Sunday, September 10, 2023

ஈஸ்டர் தாக்குதல் - சேனல் 4 சொல்லாத செய்திகள்

 

ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பான சேனல் 4 ஆவணப்படம் புதிதாக எதையும் சொல்லி விடவில்லை. ஆனால் அது சொல்லாமல் மறைத்த விடயங்கள் பலவுள்ளன.

முதலாவதாக ஈஸ்டர் குண்டுவெடிப்புகளால் ஆதாயம் அடைந்தது கோத்தபாய ராஜபக்ச என்பது அப்போதே தெரிந்த விடயம். அரச புலனாய்வுத்துறை சம்பந்தப்பட்ட விடயமும் அப்போதே வெளியான தகவல் தான். ஆனால் நிரூபிக்க ஆதாரம் இருக்கவில்லை. சேனல் 4 தெரிவித்த மாதிரி பொலிஸ் விசாரணையை தொடர விடாமல் இடை நிறுத்தியதும் உண்மை தான்.

அந்த சதித்திட்டத்தில் பிள்ளையான் சம்பந்தப்பட்டிருந்தார் என்பது மட்டுமே புதிய தகவல். அநேகமாக கோத்தபாயவுக்கு இருந்த அதே அரசியல் நோக்கம் பிள்ளையானுக்கும் இருந்த படியால் கூட்டுச் சேர்ந்திருக்கலாம். அதாவது சிங்கள- முஸ்லிம் முரண்பாட்டை வளர்ப்பது கோத்தபாயவின் நோக்கம் என்றால், தமிழ் - முஸ்லிம் முரண்பாட்டை வளர்ப்பது பிள்ளையானின் நோக்கம்.

அதே நேரம் புலனாய்வுத்துறை நேரடியாக செயல்படுத்தியிருக்க திட்டத்தில் பிள்ளையானின் பங்களிப்பு பெரிதாக இருந்திருக்க போவதில்லை. அநேகமாக, ஆசாத் அலி மௌலானாவுக்கு, சேனல் 4 வுக்கு தெரிவித்ததை விட அதிக தகவல்கள் தெரிந்திருக்கும். அவற்றை மறைத்து விட்டு பிள்ளையான் அல்லது கோத்தபாய சம்பந்தப்பட்ட விடயங்களை பற்றி மட்டுமே பேசலாம் ஐரோப்பிய புலனாய்வுத்துறை அனுமதித்து இருக்கலாம். இலங்கை அரசியல் களத்தில் என்ன குழப்பம் ஏற்பட்டாலும் மேற்கிற்கு கவலையில்லை.

மேற்குலகை பொறுத்தவரையில் பிள்ளையான்கள் மட்டுமல்ல, ராஜபக்சேக்களும் கருவிகள் தான். நவ காலனிய, தரகு முதலாளிய அதிகார வர்க்கம், மேற்குலகால் எப்போதும் கருவியாக தான் கருதப் படுகிறது. அது வேறு விடயம்.

ஆகவே சேனல் 4 வீடியோவின் விளைவாக யாரும் பிள்ளையான், கோத்தபாயவை தூக்கில் போடப் போவதில்லை. எந்த விசாரணையும் நடக்கப் போவதுமில்லை. சில நாட்கள், அல்லது அதிக பட்சம் ஒரு மாதம் அரசியல் அரங்கில் பேசுபொருளாக இருக்கும். அவ்வளவு தான்.

இன்னொரு விடயம், தவ்ஹீத் ஜமாத் கட்சியிலிருந்து ஸஹ்ரான் தலைமையில் பிரிந்த சிறு குழு ஏற்கனவே முஸ்லிம் மக்களால் ஒதுக்கப்பட்ட நிலையில் இருந்தனர். அவர்கள் புலனாய்வுத்துறையால் பயன்படுத்த பட்டிருந்தாலும், "கோத்தபாயவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக" தாக்குதல் நடத்தி இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவர்களை கோத்தபாய பயன்படுத்திக் கொண்டார். அது உண்மை.

ஏற்கனவே 2001 ம் ஆண்டு நடந்த 9/11 தாக்குதல் அமெரிக்க அரசின் சதித் திட்டம் என்று ஏராளமான ஆவணப்படங்கள் வந்து விட்டன. ஆனால் என்ன நடந்தது? குற்றத்தை ஒப்புக் கொண்டு அமெரிக்க அரசு மன்னிப்புக் கோரியதா? இல்லையே? அதே நிலைமை தான் இலங்கையிலும்.

இங்கே முக்கியமான விடயம், அரசியல் தலைவர்கள் தமது அதிகாரத்தை தக்க வைப்பதற்காக எத்தகைய எல்லைக்கும் செல்வார்கள். தமது சொந்த மக்களையும் கொல்லத் தயங்க மாட்டார்கள். அரசியல் அறிஞர் மாக்கியவல்லியும் அதை தத்துவமாக எழுதி வைத்துச் சென்றுள்ளார். அவர் பிறந்த இத்தாலி தேசத்தில் 1974 ம் ஆண்டு நடந்த பொலோய்ஞோ ரயில் நிலைய குண்டுவெடிப்பில் 85 பொதுமக்கள் கொல்லப் பட்டனர். அது தொடர்பாக கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டவர்கள் தீவிர வலதுசாரி நவ நாஜிகள். ஆனால் அவர்களுக்குப் பின்னால் இத்தாலி அரசு இருந்தது என்ற உண்மை பல வருடங்களுக்கு பின்னர் தெரிய வந்தது. நேட்டோவின் பங்கு பற்றி எல்லாம் பேசப் போனால் நீண்டு விடும்.

அதே மாதிரி பிரான்ஸில் ஐ.ஸ். பெயரில் படுகொலைகளை நடத்தியவர்கள் பிரெஞ்சு அரச புலனாய்வுத்துறையுடன் தொடர்பில் இருந்தனர். இதெல்லாம் பிற்காலத்தில் தெரிய வந்த உண்மைகள். ஆயினும் என்ன? பிரெஞ்சு வெள்ளையின மக்களுக்கும், முஸ்லிம் குடியேறிகளுக்கும் இடையிலான இன முரண்பாடு இன்னமும் அங்கே உள்ளது. இதைத் தான் கவனிக்க வேண்டும்.

அதாவது உழைக்கும் வர்க்க மக்களை ஒன்று சேர விடக் கூடாது என்பதில் ஆளும் முதலாளிய வர்க்கம் மிகக் கவனமாக உள்ளது. அதற்காக இன/மத முரண்பாடுகளை தூண்டி விட்டு வளர்க்கிறார்கள். மக்களை இனரீதியாக அல்லது மதரீதியாக பிரித்து ஆண்டால் தான் இந்த அரசு நிலைத்திருக்க முடியும். அதன் அர்த்தம், முதலாளிய ஆதரவுத் தமிழ்த்தேசியம் கூட, என்ன தான் தன்னை முற்போக்கானதாக காட்டிக் கொண்டாலும், அதுவும் அரச நிகழ்ச்சிநிரலில் தான் இயங்குகிறது.

உண்மையில் சேனல் 4 ஆவணப்படம் பலரது கண்களை திறந்திருக்க வேண்டும். இப்படித் தானே இவ்வளவு காலமும் இந்த அரசு முஸ்லிம்களை மட்டுமல்லாது, சிங்களவர்களையும், தமிழர்களையும் பிரித்து வைத்து ஆள்கிறார்கள் என்ற உண்மையை உணர வேண்டும். ஆனால் அந்த உண்மையை உணர விடாமல் தடுப்பதற்கு தான் சிங்களப் பேரினவாத அரசும் அதன் தமிழ்த்தேசிய கைக்கூலிகளும் விரும்புவார்கள். அதனால் தான் இப்போதும் அமைப்பில் உள்ள தவறுகளை பற்றி பேசாமல் தனி நபர்களை சுற்றி அரசியல் நடத்துகிறார்கள். 
 

இது தொடர்பான முந்திய பதிவு:

No comments: