Saturday, August 21, 2021

1953 மக்கள் எழுச்சி - இலங்கையில் வர்க்கப் போராட்டம்


இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த ஏகாதிபத்திய- முதலாளிய ஐக்கிய தேசியக் கட்சி (UNP), மார்க்சியவாதிகளையும், கம்யூனிஸ்டுகளையும் தனது பிரதானமான எதிரிகளாகக் கருதியது. இலங்கையில் அன்று நடந்து கொண்டிருந்தது ஒரு வர்க்கப் போராட்டமே அன்றி, இனப் போராட்டம் அல்ல. சிங்கள- தமிழ் பூர்ஷுவா வர்க்க புத்திஜீவிகள், இன்றைக்கும் இந்த உண்மையை மறைத்து, வரலாற்றை திரித்து எழுதி வருகின்றனர். 

பிரிட்டிஷ் காலனியாகவிருந்த இலங்கை 1948 ல் சுதந்திரமடைந்த பின்னரும், பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு விசுவாசமாக இருந்தது. அத்துடன் வளர்ந்து கொண்டிருந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனும் நெருக்கமான உறவுகளை கொண்டிருந்தது. இலங்கை அரசின் அமெரிக்க சார்புத்தன்மை காரணமாக, அது ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்புரிமை பெற முடியவில்லை. சோவியத் யூனியன் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து வந்தது. 

1953 ம் ஆண்டு வரையில் இலங்கை அரசு தீவிர கம்யூனிச எதிர்ப்புக் கொள்கையை பின்பற்றி வந்தது. அந்த வருடத்தில் இருந்து தனது கடும்போக்கு நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு கம்யூனிச நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொண்டது. அதற்குப் பிறகே ஐ.நா.வில் அனுமதிக்கப் பட்டது. 

1950 - 1953 வரை அமெரிக்க ஏகாதிபத்தியம் முன்னெடுத்த கொரிய யுத்தம் நடந்து கொண்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் இலங்கையின் பிரதானமான ஏற்றுமதிப் பொருட்களான தேயிலை, ரப்பருக்கு அதிக கேள்வி உருவானது. ஏற்றுமதி அதிகரிப்பு காரணமாக ஈட்டிய வருமானத்தினால் இலங்கையின் பொருளாதாரம் வளர்ந்ததுடன், அரச கஜானாவிலும் பெருந்தொகைப் பணம் சேர்ந்திருந்தது. ஆனால், யுத்தம் முடிந்தவுடன் சந்தை வாய்ப்புகளும் குறைந்து விட்டன. இதனால் வரவை விட செலவு அதிகரித்தது. கஜானா காலியாகிக் கொண்டிருந்தது. பல நிறுவனங்கள் நட்டத்தில் ஓடிக் கொண்டிருந்தன. 

இந்த தருணத்தில் தான் ஒரு கம்யூனிச நாடான சீனா இலங்கைக்கு உதவ முன்வந்தது. சீனாவின் அரிசிக்கு பதிலாக இலங்கையின் ரப்பரை பண்டமாற்று செய்து கொள்ளும் ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டது. இதனால் இலங்கை தேசம் திவாலாவதில் இருந்து காப்பாற்றப் பட்டது எனலாம். இருப்பினும் பொருளாதார பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டிருந்தன. 

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கை அரசுக்கு முன் இரண்டு தெரிவுகள் இருந்தன. ஒன்று, பணக்கார வர்க்கத்திடம் அதிக வரி அறவிடுவது. இரண்டாவது ஏழை வர்க்கத்திற்கு கொடுத்து வந்த அரச மானியங்களை குறைப்பது. முதலாளிய ஆதரவு UNP அரசு இரண்டாவதை தேர்ந்தெடுத்தது. அதன் மூலம் இலங்கையை ஆள்வது ஒரு முதலாளித்துவ அரசு தானென்பதை நிரூபித்தது. 

அரசு மக்களுக்கு வழங்கி வந்த அனைத்து சலுகைகளும் ஒன்றில் குறைக்கப் பட்டன, அல்லது நிறுத்தப் பட்டன. அரிசிக்கு வழங்கி வந்த மானியத்தை நிறுத்தி விட்டது. இதனால் இலங்கை மக்களின் அன்றாட உணவுப் பொருளான அரிசியின் விலை மூன்று மடங்கு அதிகரித்தது. சீனியின் விலையும் கூடியது. பாடசாலை மாணவர்களுக்கு வழங்கிய மதிய உணவு நிறுத்தப் பட்டது. கல்வி, மருத்துவ துறைகளுக்கான அரசு செலவினங்கள் குறைக்கப் பட்டன. தபால், தந்தி, பஸ்/ரயில் போக்குவரத்து கட்டணங்கள் கூட்டப் பட்டன. 

மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான அரச செலவினைக் குறைப்புகளால் பெருமளவில் பாதிக்கப் பட்டவர்கள் உழைக்கும் வர்க்க மக்கள் ஆவர். இழப்பதற்கு எதுவுமற்ற பாட்டாளிவர்க்க மக்கள் வாழவே முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட பொழுது, "ஏழைகள் தமக்கான உணவை தாமே தேடிக் கொள்ள வேண்டும்" என்று அன்றைய நிதி அமைச்சர் ஜே.ஆர். ஜெயவர்த்தனே ஆணவத்துடன் அறிவித்தார். 

சர்வதேச சந்தையில் ஏற்பட்ட  பொருளாதார நெருக்கடிக்கு சம்பந்தமில்லாத, ஏழை உழைப்பாளிகளை தண்டித்த இலங்கை அரசு, அதற்குக் காரணமான பெரும் மூலதன தொழிலதிபர்களுக்கு பரிவு காட்டியது. பணக்காரர்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கப் பட்டன. வணிகத்தில் நட்டமடைந்த நிறுவனங்களுக்கு மீட்பு நிதி வழங்கப் பட்டது. 

அரசுக்கு எதிரான மக்களின் கோபாவேசம், 23 ஜூலை 1953 அன்று ஒரு கொதிநிலைக்கு வந்திருந்தது. கொழும்பு காலிமுகத்திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் இரண்டு இலட்சம் மக்கள் ஒன்று திரண்டார்கள். நவீன கால இலங்கை வரலாற்றில், பெருந்தொகையான மக்கள் ஒன்று கூடியமை அதுவே முதல் தடவை ஆகும். 

அந்தக் கூட்டத்தை வழிநடத்திய ட்ராட்ஸ்கிச லங்கா சமசமாஜக் கட்சியும், சோவியத் சார்பு கம்யூனிஸ்ட் கட்சியும் ஒரு பொது வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தன. 12 ஆகஸ்ட், நாடளாவிய பொது வேலைநிறுத்தம் நடத்த தீர்மானிக்கப் பட்டது. தமிழ் முதலாளிய வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்திய தமிழரசுக் கட்சி சம்பிரதாயபூர்வமான ஆதரவு தெரிவித்திருந்தாலும், போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. வடக்கு கிழக்கில் நடந்த வேலைநிறுத்தப் போராட்டத்தையும், இடதுசாரி தொழிற்சங்கங்கள் தான் முன்னெடுத்திருந்தன. 

12 ஆகஸ்ட் 1953, இலங்கை வரலாற்றில் முன்னொருபோதும் நடந்திராத மக்கள் எழுச்சி ஏற்பட்டது. நாடு முழுவதும் தொழிலாளர்கள் மட்டுமல்லாது, அரசு ஊழியர்களும் வேலைக்கு செல்லவில்லை. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் எல்லோரும் இன, மத பேதமின்றி ஒரே வர்க்கமாக ஒன்றிணைந்து போராடினார்கள். குறிப்பாக தொழிலாளர் வர்க்கம் பெருந்தொகையாக வாழும் கொழும்பு முதல் காலி வரையிலான மேற்குக் கரையோரப் பிரதேசம் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்தது. 

இடதுசாரிக் கட்சிகளால் வழிநடத்தப்பட்ட இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் கொழும்பு நகரத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். வீதிகளில் ஒன்று கூடிய பெருந்தொகையான மக்கள், போலீஸ்காரர்களை எதிர்த்து போரிட்டனர். எண்ணிக்கையில் குறைந்த அளவில் இருந்த போலிஸ் படை, மக்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் பின்வாங்கியது. 

பல இடங்களில் தந்திக் கம்பிகள் அறுக்கப் பட்டன. அதனால் கொழும்புக்கும் பிற பகுதிகளுக்கும் இடையிலான தொடர்புகள் துண்டிக்கப் பட்டன. ரயில் சேவைகள் நிறுத்தப் பட்டன. ரயில் வண்டிகள் தொழிலாளர்கள் வசமாகின. சில இடங்களில் சிறிய பாலங்கள் டைனமைட் வைத்து தகர்க்கப் பட்டன. அரச அலுவலகங்கள் எரிக்கப் பட்டன. 

மக்கள் எழுச்சியின் தீவிரத்தன்மை கண்டு ஆளும்கட்சியான UNP பயந்து ஒளிந்து கொண்டது. இடதுசாரி தொழிலாளர் எழுச்சி அரசைக் கவிழ்த்து விடும், விரைவில் இலங்கை ஒரு கம்யூனிச நாடாகி விடும் என்று அஞ்சினார்கள். மூவின மக்களினதும் ஆதரவை முற்றாக இழந்து விட்ட இலங்கை அரசாங்கம், கொழும்புத் துறைமுகத்தில் நக்கூரமிட்டிருந்த பிரிட்டிஷ் கடற்படைக் கப்பலுக்குள் தஞ்சம் அடைந்தது. 

HMS Newfoundland என்ற பெயருடைய அந்தக் கப்பலில், பிரிட்டிஷ் கடற்படை வீரர்களின் பாதுகாப்புடன் மந்திரி சபை கூட்டப்பட்டது. நாடு முழுவதும் அவசரகால நிலை பிரகடனப் படுத்தப் பட்டது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்போரை கண்ட இடத்தில் சுட்டுக் கொல்லுமாறு அரச படையினருக்கு அதிகாரம் வழங்கப் பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த போலிஸ் துப்பாக்கிச்சூட்டில் இருபது பேரளவில் கொல்லப் பட்டனர். 

ஹர்த்தால் ஒரு நாள் மட்டுமே நடந்திருந்தாலும், இடதுசாரிகளுக்கு எதிரான அரச ஒடுக்குமுறை வருடக்கணக்காக தொடர்ந்தது. இடதுசாரி கட்சிகளின் அலுவலகங்கள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டன. மார்க்சியவாதிகள் மட்டுமல்லாது, அவர்களுக்கு ஆதரவானவர்களின் தொலைபேசிகளும் ஒட்டுக் கேட்கப் பட்டன. 

கம்யூனிச நாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட சஞ்சிகைகள், நூல்கள், சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு கொளுத்தப் பட்டன. அவை நூலகங்கள், மியூசியங்களுக்கு அனுப்பப் பட்டிருந்தாலும், அரசியலே இல்லாத அறிவியல் துறை சார்ந்த நூல்களாக இருந்தாலும் தடுக்கப் பட்டன. 

பாதுகாப்புத் துறை பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இன்ஸ்பெக்டர் ஜெனரல் பாராளுமன்றத்திற்கு பதில் கூற வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அவர் நேரடியாக பிரதமரிடம் பொறுப்புக் கூறினால் போதும். இனி வருங்காலத்தில், ஹர்த்தால் கலவரங்களை அடக்குவதற்காக ஒரு ரிசேர்வ் படையணி உருவாக்கப் பட்டு, ஆயுதப் பயிற்சி வழங்கப் பட்டது. 

1948 - 1956 வரையில், இலங்கையில் ஒரு குடும்ப ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அவர்கள் சிங்கள ஆட்சியாளர்களாக இருந்தாலும், பெரும்பான்மை சிங்கள உழைக்கும் வர்க்க மக்களிடம் இருந்து அந்நியப்பட்ட மேட்டுக்குடி வர்க்கத்தை சேர்ந்தவர்கள். சாதியப் படிநிலையில் உயர்ந்த ஸ்தானத்தில் உள்ள கொவிகம சாதியை சேர்ந்தவர்கள். 

இலங்கையில் முதலாவது பிரதமர் டி.எஸ். சேனநாயக்கவை தொடர்ந்து, அவரது மகன் டட்லி சேனநாயக்க பிரதமர் ஆனார். 1953 வேலைநிறுத்தப் போராட்டத்தின் விளைவாக அவர் பதவி விலகினார். அந்த இடத்திற்கு, டட்லியின் மைத்துனர் ஜோன் கொத்தலாவல பிரதமராக வந்தார். முன்பொரு தடவை, கொத்தலாவல தானே முதலாவது பிரதமராக வர விரும்பி இருந்தார். 

ஒரு பணக்கார நிலவுடைமைக் குடும்பத்தில் பிறந்த ஜோன் கொத்தலாவல ஒரு தீவிர கம்யூனிச எதிர்ப்பாளர். அவர் பதவியேற்ற பின்னர், வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய நேரம் "தனது பிரதானமான எதிரி கம்யூனிசம்" என்றே அறிவித்திருந்தார். "இந்த நாட்டில் இருந்து கம்யூனிசத்தை முற்றாக அழித்தொழிப்பதே தனது தலையாய கடமை!" என்றும் கூறினார். 

இந்த வானொலி உரைக்கு பின்னர், பிரதமர் கொத்தலாவல ஒரு தடவை, "சிவப்பு சட்டைகளுக்கு எதிராக பச்சை சட்டை அணிந்த இளைஞர் பட்டாளத்தை உருவாக்கப் போவதாகவும்" அறிவித்திருந்தார். ஊடகத்துறையில் கொத்தலாவல விசுவாசிகள் நியமிக்கப்பட்டனர். சுதந்திர இலங்கையில் முதல்தடவையாக, அவரது ஆட்சிக் காலத்தில் தான் மக்களின் சிவில் உரிமைகள் பறிக்கப்பட்டன. 

இலங்கையின் மூன்றாவது பிரதமர் ஜோன் கொத்தலாவல ஒரு கம்யூனிச எதிர்ப்பாளராக மட்டுமல்லாது ஏகாதிபத்திய விசுவாசியாகவும் இருந்தார். முழுக்க முழுக்க ஐரோப்பிய மயப்பட்டிருந்தார். சிங்கள உழைக்கும் வர்க்க மக்களின் கலாச்சார பாரம்பரியங்களுக்கு மதிப்புக் கொடுக்க மறுத்தார். இதனால் சிங்கள பௌத்தர்களினதும், மத அடிப்படைவாத பிக்குகளினதும் கடும் எதிர்ப்பை சம்பாதித்திருந்தார். அதுவே அவரது வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்திருந்தது. 

முதலாளிய சார்புக் கட்சியான UNP, இடதுசாரிக் கட்சிகளை  மட்டுமே கணக்குத் தீர்க்கப் பட வேண்டிய எதிரிகளாக கருதி வந்தது. ஆனால், அந்தக் கட்சியின் வீழ்ச்சிக்கு காரணமான எதிர்ப்புச் சக்தி அதற்குள்ளே உருவாகிக் கொண்டிருப்பதை கண்டுகொள்ளவில்லை. UNP தன்னை ஒரு லிபரல் கட்சியாக காட்டிக் கொண்டாலும், பெரும்பான்மை சிங்கள மக்கள் அதனை கொவிகம உயர்சாதியினரின் மேட்டுக்குடிக் கட்சியாக பார்த்தார்கள். 

1951 ல் பண்டாரநாயக்க UNP இல் இருந்து பிரிந்து சென்று சுதந்திரக் கட்சியை உருவாக்கி இருந்தார். அந்தக் காலத்தில் அது தன்னை ஒரு சமூக ஜனநாயகவாத இடதுசாரிக் கட்சியாக காட்டிக் கொண்டது. அதனால், அடுத்து வந்த தேர்தல்களில் கொவிகம அல்லாத பிற சாதியினரும், குட்டி முதலாளிய, உழைக்கும் வர்க்க சிங்களவர்களும் பெருமளவில் வாக்களித்தனர். இலங்கையின் போர்க்குணாம்சம் மிக்க தொழிலாளர் வர்க்கத்தை, வெகுஜனவாத (Populist) அரசியலுக்குள் இழுத்து, வர்க்கப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்ததில் பண்டாரநாயக்கவுக்கும் பங்குள்ளது. 

பொதுத்தேர்தலில் பண்டாரநாயக்கவின் வெற்றியை தொடர்ந்து ட்ராட்ஸ்கிச சமசமாஜக் கட்சியும் சேர்ந்து கூட்டரசாங்கம் அமைத்தது. பிற்காலத்தில் குருஷேவிச கம்யூனிச கட்சியும் கூட்டுச் சேர்ந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, இலங்கையின் உள்ளூர் தரகு முதலாளிகள், சிங்களத் தேசியத்திற்குள் வர்க்கப் போராட்டத்தை சிறுமைப்படுத்தி சிதைத்து விட்டார்கள். இடதுசாரிக் கட்சிகள் இந்த துரோகத்தனத்திற்கு விலைபோனதும், பிற்காலத்தில் அவர்களது வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. 

No comments: