Monday, June 29, 2020

ஒரு புலி ஆதரவுக் குடும்பத்தின் சாதியக் கதை

அது ஒரு "புலி ஆதரவுக் குடும்பம்." ஆனால், புலிகளை "நிபந்தனையுடன்" ஆதரித்த குடும்பம். அதற்குக் காரணம், அந்தக் குடும்பம் முன்பு வன்னியில் வாழ்ந்த காலத்தில், குடும்பத் தலைவியின் தந்தை யாரோ ஒருவரை சாதிப்பெயர் சொல்லி ஏசிய குற்றத்திற்காக புலிகள் அவருக்கு ஒரு கிலோ பச்சை மிளகாய் சாப்பிடும் தண்டனை கொடுத்திருந்தனர். அது மட்டுமே அவர்களுக்கு புலிகள் மீதிருந்த விமர்சனம்.

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர், நான் ஐரோப்பா வந்த புதிதில் அந்தத் தமிழ்க் குடும்பத்துடன் பழக்கம் உண்டானது. என்னுடன் நல்ல நட்பாக இருந்தனர். காலப்போக்கில் சாதியம் குறித்தும் என்னுடன் குறித்தும் வெளிப்படையாக உரையாடினார்கள். அப்போது தான் வன்னியில் புலிகள் வழங்கிய தண்டனை பற்றி விவரித்தார்கள். பச்சை மிளகாய் சாப்பிடக் கொடுத்த தண்டனை என்பது ஒப்பீட்டளவில் மிகவும் மென்மையான தண்டனை. ஆனால், அவர்களது ஆதிக்க சாதி மனநிலையானது, அதைக் கூட ஏற்றுக் கொள்ள மறுத்தது. "இது மிகவும் கொடுமையான தண்டனை, மனித உரிமை மீறல், புலிகளின் சர்வாதிகாரப் போக்கு..." என்றெல்லாம் விமர்சித்தார்கள். ஒருவேளை, பல வருட காலம் நிலக்கீழ் சிறைக்குள்  அடைத்து வைத்திருந்தால், அவர்கள் இப்போது தீவிர புலி எதிர்ப்பாளர்களாக காட்சியளித்திருப்பார்கள்.

நான் புலிகளின் தண்டனையை நியாயப்படுத்தி எவ்வளவோ எடுத்து சொல்லியும், அவர்களால் சாதி சொல்லி ஏசுவதை ஒரு குற்றமாக கருத முடியவில்லை. அது மட்டுமல்ல, அந்தத் தண்டனையானது அவர்களது எண்ணத்திலும், நடத்தையிலும் எந்தவொரு மாற்றத்தையும் உண்டு பண்ணவில்லை. அவர்கள் புலிகளின் செயலை மட்டுமே குறை கூறினார்களே தவிர, மனதளவில் சாதிவெறி குறையாதவர்களாக காணப்பட்டனர்.

அவர்கள் தம்மை சாதியால் உயர்த்தப்பட்டவர்களாக நம்பினார்கள். அதற்கு காரணம் கேட்ட பொழுது, "நல்ல சாதி" எனப்படுபவர்கள் சுத்தமானவர்கள் என்றும், "கெட்ட சாதி" எனப்படுபவர்கள் அசுத்தமானவர்கள் என்றும், "முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை" என்றும் வாதாடினார்கள். "நோய்க்கிருமிகள் பரவுவதை தடுப்பதே நோக்கம்" என்று தீண்டாமைக்கு ஒரு  "விஞ்ஞான விளக்கம்" கொடுத்து நியாயப் படுத்தினார்கள். ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்த உலகறிவு இல்லாதவர்களிடம் இப்படியான மூடநம்பிக்கைகள் இருப்பது வழமையானது. நாம் தான் அனுசரித்து போக வேண்டும்.

வெளிநாட்டுக்கு வந்த பின்னர் யார் எந்த சாதி என்று தெரியாத நிலைமை. எடுத்த உடனே நேரடியாக கேட்பது அநாகரிகமாக கருதப்பட்டது. ஆனால், தமிழர்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் எல்லோருடனும் நட்பாகப் பழக வேண்டிய நிர்ப்பந்தம். தாம் (சாதி)"தெரியாதவர்களின்" வீடுகளுக்கு செல்ல நேர்ந்தால், அவர்கள் தரும் தேநீரை குடிப்பதில்லை. ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி தட்டிக் கழிப்பார்கள். சிலநேரம் கூடவே "தங்களது ஆள்" ஒருவரும் வந்திருந்தால் அவரை குடிக்க சொல்லிக் கொடுப்பார்களாம். இந்த விடயங்களை அவர்களாகவே என்னிடம் கூறினார்கள்.

சாதி பார்த்த காரணத்தால் புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் பலர், இந்தக் குடும்பத்தினர் போன்றவர்கள் தான். மிகச் சரியாக சொன்னால், சாதி அந்தஸ்தில் உயர்ந்திருந்தாலும் வர்க்க ரீதியாக தாழ்ந்திருந்த சாதாரண உழைக்கும் வர்க்க மக்கள். புலிகளும் இவர்களைத் தான் பிடித்து தண்டித்தார்கள். இப்படியான தண்டனைகள் பலரது மனதில் சாதிய வன்மத்தை அதிகரித்ததே தவிரக் குறைக்கவில்லை. சாதிப்பிரச்சினையை தனிநபர் சார்ந்த சட்டம், ஒழுங்கு பிரச்சினையாக பார்த்தது தான் புலிகள் விட்ட தவறு.

அறிவூட்டல், பரஸ்பர நட்புறவு, கூட்டு உழைப்பு, பேச்சுவார்த்தை, கலந்துரையாடல் மூலம் சாதிப்பிரச்சினையை பெருமளவு ஒழிக்கலாம். ஒடுக்கும் சாதியை சேர்ந்த சாதிய உணர்வாளர்கள் பலர், ஒடுக்கப்படும் சாதியை சேர்ந்தவர்களுடனான பரஸ்பர தொடர்பாடல்களுக்கு பின்னர் மனம் திருந்தி இருக்கிறார்கள். இதை நான் எனது அனுபவத்தில் கண்டிருக்கிறேன். அறியாமையில் இருந்து விடுபட்டவர்கள், ஏனையோரையும் திருத்தியதை கண்கூடாகக் கண்டிருக்கிறேன். மனிதர்கள் மாறக்கூடியவர்கள். அதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்த,  சாதிவெறி பிடித்த நிலவுடைமையாளர்கள், அல்லது பணக்காரர்களை புலிகள் என்றைக்குமே தண்டித்ததில்லை. அதிகம் பேசுவானேன். ஐரோப்பாவில் புலிகளின் பெயரில் தீவிரமாக இயங்கிய செயற்பாட்டாளர்கள் கூட அந்தரங்கத்தில் சாதி பார்த்ததை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறேன். இப்படியானவர்கள் குறித்தும் புலிகள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்குக் காரணம், அவர்கள் புலிகள் கேட்ட போதெல்லாம் பணம் கொடுக்கும் வல்லமை கொண்டவர்கள்.

ஆதிக்க சாதியை சேர்ந்த முதலாளிகள், நிலவுடமையாளர்கள், பணக்காரர்கள் அரசியலில் செல்வாக்கு செலுத்துவதை தான் நிறுவனமயப்படுத்தப் பட்ட சாதியம் என்கிறோம். புலிகளைப் பொறுத்த வரையில் அது குறித்து எந்த விதமான புரிதலும் இருக்கவில்லை. அதனால் தான் சாதியம் இன்று வரை நிலைத்து நிற்கிறது. சமூகத்தில் சாதியம் என்ற மரத்தை அகற்றுவதென்றால் அதை வேரோடு வெட்டிச் சாய்க்க வேண்டும். ஆனால் புலிகள் கிளைகளை வெட்டி விட்டு சாதியம் ஒழிந்து விட்டது என்றனர்.

நிறுவனமயப்படுத்தப் பட்ட சாதிவெறிக்கும், சாமானியர்கள் வெளிப்படுத்தும் சாதிவெறிக்கும் இடையில் பாரிய வித்தியாசம் உள்ளது. நாம் இங்கே நிறுவனமயப் படுத்தப் பட்ட சாதிவெறியை தான் எதிர்க்க வேண்டும். அது தான் மிகவும் ஆபத்தானது.

சாதிப் பிரச்சினையை மறுப்பதற்காக, "புலிகள் சாதி பார்க்கவில்லை" என்பதற்கு பலர் காட்டும் "ஆதாரங்கள்" யாவும் சிறுபிள்ளைத்தனமானவை. அவை பெரும்பாலும் சாமானியர்களின் சாதிவெறி தொடர்பானவை. புலிகள் தாம் சிங்கள பேரினவாத அரசை மட்டுமே எதிர்ப்பதாக சொல்லி வந்தார்கள். அதன் அர்த்தம் சாதாரண சிங்களவர்கள், இனவாதம் பேசினாலும் கூட, அவர்கள் எமக்கு எதிரிகள் அல்ல. அதே மாதிரி சாதாரண வெள்ளாளர்கள் சாதியவாதம் பேசினாலும் அவர்கள் எமக்கு எதிரிகள் அல்ல. நாங்கள் ஒருநாளும் சாதாரண மக்களுடன் சண்டைக்கு போகக் கூடாது. சாமானியர்கள் இனவெறி/சாதிவெறி கருத்துக்களை தெரிவித்தால், அதை புறக்கணிக்க வேண்டும்.

ஆனால் புலிகளிடம் அத்தகைய புரிதல் இருந்துள்ளதா என்பது கேள்விக்குறி. இதனை "புலிகள் சாதி  பார்க்கவில்லை" வக்காலத்து வாங்குவோரே, தாம் அறியாமல் புலிகளின் புரிதலின்மையை  வெளிப்படுத்தி  விடுகின்றனர். உதாரணத்திற்கு, முன்பு புலிகளின் நிர்வாகத்தில் சாதிப்பெயர் சொல்லி திட்டிய காரணத்திற்காக ஐநூறு ரூபாய் அபராதம் விதித்தார்கள், பச்சை மட்டையால் அடித்தார்கள், பச்சை மிளகாய் உண்ணக் கொடுத்தார்கள் என்று பல உதாரணங்களை காட்டுகிறார்கள்.
இத்தகைய தண்டனைகளால் சாதியத்தை ஒழிக்க முடியாது.

அவர்கள் அறியாமையால் செய்த தவறுகளுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. கல்வித் தகைமைக்கும், அறிவுக்கும் எந்தவித சம்பந்தம் இல்லாத சமுதாயத்தில் மெத்தப் படித்தவர்கள் கூட சாதி சொல்லித் திட்டுவதை கண்டிருக்கிறோம். அவர்கள் யாரும் அறிவுக்காக படிக்கவில்லை. உத்தியோகம் பெற்று பணம் சம்பாதிக்கும் நோக்கில் படித்தவர்கள். அப்படியானவர்களை மீள் படிப்பு முகாம்களுக்கு அனுப்புவதே அதிக பட்ச தண்டனையாக இருக்க வேண்டும். தமது பெற்றோரையும் திருத்தக் கூடிய வகையில், பள்ளிப் பிள்ளைகளுக்கு சமதர்ம கல்வி புகட்டுவதும் ஒரு தீர்வாகலாம்.

இதற்கு நாம் Black Lives Matter போராட்டத்தில் இருந்து பாடம் கற்கலாம். அமெரிக்காவில் உள்ள நிறுவனமயப் படுத்தப் பட்ட நிறவெறியை தான் அவர்கள் எதிர்க்கிறார்கள். அதனால் தான் வெள்ளையின மக்களும் அந்தப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கிறார்கள். அத்தகைய நிலைமை அறுபதுகளில் யாழ் குடாநாட்டில் இருந்தது. அப்போது நடந்த தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தை முன்னெடுத்த இடதுசாரி சக்திகளுக்கு வெள்ளாளர்களும் ஆதரவாக நின்றனர். போராட்டத்தில் நேரடியாக பங்கெடுத்தனர். இந்த உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.

அமெரிக்காவில் நடக்கும் Black Lives Matter போராட்டம் சாமானிய வெள்ளையர்களின் நிறவெறிக் கருத்துக்களுக்காக அவர்களை பகைக்கவில்லை. நாங்கள் எப்போதும் சாதாரண மக்களை எமது பக்கம் வென்றெடுக்க வேண்டும். சாதாரண வெள்ளையர்கள் காட்டும் நிறவெறியை அவர்களது பிள்ளைகளே எதிர்த்துப் போராடுகிறார்கள். சொந்தப் பிள்ளைகளால் அறிவு  புகட்டப் பட்டு Black Lives Matter போராட்டத்தில் இணைந்து கொண்ட வெள்ளையினப் பெற்றோர் பலருண்டு. அதே மாதிரி யாழ் வெள்ளாள குடும்பங்களில் நிலவும் சாதிவெறிக் கருத்துக்களை இளைய தலைமுறையினர் கேள்விக்குட்படுத்தி திருத்த வேண்டும். எமது அரசியல் போராட்டம் எப்போதும் நிறுவனமயப் படுத்தப்பட்ட சாதிவெறியை நோக்கியதாக இருக்க வேண்டும்.

இந்த இடத்தில் இன்னொரு விடயத்தையும் சொல்ல வேண்டும். நிலப்பிரபுத்துவ கால எச்சங்களான குடிமை சாதித் தொழில் புலிகளின் காலத்திலும் இருந்ததாகவும், அதைப் புலிகள் ஒழித்து விட்டதாகவும் சிலர் வாதாடுகிறார்கள். அவர்கள் குடிமைத் தொழில் எனக் கருதுவது மரண வீடு போன்றவற்றில் செய்யப்படும் சடங்குகளை தான். அதைப் புலிகள் தடுத்தார்கள் என்பது உண்மை தான். எனினும் குடிமைத் தொழில் முறை பற்றிய புலிகளின் அறிவு போதாமை காரணமாக "சாதியில் குறைந்ததாக" சொல்லப்படும் தொழில்களை தான் தடுத்தார்கள். "சாதியில் உயர்ந்தவர்கள்" செய்து வந்த குடிமைத் தொழில் அப்படியே இருந்து வந்தன. அவற்றை "தமிழர் கலாச்சாரம்" என்ற பெயரில் பேணிப் பாதுகாத்து வந்தனர்.

உதாரணத்திற்கு ஒரு கோயிலை எடுத்துக் கொண்டால், அதைச் சுற்றி பல்வேறு குடிமைச் சாதியினர் தொழில் செய்வதைக் காணலாம். கோயிலில் பூசை செய்யும் ஐயர் முதல் மடைப்பள்ளி சமையல்காரர்கள் வரை சாதி அடிப்படையிலானதொழில்களை செய்து வந்தனர். தமிழர் கலாச்சாரம் என்பது, இந்துக் கலாச்சாரமாக இருப்பதால் இன்றைக்கும் அவை தொடர்கின்றன. உண்மையில் புலிகள் அதை ஒழிக்க முனைந்திருந்தால் அங்கு ஒரு பெரும் சமூகப் புரட்சியே நடந்திருக்கும். ஆதிக்க சாதியில் உள்ள பிற்போக்காளர்கள் புலிகளை எதிர்த்து கலகம் செய்திருப்பார்கள். "புலிகள் தமிழர் கலாச்சாரத்தை ஒழிக்கப் பார்க்கிறார்கள்..." என்று போர்க்கொடி தூக்கி இருப்பார்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை. அதற்குக் காரணம் அன்று புலிகள் நிறுவனமயப் படுத்தப் பட்ட சாதிவெறியை எதிர்க்கவில்லை. மாறாக அதனுடன் சமரசம் செய்து கொண்டார்கள்.

உண்மையில் புலிகள் நிறுவனமயப்படுத்தப் பட்ட சாதிவெறிக்கு எதிராக சுண்டுவிரலைக் கூட அசைக்கவில்லை. உலகின் நான்காவது பெரிய இராணுவமான இந்திய இராணுவத்தை எதிர்த்துப் போராடியதாக பெருமை பேசிய புலிகளால், உள்ளூரில் இருந்த வெள்ளாள சாதிவெறி அமைப்பை எதிர்க்க முடியவில்லை. அதற்கான துணிச்சலும் அவர்களிடம் இருக்கவில்லை. காரணம் மிக எளிது. புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து புலிகளுக்கு நிதியுதவி செய்து வந்த ஆதிக்க சாதி சமூகத்தை எதிர்த்தால் தமது இருப்பு கேள்விக்குரியதாகி விடும் என நினைத்தார்கள். அதற்கான சாத்தியம் இருக்கவில்லை என யாரும் மறுக்க முடியாது.

2 comments:

Packirisamy N said...

இந்து மதம், சாதியில்லாமல் இயங்க முடியாது என்று அம்பேத்கார் கூறியது 100% உண்மை. யாருக்கும் இதனை மாற்ற விருப்பமில்லை. ஆனால் சாதிக்குரிய தொழிலை செய்ய விருப்பமில்லாமல், பணம் கிடைத்தால் எதனையும் செய்வார்கள். பணம் இருப்பவர்களிடம் சாதியையும் சமரசம் செய்துகொள்வார்கள். மொத்தத்தில் பணம்தான் சாதி.

அனுஜன் said...

அருமை 👌
தெளிவான விளக்கம்
பல சிந்தனைகளை தூண்டியது
நன்றி