Thursday, December 28, 2017

"கம்யூனிஸ்டுகள் மதத்தை தடை செய்வர்" எனும் பொய்ப் பிரச்சாரம் குறித்து...


இன்று வ‌ரை ப‌ல‌ரால் ந‌ம்ப‌ப் ப‌டும் பொய் ஒன்றுள்ள‌து. கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்த நாடுகளில் மதம் தடைசெய்யப் பட்டதாகவும், ஆலயங்கள் மூடப் பட்டதாகவும் இன்னமும் பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நாட்டில் புரட்சி நடக்கும் காலத்தில், மக்கள் அதிகார மையங்களை நொறுக்கும் பொழுது, மத நிறுவனங்களும் தாக்கப்படுவது வழமை. 

மதத்திற்கு எதிரான கிளர்ச்சி பிரெஞ்சுப் புரட்சியுடன் ஆரம்பமானது. அதன் விளைவாக மதச்சார்பற்ற அரசுகள் தோன்றின. இன்று பல மேற்கத்திய நாடுகளில் பெரும்பான்மையான மக்கள் மத நம்பிக்கையற்றவர்களாக உள்ளனர். இது போன்ற சமூக மாற்றத்தை தான் கம்யூனிஸ்டுகள் ஆண்ட நாடுகளில் கொண்டு வர விரும்பினார்கள். 

ஆனால், முதலாளித்துவ எதிரிகளால் வேண்டுமென்றே தவறான தகவல்கள் பிரச்சாரம் செய்யப் படுகின்றன. "கம்யூனிஸ்டுகள் மதத்திற்கும், கடவுளுக்கும் எதிரானவர்கள்" என்று கூறி, மத நம்பிக்கை கொண்ட பாமர மக்களை மூளைச்சலவை செய்து வந்துள்ளானர்.

இந்த விடயத்தில், மதம் தொடர்பான கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி லெனின் எழுதிய கட்டுரையை வாசித்தால் தெளிவு பிறக்கும். 13 மே 1909, புரெலேடார்ட் பத்திரிகையில் லெனின் எழுதியது. லெனின் நூல் திரட்டில் இருந்து எடுத்த கட்டுரையின் சில பகுதிகளை இங்கே தருகிறேன். தமிழ் வாசகர்களுக்கு தெளிவு ஏற்படுவதற்காக நான் சில இடங்களில் மேலதிக விளக்கம் கொடுத்திருந்தாலும், லெனினின் மூலப்பிரதியில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

பிரான்ஸ், ஜெர்மனியில் மதத்திற்கு எதிரான போராட்டம் நடைபெற்றுள்ளதையும், ரஷ்யாவில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதையும் லெனின் குறிப்பிடுகிறார். அந்த நாடுகளில் இருந்த பூர்ஷுவா வர்க்கத்தினரின் மத எதிர்ப்பு பாரம்பரியம், சோஷலிச இயக்கம் தோன்றுவதற்கு முன்பே இருந்துள்ளது. 

பிரான்ஸில் என்சீக்லோபீடியர்கள் (Encyclopedists) எனும் தத்துவ அறிஞர்களின் குழு, தீவிர கடவுள் மறுப்புக் கொள்கையை கொண்டிருந்தது. தமிழகத்தில் உள்ள திராவிடர் க‌ழ‌க‌ம் முன்னெடுக்கும் நாஸ்திக இயக்கத்துடன் அதை ஒப்பிடலாம். அதே மாதிரி, ஜெர்மன் தத்துவஞானி போயர்பாக் (Feuerbach) கூட தீவிர மத எதிர்ப்பாளராக இருந்துள்ளார்.

பிரான்ஸ், ஜெர்மனியுடன் ஒப்பிடுகையில் ரஷ்யாவில் தோன்றிய பூர்ஷுவா வர்க்கத்தினர் எந்தவொரு மத எதிர்ப்பு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. லெனினின் கூற்றுப் படி, "அந்தப் பொறுப்பு முழுவதும் பாட்டாளி வர்க்கத்தின் தலையில் சுமத்தப் பட்டது." அந்தக் காலகட்டத்தில் (19 ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி) ரஷ்ய விவசாயிகள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்த இடதுசாரி அமைப்பான நரோட்னிக்குகள் (லெனின் அவர்களை "குட்டி முதலாளிய ஜனநாயகவாதிகள்" என்று குறிப்பிடுகிறார்.) கூட பெரிதாக எதுவும் செய்து விடவில்லை. 

ஆகவே, கம்யூனிஸ்டுகள் முன்னெடுத்த "மத எதிர்ப்பு இயக்கம்", அந்தக் கால கட்டத்தில் (முதலாளித்துவ) மேற்கு ஐரோப்பாவில் நடந்த சமூக- அரசியல்  மாற்றங்களின் தொடர்ச்சியாகவே கருதப் பட வேண்டும். சுருக்கமாக சொன்னால், பிரான்ஸில் நடந்த முதலாளித்துவ புரட்சியின் தொடர்ச்சியாகத் தான், ரஷ்யாவில் நடந்த சோஷலிசப் புரட்சியும் மத நிறுவனங்களின் அரசியல் மேலாதிக்கத்தை இல்லாதொழித்தது.

லெனின் கூறியதாவது: 
//மார்க்சியத்தின் தத்துவார்த்த அடிப்படையானது இயங்கியல் பொருள்முதல்வாதமே. அதையே மார்க்ஸ், எங்கெல்சும் பிரகடனம் செய்தனர். அது 18 ம் நூற்றாண்டில் பிரான்ஸில் தோன்றிய பொருள் முதல்வாத தத்துவத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியைக் கொண்டுள்ளது. 19 ம் நூற்றாண்டின் முதற்பகுதியில் ஜெர்மன் தத்துவஞானி போயர்பாக் அதை முழுவதுமாக ஏற்றுக் கொண்டிருந்தார். பொருள்முதல்வாதமானது முற்றுமுழுதாக நாஸ்திக வாதமே என்பதுடன், அது மதத்துடன் பகைமை கொண்டுள்ளது.//

பொருள்முதல்வாத தத்துவம் நாஸ்திகமே என்பதைக் கூறும் லெனின், எங்கெல்ஸ் எழுதிய "டூரிங்கிற்கு மறுப்பு" நூலையும் வாசிக்கக் கோருகின்றார். டூரிங் (Düring) என்பவர் ஜெர்மனியில் வாழ்ந்த ஒரு சோஷலிச தத்துவ அறிஞர். ஆனால் மார்க்சியவாதி அல்ல. (அதாவது மார்க்சுடன் கொள்கை முரண்பாடு கொண்டவர்). அப்போது கார்ல் மார்க்ஸ் மூலதனம் நூல் எழுதுவதில் மும்முரமாக இருந்த படியால், டூரிங்கின் வாதங்களை மறுக்கும் பொறுப்பை எங்கெல்ஸ் ஏற்றிருக்கிறார். "டூரிங்கிற்கு மறுப்பு"(இந்த நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை இப்போதும் வாங்கலாம்.) நூலில் தீவிர நாஸ்திகம் எதிர்மறையான விளைவுகளை தரும் என்பதை எங்கெல்ஸ் சுட்டிக் காட்டியுள்ளார். அதை லெனின் மேற்கோள் காட்டியுள்ளார்.

மேற்கொண்டு லெனின் எழுதியதை நான் இங்கு இலகுபடுத்தி தருகிறேன். மதத்திற்கு எதிராக போர்ப் பிரகடனம் செய்வதன் மூலம், அதை தொழிலாளர் கட்சியின் முக்கிய செயற்பாடாகுவதன் ஊடாக, "இடதுசாரிகளாக", "புரட்சியாளர்களாக" காட்டிக் கொள்வோரை எங்கெல்ஸ் கண்டித்துள்ளார். 1874 ம் ஆண்டு, பிரான்ஸில் பிளாங் என்ற சோஷலிச அறிஞர் வழிகாட்டலில் நடந்த பாரிஸ் கம்யூன் புரட்சி தோற்கடிக்கப் பட்டது. அப்போது பலர் லண்டனில் அகதிகளாக தஞ்சம் கோரி இருந்தனர். அந்த "பிலாங்கிஸ்ட் அகதிகள்" வெளியிட்ட அறிக்கையை எங்கெல்ஸ் விமர்சித்திருந்தார். இது போன்ற மதத்திற்கு எதிரான போர்ப் பிரகடனம் மதத்திற்கு புத்துயிர் கொடுப்பதுடன், அது தானாகவே அழிந்து போவதைத் தடுத்து விடும் என்று கண்டித்துள்ளார்.

உழைக்கும் மக்களின் பெரும்பகுதியை புரட்சிகரமாக்கும் வர்க்கப் போராட்டம் மட்டுமே, ஒடுக்கப் பட்ட மக்களை மதத்தின் நுகத்தடியில் இருந்து விடுதலை செய்யும். மதம் ஒரு கருத்துமுதல்வாதம் என்பதைக் கூறிய தத்துவ அறிஞர் டூரிங்கை பாராட்டிய அதே எங்கெல்ஸ், டூரிங்கின் "சோஷலிச நாட்டில் மதத்தை தடை செய்யும் புரட்சிகர கொள்கையை" கடுமையாக கண்டிக்கத் தயங்கவில்லை. எங்கெல்ஸ் அதை "பிஸ்மார்க் செய்தது போன்று முட்டாள்தனமான எதிர்விளைவுகளை தரும்" என்று குறிப்பிடுகிறார். "கலாச்சாரப் போராட்டம்"(Kulturkampf) என்ற பெயரில் அன்றைய ஜெர்மன் அதிபர் பிஸ்மார்க் கத்தோலிக்க மத நிறுவனத்திற்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள், அதைப் பலப்படுத்துவதில் முடிந்தது என்பதை லெனின் தனது கட்டுரையில் சுட்டிக் காட்டி உள்ளார்.

பிஸ்மார்க் மதத்திற்கு எதிராக தடுப்புச் சுவர் எழுப்பியமை, பாட்டாளி வர்க்கத்தின் ஒரு பகுதியின் கவனத்தை திசை திருப்பியதுடன், பூர்சுவா வர்க்கத்தின் "மத எதிர்ப்பு போலித்தனத்தையும்" வெளிப்படுத்தியது. பிஸ்மார்க் செய்தது போன்று, டூரிங் வேறு வடிவில் செய்ய நினைக்கிறார் என எங்கெல்ஸ் குற்றம் சாட்டினார். பாட்டாளிவர்க்கம் அதற்காக தயார்படுத்தப் பட வேண்டும் என விரும்பினார். பாட்டாளிவர்க்கத்தை பொறுமையாக ஒழுங்குமுறைப் படுத்தி, தெளிவுபடுத்துவதன் மூலம் மதத்தை தானாக அழிய வைக்கலாம். ஆனால், அது மதத்திற்கு எதிரான அரசியல் போராக மாற்றப் படக் கூடாது.

மார்க்சியம் என்பது பொருள்முதல்வாதம் தான். அது மதத்துடன் எந்த விட்டுக்கொடுப்பும் இல்லாமல் பகைமை கொண்டுள்ளது. என்சீக்லோபீடியர்கள், போயர்பாக் போன்றோரின் நிலைப்பாடும் அது தான். ஆனால், மார்க்ஸ், எங்கெல்சின் இயங்கியல் பொருள்முதல்வாதம் அதற்கும் அப்பால் செல்கிறது. அது பொருள்முதல்வாத தத்துவத்தை சரித்திர தளத்துடனும், சமூகவியல் தளத்துடனும் இணைக்கிறது. நாங்கள் மதத்தை எதிர்த்துப் போராட வேண்டும். அது பொருள்முதல்வாதத்தினதும், மார்க்சியத்தினதும் தொடக்கமாக உள்ளது.

ஆனால், மார்க்சியம் பொருள்முதல்வாதத்துடன் மட்டும் நின்று விடவில்லை. அதற்கும் மேலே செல்கிறது. அதாவது நாங்கள் மதத்தை எதிர்த்துப் போராட வேண்டும். அதற்கும் முதல், மக்களினதும், நம்பிக்கையினதும் மூலமாக உள்ள பொருள் வாதமாக வெளிப்படுத்தப் பட வேண்டும். மதத்திற்கு எதிரான போராட்டத்தை ஒரு சித்தாந்தப் பிரச்சாரமாக குறுக்கக் கூடாது. ஆனால், மதத்தின் சமூக வேர்களைக் களைவதை நோக்கமாகக் கொண்டுள்ள வர்க்கப் போராட்டத்தின் தீர்க்கமான நடைமுறையாக பிணைக்கப் பட வேண்டும்.

எதற்காக நகர்ப்புற பாட்டாளிகள், விவசாயிகள் மத்தியில் மதம் நிலைத்திருக்கிறது? "அதற்குக் காரணம் மக்களின் அறியாமை" என்று ஒரு முதலாளிய பொருள்முதல்வாதி கூறுவார். "மதம் ஒழிக, நாஸ்திகம் வாழ்க, எமது முக்கிய கடமை நாஸ்திகத்தை பரப்புவது தான்" என்று ஒரு முதலாளித்துவ முற்போக்குவாதி மேலும் கூறுவார். ஆனால், மார்க்சியர்கள் அதைத் தவறு என்கிறார்கள். ஏனென்றால், இது போன்ற கருத்தானது, மேலோட்டமான, முதலாளிய கலாச்சாரத்திற்கு உட்பட்ட பரப்புகை ஆகும்.

அது போன்றதொரு கருத்து மதத்தின் வேர்களை போதுமான அளவு வெளிப்படுத்துவதில்லை. அதாவது, கருத்தியல் பூர்வமானதே தவிர பொருள்முதல்வாதம் அல்ல. நவீன முதலாளிய நாடுகளில் இந்த வேர்கள் சமூக அடித்தளத்தைக் கொண்டுள்ளன:
  • முதலாளித்துவத்தின் உழைக்கும் மக்கள் மீதான அடக்குமுறை. 
  • மிகப் பலமான முதலாளித்துவத்திற்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாத உழைக்கும் மக்களின் கையாலாகத்தனம். 
  • ஒவ்வொரு நாளும் பல தடவைகள் வருத்தி,காயப்படுத்தும் மனிதாபிமற்ற செயல்கள். 
  • அசாதாரணமான நிகழ்வுகளான யுத்தம், நிலநடுக்கம் போன்றன.

பயம் தான் கடவுளரை முன்னுக்கு கொண்டு வந்தது. கண்ணுக்கு புலப்படாத மூலதனத்தின் செயற்பாடுகள் குறித்த அச்சம் காரணமாக இருந்தது. "கண்ணுக்கு புலப்படாத" என்று சொல்வதற்கு காரணம், மனிதர்களின் வாழ்வில் ஒரு கட்டத்தில், அவர்களை ஏழைகளாக, பிச்சைக்காரர்களாக, பாலியல் தொழிலாளிகளாக மாற்றும் மூலதனத்தின் சக்தி பற்றிய புரிதல் சாதாரண மக்களிடம் இல்லை. இது தான் தற்காலத்தில் ஒரு மதத்தின் வேர். ஒரு பொருள்முதல்வாதி அதைக் கவனத்தில் எடுக்க வேண்டும். கண்ணுக்குப் புலப்படாத, நாசமாக்கும் சக்தி படைத்த முதலாளித்துவத்தில் தங்கியுள்ள மதத்தின் வேரைக் கண்டறியாமல், நாஸ்திக பிரச்சாரம் செய்வதன் மூலம் மக்களிடம் இருந்து மதத்தை அகற்ற முடியாது.

(பிற்குறிப்பு: "மதம் குறித்து தொழிலாளர் கட்சியின் தொடர்பு பற்றி" என்ற தலைப்பில் லெனின் எழுதிய மூலப்பிரதியை ஆதாரமாகக் கொண்டு எழுதப் பட்டது.)

No comments: