Wednesday, June 04, 2014

கனடா வரலாற்றில் மறைக்கப் பட்ட இனவழிப்பு குற்றங்கள்

அமெரிக்காவில் செவ்விந்தியர்கள் இனவழிப்பு செய்யப்பட்ட வரலாறு வெளியுலகில் தெரிந்த அளவிற்கு, கனடாவில் நடந்த பூர்வ குடி மக்களின் இனவழிப்பு பற்றி யாருக்கும் தெரியாது. நீண்ட காலமாக, கனடிய அரசு தனது கடந்த கால இனவெறிக் கொள்கையை, மூடி மறைத்து வந்தது. 

கனடா ஒரு குடியேற்ற நாடு என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள், தாம் குடியேறுவதற்கு முன்னர், அந்த மண் மனிதர்கள் வாழாத வனாந்தரமாக இருந்ததாக நினைத்துக் கொள்கின்றனர். அங்கு ஒரு காலத்தில், பல கோடி மக்கள் வாழ்ந்து வந்தனர் என்பதையும், அவர்களில் பெரும்பான்மையானோர் இனவழிப்பு செய்யப் பட்டனர் என்பதையும், அறியாமல் இருக்கின்றனர்.


கனடாவின் பூர்வ குடி மக்கள் மூன்று வகையாக பிரிக்கப் பட்டுள்ளனர்:
1) First Nation : பல்வேறு செவ்விந்திய இனங்கள்.
2) Métis : கலப்பின வம்சாவளியினர்.
3) Inuït :  முன்பு எஸ்கிமோக்கள் என்று அழைக்கப் பட்ட துருவப் பகுதி மக்கள். 

மேற்குறிப்பிட்ட பூர்வகுடி மக்களைப் பாதுகாப்பதற்காக தனியான பிரதேசங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. ஆனால், இன்றைய கனடிய அரசு, அவர்களை சமூகத்தில் இருந்து ஒதுக்கி, மெல்ல மெல்ல ஒழித்துக் கட்டிக் கொண்டிருக்கிறது. வேலையற்றோர் எண்ணிக்கை பூர்வ குடியினர் மத்தியில் அதிகமாக காணப் படுகின்றது. அரச கொடுப்பனவுகளில் பெரும் பகுதி, மது பாவனைக்கு செலவாகின்றது. அவர்களது ஆயுட்காலமும் குறைவு. பருவ வயது இளைஞர்களில், பாடசாலைக்கு சென்று படிப்பவர்கள் குறைவு. ஏதாவது குற்றச் செயலில் ஈடுபட்டு ஜெயிலுக்குள் இருப்பவர்கள் தான் அதிகம். இது ஒரு வகையில், மிகவும் நுணுக்கமாக நடந்து கொண்டிருக்கும்  இனப்படுகொலை.

கனடிய பூர்வகுடிகளின் இனவழிப்பு, 1844 ம் ஆண்டே ஆரம்பமாகி விட்டது. அன்றிருந்த கனடிய அரசு ஆணைக்குழு, சிறு குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்து, விடுதிப் பாடசாலைகளில் தங்க வைக்கும் திட்டம் ஒன்றை கொண்டு வந்தது.  நாடு முழுவதும், 139 விடுதிப் பாடசாலைகள் இயங்கத் தொடங்கின. பூர்வ குடிகளின் வாழிடங்களில் இருந்து, தொலைதூரத்தில் அமைந்திருந்த படியால், அவற்றை தடுப்பு முகாம்களாகவே கருத வேண்டும். 

சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் பூர்வகுடி குழந்தைகள், கதறக் கதற பெற்றோரிடம் இருந்து பிரித்தெடுத்து கொண்டு செல்லப் பட்டனர். அவர்களை தங்க வைத்த விடுதிப் பாடசாலைகளை, கத்தோலிக்க அல்லது புரட்டஸ்தாந்து திருச்சபைகள் நிர்வகித்து வந்தன என்பது தான் விசேஷம். கிறிஸ்தவ மதப் பாதிரிகளும், கன்னியாஸ்திரிகளும் பாடசாலை ஆசிரியர்களாக, ஆசிரியர்களாக இருந்தனர். 



கிறிஸ்தவ பாதிரிகள் நடத்திய பாடசாலைகள் என்பதால், அன்பாக கவனித்து இருப்பார்கள், என்று யாராவது நினைத்தால் ஏமாந்து போவீர்கள். விடுதிப் பாடசாலைகளுக்கு கொண்டு வரப் படும் குழந்தைகளை முதலில் குளிக்க வார்ப்பார்கள். அதற்குப் பிறகு பேன் தடுப்பு மருந்து போடுவார்கள். குழந்தைகளுக்கு புதிய ஆங்கில- கிறிஸ்தவ பெயர் சூட்டப் படும். அவர்கள் அங்கே ஆங்கிலம் மட்டுமே பேச வேண்டும். பூர்வகுடிகளின் தாய்மொழியை பேசிய பிள்ளைகள் தண்டிக்கப் பட்டார்கள். "தாழ்வான" பூர்வக்குடிப் பிறப்பு குறித்த குற்றவுணர்வு, அவர்கள் மனதில் புகுத்தப் பட்டது. 

விடுதிப் பாடசாலைகளில் தங்கிப் படித்த பூர்வக்குடிப் பிள்ளைகளை, நிவாகிகளும், ஆசிரியர்களும், "குட்டிப் பிசாசுகள்" என்று ஏளனம் செய்தனர். அனாதரவான பிள்ளைகளை அடிப்பது, துன்புறுத்துவது மட்டுமல்ல, அவர்கள் மீதான பாலியல் பலாத்காரமும் தாராளமாக இடம்பெற்றது. பல குழந்தைகள், அங்கு நடந்த கொடுமை தாங்க முடியாமல், தப்பி ஓட முயன்றன. தப்பியோடும் முயற்சியில் ஆபத்திற்குள் மாட்டிக் கொண்டதால் பல குழந்தைகள் மரணத்தை தழுவியுள்ளன. பாலியல் அத்துமீறல்கள், சித்திரவதைகள் தாங்க முடியாமல் பல சிறுவர்கள் இறந்தனர், அல்லது கொலை செய்யப் பட்டனர்.  அந்தக் கணக்குகளில் சேர்க்கப் படாத, "வெளிப்படுத்த முடியாத" காரணங்களினால் இறந்து போன பிள்ளைகள், ஆயிரக் கணக்கில் இருக்கும். மொத்தமாக, திட்டமிட்ட வகையில் கொல்லப் பட்டவர்களையும் சேர்த்தால், எண்ணிக்கை ஐம்பதினாயிரத்தை தாண்டும். 

கடந்த நூற்றாண்டில், எண்பதுகளின் இறுதிக் காலத்திலும், இன ஒதுக்கல் கொள்கை கொண்ட விடுதிப் பாடசாலைகள் இயங்கி வந்துள்ளன என்பது ஒரு அதிர்ச்சியான செய்தி. கடைசிப் பாடசாலை 1996 ம் ஆண்டு மூடப் பட்டது. அந்தக் காலகட்டத்தில், கனடிய அரசும், கத்தோலிக்க, புரட்டஸ்தாந்து திருச்சபைகளும் நடந்த தவறை உணர்ந்து, பகிரங்கமாக மன்னிப்புக் கோரின. ஆயினும், அவர்கள் நடைமுறைப் படுத்திய இனவழிப்புத் திட்டங்கள், இன்று வரையும் ஆறாத வடுக்களாக காணப் படுகின்றன. 

விடுதிப் பாடசாலைகளில் தங்க வைக்கப் பட்ட பிள்ளைகள், தாய், தந்தை பாசத்தை அறியாமலே வளர்ந்து விட்டன. அவர்களது தாய், தந்தையர் யார்? எங்கே வசிக்கிறார்கள்? என்ற விபரம் எதுவுமே தெரியாது. அவர்களுக்கு "உயர்ந்த ஐரோப்பிய நாகரிகத்தை" கற்றுக் கொடுத்தாக, கனடிய அரசு நினைத்துக் கொண்டிருந்தது. ஆனால், அன்று பாதிக்கப்பட்ட பல பிள்ளைகளின் மனதில், அது வெறுப்பைத் தான் விதைத்து விட்டிருந்தது.    


இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Sunday, June 01, 2014

இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் தொடரும் பெண்கள் மீதான வன்கொடுமை


பாகிஸ்தானில் மட்டுமல்ல, இந்தியாவிலும் பெண்கள் மீதான வன்கொடுமைகள் நடக்கின்றன. பாகிஸ்தானில் பெண்களுக்கு அநீதி இழைக்கப் படும் சம்பவங்களை சுட்டிக் காட்டும் இந்து மதவாதிகள், இந்தியாவில் நடக்கும் அது போன்ற சம்பவங்களை மூடி மறைப்பார்கள். மேற்கத்திய நாடுகளைப் பொறுத்த வரையில், பாகிஸ்தான் மட்டுமல்ல, இந்தியாவும், பெண்களைக் கொடுமைப் படுத்துவதில் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. அண்மையில் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும், நடந்த கொடூரமான கொலைச் சம்பவங்கள் பற்றி, நெதர்லாந்து தினசரிப் பத்திரிகை ஒன்றில் வந்த கட்டுரையை இங்கே மொழிபெயர்த்திருக்கிறேன்.
 ___________________________________________________________


 ஒரு மாமரத்தில் தொங்க விடப் பட்டவர்கள்

இரண்டு கொடூரமான கொலைச் சம்பவங்களுக்கு பின்னர், சமூகத்தில் பெண்களின் நிலைமை பற்றி, அயல்நாடுகளான இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் மிகத் தீவிரமான விவாதம் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. இரண்டு சம்பவங்களிலும், பெண்களின் கீழ்ப்படிவான நிலைமையும், அதிலிருந்து உருவாகும் பாதுகாப்பற்ற சூழ்நிலையும் முக்கியமான பேசுபொருள் ஆகியுள்ளது.

நேற்று நடந்த 14, 15 வயதுடைய இரண்டு சிறுமிகளின் கொலைச் செய்தி கேள்விப்பட்டு, முழு இந்தியாவும் அதிர்ச்சி அடைந்து விழித்தெழுந்தது. உத்தரப் பிரதேச மாநிலத்தில், நாட்டுப்புற கிராமம் ஒன்றில், அவர்களது இறந்த உடல்கள் ஒரு மாமரக் கிளையில் கட்டித் தொங்க விடப் பட்டிருந்தமை கண்டுபிடிக்கப் பட்டது. தடயவியல் பரிசோதனையின் படி, தாழ்த்தப் பட்ட சாதியை சேர்ந்த இரண்டு சிறுமிகளும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பின்னர், கயிறு கட்டித் தூக்கிலிட்டதால் மரணம் சம்பவித்துள்ளது.

கடந்த செய்வாய்க் கிழமை, 25 வயதான கர்ப்பிணிப் பெண்மணி, அவரது பெற்றோரின் சொல்லை மீறி திருமணம் செய்த படியால், கல்லெறிந்து கொல்லப் பட்ட சம்பவம், பாகிஸ்தானை இன்னமும் உலுக்கிக் கொண்டிருக்கிறது. Farzana Parveen என்ற பெயருடைய அந்தப் பெண்ணை, அவரது உறவினர்களே கல்லால் அடித்துக் கொன்றிருக்கலாம். ஒரு கௌரவக் கொலையென நம்பப்படும் சம்பவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, பிரதமர் நவாஸ் ஷெரிப் அது குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவின் விடயத்தில், ஒரு பெண்ணின் பாத்திரம் மட்டும் காரணம் அல்ல. இந்திய அதிகாரிகள் கூறுவதன் படி, கொலையாளிகள் யாதவ் உயர்சாதியை சேர்ந்தவர்கள். உத்தரப் பிரதேச முதலைமைச்சர் அதே சாதியை சேர்ந்தவர் என்பதால், யாதவ் சாதியினர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாக கருதப் படுவதாக, ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சாதிப் பாகுபாடு சட்டத்தினால் தடை செய்யப் பட்டிருந்தாலும், கிராமப் புறங்களில் அது முக்கிய பங்காற்றி வருகின்றது. முந்திய காலங்களில், உயர்சாதி ஆண்கள், தாழ்ந்த சாதிப் பெண்களை, தண்டனைக்கு அஞ்சாமல் பலாத்காரம் செய்ய முடிந்தது.

இந்தச் சம்பவத்தில் பலியான சிறுமிகளின் உறவினர்கள், அவர்களை யாதவர்கள் தூக்கிச் சென்று விட்டார்கள் என்று கேள்விப் பட்ட உடனேயே காவல்துறையில் முறைப்பாடு செய்தனர். ஆனால், யாதவ் சாதியை சேர்ந்த பொலிஸ்காரர்கள், எந்த நடவடிக்கையும் எடுக்க மறுத்து விட்டனர். சடலங்கள் கண்டுபிடிக்கப் பட்ட பின்னர், மேலிடத்தில் இருந்து தலையிட்டார்கள். அதனால் ஒரு சந்தேகநபரும், ஒரு பொலிஸ்காரரும் கைது செய்யப் பட்டனர். இன்னும் இரண்டு யாதவ் பொலிஸ்காரர்கள் பணியில் இருந்து இடைநிறுத்தப் பட்டனர். ஐந்து சந்தேகநபர்கள் தலைமறைவாகி உள்ளனர்.

யாதவர்கள், இதற்கு முன்னரும், பல தடவைகள் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகி உள்ளனர் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தடவை நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்தில் பலியானவர்கள், தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் என்பதால், ஊடகங்கள் சாதிப் பாகுபாடு பற்றியும் பேச நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தில் குற்றவாளிகளாக இனம் காணப்படும் ஒவ்வொருவரும் தண்டிக்கப் படுவார்கள் என்று, மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

2012 ம் ஆண்டின் இறுதிப் பகுதியில், தாழ்ந்த சாதியை சேர்ந்த ஆண்களைக் கொண்ட குழுவினரால், ஒரு பெண் மாணவி தனியார் பேரூந்து வண்டியில் பலாத்காரம் செய்யப் பட்டாள். அதைத் தொடர்ந்து தினந்தோறும் ஆர்ப்பாட்டம் நடந்ததால், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது.

பாகிஸ்தான் சம்பவத்தில் பலியானவர் எவ்வாறு கொலை செய்யப் பட்டார் என்பதில் தெளிவில்லை. பொலிஸ் அறிக்கையின் பிரகாரம், முதலில் அவர் காலில் சுட்டுக் காயப் படுத்தப் பட்டார். அதை அடுத்து, ஒரு சகோதரன் அவளின் தலையில் மூன்று தடவைகள் செங்கட்டியால் அடித்துள்ளான். தொடர்ந்து மற்றைய உறவினர்களும் செங்கட்டிகளால் அடித்துள்ளனர்.

சம்பவத்தில் பலியான பர்சனாவின் கணவர் முகம்மது இக்பாலின் கூற்றுப் படி, அங்கிருந்த பொலிஸ்காரர்களும், வழிப்போக்கர்களும் எதுவுமே செய்யாது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். பொலிஸ் அந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. "பர்சனாவின் உறவினர்களும், இக்பாலின் உறவினர்களும் மோதலில் ஈடுபட்டதாகவும், இரண்டு தரப்பினரையும் விலத்தி வைப்பதற்கு, போதுமான ஆட்பலம் தம்மிடம் இருக்கவில்லை என்றும்", பொலிஸ் ஒரு காரணத்தை கூறுகின்றது.

"தனது பெற்றோர்கள் கூறுவது போன்று, தனது கணவன் கட்டாயப் படுத்தி தான் இந்த திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை", என்று கூறுவதற்காக, பர்சனா நீதிமன்றத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். பெற்றோர்கள் பார்த்து வைத்த வரனான சொந்த மைத்துனரை திருமணம் செய்ய பர்சனா மறுத்து விட்டதால், "குடும்ப மானத்தை கப்பலேற்றி விட்டாள்" என்று, பெற்றோர்கள் முறையிட்டதாக பொலிஸ் கூறுகின்றது. பாகிஸ்தானிலும், இந்தியாவிலும் சமூக அந்தஸ்து, சாதி ஆகியவற்றின் அடிப்படையில் தான் பெரும்பாலான திருமணங்கள் நிச்சயிக்கப் படுகின்றன.

"அந்தக் கொலை எந்த வகையிலும் நியாயப் படுத்த முடியாதது" என்று பிரதமர் நவாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளதுடன், குற்றவாளிகளை கைது செய்யுமாறு பொலிஸ் படையினருக்கு உத்தரவிட்டுள்ளார். பர்சனாவின் தந்தை மட்டுமே அந்த இடத்தில் கைது செய்யப் பட்டுள்ளார். மற்றவர்கள் தலைமறைவாகி விட்டனர்.

பாகிஸ்தான் மனித உரிமை நிறுவனங்கள் கூறுவது போல, அங்கே வருடத்திற்கு 900 கௌரவக் கொலைகள் நடைபெறுகின்றன. பெரும்பாலானவை தண்டிக்கப் படுவதில்லை. குற்றவாளிகள் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடாக பணம் கொடுப்பதன் மூலம் தண்டனையில் இருந்து தப்பிக்கும் வகையில் சட்டம் அமைந்திருப்பதும் விவாதப் பொருளாகி உள்ளது.

- Joeri Boom (New Delhi correspondent)

(நன்றி: NRC Handelsblad, 30-5-2014)


Tuesday, May 27, 2014

அறிவுஜீவி அதியமானை மிரட்டும் கம்யூனிச ஆவி

முதலாளிகளுக்கு விசுவாசமாக, கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரம் செய்வதில், சற்றும் தளராத விக்கிரமாதித்தன், அருமை நண்பர் அதியமான், “கம்யூனிசம் ஏன் வெற்றி பெற முடியாது ?” என்று ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அதற்கு எதிர்வினையாக நான் எழுதிய பதில்களை அழித்து விட்டார். அதனால், "அதியமானை பீடித்துள்ள ஆவியை போக்குவதற்காக," நான் இந்த விரிவான பதிலை எழுத வேண்டியதாகி விட்டது.

 அதியமான்: //கம்யூனிசம் என்ற சொல் கம்யூன் (commune), அதாவது சமூகம் என்ற சொல்லிருந்து உருவானது. (இதற்க்கு சரியான எதிர்மறை சொல் முதலாளித்துவம் அல்ல. மாறாக தனிநபர்வாதம். Individualism.) எளிமையாக கூறுவதானால், ஒவ்வொறு தனிமனிதனையும், தன் முழு உழைப்பையும், தான் சார்ந்துள்ள கம்யூனிற்கு (சமூகத்திற்கு), முழுமனதுடன், (அச்சமூகம் அளிக்கும் சம்பளத்தை மட்டும் பெற்றுக்கொண்டு) அளிக்க தயார் செய்வது. From each according to his ability, to each according to needs...//

கம்யூன் என்ற சொல்லின் மூலம் லத்தீன் மொழி. இன்றைக்கும், பிரான்சிலும் வேறு சில நாடுகளிலும், உள்ளூராட்சி சபைகளை “கம்யூன்” என்ற பெயரில் அழைக்கிறார்கள். நமது நாடுகளில், நகர சபை, கிராமிய சபை என்று பிரிட்டிஷ்காரர்கள் கற்பித்த சிவில் நிர்வாகத்தை விட, கம்யூன் உள்ளூர் மக்களுக்கு நெருக்கமானது.

கம்யூனுக்கு எதிர்மறைச் சொல் எதுவும் கிடையாது. இது, நமது ஊரில், “பஞ்சாயத்திற்கு எதிர்மறைச் சொல் என்ன?” என்று கேட்பதைப் போன்றது. கம்யூனிசத்திற்கு எதிர்மறைச் சொல் முதலாளித்துவம் அல்ல. மார்க்சியத்தின் படி, முதலாளித்துவத்தின் இறுதிக் காலத்தில், சோஷலிசம் தோன்றும். சோஷலிசத்தின் இறுதிக் காலத்தில் கம்யூனிசம் தோன்றும். அதாவது, அது ஒரு வரலாற்று வளர்ச்சிக் கட்டம்.

கட்டுரையின் ஆரம்பத்தில் அதியமான் குறிப்பிட்டது போன்று, “உலகில் இதுவரை உண்மையான கம்யூனிச அமைப்பு, எந்த ஒரு நாட்டிலும் உருவாகவே இல்லை." அதன் அர்த்தம், “உலகில் இன்னமும் முதலாளித்துவம் அழிந்து விடவில்லை. அதற்கு அடுத்த கட்டமான சோஷலிசத்தை விட்டு விட்டு, கம்யூனிசத்திற்கு ஒரேயடியாகத் தாவிச்  செல்ல முடியுமா?"  என்பது தான். முதலாளித்துவ காலகட்டம், அதற்கு முன்பிருந்த நிலப்பிரபுத்துவ கால கட்டத்தின் அழிவில் தோன்றியது என்பதை இங்கே நினவு படுத்த வேண்டியுள்ளது.

தனிநபர்வாதம் என்பது தாராளவாத (லிபரல்) சித்தாந்தம். முதலாளித்துவம் கட்டுப்பாடற்ற சுதந்திரமான பொருளாதார முறை. அதற்கென்று தத்துவம் எதுவும் கிடையாது. பிரெஞ்சுப் புரட்சியின் சித்தாந்தமான தாராளவாதமும், முதலாளித்துவமும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போனதால், அதையே பல நாடுகள் பின்பற்றி வருகின்றன.

முதலாளித்துவ பொருளாதாரம், தனிநபர்வாத கொள்கையை பின்பற்றும் நாட்டில் மட்டுமே இருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. சவூதி அரேபியா போன்ற நாடுகளில் இஸ்லாமியவாதம் ஆளும் வர்க்க சித்தாந்தமாக இருக்கிறது. ஆனால், அங்கே முதலாளித்துவப் பொருளாதாரம் கோலோச்சுகின்றது. (கிறிஸ்தவ ஐரோப்பாவுக்கு முதலாளித்துவம் வருவதற்கு பல நூறாண்டுகளுக்கு முன்னர், இஸ்லாமிய அரேபியாவில் அது ஏற்கனவே இருந்து வந்தது.)

கம்யூன் அல்லது கம்யூனிச அமைப்பு என்பது, ஒரு குடும்ப அமைப்பு அல்ல. முதலாளித்துவம் பற்றி அக்குவேறு, ஆணி வேறாக அறிந்து வைத்திருக்கும் அதியமானுக்கு, ஒரு நிறுவனம் எப்படி இயங்குகின்றது என்பதை நான் விளக்கத் தேவையில்லை. ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்யும் பங்குதாரர்கள், இலாபத்தை தமக்குள்ளே பிரித்தெடுத்துக் கொள்வார்கள். வேலை செய்பவர்களுக்கு சம்பளம் கொடுத்தால் மட்டும் போதும் என்றிருப்பார்கள்.

ஒரு கம்யூனிச சமுதாயத்தில், ஒரு நிறுவனத்தில் வேலை செய்பவர்களே, அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக இருப்பார்கள். அவர்கள் சம்பளத்தை மட்டும் பெற்றுக் கொள்வதில்லை, இலாபத்தையும் தமக்குள்ள பிரித்தெடுத்துக் கொள்கிறார்கள்.

அதியமான்: //மனித மனங்களை (human psychology) பற்றிய போதிய தெளிவில்லாமல் உருவாக்கப்பட்ட சித்தாந்தம் இது. அதாவது அனைத்து மக்களையும் உண்மையான கம்யூனிஸ்டுகளாக, சுயநலமே இல்லாத பொது உடைமைவாதிகளாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை அடிப்படையாக கொண்ட சித்தாந்தம். ஆனால் நடைமுறையில் இது சாத்தியமில்லாததால் ஏற்பட்ட விளைவுகளை பார்ப்போம்.//

பொதுநலம் பெரிது, சுயநலம் தவறென்று கம்யூனிஸ்டுகள் மட்டும் சொல்லவில்லை. உலகில் உள்ள அனைத்து மதங்களும் அதையே தான் போதிக்கின்றன. "நான் என்ற அகந்தையை அகற்றுமாறு," பகவத் கீதை காலத்தில் இருந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை, இந்த மதங்களை உருவாக்கியவர்களுக்கு, அல்லது அவர்கள் நம்பும் கடவுளுக்கு, மனித மனங்களை பற்றிய போதிய தெளிவில்லாமல் இருக்கலாம்.

அதியமான்: //தேனிக்களை போல, எறும்புகளை போல மனிதர்களையும் சுயநலமில்லாமல், ஆனால் மிக திறமையான, சுறுசுறுப்பான வேலையாட்களாக மாற்ற முடியும் என்ற பெரும் கனவு இது. தேனிக்களும், எறும்புகளும், நாள் பூராவும் கடுமையாக உழைத்து, உழைப்பின் பயனை தம் சமூக கூட்டிற்க்கு மனமுவந்து அளிக்கும். அவை அங்கு சேகரிக்கப்பட்டு, பிறகு ஒவ்வொறு தனி உறுப்பினருக்கும், அவரின் ‘தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கப்படும். ஆனால் மனிதர்களிடம் இதே போன்ற தன்னலமற்ற முழு உழைப்பை, தேவைக்கேற்ற ஊதியம் அளித்து பெற முடியாது. சாத்தியமே இல்லை என்பதை தான் மனித உளவியலும், வரலாறும் சொல்கிறது.//

மனிதர்களை தேனிக்கள், எறும்புகள் மாதிரி என்றெல்லாம் ஒப்பிடுவதற்கு முன்னர், மனிதர்களை மனிதர்களாக மதிக்க கற்றுக் கொள்ளுங்கள். தேனி, எறும்பு மட்டுமல்ல, உலகில் எந்தவொரு விலங்கினமும், பிற விலங்குகளின் உழைப்பில் மாளிகை கட்டி வாழ்ந்ததில்லை. மனிதர்களில் ஒரு சிலர் மட்டுமே அப்படி இருக்கிறனர். அந்த “ஒரு சிலர்” தான் முதலாளிகள். மூலதனத்தை மட்டுமே செலுத்தி விட்டு, இலாபத்தையும் சொந்தமாக்கிக் கொள்ளும் உளவியலைக் கொண்டுள்ள விசித்திரமான உயிரினங்கள். அந்த "மூலதனம் எப்படி வந்தது? இலாபம் எங்கிருந்து வருகின்றது?" என்பன போன்ற கேள்விகளை கேட்டால், ஆகாயத்தை நோக்கிக் கை காட்டுவார்கள்.

அதியமான்: //பொது உடைமை சமூகத்தில், தனி உடைமை (சொத்துரிமை) அறவே ஒழிக்கப்படும். நாட்டில் உள்ள அனைவரும் அரசாங்கத்திற்க்கா வேலை செய்யும் ஊழியர்கள். தனியார் நிறுவனங்கள் அறவே இருக்காத அமைப்பு. பிரதமர் முதல் கடைனிலை ஊழியர் வரை அனைவரும் அரசு ஊழியர்கள். (இங்கு அரசு எனபடுவதற்கு அர்த்தம் வேறு). அவர்களுக்கான சம்பளம், அவர்களின் வேலை மற்றும் தகுதிக்கேற்ப ஆரம்ப காலங்களில் வழங்கப்படும். பிறகு உண்மையான கம்யூனிசம் உருவாகும் போது, தேவைக்கேற்ற ஊதியம் மட்டும் வழங்கப்படும்.//

அதியமானின் தகவலில் பல கருத்துப் பிழைகளும் உள்ளன. கம்யூனிசம் என்றாலும், பொதுவுடைமை என்றாலும், அர்த்தம் ஒன்று தான். அவர் இங்கே “பொதுவுடைமை சமூகம்” என்று குறிப்பிடுவது, சோஷலிச (சமதர்ம) சமூகத்தை என்று நாங்கள் புரிந்து கொள்வோம். ஒரு சோஷலிச சமூகத்தில் அரசாங்கம் இருக்கும். ஆனால், அங்கே தனி உடைமை (சொத்துரிமை) ஒழிக்கப் படும் என்பது ஒரு கட்டுக்கதை.

ஒரு தனி மனிதனின், தனிப் பட்ட சொத்துரிமையை எப்படி ஒழிக்க முடியும்? அது நடைமுறைச் சாத்தியமற்றது. ஒருவனுக்கு ஒரு வீடு இருந்தால், அது அவனின் சொத்து. ஆனால், இரண்டு வீடுகள் வைத்திருந்தால், அது ஆடம்பரம். அளவுக்கு மிஞ்சி வைத்திருக்கும் சொத்துக்களை பறிப்பதில் என்ன தவறு? அதை இல்லாதவர்களுக்கு பங்கிட்டுக் கொடுத்தால் யார் தடுக்கப் போகிறார்கள்? மயிலே மயிலே இறகு போடென்றால் போடுமா?

சோஷலிச நாடுகள் எல்லாவற்றிலும், ஒரே மாதிரியான கொள்கை பின்பற்றப் படுவதில்லை. அப்படியே இருந்தாலும், அந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களும் அரசுக்கு வேலை செய்ய முடியாது. பெரிய நிறுவனங்கள் மட்டுமே அரசுடமையாக இருக்கும். சிறிய நிறுவனங்கள் இயங்குவதற்கான சுதந்திரமும் வழங்கப் படும். இன்றைய முதலாளித்துவ உலகில், சிறிய நிறுவனங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. முன்பு போல, இப்போதெல்லாம் ஒரு பெட்டிக் கடை வைத்துப் பிழைக்க முடிவதில்லை. மேற்கத்திய நாடுகளில் கூட, பெரும்பான்மையான மக்கள், குறிப்பிட்ட சில பெரிய நிறுவனங்களில் மட்டுமே வேலை செய்கிறார்கள். 

பயப்படாதீர்கள்! ஒரு சோஷலிச அரசு தனிப் பட்ட சொத்துரிமையை ஒழிப்பதற்கு முன்னர், முதலாளித்துவமே அந்தக் கடமையை நிறைவேற்றி விட்டிருக்கும்.

அதியமான்: //ஒரு தொழிற்சாலை அல்லது கூட்டு பண்னையில் ஒரே வகை வேலைகளை செய்யும் அனைவருக்கும் ஒரே சம்பளம் என்று இருக்கும். இதன் விளவு, திறமையாக வேலை செய்பவர்களுக்கும், திறமையில்லாமல், சோம்பேறியாக வேலை செய்பவர்களுக்கும் ஒரே சம்பளம் கிடைக்கும் நிலை. இது நன்கு வேலை செய்பவர்களின் உற்சாகத்தை குறைக்கும். அதே சமயத்தில் ஒழுங்காக வேலை செய்யாதவர்களின் எண்ணிக்கையை அதிகபடுத்தும். மொத்த விளைவு : உற்பத்தி திறன் மற்றும் மொத்த உற்பத்தி குறைவாகவே இருக்கும். மிக முக்கியமாக மூளை உழைப்பை செய்யும் நிர்வாகிகளின் திறன் ஒழுங்காக வெளிப்படாது.//

முதலில், “அனைவருக்கும் ஒரே சம்பளம்” என்ற கோட்பாடு, வறுமையை ஒழிக்கும் நோக்குடன் கொண்டு வரப் பட்டது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில், பல தசாப்த காலமாக பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நாடுகளில், ஒரு சுத்திகரிப்பு தொழிலாளிக்கும், ஒரு அலுவலக ஊழியருக்கும் வழங்கும் சம்பளத்தில் வித்தியாசம் இருக்காது. ஒரு கட்டிடம் கட்டும் தொழிலாளியின் சம்பளம், ஒரு ஆசிரியரின் சம்பளத்தை விட அதிகமாக இருக்கும். அதற்குக் காரணம், ஒருவரின் சம்பளத்தை பல காரணிகள் தீர்மானிக்கின்றன.

முதலாவதாக, ஒருவரின் சம்பளம், அந்த நாட்டின் வாழ்க்கைச் செலவுக்கு சற்று அதிகமாக இருக்க வேண்டும் என்பது அடிப்படை விதி. இரண்டாவதாக, ஒருவர் வேலை செய்யும் தொழிற் துறையின் வருமான விகிதத்தை கணக்கில் எடுக்க வேண்டும். இது போன்ற காரணிகளால் தான், சோஷலிச நாடுகளிலும், “அனைவருக்கும் ஒரே சம்பளம்” கிடைக்கிறது. பின்னர், அவரவர் தகுதி, திறமை, உழைப்புக்கு ஏற்றவாறு அதிகரிக்கும். இது வேலை செய்பவரின் உற்சாகத்தை குறைத்து, உற்பத்தியை குறைக்குமாக இருந்தால், மேற்கு ஐரோப்பிய நாடுகள் என்றைக்கோ திவாலாகி இருக்க வேண்டும்.

அதியமான்: //தொழில்முனைவோர் என்படும் entrepreneuers, இவர்களின் முழு திறமையும் வெளிபட வாய்பிருக்காது. ஒரு தொழிற்சாலை அல்லது நிறுவனம் எந்த பாணியில் அமைக்கப்படிருந்தாலும், அதை நிர்வாக்கிக திறமையான, ஊக்கமான, நிர்வாகிகள் மிக அவசியம் தேவை. Managerial and entrepreunarl talent. இதை பொது உடமை சமூகத்தில் இழக்க நேரிடுவதால், உற்பத்தி மற்றும் efficiency மிக குறைவாகவே இருக்கும்.//

நிர்வாகிகளை, வானத்தில் இருக்கும் ஆண்டவர் எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய அவசியம் இல்லை. நிர்வாகிகள், முகாமையாளர்கள், "ஒரு தனித்துவமான வர்க்கமாக அல்லது ஒரு தனியான சாதியாகத்" தான் இருக்க வேண்டுமா? தொழிலாளர்கள் மத்தியில் இருந்தும் நிர்வாகிகளை உருவாக்கலாம்.

முதலாளித்துவ பொருளாதாரம் நிலவும் நாடுகளில் கூட, பல திறமையான தொழிலாளர்கள் கல்வி கற்று முகாமையாளர்களாக வந்திருக்கிறார்கள். அவர்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருப்பதற்கு காரணம், அனைவருக்கும் கல்வி கற்கும் வாய்ப்புக் கிட்டுவதில்லை. ஒரு சோஷலிச நாட்டில் அந்தக் குறை நிவர்த்தி செய்யப் படுகின்றது. ஒரு அரசு, இலைமறை காயாக மறைந்திருக்கும் திறமைசாலிகளை ஊக்குவிக்க வேண்டும். அதை விட்டு விட்டு, “தொழில் முனைவோர் என்ற பெயரில் ஒரு உயர் சாதியை” உருவாக்குவது எந்த வகையில் நியாயம்?

அதியமான்: //தன் உழைப்பின் முழு பலனையும் தான் அடைய வேண்டும் என்ற லாப நோக்குதான் மனிதர்களை கடுமையாக உழைக்க, தம் முழு திறமையையும் செய்யும் வேலையில் முழுமனதோடு செலுத்த ஊக்குவிக்கும்.//

“இலாப நோக்குடன் கடுமையாக உழைப்பதை” இப்போது தான் கேள்விப் படுகிறேன். உழைப்பவர்கள் முதலில், வாழ்க்கைக்கான ஆதாரமாக தான் அதனைக் கருதுகிறார்கள். யாரும் இலாப நோக்குடன் உழைப்பதில்லை. எத்தனை ஆண்டு காலம் உழைத்தாலும், உழைப்பாளிக்கு இலாபம் கிடைக்காது. இழக்கப் பட்ட உழைப்புச் சக்திக்கு ஈடான நஷ்டஈடு மட்டுமே கிடைக்கும். அதற்குப் பெயர் சம்பளம்.

உலகம் முழுவதும் உள்ள பெரும்பான்மையான மக்கள், உழைத்தால் தான் வாழ முடியும் என்ற கட்டாயத்தில் உள்ளனர். வருமானம் இல்லா விட்டால், வறுமையில் வாட வேண்டும். உழைப்பவர்கள் சம்பாதிக்கிறார்கள். முதலாளிகள் மட்டுமே இலாபமீட்டுகிறார்கள். சம்பளம் என்பது இலாபம் அல்ல. அது ஒருவரின் உழைப்புக்கு கொடுக்கும் விலை.

அதியமான்: //இதற்கு விதிவிலக்குகள் இருக்கலாம். பொது நோக்கோடு, லாபம் கருதாமால் இதே போல் முழுமையாக உழைக்கும் சிலர் எப்போது இருப்பர். உண்மையான கம்யூனிஸ்டுகளும் அப்படி இருப்பர். ஆனால் அவர்கள் என்றும் மைனாரிட்டி தான். பெருவாரியானவர்கள் அப்படி இருப்பதில்லை என்பதே மனித இயல்பு. லாப நோக்கு மறுக்கப்ட்டு, தனியுடைமையின் அடிப்படையான சொத்துர்மை ரத்து செய்யப்படும் அமைப்பில், பெருவாரியானவர்களின் உழைப்பு மற்றும் ஊக்கம் முழுமையாக, போதுமானதாக இருக்காது.//

அதியமான், இதற்கு முன்னர் எமக்கு தனிநபர் வாதம் பற்றி வகுப்பெடுத்து விட்டு, இப்போது பொது நோக்கு பற்றி பேசுவது விசித்திரமானது. சுயநலமே முக்கியம் எனும் சமூகத்தில் பொது நோக்கு எப்படி வரும்? இது ஒரு முக்கியமான முரண்பாடு. ஒரு தொழிலகத்தில் யாரும் தனிநபர்வாதம் பேச முடியாது. அங்கே பொதுவான இலக்கு நோக்கிய, அதாவது இலாப நோக்கு கொண்ட, "தொழிலாளர்களின் கூட்டு வேலை" அவசியமாக கருதப் படுகின்றது. எந்த முதலாளியும், எந்த நிறுவனமும் இலாபத்தை எதிர்பார்க்காமல் இயங்குவதில்லை. அவர்களது கணக்கில் அதற்கு இடமே இல்லை.

அதியமான், முதலாளிகளையும், உழைப்பாளிகள் என்றே கருதுகின்றார் என்று நினைக்கிறேன். அதனால் அடிக்கடி இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்கிறார். “தனியுடமையின் அடிப்படையான சொத்துரிமை இரத்து செய்யப்படும் அமைப்பு” எதுவும் உலகில் கிடையாது. அது அதியமானின் கற்பனை. ஒரு சோஷலிச நாட்டில், பெரும் வணிக நிறுவனங்கள், பெரிய முதலாளிகளின் சொத்துரிமை பறிக்கப் பட்டு, அது மக்களின் சொத்தாக்கப் படும். அதனால், ஒரு சிலர் (செல்வந்த முதலாளிகள், நிலவுடமையாளர்கள்) மட்டுமே பாதிக்கப் படுவார்கள்.

தொழிலாளர்களுக்கு நிறுவனத்தை நிர்வகிக்கும் உரிமை வழங்குவதால், உற்பத்தித் திறன் அதிகரிக்கும். அவர்களுக்கு இலாபத்தில் பங்கு வழங்குவதால், ஊக்கத்துடன் வேலை செய்வார்கள். அங்கு உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புண்டு. அப்படியான ஒரு அமைப்பில், பெருவாரியானவர்களின் உழைப்பு மற்றும் ஊக்கம் முழுமையானதாக இருக்கும்.

அதியமான்: //சோவியத் ரஸ்ஸியாவில் ஆரம்ப கால தலைமுறையினரின் மனோபாவம், பல பத்தாண்டுகள் கழித்து மாறியது. அதாவது அடுத்தத்தடுத்த தலைமுறையில் உண்மையான கம்யூனிஸ்ட்களின் எண்ணிக்கை குறைந்தது. இதற்க்கான காரணிகளை தோழர்கள் விரிவாக விவாதித்து, மிக தவறான முடிவுகளுக்கு வந்துள்ளனர். அதாவது திரிபுவாதிகள், ஏகாதிபத்திய சதி போன்றவை தான் காரணம் என்று சொல்வர். ஆனால் இது மனித இயல்பு என்பதே உண்மை. ஒரு நாட்டில் அனைத்து மக்களையும் உண்மையான கம்யூனிஸ்டுகளாக மாற்ற முடியாது. ஒரு தலைமுறையில் ஒரு குறிப்பிட்ட சதவீத்தினரை மட்டும்தான் உண்மையான கம்யுனிஸ்ட்களாக மாற்ற முடியும். பெரும்பான்மையோர் தங்களை கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொள்வர். ஆனால் நடிப்பார்கள். வேண்டா வெறுப்பாகத்தான் வேலை செய்வார்கள். அவர்களை ‘திருத்தி’, re-training and educating about communism செய்ய அரசும், கட்சியும் முயலும். அதற்க்காக பல மனித உரிமை மீறல்களை சர்வ சாதாரணமாக புரிய வேண்டி வரும்.//

ஒரு புரட்சியை வெற்றி பெறுவதை விட, அதனை நிலை நிறுத்துவது தான் மிகவும் கடினமானது. புரட்சியாளர்களின் அரசாங்கம் அமைந்தாலும், இரண்டாவது புரட்சியின் அவசியம் ஏற்படும். அமெரிக்கப் புரட்சியின் பின்னரும், ஆரம்ப கால தலைமுறையினரின் மனோபாவம் மாறியது. ஆபிரகாம் லிங்கன் காலத்தில் நடந்த உள்நாட்டுப் போர், ஒரு இரண்டாவது புரட்சியாக கருதப் படுகின்றது. அதே போன்று, சோவியத் ஒன்றியத்தில் நடந்தது. ஸ்டாலின் காலத்தில் இரண்டாவது புரட்சி நடந்தது. மாவோவின் செஞ்சீனாவும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டது. அதனால் தான் அங்கு கலாச்சாரப் புரட்சி நடந்தது.

திரிபுவாதிகள் எனப்படுவோர், ஒரு கொள்கையை தமது வசதிக்கேற்றவாறு திரிப்பவர்களைக் குறிக்கும். அப்படியானவர்கள், சோஷலிச நாட்டில் மட்டும் இருக்க வேண்டிய அவசியமில்லை. கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு, புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்கள் திரிபுவாதிகள். மேற்கத்திய நாடுகளில் வாழும் மதச் சார்பற்ற லிபரல்களின் பார்வையில், இந்தியாவில் உள்ள மத நம்பிக்கை கொண்ட லிபரல்கள் திரிபுவாதிகளாக தென்படுகின்றனர். ஆகவே, இது சோஷலிசத்திற்கு மட்டுமல்லாது, உலகில் உள்ள எல்லாக் கொள்கைகளுக்கும் பொருந்தும்.

ஏகாதிபத்திய சதி என்பது ஒரு கற்பனை அல்ல. ஏற்கனவே, CIA, MI6 ஆகிய மேற்கத்திய உளவு நிறுவனங்கள், அது உண்மையென உறுதிப் படுத்தியுள்ளன. முன்னாள் சோஷலிச நாடுகளுக்குள், சி.ஐ.ஏ. யின் சதி நடவடிக்கைகள் பற்றி, ஏராளமான நூல்கள் வந்து விட்டன. Radio Free Europe, BBC, VOA என்பன, சோஷலிச நாடுகளில் வாழ்ந்த மக்களை கிளர்ச்சிக்கு தூண்டி விடும் வகையில், பல மொழிகளில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர். அது அனைவருக்கும் தெரிந்த சங்கதி. "ஏகாதிபத்திய சதி என்ற ஒன்று இருக்கவேயில்லை" என்று, அதியமான் கற்பூரம் அணைத்து சத்தியம் செய்வது, முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பது போன்றது.

அதியமான்: //எறும்புகள், தேனீக்கள் போல் மனிதர்களை மாற்ற முடியும் என்பது சாத்தியமே இல்லை. இதை தான் வரலாறு நிறுபிக்கிறது.//

இன்றைக்கும் பல முதலாளித்துவ நாடுகளில், மனிதர்கள் எறும்புகள், தேனீக்கள் போன்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வளைகுடா நாடுகளில் தொழிலாளர்களாக அடிமை வேலை செய்யும் இந்தியர்களை கேட்டுப் பாருங்கள். அவர்கள் எப்படி நடத்தப் படுகிறார்கள் என்று. சிங்கப்பூரில் ஒரு தடவை, எறும்புகளாக வாழ விரும்பாத தமிழக தொழிலாளர்கள், கலவரத்தில் ஈடுபட்டு வண்டிகளை கொளுத்தினார்கள். பங்களாதேஷ் தொழிற்சாலை கட்டிடம் இடிந்து விழுந்து ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் மாண்டார்கள். பங்களாதேஷ், கம்போடியா, இலங்கை ஆகிய நாடுகளில், ஆயத்த ஆடை தயாரிக்கும் தொழிலகங்களில் வேலை செய்பவர்களை கேட்டுப் பாருங்கள். அவர்கள், எறும்புகள், தேனீக்களை விட மோசமாக நடத்தப் படுகின்றனர்.

அதியமான்: // செம்புரட்சி நடந்த நாடுகள் அனைத்திலும் போக, உற்பத்தி திறன் மற்றும் மொத்த உற்பத்தி குறைந்து, பற்றாக்குறை ஏற்பட்டு, மக்கள் கடும் துன்பம் அடைந்தனர். முக்கியமாக விவசாயத்தை திடிரென பொது உடைமை பாணியில், கூட்டுபண்னைகளாக மாற்றிய ஆரம்ப வருடங்களில், விவசாய உற்பத்தி கடுமையாக குறைந்தது. பஞ்சம் உருவானது. இது செம்புரட்சி நடந்த அனைத்து நாடுகளிலும் ஆரம்ப வருடங்களில் நடந்தது. விதிவிலக்கே இல்லை. ஏன் என்று யோசிக்க வேண்டும். 80களில் ஒரு சோவியத் ரஸ்ஸிய கூட்டுபண்ணை தொழிலாளர் சொன்னது : “We pretended to work while they pretended to pay”//

செம்புரட்சி நடந்த நாடுகளுக்கு போவதற்கு முன்னர், தொழிற்புரட்சி நடந்த நாடுகளை எடுத்துப் பாருங்கள். ஆண்களுக்கும், பெண்களுக்கும் வித்தியாசமான சம்பளம். குழந்தைத் தொழிலாளர்கள். பாதுகாப்பற்ற தொழிற்சாலைகள். சராசரி 12 மணித்தியாலத்திற்கும் அதிகமான வேலை நேரம். இவையெல்லாம் முதலாளித்துவ நாடுகளில் இருக்கவில்லையா? அதைப் பற்றிக் கேட்டால், அது அந்தக் காலம் என்று சமாளிப்பார்கள். உலகில் முதலாளித்துவம் முன்னூறு வருடங்களாக இருந்து வருகின்றது.

அமெரிக்காவில் 300 வருடங்களுக்கு முன்பிருந்த காட்டுமிராண்டி கால முதலாளித்துவத்தை, இன்றுள்ள வளர்ச்சி அடைந்த முதலாளித்துவத்துடன் ஒப்பிடாதீர்கள் என்று அதியமானே வாதாடுவார். உண்மை தான். முதலாளித்துவத்தின் வளர்ச்சியோடு ஒப்பிட்டால், சோஷலிசம் இன்றைக்கும் ஒரு குழந்தை. பொதுவாக, நாங்கள் வயதுவந்தவர்களின் தவறுகளை தான் சுட்டிக் காட்டுவோம். சட்டங்கள் கூட அவர்களை தண்டிப்பதற்காகத் தான் இயற்றப் பட்டன. ஆனால், குழந்தைகள், சிறு பிள்ளைகள் விடும் தவறுகளை, பொறுத்துக் கொள்ளும் பக்குவம் நமக்கு வேண்டும். அவை வளரும் காலத்தில் தாமாகவே திருத்திக் கொள்ளும் என்பதை உணர வேண்டும்.

அதியமான்: //இன்று உலகில் எங்கும் சோசலிச பாணி கம்யூனிச அமைப்புடைய நாடே இல்லை. கூபாவையும் சொல்ல முடியாது. 50 ஆண்டுகளில் பெரும் மாற்றம். வரும் காலங்களில் செம்புரட்சி உருவாக வாய்புள்ள நாடு என்று ஒரு நாட்டையும் சொல்ல முடியவில்லை.//

21 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் நேபாளத்தில் மாவோயிஸ்ட் போராட்டம் நடந்தது. மாவோயிஸ்டுகள் நாட்டை பிடித்து விடுவார்கள் என்ற அச்சத்தில், ஐ.நா. தலையிட்டு சமரசப் பாதைக்கு கொண்டு வந்தார்கள். சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் பின்னர், உலகம் ஒரு துருவ மயப் பட்டு விட்டது. அமெரிக்கா தலைமையிலான முதலாளித்துவ நாடுகளின் பலம் பல மடங்கு அதிகரித்து விட்டது. எங்காவது ஒரு சோஷலிசப் புரட்சி வந்து விடுமோ என்ற அச்சத்தில், உழைக்கும் மக்களைப் பிரித்து விடும் நோக்கில், இனவெறி, அல்லது மதவெறி தூண்டி விடப் படுகின்றது.

சர்வதேச மூலதனம், உலகம் முழுவதும் வியாபித்துள்ளது. அது ஊடுருவாத உலக நாடு எதுவும் கிடையாது. அதனால், கியூபா, வட கொரியா போன்ற சிறிய நாடுகள், சில விட்டுக் கொடுப்புகளை செய்து வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது ஒரு வகை தப்பிப் பிழைக்கும் அரசியல். அதற்காக, எந்த நாட்டிலும் புரட்சிக்கான தேவை இல்லை என்று ஒரேயடியாக முடிவு கட்டி விட முடியாது. ஒரு ஊரில் ரௌடிகள் அட்டகாசம் செய்தால், நமக்கேன் வீண் வம்பு என்று அடங்கிப் போவோர் தான் அதிகம். அதற்காக, அந்த ஊரில் உள்ளவர்களுக்கு, சுய கெளரவம் கிடையாது என்று நினைப்பது அறியாமை.

அதியமான்: //இந்தியா இன்று ஊழல்மயமாக உள்ளது. சராசரி இந்தியானின் நேர்மை மற்றும் ஊழலுக்கு துணை போகாத ஒழுக்கம் குறைவுதான். எதோ ஒரு வகையில் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஓட்டு போடும் மனோபாவம் மிக பரவலாக வேறூண்றிவிட்டது. அரசு ஊழியர்களின் நேர்மை மற்றும் உற்பத்தி திறன் பற்றி சொல்லவே வேண்டாம். மொத்த மக்களும் செம்புரட்சியின் மூலம் அரசு ஊழியர்களாக மாற்றப்பட்டால் என்ன ஆகும் என்று கற்பனை செய்யவே கொடுமையாக உள்ளது.//

இதெல்லாம் இந்தியாவில் மட்டும் நடப்பதில்லை. பாராளுமன்ற ஜனநாயக முறை இருக்கும் எல்லா நாடுகளிலும் நடக்கிறது. சாதாரண வாக்காளர்கள் லஞ்சம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுகிறார்கள் என்றால், அவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் கட்சிக்கு பல கோடிப் பணம் ஆதாயமாக வருகின்றது என்று அர்த்தம். இது, ஒரு திருடனை காட்டிக் கொடுக்காமல் இருப்பதற்காக, திருட்டை நேரில் பார்த்த ஒருவர் பணத்தில் பங்கு கேட்பது போன்றது. எல்லோருமே திருடர்கள் என்றால், நாங்கள் மட்டும் நாணயமாக இருந்து என்ன பிரயோசனம் என்று மக்கள் நினைக்கிறார்கள். இது முதலாளித்துவ அமைப்பின் குறைபாடு. அதாவது, தனிநபர்வாதம், சுயநலன் மட்டுமே முக்கியமானது.

அரசு ஊழியர்கள் எல்லோரும் அதிகார தரத்தில் உள்ளவர்கள் அல்ல. ஒரு அரசாங்க நிறுவனத்தில் வேலை செய்யும் சாதாரண தொழிலாளியால், என்ன ஊழலை செய்து விட முடியும்? அதியமான் போன்றோரின் கண்களுக்கு, கார்ப்பரேட் நிறுவனங்களில் நடக்கும் ஊழல் தென்படாது. கார்ப்பரேட் நிறுவனங்கள், ஒப்பந்தங்களை பெற்றுக் கொள்வதற்காக, அரசுக்கு கோடிக் கணக்கான பணத்தை இலஞ்சமாக கொடுக்கின்றன.

அதியமான்: //இதற்க்கு மாற்றாக, தனிநபர்வாதத்தை அடிப்படையாக கொண்ட சுதந்திர சந்தை பொருளாதாரத்தை, ஜனநாயக முறையில், முறையாக பின்பற்றிய பல நாடுகள் கடந்த 100 ஆண்டுகளில் பெரும் வளர்ச்சி பெற்று, வறுமையில் அளவை மிக மிக குறைத்து, இன்று செழிப்பான வளர்ந்த நாடுகளாக மாறின. மே.அய்ரோப்பிய நாடுகள், வட அமெரிக்க நாடுகள், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தைவான் போன்ற பல நாடுகளின் economic history அய் பார்த்தாலே புரியும்.//

அமெரிக்காவில் 17 மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்கிறார்கள். மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அது சரி, இங்கே பெயர் குறிப்பிடப் படாத பிற நாடுகள் எல்லாம் சோஷலிச நாடுகளா? எத்தனையோ லத்தீன் அமெரிக்க நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், ஆசிய நாடுகள், காலங்காலமாக முதலாளித்துவ பொருளாதாரத்தை பின்பற்றி வருகின்றன. தனிநபர்வாதம், சுதந்திர சந்தை போன்றன அந்த நாடுகளிலும் உள்ளன. அவை ஏன் இன்னமும் “வறிய நாடுகள்” என்று அழைக்கப் படுகின்றன? எதற்காக “மூன்றாமுலக நாடுகள்” என்ற பாகுபாடு? அந்த நாடுகளின் economic history யும் எடுத்துப் பார்ப்போமே?

அதியமான்: //கம்யூனிசம் வெற்றி பெற வேண்டுமானால், அனைத்து மக்களையும் உண்மையான கம்யூனிஸ்டுகளாக மாற்ற வேண்டும். கம்யூனிசம் என்றால் என்னவென்று புரிய வைத்து, அதை நம்ப வைத்து, முழுமையாக ஏற்க்க வைக்க வேண்டும். இது நடைமுறையில் சாத்தியமே இல்லை என்பதையே வரலாறு நிருபிக்கிறது. அதனால் தான் உலகெங்கிலும் இச் சித்தாந்தம் இன்று காலாவதியானதாக கருதப்படுகிறது.//

ஆஹா, அதியமானின் கற்பனை வளம் வியக்க வைக்கிறது. உலகில் எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும், அது இந்தியாவாகட்டும், அமெரிக்காவாகட்டும், அங்கு வாழும் மக்களில் பெரும்பான்மையினருக்கு அரசியல் ஆர்வம் கிடையாது. இசைத் துறையில், விளையாட்டுத் துறையில் நாட்டம் உள்ள ஒருவனிடம், எவ்வாறு அரசியலை திணிக்க முடியும்? கம்யூனிசம், சோஷலிசம் என்பது வர்க்கப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. அதியமான் தனது கட்டுரை முழுவதும், “வர்க்கம் என்ற சொல்லை தவிர்த்து வந்திருக்கிறார்.” அது ஒன்றும் தற்செயலாக நேர்ந்த தவறு அல்ல.  மனிதர்கள் பல பிரிவுகளாக வாழ்கின்றனர். அவர்கள் மத்தியில் வர்க்கங்கள் உண்டு. அதற்கென்று தனியான கலாச்சாரம் உண்டு.

முதலாளித்துவ உலகில், ஒரு பொருளை சந்தைப் படுத்தும் பொழுது வர்க்கத்தையும் கவனத்தில் எடுக்கிறார்கள். விலை மலிவான பொருட்கள், அடித்தட்டு அல்லது மத்தியதர வர்க்க மக்களை குறி வைத்து சந்தைக்கு வருகின்றன. அதற்கு மாறாக, அதிக விலையுள்ள பொருட்கள், பணக்கார வாடிக்கையாளர்களை குறி வைத்து விற்பனை செய்யப் படுகின்றன. மேட்டுக்குடியினரின் வாழ்க்கை முறைக்கும், அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முறைக்கும் இடையில், மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. சினிமாக்களை தவிர, நிஜ வாழ்க்கையில், இரு துருவங்களாக பிரிந்து நிற்கும் வர்க்கங்களை சேர்ந்தவர்கள், திருமண உறவு வைத்துக் கொள்வதில்லை.

அதியமான் சொல்வது போன்று, அனைத்து மக்களையும் கம்யூனிஸ்டுகளாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. கட்சி அங்கத்தவர்களும், அரசியலில் ஆர்வம் உள்ளவர்களும் மட்டுமே, கம்யூனிசம் என்றால் என்னவென்று படிக்க விரும்புவார்கள். சாதாரண மக்களுக்கு அது தேவையில்லை. அவர்கள் மனதில் வர்க்க விழிப்புணர்வை ஏற்படுத்தி விட்டால் போதும். அவர்களுக்கு மக்களின் எதிரிகளை அடையாளம் காட்டினால் போதும். மிகுதியை உழைக்கும் வர்க்க மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.

"ஒரு முதலாளி எவ்வாறு தொழிலாளியை சுரண்டுகிறான். ஒரு பணக்காரன் எவ்வாறு தீய வழியில் செல்வம் சேர்க்கிறான். ஒரு நிலப்பிரபு எவ்வாறு ஏழைகளின் நிலங்களை அபகரிக்கிறான். ஒரு கந்துவட்டிக்காரன் எவ்வாறு கடன்கார்களின் இரத்தத்தை உறுஞ்சுகிறான். ஒரு எஜமான் எவ்வாறு அடிமைகளை கொடுமைப் படுத்துகிறான்...." உழைக்கும் மக்களிடம் இது போன்ற தகவல்களை சொல்லிக் கொடுத்தால் போதும். அது சிலநேரம் அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும்.

 சமூகத்தில் தெளிவாகத் தெரியும் வர்க்க வேறுபாடுகளை, சமூக அநீதிகளை புரிந்து கொள்வதற்கு, யாரும் கம்யூனிசம் படிக்கத் தேவையில்லை. அது உழைக்கும் மக்களின் அன்றாட அனுபவக் கல்வி. ஆனால், அதியமான் போன்ற மேட்டுக்குடி அறிவுஜீவிகளுக்கு மட்டும், அவை கண்ணுக்குத் தெரிவதில்லை. அவர்கள் எந்தளவு தூரம் மக்களிடம் இருந்து அந்நியப் பட்டிருக்கிறார்கள் என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகின்றது.


அதியமான் எழுதிய உபரி மதிப்பு பற்றிய கட்டுரைக்கு எதிர்வினையாக, தோழர் அ.கா.ஈஸ்வரன் எழுதிய கட்டுரையையும் வாசிக்கவும்:
K.R.அதியமான் அவர்களின் “"உபரி மதிப்பு” என்னும் மாயை” என்ற கருத்தின் மீதான எனது எதிர்வினை

Monday, May 26, 2014

"முன் தோன்றிய மூத்த குடி, தொன்மையான மொழி" : சிங்கள பாசிஸ இனப் பெருமிதம்


சிங்கள பாசிஸ்டுகளும், "உலகில் முதலில் தோன்றிய மூத்தகுடி சிங்கள இனம் தான்..." என்றெல்லாம் பழம் பெருமை பேசுவதை அரசியல் கொள்கையாக கொண்டுள்ளனர்.

இலங்கையில் பிரபலமான சிங்கள பாசிஸ கட்சியான "ஜாதிக ஹெல உறுமய" கட்சியின் தலைவர் சம்பிக்க ரணவக்க, அண்மையில் பாரிஸ் நகரில் ஆற்றிய உரையில் தெரிவித்த கருத்துக்கள் சிலவற்றை இங்கே தருகிறேன். சிங்கள இனவாதிகள் பேசுவதற்கும், தமிழ் இனவாதிகள் பேசுவதற்கும் இடையில் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா? தமது இனத்தின், மொழியின் பழம் பெருமை பேசுவதில், இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்லர்.

சம்பிக்க ரணவக்கவின் உரையில் இருந்து: 

  •  "எமது மொழி மிகவும் பழமையானது. மூவாயிரம் வருடங்களுக்கும் அதிகமாக, இந்தியாவில் சமஸ்கிருதம் வருவதற்கு முன்பிருந்தே, எமது மொழி அழியாமல் இருந்து வருகின்றது."
  •  "இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி என்று எந்த தேசமும், தனக்கென்று பொதுவான மறை நூலைக் கொண்டிருக்கவில்லை. எமக்கும், இஸ்ரேலிய யூதர்களுக்கும் மட்டுமே அது உண்டு. உலகிலேயே தொன்மையான, எமது இனத்திற்கென்று பொதுவான நூல் அது.
  •  "எமது நாடு உலகிலேயே பழமையான நாடு. எமது ஸ்ரீபாத (சிவனொளிபாத) மலை, இமய மலையை விடப் பழமையானது."

"தமது இனம் எந்தத் தவறும் இழைப்பதில்லை. புழு, பூச்சிக்கு கூட தீங்கிழைப்பதில்லை. எதிரி இனத்தவர்கள் மட்டுமே கொடுமைக்காரர்கள்..." இவை உலகம் முழுவதும் உள்ள பாசிஸ்டுகளின் வழமையான பிரச்சாரம். அதற்காக, தர்க்கங்களையும் தயாரித்து வைத்திருப்பார்கள்.


சம்பிக்க ரணவக்க ஆற்றிய உரையில் இருந்து:

  • "டெல்லியில் இந்திரா காந்தி சீக்கிய தீவிரவாதிகளால் கொல்லப் பட்டார். அதற்கு பதிலடியாக நடந்த கலவரத்தில் ஆயிரக் கணக்கான சீக்கியர்கள் கொல்லப் பட்டனர். எமது நாட்டில், எமது ஜனாதிபதி பிரேமதாசவை தமிழ் தீவிரவாதிகள் கொன்றார்கள். நாங்கள் கொழும்பில் வாழ்ந்த தமிழர்கள் மேல் கை வைத்தோமா?"
  • "குஜராத்தில் கோத்ரா ரயில் வண்டி எரிப்பில் இந்துக்கள் கொல்லப் பட்டார்கள். அதற்கு பழிவாங்குவதற்காக நடந்த கலவரத்தில் ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் கொல்லப் பட்டனர். எமது நாட்டில், புலிகள் கொழும்பின் பல பகுதிகளில் குண்டு வைத்து, பல நூறு சிங்கள மக்களை கொன்றார்கள். நாங்கள் அதற்குப் பழிவாங்குவதற்காக தமிழர்களை கொன்றோமா?"
  • "போர் நடந்த காலங்களில், சுரேஷ் பிரேமச் சந்திரன், விக்னேஸ்வரன் போன்ற தமிழ்த் தலைவர்கள் கொழும்பில் பாதுகாப்பாக வசித்தார்கள். வடக்கில் ஒரு சிங்களவர் இல்லை. எல்லோரும் வடக்கில் இருந்து முஸ்லிம்கள் விரட்டப் பட்டதை பற்றி மட்டுமே பேசுகிறார்கள். வடக்கில் இருந்து சிங்களவர்கள் விரட்டப் பட்டதை பற்றி யாரும் பேசுவதில்லை."

சம்பிக்க ரணவக்க முன்வைக்கும் தர்க்கங்கள் தான், சிங்கள பாசிசத்தின் அடிப்படைகள். பாஸிசம் எப்போதும் ஒரு பக்கச் சார்பான கதைகளையும், அரைவாசி உண்மைகளையும், திரிபுபடுத்தப் பட்ட வரலாற்றையும் மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் 13 சிங்கள இராணுவ வீரர்கள் கொல்லப் பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாகத் தான் 83 கலவரம் நடந்தது. குஜராத் கலவரத்தில் முஸ்லிம்கள் கொல்லப் பட்டது போன்று, டெல்லி கலவரத்தில் சீக்கியர்கள் கொல்லப் பட்டது போன்று, கொழும்பு கலவரத்தில் தமிழர்கள் கொல்லப் பட்டனர். கலவரத்தில் ஈடுபட்ட கும்பலின் கொலைவெறி, பலியான மக்களின் அவலம், கலவரம் நடத்தப் பட்ட பொறிமுறை, எல்லாமே ஒரே மாதிரித் தான் அமைந்திருந்தன.

83 கலவரம் பழிவாங்கும் நடவடிக்கை என்றால், அதற்கு முன்னர் நடந்த கலவரங்களுக்கு காரணம் என்ன? சிங்கள ஸ்ரீ எழுத்தை அழித்தார்கள், என்பன போன்ற உப்புச் சப்பற்ற காரணத்திற்காக எல்லாம், தமிழர்கள் கொல்லப் படவில்லையா?

பிரேமதாச கொல்லப் பட்ட போதும், கொழும்பில் குண்டுவெடித்த போதும், தமிழர்களுக்கு எதிரான கலவரம் எதுவும் நடக்காத காரணம், "சிங்கள மக்களின் சகிப்புத் தன்மை" அல்ல. கொழும்பில் கலவரம் நடந்தால், அரசுக்கு சர்வதேச மட்டத்தில் கெட்ட பெயர் உண்டாகும் என்ற எச்சரிக்கை உணர்வு ஒரு காரணம். அப்போது போர் நடந்து கொண்டிருந்ததால், வடக்கு கிழக்கில் போரிடும் சிங்களப் படையினர், "பழிவாங்கும் வேலையை" கவனித்துக் கொள்வார்கள் என்ற "நம்பிக்கை", இன்னொரு காரணம்.

முஸ்லிம்கள் மாதிரி, வடக்கில் வசித்து வந்த சிங்கள மக்களும் விரட்டப் பட்டார்கள் என்பது ஒரு திரிபு படுத்தல். பாதுகாப்பு அச்சம் காரணமாக, எண்ணிக்கையில் குறைவாக இருந்த சிங்களவர்கள் தாமாகவே வெளியேறிச் சென்றனர். வவுனியா, கிழக்கு மாகாண எல்லையோரக் கிராமங்களிலும், அது தான் நிலைமை. போரினால் பாதிக்கப்பட்ட சிங்களக் கிராம மக்கள் மட்டுமே வெளியேறினார்கள். அது கூட, பலவந்தமாக வெளியேற்றப்பட்ட தமிழ்க் கிராம மக்களுடன் ஒப்பிடும் பொழுது, எண்ணிக்கையில் மிகக் குறைவு. ஆனாலும், பாசிஸ்டுகள் எப்போதும், தம்மின மக்களின் பிரச்சினை பற்றி மட்டுமே சிந்திப்பார்கள். மற்ற இன மக்களின் அவலம் குறித்து அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை.

சம்பிக்க ரணவக்கவின் உரையானது, இஸ்ரேலிய அரசின் பிரச்சாரங்களை நினைவு படுத்துகின்றது. "பாலஸ்தீன தீவிரவாதிகள் எமது மக்களை கொன்றார்கள். நாங்கள் அதற்குப் பதிலடியாக டெல் அவிவ் நகரில் வாழும் அரபு மக்களுக்கு தீங்கு இழைத்தோமா?" என்றெல்லாம் கேட்பார்கள். சிங்களவர்களுக்கும், யூதர்களுக்கும் இடையில் ஒற்றுமை இருப்பதாக, சம்பிக்க ரணவக்க தனது உரையின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டார். சிங்களப் பாஸிசம், சியோனிசப் பாசிசத்திடம் இருந்து நிறைய விடயங்களை கற்றுக் கொண்டுள்ளது என்பது உண்மை தான்.



சம்பிக்க ரணவக்கவின் முழுமையான உரை:





Sunday, May 25, 2014

துருக்கியில் கம்யூனிசப் போராளிகள், இனிமேல் ஆயுதங்கள் பேசும்

துருக்கியில் கம்யூனிசப் போராளிகள். 
 அமைதி வழி ஆர்ப்பாட்டம் அடக்கப் பட்டால், ஆயுதங்கள் பேசும் 



துருக்கி, இஸ்தான்புல் நகரின் ஒரு பகுதியான Okmeydani எனும் இடத்தில், சில ஆயுதபாணி இளைஞர்களின் நடமாட்டம் காரணமாக, அங்கு மின்சாரம் துண்டிக்கப் பட்டுள்ளது. அந்த இடத்தை காவல்துறையினர் சுற்றி வளைத்துள்ளனர். தலைமறைவாக இயங்கும், DHKP எனும் கம்யூனிச கெரில்லா இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர்களே, ஆயுதங்களுடன் நடமாடுவதாக சந்தேகிக்கப் படுகின்றது. துருக்கியில் ஓர் உள்நாட்டு யுத்தம் தொடங்குவதற்கான அறிகுறி?
இஸ்தான்புல் நகரின் Sarigazi பகுதியும், ஆயுதபாணி இளைஞர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அந்தப் பகுதியில், துருக்கி மாவோயிஸ்ட் கட்சியான TKP/ML உறுப்பினர்கள் ஆயுதங்களுடன் நடமாடுகின்றனர். பொலிஸ் தாக்குதல்களில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக, ஆயுதமேந்தியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். 
Footage from last night's clashes in Sarigazi.














"பொலிஸ் மக்களின் நண்பன் அல்ல. அது மேட்டுக்குடியினரின் அடியாட் படை," என்பதற்கு இந்தப் படமே சான்று. இஸ்தான்புல் நகரில், சோமா நிலக்கரிச் சுரங்க விபத்து தொடர்பாக, துருக்கி அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த ஒருவரை, துருக்கி போலீசார் தெருவில் போட்டு அடிக்கின்றனர். பொலிஸ் பக்கத்தில் நின்று கொண்டு, அகப்பட்ட ஆர்வலரை காலால் உதைக்கும், இந்த கோட்டு சூட்டு போட்ட ஆசாமி யார் தெரியுமா? துருக்கி பிரதமர் எர்டோகானின் அந்தரங்க ஆலோசகர். இந்தப் படம் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியாகி உலகெங்கும் பிரபலமாகி விட்டது. அதனால், ஏற்டோகனின் ஆலோசகர் பொது மக்களின் வெறுப்பை சம்பாதித்திருந்தார். அவர் அன்றே ஒரு வேலை செய்தார். "உதைத்ததால் கால் வலிக்கிறது" என்று சொல்லி, மருத்துவச் சான்றிதழ் எடுத்துக் கொண்டு, வேலைக்கு செல்லாமல் வீட்டில் தங்கி விட்டார். 

Turkish PM’s adviser goes on sick leave for injury to leg used to kick Soma protester http://www.hurriyetdailynews.com/Default.aspx?pageID=238&nID=66658&NewsCatID=338




துருக்கியில், எட்டாண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த, இடதுசாரி பெண் ஊடகவியலாளர் Füsun Erdogan, திடீரென விடுதலை செய்யப் பட்டுள்ளார். நெதர்லாந்து குடியுரிமை பெற்ற Füsun Erdogan, இஸ்தான்புல் நகரில் Özgür Radyo (சுதந்திர வானொலி) என்ற வானொலி நிலையத்தை நடத்தி வந்தார்.

இலட்சக் கணக்கான மக்கள் வாழும் இஸ்தான்புல் நகரத்தில், பொதுவுடமைக் கருத்துக்களை பரப்பி வந்தது. செய்திகள், நேர்காணல்கள், புரட்சிப் பாடல்கள் என்று, வழமையான வர்த்தக வானொலிகளில் இருந்து மாறுபட்டு இயங்கிக் கொண்டிருந்தது.

துருக்கியில் ஒரு மகாநாட்டிற்கு கலந்து கொள்ள சென்றிருந்த நேரம், Füsun Erdogan னை நேரில் கண்டு பேசியிருக்கிறேன். Özgür Radyo வானொலியில் எனது நேர்காணலும் நேரடி ஒலிபரப்புச் செய்யப் பட்டது. இது நடந்தது 2006 ம் ஆண்டு. மகாநாடு முடிந்து சில மாதங்களின் பின்னர், Özgür Radyo வானொலி நிலையம் மூடப் பட்டது. Füsun மற்றும் சில அரசியல்- சமூக ஆர்வலர்கள் கைது செய்யப் பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

Füsun இரட்டைக் குடியுரிமை பெற்றவர். அவரது கைது தொடர்பாக, நெதர்லாந்து வெளிவிவகார அமைச்சிற்கு அறிவிக்கப் பட்டது. இருப்பினும், துருக்கி குடியுரிமையும் வைத்திருந்த காரணத்தால், அரசு அவரை விடுதலை செய்ய மறுத்து விட்டது. இருப்பினும், நெதர்லாந்து ஊடகவியலாளர்கள் சங்கம் (NVJ), ஐரோப்பிய ஊடகவியலாளர்கள் சங்கம் (EFJ) ஆகியன, அவரது விடுதலைக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்தன.

Füsun இன் மகன் Aktas Erdogan, கடந்த இரண்டு வருடங்களாக, தாயின் விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்தார். சங்கீதக் கல்லூரியில் இறுதியாண்டு மாணவனான Aktas ஒரு கிட்டார் இசைக் கலைஞன். ஐரோப்பிய ஊடகவியலாளர்களை தொடர்பு கொண்டு அழுத்தம் கொடுத்ததில் அவரது பங்கு அளப்பரியது.

துருக்கியில் அண்மையில் சில சட்டங்கள் திருத்தப் பட்டன. சில குற்றங்களுக்கான தண்டனைக் காலம் குறைக்கப் பட்டது. அதனால் தான், ஆயுட்கால சிறைத் தண்டனை விதிக்கப் பட்ட Füsun, திடீரென விடுதலை செய்யப் பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. "ஒரு இடதுசாரி பயங்கரவாத இயக்கத்தை தலைமை தாங்கியதாக" அவர் மீது குற்றம் சுமத்தப் பட்டது. MLKP என்ற கம்யூனிஸ்ட் கட்சியைத் தான், அரசு அவ்வாறு குறிப்பிடுகின்றது.

துருக்கியில் எந்தவொரு கம்யூனிஸ்ட் கட்சியையும், சட்டப் படி இயங்க அனுமதிப்பதில்லை. ஏதாவதொரு காரணம் சொல்லித் தடைசெயவார்கள். அவ்வாறு தான், MLKP தடை செய்யப் பட்டிருந்தது.

குறைந்த பட்ச ஜனநாயக உரிமைகளை பயன்படுத்தி, MLKP வேறு பெயரில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அது எந்த ஆயுதபாணி நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. இருப்பினும், கம்யூனிஸ்டுகள் என்றால், ஏதாவதொரு பொய்க் குற்றம் சுமத்தி சிறையில் அடைப்பது துருக்கியில் வாடிக்கையாக நடந்து கொண்டிருக்கிறது.

Füsun இனை பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு படுத்துவதற்காக, பொலிஸ் தயாரித்த ஆவணங்களில் பல குளறுபடிகள் இருந்ததும் நீதிமன்ற விசாரணையில் கண்டுபிடிக்கப் பட்டது. எட்டு வருடங்களுக்கு பின்னர், திடீரென விடுதலை செய்யப் பட்டதற்கு, அதுவும் காரணமாக இருக்கலாம். இருப்பினும், தற்போது விடுதலையாகி உள்ள Füsun, துருக்கியை விட்டு வெளியேறக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப் பட்டுள்ளது. விரைவில் அவர் நெதர்லாந்து வருவார் என்று எதிர்பார்ப்போம்.