Tuesday, June 23, 2020

"எங்கப்பன் குதிருக்குள் இல்லை": சாதிய கொண்டையை மறந்த யாழ் ஒன்றியம்!


புனரமைக்கப்பட்ட யாழ் நூலக மீள்திறப்பு விழா தொடர்பான ஆவணம் ஒன்றை இன்று பார்க்கக் கிடைத்தது. 17-02-2003 உதயன் பத்திரிகையில் "யாழ் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம்" என்ற அமைப்பின் பெயரில் வெளியான அறிக்கையில் சாதியம் மூடி மறைக்கப் படுவது நன்றாகத் தெரிகிறது.

இந்த அறிக்கையின் தலைப்பே "உழுத்துப் போன சாதிப்பிரச்சினை..." என்று தான் தொடங்குகிறது. இது வழமையாக சாதியவாதிகள் பாவிக்கும் சொல்லாடல். "இப்பெல்லாம் யாரு சாதி பார்க்கிறாங்க?", "உழுத்துப்போன சாதிப்பிரச்சினை" ஆகிய இரண்டு கூற்றுகளுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இல்லை. இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள "விடுதலைப் போராட்டம் வீரியம் பெற்றிருந்த" காலத்தில் தான், 1995 ம் ஆண்டு வலிகாமத்தில் இருந்து தென்மராட்சிக்கு இடம்பெயர்ந்து சென்றவர்கள் வீடுகளில் சாதி பார்த்து தங்க வைக்கப் பட்டனர். பொதுக் கிணறுகளில் தண்ணீர் அள்ளுவது தடுக்கப் பட்டது. அப்போதெல்லாம் யாழ் குடாநாடு ஆயுதமேந்திய புலிகளின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.

இந்த விடயங்களை தெரிந்து கொண்டும் "சாதிப்பிரச்சினை எப்பவோ உக்கி, உழுத்து, செத்து விட்டது" என்று அறிக்கை வெளியிட்டால், அதை எழுதியவர் ஒன்றில் பொய்யராக இருக்க வேண்டும் அல்லது சாதிவெறியராக இருக்க வேண்டும். உலகில் எந்தவொரு இனவாதியும் தான் பேசுவது இனவாதம் என்று சொல்வதில்லை. அதே மாதிரித் தான் சாதியவாதிகளும் நடந்து கொள்வார்கள். வேறு ஏதாவது காரணத்தைக் கூறித் தான் தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வார்கள்.

இந்த அறிக்கையில் நூலகத்தை திறக்க விடாமல் தடுத்தமைக்கு சொல்லப்படும் காரணங்கள் சிறுபிள்ளைத்தனமான வாதங்களாக தெரிகின்றன. "நூலகம் முழுமையடையவில்லை" என்பதால் தாம் போராட்டம் நடத்தியதாகவும், அப்படி இருந்தும் அன்றைய மேயர் செல்லன் கந்தையா நூலகத்தை திறக்க முயன்றதால் புலிகளிடம் முறையிட்டதாகவும் சொல்லிக் கொள்கிறார்கள். ஒரு தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர் மேயராக இருந்த காரணத்தால் தாம் நூலகத் திறப்புவிழாவை தடுக்கவில்லை என்றும் சொல்கிறார்கள். செல்லன் கந்தையா உறுப்பினராக இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வேண்டுமென்றே சாதிப்பிரச்சினை புரளியை கிளப்பியதாகவும், தமக்கு சாதிய நோக்கம் எதுவும் கிடையாது என்றும் சொல்கின்றனர்.

சரி, அதை உண்மை என்றே நம்புவோம். அந்த நேரத்தில் திடீரென முளைத்த யாழ் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத்திற்கு சாதிய நோக்கம் இல்லா விட்டால், வேறெந்த காரணத்திற்காக எதிர்த்தார்களாம்? அதையும் அவர்களே சொல்லி விடுகின்றனர். இந்த அறிக்கையில் பின்வரும் இரண்டு காரணங்களுக்காக மட்டுமே எதிர்க்கப் பட்டுள்ளது:

  1. நூலகத்தில் காத்திரமான நூல்கள் இல்லை. 
  2. நவீன தொழில்நுட்ப தகவல் தொடர்பு, இணையத்தள வசதி செய்து தரப்படவில்லை.

உலகம் முழுவதும் இயங்கும் நூலகங்கள் பயனாளர்களின் தேவைக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதிய நூல்களை வாங்கிக் கொண்டிருக்கும். நூலகம் திறந்து 17 வருடங்கள் கடந்த பின்னரும், இப்போதும் அங்கே காத்திரமான நூல்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. மேலும் எது காத்திரமான நூல் என்பதும் கேட்கப்பட வேண்டிய கேள்வி. ஒரு வாசகர் முக்கியமானதாக கருதும் ஒரு நூல் இன்னொருவருக்கு பிரயோசனமற்றதாக தெரியலாம். மனிதர்கள் எல்லோரும் ஒரே மாதிரியான சுவை கொண்டவர்கள் அல்ல. ஆகவே எது காத்திரமான நூல் என்பதில் எல்லோரும் ஒருமித்த கருத்தை கொண்டிருக்க முடியாது. அதை தீர்மானிப்பது நூலகத்தின் பயனாளிகள்.

யாழ் நூலகம் இன்றைக்கும் நவீன தொழில்நுட்ப வசதிகளில் பின்தங்கியுள்ளது. 2003 ம் ஆண்டு காலகட்டத்தில் பல மேற்கத்திய நகரங்களில் இருந்த நூலகங்களில் கூட இணைய வசதி இருக்கவில்லை. இந்தப் பிரச்சினை நடந்து பத்து வருடங்களுக்குப் பிறகு, 2013 ம் ஆண்டு சாவகச்சேரி பொது நூலகத்திற்கு சென்றிருந்தேன். அங்கே நவீன தொழிநுட்ப, இணைய வசதி இல்லாதது கண்டு ஏமாற்றத்துடன் திரும்பி இருக்கிறேன்.

யாழ் நூலகத்திற்கு அடுத்த படியாக, அதுவும் ஒரு முக்கியமான பெரிய நூலகம் தான். (யாழ் குடாநாட்டின் தென் கிழக்கு பிரதேசத்தில் சாவகச்சேரி ஒரு பெரிய நகரம்.) எல்லாக் காலத்திலும் இயங்கிக் கொண்டிருந்த சாவகச்சேரி பொது நூலகத்தில் நவீன தொழில்நுட்ப வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று இன்று வரை யாரும் கவலைப் பட்டதாக தெரியவில்லை. அப்போது இந்த யாழ் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம் என்ன செய்து கொண்டிருந்தது? இப்போதாவது ஒரு பெரிய போராட்டம் நடத்தி நூலகத்திற்கு இணைய வசதியை பெற்றுத் தரலாமே?

"நூலகம் முழுமையடையவில்லை... காத்திரமான நூல்கள் இல்லை... இணைய வசதிகள் இல்லை..." என்பன போன்ற நொண்டிச் சாட்டுகளை சொல்லும் பொழுதே, "யாழ் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றிய" முகமூடி அணிந்திருந்தவர்கள் யார் என்பது தெரிந்து விடுகிறது. நான் அறிந்த வரையில், அப்படி ஒரு அமைப்பு நூலக திறப்புவிழா பிரச்சினைக்கு முன்னரும், பின்னரும் இயங்கவில்லை. (தவறென்றால் சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.)

இந்தப் பிரச்சினை நடந்த அதே நாட்களில் தான், தினக்குரல் பத்திரிகையில் மேயர் செல்லன் கந்தையாவை மரமேறும் சீவல் தொழிலாளி போன்று சிறுமைப்படுத்தும் சாதிவெறிக் கார்ட்டூன் பிரசுரமானது. அதை இந்த ஒன்றியம் கண்டிக்கவில்லை. அது தான் "யாழ் மாவட்ட பொது அமைப்புகளின்" ஒன்றியமாயிற்றே? உழுத்துப் போன சாதியத்தை உதறித் தள்ளிய "பொது அமைப்புகளுக்கு"(?) தினக்குரல் பத்திரிகையின் சாதிவெறிக் கேலிச்சித்திரம் ஒரு பொருட்டாக தெரியாதது மிகப் பெரிய ஆச்சரியம். பொது அமைப்புகளின் ஒன்றிய முகமூடி அணிந்திருந்த சாதியவாதிகள் தமது கொண்டையை மறைக்க மறந்து விட்டார்கள். 


1 comment:

Packirisamy N said...

இலங்கையிலிருந்து “உளுத்துப்போன” என்பதற்கு பதில் “உழுத்துப்போன”
என்று பிழையுடன் தமிழை நான் எதிர்பார்க்கவில்லை.