Saturday, June 27, 2020

யாழ் மக்களின் நூலக உரிமையை தட்டிப் பறிக்கும் ஆதிக்க சாதிவெறி


யாழ் நகரில் பொது மக்கள் பாவனைக்கான நூலகமே இருக்கக் கூடாது என்று வாதிடும் அளவிற்கு சிலர் (சாதி)வெறி பிடித்து அலைகிறார்கள். 2003 ம் ஆண்டு திறக்கப் படவிருந்த புதிய யாழ் மாநகர நூலகம், அங்கு எழுந்த சாதிப் பிரச்சினை காரணமாக பின்போடப் பட்டது. அதற்குக் காரணம், நூலகக் கட்டிடத்தை கட்டி முடித்து வைத்து, அதை திறக்கவிருந்தவர் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த மேயர். சாதியில் குறைந்தவரின் பெயர் கல்வெட்டில் வந்து விடக் கூடாது எனும் ஆதிக்க சாதி ஆணவம்.

இதில் "நீதிமான்களாக" கருதப் பட்ட புலிகளும் ஒரு பக்கச் சார்பான நிலையெடுத்து தமது பெயரை தாமே கெடுத்துக் கொண்டனர். சிங்கள பேரினவாதத்தை எதிர்த்துப் போராடிய புலிகளுக்கு வெள்ளாள சாதியவாத்தை எதிர்க்கும் அளவிற்கு தைரியம் இருக்கவில்லை. ஆயிரக் கணக்கான ஆயுதங்கள் வைத்திருந்தாலும், ஆதிக்க சாதியினரின் அதிகார வர்க்கத்திற்கு அடங்கிப் போனார்கள். இறுதியில் சாதியம் வென்றது. தமிழ்த்தேசியம் தோற்றது.

இதில் சாதிப் பிரச்சினை இல்லையென்று வாதாடிய பிரிவினர், சிங்களப் பேரினவாதிகளால் எரிக்கப் பட்ட நூலக கட்டிடம் அப்படியே ஒரு நினைவுச் சின்னமாக பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் என்று கூறி வந்தனர். அது உண்மையானால், புலிகள் ஏன் நூலகம் கட்டி முடிக்கப் படும் வரையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்? ஒரு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பி கட்டுமானப் பணிகளை ஆரம்பக் கட்டத்திலேயே தடுத்திருக்கலாமே? ஏற்கனவே புலிகளால் இவ்வாறு தடுக்கப் பட்ட திட்டங்கள் ஏராளம் உள்ளன. யாழ் நகர சிவில் நிர்வாகம் பல வழிகளில் குழப்பப் பட்டது.

புலிகள் தமது செல்வாக்கை பயன்படுத்தி யாழ் நகரில் நூலகம் கட்டுவதற்கு வேறு ஒரு இடத்தில் நிலம் ஒதுக்கிக் கொடுத்திருக்கலாம். எதுவுமே செய்யாமல் இருந்து விட்டு "ஆனந்தசங்கரி திறக்கவிருந்தார் அதனால் தடுத்தோம்" என்பது ஒரு சிறுபிள்ளைத்தனமான பதில். யாழ்ப்பாணத் தமிழ் மக்களுக்கு ஒரு நூலகம் தேவைப் பட்டது. அதை ஆனந்த சங்கரி திறந்து வைத்தாலும், அன்டன் பாலசிங்கம் திறந்து வைத்தாலும் அவர்களுக்கு ஒன்று தான்.

இதிலே வேடிக்கை என்னவென்றால், நூலக பிர்ச்சினை நடந்து கொண்டிருந்த அதே காலத்தில், தாம் முக்கியமானதாக கருதும் புனரமைப்பு திட்டங்களுக்கு மாநகர சபை நிதி ஒதுக்க வேண்டும் என்று புலிகள் விரும்பி இருக்கிறார்கள். குறிப்பாக நல்லூரில் உள்ள கிட்டு பூங்கா, கோப்பாயில் உள்ள மாவீரர் துயிலும் இல்லம் ஆகியவற்றுக்கு மாநகர சபை நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த விபரத்தை செல்லன் கந்தையா வீடியோ பேட்டியில் கூறியுள்ளார். (வீடியோ இணைப்பு கீழே உள்ளது.) சிங்களப் பேரினவாதிகளால் சேதமாக்கப் பட்ட பூங்காவும், மயானமும் யாழ் மாநகர நிதியில் புனரமைக்கப் படலாம் என்றால், நூலகம் புனரமைப்பதை மட்டும் புலிகள் ஏன் தடுக்க வேண்டும்? இது அவர்களது இரட்டை வேடத்தை காட்டுகிறது.

செல்லன் கந்தையாவுடனான பேட்டியில் (வீடியோ இணைப்பு கீழே உள்ளது.) அவர் ஒரு விடயத்தை தெளிவாகக் குறிப்பிடுகிறார். நூலகத்தை புனரமைப்பது தொடர்பாக மக்களின் விருப்பத்தை கேட்டு, நகர சபையில் முடிவெடுக்கப் பட்டது. அதற்கான நிதியையும் நகர சபை ஒதுக்கியது. புதிதாக வேறு இடத்தில் நூலகம் கட்டுவதானால் யாழ் நகரில் இடப்பற்றாக்குறை. ஆகவே முன்பிருந்த இடத்தில் கட்டுவதற்கு தீர்மானிக்கப் பட்டது. அதற்கு மக்களும், நகர சபை உறுப்பினர்களும் சம்மதித்துள்ளனர்.

நல்லூரில் இராணுவத்தால் உடைக்கப் பட்ட திலீபனின் நினைவுச்சின்னத்தை, போர் முடிந்த பின்னர் மீண்டும் திருத்திக் கட்டி இருக்கிறார்கள். போர் நடந்த காலத்தில் விமானக் குண்டுவீச்சுகள் அல்லது ஷெல் தாக்குதலால் இடித்து நொறுக்கப் பட்ட கோயில்கள், பள்ளிக்கூடங்கள் மீண்டும் புனரமைக்கப் பட்டு அதே இடத்தில் இயங்குகின்றன. இதெல்லாம் புலிகள் அதிகாரத்தில் இருந்த காலத்தில், அவர்களது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் கூட நடந்துள்ளன.

இதிலே வேடிக்கை என்னவென்றால் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்த கோயில்கள் புனரமைப்பதற்கான நிதி, புலிகளின் ஜென்ம விரோதியான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் இருந்து வந்தது. அப்போது இடிந்த பள்ளிக்கூடங்கள், கோவில்களை அப்படியே நினைவுச்சின்னமாக வைத்திருக்க வேண்டும் என்று யாரும் கூறவில்லை. அதை ஒரு சர்ச்சை ஆக்கவில்லை. ஏனென்றால் அதில் சாதிப் பிரச்சினை இருக்கவில்லை. அதனால் ஏதோ ஒரு சாட்டுக் கூறி தடுக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. நாய் விற்ற காசு குரைக்காது. ஜென்ம விரோதி டக்ளஸ் கொடுத்த பணம் கடிக்காது.

யாழ் நூலகத்தை புனரமைக்காமல் நினைவுச்சின்னமாக வைத்திருக்க வேண்டும் என வாதாடுவோர் யாரென்று பார்த்தால், அவர்களில் பலர் பல்கலைக்கழக நூலகத்தை பயன்படுத்தி படித்து பட்டதாரியானவர்கள்! இவர்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணத்திற்கு வெளியே வாழ்ந்து கொண்டு பேசுகிறார்கள். மேற்கத்திய நாடுகளில் மட்டுமல்லாது, தமிழ் நாட்டில் அல்லது கொழும்பில் வசதியாக வாழ்ந்து கொண்டு பேசுகிறார்கள். யாழ் நகருக்கு ஒரு நூலகம் அவசியமா இல்லையா என்பதை அங்கு வாழும் மக்கள் தீர்மானிக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து கொண்டு நூலகம் வேண்டாம் என்று சொல்வதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

வாழ்க்கையில் ஒரு நாளும் யாழ் நூலகத்தை பயன்படுத்தி இராதவர்கள், இனிமேலும் பயன்படுத்த போகாதவர்கள், "யாழ் நகருக்கு நூலகம் வேண்டாம்" என்று வாதிடுவது சுத்த அயோக்கியத்தனம். யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழர்கள் அறிவு பெறுவதை தடுக்கும் ஈனப் புத்தி. இதை தமிழ்த் தேசியத்தின் பெயரால் சொல்வது ஒட்டு மொத்த தமிழ் இனத்திற்கும் அவமானம்.

ஒரு மாநகரசபையின் பொது நூலகமானது பொது மக்களின் நன்மை கருதி மக்களின் வரிப் பணத்தில் இயக்கப் படுகிறது. நூல்களை இரவல் கொடுப்பதற்கு மட்டும் சிறிய தொகை அறவிடப் படுகிறது. நூலக செலவுகளை அரச மானியம் ஈடுகட்டுகிறது. இதனால் ஏழைகளுக்கே அதிக நன்மை உண்டாகும். உலகம் முழுவதும் பொது நூலகங்கள் இருப்பதன் காரணமும் அது தான்.

யாழ்ப்பாணத்திலும் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் விரும்பிய புத்தகத்தை விலை கொடுத்து வாங்கும் சக்தி படைத்தவர்களாக இருக்கிறார்கள். ஒரு புத்தகம் கூட வாங்க வசதியற்ற ஏழைகள் தான் பெரும்பான்மை. அவர்கள் யாழ் நகரில் உள்ள பொது நூலகத்தை பயன்படுத்தி அறிவைப் பெருக்கிக் கொள்ளலாம். பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் மட்டும் அங்கிருந்த நூலகத்தை பயன்படுத்தி பட்டம் பெற்ற பின்னர், பொதுவாக நூல்கள் வாசிப்பதையே நிறுத்தி விடும் மேட்டுக்குடி "அறிவு"ஜீவிகளுக்கு பொது நூலகத்தின் அருமை எங்கே தெரியப் போகிறது?

செல்லன் கந்தையா சமீபத்திய வீடியோ பேட்டியில் ஒரு உண்மையை கூறுகிறார். யாழ் நகரை அண்டி வாழும் வசதியற்ற தாழ்த்தப் பட்ட சாதியினருக்கு பொது நூலகம் ஒரு கொடை என்பதால் தான் அதை புனரமைக்க விரும்பியதாக கூறுகிறார். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த காரணத்தால் மூன்றாம் ஆண்டுடன் படிப்பை நிறுத்திய செல்லன் கந்தையா, கல்வியின் அருமையை உணர்ந்து வருங்கால சந்ததியின் நன்மை கருதி நூலகத்தை கட்டி இருக்கிறார். அப்படி ஒரு நூலகம் மக்களுக்கு தேவையில்லை என்பவர்கள் எப்படிப் பட்ட அயோக்கியர்களாக இருக்க வேண்டும்?

சில அறிவுஜீவிகளும் சாதிய வைரஸ் தொற்றினால் பாதிக்கப் பட்டுள்ளனர். "ஆதிக்க சாதியில் வசதி படைத்தவர்கள் மட்டும் கல்வியில் முன்னேறினால் போதும், ஒடுக்கப் பட்ட சாதியினரில் வசதியற்ற பிரிவினர் எக்கேடு கெட்டால் எனக்கென்ன?" என்ற மேட்டுக்குடி ஆணவம் தானே இப்படிப் பேச வைக்கிறது? ஆதிக்க சாதிய மனப்பான்மை கொண்டவர்கள் மட்டுமே "யாழ் மக்களுக்கு பொது நூலகம் தேவையில்லை" என்று கூறத் துணிவார்கள். சாதிவெறி பிடித்த எலிகள் அம்மணமாக ஓடிக் கொண்டிருக்கின்றன.

முடிவாக, யாழ் நூலக திறப்பு விழா பிரச்சினைக்கு பின்னால் இருந்தது சாதிப் பிரச்சினை மட்டுமல்ல, வர்க்கப் பிரச்சினையும் தான். இதை மறுப்பவர்கள் ஒன்றில் உயர் சாதிய, அல்லது உயர் வர்க்க பெருமிதம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இல்லாவிட்டால் அதிகார வர்க்கத்துடன் ஒத்தோடும் அடிமைகளாக இருக்கிறார்கள்.


No comments: