Thursday, September 07, 2023

Victim card- ஒரு தேசியவாதக் கோளாறு

 😇

யாராவது தமிழ்த் தேசியவாதிகள் மீது விமர்சனம் வைத்தால், அவர்கள் உடனே victim card தூக்கி பிடிக்க தொடங்கி விடுவார்கள். அதை அவர்கள் பாதுகாப்பு கவசமாக மட்டுமல்லாது, மற்றவர்கள் மீது ஆளுமை செலுத்தவும், ஏன் அத்துமீறவும் கூட பயன்படுத்துவார்கள். அதாவது victim என்ற கொடியை பிடித்துக் கொண்டு எதுவும் செய்யலாம். அத்துமீறல்களை நியாயப் படுத்தலாம். தம்மின மக்களை தமது தலைமையின் கீழே அடக்கி ஒடுக்கி வைக்கலாம். ஏனென்றால், குற்றமே ஆனாலும் அதை victim செய்தால் தவறில்லை அல்லவா?

அவர்களால் பாதிக்கப்பட்ட யாராவது உரிமைக்குரல் எழுப்பினால், "victim blame பண்ணாதே!" என்று மிரட்டி வைக்கலாம். இது தான் victim card play பண்ணுவது எனப்படும். இதைப் பல தமிழ்த் தேசியவாதிகள் சிறப்பாக செய்கின்றனர். கவனிக்க: சிங்களத் தேசியவாதிகள், யூத தேசியவாதிகள், ஆங்கிலத் தேசியவாதிகள், எவராக இருந்தாலும் கொள்கை ஒன்று தான். Victim card play பண்ணுவது, ஒரு தேசியவாதக் கோளாறு.

Victim card play பண்ணுவது வழமையாக எல்லா தேசியவாதிகளுக்கும் உரிய குணாம்சம். சிங்களத் தேசியவாதிகளும் அதே தான். குறிப்பாக அண்மையில் கூட போர்குற்றங்களை விசாரிப்பதற்காக சர்வதேச அழுத்தம் வந்த நேரம், victim card தூக்கி பிடித்தார்கள். இதையே தான் இஸ்ரேலியர்கள், செர்பியர்கள் கூட செய்தார்கள். தமக்கு மேலே உள்ள சக்தி அழுத்தம் கொடுக்கும் போதெல்லாம் victim card play பண்ணுவார்கள்.

இப்போது மீண்டும் தமிழ்த்தேசியவாதிகள் பக்கம் வருவோம். Victim card play பண்ணுவது பொதுவாக தேசியவாதிகளின் சிறப்பம்சம் என்பதை பார்த்தோம். இதற்கு தமிழ்த்தேசியவாதிகளும் விதிவிலக்கல்லவே? ஆனால் இதே தமிழ்த்தேசியவாதிகள் தமக்கு கீழே உள்ள இஸ்லாமிய சிறுபான்மையினரை ஒடுக்கும் பொழுது, முஸ்லிம்களை victim ஆக கருத மாட்டார்கள். (இரட்டை வேடம்) மாறாக மறுபடியும் தாமே victim என்பார்கள். முஸ்லிம் ஊர்காவல் படை செய்த படுகொலைகளை ஆதாரமாக காட்டுவார்கள். மீண்டும் மீண்டும் அதைச் சொல்லிக் காட்டி, "பார்த்தீர்களா? இப்போதும் தமிழர்கள் தானே victim?" என்று கேட்பார்கள்.

சிங்களத் தேசியவாதிகளும் அதே தான். தமக்கு கீழே உள்ள தமிழ்ச் சிறுபான்மையினரை ஒடுக்கும் பொழுது, அவர்களை victim ஆக கருத மாட்டார்கள். (இரட்டை வேடம்) மாறாக மறுபடியும் தாமே victim என்பார்கள். புலிகள் செய்த படுகொலைகளை ஆதாரமாக காட்டுவார்கள். மீண்டும் மீண்டும் அதைச் சொல்லிக் காட்டி, "பார்த்தீர்களா? இப்போதும் சிங்களவர்கள் தானே victim?" என்று கேட்பார்கள்.

தமிழ்த்தேசியவாதிளும், சிங்கள தேசியவாதிகளுக்கும் இடையிலான ஒற்றுமை அது மட்டுமல்ல. தத்தமது சமுதாயத்தில் உள்ள பெரும்பான்மை உழைக்கும் மக்களை சாதிரீதியாகவும், வர்க்கரீதியாகவும் ஒடுக்குவார்கள். அப்போது அந்த மக்கள் சார்பில் யாராவது உரிமைகளுக்காக போராடினால் victim blame பண்ண தயங்க மாட்டார்கள்.

ஏனென்றால் இப்போது இவர்கள் தான் ஒடுக்கும் வர்க்கமாக உள்ளனர். அதை மறைப்பதற்கு ஒடுக்கப்பட்ட மக்கள் மீதே குற்றச்சாட்டுகளை அடுக்குவார்கள். இது தான் தேசியவாதம். தமிழ்த்தேசியம் அல்லது சிங்களத் தேசியம், எதுவாக இருந்தாலும் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.

No comments: