கப் பட்டன. அதனால் கொழும்புக்கும் பிற பகுதிகளுக்கும் இடையிலான தொடர்புகள் துண்டிக்கப் பட்டன. ரயில் சேவைகள் நிறுத்தப் பட்டன. ரயில் வண்டிகள் தொழிலாளர்கள் வசமாகின. சில இடங்களில் சிறிய பாலங்கள் டைனமைட் வைத்து தகர்க்கப் பட்டன. அரச அலுவலகங்கள் எரிக்கப் பட்டன. 

மக்கள் எழுச்சியின் தீவிரத்தன்மை கண்டு ஆளும்கட்சியான UNP பயந்து ஒளிந்து கொண்டது. இடதுசாரி தொழிலாளர் எழுச்சி அரசைக் கவிழ்த்து விடும், விரைவில் இலங்கை ஒரு கம்யூனிச நாடாகி விடும் என்று அஞ்சினார்கள். மூவின மக்களினதும் ஆதரவை முற்றாக இழந்து விட்ட இலங்கை அரசாங்கம், கொழும்புத் துறைமுகத்தில் நக்கூரமிட்டிருந்த பிரிட்டிஷ் கடற்படைக் கப்பலுக்குள் தஞ்சம் அடைந்தது. 

HMS Newfoundland என்ற பெயருடைய அந்தக் கப்பலில், பிரிட்டிஷ் கடற்படை வீரர்களின் பாதுகாப்புடன் மந்திரி சபை கூட்டப்பட்டது. நாடு முழுவதும் அவசரகால நிலை பிரகடனப் படுத்தப் பட்டது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்போரை கண்ட இடத்தில் சுட்டுக் கொல்லுமாறு அரச படையினருக்கு அதிகாரம் வழங்கப் பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த போலிஸ் துப்பாக்கிச்சூட்டில் இருபது பேரளவில் கொல்லப் பட்டனர். 

ஹர்த்தால் ஒரு நாள் மட்டுமே நடந்திருந்தாலும், இடதுசாரிகளுக்கு எதிரான அரச ஒடுக்குமுறை வருடக்கணக்காக தொடர்ந்தது. இடதுசாரி கட்சிகளின் அலுவலகங்கள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டன. மார்க்சியவாதிகள் மட்டுமல்லாது, அவர்களுக்கு ஆதரவானவர்களின் தொலைபேசிகளும் ஒட்டுக் கேட்கப் பட்டன. 

கம்யூனிச நாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட சஞ்சிகைகள், நூல்கள், சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு கொளுத்தப் பட்டன. அவை நூலகங்கள், மியூசியங்களுக்கு அனுப்பப் பட்டிருந்தாலும், அரசியலே இல்லாத அறிவியல் துறை சார்ந்த நூல்களாக இருந்தாலும் தடுக்கப் பட்டன. 

பாதுகாப்புத் துறை பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இன்ஸ்பெக்டர் ஜெனரல் பாராளுமன்றத்திற்கு பதில் கூற வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அவர் நேரடியாக பிரதமரிடம் பொறுப்புக் கூறினால் போதும். இனி வருங்காலத்தில், ஹர்த்தால் கலவரங்களை அடக்குவதற்காக ஒரு ரிசேர்வ் படையணி உருவாக்கப் பட்டு, ஆயுதப் பயிற்சி வழங்கப் பட்டது. 

1948 - 1956 வரையில், இலங்கையில் ஒரு குடும்ப ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அவர்கள் சிங்கள ஆட்சியாளர்களாக இருந்தாலும், பெரும்பான்மை சிங்கள உழைக்கும் வர்க்க மக்களிடம் இருந்து அந்நியப்பட்ட மேட்டுக்குடி வர்க்கத்தை சேர்ந்தவர்கள். சாதியப் படிநிலையில் உயர்ந்த ஸ்தானத்தில் உள்ள கொவிகம சாதியை சேர்ந்தவர்கள். 

இலங்கையில் முதலாவது பிரதமர் டி.எஸ். சேனநாயக்கவை தொடர்ந்து, அவரது மகன் டட்லி சேனநாயக்க பிரதமர் ஆனார். 1953 வேலைநிறுத்தப் போராட்டத்தின் விளைவாக அவர் பதவி விலகினார். அந்த இடத்திற்கு, டட்லியின் மைத்துனர் ஜோன் கொத்தலாவல பிரதமராக வந்தார். முன்பொரு தடவை, கொத்தலாவல தானே முதலாவது பிரதமராக வர விரும்பி இருந்தார். 

ஒரு பணக்கார நிலவுடைமைக் குடும்பத்தில் பிறந்த ஜோன் கொத்தலாவல ஒரு தீவிர கம்யூனிச எதிர்ப்பாளர். அவர் பதவியேற்ற பின்னர், வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய நேரம் "தனது பிரதானமான எதிரி கம்யூனிசம்" என்றே அறிவித்திருந்தார். "இந்த நாட்டில் இருந்து கம்யூனிசத்தை முற்றாக அழித்தொழிப்பதே தனது தலையாய கடமை!" என்றும் கூறினார். 

இந்த வானொலி உரைக்கு பின்னர், பிரதமர் கொத்தலாவல ஒரு தடவை, "சிவப்பு சட்டைகளுக்கு எதிராக பச்சை சட்டை அணிந்த இளைஞர் பட்டாளத்தை உருவாக்கப் போவதாகவும்" அறிவித்திருந்தார். ஊடகத்துறையில் கொத்தலாவல விசுவாசிகள் நியமிக்கப்பட்டனர். சுதந்திர இலங்கையில் முதல்தடவையாக, அவரது ஆட்சிக் காலத்தில் தான் மக்களின் சிவில் உரிமைகள் பறிக்கப்பட்டன. 

இலங்கையின் மூன்றாவது பிரதமர் ஜோன் கொத்தலாவல ஒரு கம்யூனிச எதிர்ப்பாளராக மட்டுமல்லாது ஏகாதிபத்திய விசுவாசியாகவும் இருந்தார். முழுக்க முழுக்க ஐரோப்பிய மயப்பட்டிருந்தார். சிங்கள உழைக்கும் வர்க்க மக்களின் கலாச்சார பாரம்பரியங்களுக்கு மதிப்புக் கொடுக்க மறுத்தார். இதனால் சிங்கள பௌத்தர்களினதும், மத அடிப்படைவாத பிக்குகளினதும் கடும் எதிர்ப்பை சம்பாதித்திருந்தார். அதுவே அவரது வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்திருந்தது. 

முதலாளிய சார்புக் கட்சியான UNP, இடதுசாரிக் கட்சிகளை  மட்டுமே கணக்குத் தீர்க்கப் பட வேண்டிய எதிரிகளாக கருதி வந்தது. ஆனால், அந்தக் கட்சியின் வீழ்ச்சிக்கு காரணமான எதிர்ப்புச் சக்தி அதற்குள்ளே உருவாகிக் கொண்டிருப்பதை கண்டுகொள்ளவில்லை. UNP தன்னை ஒரு லிபரல் கட்சியாக காட்டிக் கொண்டாலும், பெரும்பான்மை சிங்கள மக்கள் அதனை கொவிகம உயர்சாதியினரின் மேட்டுக்குடிக் கட்சியாக பார்த்தார்கள். 

1951 ல் பண்டாரநாயக்க UNP இல் இருந்து பிரிந்து சென்று சுதந்திரக் கட்சியை உருவாக்கி இருந்தார். அந்தக் காலத்தில் அது தன்னை ஒரு சமூக ஜனநாயகவாத இடதுசாரிக் கட்சியாக காட்டிக் கொண்டது. அதனால், அடுத்து வந்த தேர்தல்களில் கொவிகம அல்லாத பிற சாதியினரும், குட்டி முதலாளிய, உழைக்கும் வர்க்க சிங்களவர்களும் பெருமளவில் வாக்களித்தனர். இலங்கையின் போர்க்குணாம்சம் மிக்க தொழிலாளர் வர்க்கத்தை, வெகுஜனவாத (Populist) அரசியலுக்குள் இழுத்து, வர்க்கப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்ததில் பண்டாரநாயக்கவுக்கும் பங்குள்ளது. 

பொதுத்தேர்தலில் பண்டாரநாயக்கவின் வெற்றியை தொடர்ந்து ட்ராட்ஸ்கிச சமசமாஜக் கட்சியும் சேர்ந்து கூட்டரசாங்கம் அமைத்தது. பிற்காலத்தில் குருஷேவிச கம்யூனிச கட்சியும் கூட்டுச் சேர்ந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, இலங்கையின் உள்ளூர் தரகு முதலாளிகள், சிங்களத் தேசியத்திற்குள் வர்க்கப் போராட்டத்தை சிறுமைப்படுத்தி சிதைத்து விட்டார்கள். இடதுசாரிக் கட்சிகள் இந்த துரோகத்தனத்திற்கு விலைபோனதும், பிற்காலத்தில் அவர்களது வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. 

Saturday, July 24, 2021

இலங்கை தொழிற்சங்க போராட்டம் - ஒரு மறைக்கப்படும் வரலாறு

 - ஆசியாவிலேயே முதலாவது தொழிற்சங்கம் இலங்கையில் தான் தொடங்கியது. 1893 ம் ஆண்டு ஐரோப்பிய முதலாளிகளின் அச்சகங்களில் வேலை செய்த தொழிலாளர்கள் ஒரு தொழிற்சங்கமாக ஒன்றிணைந்தனர்.

- இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் கொழும்பு நகரில் பல தொழிற்துறைகளில் வேலை செய்த பெரும்பாலான தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இணைந்து கொண்டனர். சேவைத்துறை தொழிலாளர்கள், ரிக்சா வண்டி ஓட்டுவோர், டிராம், ரயில் ஊழியர்கள், அலுவலக ஊழியர்கள்... இவ்வாறு பலவகையான தொழிற் பிரிவினர் தொழிற்சங்க அமைப்பாகினார்கள்.

- 1931 முதல் 1970 வரை, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) விதிகளுக்கு ஏற்றவாறு அரசு சட்டங்களை மாற்றியமைத்ததில், தொழிற்சங்கங்களின் பங்களிப்பு இருந்தது. இடையறாத போராட்டங்களின் மூலம் தொழிலாளர்கள் தமது உரிமைகளை ஒவ்வொன்றாக வென்றெடுத்தனர்.

- இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், 1945 -1947 ஆகிய மூன்று வருடங்களுக்குள் மாத்திரம் அடுத்தடுத்து பல வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடந்துள்ளன. கொழும்பு துறைமுகத் தொழிலாளர்கள் மட்டுமல்லாது, போக்குவரத்து, நகரசபை, வங்கி ஊழியர்களும் வேலைநிறுத்த போராடங்களில் ஈடுபட்டனர். தேயிலை, ரப்பர் தோட்டங்களில் வேலை செய்த மலையகத் தமிழர்களும் வேலைநிறுத்தம் செய்தனர். இதன் விளைவாக இடதுசாரி கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு பெருகியது. அவை உழைக்கும் வர்க்க மக்களின் தலைமையாக உருவாகின. இடதுசாரிகள் தமக்கான மக்கள் ஆதரவு தளத்தில் நம்பிக்கை வைத்து இலங்கைக்கு முழுமையான சுதந்திரம் கோரினார்கள்.

- எல்லாப் போராட்டமும் வெற்றியளிக்கா விட்டாலும், அரசு பல கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டது. வேலைக்கு சேர்ப்பது, மாற்றம் செய்வது, பணி நீக்கம் செய்வது போன்றவற்றில் பிரச்சினைகள் ஏற்பட்டால், தொழிலாளர்கள் நீதிமன்றம் சென்று வழக்காடும் உரிமை கிடைத்தது. அதை விட சம்பளத்துடனான விடுமுறை, நஷ்டஈடு, மற்றும் பல சலுகைகள் கிடைத்தன.

- இலங்கை சுதந்திரமடைந்த ஆரம்ப காலங்களில், தொழிலாளர்கள் வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளின் பட்டியல்: 
  • 1) ஒழுங்கமைக்கப் படாத தொழிற்துறைகளிலும் கூட சம்பளம் நிர்ணயிப்பதற்கான குழு உருவாக்கப்பட்டது. 
  • 2) தனியார் நிறுவனங்கள் தொழிற் சங்கங்களுடன் சேர்ந்து இயங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 
  • 3) தொழிலகங்களில் நடக்கும் பிரச்சனைகளை பேசித் தீர்ப்பதற்கான அமைப்புகள் உருவாக்கப்பட்டன. 
  • 4) வேலை நேர இடைவேளை, வேலை செய்யும் நேரம் ஆகியன தீர்மானிக்கப் பட்டன. 
  • 5) பெண்களுக்கான மகப்பேறு விடுமுறை கிடைத்தது. அதைக் காரணம் காட்டி பணி நீக்கம் செய்வது தடுக்கப்பட்டது. 
  • 6) தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் சமூக நலப் பாதுகாப்பு சலுகைகள் கிடைத்தன. 
  • 7) தனியார் நிறுவன முதலாளிகள் கூட தொழிலாளர் நலத்துறை அதிகாரியை கலந்தாலோசிக்காமல் பணி நீக்கம் செய்ய முடியாது.
இலங்கையில் தொழிலாளர்கள் அனுபவித்து வந்த உரிமைகள் எப்போது, எப்படிப் பறிக்கப்பட்டன?

- 1977 ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில், முதலாளிய ஆதரவு வலதுசாரிக் கட்சியான யு.என்.பி. அறுதிப்பெரும்பான்மை பெற்று வென்று ஆட்சிக்கு வந்தது.

- ஆசியாவிலேயே முதல்தடைவையாக, ஜே.ஆர். ஜெயவர்த்தன நியோ- லிபரலிச பொருளாதாரக் கொள்கையை நடைமுறைக்கு கொண்டு வந்தார். நாட்டின் பொருளாதாரம் திறந்து விடப்பட்டது.

- 1978 ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தம் தொழில்நிறுவனங்கள் விரும்பிய படி தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கவும், பணி நீக்கம் செய்யவும் அனுமதித்தது.

- அத்தியாவசிய சேவைகள் துறையில் வேலைநிறுத்தம் செய்வது தடைசெய்யப்பட்டது. ஒரு நிறுவனத்தில் சட்டப்படி வேலைநிறுத்தம் செய்வதற்கான அறிவித்தல் 21 நாட்களுக்கு முன்னர் விடுக்கப்பட வேண்டும். அப்படியே நடந்தாலும், அதற்கு ஆதரவாக, அதனுடன் சம்பந்தப்படாத தொழிலாளர்கள் தோழமை வேலைநிறுத்தம் செய்வது தடுக்கப்பட்டது.

- நிச்சயமாக தொழிலாளர் வர்க்கம் இந்த அடக்குமுறை சட்டத்திற்கு அடிபணியவில்லை. அதை எதிர்த்து போராடி வந்தது.

- 1980 ம் ஆண்டு நடந்த பொது வேலைநிறுத்த போராட்டத்தை முன்நின்று நடத்திய 40,000 தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான தொழிற்சங்கவாதிகள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப் பட்டனர். அதன் மூலம் அவர்களுக்கு நாடு முழுவதும் அனைத்து நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பு மறுக்கப் பட்டது. அவர்கள் தமது வாழ்க்கையை கொண்டு செல்ல சுயதொழில் செய்து பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

- அவசரகால சட்டம், ஊடகத் தடை, அரச வன்முறைகள் மூலம் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் ஒடுக்கப்பட்டனர்.

- ஈழப் போராட்டம் வெடித்த பொழுது, அரசு PTA எனும் பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டு வந்து தமிழ் இளைஞர்கள் கைது செய்யப் பட்டு துன்புறுத்தப்பட்ட வரலாறு அனைவருக்கும் தெரியும். ஆனால், அதே சட்டம் தொழிற்சங்கவாதிகளுக்கும் எதிராக பிரயோகிக்கப் பட்டதென்பது பலருக்குத் தெரியாது.

- 1983 ஜூலை இனக்கலவரத்தை காரணமாகக் காட்டி, அரசு மூன்று இடதுசாரிக் கட்சிகளை தடைசெய்தது. ஜேவிபி, கம்யூனிஸ்ட் கட்சி, சமசமாஜக் கட்சி ஆகியன தடைசெய்யப் பட்டதால், அவை தலைமை தாங்கிய தொழிற்சங்கங்கள் இயங்க முடியாத நிலைமை உருவாகியது.

- வடக்கில் வாழ்ந்த தமிழர்கள் மத்தியில் தொழிற்சங்க நடவடிக்கைகள் மிகக் குறைவாகவே இருந்தன. ஏற்கனவே, அந்தப் பிரதேசத்தில் தொழிற்துறை மிக அரிதாகவே இருந்தது. குறிப்பாக, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை ஊழியர்கள் கம்யூனிச தொழிற்சங்க உறுப்பினர்களாக இருந்தனர். ஆனால், போர் தொடங்கிய பின்னர் அந்தத் தொழிற்சாலை இயங்காமல் நின்று விட்டது.

- விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் தென்னிலங்கை தொழிற்சங்கங்கள் இயங்குவது தடுக்கப்பட்டது. தமிழ் தொழிலாளர்கள், தென்னிலங்கை தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதும் தடுக்கப்பட்டது. 2002 ம் ஆண்டுக்கு பின்னர், சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் நடந்த யாழ் மருத்துவமனை ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் புலிகளின் நேரடித் தலையீட்டினால் தடுத்து நிறுத்தப்பட்டது.

- தென்னிலங்கையில் 1987 -1989 காலப்பகுதியில் நடந்த ஜேவிபி கிளர்ச்சியின் போதும் தொழிற்சங்கவாதிகள் மூர்க்கத்தனமாக ஒடுக்கப்பட்டனர். பெரும்பாலான தொழிற்சங்கவாதிகள் அரசுக்கும், ஜேவிபிக்கும் இடையில் சிக்கித் தவித்தனர்.

- ஒரு புறம் ஜேவிபி தனது கட்டுப்பாட்டின் கீழான தொழிற்சங்க போராட்டங்களை மட்டும் ஆதரித்தது. பிற கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கவாதிகளை ஆயுதமுனையில் மிரட்டிப் பணிய வைத்தது. மீறுவோர் கொல்லப்பட்டனர்.

- மறு புறம் அரசு இயந்திரம் போரை பயன்படுத்தி தொழிற்சங்கவாதிகளை வேட்டையாடியது. இராணுவம், போலிஸ் மட்டுமல்ல, இரகசிய கொலைப் படையினரும் தொழிற்சங்க உறுப்பினர்களை கண்ட இடத்தில் சுட்டுக் கொன்றனர். தொழிற்சங்க ஆதரவாளர்கள் கூட ஈவிரக்கமின்றி சுட்டுக் கொல்லப் பட்டனர்.

- தொண்ணூறுகளுக்கு பிறகு எந்தவொரு தொழிற்சங்கமும் அரசுக்கு சவாலாக இருக்கவில்லை. அந்தளவு தூரம், தொழிற்சங்கவாதிகள் இனி எந்தக் காலத்திலும் தலைதூக்க விடாமல் அரச பயங்கரவாதத்தினால் அழித்தொழிக்க பட்டனர். அதுவும் இனப்படுகொலை தான். ஆனால், அதைப் பற்றி பேசுவதற்கு இங்கே யாரும் இல்லை.

Thursday, July 22, 2021

1977 இனக்கலவரம்: இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கை

//வகுப்புவாதம் தலைதூக்கும் போதெல்லாம் முதல் முதல் பாதிக்கப் படுவது புரட்சிகர இயக்கமாகும். ஆகவே தொழிலாளி வர்க்கமும் புரட்சிகர இயக்கமும் தங்களது முழுப்பலத்தையும் திரட்டி, இனவெறியை தூண்டுவோருக்கு எதிராக விட்டுக்கொடுக்காத புனிதப் போராட்டத்தை நடத்தி, தங்களிடையே வாழ்ந்து வரும் சிறுபான்மையின மக்களை பாதுகாத்து, அதன் மூலம் இன்று சிதைந்துள்ள தேசிய ஐக்கியத்தை மீண்டும் படிப்படியாக கட்டியெழுப்ப வேண்டும்.// - தோழர் சண்முகதாசன்


1977 இனக்கலவரத்தில், இலங்கை அரசுக்கு மட்டுமல்லாது, தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் பங்கிருந்தது. இனவாதப் பேச்சுகள் மூலம் தமிழ் இளைஞர்களை உசுப்பேற்றி யாழ்ப்பாணத்தில் இருந்த சிங்களக் கடைகள் தாக்க வைத்திருக்கிறார்கள். "திருப்பி அடித்தல்" என்பது சாதாரண அப்பாவி மக்களை அடிப்பதென்று பொருள் அல்ல. எதிரி யார், நண்பன் யார் என்ற புரிதல் இல்லாத படியால் தான் தமிழ்த்தேசிய போராட்டம் பின்னடைவுக்கு உள்ளானது.


தோழர் சண்முகதாசன் தலைமையிலான இலங்கை மாவோவாத கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட தொழிலாளி பத்திரிகையில் இருந்து ஒரு பகுதி:
//ஒரு நாட்டில் இனக்கலவரங்களை மூட்டுவோர் சம்பந்தப்பட்ட இனங்களின் மத்தியில் உள்ள இனவெறி சக்திகளாகும். இவ் இனவெறி சக்திகளுக்கு அரசியல் ரீதியில் இனவெறி ஊட்டி வளர்ப்பவர்கள் சம்பந்தப்பட்ட இனங்களின் மத்தியில் உள்ள முதலாளித்துவ பிற்போக்கு சக்திகள் ஆவர். இத்தகையவர்களால் உருவாக்கப்படும் இனக்கலவரம் எந்தவொரு நாட்டிலும் கற்பனை செய்யப்படாத கொடூரத்தன்மை வாய்ந்ததாகவே இருக்கும். 

ஒரு இனக்கலவரத்தை தடுப்பதற்குரிய ஒரே வழி சிறுபான்மை இனங்களின் உரிமைகளை உத்தரவாதப் படுத்துவதும் வழங்குவதுமேயாகும். ஆனால் முதலாளித்துவ பாராளுமன்ற ஜனநாயகத்தின் கீழ் சிறுபான்மை இனங்களின் உரிமைகளை நசுக்கி இன அடக்குமுறையை செய்வதிலும் முதலாளித்துவ சமூக அமைப்பு எப்போதும் முன் நின்று வருவதைக் காண முடியும். 

எனவே இனங்களின் மத்தியில் உள்ள பிணக்குகளையும், ஒரு பெரும் இனம் சிறுபான்மை இனத்தை அடக்கும் நிலையை இல்லாமல் செய்வதற்குரிய ஒரே மார்க்கம் இனங்களின் மத்தியில் உள்ள தொழிலாளி வர்க்கமும் ஏனைய உழைக்கும் வர்க்கங்களும் தத்தம் இனங்களின் மத்தியில் உள்ள முதலாளித்துவ அரசியல் கட்சிகளை நிராகரித்து உழைக்கும் வர்க்கம் என்ற ரீதியில் ஐக்கியப் பட்டு தமது வர்க்க எதிராளிகளுக்கு எதிராக போரிடுவதே ஆகும்.//



Wednesday, July 21, 2021

ஜகமே தந்திரம் படம் பேசும் புலி எதிர்ப்பு அரசியல்

 2009 ம் ஆண்டு, புலிகள் மக்களைக் கூட்டிக் கொண்டு முள்ளிவாய்க்கால் வரை சென்றமைக்கு "அமெரிக்கா கப்பல் அனுப்பிக் காப்பாற்றும்" என்ற காரணம் சொல்லப் பட்டது. புலிகளின் உறுப்பினர்கள் பகிரங்கமாகவே இதைச் சொன்னதாக முள்ளிவாய்க்கால் வரை சென்று வந்த பலர் என்னிடம் தெரிவித்து இருந்தனர்.


நான் முன்பு பல தடவைகள் இதைப் பற்றிக் குறிப்பிட்டு பேசிய போதெல்லாம், பலர் ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டு சண்டைக்கு வந்தார்கள். 2009 ம் ஆண்டு மே மாதம், ஐரோப்பாவில் இயங்கிய புலிகளின் ஊடகங்கள் தாமாகவே அப்படி ஒரு தகவலை வெளியிட்டு இருந்தார்கள். அதாவது, இரண்டு அமெரிக்க கப்பல்கள் முல்லைத்தீவை அண்டிய ஆழ்கடலில் தரித்து நிற்பதாகவும், மேலிடத்து உத்தரவுக்காக காத்திருப்பதாகவும் செய்தி வெளியிட்டிருந்தனர்.

தற்போது நெட்பிளிக்சில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் ஜகமே தந்திரம் படத்தில், இறுதியுத்தம் நடந்த புது மாத்தளன் பகுதியை காட்டுவார்கள். அங்கு இரண்டு பேர் வானொலிப் பெட்டிக்கு அருகில் பேசிக் கொண்டிருப்பார்கள். அதில் ஒருவர் சொல்வார்: "இந்தியா எங்களை கைவிடாது. கப்பல் அனுப்பிக் காப்பாற்றும்!" (அமெரிக்கா இந்தியா என்று மாற்றப் பட்டுள்ளது.) ஆகவே, அமெரிக்க (அல்லது இந்திய) கப்பல் வரும் என்று நம்பித் தான் புதுமாத்தலன் கடற்கரை வரை சென்றிருக்கிறார்கள்? அதாவது, புலிகள் அப்பாவித் தமிழ் மக்களை தவறாக வழிநடத்தி இருக்கிறார்கள்? அதைத் தானே இந்தப் படத்தில் சொல்ல வருகிறீர்கள்?

படத்தில் அந்த வசனத்தை பேசுகிறவர் சோமிதரன் என்ற ஈழத்தமிழர். அதுவும் சாதாரணமான ஈழத்தமிழர் அல்ல. ஈழத்தில் யுத்தம் நடந்த காலத்திலும் ஓர் ஊடகவியலாளராக செயற்பட்டவர். புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலும் செய்தி சேகரித்தவர். மேலும், ஈழப் பிரச்சினை தொடர்பாக ஆவணப்படங்களை எடுத்தவர். அதைவிட இன்று வரை புலிகளை விமர்சிக்க மறுத்து வருபவர். புலிகள் விட்ட தவறுகளை நேரில் கண்ட போதிலும் அவற்றைப் பற்றி பேச மறுப்பவர். சுருக்கமாக: தன்னை ஒரு புலி ஆதரவாளராக காட்டிக் கொள்வதிலும் எந்த ஆட்சேபனையும் இல்லாதவர்.

அப்பேற்பட்ட பெருமைக்குரிய ஒருவரை, அதிலும் ஒரு புலி ஆதரவாளரை, ஜகமே தந்திரம் என்ற புலி எதிர்ப்புப் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள். இதிலே ஹைலைட் என்னவென்றால், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு அரசு மட்டுமல்ல, புலிகளும் காரணம் என்று, அவர்களது தவறை சுட்டிக் காட்டும் வகையில் வசனம் பேச வைத்திருக்கிறார்கள்!

புது மாத்தளன், முள்ளிவாய்க்கால் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பிரதேசம் மிகவும் சிறிது. ஒரு பக்கம் இந்து சமுத்திரம், மறுபக்கம் நந்திக் கடல். இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு குறுகிய நிலப்பரப்பை அரசு பாதுகாப்பு வலையமாக அறிவித்து இருந்தது. அங்கு சென்ற மக்களை கனரக ஆயுதங்களை பயன்படுத்தி கொன்று குவித்தமை அரசின் போர்க்குற்றம். அந்த நேரம் தான் அங்கு ஓர் இனப்படுகொலை நடக்கிறது என்ற செய்தி பல உலக நாடுகளின் தலைநகரங்களிலும் எதிரொலித்தது.

அப்போது இது குறித்து சர்வதேச கண்டனங்கள் எழுந்திருந்த போதிலும், அதையெல்லாம் அரசு அலட்சியப் படுத்தியது. அரசு தானாகவே ஒரு பிரதேசத்தை பாதுகாப்பு வலையம் என்று அறிவித்து விட்டு, அந்த இடத்தின் மீது ஷெல் தாக்குதல் நடத்தியமை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. ஆனால், பாதுகாப்பு வலையத்தில் புலிகள் மக்களோடு பதுங்கி இருப்பதால் தாக்குதல் நடத்துவதாக அரசு தனது போர்க்குற்றத்தை நியாயப் படுத்தியது.

உண்மையில் புதுமாத்தலன் பகுதியில் தான் பெருந்தொகையான மக்கள் படுகொலை செய்யப் பட்டனர். புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் முள்ளிவாய்க்காலில் தங்கியிருந்த படியால், இராணுவம் முன்னேறுவதை தடுப்பதற்காக மிக உயரமான மண் அணை அமைத்திருந்தார்கள். அதைக் கைப்பற்றுவதற்காக கடுமையான சண்டை நடந்தது.

ஜகமே தந்திரம் படத்தில் புதுமாத்தளன் என்று ஓரிடத்தையும், அங்கு இடம்பெயர்ந்து வந்து தங்கியுள்ள மக்களையும் காட்டுவார்கள். அங்கு நடந்த விமானக் குண்டு வீச்சினால் ஏற்பட்ட அழிவுகளையும், மக்களில் சிலர் கொல்லப் படுவதையும் காட்சியாக அமைத்திருக்கிறார்கள். கமெரா என்னவோ பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களை சுற்றிப் படமெடுத்தாலும், தூரத்தில் புலிச் சீருடையில் சிலர் நிற்பதாக காட்டுவார்கள். இது எத்தனை பெரிய தவறு என்பது படம் எடுத்தவர்களுக்கு தெரியாதா?

அன்று யுத்தம் நடந்த காலத்தில் புது மாத்தளன் பாதுகாப்பு வலையத்திற்குள் அடங்கியது. அரசிடம் பாதுகாப்புத் தேடி வந்த மக்களை, அரச படையினர் குண்டு போட்டு கொன்றமை ஒரு மன்னிக்க முடியாத போர்க்குற்றம். நாங்கள் இன்றைக்கும் அந்த போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் நடத்தப் பட வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஜகமே தந்திரம் படத்தை எடுத்தவர்கள், அரசு சொன்ன காரணத்தை நியாயப்படுத்துவது போன்று காட்சி அமைத்திருக்கிறார்கள்!

பாதுகாப்பு வலையத்தில் இருந்த மக்களுக்குள் புலிகள் பதுங்கி இருந்தார்கள் என்பது அரசு தரப்பு குற்றச்சாட்டு. அதைத் தானே இந்தப் படமும் காட்டுகிறது? இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள்? புலிகள் மக்களை கேடயமாக பயன்படுத்தினார்கள் என்று சொல்ல வருகிறார்களா? எதுவென்றாலும் நேரடியாக பேச வேண்டும். மொத்தத்தில் ஜகமே தந்திரம் முழுக்க முழுக்க சிறிலங்கா அரசு சார்பாக எடுக்கப் பட்ட ஒரு தமிழ்ப் படம்.