Wednesday, August 31, 2011

யூகோஸ்லேவியா படுகொலைகள், மேற்குலகின் பொம்மலாட்டம்

பொஸ்னியாவில் இறுதிக் கட்ட போர் நடந்து கொண்டிருந்த நேரம், சிரபெனிச்சா நகரில், 8000 முஸ்லிம் பொதுமக்களை சேர்பியப் படைகள் இனப்படுகொலை செய்தன. சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் நடந்த போர்க்குற்றங்களுக்காக, சேர்பியப் படைகளின் தளபதி மிலாடிச் கைது செய்யப்பட்டவுடன், நீதி வென்றது என்பது போன்ற பிரமை தோற்றுவிக்கப் பட்டது.

மேற்கத்திய செய்தி ஊடகங்கள், மிலாடிச் கைதானதை, மாபெரும் சாதனையாக குறிப்பிட்டு எழுதியிருந்தன. எமது தமிழ் தேசிய வணிக ஊடகங்களும், அந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டன. மிலாடிச் கைது செய்யப்பட்டதைப் போல, தமிழ் இனப்படுகொலைகளுக்காக ராஜபக்ஷ கைது செய்யப்படலாம் என்று நம்பிக்கை துளிர் விட்டதால் ஏற்பட்ட மகிழ்ச்சி அது. "இலங்கை அரசு கொஞ்ச காலம் மேற்கத்திய கனவான்களை ஏமாற்றினாலும், நீதிமான்கள் இறுதியில் உண்மையை உணர்ந்து நீதி வழங்குவார்கள்...." என்று தமிழர்கள் நம்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டன.

யூகோஸ்லேவிய போர்களின் போது மேற்குலகம் காட்டிய அக்கறை, அதன் அரசியல் பின்னணி, உள்நோக்கம் என்பன போன்ற கேள்விகளை ஒரு பக்கம் வைத்து விடுவோம். அங்கே நடந்த இனப்படுகொலைகளில் மேற்கத்திய நாடுகளின் பங்களிப்பு எவ்வளவு? எதிரி இனத்தை படுகொலை செய்வதற்கு கருவியாக பயன்படுத்தப் பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப் பட்டது. இந்தக் கருவிகளை ஏவிய குற்றவாளிகள் நீதிபதிகளாக வீற்றிருக்கின்றனர். இந்த உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்?

மேற்கத்திய நாடுகளின் தலையீடானது, யூகோஸ்லேவியாவில் இருந்து புதிய குடியரசுகள் பிரிந்த பின்னர் ஆரம்பிக்கவில்லை. டிட்டோவின் சோஷலிச யூகோஸ்லேவியா, மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளுடன் தொடர்பை பேணி வந்தது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர், டிட்டோ, ஸ்டாலினுடன் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து யூகோஸ்லேவியா "COMINTERN" அமைப்பில் இருந்து விலகியது. இதனால் சோவியத் யூனியனின் கடன்கள் வருவது நின்று போனது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அமெரிக்கா IMF கடன்களை பெற்றுக் கொடுத்தது.

ஒரு கம்யூனிச கட்சி ஆண்ட நாட்டில், சோஷலிசப் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஐ.எம்.எப். உதவியது என்பதை நம்புவது கஷ்டமாக இருக்கும். ஆனால் வரலாற்றில் அந்த அதிசயம் நடந்தது. ஐ.எம்.எப். விதித்த நிபந்தனைகள் இட்டுச் சென்ற பொருளாதார சீர்கேடுகள் கண்ணுக்கு புலனாக பல தசாப்தங்கள் எடுத்தன. டிட்டோவின் மறைவிற்குப் பிறகு, மிலோசொவிச் பதவி ஏற்றதும், குறைபாடுகள் மெல்ல மெல்ல வெளித் தெரிய ஆரம்பித்தன. ஒவ்வொரு இனத்திலும், தீவிரவாதிகள் உருவெடுத்தனர். மொழி அடிப்படையிலான குருந்தேசியவாதிகளின் செல்வாக்கு அதிகரித்தது. மிலோசொவிச் கூட, அமெரிக்காவுடன் தொடர்பில் இருந்த, ஐ.எம்.எப். உத்தரவுகளை வேத வாக்காக ஏற்றுக் கொண்ட ஒருவர் தான்.

தற்போது மீண்டும் பொஸ்னியா வருவோம். சிரபெனிச்ச இனப்படுகொலை பற்றிய பின்னணியை முதலில் ஆராய்வோம். போஸ்னியாவில் செர்பிய, குரோவாசிய, முஸ்லிம் இனத்தவர்கள் பரவலாக எல்லா இடங்களிலும் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கிடையில் எந்தவித இனக்குரோதங்களும் இன்றி ஒற்றுமையாக வாழ்ந்தனர். சிரபெனிச்சா நகரம் மத்திய காலத்தில் இருந்து முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாக கொண்டது.

டிட்டோ காலத்தில், சிரபெனிச்சா நகரத்திலும் தொழிற்புரட்சி நடந்தது. ஆலைகளில் வேலை செய்வதற்காக, பெருமளவு செர்பிய தொழிலாளர்கள் கிராமங்களில் இருந்து வந்து குடியேறினார்கள். அவர்களுக்கென நவீன அடுக்குமாடி வீடுகளைக் கொண்ட புற நகரங்கள் உருவாகின. இதனால் சிரபெனிச்சா நகரம் விரிவடைந்தாலும், அதற்குள்ளே செர்பிய வட்டாரங்களும் உருவாகின.

யுத்தம் வெடித்தவுடன், செர்பிய பகுதிகள் யாவும், செர்பிய படைகளின் கட்டுப்பாட்டில் வந்தன. அதே போன்று, முஸ்லிம் பகுதிகள் முஸ்லிம் படைகளினால் கட்டுப்படுத்தப் பட்டன. இரண்டு இராணுவங்களும், மற்ற இனத்தவர் வாழ்ந்த பகுதிகள் மீது ஷெல் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இரண்டு பக்கமும், செர்பிய, முஸ்லிம் பொது மக்கள் பலியாகியுள்ளனர்.

ஆனால், மேற்குலக ஊடகங்கள், நமக்கு அந்த உண்மைகளை கூறவில்லை. "முஸ்லிம் மக்களின் சிரபெனிச்சா நகரை சேர்பியப் படைகள் முற்றுகையிட்டு தாக்கிக் கொண்டிருக்கின்றன. சேர்பியரின் வெறித்தனமான தாக்குதல்களில் அப்பாவி முஸ்லிம் மக்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றனர்...." இவ்வாறு தான் செய்திகள் வாசிக்கப் பட்டன.

இலங்கையில், வன்னியில் நடந்த இறுதிப்போரில், ஐ.நா. அமைதிப் படை தலையிட்டிருந்தால், தமிழ் இனப்படுகொலை நடந்திருக்காது என்று, இன்றைக்கும் பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பொஸ்னிய யுத்தத்தில் இருந்து எந்தப் பாடத்தையும் படிக்கவில்லை என்பது வெள்ளிடை மலை.

முள்ளிவாய்க்காலில் மட்டுமல்ல, சிரபெனிச்சாவில் கூட இனப்படுகொலை நடக்கப் போகின்றது என்று ஐ.நா.வுக்கு முன்பே தெரிந்திருந்தது. இன்னும் சொன்னால், அது நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். 

பொஸ்னிய யுத்தம் பற்றிய செய்திகள், மேற்கத்திய நாடுகளில் பெரும் உணர்வலைகளை உருவாக்கியிருந்தது. ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும் சேர்ந்து ஐ.நா. சமாதானப் படைகளை அனுப்பி வைத்தன. சிரபெனிச்சா நகரம் பாதுகாப்பு வலையமாக பிரகடனப் படுத்தப் பட்டது. நெதர்லாந்தை சேர்ந்த அமைதிப் படையினர் பாதுகாப்புப் பொறுப்புகளை ஏற்றிருந்தனர். ஐ.நா. அமைதிப் படை வந்து விட்டதால், இனி எந்தப் பிரச்சினையும் இல்லை என்று தான் முஸ்லிம்களும் நம்பினார்கள். ஐ.நா. ஆணையின் பிரகாரம், முஸ்லிம் படைகள் ஆயுதங்களை ஒப்படைத்திருந்தன. அதற்குப் பிறகு அந்தப் பிரளயம் அரங்கேறியது.

பொஸ்னிய போர் ஒரு இனப்படுகொலையுடன் முடிய வேண்டும் என்பது, மேற்குலகின் விருப்பம் போலும். தருணம் பார்த்து பாதுகாப்பு வலையங்கள் திறந்து விடப்பட்டன. சிரபெனிச்சா நகரை கைப்பற்றுவதற்காக, சேர்பியப் படைகள் தாக்குதல் தொடுத்த நேரம்.... ஐ.நா. அமைதிப்படை ஒன்றுமே செய்யவில்லை. ஐ.நா. டச்பட் படையணிக்கு பொறுப்பான Thomas Karremans சேர்பியப் படைகளிடம் சரணடைந்தார். 

தமது சொந்தப் படையினரைக் காப்பாற்றக் கூட, ஐ.நா. தயாராக இருக்கவில்லை. மேலிடத்து உத்தரவு காரணமாக, விமானத் தாக்குதல்கள் நடைபெறவில்லை. பிறகென்ன? மிலாடிச் தலைமையிலான சேர்பியப் படைகள், தமது விருப்பம் போல நடந்து கொள்ள அனுமதி வழங்கப் பட்டது. நிராயுதபாணிகளான எண்ணாயிரம் முஸ்லிம்களை, சேர்பியப் படைகள் கொன்று குவித்தன. "சிரபெனிச்சா மீது படையெடுக்கும் எண்ணம் மிலாடிச்சுக்கு இருக்கவில்லை." என்று கரமேன்ஸ் ஒரு விசாரணையில் தெரிவித்தார்.

போஸ்னியப் போரில், ஊடகங்கள் எப்போதும் செர்பியர்களை வெறித்தனமான வில்லன்களாகவும், முஸ்லிம்களை ஒடுக்கப் பட்டோராகவும் காட்டி வந்துள்ளன. சிரபெனிச்சா முஸ்லிம் படைகள், அயலில் இருந்த செர்பியக் கிராமங்களை எரித்து தரைமட்டமாக்கிய செய்திகள் எதுவும் சொல்லப்படவில்லை. இனக்குரோதங்கள் உச்சத்தில் இருந்த போரில், பழிவாங்கும் கொலைகள் நடக்கும் என்று "பரலோகத்தில் இருக்கும் தேவர்கள்" கணித்திருப்பார்கள்.

செர்பிய தலைவர்களான மிலாடிச், கராசிச், மிலோசெவிச்; குரோவாசிய தலைவர் துஜ்மான்; முஸ்லிம் தலைவர் இசபெகொவிச், இவர்கள் எல்லோரும் போர்க்குற்றவாளிகள் என்பதில் சந்தேகமில்லை. இவர்களை பொம்மைகள் போல பின்னால் இருந்து ஆட்டுவித்துக் கொண்டிருந்த கரங்கள் யாருடையவை? ஒருவரை ஒருவர் எதிர்த்து போரிட வைக்க நடந்த சூழ்ச்சிகள் எத்தனை? Jaques Monsieur என்ற பெல்ஜிய ஆயுத வியாபாரி, துஜ்மானின் குரோவாசியப் படைகளுக்கும், இசபெகொவிச்சின் முஸ்லிம் படைகளுக்கும் ஆயுத விநியோகம் செய்துள்ளார்.

இதே காலகட்டத்தில் தான், கிழக்கு ஜெர்மனியும் மேற்கு ஜெர்மனியும் இணைந்தன. முன்னாள் சோஷலிச ஜெர்மனியை பொறுப்பேற்ற மேற்கு ஜெர்மனி, அந் நாட்டின் ஆயுதக் களஞ்சியங்களை பொறுப்பேற்றது. அங்கிருந்த ஆயுதங்கள் எல்லாம் வண்டி வண்டியாக குரோவேசியா நோக்கி அனுப்பப் பட்டன.

அந்த நாட்களில், யூகோஸ்லேவிய போரை நிறுத்த முயற்சித்த இராஜதந்திரிகளின் கைகள் கட்டப் பட்டிருந்தன. அன்றைய பெல்ஜிய வெளிவிவகார அமைச்சர் Mark Eyskens, ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சர் Hans Dietrich Genscher இனால் அடக்கி வைக்கப் பட்டார். "ஜெர்மனி, யூகோஸ்லேவியாவில் போர் நடக்க வேண்டுமென்று விரும்பினால், அந்த ஆசை நிறைவேறும்..." என்று விரக்தியுடன் தெரிவித்தார் Mark Eyskens .

யூகோஸ்லேவியப் போரில் நடந்த இன்னொரு இனப்படுகொலை, சர்வதேசத்தின் கவனத்தைப் பெறவில்லை. "கிராயினா", குரோவாசிய குடியரசில் செர்பியர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசம். குரோவாசிய யுத்தம் முடிவுக்கு வரும் வேளை, குரோவாசியப் படைகள் துஜ்மானின் ஆணையின் பேரில் இனச் சுத்திகரிப்பில் இறங்கின.

ஆயிரக்கணக்கான செர்பிய பொதுமக்களை கொன்று குவித்தனர். அங்கே ஒரு செர்பியரைக் கூட விட்டு வைக்காமல் துரத்தி அடித்தார்கள். அசையும், அசையா சொத்துக்கள் எல்லாவற்றையும் கொள்ளையடித்தார்கள். குரோவாசிய படைகளை நடத்திச் சென்ற Ante Gotovina என்ற தளபதி, பிற்காலத்தில் போர்க்குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். நெதர்லாந்தில், யூகோஸ்லேவியா போர்க்குற்ற நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்ட முக்கியமான குரோவாசியர், அவர் மட்டும் தான்.

Ante Gotovina, பிரான்சின் கூலிப்படையான வெளிநாட்டவர் படையணியை (French Foreign Legion) சேர்ந்த சிப்பாய். அவருடனான பிரெஞ்சு அரசின் தொடர்புகள் யாவும், புலனாய்வுப் பிரிவான DGSE மூலமாக நடைபெற்றன. ஆனால், அன்று குரோவாசியப் படைகளுக்கு தலைமை தாங்கிய இன்னொருவர், அமெரிக்கரான Peter Galbraith என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இவர் தான் பிற்காலத்தில் குரோவாசியாவுக்கான அமெரிக்க தூதுவராக பதவி வகித்தார்.

இந்த அமெரிக்கர், போர்க்களத்தில் நேரடியாக நின்று கட்டளைகளை பிறப்பித்ததுடன், இனப்படுகொலையை மேற்பார்வை செய்துள்ளார். Peter Galbraith தின் சேவையை பாராட்டி, அவரது நண்பர், அன்றைய துணை ஜனாதிபதி Joe Biden ஈராக்கிற்கு அனுப்பி வைத்தார். ஈராக் குர்திஸ்தானில், அமெரிக்க கம்பனிகளுக்கு எண்ணை வர்த்தக ஒப்பந்தங்கள் கிடைக்குமாறு, பீட்டர் பார்த்துக் கொண்டார்.

இங்கே கூறப்பட்ட உண்மைகளை அறிந்து கொள்வதற்கு எமக்கு ஆர்வமில்லாமல் இருக்கலாம். அடியாட்களுக்கு தண்டனை கொடுக்கப் படுவதை பார்த்து விட்டு, நீதி பிழைத்தது என்று திருப்திப் படலாம். ஆனால், எதிர்காலத்தில் இன்னொரு நாட்டில் இன்னொரு இனப்படுகொலை நடப்பதை எம்மால் தடுக்க முடியாது. முதன்மைக் குற்றவாளிகளை நீதிபதி ஸ்தானத்தில் ஏற்றி வைத்து விட்டு, அடியாட்களை பிடித்து தண்டனை கொடுப்பதால் எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை.

Monday, August 29, 2011

தூக்குத் தண்டனை : அரச அங்கீகாரம் பெற்ற கொலைக் கலாச்சாரம்

ராஜீவ் கொலை வழக்கில் கைதான, பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை தூக்கிலே போடுவதற்கான தேதி குறிக்கப் பட்டமை, பலத்த அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. பெரும்பாலான உலக நாடுகள் தூக்குத் தண்டனையை ஒழித்து விட்டன. தூக்குத் தண்டனை என்பது அரச அங்கீகாரம் பெற்ற கொலை என்பதில் ஐயமில்லை. இந்த நேரத்தில், இனத்துவ அடையாளங்களை கடந்து, மனித நேயத்திற்காக குரல் எழுப்புவது எமது கடமை. ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய நபர்கள் மரணமடைந்து விட்ட நிலையில், நேரடித் தொடர்பற்றவர்களை தூக்கில் போடும் அட்டூழியத்தை கண்டிக்க வேண்டும். செய்யாத குற்றத்திற்காக இருபது வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவித்த பிறகு, இப்போது தூக்கிலே போடுவதற்கு அரசியல் உள்நோக்கம் இருக்கலாம் என நம்பப் படுகின்றது. இதனை அரசியல் கருத்துச் சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாக கருத வேண்டியுள்ளது. இந்திய அரசு ராஜீவ் கொலை வழக்கில் காட்டிய தீவிரத்தை, ஈழத்தில் இந்தியப் படைகள் புரிந்த போர்க்குற்றங்களை விசாரிப்பதிலும் காட்ட வேண்டும். படுகொலைகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு காலந் தாழ்த்தியாவது தண்டனை வழங்கி நீதியை நிலைநாட்ட வேண்டும்.

தூக்குத் தண்டனை எதிர்த்துப் போராடுவதற்கு, சர்வதேச ஒற்றுமை இயக்கத்தை கட்டி எழுப்புவது அவசியம். குறுகிய இன மான உணர்வுகளை தூண்டி விடுவது, இந்திய அரசின் பிரித்தாளும் சூழ்ச்சியை நிறைவேற்றவே வழி வகுக்கும். ஏற்கனவே அப்சல் குரு, தேவேந்தர் பால் சிங் ஆகியோருக்கு இந்திய நடுவண் அரசால் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்த போராட்டத்தின் தொடர்ச்சி இது. வேலூர் சிறையில் தூக்குக் கயிற்றை முத்தமிடத் தயாராக உள்ள மூவருக்காக மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் தூக்குத் தண்டனையை இரத்து செய்ய வேண்டுமென போராடுவோம். ஜனநாயக நாடென்று கூறிக் கொள்ளும் தகமையை இந்தியா இழந்து விட்டது. நாகரீக உலகம் நிராகரிக்கும் தூக்குத் தண்டனை முறையை, இந்தியா இன்னமும் பின்பற்றுவதற்காக, இந்திய மக்கள் அனைவரும் வெட்கப் பட வேண்டியுள்ளது. ஏற்கனவே இந்திய அரசு தூக்குத் தண்டனையை இரத்து செய்ய வேண்டுமென, சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் அறவழிப் போராட்டத்தை நடத்தி வருகின்றன. சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணியாத இந்திய அரசு, மீண்டும் மூன்று கைதிகளுக்கு தூக்குத் தண்டனை விதித்துள்ளது. மரண தண்டனை என்ற பெயரில் அரசு புரியும் கொலைகளுக்கு, நாகரீக உலகின் எதிர்ப்பை தெரிவிப்போம்.

உலகில் இன்னமும் தூக்குத் தண்டனையை அமுல்படுத்தும் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. அங்கே முமியா அபு ஜமால் என்ற கறுப்பின உரிமைப் போராளி மரண தண்டனைக்காக காத்திருக்கிறார். அமெரிக்க கறுப்பினத்தவர்களின் பாதுகாப்பு கவசமாக திகழ்ந்த கருஞ் சிறுத்தைகள் அமைப்பின் உறுப்பினர். வன்முறையில் ஈடுபடாத, பேனாவின் வலிமையை நம்பிய ஊடகவியலாளர். சாட்சியங்கள் இல்லாத போதிலும், "ஒரு வெள்ளையின பொலிஸ்காரரின் கொலை" தொடர்பாக கைது செய்யப்பட்டார். இவர் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதில் பல முறைகேடுகள் நடந்துள்ளன. நிரபராதியான முமியா அபு ஜமாலின் மரண தண்டனயை இரத்து செய்யக் கோரி,கடந்த பதினைந்து வருடங்களாக உலகளாவிய போராட்டங்கள் நடந்து வருகின்றன. புலம்பெயர் நாடுகளில், முமியா அபுஜமால் விடுதலைக்காக, தமிழ் உழைக்கும் மக்களும் குரல் கொடுத்துள்ளனர். சர்வதேச உழைக்கும் மக்களுடன் இணைந்து, அமெரிக்காவின் மனித நேயமற்ற மரண தண்டனைகளை ஒழிப்பதற்காக போராடுவதும் அவசியமானது.

ஈரானின் மதவாத கொடுங்கோல் அரசு, மக்களுக்காக போராடும் போராளிகளை அடக்குவதற்காக தூக்குத் தண்டனைகளை நிறைவேற்றி வருகின்றது. வருடந்தோறும் அரசியல் கைதிகளை தூக்கில் போடுவதன் மூலம், உழைக்கும் மக்களின் குரல்வளையை நெரிக்கப் பார்க்கின்றது. சமதர்ம கொள்கையை நம்பிய குற்றத்திற்காக தூக்கில் தொங்கிய அப்பாவி இளைஞர்கள் ஏராளம். அவர்களது தோழர்கள், புலம்பெயர் நாடுகளில் தூக்குத் தண்டனையை எதிர்த்து போராடி வருகின்றனர். கடந்த காலங்களில், ஈரானிய அரசியல் கைதிகளின் மனித உரிமைக்காக, தமிழர்களின் ஆதரவும் பதிவு செய்யப் பட்டுள்ளது. புலம்பெயர் நாடுகளில், அனைத்துலக உழைக்கும் மக்களுடன் கை கோர்ப்போம். சர்வதேச மட்டத்தில் தூக்குத் தண்டனையை ஒழிப்பதற்காக போராடுவோம்.

Sunday, August 28, 2011

பாக்தாத் பேரழகிகள் விற்பனைக்கு!

பாக்தாத் நகரின், அல்ஜிஹாத் வட்டாரத்தில் அமைந்துள்ள விபச்சார விடுதி. அங்கு தங்க வைக்கப் பட்டுள்ள விலைமகளிரின் ஆகக் குறைந்த வயது 16. விமான நிலையத்திற்கு அருகில் உள்ள, மிகப் பெரிய அமெரிக்க இராணுவ முகாமில் தான், அவர்கள் பாலியல் தொழில் செய்கின்றனர். அழகிய ஈராக்கிய நங்கைகளை முகாமுக்கு அழைத்து சென்று கொண்டு வரும் பொறுப்பை ஏற்றிருப்பது ஒரு மொழிபெயர்ப்பாளர். அமெரிக்க படைவீரர்களின் காமப்பசியை தீர்ப்பதற்கு மட்டும் ஈராக்கிய பெண்கள் விநியோகிக்கப் படுவதில்லை. கன்னிப் பெண்களை நுகரத் துடிக்கும், அயல்நாட்டு பணக்கார அரபுக்களின் இச்சைக்கும் பலியாகிறார்கள். வளைகுடா நாடொன்றில், ஈராக்கிய சிறுமிகளின் கன்னித் தன்மையை கழிப்பதற்கு, ஓரிரவுக்கு 4000 டாலர் கொடுக்கிறார்கள்.

ஈராக்கில் தற்போது பெண்களை ஏற்றுமதி செய்யும் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. ஒரு கன்னிப் பெண் 5000 டாலர்களுக்கு விலை போகின்றார். கன்னித்தன்மை இல்லாத பெண்ணின் விலை, அதிலும் அரைவாசி. சில இடங்களில்,வறுமை காரணமாக பெற்றோரே தங்கள் பெண் பிள்ளைகளை விபச்சார தரகரிடம் விற்று விடுகின்றனர். செய்னா எனும் 13 வயது சிறுமி, அவரது தாத்தாவால் விற்கப்பட்டாள். அரபு எமிரேட்சில் நான்காண்டுகள் பாலியல் தொழில் செய்த பிறகு, ஊருக்கு திரும்பி வந்தாள். தன்னை பண்டமாக விற்ற தாத்தா மீது நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தாள். எப்படியோ, சில நாட்களின் பின்னர், செய்னாவை காணவில்லை. இம்முறை பெற்ற தாயே, அவளை வட ஈராக்கை சேர்ந்த தரகர் ஒருவருக்கு விற்று விட்டாள். ஈராக்கில் பாலியல் தொழிலில் சுரண்டப்படும் பெண்களின் உரிமைகளுக்காக போராடும் Organisation of Women’s Freedom in Iraq (OWFI) என்ற தொண்டு நிறுவனம் இந்த தகவல்களை வழங்கியுள்ளது.

அரசு சாரா தொண்டு நிறுவனமான OWFI , பாக்காத்தின் மிகப்பெரிய விபச்சார விடுதி ஒன்றின் உரிமையாளரை அம்பலப்படுத்தியதால், ஊடகங்களில் பிரபலமானது. அந்த விடுதியின் உரிமையாளருக்கு உள்துறை அமைச்சில் செல்வாக்கு இருப்பது தெரிய வந்தது. ஊடகங்களில் செய்தி வெளியான பிறகும், அந்த விடுதி இன்று வரை எந்த வித பிரச்சினையுமின்றி இயங்கிக் கொண்டிருக்கின்றது. சர்வதேச குடிவரவுகளை கண்காணிக்கும் அமைப்பான International Organisation of Migration (IOM), வருடந்தோறும் எண்ணாயிரம் ஈராக்கிய பெண்கள் பாலியல் தொழிலுக்காக கடத்தப் படுவதாக தெரிவித்துள்ளது. ஈராக்கிய அரசு, பெண்கள் கடத்தப்படுவதை சட்டம் மூலம் தடை செய்துள்ளது. இருப்பினும் நடைமுறையில் எதுவும் நடப்பதில்லை. சில சமயம், பொலிஸ் ரெய்டுகளில் அகப்படும் பெண்களுக்கு மட்டும் தண்டனை வழங்கப்படுகின்றது. ஒரு தடவை, அமெரிக்க படையினரின் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக ஒரு விபச்சார விடுதி மூடப்பட்டது. அந்த விடுதி நிர்வாகத்தில் வேலை செய்த ராணியா என்ற பெண், சிறைத் தண்டனைக்குப் பிறகு, தற்போது தொண்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார்.

விடுதிக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் பணம் அறவிடும் வேலையை ராணியா செய்து வந்தார். அங்கே பெண்கள் எவ்வளவு மோசமாக சுரண்டப் பட்டனர் என்பதை இவ்வாறு விளக்குகின்றார். "தினசரி ஐம்பது ஆண்களை, ஒரு பெண் திருப்திப் படுத்த வேண்டும்." ராணியா 16 வயதில் பாலியல் தொழிலுக்கு வந்தார். சதாமின் வீழ்ச்சிக்கு பிறகு, யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்தில், அரச படையினர் ராணியாவின் சகோதரர்களை கைது செய்திருந்தனர். சகோதரர்களை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற வேண்டுமானால், ராணியாவின் உடலை விலையாகக் கொடுக்க வேண்டும் என்று கேட்டார்கள். கற்பிழந்த பின்னர் ஊருக்கு சென்றால், அவமானம் காரணமாக கொலை செய்யப்படலாம் என்ற காரணத்தால், பாக்தாத் வந்து விலைமாதானார். கட்டாயக் கலியாணம் காரணமாக, குடும்ப வன்முறை காரணமாக, வீட்டை விட்டு வெளியேறும் இளம்பெண்கள், வேறு கதியின்றி பாலியல் தொழிலுக்கு தள்ளப் படுகின்றனர். இவர்களுக்கு "தொழில் வாய்ப்பு" பெற்றுக் கொடுப்பதற்கென்றே, பல தரகர்கள் பஸ் நிலையங்களிலும், சந்தைகளிலும் சுற்றிக் கொண்டிருக்கின்றனர்.

2003 ம் ஆண்டுக்குப் பிறகே, ஈராக்கில் பாலியல் சுரண்டல் பிரச்சினை எழுந்துள்ளதாக Human Rights Watch (HRW) தெரிவிக்கின்றது. "2003 ம் ஆண்டு, சதாம் ஹுசைன் என்ற சர்வாதிகாரியிடம் இருந்து ஈராக் மக்களுக்கு விடுதலை கிடைத்தது." மத்திய கிழக்கு நாடுகளில், "அடக்கப்படும் பெண்களுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுப்பதற்காக" படையெடுத்ததாக அமெரிக்கா பீற்றிக் கொண்டது. அமெரிக்கா வாங்கிக் கொடுத்த சுதந்திரத்தின் பின்னர் தான், அங்கே பெண்களின் நிலைமை முன்னர் எப்போதும் இல்லாதவாறு மோசமடைந்தது. சதாம் காலத்தில் இல்லாத, இஸ்லாமிய ஷரியா சட்டம் அமுலுக்கு வந்தது. பெண்கள் அனுபவித்து வந்த சுதந்திரம் மெல்ல மெல்ல பறிக்கப் பட்டது. தற்போது சட்டத்திற்குப் புறம்பான விவாகரத்துகளும், கௌரவக் கொலைகளும் மலிந்து விட்டன.

வறுமை, பெண்கள் மீதான வன்முறைகள், ஆட்சியாளரின் ஊழல் என்பன காரணமாக, பாலியல் தொழிலில் பெண்கள் சுரண்டப் படுவது அதிகரித்து வருகின்றது. 1991 வளைகுடா யுத்தத்திற்கு முன்னர், சதாம் ஆட்சிக் காலம், ஈராக் பெண்களின் பொற்காலம் ஆகும். ஈராக்கிய மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருந்ததால், எந்தப் பெண்ணும் பாலியல் தொழில் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகவில்லை. அனைத்து அரபு நாடுகளிலும், ஈராக் நாட்டுப் பெண்களே அதிகளவு கல்வியறிவு பெற்றிருந்தனர். மருத்துவர்களாகவும், வேறு உத்தியோகங்களிலும் பெண்கள் சிறந்து விளங்கினர். இன்று இதையெல்லாம் சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள். அமெரிக்க படையெடுப்பு எல்லாவற்றையும் அடியோடு மாற்றி விட்டது.

மேலதிக விபரங்களுக்கு:
Organisation of Women’s Freedom in Iraq (OWFI)
Will Iraq Crack Down on Sex Trafficking?

Saturday, August 20, 2011

தமிழரை மிரட்டும் கிறீஸ் பூதங்கள்

இலங்கையின் தெற்கு, கிழக்கு பகுதிகளில் பூதங்கள் உலவுவதால் மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர். மரங்களில் இருந்து தாவிப் பாயும் பூதங்கள், தனியாக செல்லும் இளம்பெண்களை கண்டால் விடுவதில்லை. விரல்களில் உள்ள கத்தி போன்ற கூரான நகங்களால், மார்பகங்களை கீறிக் கிழிக்கின்றன. இந்த சம்பவங்களின் விளைவாக பல்வேறு வதந்திகள் உலாவின. "துட்டகைமுனுவின் வாளை தேடுவதற்காக, கன்னிப் பெண்களின் இரத்தம் சேகரிப்பதாக," சிங்களப் பகுதிகளில் வதந்தி பரவியது. தமிழ்ப் பகுதிகளில் அந்தக் கதை, "ராஜபக்ஷவின் பதவிக் காலத்தை நீடிப்பதற்காக, ஒரு மந்திரவாதியின் பூஜைக்காக கன்னிப் பெண்களின் இரத்தம் சேகரிப்பதாக," மாற்றப்பட்டது. சிங்கள, ஆங்கில ஊடகங்கள் வதந்திகளுக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால், தமிழ் ஊடகங்களில் தான் அதிகளவு வதந்திகள் செய்திகளாகின.

சிங்கள மக்கள் மத்தியில் "கிறீஸ் மனிதன்" என்ற கதை பிரசித்தம். ஆவிகள், பூதங்களை நம்பும் கிராம மக்கள் கிறீஸ் பூதங்கள் உலவுவதை நம்புகின்றனர். உண்மையில் உடம்பில் கிறீஸ் பூசிக் கொண்ட திருடர்கள் தான் கிறீஸ் பூதங்கள். திருடும் போது யாராவது பிடித்தால் வழுக்கும் என்பதற்காக கிறீஸ் பூசிக் கொண்டு செல்வார்கள். இவ் வருடம் ஜூலை 5 ம் தேதி, "கிறீஸ் பூதத்தின் முதலாவது தாக்குதல்" இடம்பெற்றது. இரத்தினபுரிக்கு அருகில் உள்ள, கஹவத்த என்னும் ஊரில் ஏழு பெண்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர். அந்த கொலைகளுக்கு காரணம் கிறீஸ் பூதம் என்ற வதந்தி பரவியது. பொலிஸ் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால், ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். சில நாட்களின் பின்னர், கொலைகாரன் கைது செய்யப் பட்டதாக தகவல் வந்தது. இராணுவத்தில் இருந்து தப்பியோடிய ஒருவனே, அந்த கொலைகளை செய்தவன் என்று கூறினார்கள். போர் நடந்த காலத்தில், இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர்கள், வீடு புகுந்து கொள்ளையடிப்பதும், தனித்திருக்கும் பெண்களிடம் பாலியல் சேஷ்டைகள் செய்வதும் வழக்கமாக நடப்பது தான். ஆனால், இம்முறை அடுத்தடுத்த பல இடங்களிலும் நடைபெற்ற சம்பவங்கள் யாவும், யாரோ திட்டமிட்டு செய்வதை உறுதிப்படுத்தின.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் கிராமங்கள் அடுத்து இலக்கு வைக்கப் பட்டன. இந்தக் கிராமங்களை சேர்ந்த ஆண்கள் பலர் மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்கின்றனர். அதனால் பெண்கள் தனியாகவே குடும்பத்தை கவனிக்கின்றனர். அவ்வாறு ஆண் துணையின்றி வாழும் பெண்களிடம், மர்ம மனிதர்கள் தகாத முறையில் நடந்துள்ளனர். பொதுவாக மர்ம ஆசாமிகள் முகம் தெரியாதவாறு கறுப்பு வர்ணம் பூசியிருந்தனர். பெண்களின் கூக்குரலைக் கேட்ட அக்கம் பக்க ஆட்கள் ஓடி வந்து, மர்ம மனிதர்களை பிடித்துள்ளனர். போலீசில் அவர்களை ஒப்படைத்த பின்னர், பொலிஸ் அவர்களை விடுதலை செய்துள்ளது. ஒரு தடவை, பிடிபட்ட மர்ம மனிதன், பொலிசாரிடம் ஏதோ ஒன்றை காட்டியதாகவும், அதன் பிறகு பொலிஸ் சல்யூட் அடித்து விடுவித்ததாகவும் பொது மக்கள் கூறுகின்றனர். பொத்துவிலில், படையினரிடம் தஞ்சமடைந்த மர்ம மனிதனை தம்மிடம் ஒப்படைக்குமாறு பொது மக்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். படைமுகாம் மீது கற்களை வீசியுள்ளனர். படையினர் சுட்டதில் ஒரு முஸ்லிம் காங்கிரஸ் அரசியல்வாதி இறந்துள்ளார். கிண்ணியாவிலும், மக்கள் விரட்டிச் சென்ற மர்ம மனிதன், கடற்படை முகாமில் புகுந்துள்ளான். அதனால், அங்கே மக்களுக்கும் படையினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

கிறீஸ் பூதங்கள் என்ற மர்ம மனிதர்களை, இராணுவத்தினர் ஏவி விடுவதாக தமிழ், முஸ்லிம் மக்கள் சந்தேகிக்கின்றனர். அவர்கள் சந்தேகபடுவது போல பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பொது மக்கள் விரட்டிய மர்ம மனிதர்கள், படையினர் முகாம்களுக்குள் ஓடி ஒளிந்திருக்கிறார்கள். பொதுமக்கள் பிடித்துக் கொடுத்தாலும், போலீசார் விடுதலை செய்துள்ளனர். வவுணதீவில் சீருடையில் மோட்டார் சைக்கிளில் வந்த படையினர், மர்ம மனிதர்களை இறக்கி விட்டுச் சென்றதை மக்கள் கண்டுள்ளனர். இவையெல்லாம், இராணுவ புலனாய்வுத் துறையை சேர்ந்தவர்கள், மர்ம மனிதர்களாக நடமாடுவதாக நிரூபிக்கின்றது. அம்பாறை மாவட்டத்தில், முஸ்லிம் கிராமங்களில் முன்னர் அரசு வழங்கிய துப்பாக்கிகளை வழங்கியிருந்தது. போர் நடந்த காலங்களில் புலிகளின் தாக்குதல்களை தடுப்பதற்காக, அந்த முஸ்லிம் கிராமவாசிகளுக்கு துப்பாக்கிகள் கொடுக்கப்பட்டிருந்தன. கிறீஸ் பூதங்கள் தாக்குவதற்கு, சரியாக இரண்டு நாட்களுக்கு முன்னர் தான், துப்பாக்கிகள் மீளப் பெறப்பட்டன. கிழக்கு மாகாணம் முழுவதும், தமிழ், முஸ்லிம் பிரதேசங்கள் முழுவதும், அரச படைகள் மேலான அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், மக்களுடன் ஏற்பட்ட விரிசலை அடைப்பதற்கு, அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால், சிறிலங்கா அரசே கிறீஸ் பூதங்களை நடமாட விட்டிருக்கும் என்ற சந்தேகம் வலுக்கவே செய்கின்றது.

அரசாங்கத்தைப் பொறுத்த வரையில், "கிறீஸ் பூதங்கள் பற்றிய செய்திகள் எல்லாம் வெறும் வதந்தி" என்று கூறுகின்றது. "அரசுக்கு அபகீர்த்தி உண்டாக்குவதற்காக, வெளிநாடுகளில் இருந்து டாலர்களை பெற்றுக் கொண்டவர்களது வேலை," என்று மறைமுகமாக அரசுசாரா நிறுவனங்கள் மீது குற்றம் சுமத்துகின்றது. கிறீஸ் பூதம் பற்றிய அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செய்தியிலும், "இவன் தான் கிறீஸ் பூதம்" என்று, வெள்ளை நிற கிறீஸ் பூசிய, டிராகுலா போன்று வாயில் இரத்தம் வழியும் ஒருவனின் முகத்தை காட்டினார்கள். கிறீஸ் பூதம் என்ற பீதியை கிளப்பி விட்டு கள்வர்கள் தங்கள் கைவரிசையை காட்டுவதாக அரசு கூறி வருகின்றது. ஆனால், அந்தக் கள்வர்களை பிடிக்க முடியாத நிலையில் தான் பொலிஸ் இருக்கின்றது. சில நேரம் பொது மக்கள் பிடித்துக் கொடுத்த மர்ம மனிதர்களை, பொலிஸ் பாதுகாத்து விட்டதற்கு என்ன காரணம் கூறுகின்றது? பொது மக்கள் ஒப்படைத்த மர்ம நபர்கள் மனநோயாளிகள் என்றும், வெளியில் விட்டால் அடித்து கொன்று விடுவார்கள் என்பதால், தாம் அடைக்கலம் கொடுத்தாக பொலிஸ் கூறுகின்றது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர், கொழும்பு நகரில் மர்மமான தொடர் கொலைகள் நடந்து கொண்டிருந்தன. தலைநகரில் இருந்த பிச்சைக்காரர்கள் பலர், மர்மமான முறையில் பாறாங்கல்லைப் தூக்கிப் போட்டு கொலை செய்யப் பட்டுக் கிடந்தனர். பிச்சைக்காரர்களை அகற்றி விட்டு, தலைநகரை அழகு படுத்துவதற்கான அரசின் திட்டம் என்று பரவலாக சந்தேகிக்கப்பட்டது. இன்று வரை கொலைகாரர்கள் பிடிபடாததால், போலீஸ்காரர்களே அந்தக் கொலைகளை செய்திருக்க வேண்டும். அது போன்று, கிறீஸ் பூதம் என்ற பீதியைக் கிளப்பி, பொது மக்களைக் கொண்டே மன நோயாளிகளை அகற்றும் திட்டம் அரசுக்கு இருக்கலாம். இதை விட, இனி வருங்காலங்களில் புலிகள் போன்ற தலைமறைவு இயக்கங்களின் இருப்பை சாத்தியமற்றதாக்கும் நோக்கமும் இருக்கலாம். "வெளிநாடுகளில் தங்கியுள்ள புலிகள், இலங்கைக்குள் ஊடுருவ தயாராக இருப்பதாக" கோத்தபாய ராஜபக்ச அறிவித்துள்ளமை நினைவுகூரத் தக்கது.

இவற்றை நிரூபிப்பது போல, மக்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் சந்தேகப் படுகின்றனர். சந்தேகப் படும் படியாக எவராவது நடந்து கொண்டால், கிறீஸ் பூதம் என்று பிடித்து அடிக்கிறார்கள். அது சில நேரம் பக்கத்து வீட்டுக்காரனாகவும் இருக்கலாம். முன்பெல்லாம் அரசு மக்களை பயமுறுத்தி அடக்கி வைப்பதற்கு, புலிகள் என்ற இயக்கம் இருந்தது. தற்போது புலிகள் அழிந்து விட்ட நிலையில், கிறீஸ் பூதங்கள் இறக்கி விடப் பட்டுள்ளன. "மக்கள் மனதில் அச்ச உணர்வை ஏற்படுத்தினால் ஆள்வது இலகு." என்ற அமெரிக்காவின் பிரபலமான "அதிர்ச்சி கோட்பாடு" (The Shock Doctrine) இங்கே நடைமுறைப் படுத்தப் படுகின்றது. மேற்குலக நாடுகளும், முன்பெல்லாம் கம்யூனிச பூதத்தையும், பனிப்போருக்கு பின்னர் அல்கைதா பூதத்தையும் காட்டித் தானே மக்களை பயமுறுத்தி வைத்துள்ளன? நோயாளிகளுக்கு மின்சார அதிர்ச்சி கொடுப்பது போல, முழு சமுதாயத்தையும் அதிர்ச்சி வைத்தியம் செய்து வசியப் படுத்தி வைக்க முடியும். அதன் மூலம், ஆட்சியாளரின் நோக்கங்கள் இலகுவில் ஈடேறும். அறுபதுகளில் சிஐஏ கண்டுபிடித்த அதிர்ச்சி கோட்பாடு பற்றிய விரிவான தகவல்களுக்கு, Naomi Klein எழுதிய
The Shock Doctrine என்ற நூலை வாசிக்குமாறு பரிந்துரைக்கிறேன்.

கிறீஸ் பூதம் கிளப்பி விட்ட பீதியின் பின்னணியில், பல அரசியல் மாற்றங்கள் நடைபெறலாம் என்று பலர் எதிர்வு கூறுகின்றனர். அவற்றை மறுக்கவும் முடியாது. போர் முடித்த பின்னர், அவசர கால சட்டத்தை எடுக்க வேண்டிய நெருக்குவாரத்தில் அரசு உள்ளது. அவசர கால சட்டத்தை நீக்கினால், வடக்கு-கிழக்கில் நிலை கொண்டுள்ள இராணுவத்தை வாபஸ் பெற வேண்டும். இராணுவத்திற்கான செலவினத்தை குறைக்க வேண்டும். மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் தீர்வு ஒன்றை கொண்டு வர வேண்டிய கடப்பாடு அரசுக்கு உள்ளது. "யுத்தம் முடிந்து விட்டது. இனி என்ன தீர்வு?" என்று கோத்தபாய தெரிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியது. ஜனாதிபதியான மகிந்தவே இதுபற்றி கருத்து தெரிவிக்காத வேளை, பாதுகாப்பு அமைச்சர் தீர்வுத் திட்டம் குறித்து பேசுவது விசித்திரமானது. அதே போன்று, ஜெயலலிதாவின் கோரிக்கைகளுக்கு பதிலடி கொடுத்த கோத்தபாயவின் நடவடிக்கையும் விமர்சனத்திற்குள்ளானது. அயல் நாட்டு விவகாரங்களை கவனிக்க, ஒரு வெளிநாட்டு அமைச்சர் இருக்கிறார். அவர் வாயை மூடிக் கொண்டிருக்கிறார். இத்தகைய போக்குகளை, எந்தவொரு அரசியல் அவதானியும் கோர்த்துப் பார்த்ததாக தெரியவில்லை.

இன்றைய இலங்கை அரசியலில், முன்னெப்போதும் இல்லாதவாறு எதிர்க்கட்சி பலவீனமாக உள்ளது. தேசத்தின் மீது இரும்புப் பிடியை வைத்துள்ள சுதந்திரக் கட்சி அரசாங்கம் சர்வ வல்லமையுடன் ஆட்சி செய்கின்றது. எந்தவொரு இறுக்கமான அரசென்றாலும், அங்கே இரு வேறு பட்ட போக்குகள் தோன்றலாம். இலங்கையில், கோத்தபாய தலைமையில் இராணுவ ஆட்சியை நிலைநாட்டும் பிரிவினர் பலமடைந்து வருவதாக தெரிகின்றது. இராணுவம் என்ற பூதத்தை ஊட்டி வளர்ப்பது ஆட்சியாளர்களுக்கு அவசியமானதாக உள்ளது. கிறிஸ் பூதம் என்ற ஹிஸ்டீரியா மக்களை ஆட்கொண்டுள்ள தருணத்தில், படைகளை குவிப்பதற்கு காரணம் கிடைத்துள்ளது. தமிழ்-முஸ்லிம் பிரதேசங்களில், கிறீஸ் பூதம் பிரச்சினையில், இராணுவத்திற்கும் மக்களுக்கும் இடையில் முரண்பாடுகள் வெடித்துள்ளன. அவை ஒரு மக்கள் எழுச்சிக்கு இட்டுச் செல்லும் என்று எதிர்பார்க்க முடியாது. தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழ் தேசிய தலைமைகள், கிறீஸ் பூதம் பற்றிய பீதியை பரப்புவதில் மட்டுமே குறியாகவுள்ளன. இதன் மூலம், இலங்கை அரசின் Shock Doctrine திட்டத்திற்கு உடந்தையாகவுள்ளன. அரசும், தமிழ் தேசியவாதிகளும், கூட்டாக சேர்ந்து பிரயோகிக்கும் "அதிர்ச்சி வைத்தியம்", மக்களை பலவீனப்படுத்தி, நடைப் பினங்களாக்குவதை குறிக்கோளாக கொண்டுள்ளது. அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படாது. மாறாக, அவர்களின் சொந்த பாதுகாப்பு குறித்த அச்சம் காரணமாக அரசிடம் தான் தஞ்சம் அடைவார்கள். அதிலிருந்து மக்களை மீட்டெடுப்பது கடினமான காரியம் தான்.

மேலதிக தகவல்களுக்கு:
The Shock Doctrine
மர்ம மனிதன், பீதியில் உறையும் கிராமங்கள்
The Beast of Badulla–Copy Cats and Mass Hysteria?

Friday, August 19, 2011

சாதியத்தை காப்பாற்றும் யாழ்ப்பாணக் கோயில்கள்

எமது ஊரை சுற்றி, நான்கு திசைகளிலும் நான்கு சைவக் கோயில்கள் இருந்தன. கோயில்களால் சூழப்பட்ட கிராமம் என்பதால், "கடவுள்களால் பாதுகாக்கப்பட்ட பிரதேசம்" என்று இளம் வட்டத்தில் சற்று கிண்டலாகவே பேசிக் கொள்வதுண்டு. ஊருக்குள்ளே கோயில்கள் இருந்தாலும், தாழ்த்தப்பட்ட சாதியினரை அந்தக் கோயில்களுக்குள் நுழைய அனுமதிப்பதில்லை. அவர்கள் வேண்டுமானால், சற்றுத் தள்ளியுள்ள சிவன் கோயிலுக்கும், அம்மன் கோயிலுக்கும் சென்று வழிபடலாம். நகரம் சார்ந்த பகுதிகளில் இருந்த அத்தகைய கோயில்கள் கூட, எழுபதுகளில் தான் அனைத்து சாதியினருக்குமாக கதவுகளை திறந்து விட்டன. அதுவும் "ஈழத்தில் நடைபெற்ற முதலாவது ஆயுதப்போராட்டத்திற்கு" பின்னர் தான். அம்மன் கோயிலில், பொங்கல் பானைக்குள் நாட்டு வெடிகுண்டு கொண்டு சென்று வீசிய, ஈழத்தின் முதலாவது பெண் போராளியும் எமது ஊரைச் சேர்ந்தவர் தான்.

எமது ஊரின் கோயில்களை உயர்சாதியினர் சொந்தம் கொண்டாடியததற்கு பின்புலத்தில் முக்கியமான பொருளாதாரக் காரணி ஒன்றிருந்தது. வறண்ட பிரதேசமான யாழ் குடாநாட்டில், குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. நிலத்தடியில் ஓடும் நல்ல தண்ணீர், கோயில் கட்டப்பட்டுள்ள இடங்களில் தான் காணப்படுகின்றது. கோயிலில் மட்டுமல்ல, கோயிலை சுற்றி அமைந்துள்ள சில உயர்சாதி வெள்ளாளரின் குடியிருப்புகளிலும் நன்னீர்க் கிணறுகள் உள்ளன. மற்ற இடங்களில் கிணறு எவ்வளவு ஆழத்திற்கு தோண்டினாலும், குடிக்க முடியாத உப்புத் தண்ணீர் தான் கிடைக்கும். அந்த வீடுகளில் குடியிருக்கும் துரதிர்ஷ்டசாலிகள், "பொது இடமான" கோயில் கிணற்றுக்கு சென்று குடிநீர் அள்ளி வருவது வழக்கம். இங்கே தான் பிரச்சினை ஆரம்பமாகின்றது. உயர்சாதி வெள்ளாளர்களுக்கு மட்டும் கோயில் கிணற்றில் தாமாகவே தண்ணீர் அல்ல உரிமையுண்டு. தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு அந்த உரிமை கிடையாது. யாராவது ஒரு வெள்ளாளர் தண்ணீர் அள்ளி அவர்களின் குடங்களில் ஊற்ற வேண்டும். அப்போது வாளியும், கையும் குடத்தில் படாதவாறு எட்டத்தில் நின்று தண்ணீர் ஊற்றுவார்கள். தாழ்த்தப்பட்டோர் போகும் நேரத்தில், அந்த இடத்தில் வெள்ளாளர் யாராவது காணப்படா விட்டால், காத்திருக்க வேண்டுமே தவிர, தாமாகவே தண்ணீர் அள்ளி ஊற்றிக் கொள்ள முடியாது. காலங்காலமாக தொடர்ந்த மரபு, 1982 ம் ஆண்டு உடைக்கப்பட்டது.

ஆமாம், யாழ் மாவட்டத்தில் ஈழப்போராட்டம் தீவிரமடைந்திருந்த எண்பதுகளிலும் தீண்டாமை தொடர்ந்தது. தமிழீழ விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்த இயக்கங்கள், பொலிஸ் நிலையங்களை தாக்கி, காவலர்களை கொன்று, ஆயுதங்களை அபகரித்து சென்றார்கள். துணிச்சலுடன் வங்கிகளை கொள்ளையடித்தார்கள். சமூகவிரோதிகளுக்கு மரணதண்டனை வழங்கினார்கள். ஆனால்.... ஆனால்...தீண்டாமைக் கொடுமையை எதிர்க்கவில்லை. இதுவரை எந்தவொரு சாதிவெறியன் கூட "மரண தண்டனை" விதிக்கப்படவில்லை. தாழ்த்தப்பட்ட மக்கள், தமக்குத் தெரிந்த வழிகளில் அவற்றை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தார்கள். இயக்கங்களிடம் உதவி கேட்டால், "சிங்கள பேரினவாதத்தை எதிர்க்கும் பாரிய பொறுப்பு இருப்பதால், சாதிப்பிரச்சினையை கவனிக்க நேரமில்லை." என்றார்கள். "தமிழீழம் கிடைத்தால் போதும், சாதி தானாகவே மறைந்து விடும்." என்று சிலர் சித்தாந்த விளக்கம் அளித்தார்கள். தமிழ் தேசியக் கட்சிகள் மட்டுமல்ல, ஆயுதபாணி இயக்கங்களும் ஆதிக்க சாதியினரை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. ஒரு சில அரசுசாரா அமைப்புகள் மட்டுமே, தலித் விடுதலைப் போராட்டத்திற்கு உறுதுணையாக நின்றன.

கோயிலில் குடிநீர்த் தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுக்கும் வேலையில் சிலர் இறங்கினார்கள். திடீரென ஒரு நாள், ஊர்க் கட்டுப்பாட்டை மீறிய தாழ்த்தப்பட்ட இளைஞர்கள், கோயில் கிணற்றில் தாமாகவே தண்ணீர் அள்ளிச் சென்றனர். ஊருக்குள் இந்தச் செய்தி பரவியதால், சமூகத்தில் பதற்றம் நிலவியது. உயர்சாதியினர் கோயில் கிணற்றை பகிஷ்கரிக்கும் போராட்டத்தில் இறங்கினார்கள். கோயிலுக்கு அருகில் இருந்த "வெள்ளாளக் கிணறுகளில்" தண்ணீர் அள்ளினார்கள். இதனால், கோயில் கிணறு தாழ்த்தப்பட்டோர் வசம் சென்று விட்டது. "தலித் மக்கள் ஆக்கிரமித்த" கோயில் கிணற்றினுள், சாதிவெறியர்கள் உமி கொட்டி, நீரை மாசு படுத்தினார்கள். நஞ்சூட்டப் பட்டிருக்கலாம் என்றும் வதந்தி பரவியது. இதற்கெல்லாம் அஞ்சாத தாழ்த்தப்பட்ட மக்கள், தாமாகவே கிணற்றை சுத்தப் படுத்தும் வேலையில் இறங்கினார்கள். கிணற்றை தூர் வாரி, நீரிறைத்து பயன்பாட்டுக்கு ஏற்றதாக மாற்றினார்கள். அதற்குப் பிறகும் இரண்டொரு தடவை நீரை மாசுபடுத்தும் ஈனச்செயலில் இறங்கிய உயர்சாதியினர், பின்னர் தாமாகவே விட்டுக் கொடுத்தனர். தற்போது அந்தக் கோயில் கிணறு, நிரந்தரமாக தாழ்த்தப்பட்ட மக்களின் சொத்தாகி விட்டது.

தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் குடிநீர்ப் போராட்டத்திற்கு, எந்தவொரு தமிழ் தேசிய அரசியல் கட்சியோ, அல்லது இயக்கமோ ஆதரவு வழங்கவில்லை. இடதுசாரிக் கட்சிகளிலும், மனித உரிமை நிறுவனங்களிலும் அங்கம் வகித்த ஆர்வலர்கள் போராட்டக் காலத்தில் முன் நின்றார்கள். அன்றைய காலங்களில், அரசு சாராத அல்லது கட்சி சாராத நிறுவனங்கள் மிகக் குறைவு. "சிறுபான்மைத் தமிழர் மகாசபை" தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருந்தது. சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களை குறிக்கும் "சிறுபான்மைத் தமிழர்" என்று பெயரிடப்பட்ட அமைப்பில், தாராளமயத்தை ஆதரிக்கும் பலர் அங்கம் வகித்தனர். "அறவழிப் போராட்டக் குழு" என்றொரு மனித உரிமை நிறுவனமும் அப்போது தான் ஸ்தாபிக்கப் பட்டிருந்தது. சர்வதேச மட்டத்தில், "சர்வதேச மன்னிப்புச் சபையுடன்" நெருங்கிய உறவைப் பேணியது. இத்தகைய அமைப்புகள், அன்று யாழ் மாவட்டம் முழுவதும் நடந்த தலித் விடுதலைப் போராட்டத்தை, வெறும் மனித உரிமைப் பிரச்சினையாக கருதித் தான் ஆதவளித்தன. சிறுபான்மைத் தமிழர் மகாசபையில் சோவியத் சார்பு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இருந்துள்ளனர். மேலும் எழுபதுகளில் "ஒடுக்கப்பட்ட மக்களின் ஆயுதப்போராட்டம்" நடத்திய சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியும் அரசியல் குறிக்கோளுடன் இயங்கி வந்துள்ளது.

1983 , ஆடிக் கலவரமும், அதைத் தொடர்ந்த தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டமும், யாழ்ப்பாண சமூக அமைப்பை தலைகீழாக மாற்றி விட்டது. ஈழத்தமிழரில் பெரும்பான்மையானோர் யாழ் குடாநாட்டில் வாழ்கின்றனர். அதிலும் உயர்சாதி வெள்ளாளர்களே பெரும்பான்மை சாதியினராக உள்ளனர். ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே, அந்த சாதியை சேர்ந்தவர்கள் தான் தமிழ் மேட்டுக்குடியை பிரதிநிதித்துவப் படுத்தினர். அரசியலில், பொருளாதாரத்தில், அரச உத்தியோகங்களில் அவர்களின் பங்களிப்பு அதிகம். அதனால், ஈழப்போர் தொடங்கியவுடன், வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வது அவர்களுக்கு இலகுவாக இருந்தது. வசதி படைத்தவர்கள் ஒன்றில் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர், அல்லது பாதுகாப்பாக கொழும்பு சென்று தங்கினார்கள். ஊரில் எஞ்சியது வசதியற்ற ஏழைகளும், தாழ்த்தப்பட்ட சாதியினரும் தான். ஈழப்போரில் அவர்களது அர்ப்பணிப்பும், தியாகமும் சர்வதேச அளவில் பேசப்பட்டது. அடித்தட்டு மக்களின் பங்களிப்பு புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளது. புலிகளும் அதற்குப் பிரதிபலனாக, வெளிநாடு சென்ற உயர்சாதியினரின் வீடுகளை அபகரித்து, தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு வழங்கியிருந்தனர். அந்த நடைமுறை, புலிகளின் வெளியேற்றத்திற்குப் பிறகு இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட யாழ்ப்பாணத்திலும் தொடர்ந்தது.

2002 ல் ஏற்பட்ட போர்நிறுத்தமும், சமாதான காலகட்டமும் புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகம் திரும்புவதற்கு வழிவகுத்தது. நீண்ட காலத்திற்குப் பிறகு, தமது ஊருக்கு திரும்பிய உயர்சாதியினர் பலர் அதிர்ச்சியடைந்தனர். அவர்களது வீடுகளில், தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருந்தார்கள். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், காணி உறுதியை காட்டி உரிமை கொண்டாடினார்கள். ஆனால், உள்நாட்டில் வாழ்ந்தவர்களோ ஈழப்போரில் பங்கெடுத்த உரிமையில் பேசினார்கள். ஈழப்போருக்கு நிதி வழங்கியதால், தமக்கே உரிமை அதிகம் என்று, மேலைத்தேய குடியுரிமை பெற்றவர்கள் வாதிட்டார்கள். உயர்சாதியினர் வெளிநாடு சென்ற சமயம், சொத்துக்களை பாதுகாக்குமாறு விட்டு விட்டு வந்த உறவினர்கள், கையறு நிலையில் இருந்தனர். அவர்களால் புலிகளினதும், சிறிலங்கா படையினரதும் அதிகாரத்தை எதிர்க்க முடியவில்லை. இரண்டு எதிரெதிரான ஆயுதமேந்திய சக்திகள், தாழ்த்தப்பட்ட மக்களை யாழ்ப்பாணத்தின் நிரந்தர பிரஜைகளாக அங்கீகரித்து விட்டிருந்தன.

யாழ் குடாநாட்டில், அல்லது வட மாகாணத்தில், உயர்சாதி அல்லது பிற்படுத்தப்பட்ட சாதியினர் என்று கருதப்படுவோரின் விகிதாசாரம் அதிகம். இலங்கையில், சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படுவதில்லை. அதனால், சரியான எண்ணிக்கை தெரியாது. இருப்பினும், கடந்த முப்பதாண்டுகளாக பெருவாரியான மக்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். இவ்வாறு புலம்பெயர்ந்து வாழும் தமிழரில், உயர்சாதியினரின் விகிதாசாரம் குறைந்தது என்பது சதவீதமாகிலும் இருக்கலாம். அதிலும் யாழ் குடாநாட்டை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இதனால், யாழ் குடாநாட்டின் மொத்த சனத்தொகையில், தாழ்த்தப்பட்ட சாதியினரின் எண்ணிக்கை அதிகரித்திருக்க வாய்ப்புண்டு. இந்த சமூகத்தை சேர்ந்த பலர், ஈழப்போரினால் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சமூகத்தில் மேன் நிலைக்கு வந்துள்ளனர். ஈழப்போருக்கு முன்னர், 95% பதவிகள் உயர்சாதியினருக்கு கிடைத்து வந்தன. தற்போது அந்த நிலைமை பெருமளவு மாறிவிட்டது. தாழ்த்தப்பட்ட சாதியினர் மத்தியில் இருந்து, பணபலமுள்ள நடுத்தர வர்க்கம் ஒன்று உருவாகியுள்ளது.

யாழ்ப்பாண சாதிய சமூகத்தின் சமநிலையில் மாற்றம் வரலாம் என்ற அச்சம், உயர்சாதியினர் மத்தியில் நிலவுகின்றது. இன்றைக்கும், யாழ்ப்பாணத்தில் ஆதிக்க சாதியாக இருப்பது தாமே என்பதை நிறுவ பெரும் பிரயத்தனப் படுகின்றனர். போரினால் கவனிக்கப்படாது விடப்பட்ட கோயில்களை புனரமைப்பதும், கோலாகலமாக திருவிழாக்கள் நடத்துவதும் அத்தகைய மனோபாவத்தில் இருந்தே எழுகின்றது. கிராமங்களில் இருக்கும் சிறு கோயில்கள் கூட, வெளிநாட்டுப் பணத்தில் பெரிதாக கட்டப்பட்டு வருகின்றன. இடிபாடுகளுடன் சிதைவடைந்த கோயில்கள் கூட திருத்தப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கின்றது. (அதே நேரம், பொது மக்களின் இடிந்த வீடுகள் கவனிப்பாரற்று கிடக்கின்றன.) கோயில்களை புனரமைக்கவும், திருவிழா செலவுகளுக்கும் நிதி சேகரிக்கும் படலம், வெளிநாடுகளில் முடுக்கி விடப்படுகின்றது. குறிப்பாக ஒரே ஊர்க்காரர்கள், ஒரே சாதிக்காரர்கள் வாழும் இடங்களில் அத்தகைய நிதி சேகரிப்புகள் மும்முரமாக நடந்து வருகின்றன. நிதி கோரும் போது, அவர்கள் தமது பங்கை செலுத்த வேண்டும் என நிர்ப்பந்திக்கப் படுகின்றனர்.

மேலைத்தேய நாடுகளில் வாழும் தமிழர்கள் பலர், அந்த நாட்டு சூழலுக்கேற்றவாறு வாழப் பழகியுள்ளனர். அவர்களது பிள்ளைகளுக்கு யாழ்ப்பாணம் திரும்பிச் சென்று வாழ வேண்டும் என்ற எண்ணம் துளியும் கிடையாது. அதனால், கோயில் திருவிழாக்களுக்கு நிதி வழங்க பலர் தயங்கி வருகின்றனர். அவ்வாறு அலட்சியமாக இருக்கும் நபர்கள் மீது, "சாதி அபிமானம்" என்ற இறுதி அஸ்திரம் பிரயோகிக்கப் படுகின்றது. "இப்போதே கோயில் நிர்வாகத்திற்குள் தாழ்த்தப்பட்ட சாதியினர் அங்கத்துவம் வகிக்கின்றார்கள். திருவிழா நடத்துவதற்கு தாங்கள் பணம் தருவதாக கூறுகின்றனர். அவர்களின் பணத்தில் திருவிழா நடந்தால், எதிர்காலத்தில் கோயில் நிர்வாகம் முழுவதையும் கைப்பற்றி விடுவார்கள். அதன் பிறகு, நாங்கள் கோயிலுக்கு வெளியே நின்று தான் சாமி கும்பிட வேண்டும்." என்றெல்லாம் கூறி மனதை மாற்றுகின்றனர். நிச்சயமாக, "முன்னர் தீண்டாமல் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் கோயிலின் உள்ளேயும், ஆதிக்கம் செலுத்தியவர்கள் கோயிலின் வெளியேயும் நின்று வழிபடும் நிலைமை," அவர்களைப் பொறுத்தவரை கெட்ட கனவு தான். அதனால், யாழ்ப்பாணத்துடன் பிணைப்பற்றவர்கள் கூட, சாதிய ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக நிதி கொடுக்கின்றனர்.

சிறிலங்கா அரசு, "இந்து அறநிலையத் துறை அமைச்சு" மூலம் சைவக் கோயில்களுக்கு நிதி வழங்கி வருகின்றது. சிறிலங்காவின் அரசியல் சாசனம், "பௌத்த மதத்தை அரசு மதமாக" பிரகடனப் படுத்தியுள்ளது என்பதும், அந்த மதத்திற்கு அரச கருவூலத்தில் இருந்து அதிகளவு நிதி வழங்கப்படுகின்றது என்பதும் தெரிந்த விடயங்கள் தான். அதே சிங்கள- பௌத்த பேரினவாத அரசு, இந்துக் கோயில்களுக்கும் நிதி அள்ளிக் கொடுக்கின்றது என்பது பலருக்கு தெரியாது. (மக்களின் விடுதலை உணர்வை மழுங்கடித்து, பிற்போக்குத்தனங்களை வளர்ப்பதற்காக அரசு அவ்வாறு நடந்து கொள்கின்றது. கோயில்கள் சாதி ஆதிக்கத்தை நிலைநாட்டும் நிறுவனங்களாக இன்றும் உள்ளதால், வலதுசாரி தமிழ் தேசியவாதிகளும் அதனை எதிர்க்க மாட்டார்கள்.) அநேகமாக, வடக்கு- கிழக்கு மாகாணங்களில் உள்ள இந்துக் கோயில்கள் எல்லாமே அரசு நிதியைப் பெறுவது இரகசியமல்ல. வர்த்தக நிறுவனங்களை அரசு நடத்துவதற்கும், தனியார் நடத்துவதற்கும் இடையிலான வித்தியாசம் கோயில் என்ற நிறுவனத்திலும் பிரதிபலிக்கின்றது. ஒரு கோயில் முழுவதும் அரச நிதியில் இயங்கினால், அங்கே நிர்வாகத்தினுள் தாழ்த்தப்பட்ட சாதியினர் ஊடுருவதை தடுக்க முடியாது. அதற்கு மாறாக, சுயசாதியை சேர்ந்தவர்களின் நிதியில் கோயிலை இயக்கினால், அந்தக் கோயில் தொடர்ந்தும் ஒரே சாதியின் ஆதிக்கத்தின் கீழே இருக்கும். உயர்சாதியினரைப் பொறுத்த வரையில், கோயில் என்பது வெறும் மத வழிபாட்டு ஸ்தலமல்ல. சமுதாயத்தில் சாதிய கட்டமைப்பை வளர்க்கும் நிறுவனமும் அது தான். தமிழ் சமூகம், சாதி, மதம் போன்ற பிற்போக்கு அம்சங்களுக்கு எதிராக போராடாத வரையில், விடுதலை என்பது வெறும் கனவாகவே இருக்கும்.