Sunday, June 01, 2014

இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் தொடரும் பெண்கள் மீதான வன்கொடுமை


பாகிஸ்தானில் மட்டுமல்ல, இந்தியாவிலும் பெண்கள் மீதான வன்கொடுமைகள் நடக்கின்றன. பாகிஸ்தானில் பெண்களுக்கு அநீதி இழைக்கப் படும் சம்பவங்களை சுட்டிக் காட்டும் இந்து மதவாதிகள், இந்தியாவில் நடக்கும் அது போன்ற சம்பவங்களை மூடி மறைப்பார்கள். மேற்கத்திய நாடுகளைப் பொறுத்த வரையில், பாகிஸ்தான் மட்டுமல்ல, இந்தியாவும், பெண்களைக் கொடுமைப் படுத்துவதில் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. அண்மையில் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும், நடந்த கொடூரமான கொலைச் சம்பவங்கள் பற்றி, நெதர்லாந்து தினசரிப் பத்திரிகை ஒன்றில் வந்த கட்டுரையை இங்கே மொழிபெயர்த்திருக்கிறேன்.
 ___________________________________________________________


 ஒரு மாமரத்தில் தொங்க விடப் பட்டவர்கள்

இரண்டு கொடூரமான கொலைச் சம்பவங்களுக்கு பின்னர், சமூகத்தில் பெண்களின் நிலைமை பற்றி, அயல்நாடுகளான இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் மிகத் தீவிரமான விவாதம் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. இரண்டு சம்பவங்களிலும், பெண்களின் கீழ்ப்படிவான நிலைமையும், அதிலிருந்து உருவாகும் பாதுகாப்பற்ற சூழ்நிலையும் முக்கியமான பேசுபொருள் ஆகியுள்ளது.

நேற்று நடந்த 14, 15 வயதுடைய இரண்டு சிறுமிகளின் கொலைச் செய்தி கேள்விப்பட்டு, முழு இந்தியாவும் அதிர்ச்சி அடைந்து விழித்தெழுந்தது. உத்தரப் பிரதேச மாநிலத்தில், நாட்டுப்புற கிராமம் ஒன்றில், அவர்களது இறந்த உடல்கள் ஒரு மாமரக் கிளையில் கட்டித் தொங்க விடப் பட்டிருந்தமை கண்டுபிடிக்கப் பட்டது. தடயவியல் பரிசோதனையின் படி, தாழ்த்தப் பட்ட சாதியை சேர்ந்த இரண்டு சிறுமிகளும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பின்னர், கயிறு கட்டித் தூக்கிலிட்டதால் மரணம் சம்பவித்துள்ளது.

கடந்த செய்வாய்க் கிழமை, 25 வயதான கர்ப்பிணிப் பெண்மணி, அவரது பெற்றோரின் சொல்லை மீறி திருமணம் செய்த படியால், கல்லெறிந்து கொல்லப் பட்ட சம்பவம், பாகிஸ்தானை இன்னமும் உலுக்கிக் கொண்டிருக்கிறது. Farzana Parveen என்ற பெயருடைய அந்தப் பெண்ணை, அவரது உறவினர்களே கல்லால் அடித்துக் கொன்றிருக்கலாம். ஒரு கௌரவக் கொலையென நம்பப்படும் சம்பவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, பிரதமர் நவாஸ் ஷெரிப் அது குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவின் விடயத்தில், ஒரு பெண்ணின் பாத்திரம் மட்டும் காரணம் அல்ல. இந்திய அதிகாரிகள் கூறுவதன் படி, கொலையாளிகள் யாதவ் உயர்சாதியை சேர்ந்தவர்கள். உத்தரப் பிரதேச முதலைமைச்சர் அதே சாதியை சேர்ந்தவர் என்பதால், யாதவ் சாதியினர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாக கருதப் படுவதாக, ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சாதிப் பாகுபாடு சட்டத்தினால் தடை செய்யப் பட்டிருந்தாலும், கிராமப் புறங்களில் அது முக்கிய பங்காற்றி வருகின்றது. முந்திய காலங்களில், உயர்சாதி ஆண்கள், தாழ்ந்த சாதிப் பெண்களை, தண்டனைக்கு அஞ்சாமல் பலாத்காரம் செய்ய முடிந்தது.

இந்தச் சம்பவத்தில் பலியான சிறுமிகளின் உறவினர்கள், அவர்களை யாதவர்கள் தூக்கிச் சென்று விட்டார்கள் என்று கேள்விப் பட்ட உடனேயே காவல்துறையில் முறைப்பாடு செய்தனர். ஆனால், யாதவ் சாதியை சேர்ந்த பொலிஸ்காரர்கள், எந்த நடவடிக்கையும் எடுக்க மறுத்து விட்டனர். சடலங்கள் கண்டுபிடிக்கப் பட்ட பின்னர், மேலிடத்தில் இருந்து தலையிட்டார்கள். அதனால் ஒரு சந்தேகநபரும், ஒரு பொலிஸ்காரரும் கைது செய்யப் பட்டனர். இன்னும் இரண்டு யாதவ் பொலிஸ்காரர்கள் பணியில் இருந்து இடைநிறுத்தப் பட்டனர். ஐந்து சந்தேகநபர்கள் தலைமறைவாகி உள்ளனர்.

யாதவர்கள், இதற்கு முன்னரும், பல தடவைகள் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகி உள்ளனர் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தடவை நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்தில் பலியானவர்கள், தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் என்பதால், ஊடகங்கள் சாதிப் பாகுபாடு பற்றியும் பேச நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தில் குற்றவாளிகளாக இனம் காணப்படும் ஒவ்வொருவரும் தண்டிக்கப் படுவார்கள் என்று, மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

2012 ம் ஆண்டின் இறுதிப் பகுதியில், தாழ்ந்த சாதியை சேர்ந்த ஆண்களைக் கொண்ட குழுவினரால், ஒரு பெண் மாணவி தனியார் பேரூந்து வண்டியில் பலாத்காரம் செய்யப் பட்டாள். அதைத் தொடர்ந்து தினந்தோறும் ஆர்ப்பாட்டம் நடந்ததால், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது.

பாகிஸ்தான் சம்பவத்தில் பலியானவர் எவ்வாறு கொலை செய்யப் பட்டார் என்பதில் தெளிவில்லை. பொலிஸ் அறிக்கையின் பிரகாரம், முதலில் அவர் காலில் சுட்டுக் காயப் படுத்தப் பட்டார். அதை அடுத்து, ஒரு சகோதரன் அவளின் தலையில் மூன்று தடவைகள் செங்கட்டியால் அடித்துள்ளான். தொடர்ந்து மற்றைய உறவினர்களும் செங்கட்டிகளால் அடித்துள்ளனர்.

சம்பவத்தில் பலியான பர்சனாவின் கணவர் முகம்மது இக்பாலின் கூற்றுப் படி, அங்கிருந்த பொலிஸ்காரர்களும், வழிப்போக்கர்களும் எதுவுமே செய்யாது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். பொலிஸ் அந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. "பர்சனாவின் உறவினர்களும், இக்பாலின் உறவினர்களும் மோதலில் ஈடுபட்டதாகவும், இரண்டு தரப்பினரையும் விலத்தி வைப்பதற்கு, போதுமான ஆட்பலம் தம்மிடம் இருக்கவில்லை என்றும்", பொலிஸ் ஒரு காரணத்தை கூறுகின்றது.

"தனது பெற்றோர்கள் கூறுவது போன்று, தனது கணவன் கட்டாயப் படுத்தி தான் இந்த திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை", என்று கூறுவதற்காக, பர்சனா நீதிமன்றத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். பெற்றோர்கள் பார்த்து வைத்த வரனான சொந்த மைத்துனரை திருமணம் செய்ய பர்சனா மறுத்து விட்டதால், "குடும்ப மானத்தை கப்பலேற்றி விட்டாள்" என்று, பெற்றோர்கள் முறையிட்டதாக பொலிஸ் கூறுகின்றது. பாகிஸ்தானிலும், இந்தியாவிலும் சமூக அந்தஸ்து, சாதி ஆகியவற்றின் அடிப்படையில் தான் பெரும்பாலான திருமணங்கள் நிச்சயிக்கப் படுகின்றன.

"அந்தக் கொலை எந்த வகையிலும் நியாயப் படுத்த முடியாதது" என்று பிரதமர் நவாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளதுடன், குற்றவாளிகளை கைது செய்யுமாறு பொலிஸ் படையினருக்கு உத்தரவிட்டுள்ளார். பர்சனாவின் தந்தை மட்டுமே அந்த இடத்தில் கைது செய்யப் பட்டுள்ளார். மற்றவர்கள் தலைமறைவாகி விட்டனர்.

பாகிஸ்தான் மனித உரிமை நிறுவனங்கள் கூறுவது போல, அங்கே வருடத்திற்கு 900 கௌரவக் கொலைகள் நடைபெறுகின்றன. பெரும்பாலானவை தண்டிக்கப் படுவதில்லை. குற்றவாளிகள் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடாக பணம் கொடுப்பதன் மூலம் தண்டனையில் இருந்து தப்பிக்கும் வகையில் சட்டம் அமைந்திருப்பதும் விவாதப் பொருளாகி உள்ளது.

- Joeri Boom (New Delhi correspondent)

(நன்றி: NRC Handelsblad, 30-5-2014)


1 comment:

Unknown said...

Respected Kalai ji,
i am one of the regular visitor's your blog. I wish to publish my Blogs here. this is for who are suffering & loss in the share market. they 'll ready to ask me related this.i am giving free services.if you wish you 'll publish my blogs here this is my blog ID : http://tradersguides.blogspot.in/
Thanks in advance
Regds P.Bharath