Showing posts with label இனச் சுத்திகரிப்பு. Show all posts
Showing posts with label இனச் சுத்திகரிப்பு. Show all posts

Thursday, July 19, 2012

மியான்மர் : உலகை உலுக்காத இன்னொரு இனச் சுத்திகரிப்பு

மியான்மர் தேச, வங்காளி மொழி பேசும் ரோஹிங்கியா இன மக்கள், இனச்சுத்திகரிப்பு செய்யப்படும் செய்தி, சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருந்தது. "20000 க்கும் அதிகமான ரோஹிங்கியா வங்காளிகள் இனப்படுகொலை செய்யப் பட்டதாகவும், சர்வதேச ஊடகங்கள் மௌனம் சாதிப்பதாகவும்" அந்தத் தகவல்கள் தெரிவித்தன.

பொதுவாகவே சர்வதேச ஊடகங்கள், மேற்கத்திய நலன்களுக்கு எதிரான நாடொன்றின் பிரச்சினை என்றால் மட்டுமே கவனம் செலுத்துவதுண்டு. நோபல் பரிசு வென்ற ஆயுங் சங் சுகியின் பர்மாவில் என்ன நடக்கின்றது என்று அவர்கள் விசாரிக்கப் போவதில்லை. அதற்குப் பதிலாக, சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போர் அவர்களுக்கு முக்கியமாகத் தெரிகின்றது.

மியான்மரின், பங்களாதேச எல்லையோர மாநிலமான அரகானில் வாழும் வங்காளி மொழி பேசும் மக்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்படுவது இதுவே முதல் தடவை அல்ல. அங்கே ஏற்கனவே பல தடவைகள் இனக்கலவரங்கள் நடந்துள்ளன. சுமார் ஒரு மில்லியன் சனத்தொகையை மட்டுமே கொண்ட, மிகச் சிறுபான்மை இனமான ரோஹிங்கியா வங்காளிகள் கடந்த பத்தாண்டுகளாகவே பெருமளவில் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். அந்த மக்கள் தாமாகவே விரும்பி வெளியேறினாலும், பலவந்தமாக வெளியேற்றப் பட்டாலும், இனச் சுத்திகரிப்பாகவே கருதப்பட வேண்டும். இதனை நிரூபிக்கும் காரணிகளை பின்னர் பார்ப்போம்.


இந்தியா மட்டுமல்ல, பர்மாவும் ஒரு காலத்தில் பிரிட்டிஷ் காலனியாகவிருந்தது. அதனால், நவீன தெற்காசிய தேசங்களின் எல்லைகள்  பிரிக்கப்பட்ட காலத்தில், வங்காள இனத்தவர்கள் பர்மா (இன்று:மியான்மர்) என்ற புதிய தேசத்திற்குள் சிக்கிக் கொண்டதாகவே பலரும் கருதுகின்றனர். வங்காளிகள் தொழில் தேடி, அல்லது வணிகம் செய்வதற்காக பர்மா வந்து தங்கி விட்டதாகவும், அதனால் அவர்கள் பர்மிய குடிமக்களாக கருதப்பட முடியாதென்றும் ஒரு வாதம் முன்வைக்கப் படுகின்றது. 

"தேசிய அரசுகளின் உருவாக்கம், இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட மாற்றம்," என்பதை நாம் அடிக்கடி மறந்து விடுகின்றோம். அதற்கு முன்னர், ஒருவர் எந்த தேசிய இனத்தை சேர்ந்தவர் என்பது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஏனெனில், "தேசியம்"என்ற வார்த்தையே அன்றைய மக்களுக்கு தெரிந்திருக்கவில்லை. ரோஹிங்கிய வங்காளிகள், அரேபிய வணிகர்களின் வழித்தோன்றல்கள், மொகலாய சாம்ராஜ்யத்தின் எஞ்சிய பகுதியை சேர்ந்தவர்கள் என்றெல்லாம் உரிமை கோரப்படுகின்றது. 

இந்த உரிமை கோரல்கள் பெரும்பாலும், "ரோஹிங்கிய தேசியவாதிகள்" மத்தியில் இருந்து தான் எழுகின்றது. "பூர்வீக தாயக பூமி" க்கு உரிமை கோரும், தேசியவாத கதையாடலுக்கு அப்பால், உண்மையை அலசுவது அவசியம். மொகலாயர்களின் ஆட்சிக் காலத்தில், பர்மிய மன்னனுடன் நடந்த போரில், சிட்டகாங் மலைப்பகுதி கைப்பற்றப் பட்டது. (அது இன்றைக்கும், வங்காளதேசத்தின் ஒரு பகுதியாக உள்ளது.) அதற்கப்பால், மொகலாய சாம்ராஜ்யம் விஸ்தரிக்கப் பட்டதாக வரலாற்றில் குறிப்பிடப் படவில்லை. 

ரோஹிங்கியா வங்காளிகள், பங்களாதேஷ் வங்காளிகளிடம் இருந்து மாறுபட்ட வட்டார மொழியை பேசுகின்றனர். அனேகமாக, மொகலாய சாம்ராஜ்ய விஸ்தரிப்பு காரணமாக புலம்பெயர்ந்த ஒரு பகுதியினர் பர்மாவில் தங்கியிருக்க வாய்ப்புண்டு. அதே நேரம், அரேபிய வணிகர்களின் வழித்தோன்றல்களும் பர்மிய பெண்களை மணந்து, அங்கேயே தங்கியிருக்கலாம். ஐரோப்பிய காலனிய காலகட்டத்திற்கு முன்னர், தெற்காசிய, தென் கிழக்காசிய நாடுகளுடனான அரேபியரின் வர்த்தகத் தொடர்பு நன்கு அறியப்பட்டது தான். ஆகவே, மேற்குறிப்பிட்ட பிரிவினர் எல்லாம் கலந்து ரோஹிங்கியா வங்காளிகளாக மாறியிருக்கலாம். 

மேலும், பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள், "தேசிய எல்லைகளை சரி சமமாக பிரிப்பதில் கெட்டிக்காரர்கள்". தமது முன்னாள் காலனிகளில், தேசிய இனப்பிரச்சினைகள் என்றைக்கும் தீரக் கூடாது என்ற தீர்க்க தரிசனத்துடன், ஒரே தேசிய இனத்தை பிரித்து எல்லைக்கோடு வரைவதில் கெட்டிக்காரர்கள். ஆகவே, பிற்காலத்தில் பிரிக்கப்பட்ட சர்வதேச எல்லைகளின் காரணமாக, வங்காள மொழி பேசும் இனத்தவர்கள் பர்மா என்ற புதிய தேசத்திற்குள் அடங்கி இருப்பார்கள். 

ஒரு தேசிய இனம், தனது பூர்வீக தாயக பூமிக்கு உரிமை கோருவதை விட, அந்த இனத்தின் இருப்பை பாதுகாப்பதே முக்கியமானது. ஆகையினால், காலனிய ஆட்சியில் இருந்து சுதந்திரமடைந்த பர்மாவின் சிறுபான்மை இனமான ரோஹிங்கியா வங்காளிகள், ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப் பட வேண்டியவர்கள்.

உலகில் சில இனங்கள், "நாடற்றவர்கள்" என்ற வகைக்குள் அடங்குவார்கள். அதாவது, அவர்களுக்கு எந்த நாட்டின் பிரஜாவுரிமையும் கிடையாது. ஏற்கனவே நமது தமிழ்த் தேசியவாதிகள், "நாடற்றவர்கள்" என்ற சொல்லுக்கு, "தேசிய அரசு அற்றவர்கள்" என்றொரு அர்த்தத்தை பரப்பி வைத்திருக்கின்றனர். ஆனால், சர்வதேச சட்டங்கள் புரிந்து கொள்ளும்,  நாடற்றவர் என்ற சொல்லின் அர்த்தம் வேறு. உதாரணத்திற்கு, பாலஸ்தீன மக்களுக்கு, இஸ்ரேலோ, அல்லது ஜோர்டானோ குடியுரிமை வழங்கவில்லை. எந்த நாட்டினதும் பிரஜாவுரிமை இல்லாதபடியால், பாஸ்போர்ட் எடுக்க முடியாது. அதனால், அவர்கள் வாழும் பிரதேசத்தை விட்டு வெளியேற முடியாது.

ஐ.நா., பாலஸ்தீனர்களை நாடற்றவர்களாக அங்கீகரித்துள்ளதால், ஒரு சில தீர்வுகள் காணப்பட்டன. வெளிநாடு செல்ல வேண்டிய தேவையுள்ளவர்கள், இராஜதந்திர கடவுச்சீட்டுடன் பிரயாணம் செய்ய முடிகின்றது. ஆனால், ரோஹிங்கியா வங்காளிகளின் நிலைமை வேறு. ஐ.நா., அல்லது சர்வதேச நாடுகள் எதுவும், அவர்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கவில்லை. பர்மிய அரசின் நிலைப்பாட்டை சொல்லத் தேவையில்லை. 

மேற்கத்திய நாடுகளினால் மதிக்கப்படும் அவுங் சங் சுகி கூட, ரோஹிங்கிய வங்காளிகளை வெளிநாட்டு குடியேறிகளாக தான் கருதுகின்றார். இனவெறிக் காடையரினால், அப்பாவி வங்காளிகள் கொல்லப்பட்டதை கண்டித்து ஒரு வார்த்தை பேசவில்லை. ரோஹிங்கியா வங்காளிகளும், சமமான மனிதர்களாக மதிக்கப் பட வேண்டும் என்பதை ஒரு கணம் நினைத்துப் பார்க்கவில்லை.

பர்மாவில் இராணுவ சர்வாதிகார ஆட்சி நடத்திய ஜெனரல் நீ வின், 1982 ம் ஆண்டு, ரோஹிங்கிய வங்காளிகளின் குடியுரிமையை பறித்த பின்னர் தான் அவர்களது அவலம் ஆரம்பமாகியது. இன்றைக்கு, ஜனநாயக தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட அவுங் சங் சுகி கூட, பறிக்கப்பட்ட குடியுரிமையை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. பர்மிய இராணுவ சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடிய, ஜனநாயகப் போராளிகள் கூட, "வங்காளிகள் பங்களாதேஷுக்கு  திரும்பிச் செல்ல வேண்டும்" என்று பேசி வருகின்றனர். 

இவர்களே இப்படிப் பேசினால், தீவிர வலதுசாரி தேசியவாதிகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை. "மியான்மரின் அரசியல் பிரச்சினைகள் எல்லாம் ஒரு நாளைக்கு தீர்ந்து விடும். அதன் பிறகு நாம் ஒன்று பட்டு, (ரோஹிங்கியா) வங்காளிகளை வெளியேற்றுவோம்." என்று இணையத் தளங்களில் பிரச்சாரம் செய்கின்றனர். சில வருடங்களுக்கு முன்னர், மியான்மரின் அனைத்துப் பிரஜைகளும் இராணுவ சர்வாதிகார அடக்குமுறையினால் துன்பப் பட்டார்கள். இப்பொழுது, ஜனநாயக ஆட்சியாளர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, இராணுவ ஆட்சியாளர்கள் ஒதுங்கிக் கொள்கின்றனர். ஆசிய நாடுகளில், ஜனநாயகம் என்றால், மக்களுக்கு பேரினவாத வெறியை ஊட்டித் தான் ஆட்சி நடத்த வேண்டும் என்பது எழுதப்படாத விதி போலும்.

ஜூன் மாதம், 27 வயது ஒரு ராகின் பௌத்த பெண் ஒருவர் ,  பாலியல் வன்புணர்ச்சிக்கு பின்னர் கொலை செய்யப்பட்டார். இந்தக் குற்றச் செயல் ஒரு பெரும் பிரளயத்தையே உருவாக்கி விட்டுள்ளது. குற்றவாளிகளான மூன்று வங்காள முஸ்லிம்கள் பின்னர் கண்டுபிடிக்கப் பட்டு தண்டிக்கப்பட்டாலும்,ராகின் மக்கள் மத்தியில்,வங்காளி முஸ்லிம்களுக்கு எதிராக இனவெறியூட்டும் பிரச்சாரம் நடந்தது. ஒரு குற்றச் செயலுக்காக, அனைத்து வங்காளிகளையும் பழிவாங்க வேண்டும் என்று கோரும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப் பட்டன. 

வங்காளிகளை குறிக்கும் வசைச் சொல்லான "காலர்கள்" (Kaler - கருப்பர்கள்) என்று குறிப்பிட்டு, "மியான்மரை விட்டு காலர்கள் வெளியேற்றப்பட வேண்டும்" என்று ராகின் மக்களை உசுப்பி விட்டன.ராகின் இன மக்கள், பர்மிய மொழி போன்ற, ஆனால் வித்தியாசமான மொழி ஒன்றைப் பேசுகின்றனர். முன்னொரு காலத்தில் இந்து மதத்தையும், பின்னர் பௌத்த மதத்தையும் பின்பற்றிய திபெத்தோ-இந்திய இன மக்கள். பண்டைய இந்து புராணங்களில் "ராட்சதர்கள்" என்று குறிப்பிடப்பட்டனர். அதிலிருந்து இன்றைய ராகின், அரகான் என்ற சொற்கள் தோன்றின.

ரோஹிங்கியா மக்கள் மத்தியில் வேலை செய்து கொண்டிருந்த,தொண்டு நிறுவனமான Altsean அனுப்பி வைத்த செய்தி, நிலைமை எவ்வளவு மோசமானது என்று தெரிவிக்கின்றது.
"இது போன்ற மோசமான நிலைமையை, நாம் இதற்கு முன்னர் சந்தித்திருக்கவில்லை. இனப்படுகொலை என்பதைக் குறிக்கும் சர்வதேச சட்டத்தினால் வரையறுக்கப் படக் கூடிய சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ரோஹிங்கியா வங்காளிகள் என்ற இனம், மியான்மரில் அழிந்து கொண்டிருக்கிறது."  - Debbie Stothard , Alternative ASEAN-netwerk for Birma (Altsean)

ஆரம்பத்தில், இரண்டு இனங்களுக்கு இடையிலான இனக்கலவரமாகவே தோன்றியது. கலவரம் ஆரம்பித்த முதலாவது வாரம், இரண்டு பகுதியிலும் 29 பேர் மாண்டனர். 2500 வீடுகள் எரிக்கப்பட்டன. ஒன்பது விகாரைகளும், ஏழு மசூதிகளும் சேதமாக்கப் பட்டன. ஆனால், மிக விரைவிலேயே பௌத்த ராகின்களின் கை ஓங்கியது. மியான்மர் அரசும், இராணுவமும் அவர்களுக்கு பக்கபலமாக நின்றன. நிலைமையை கட்டுப்படுத்துவதாக கூறிக்கொண்டு, இராணுவம் ஊரடங்குச் சட்டம் பிறப்பித்தது. ஆனால், அது வங்காளிகளை வீட்டுக்குள் முடங்க வைக்கும் சதித் திட்டம் என்பது பின்னர் தெளிவானது. வங்காளிகளை வேட்டையாடிய, ராகின் இனவெறிக் காடையர்களை ஊரடங்குச் சட்டம் ஒன்றும் செய்யவில்லை. பல வீடுகளில், வங்காளிகளின் பிணங்கள் மட்டுமே கிடந்தன. அங்கே ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை நடந்து கொண்டிருந்தது. பொலிசும், இராணுவமும் அதற்கு ஒத்துழைத்தன.

"பௌத்த பிக்குகள் கை காட்டிய திசையில், வங்காளிகள் கொன்று குவிக்கப்பட்டதாக" வந்த செய்தியை ஊர்ஜிதப் படுத்த முடியவில்லை. பௌத்த பிக்குகளும் நேரடியாக வன்முறையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.  மொத்தம் எத்தனை வங்காளிகள் படுகொலை செய்யப்பட்டனர் என்பது யாருக்கும் தெரியாது. சுயாதீனமான ஊடகங்கள், 500 க்கும் 1000 க்கும் இடையில் கணக்குச் சொல்கின்றன. புலம்பெயர்ந்த ரோஹிங்கியா தேசியவாத ஆர்வலர்கள் 20000 பேர் கொல்லப்பட்டதாக கூறுகின்றனர். அது ஒரு மிகைப்படுத்தப் பட்ட எண்ணிக்கையாகவும் இருக்கலாம். 

உலகில் ஒவ்வொரு தேசிய இனமும், தமது இனத்தவர்கள் பாதிக்கப் படும் பொழுது மிகைப் படுத்திக் கூறுவது வழக்கம். அதனாலும், சர்வதேச ஊடகங்கள் அங்கு நடக்கும் இனப்படுகொலையை புறக்கணித்திருக்கலாம். இரண்டொரு வருடங்களுக்குப் பின்னர், ஐ.நா. விசாரணைக் குழு ஒன்றை நியமித்த பின்னர் தான் அதை எல்லாம் ஒத்துக் கொள்வார்கள் போலும். ஈழத்தில், முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட பொழுதும் இதே போன்ற நிலைமை காணப்பட்டது.

வங்காள இன மக்கள் வாழும் அரகான் மாநிலப் பிரதேசம், இராணுவத்தால் உயர் பாதுகாப்பு வலையமாக பிரகடனப் படுத்தப் பட்டுள்ளது. வங்காளிகளின் பூர்வீக பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டு, அங்கே பௌத்த-பர்மியர்கள் குடியேற்றப் படுகின்றனர். ரோஹிங்கியா வங்காளிகள், இராணுவத்தினரால் கட்டாய வேலை வாங்கப் படுகின்றனர். பாதைகள் செப்பனிடவும், பாலங்கள் போடவும், வேறு பல கட்டுமானப் பணிகளிலும், வங்காளி அடிமை உழைப்பாளிகள் ஈடுபடுத்தப் படுகின்றனர். இராணுவத்தினரால்  வங்காளிப் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதும் அடிக்கடி நடக்கிறது. 

ரோஹிங்கியா வங்காளிகளுக்கு குடியுரிமை இல்லாத படியால், அவர்களுக்கு அடிப்படை மனித உரிமைகள் எதுவும் கிடையாது. உயர்கல்வி கற்க முடியாது. ஒரு நிறுவனத்தில் பதவி வகிக்க முடியாது. வர்த்தகம் செய்ய முடியாது. இவை எல்லாவற்றையும் விட, திருமணம் செய்வதற்கு கூட இராணுவ உயர் அதிகாரிகளின் அனுமதி பெற வேண்டும் என்பது கொடுமையிலும் கொடுமை. திருமணம் செய்ய விரும்பும் வங்காளிகள் எல்லைக்காவல் படை அலுவலகம் உட்பட, நான்கு இடங்களில் அனுமதிப் பத்திரம் பெற வேண்டும். அது கிடைப்பது இலகுவானதல்ல. திருமணம் செய்யாமல், ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வது குற்றமாகும். ஒரு இளம்பெண் அவ்வாறு சேர்ந்து வாழ்ந்து கர்ப்பமடைந்த பின்னர் தெரிய வந்ததால், அவர்கள் வீட்டில் இருந்த கால்நடைகளையும், பிற சொத்துகளையும் இராணுவத்தினர் அபகரித்து சென்று விட்டனர்.

கடந்த பத்தாண்டுகளாகவே, ரோஹிங்கியா வங்காளிகள், மியான்மரை விட்டு வெளியேறி வருகின்றனர். குறைந்தது மூன்று இலட்சம் பேராவது புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். பெருந்தொகை அகதிகள், அயல்நாடான ஒரே மொழி பேசும் பங்களாதேஷுக்கு சென்றுள்ளனர். மியான்மர்-பங்களாதேஷ் எல்லை மூடப்பட்டுள்ளது. எல்லையை ஒரு ஆறு பிரிக்கின்றது. அகதிகள், சிறு எண்ணிக்கையில் வள்ளங்களில் எல்லை தாண்டுகின்றனர். பங்களாதேஷிலும் அவர்களுக்கு வரவேற்பில்லை. 

1996 ம் ஆண்டு நடந்த இனக்கலவரத்தினால் பாதிக்கப்பட்ட இரண்டு இலட்சம் ரோஹிங்கியா பங்களாதேஷில் தங்கி இருந்தனர். சில வருடங்களுக்குப் பின்னர், பங்களாதேஷ் அரசு அவர்களை மியான்மருக்கு திருப்பி அனுப்பியது. இப்பொழுதும் தஞ்சம் கோரி வரும் ரோஹிங்கியா அகதிகளை, பங்களாதேஷ் எல்லைக் காவல் படை தடுத்து திருப்பி அனுப்புகிறது. அவர்களுக்கு தஞ்சமளிக்க வேண்டாம் என்று எல்லையோர கிராம மக்கள் அறிவுறுத்தப் படுகின்றனர். 

பங்களாதேஷ் மக்களில் ஒரு பகுதியினர் கூட, ரோஹிங்கியா அகதிகளை வெறுக்கின்றனர். மியான்மரில் வங்காளி சிறுபான்மையினர் அனுபவிக்கும் கொடுமைகளைப் பற்றி, பங்களாதேஷ் மக்கள் அதிகமாக கேள்விப் பட்டிருப்பார்கள். ஈழப் பிரச்சினையை, தமிழக இனவாதக் குழுக்கள் எப்படிக் கையாளுகின்றனவோ, அதே போன்று தான் பங்களாதேஷை சேர்ந்த இஸ்லாமிய மதவாதக் குழுக்கள் நடந்து கொள்கின்றன.

வதந்திகள், திரிபுபடுத்தல், இவற்றை தவிர்த்து விட்டு, உண்மையை கண்டறிவது கடினமான பணியாகும். பல சமயங்களில், பலருக்கு உண்மை அறிவதில் ஆர்வம் இருப்பதில்லை. படுகொலை செய்யப்பட்ட ரோஹிங்கிய வங்காளிகளின் எண்ணிக்கை 20000 க்கும் குறைவாக இருக்கலாம். பங்களாதேஷுக்கு அகதியாக சென்றவர்களின் எண்ணிக்கையையும்  சேர்த்து, படுகொலையானவர்கள் என்று கூறி இருக்கலாம். ஆனால், எது சரி? அதை எப்படி உறுதிப்படுத்துவது? ரோஹிங்கியா மக்களின் இனப்படுகொலை பற்றி, பாகிஸ்தானை மையமாகக் கொண்டியங்கும் அமைப்புகள் மிகப் படுத்தப்பட்ட பிரச்சாரம் செய்வதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.பாகிஸ்தான் மட்டுமல்ல, வளைகுடா அரபு நாடுகள், பிரிட்டனில் இருந்து இந்த பிரச்சார வலைப்பின்னல் இயங்கிக் கொண்டிருக்கிறது. 

புலம்பெயர்ந்த ரோஹிங்கியா வங்காளிகள், பங்களாதேஷ் இஸ்லாமியவாதிகள், மற்றும் பன்னாட்டு இஸ்லாமிய -சர்வதேசியவாதிகள், இதனை ஒரு "முஸ்லிம் இனப்படுகொலையாக" சித்தரித்து, சர்வதேச அளவில் போராடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களது அணுகுமுறை, தமிழக மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் உணர்வாளர்களின் போராட்ட  முறையை பெரிதும் ஒத்திருக்கின்றது. 

இனவாதம், மதவாதம் முக்கியமாக கருதப்படும் இன்றைய உலகில், ஒரு பிரச்சினை பல மாறுபட்ட பரிணாமங்களை அடைகின்றது. ரோஹிங்கியா வங்காளிகளும், மியான்மார், பங்களாதேஷுக்கு இடையிலான சர்வதேச முரண்பாடாக மாற்றமடைகின்றது. ஆயிரம் வருடங்களுக்கு முந்திய மதப்போர் வரலாற்றின் தொடர்ச்சியாக இதனை மாற்ற எத்தனிக்கின்றனர். பர்மாவுக்கும், பங்களாதேஷுக்கும் இடையிலான மத முரண்பாடு பற்றி, வேறொரு கட்டுரையில் பார்ப்போம்.


மேலதிக தகவல்களுக்கு:
1.Burma: Why Such Silence Over Muslim Genocide?
2.Ethnic Cleansing in Myanmar
3.Ethnic violence mars transition to democracy for Rohingya in Burma
4.'De Burmese Rohingya's worden langzaam weggezuiverd'
5.Arakan Journal
6.மியான்மர்: கலவரமும் நிலவரமும்
7.பர்மிய முஸ்லிம்களின் பதற வைக்கும் எதிர்காலம்!

------------------------------------------------------------------------------------
மியான்மர் பற்றிய முந்திய பதிவுகள்:

மியான்மரின் துயரமும் நிவாரண மாய்மாலமும்

Thursday, October 27, 2011

இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட புதிய லிபியாவின் எதிர்காலம்

கடாபியின் ஆட்சியைக் கவிழ்த்த புரட்சியாளர்கள், அங்கே இதுவரை என்னென்ன புரட்சிகளை செய்துள்ளனர்? கறுப்பின மக்களை இனச்சுத்திகரிப்பு செய்துள்ளார்கள். கறுப்பினப் பெண்களை தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்து, பாலியல் அடிமைகளாக நடத்தியுள்ளனர். பலதார மண சட்டத்தை அமுல் படுத்தி பெண்ணுரிமைக்கு சமாதி கட்டியுள்ளனர். புரட்சிப் படையினால் விடுதலை செய்யப்பட்ட புதிய லிபியாவில், இன்னும் பல அதிர்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கின்றன.

"எனது மரணத்தை விட, லிபியாவின் எதிர்காலம் குறித்து தான் அதிகம் கவலைப் படுகிறேன்." - கடாபி இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் கூறியது. கடாபியின் பாதுகாப்பு அதிகாரி மன்சூர், அல் அராபியா தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் இருந்து. கடந்த சில மாதங்களாக, லிபியாவில் யுத்தம் காரணமாக பெருமளவு மக்கள் கொல்லப்பட்டதையிட்டு கடாபி வருத்தமடைந்திருந்தார், என்றும் மன்சூர் மேலும் தெரிவித்தார். அப்போது இடைமறித்த அல் அராபிய செய்தியாளர், "50000 பேரை சாதாரணமாக கொன்று குவித்த ஒருவர், தனது செயலுக்கு வருந்துவதாக கூறுவது ஆச்சரியமளிக்கிறது." என்றார். அதற்கு பதிலளித்த மன்சூர், "அல் அராபியா போன்ற ஊடகங்களே இவ்வாறான பொய்களை பரப்பி வந்துள்ளன." என்று சாடினார்.

தகவல் தொடர்பு சாதனங்களால் ஆளப்படும் உலகில், போரில் முதல் பலியாகும் உண்மையைக் கண்டறிவது எளிதான காரியமல்ல. லிபியாவில் கிளர்ச்சி ஆரம்பமாகிய முதல் நாளில் இருந்தே, அனைத்து லிபியர்களும் கடாபிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதைப் போன்ற பிரமையை ஊட்டி வளர்த்தன. அரசுக்கு எதிராக கலகம் செய்தவர்களை அடக்குவதற்கு கடாபி இராணுவத்தை அனுப்பிய பொழுது, அது "லிபிய இராணுவமல்ல, மாறாக கூலிப்படை." என்று அறிவித்தார்கள். கடாபியிடம், "ஆப்பிரிக்க கருப்பினத்தவர்களைக் கொண்ட கூலிப்படை இருப்பதாகவும், அவர்களே ஆர்ப்பாட்டம் செய்யும் மக்கள் மீது அடக்குமுறை பிரயோகிப்பதாகவும்," மதிப்புக்குரிய ஊடகங்கள் கூட செய்தி வாசித்தன. கறுப்பர்களுக்கு எதிரான லிபியர்களின் இனவெறி சர்வதேச ஊடகங்களிலும் எதிரொலித்தது.

கடாபியின் மரணத்திற்குப் பிறகு லிபியா எப்படி இருக்கின்றது? அநேகமாக, ஊடகங்கள் லிபியா குறித்து செய்தி அறிவிப்பதை இனிமேல் நிறுத்தி விடலாம். லிபியர்கள் எந்த விதக் குறையுமற்று, சுதந்திரமாக, சுபீட்சத்துடன் வாழ்வதாக நாமும் நினைத்துக் கொள்ளலாம். ஆனால், பிரச்சினைகள் இனிமேல் தான் பூதாகரமாக வெளிக்கிளம்ப இருக்கின்றன. அரபு மொழி பேசும் வட ஆப்பிரிக்க நாடுகளில் லிபியா மிகக் குறைந்தளவு சனத்தொகையைக் கொண்டுள்ளது. இருப்பினும், 140 இனக்குழுக்களைக் கொண்ட சமுதாயத்தில் ஒற்றுமையைக் கட்டுவது சுலபமான காரியமல்ல. 40 க்கும் குறையாத கிளர்ச்சிக் குழுக்கள், கடாபிக்கு எதிராக போரிட்டன. இசுலாமிய மத அடிப்படைவாதிகள், முன்னை நாள் அரச படையினர், இனக்குழுக்களை பாதுகாக்கும் ஆயுததாரிகள் என்று பலதரப் பட்டவர்கள். கடாபியின் கொடுங்கோல் ஆட்சி மீதான வெறுப்பு மட்டும் இவர்களை போராடத் தூண்டவில்லை. தாராளமயப் படுத்தப் பட்ட "கடாபியின் இஸ்லாத்தை" கடும்போக்காளர்கள் அங்கீகரிக்கவில்லை. அதே போல, கடாபியின் "ஆப்பிரிக்க சகோதரத்துவம்" இனவெறியர்களின் கண்களை உறுத்திக் கொண்டிருந்தது.

கறுப்பின ஆப்பிரிக்கர்களையும் சகோதரர்களாக மதித்து, "ஆப்பிரிக்க ஒன்றியம்" உருவாக்க பாடுபட்ட கடாபியின் கொள்கைக்கு நேர் எதிரானவர்கள், இந்தப் புரட்சிப் படையினர். லிபியாவிற்கு தெற்கில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும் கறுப்பினத்தவர்கள் வாழவில்லை. "லிபியாவின் எல்லைகளுக்குள் வாழும் கறுப்பின பிரஜைகள் குறித்து," இனி உலகம் கேள்விப் படப் போவதில்லை. ஏனெனில் அவர்கள் யாவரும் "புரட்சிப் படையினரால்" இனச் சுத்திகரிப்பு செய்யப் பட்டு விட்டனர். சில அக்கறையுள்ள மனித உரிமை ஆர்வலர்கள் விசாரித்த பொழுது, "கருப்பர்கள் எல்லோரும் நைஜருக்கு அகதிகளாக சென்று விட்டனர்." என்று பதிலளிக்கப் படுகின்றது. லிபியப் பிரஜைகளான கறுப்பினத்தவர்கள் மட்டும் இனச் சுத்திகரிப்பு செய்யப் படவில்லை. லிபியாவில் பல ஆப்பிரிக்க நாட்டவர்கள், கூலியாட்களாக, அகதிகளாக வாழ்ந்தனர். இவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு மில்லியன் அளவில் இருக்கும். வளைகுடா நாடுகளைப் போல, ஆப்பிரிக்க கூலிகளின் உழைப்பில் லிபியப் பொருளாதாரம் செழித்துக் கொண்டிருந்தது. அவர்களை விட, கடல் கடந்து ஐரோப்பா செல்வதற்காக வந்து குவிந்த ஆப்பிரிக்க அகதிகளுக்கும் லிபியாவில் தற்கால புகலிடம் கிடைத்தது.

"லிபியப் புரட்சி" ஆரம்பமாகிய அன்றிலிருந்து, லிபியாவில் சட்டம், ஒழுங்கு குலைந்து விட்டது. யார் வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அராஜக சூழல் நிலவியது. "புரட்சிப் படையினர்" கடாபியின் விசுவாசிகளை மட்டும் வேட்டையாடவில்லை. கரு நிற மேனியைக் கொண்ட மக்களையும் நர வேட்டையாடினார்கள். போர் ஆரம்பமாகியவுடன், அயல் நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்தவர்களில் பெரும்பான்மையானோர் கறுப்பினத்தவர்கள். தற்போது போர் ஓய்ந்த பின்னர், அங்கு நடந்த அக்கிரமங்கள் மெல்ல மெல்ல வெளிவருகின்றன. "புரட்சிப் படையினரின்" முகாம்களை துப்புரவு படுத்தவும், கடினமான பணிகளை செய்யவும் கறுப்பின ஆண்கள் அடிமைகளாக வேலை வாங்கப் பட்டுள்ளனர். போரிட்டுக் களைத்த "புரட்சிக் காரர்களின்" பாலியல் இச்சையை தீர்த்துக் கொள்வதற்கு கறுப்பின பெண்கள் பயன்பட்டுள்ளனர்.

பிரத்தியேக "அகதி முகாம்களில்" தனியாக பெண்களை அடைத்து வைத்திருந்துள்ளனர். "அகதி முகாம்" என்று அழைக்கப்பட்ட வதை முகாம்களை பார்வையிட, செஞ்சிலுவை சங்கத்தினர் வந்து போவதுண்டு. முகாம் பொறுப்பாளருடன் "பாதுகாப்பு ஏற்பாடுகளை" பற்றி மட்டும் பேசி விட்டு செல்வார்கள். முகாம்களை அண்டி வாழும் குடியிருப்பாளர்கள், அங்கு நடந்த அக்கிரமங்களை விபரிக்கின்றனர். "மாலை நேரங்களில் நீங்கள் இங்கே நின்றால் அந்தக் காட்சிகளைக் காணலாம். புரட்சிப் படையினர் துப்பாக்கி வெட்டுகளை தீர்த்துக் கொண்டே சத்தமிட்ட படி வருவார்கள். பெண்களை அள்ளிக் கொண்டு செல்வார்கள்."

துப்பாக்கிகளுடன் திரியும் "புரட்சிப் படையினர்" மட்டும் இவ்வாறான அத்துமீறல்களில் ஈடுபடுவதில்லை. சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்ட நிலையில், சாதாரண இளைஞர்களும் ஆப்பிரிக்க பெண்களை பாலியல் பண்டமாக நுகர்கின்றனர். புரட்சிப் படையினர் லிபியாவில் கொண்டு வந்த புரட்சி இது தான். அகதி முகாமை, இலவச விபச்சார விடுதியாக மாற்றிய சாதனை, புரட்சி அல்லாமல் வேறென்ன? கடாபியின் ஆட்சிக் காலத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்த கமேரூன் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்தார். "அப்போதெல்லாம் வேலை செய்யும் இடங்களில், சில எஜமானர்கள் அடிப்பார்கள். சிலர் சம்பளம் கொடுக்க மாட்டார்கள். ஆனால், இன்றுள்ள நிலைமை மிக மோசமானது. எல்லா லிபியர்களும் நிறவெறியர்களாக காணப்படுகின்றனர். ஆப்பிரிக்கர்கள் எல்லோரும் லிபியாவை விட்டு வெளியேறி விட்டனர்."

புரட்சிப் படையினரின் மற்றொரு மகத்தான சாதனை குறித்து, இதுவரை எந்த ஒரு ஊடகமும் வாய் திறக்கவில்லை. கடற்கரையோரமாக அமைந்துள்ள மிஸ்ராத்தா நகரில் இருந்து 25 கி.மி. தொலைவில் உள்ளது தவேர்கா (Tawergha ) எனும் சிறு நகரம். போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், மிஸ்ராத்தா சர்வதேச கவனத்தைப் பெற்றிருந்தது. மிஸ்ராத்தா நகரில் புரட்சிப் படையினரின் கை ஓங்கி இருந்ததால், கடாபியின் படைகள் சுற்றி வளைத்து தாக்கிக் கொண்டிருந்தன. மிஸ்ராத்தா நகர மக்களின் அவலம் குறித்து, ஊடகங்கள் தினசரி செய்தி வாசித்தன. "சர்வதேச சமூகமும்" ஐ.நா. அவையை கூட்டுமளவு கண்டனம் தெரிவித்தன. இறுதியில் நேட்டோ விமானங்களின் குண்டுவீச்சினால் மிஸ்ராத்தா முற்றுகை விலக்கிக் கொள்ளப் பட்டது. மிஸ்ராத்தா முற்றுகைக்கு பழிவாங்குவதற்காக, புரட்சிப் படையினர் தவேர்கா மீது பாய்ந்தார்கள். தவேர்கா நகரில் நுழைந்த புரட்சிப் படையினர், கிரனேட் குண்டுகளை வெடிக்க வைத்தனர். ஆண்கள், பெண்கள், வயோதிபர், குழந்தைகள் எல்லோரையும் பிடித்து வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.

தவேர்கா நகரில் வாழ்ந்த மக்கள், "கறுப்பு லிபியர்கள்" என்பது குறிப்பிடத் தக்கது. லிபிய பிரஜைகளான இவர்கள், சஹாரா பாலைவனவாசிகளான துவாரேக் இனத்தை சேர்ந்தவர்கள். இவர்களது மூதாதையர், நாடோடிகளாக வாழ்ந்தவர்கள். சஹாரா பாலைவனத்தின் வணிகப் போக்குவரத்து, அவர்களது பரம்பரைத் தொழில். கடாபியின் ஆட்சிக் காலத்தில், அந்த இனத்தவருக்கென ஒரு சிறப்புப் படையணி உருவாக்கப் பட்டது. இரு தசாப்தங்களுக்கு முன்னர், சாட் நாட்டுடன் எல்லைத் தகராறு காரணமாக போர் மூண்டது. தென் எல்லையில், ஒரு கறுப்பு ஆப்பிரிக்க நாட்டுடனான மோதலின் போது, துவாரக் சிறப்பு படையணியினர் ஈடுபடுத்தப் பட்டனர். இறுதியாக நடந்த, உள்நாட்டுப் போரில், கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்கு, கடாபியின் விசுவாசத்திற்குரிய துவாரக் படைகள் பயன்படுத்தப் பட்டன. குறிப்பாக, மிஸ்ராதா யுத்தத்தில் அவர்களின் பங்களிப்பு கணிசமான அளவில் இருந்துள்ளது.

தவேர்கா நகரத்தை சேர்ந்த கறுப்பின படையினரின் செயலுக்கு பழிவாங்குவதற்காகவே, அந்த நகர மக்களை வெளியேற்றியதாக "புரட்சிப் படையினர்" தெரிவிக்கின்றனர். தமது ஊரை சேர்ந்தவர்கள் கடாபியின் இராணுவத்தில் பணியாற்றியதை ஒப்புக் கொள்ளும் தவேர்காவாசிகள், "கிளர்ச்சியாளர் மனதில் ஊறியுள்ள, கறுப்பின மக்கள் மேலான இனவெறி காரணமாகவே" தாம் வெளியேற்றப் பட்டதாக கூறுகின்றனர். போரின் போது நடந்த மனித உரிமை மீறல்களை விசாரித்து வந்த, "சர்வதேச மன்னிப்புச் சபை" யை சேர்ந்த ஆர்வலர் ஒருவரும், தவேர்கா மக்களின் வெளியேற்றம் குறித்து ஆராய்ந்துள்ளார்.

சுமார் இருபதாயிரம் தவேர்காவாசிகள், திரிபோலியில் உள்ள அகதிமுகாமில் தங்க வைக்கப் பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. சில மனித உரிமை ஆர்வலர்களும், ஊடகவியலாளர்களும், அங்கு சென்று விசாரித்துள்ளனர். அவர்கள் அங்கு சென்ற வேளை, முகாம் வெறிச்சோடிப் போய்க் கிடந்தது. புரட்சிப் படையினரைக் கேட்டால், "அந்த மக்கள் யாவரும் நைஜருக்கு சென்று விட்டார்கள்." என்று அலட்சியமாக கூறுகின்றனர். மேற்கொண்டு எந்த வித தடயமும் கிடைக்காத நிலையில், தவேர்கா மக்களுக்கு என்ன நடந்தது என்ற மர்மம் நீடிக்கின்றது. இறுதி யுத்தம் நடந்த சியேர்ட் நகரில், மனிதப் புதைகுழிகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. கடாபிக்கு விசுவாசமானவர்கள், சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப் பட்டிருப்பதாக, மனித உரிமை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அது போல, தவேர்கா நகரில் வாழ்ந்த, 20000 கறுப்பின மக்களும் எங்காவது கொன்று புதைக்கப் பட்டிருக்கலாம்.

லிபியாவின் புதிய ஆட்சியாளர்கள் புரிந்துள்ள போர்க்குற்றங்கள் பற்றிய விபரங்கள், மெல்ல மெல்ல வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடாபியும், அவரது மகன் முத்தாசினும் உயிருடன் பிடிபட்டு, பின்னர் கொலை செய்யப்பட்ட விடயம், வீடியோ காட்சிகளாக உலகெங்கும் வலம் வந்தன. இது குறித்தும், நூற்றுக் கணக்கான கடாபி விசுவாசிகளின் படுகொலை குறித்தும் விசாரணை தேவை என்று, மனித உரிமை ஸ்தாபனங்கள் அழுத்தம் கொடுக்கின்றன. மேற்குலகம் அவற்றை எல்லாம் கண்டும் காணாதது போல நடந்து கொள்கின்றது. புதிய அரசானது, இஸ்லாமிய மத அடிப்படைவாத போக்கில் செல்வதையும், யாரும் பெரிது படுத்தவில்லை.

இருப்பினும், எதிர்காலத்தில் காட்சிகள் மாறலாம். எண்ணெய் வளத்தை பங்கு போடுவதில் தகராறு ஏற்பட்டால், போர்க்குற்ற விசாரணை சம்பந்தமான சர்ச்சைகள் எழலாம். இரண்டு வருடங்களுக்கு முன்னர், புலிகளை அழிப்பதற்கு சிறிலங்கா அரசுக்கு பக்கபலமாக நின்ற மேற்குலக நாடுகள், பின்னர் தமது நண்பர்களை போர்க்குற்ற விசாரணைக்கு அழைத்து அழுத்தம் கொடுத்தன. இலங்கையில் நாம் ஏற்கனவே கண்ட காட்சிகள், லிபியாவில் நடந்து முடிந்துள்ளன. வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த புலித் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் போன்றே, கடாபியின் முடிவும் அமைந்திருந்ததை, மனித உரிமை நிறுவனங்கள் சுட்டிக் காட்டியுள்ளன. மேற்கத்திய நாடுகளுடன் முறுகல் நிலை தோன்றினால், அவர்கள் மீதும் குற்றச்சாட்டுகளை அடுக்குவதற்கு புதிய லிபிய அரசு தயாராகி வருகின்றது.

புலம்பெயர்ந்த நாடுகளில் இயங்கி வந்த "லிபிய இஸ்லாமிய போராட்டக் குழு", கடாபிக்கு எதிரான கிளர்ச்சியில் முன்னணிப் பங்கு வகித்துள்ளது. இஸ்லாமிய மத அடிப்படைவாத கொள்கை கொண்ட, அல் கைதாவுடன் இணைந்து போராடிய, அந்த அமைப்பின் முக்கிய தலைவர் தாய்லாந்தில் பிடிபட்டார். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் கீழ், அமெரிக்கர்களால் கடத்தப்பட்டு, சி.ஐ.ஏ.யினால் இரகசியமாக சித்திரவதை செய்யப்பட்டார். பின்னர், சி.ஐ.ஏ. தனது கைதியை கடாபியின் கையில் ஒப்படைத்தது. அந்த "சர்வதேச பயங்கரவாதி" வேறு யாருமல்ல, கடாபிக்கு எதிரான புரட்சிப் படையின் தலைமைத் தளபதி பெல்ஹாஜ்! மேற்குறிப்பிட்ட விபரங்கள் அடங்கிய ஆவணங்கள், கைவிடப் பட்ட பிரிட்டிஷ் தூதரகத்தில் கண்டெடுக்கப் பட்டன. அந்த ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு, வழக்குப் தொடுக்கப் போவதாக, பெல்ஹாஜ் சூளுரைத்துள்ளார். லிபியாவின் புரட்சியாளர்களுக்கும், மேற்குலகுக்கும் இடையிலான தேனிலவு விரைவில் முறியலாம். அப்போது லிபியாவில் எழும் நெருக்கடிகள், இன்றுள்ளதை விட மிக மோசமாக இருக்கும்.


மேலதிக தகவல்களுக்கு:
1.
Ethnic Hatred Rooted in Battle for Misrata Underlines Challenges the Nation Faces After Gadhafi
2.MI6 role in Libyan rebels' rendition 'helped to strengthen al-Qaida'
3.Libyan rebels round up black Africans
4.African women say rebels raped them in Libyan camp
5.Empty village raises concerns about fate of black Libyans