Saturday, November 19, 2016

மார்க்ஸ் சொன்னது இருக்கட்டும், நீ என்ன சொல்கிறாய் என்பதை சொல்!


//மார்க்ஸ் என்ன சொல்கிறார் என்றால்.... மார்க்ஸ் சொல்வது இருக்கட்டும்... நீ என்ன சொல்கிறாய் என்பதைச்சொல்!//

இப்படிக் கேட்டவர் தன்னை ஈழத் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் என்று கூறிக் கொள்ளும் சுப்ரமணிய பிரபா. ஒரு காலத்தில் மார்க்சிய லெனினிசம் பேசிய விடுதலைப் புலிகளின் தீவிர விசுவாசியாக காட்டிக் கொள்பவர். தற்போது வலதுசாரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரிப்பதால் அவ்வாறு பொங்கியிருக்கிறார்.

குறைந்த பட்சம் விமர்சிப்பதற்காவது மார்க்சியம் என்றால் என்னவென்று ஓரளவு படித்திருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அதற்குப் பெயர் விமர்சனம் அல்ல, அவதூறு! இன்றைய உலகில் மனிதர்கள் எதிர்நோக்கும் அவலங்கள் குறித்து மார்க்ஸ் சொன்னது இருக்கட்டும். இது குறித்து சுப்பிரமணிய பிரபா என்ற அந்த மேதாவி என்ன சொல்கிறார்? ஆகையினால், அவரிடமே மேற்குறிப்பிட்ட கேள்வியை கேட்கலாம் என நினைக்கிறேன்.

1. எட்டு மணிநேர வேலை, எட்டு மணிநேர ஓய்வு, எட்டு மணிநேர உறக்கம் என்பது மார்க்ஸ் சொன்னது. இன்று சர்வதேச சட்டங்களாலும் ஏற்றுக் கொள்ளப் பட்டு விட்டது. அது ஈழத்தில் சரியாக நடைமுறைப் படுத்தப் படுகின்றதா? தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் சிலநேரம் 16 மணித்தியாலங்கள் வேலை செய்கின்றனர்.

மார்க்ஸ் சொல்வது இருக்கட்டும்.... இந்த நிலைமையை மாற்றுவது பற்றி நீ என்ன சொல்கிறாய் என்று சொல்!

2. உழைக்கும் மக்கள் அனைவருக்கும் சமமான சம்பளம் கொடுக்க வேண்டும் என்பது மார்க்ஸ் சொன்னது. உலகின் முதலாவது பொதுவுடைமைப் புரட்சியான பாரிஸ் கம்யூனில் எல்லோருக்கும் சமமான ஊதியம் வழங்கப் பட்டது. இலங்கையில் உள்ள இன்றைய செலவினத்தைப் பொறுத்தவரையில், ஒருவர் நாற்பதாயிரம் ரூபாய் சம்பளம் பெற வேண்டும் என்று பொருளாதார அறிஞர்கள் கூறுகின்றனர். அது எல்லோருக்கும் கிடைகிறதா? ஒரே நிறுவனத்தில் பணி புரியும் தொழிலாளி ஏழாயிரம் ரூபாயும், மனேஜர் ஒரு இலட்சம் ரூபாயும் சம்பளம் வாங்கும் கொடுமையும் நடக்கிறது.

மார்க்ஸ் சொல்வது இருக்கட்டும்.... இந்த நிலைமையை மாற்றுவது பற்றி நீ என்ன சொல்கிறாய் என்று சொல்!

3. உழுபவனுக்கு நிலம் சொந்தமாக வேண்டும் என்பது மார்க்ஸ் சொன்னது. ஈழப் பிரதேசங்களில் ஆயிரக் கணக்கான உழவர்கள் இன்னொருவர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிரிடுகிறார்கள். நில உரிமையாளர்கள் வயலில் இறங்கி உழைக்காமல் சொகுசாக காலாட்டிக் கொண்டு சாப்பிடுகிறார்கள். ஆயிரம் ஏக்கர் நிலம் வைத்திருப்போர் வாழும் நாட்டில் தான் ஒரு துண்டு நிலம் இல்லாத மக்களும் வாழ்கிறார்கள். அந்த நிலங்களை எல்லாம் நிலமற்ற விவசாயிகளுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டாமா? எல்லோரும் தமிழர்கள் தானே? சகோதரத்துவம் தமிழ் இன உணர்வு இருக்காதா?

மார்க்ஸ் சொல்வது இருக்கட்டும்.... இந்த நிலைமையை மாற்றுவது பற்றி நீ என்ன சொல்கிறாய் என்று சொல்!

4. ஆண், பெண் சமத்துவம் பேணப் பட வேண்டும். சிறார் தொழிலாளர்களை சுரண்டுவது ஒழிக்கப் பட வேண்டும் என்பது மார்க்ஸ் சொன்னது. ஆண், பெண் உழைப்பாளிகளுக்கு சமமான ஊதியம் வழங்கப் படுகின்றதா? ஈழத்தில் சிறார் தொழிலாளர்களே கிடையாதா? தோட்டங்கள், உணவகங்கள், தொழிலகங்களில், இன்றைக்கும் எத்தனை ஆயிரம் சிறுவர்கள் பாடசாலைக்கு போகாமல் வேலை செய்கிறார்கள்?

மார்க்ஸ் சொல்வது இருக்கட்டும்.... இந்த நிலைமையை மாற்றுவது பற்றி நீ என்ன சொல்கிறாய் என்று சொல்!

5. நேரடி ஜனநாயக அமைப்பான தொழிலாளர் பாராளுமன்றம், ஆட்சி நிர்வாகத்தை பொறுப்பேற்க வேண்டும் என்பது மார்க்ஸ் சொன்னது. அதிகாரப் பரவாலாக்கல் மூலம், ஊருக்கு ஊர் தொழிலாளர்கள் நேரடியாகப் பங்கு பற்றும் பாராளுமன்றம் அமைப்போம். அதன் மூலம், உழைக்கும் மக்கள் தமது நலன்களை பிரதிநிதித்துவப் படுத்த முடியும். தொழிற்சாலைகளையும் தொழிலாளர்கள் நிர்வகிக்கும் அமைப்பை உருவாக்குவோம். இதற்கெல்லாம் நீ சம்மதிக்கிறாயா?

மேற்குறிப்பிட்ட விடயங்களை நடைமுறைப் படுத்தாமல் விடுவதற்கு, நீ ஆயிரம் நியாயங்களை அடுக்கலாம். அந்தக் காரணங்களையும், இங்கே கூறப்பட்ட விடயங்களையும் தமிழ் மக்கள் முன்னால் வைத்து பொது வாக்கெடுப்பை கோருவோம். யார் சரி, பிழை என்பதை மக்கள் முடிவு செய்யட்டும். அதற்கு நீ சம்மதிக்கிறாயா?

மார்க்ஸ் சொல்வது இருக்கட்டும்.... குறைந்த பட்ச மக்கள் ஜனநாயகத்தை கொண்டு வருவது பற்றி நீ என்ன சொல்கிறாய் என்று சொல்!

யானை பார்த்த குருடர்கள் மாதிரி, "மார்க்சியம் பார்த்த மடையர்கள்" இருக்கிறார்கள். காலங்காலமாக முதலாளித்துவம் பரப்பி வரும் மக்கள் விரோதக் கருத்துக்களை, தமது சொந்தக் கருத்து மாதிரி சொல்லிக் கொள்வார்கள்.

"மார்க்சிய‌ பூச்சாண்டி" காட்டி, பாமர மக்களை ப‌ய‌முறுத்துகிற‌வ‌ர்க‌ள் எந்த‌ள‌வு ப‌டித்திருக்கிறார்க‌ள்? பொருளிய‌ல், ச‌மூக‌விய‌ல், அர‌சிய‌ல், வ‌ர‌லாறு, மெய்யிய‌ல், விஞ்ஞான‌ம், மானிட‌விய‌ல் போன்ற‌ ப‌ல‌ பாட‌ங்க‌ள் மார்க்சியத்திற்குள் அட‌ங்குகின்ற‌ன‌ என்பதை அவர்கள் அறிவார்க‌ளோ?

இன்றைய கல்வி அமைப்பு முதலாளிகளுக்கு சேவகம் செய்யும் அடிமைகளை உருவாக்குகின்றது. அதற்கு மாறாக கல்வியை மக்களின் நலன்களுக்காக மாற்றி அமைப்பது தான் மார்க்சியத்தின் குறிக்கோள். அதற்காகத் தான் நடைமுறையில் உள்ள கல்வியை விமர்சனபூர்வமாக அணுகுகின்றது.

மார்க்ஸ் சொன்னது இருக்கட்டும். "சுயமாக சிந்திக்கும் அறிவுஜீவிகள்", அடிமைகளை உருவாக்கும் கல்வி தொடர்பாக என்னென்ன விமர்சனங்களை வைத்திருக்கிறார்கள்? நடைமுறையில் உள்ள கல்வி அமைப்பை கேள்விக்குட்படுத்தாமல், "கற்றவைகளை ஒப்புவிக்கும் இயந்திர மனிதர்கள்" மார்க்சியத்தை விமர்சிப்பது வேடிக்கையானது.

மார்க்சியம் ஒரு தத்துவமாக கருதினால், பண்டைய கிரேக்க தத்துவ அறிஞர்களையும் குறை கூற வேண்டியிருக்கும். சோக்கிரடீஸ் முதல் ஹெகல் வரையில் எழுதி வைத்த தத்துவங்கள் மார்க்சியத்தில் உள்ளடக்கப் பட்டுள்ளன. இதையெல்லாம் இன்றைக்கும் கற்பிக்கும் பல்கலைக்கழகங்களை பற்றி என்ன சொல்லப் போகிறார்கள்?

மார்க்சியத்தை நிராகரிப்பவர்கள் உலக மக்களுக்கு செய்த, இனிமேல் செய்யப் போகும் உதவிகள் என்ன? வறுமையை ஒழிப்பதற்கு வைத்திருக்கும் திட்டங்கள் என்ன? பட்டினியால் வாடும் மக்களை காப்பாற்றுவதற்கான கொள்கை என்ன? அனைவருக்கும் கல்வி, சுகாதாரம், உணவு, இருப்பிடம் போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான தத்துவம் என்ன?

மார்க்சியத்திற்கு மாற்றாக, மக்கள் நலன் சார்ந்து இவர்கள் முன்வைக்கும் தத்துவம் அல்லது கொள்கைகள் என்ன? ஒன்றுமேயில்லை. இதுவரையும் இல்லை. இனிமேலும் வரப் போவதில்லை. அதனால், மக்கள் தமது உரிமைகளுக்காக போராடுவது எந்த வகையில் தவறாகும்? அப்படிப் போராடுங்கள் என்பதையும் மார்க்சியம் தானே சொல்லிக் கொடுத்தது?

அது ஒரு புறம் இருக்கட்டும். //மார்க்ஸ் சொல்வது இருக்கட்டும்... நீ என்ன சொல்கிறாய் என்பதைச்சொல்// என்று அறிவுரை கூறும் அறிவாளிகளுக்கு, மார்க்ஸ், லெனினை விட்டால், உலகில் வேறு யாரையும் தெரியாதா?

19 ம் நூற்றாண்டில் சோஷலிசத்தை முன்மொழிந்த ஜாகோபின், புருதோன், பகுனின் என்று ஏராளமான தத்துவ அறிஞர்கள் இருக்கிறார்களே? அவர்களை பற்றியும் பேசலாமே? சமதர்மம் போதித்த சங்க கால தமிழ்ப் புலவர்கள் பற்றிப் பேசலாமே?

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று பாடிய சங்க காலப் புலவர் கணியன் பூங்குன்றனார் பற்றி இவர்கள் கேள்விப் பட்டதே இல்லையா? "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்." என்று கார்ல் மார்க்ஸ் பிறப்பதற்கு மூவாயிரம் வருடங்களுக்கு முன்னரே மார்க்சியம் பேசிய திருவள்ளுவர் பற்றி என்ன நினைக்கிறார்கள்?

"தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்று பாடிய பாரதியார் ஒரு கம்யூனிஸ்டா? "ஊசியின் காதுக்குள் ஒரு ஒட்டகம் நுழைவது இலகு. ஆனால், பணக்காரன் பரலோகம் போக முடியாது" என்று போதித்த இயேசு கிறிஸ்து மார்க்சிஸ்ட் அல்லவே?

“நான் ஏழைக்கு உணவளித்தேன். அவர்கள் என்னை புனிதர் என்று போற்றினார்கள். ஏழைக்கு ஏன் உணவு கிடைப்பதில்லை என்று கேட்டேன். என்னை கம்யூனிஸ்ட் என்று அழைத்தார்கள்!” – Dom Hélder Pessoa Câmara (பிரேசில் நாட்டு கத்தோலிக்க பாதிரியார்)

Friday, November 18, 2016

அமெரிக்காவில் அடிமை வாணிபத்தில் ஈடுபட்ட யூதர்கள்


சியோனிஸ்ட் தேசியவாதிகளும், அவர்களை ஆதரிப்பவர்களும், யூதர்களை வரலாறு முழுவதும் ஒடுக்கப் பட்டவர்களாக குறிப்பிடுவார்கள். தலைமுறை தலைமுறையாக அடிமைகளாக நடத்தப் பட்டதாக சொல்வார்கள். ஆனால், யூதர்களும் ஒரு காலத்தில் ஒடுக்குபவர்களாக, அடிமைகளை வைத்திருந்ததாக, யாரும் பேசுவதில்லை. ஊடகங்கள் இருட்டடிப்பு செய்கின்றன. சரித்திர நூல்கள் மூடி மறைக்கின்றன. குறிப்பாக, 16 ம் நூற்றாண்டில், யூதர்கள் அடிமை வாணிபத்தில் ஈடுபட்ட தகவலை நீங்கள் எங்கேயும் கேள்விப் பட முடியாது.

அட்லாண்டிக் சமுத்திரத்தின் ஊடாக நடந்த, டச்சுக் காரர்களின் அடிமை வாணிபம், ஆரம்பத்தில் யூத வணிகர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. பிரேசிலில் உருவான போர்த்துகேய காலனிகளுக்கு அடிமைகளை விநியோகம் செய்து வந்தனர். பின்னர் டச்சு கயானா (இன்று: சுரினாம்) என்ற நெதர்லாந்து காலனியும், யூத வணிகர்கள் கொண்டு வந்த அடிமைகளை கொண்டு உருவானது. யூதர்கள், டச்சு காலனிய நிறுவனமான "மேற்கிந்தியக் கம்பனி" க்கும், போர்த்துக்கேய காலனிகளுக்கும் இடையில் வர்த்தகம் செய்த இடைத் தரகர்களாக இருந்தனர். கிட்டத்தட்ட 60% மான அடிமை வர்த்தகம் அவர்களின் கைகளில் இருந்தது.

எவ்வாறு யூதர்கள் அடிமை வர்த்தகத்தில் ஈடுபட்டார்கள்? 16 ம் நூற்றாண்டில், ஏராளமான போர்த்துக்கேய யூதர்கள் நெதர்லாந்தில் வந்து குடியேறினார்கள். ஏற்கனவே, போர்த்துக்கல் அடிமை வாணிபத்தில் இறங்கி இருந்த படியால், யூதர்களும் அந்த தொடர்புகளை பேணி வந்தனர். யூதர்களுக்கு, போர்த்துக்கேய மொழியும், டச்சு மொழியும் சரளமாக பேசத் தெரிந்திருந்ததால், இரு தரப்பு வாணிபத்தில் இறங்குவது இலகுவாக இருந்தது.

யூதர்களுக்கும், கறுப்பின அடிமைகளுக்கும் இடையிலான தொடர்பு, சந்தர்ப்பத்திற்கு ஏற்ப மாறுபட்டு வந்தது. குறிப்பிட்ட சில காலம், கறுப்பின அடிமைகளை யூத மதத்திற்கு மாறுவதற்கு அனுமதித்திருக்கிறார்கள். சில இடங்களில் கலப்புத் திருமணங்களும் நடந்துள்ளன. இதற்கான சான்றுகளை, இன்றைக்கும் போர்த்துக்கல் நாட்டில் உள்ள ஆவணங்களில் காணலாம். ஆம்ஸ்டர்டாமில் வாழ்ந்த யூதர்கள், கறுப்பின அடிமைகளை வீட்டுப் பணியாளர்களாக வைத்திருந்திருக்கிறார்கள்.

Elieser என்ற, யூத மதத்திற்கு மாறிய கறுப்பின அடிமையின் கல்லறை, இன்றைக்கும் ஆம்ஸ்டர்டாம் நகருக்கு அருகில் உள்ளது. Ouderkerk aan de Amstel எனும் இடத்தில் உள்ள யூத கல்லறைகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது.

அதிலே, ”Sepultura do bom servo Elieser” (போர்த்துகேய மொழியில்: "நல்ல அடிமை எலிசரின் கல்லறை."), என்ற வாசகம் பொறிக்கப் பட்டுள்ளது. நெதர்லாந்து நாட்டில் புதைக்கப்பட்ட முதலாவது கறுப்பின அடிமை எலிசர் ஆக இருக்கலாம். கறுப்பின அடிமைகளை வைத்திருந்த யூத எஜமானின் கல்லறையும், அதற்கு அருகில் தான் உள்ளது. (Op Joodse begraafplaats ligt zwarte slaaf Elieser naast slavenhandelaar; http://www.refdag.nl/achtergrond/geschiedenis-cultuur/op_joodse_begraafplaats_ligt_zwarte_slaaf_elieser_naast_slavenhandelaar_1_656045)

Monday, November 14, 2016

ஈழத்தில் தமிழரை பேரழிவுக்குள் சுரண்டிக் கொழுத்த தமிழ் முதலாளிகள்


ஈழ‌ப்போர் ந‌ட‌ந்த‌ கால‌ம், யாழ்ப்பாணத் த‌மிழ் முத‌லாளிக‌ளின் பொற்கால‌ம் என்று சொல்லலாம். சொல்லொணா மனிதப் பேர‌ழிவுக‌ளுக்கு ம‌த்தியிலும் கோடி கோடியாக‌ பணம் ச‌ம்பாதித்தார்க‌ள். ஒரு ப‌க்க‌ம் த‌மிழ‌ர்க‌ள் செத்து ம‌டிந்து கொண்டிருக்கையில், ம‌றுப‌க்க‌ம் முத‌லாளிக‌ளின் க‌ஜானாவில் ப‌ண‌ம் குவிந்து கொண்டிருந்த‌து. அதற்காக அவர்கள் ஒரு நிமிடம் கூட வருத்தப் படவில்லை.

பெரும்பாலானோருக்கு ந‌ன்கு தெரிந்த‌ வ‌ர்த்த‌க‌ப் பிர‌ப‌ல‌ம், காலஞ்சென்ற ம‌கேஸ்வ‌ர‌னை உதார‌ண‌மாக‌ எடுக்க‌லாம். இவ‌ர் ஒன்றுமில்லாத ஓட்டாண்டியாக‌ தனது வ‌ர்த்த‌க‌ வாழ்வை ஆர‌ம்பித்த‌வ‌ர். போர்க் காலத்தில் ம‌ண்ணெண்ணை (கெரசின் ஆயில்) க‌ட‌த்த‌ல் மூல‌ம் கோடீஸ்வ‌ர‌னாக‌ மாறினார். சட்டவிரோதமான கடத்தல் வேலை செய்து முதலாளி ஆகலாம் என்று நிரூபித்தார்.

அந்த‌க் கால‌த்தில் பொருளாதாரத் தடை இருந்தது. புலிக‌ளின் க‌ட்டுப்பாட்டுப் பிர‌தேச‌த்திற்கு கொண்டு செல்ல‌க் கூடாது என்று, அர‌சு ப‌ல‌ பொருட்க‌ளை த‌டை செய்திருந்த‌து. அத‌னால், ம‌ண்ணெண்ணை போன்ற‌ அத்தியாவ‌சிய‌ப் பொருட்க‌ளுக்கும் த‌ட்டுப்பாடு ஏற்ப‌ட்ட‌து. வீடுகளில் சமைப்பதற்கும், வெளிச்சத்திற்கும் மண்ணெண்ணெய் தேவைப் பட்டது. பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாக ஓடாமல் நின்ற வாகனங்களையும் மண்ணெண்ணெய்யில் ஓட வைத்தார்கள்.

கடத்தல் பேர்வழி ம‌கேஸ்வ‌ர‌ன் அர‌ச‌ க‌ட்டுப்பாட்டுப் பிர‌தேச‌த்தில் ம‌ண்ணெண்ணை வாங்கி, புலிக‌ளின் க‌ட்டுப்பாட்டுப் பிர‌தேச‌த்திற்கு க‌ட‌த்திச் சென்றார். அத‌ற்காக‌ காவ‌லர‌ணில் இருந்த‌ இராணுவ‌த்தின‌ருக்கும் இல‌ஞ்ச‌ம் கொடுக்க‌ப் ப‌ட்ட‌து.

அன்று ஒரு லீட்ட‌ர் ம‌ண்ணெண்ணையின் விலை 13 ரூபாய்க‌ள் ம‌ட்டுமே. ஆனால், புலிக‌ளின் க‌ட்டுப்பாட்டுப் பிர‌தேச‌த்தில் 300 ரூபாய்க்கு விற்க‌ப் ப‌ட்ட‌து! அதாவது முப்பது மடங்கு இலாபம் வைத்து விற்றார். இந்த‌ப் ப‌க‌ல் கொள்ளை கார‌ண‌மாக‌, அவர் தமிழ் மக்களால் "ம‌ண்ணெண்ணை ம‌கேஸ்வ‌ர‌ன்" என்ற பட்டப் பெயரால் அழைக்கப் ப‌ட்டார். மகேஸ்வரனின் பணம் பாதாளம் மட்டும் பாய்ந்தது.

யாழ் குடாநாட்டு பத்திரிகையான உதயன், "மண்ணெண்ணெய் விலை குறைத்த வள்ளல்" என்று அவரைப் பற்றிப் புகழ்ந்து எழுதியது. அதாவது, சிறு வியாபாரிகள் மண்ணெண்ணெய்யை அதிக விலைக்கு விற்றுக் கொண்டிருந்த காலத்தில், மகேஸ்வரன் ஒரு மொத்த வியாபாரியாக கப்பல் மூலம் "இறக்குமதி" செய்தாராம். அதனால் மண்ணெண்ணெய் விலை குறைந்ததாம். கேட்பவன் கேணையன் என்றால் எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டுமாம்.

மகேஸ்வரனின் த‌ம்பி துவார‌கேஸ்வ‌ர‌னும் ம‌ண்ணெண்ணை க‌ட‌த்தி விற்று கோடீஸ்வ‌ர‌ன் ஆன‌வ‌ர் தான். இன்று யாழ் ந‌கரில் ஒரு பெரிய‌ ந‌ட்ச‌த்திர‌ த‌ங்குவிடுதிக்கு சொந்த‌க்கார‌ன். புலிக‌ளின் கால‌த்தில் உத‌ய‌ன் ப‌த்திரிகை யாழ் குடாநாட்டில் ஏக‌ போக‌ உரிமை கொண்டிருந்த‌து. இன்றைக்கும் அது தான் அதிக‌ள‌வில் விற்ப‌னையாகின்றது. உத‌ய‌ன் நிறுவ‌ன‌ முத‌லாளி ச‌ர‌வ‌ண‌ப‌வ‌னும், யாழ் ந‌க‌ரில் ஒரு ந‌ட்ச‌த்திர‌ த‌ங்குவிடுதி வைத்திருக்கிறார்.

அர‌சிய‌லில் விடுத‌லைப் புலிக‌ள் த‌மிழ் ம‌க்க‌ளின் ஏக‌ பிர‌திநிதித்துவ‌ம் கோரிய‌ மாதிரித் தான், த‌மிழ் முத‌லாளிக‌ளும் ந‌ட‌ந்து கொண்டார்க‌ள். போர் ந‌ட‌ந்த‌ கால‌ம் முழுவ‌தும், அவ‌ர்க‌ள் சொன்ன‌ விலைக்கு ம‌க்க‌ள் வாங்க‌ வேண்டிய‌ நிர்ப்ப‌ந்த‌ம் இருந்த‌து.

"ஐயோ பாவ‌ம், ந‌ம‌து சொந்த‌ இன‌ ம‌க்க‌ள் தானே," என்று ஒரு முத‌லாளி கூட‌ ப‌ரிதாப‌ப் ப‌ட‌வில்லை. உட‌மைக‌ளை இழ‌ந்து உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருந்த‌ ம‌க்க‌ளிட‌ம் இர‌க்க‌மின்றி சுர‌ண்டிக் கொழுத்த‌ன‌ர். ம‌னித‌னின் இர‌த்த‌த்தை உறிஞ்சி வாழும் அட்டைக்கும், இந்தத் "த‌மிழ்"(?) முத‌லாளிக‌ளுக்கும் என்ன‌ வித்தியாச‌ம்?

முத‌லாளித்துவ‌த்தில் போட்டி இருக்க‌ வேண்டும் என்று பொருளிய‌ல் அறிஞ‌ர்க‌ள் சொல்வார்க‌ள். யாழ்ப்பாண‌ த‌மிழ் வ‌ணிக‌ர்க‌ள், எந்த‌ப் போட்டியாள‌ரும் இல்லாம‌ல் த‌னிக்காட்டு ராஜாவாக‌ வ‌ர்த்த‌க‌ம் செய்த‌ன‌ர்.

1983 ம் ஆண்டு போர் தொட‌ங்கிய‌ கால‌த்தில் இருந்து சிங்க‌ள‌ வ‌ணிக‌ர்க‌ள் வ‌ட‌ மாகாண‌ப் ப‌க்க‌ம் த‌லை வைத்தும் ப‌டுக்க‌வில்லை. 1991 ம் ஆண்டு முஸ்லிம்க‌ள் வெளியேற்ற‌ப் ப‌ட்ட‌ன‌ர். யாழ் குடாநாட்டு வ‌ர்த்த‌க‌த்தில் முஸ்லிம்க‌ளின் ஆதிக்க‌ம் ச‌ற்று அதிக‌மாக‌ இருந்த‌து. அந்த‌த் த‌டை அக‌ற்ற‌ப் ப‌ட்ட‌தும் த‌மிழ் வ‌ர்த்த‌க‌ர்க‌ள் காட்டில் ஒரே ம‌ழை தான்.

அப்பாவித் த‌மிழ் ம‌க்க‌ளுக்கு இந்த‌ உண்மையெல்லாம் எப்ப‌டித் தெரியும்? "சிங்க‌ள‌வ‌ர்க‌ள் எங்க‌ளை அழிக்க‌த் துடிக்கும் எதிரிக‌ள்." "முஸ்லிம்க‌ள் எங்க‌ளை காட்டிக் கொடுக்கும் துரோகிக‌ள்." இப்ப‌டி சொல்லிக் கொடுத்தால் போதும். உட‌னே ந‌ம்பி விடுவார்க‌ள். அத‌ற்குப் பிற‌கு த‌மிழ‌ர்க‌ளை வேண்டிய‌ ம‌ட்டும் சுரண்டி, கோடி கோடியாக‌ ப‌ண‌ம் ச‌ம்பாதிக்க‌லாம். எதிர்த்துப் பேசினால் அவ‌னுக்கும் துரோகிப் ப‌ட்ட‌ம் சூட்டி விட‌லாம்.

ஈழ‌ப் போர் ந‌ட‌ந்த‌ கால‌த்தில் ம‌ட்டும‌ல்ல‌, அத‌ற்குப் பின்ன‌ரும் பேச‌ப் ப‌டும் தீவிர‌ த‌மிழ்த்தேசிய‌ம் அல்ல‌து த‌மிழ் இன‌வாத‌த்தின் பின்ன‌ணியில் த‌மிழ் முத‌லாளிக‌ளின் ந‌ல‌ன்க‌ளும் அட‌ங்கியுள்ள‌ன‌. த‌மிழ்த்தேசிய‌ அர‌சிய‌லும் முத‌லாளித்துவ‌மும் ஒன்றில் இருந்து ம‌ற்ற‌து பிரிக்க‌ முடியாம‌ல் உள்ள‌ன‌.

ஈழ‌ப் போர் ந‌ட‌ந்த‌ பொற்கால‌த்தில் கோடி கோடியாக‌ ச‌ம்பாதித்துக் கொண்டிருந்த‌ த‌மிழ் முத‌லாளிக‌ள், சில‌நேர‌ம் புலிக‌ளையும் திட்டித் தீர்த்த‌ன‌ர். அத‌ற்குக் கார‌ண‌ம் புலிக‌ள் 5% வ‌ரி அற‌விட்ட‌து தான்.

உண்மையில் 5% வ‌ரி, முத‌லாளிக‌ளின் கோடிக் க‌ண‌க்கான‌ நிக‌ர‌ இலாப‌த்துட‌ன் ஒப்பிட்டால், இந்த‌த் தொகை மிக‌ மிக‌க் குறைவு. மேற்கு ஐரோப்பாவில் 20% அல்ல‌து 30% வ‌ரியாக‌ க‌ட்ட‌ வேண்டும். போர் முடிந்த‌ பின்ன‌ர் முத‌லாளித்துவ‌ ஆத‌ர‌வு த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ளால் எழுப்ப‌ப் ப‌ட்ட‌ கோஷ‌ங்க‌ளுக்கான‌ விள‌க்க‌ம்:

- "எங்க‌ளுக்கு த‌மிழீழ‌ம் வேண்டும்!" (விள‌க்க‌ம்: த‌மிழ் ம‌க்க‌ளை சுர‌ண்டுவ‌தற்கு த‌மிழ் முத‌லாளிக‌ளுக்கே ஏக‌போக‌ உரிமை வேண்டும்.)

- "இருப்ப‌வ‌ர்க‌ள் இருந்திருந்தால் இப்போது இப்ப‌டி ந‌ட‌ந்திருக்குமா?" (விள‌க்க‌ம்: சிங்க‌ள‌, முஸ்லிம் முத‌லாளிக‌ள், த‌மிழ் முத‌லாளிக‌ளுட‌ன் போட்டிக்கு வ‌ந்திருப்பார்க‌ளா?)

தமிழ்த் தேசியவாத கட்சிகளின் தலைவர்கள் முதலாளித்துவத்தை ஆதரிப்பது வியப்புக்குரியதல்ல. பலர் பரம்பரை பரம்பரையாக நிலவுடைமையாளர் சமூகத்தில் இருந்து வந்தவர்கள். அந்த சொத்துக்களை இன்றளவும் ஆண்டு அனுபவிப்பவர்கள். 

இன்று தீவிர புலி ஆதரவு, தீவிர தமிழ்த் தேசியம் பேசும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட ஒரு பெருந்தோட்ட முதலாளி தான். அவரது பெயரில் மலையகத் தேயிலைத் தோட்டம் மட்டுமல்லாது, மலேசியாவிலும் ரப்பர் தோட்டங்கள் உள்ளன.

1947 இல், அன்றைய‌ இல‌ங்கை பிர‌த‌ம‌ர் டி.எஸ். சேன‌நாய‌க்க‌ த‌லைமையிலான‌ குழுவின‌ர் பெருந்தோட்ட‌த் தொழிலாள‌ர்க‌ளின் பிர‌ஜாவுரிமையை ப‌றித்த‌ன‌ர். பெருந்தோட்ட‌த் த‌மிழ‌ர்க‌ள் பெரும் அர‌சிய‌ல் ச‌க்தியாகி, க‌ண்டிச் சிங்க‌ளவ‌ரின் பிர‌திநிதித்துவ‌த்தில் பிர‌ச்சினை கொடுப்பார்க‌ள் என்ப‌து ஒரு கார‌ண‌ம். அதேவேளை, சோஷ‌லிச‌ சித்தாந்த‌ங்கள், ம‌லைய‌க‌ ம‌க்க‌ள் ம‌த்தியில் ஆழ‌மாக‌ நிலைகொண்டு விடும் என‌ப் ப‌ய‌ந்த‌மை இன்னொரு கார‌ண‌ம்.

ம‌லைய‌க‌த் த‌மிழ‌ரின் பிர‌ஜாவுரிமை ப‌றிக்கும் ச‌ட்ட‌த்திற்கு யாழ்ப்பாண‌த் த‌மிழ‌ரான‌ ஜி.ஜி.பொன்ன‌ம்ப‌ல‌ம் (கஜேந்திரகுமாரின் தாத்தா) ஆத‌ர‌வாக‌ இருந்தார். அத‌ற்குக் கார‌ண‌ம் அவ‌ரும் ஒரு பெருந்தோட்ட‌ முத‌லாளியாக‌ இருந்தார்.

அண்மையில் தேயிலைத் தோட்ட‌த் தொழிலாள‌ர்க‌ளின் ச‌ம்ப‌ள‌ உய‌ர்வுக் கோரிக்கையை ஆத‌ரித்து, யாழ் ந‌க‌ரிலும் ஆர்ப்பாட்ட‌ம் ந‌ட‌ந்த‌து. அப்போது ஜி.ஜி.பொன்ன‌ம்ப‌ல‌த்தின் பேர‌ன் க‌ஜேந்திர‌குமாரும் ப‌ங்குப‌ற்றி இருந்தார்.

பெருந்தோட்ட‌ உரிமையாள‌ர் பொன்ன‌ம்ப‌ல‌த்தின் வாரிசான‌ க‌ஜேந்திர‌குமார், த‌ன‌க்கு சொந்த‌மான‌ தேயிலைத் தோட்ட‌த்தில் வேலை செய்யும் தொழிலாள‌ர்க‌ளுக்கு ச‌ம்ப‌ள‌ம் கூட்டிக் கொடுத்து முன்னுதார‌ண‌மாக‌ திக‌ழ்ந்திருக்க‌லாம்.

இப்ப‌டியான த‌க‌வ‌ல்க‌ளை இருட்ட‌டிப்பு செய்யும் த‌மிழ் ஊட‌க‌ங்க‌ள், முத‌லாளி க‌ஜேந்திர‌குமாரை தொழிலாள‌ரின் ந‌ண்ப‌னாக காட்டும் பித்த‌லாட்ட‌மும் ந‌ட‌க்கிற‌து. க‌ஜேந்திர‌குமாருக்கு (யாழ் குடாநாட்டில்) ப‌ளைப் பிர‌தேச‌த்திலும் ப‌ல‌ ஏக்க‌ர் காணி சொந்த‌மாக‌ இருக்கிற‌தாம். ஒரு த‌ட‌வை வைத்திய‌சாலை விஸ்த‌ரிப்புக்காக‌ இர‌ண்டு ப‌ர‌ப்பு காணி கேட்ட‌ நேர‌ம் கொடுக்க ம‌றுத்து விட்டாராம். இவ‌ர்க‌ள் தான் த‌மிழ‌ர்க‌ளின் தேசிய‌த் த‌லைவ‌ர்க‌ள்.

வாழ்க‌ த‌மிழ்த் தேசிய‌ம்!


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Saturday, November 12, 2016

ஏகாதிபத்திய எதிர்ப்பாளன் பண்டார வன்னியன் ஒரு தமிழ்த் தேசிய மறுப்பாளன்


ஏகாதிப‌த்திய‌ எதிர்ப்பாள‌ன் ப‌ண்டார‌ வ‌ன்னிய‌னுக்கு உரிமை கோருவ‌த‌ற்கு த‌மிழ் குறுந் தேசிய‌வாதிக‌ளுக்கு எந்தத் த‌குதியும் கிடையாது! 

வரலாற்று நாயகர்களுக்கு தேசியாதிகள் உரிமை கோருவது உலக வழமை. ஆனால், அன்றைய வரலாற்று நாயகர்களுக்கும் இன்றைய தேசியவாதிகளுக்கும் இடையில் பெருமளவு கொள்கை வேறுபாடு இருக்கும். அதை யாரும் கண்டுகொள்வதில்லை.

அதே மாதிரி, அன்றைய பண்டார வன்னியனுக்கும் இன்றைய தமிழ்த் தேசியவாதிகளுக்கும் கடுகளவு ஒற்றுமை கூடக் கிடையாது. பண்டார வன்னியனின் அரசியல் சித்தாந்தம் முற்றிலும் மாறுபட்டது. இன வேற்றுமை பாராட்டாமல், சிங்களவருடன் கூட்டுச் சேர்ந்து ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடினான்.

அன்றைய‌ கால‌த்தில் ப‌ண்டார‌ வ‌ன்னிய‌ன் முன்னெடுத்த‌ அர‌சிய‌லுக்கும், இன்றைய‌ த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ளின் அர‌சிய‌லுக்கும் எந்த‌ ச‌ம்ப‌ந்த‌மும் கிடையாது. ப‌ண்டார‌ வ‌ன்னிய‌ன் இன்றிருந்தால், "சிங்க‌ள‌வ‌ருட‌ன் ந‌ல்லிண‌க்க‌ம் பேசிய‌ ஒத்தோடி" என்று, ந‌ம‌து த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள் திட்டித் தீர்த்திருப்பார்க‌ள்.

சிங்க‌ள‌ - த‌மிழ் இன‌ முர‌ண்பாடு ஒரு இருப‌தாம் நூற்றாண்டின் தோற்ற‌ப்பாடு. இன்று ப‌ல‌ர் க‌ற்ப‌னை செய்வ‌து போல‌, சிங்க‌ள‌வரும், த‌மிழ‌ரும் ஆயிர‌மாயிர‌ம் ஆண்டுக‌ளாக‌ ப‌கைவ‌ர்க‌ளாக‌ வாழ‌வில்லை. அத‌ற்கு ப‌ண்டார‌ வ‌ன்னிய‌ன் வ‌ர‌லாறு சிற‌ந்த‌ உதார‌ண‌ம்.

த‌மிழ் நாட்டில் இருந்து வ‌ந்து குடியேறிய‌ வ‌ன்னிய‌ர்க‌ளால், அந்த‌ப் பிர‌தேச‌த்திற்கு வ‌ன்னி என்று பெய‌ர் வ‌ந்த‌தாக‌ ந‌ம்ப‌ப் ப‌டுகின்ற‌து. ஆயிர‌ம் வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்ன‌ரும், த‌மிழ‌க‌ வ‌ன்னிய‌ர்க‌ள் சிங்க‌ள‌ அர‌ச‌ வ‌ம்ச‌த்துட‌ன் இன‌க் க‌ல‌ப்பு செய்திருந்த‌ வ‌ர‌லாற்றுக் குறிப்புக‌ள் உள்ள‌ன‌.

ஐரோப்பிய‌ கால‌னியாதிக்க‌வாதிக‌ள் இல‌ங்கையில் கால் ப‌தித்த‌ நேர‌ம், க‌ண்டி ராஜ்ஜிய‌ம் சுத‌ந்திர‌மாக‌ இருந்த‌து. வ‌ன்னிப் பிர‌தேச‌த்தை ஆண்ட‌ குறுநில‌ ம‌ன்ன‌னான‌ ப‌ண்டார‌ வ‌ன்னிய‌ன், க‌ண்டி ராஜ்ஜிய‌த்திற்கு திறை செலுத்தி வ‌ந்தான்.

யாழ் குடா நாடு ஐரோப்பிய‌ கால‌னிய‌ ஆட்சியின் கீழ் இருந்த‌து. வ‌ன்னிப் பிராந்திய‌ம், க‌ண்டிய‌ ராஜ்ஜிய‌த்தின் வ‌ட‌க்குப் புற‌ பாதுகாப்பு அர‌ணாக‌ இருந்த‌து. அத‌னால் தான், கால‌னிய‌ ப‌டைக‌ள் முத‌லில் இடையில் இருந்த‌ த‌டையான‌ ப‌ண்டார‌ வ‌ன்னிய‌னை அக‌ற்றும் போரை ந‌ட‌த்தி இருந்த‌ன‌ர்.

அன்று ந‌ட‌ந்த‌ போர்க‌ளில், ட‌ச்சுக் கால‌னிய‌ப் ப‌டைக‌ள் ப‌ல‌ த‌ட‌வை தோல்வியை ச‌ந்தித்த‌ன‌. க‌ண்டி ராஜ்ஜிய‌த்திட‌ம் இருந்து கிடைத்த‌ பீர‌ங்கி போன்ற‌ "ந‌வீன‌ ஆயுத‌ங்க‌ள்" வ‌ன்னிப் ப‌டைக‌ளுக்கு உத‌வின‌. மேலும் காடுக‌ளுக்குள் ம‌றைந்திருந்து கெரில்லாப் போரிலும் ஈடுப‌ட்டிருந்த‌ன‌ர்.

வ‌ன்னி குறுநில‌ ம‌ன்ன‌னான‌ ப‌ண்டார‌ வ‌ன்னிய‌ன், ட‌ச்சு, ஆங்கிலேய‌ கால‌னிய ஆக்கிர‌மிப்பாள‌ரருக்கு எதிராக‌ போரிட்டு ம‌டிந்தான். 31 அக்டோப‌ர் 1803 அன்று, ஒட்டிசுட்டானில் ந‌ட‌ந்த‌ போரில், ட‌ச்சு ப‌டைத் த‌ள‌ப‌தி ஃபொன் டிரிபேர்க்கினால் (Von Drieberg) தோற்க‌டிக்க‌ப் ப‌ட்டான்.

அப்போது இல‌ங்கையில் ஆங்கிலேய‌ கால‌னிய‌ ஆட்சி ஆர‌ம்ப‌மாகி விட்டிருந்த‌து. ட‌ச்சு கால‌னியவாதிக‌ளுட‌னான‌ போரில், இல‌ங்கையை ஆங்கிலேய‌ர் கைப்ப‌ற்றி விட்டிருந்த‌ன‌ர். இருப்பினும், ப‌ண்டார‌வ‌ன்னிய‌னுக்கு எதிரான‌ ப‌டை ந‌ட‌வ‌டிக்கையில் ஈடுப‌ட்டிருந்த‌ லெப்டின‌ன்ட் ஃபொன் டிரிபேர்க், ஆங்கிலேய‌ருட‌ன் ஒத்துழைத்திருந்தான்.

பண்டாரவன்னியனை தோற்கடித்த தளபதியின் பெயரில் ஒரு (கிறிஸ்தவ) தனியார் பாடசாலையும் உருவானது. டிறிபேர்க் கல்லூரி என்ற அந்தப் பாடசாலை இன்றைக்கும் சாவகச்சேரியில் உள்ளது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் அரச பாடசாலையாக இயங்கிய போதிலும், விடுதலைப் புலிகளின் ஆட்சிக் காலத்திலும் அதன் பெயர் மாற்றப் படவில்லை. இன்றைக்கும் டிறிபேர்க் கல்லூரி என்ற பெயரில் தான் இயங்குகின்றது.

ப‌ண்டார‌ வ‌ன்னிய‌னும், அவ‌ன‌து ப‌டையில் இருந்த‌ பெரும்பாலான‌ வீர‌ர்க‌ளும் த‌மிழ‌ர்க‌ள் தான். ஆனால், சிங்க‌ள‌ வீர‌ர்க‌ளும் இருந்த‌ன‌ர். அதில் எந்த அதிசயமும் இல்லை. வன்னி குறுநில மன்னர்கள், கண்டி ராஜ்ஜியத்திற்கு திறை செலுத்தி ஆண்டு வந்தனர். அத்துடன் அந்தக் காலத்தில் தேசிய இராணுவ அமைப்பு இருக்கவில்லை. மன்னர்களிடம் இருந்ததெல்லாம் கூலிப்படைகள் தான். அந்தக் கூலிப் படையில் பல வேறுபட்ட இனம், மதம், மொழிப் பிரிவுகளை சேர்ந்த வீரர்கள் இருந்தனர்.

பண்டாரவன்னியன் "தூய தமிழன்" என்று சொல்வதற்கும் ஆதாரம் இல்லை. த‌னிப்ப‌ட்ட‌ முறையில், ப‌ண்டார‌ வ‌ன்னிய‌னின் குடும்ப‌ம் சிங்க‌ள‌வ‌ருட‌ன் திருமண உறவுகளைப் பேணி வந்தது. பண்டைய அனுராதபுர நகரத்தில் பண்டாரவன்னியனின் சிங்கள உறவினர்கள் வாழ்ந்து வந்தனர். அந்தக் காலத்தில் இந்திய வர்ணாச்சிரம விதிகள் இலங்கையிலும் பின்பற்றப் பட்டு வந்தன. அரச வம்சத்தினர் எப்போதும் சத்திரியர்களாக இருக்க வேண்டுமென்ற விதி இருந்தது. பேசும் மொழியை விட, பிறப்பால் வந்த சாதி முக்கியமாகக் கருதப் பட்ட காலம் அது.

19ம் நூற்றாண்டு வரையிலுமான இலங்கையில் சிங்க‌ளவ‌ர், த‌மிழ‌ர் என்ற‌ இன‌ வேற்றுமை உண‌ர்வு யாரிடமும் இருக்க‌வில்லை. அது பிற்கால‌த்தில் ஆங்கிலேய‌ரால் திணிக்க‌ப் ப‌ட்ட‌து. கண்டி ராஜ்ஜியத்தை கைப்பற்றும் நோக்கில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்ற இனப்பாகுபாடு தூண்டி விடப் பட்டது. கண்டி ராஜ்ஜியம் வீழ்ந்தமைக்கு ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியும் ஒரு காரணம்.

ப‌ண்டார‌ வ‌ன்னிய‌ன் ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பாளன் என்றே வரலாற்றில் எழுதப் பட்டுள்ளது. அவன் எந்தக் காலத்திலும் ஒரு தமிழ்த் தேசியவாதியாக இருந்திருக்கவில்லை. தேசியவாதம் என்ற கருத்தியல் அன்று யாருடைய மனதிலும் இருக்கவில்லை. பண்டார வன்னியன், இலங்கையை ஆக்கிரமிக்கத் துடித்த ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகளுக்கு எதிராக‌ சிங்க‌ள‌ ம‌க்க‌ளின் ஆத‌ர‌வுட‌ன் போரிட்டான்.

இன்றைய‌ த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ளையும் எதிரிக‌ளாக‌க் க‌ருதுகின்ற‌ன‌ர். அத்துடன் அவர்கள் தீவிரமான ஏகாதிப‌த்திய‌ விசுவாசிக‌ள். இந்த‌க் கால‌த்தில், சில‌நேர‌ம் இட‌துசாரிக‌ள் ஏகாதிப‌த்திய‌ எதிர்ப்பு ப‌ற்றிப் பேசினாலும், ந‌ம‌து த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள் காதைப் பொத்திக் கொண்டு ஓடுவார்க‌ள். 

அதாவ‌து, ப‌ண்டார‌ வ‌ன்னிய‌னின் யாரை எதிரிகளாகக் கருதி போரிட்டானோ, அவர்களது நண்பர்கள் நண்பர்கள் தான் இன்றைய தமிழ்த் தேசியவாதிகள்!பண்டார வன்னியன் இன்றிருந்தால், "ஒத்தோடிகளான" தமிழ்த் தேசியர்களை துரோகிகள் என்று தூற்றி இருப்பான்.

ப‌ண்டார‌ வ‌ன்னிய‌ன், த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள், ஆகிய‌ இர‌ண்டு த‌ர‌ப்பின‌ர‌தும் அர‌சிய‌ல் கொள்கைக‌ள் முற்றிலும் வேறுப‌ட்ட‌வை. ப‌கை முர‌ண்பாடு கொண்ட‌வை. எந்த‌க் கால‌த்திலும் ஒன்று சேர‌ முடியாத‌வை.

அப்ப‌டி இருக்கையில் இன்றைய‌ த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள் ப‌ண்டார‌ வ‌ன்னிய‌னுக்கு உரிமை கோருவ‌து ஒரு முர‌ண்ந‌கை. தேசிய‌வாதிக‌ள் த‌ம‌க்கு எந்த‌ ச‌ம்ப‌ந்த‌மும் இல்லாத‌ ச‌ரித்திர‌ நாய‌க‌ர்க‌ளுக்கு சொந்த‌ம் கொண்டாடும் கேலிக்கூத்தை, இது போன்ற‌ ப‌ல‌ இட‌ங்க‌ளில் அவ‌தானிக்க‌லாம்.

Friday, November 11, 2016

சுட்டிபுரம் அம்மனின் ஓடாத தேரும், யாழ் ஆதிக்க சாதியின் அடங்காத திமிரும்

வரணி சுட்டிபுரம் அம்மன் ஆலயம் 

யாழ்ப்பாண‌த்தில் சாதிப் பிர‌ச்சினை கார‌ண‌மாக‌ 20 வ‌ருட‌ங்க‌ளாக‌ நிறுத்தி வைக்க‌ப் ப‌ட்ட‌ தேர்த் திருவிழா!

யாழ் குடாநாட்டில், தென்மராட்சிப் பிரதேசமான வ‌ர‌ணியில் உள்ள‌து சுட்டிபுர‌ம் அம்ம‌ன் கோயில். வழமை போல கோயில் நிர்வாக‌ம் உய‌ர்த்த‌ப் ப‌ட்ட‌ சாதி ஒன்றின் ஆதிக்க‌த்தின் கீழ் இருந்த‌து. அறுபதுகளில் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் நகர்ப்புறக் கோயில்கள் திறந்து விடப்பட்டன. இருப்பினும், தொண்ணூறுகளின் தொட‌க்க‌த்திலும் கிராம‌ப் புற‌ கோயில்க‌ள் அனைத்து சாதியின‌ருக்கும் திற‌க்க‌ப் ப‌டாம‌ல் இருந்த‌ன‌.

யாழ் குடாநாடு முன்ன‌ர் புலிக‌ளின் க‌ட்டுப்பாட்டில் இருந்த‌ கால‌த்தில், தாழ்த்த‌ப் ப‌ட்ட‌ சாதியின‌ர் த‌ன்னெழுச்சியாக‌ கோயில்க‌ளுக்குள் நுழைந்து வ‌ந்த‌ன‌ர். புலிக‌ளும் அதை அங்கீக‌ரித்த‌ ப‌டியால் பிர‌ச்சினை இல்லாம‌ல் திற‌ந்து விட‌ப் ப‌ட்ட‌ன‌. 

அந்தக் காலகட்டத்தில், வரணியை அண்டிய வடமராட்சியை சேர்ந்த செங்கதிர், புலிகளின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக இருந்தார். தாழ்த்தப் பட்ட சாதியை சேர்ந்த அவரது நேரடி தலையீட்டின் பின்னரே பல கோயில்கள் திறந்து விடப் பட்டிருந்தன.

சில வருடங்களின் பின்னர் தளபதி செங்கதிர், புலிகளின் கட்டுபாட்டுப் பிரதேசம் முடிவடையும் எல்லைப் பிரதேசமான வவுனியாவில் நடந்த ஒரு தாக்குதலில் கொல்லப் பட்டதாக அறிவிக்கப் பட்டது. இருப்பினும், அந்தத் தகவல்கள் தெளிவில்லாமல் இருந்ததால், செங்கதிரின் மரணம் பற்றிய மர்மம் நீடித்தது. புலிகள் இயக்கத்திற்குள் நிலவிய சாதிய முரண்பாட்டின் விளைவாக கொல்லப் பட்டதாகவும் மக்கள் பேசிக் கொண்டனர். அது வேறு கதை.

1992 அல்ல‌து 1993 ம் ஆண்டள‌வில், சுட்டிபுர‌ம் அம்ம‌ன் ஆல‌ய‌ தேர்த் திருவிழா ந‌ட‌ந்த‌து. எதற்கும் புலிக‌ள் இருக்கிறார்க‌ள் தைரியத்துடன் திருவிழாவுக்கு சென்றிருந்த தாழ்த்த‌ப் ப‌ட்ட‌ சாதியின‌ர் தேர் வ‌ட‌ம் பிடித்திழுத்த‌ன‌ர். அத‌னால் அங்கு சாதி மோத‌ல் ஏற்ப‌ட்ட‌து.

அப்போது புலிக‌ள் அத‌னை சாதி மோத‌லாக‌ப் பார்க்கவில்லை அல்லது வன்கொடுமை குற்றமாக பதிவு செய்யவில்லை. கோஷ்டி வ‌ன்முறை என்ற‌ குற்ற‌ச்சாட்டில் சில‌ரை பிடித்துச் சென்று அடைத்து வைத்தன‌ர். இருப்பினும், கோயில் நிர்வாக‌ம் தாழ்த்த‌ப் ப‌ட்ட‌ சாதியினரை தேரிழுக்க‌ அனும‌திக்க‌வில்லை. அது தொடர்பாக புலிகளும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை. பிரச்சினையை அப்படியே விட்டு விட்டார்கள்.

இருப்பினும், இந்த‌ விவ‌கார‌ம் மீண்டும் விஸ்வ‌ரூப‌ம் எடுக்குமென கோயில் நிர்வாக‌த்தின‌ர் அஞ்சினார்கள். அதற்காக ஒரு அதிர‌டி ந‌ட‌வ‌டிக்கை எடுத்த‌ன‌ர். "த‌விர்க்க‌ முடியாத‌ கார‌ண‌ங்க‌ளினால் இனிமேல் தேர்த்திருவிழா ந‌டைபெறாது." என்று அறிவித்த‌ன‌ர். தேர்முட்டிக் கதவை இழுத்து மூடினார்கள். அப்போது நிறுத்த‌ப் ப‌ட்டிருந்த‌ தேர்த் திருவிழா போர் முடியும் வ‌ரையில் ந‌ட‌க்க‌வில்லை.

மீண்டும் 2012 ம் ஆண்டு தொட‌ங்க‌ப் ப‌ட்ட‌து. அப்போது வ‌ட‌ மாகாண‌ ஆளுந‌ர் ச‌ந்திர‌சிறியும் க‌ல‌ந்து கொண்டார். அது ம‌ட்டும‌ல்ல‌ சிறில‌ங்கா விமான‌ப் ப‌டை ஹெலிகாப்ட‌ர் வானில் இருந்து ம‌ல‌ர் தூவிய‌து. 2012ம் ஆண்டு பெரும் பொருட்செல‌வில் ந‌ட‌த்த‌ப் ப‌ட்ட‌ தேர்த்திருவிழா, சாதிவெறிய‌ர்க‌ளின் வெற்றிக் கொண்டாட்ட‌மாக‌ ந‌ட‌த்த‌ப் ப‌ட்ட‌து. யாழ்ப்பாண‌த்தில், சாதிவெறிய‌ர்க‌ளுக்கும், சிங்க‌ள‌ அர‌சுக்கும் இடையிலான,‌ க‌ள்ள‌ உற‌வுக்கு அது சாட்சிய‌மாக‌ விள‌ங்கிய‌து.

உண்மையில், தேர்த்திருவிழா மட்டும் பிரச்சினைக்கு காரணம் அல்ல.  சாதிய முரண்பாடுகள் எல்லாக் காலங்களிலும் நீறுபூத்த நெருப்பாக இருந்து வந்துள்ளது. பேச்சுவார்த்தைக் காலத்தில் (2002 - 2006), சாதிய பிரச்சினை இன்னொரு பரிணாமத்தை அடைந்தது. 

அன்று நடந்த சாதி மோதல், அனைத்து ஊடகங்களிலும் இருட்டடிப்பு செய்யப் பட்டது. அதற்குப் பதிலாக "இரண்டு கிராமங்களுக்கு இடையிலான மோதலாக" சித்தரித்தார்கள்.  மேலெழுந்தவாரியாக பார்க்கும் பொழுது அது கிராமங்களின் மோதலாகத் தோன்றும். 

யாழ் குடாநாட்டின் பிரதான வீதியான A9 கண்டி வீதிக்கு வடக்குப் புறத்தில் வரணி உள்ளது. அதன் தெற்குப் புறத்தில் தவசிக்குளம் என்ற கிராமம் உள்ளது. வரணியில் உயர்த்தப் பட்ட சாதியினரும், தவசிக் குளத்தில் தாழ்த்தப் பட்ட சாதியினரும் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். 

ஏதோ ஒரு பிரச்சினையில் தமது ஊர்க்காரர்களை அடித்து விட்டார்கள் என்ற கொந்தளிப்பில் மோதல்கள் ஆரம்பமாகின. இரண்டு தரப்பினரும் எதிராளியின் கிராமத்திற்குள் புகுந்து வெட்டுக்குத்துகளை நடத்தி உள்ளனர். இந்த மோதல்களில் ஓரிருவர் பலியாகி இருக்கலாம். 

வரணிக்கும், தவசிக்குளத்திற்கும் நடுவில் கொடிகாமம் என்ற சிறிய நகரம் உள்ளது. இரண்டு ஊரவர்களும் அல்லது சாதியினரும், கொடிகாமம் நகரத்தில் அகப்பட்டவர்களையும் தாக்கினார்கள். இதனால் மக்கள் சந்தைக்கு கூட செல்ல அஞ்சினார்கள். 

அப்போது யாழ்குடாநாடு முழுவதும் இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இருந்தாலும், சமாதானப் பேச்சுவார்த்தை காரணமாக மறைமுகமான புலிகளின் நிர்வாகமும் நடந்தது. வரணி - தவசிக்குளம் கிராமங்களுக்கு இடையிலான சண்டையை தீர்த்து வைக்கும் பொறுப்பையும் புலிகளே ஏற்றுக் கொண்டிருந்தனர். இனிமேல் மோதல்களில் ஈடுபடுபவர்களை சுடுவோம் என்று எச்சரித்ததுடன், மோதல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை வன்னிக்கு வருமாறு அழைத்தனர்.

இரண்டு கிராமங்களிலும் இருந்து அழைக்கப் பட்ட குற்றவாளிகள் வன்னியில் சிறை வைக்கப் பட்டிருந்தனர். இருப்பினும், ஒரு சிலர் வன்னிக்கு செல்லாமல் ஒளித்து இருந்தனர். இறுதிப்போர் முடிந்து சில மாதங்களுக்குள், வன்னிக்கு செல்லாமல் ஒளித்தவர்கள் இனந்தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப் பட்டனர். இரண்டு கிராமங்களிலும் நடந்த கொலைகளை யார் எதற்காக செய்தார்கள் என்ற மர்மம் இன்னமும் துலங்காமல் உள்ளது. 



இதனுடன் தொடர்பான முன்னைய பதிவுகள்: