Monday, June 01, 2020

வட கொரிய உழைக்கும் மக்களுக்கான அழகான சோஷலிச கட்டுமானங்கள்

  சோஷலிச மாதிரிக் கிராமம்


வட கொரியாவின் நவீன சோஷலிச மாதிரிக் கிராமம் போமன் ரீ. அதன் சிறப்பம்சங்கள்: 
1. உழைக்கும் மக்களுக்காக அரச செலவில் இலவசமாக கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள். 
2. உழைத்துக் களைத்த உடல் புத்துணர்ச்சி பெறவும், பொழுதுபோக்கவும் கட்டப்பட்ட நீச்சல் தடாகம். அனுமதி இலவசம். 
3. குடியிருப்புகளுக்கு அருகாமையில் ஒரு மருத்துவமனை. மருத்துவ வசதிகள் அனைத்தும் இலவசம். 
4. தொழிலாளர்களின் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடம். கணணி வசதி கொண்ட நவீன வகுப்பறைகள். கல்வி முற்றிலும் இலவசம். 

 Poman-ri எனும் இந்த மாதிரிக் கிராமம் Sohung மாவட்டத்தில் உள்ளது. அது தென் கொரிய எல்லையோரம் உள்ள வட Hwanghae மாகாணத்தில் உள்ளது. கடந்த வருடம் திறந்து வைக்கப் பட்ட நவீன சோஷலிச மாதிரிக் கிராமம் பற்றிய மேலதிக தகவல்களை நீங்களாகவே இணையத்தில் தேடிப் பெற்றுக் கொள்ளலாம். 

சிறுவர் மாளிகை


இது வட கொரிய பள்ளிப் பிள்ளைகளுக்காக கட்டப் பட்ட "சிறுவர் மாளிகை". வட கொரிய சிறுவர்கள் பல்வேறு வகையான விளையாட்டுகளில் ஈடுபடவும், இசைக் கருவிகளை பழகவும், புதிய மொழிகளை கற்பதற்கும் வசதிகள் செய்து கொடுக்கப் பட்டுள்ளன. அதற்காக மாணவர்களிடம் எந்தக் கட்டணமும் வசூலிக்கப் படுவதில்லை. முற்றிலும் இலவசம். இந்த சிறுவர் மாளிகையை நடத்தும் நிர்வாகத்தில் உள்ளவர்களும் சிறுவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

வட கொரியா முழுவதும் ஒவ்வொரு மாகாணத்திலும் இது மாதிரி அறுபது சிறுவர் மாளிகைகள் உள்ளன. தலைநகர் பியாங்கியாங்கின் புறநகர் பகுதியான Mangyongdae இல் கட்டப்பட்டுள்ள இந்த மாளிகை எல்லாவற்றிலும் பெரியது. 1989 ம் ஆண்டு பியாங்கியாங் நகரில் நடந்த சர்வதேச மாணவர் இளைஞர் மகாநாட்டை ஒட்டி இந்த பிரமாண்டமான சிறுவர் மாளிகை திறந்து வைக்கப் பட்டது.

Mangyongdae சிறுவர் மாளிகையில் பள்ளிப் பிள்ளைகள் தங்குவதற்கான 120 அறைகள் உள்ளன. ஒரு நீச்சல் தடாகமும், திரையரங்கும் உள்ளன. அத்துடன் விஞ்ஞான பரிசோதனை சாலைகள், நட்சத்திரங்களை காணும் தொலைநோக்கிகள், நவீன தொழில்நுட்ப அறிவியல் போன்ற பல துறைகளிலும் சிறுவர்கள் செயல்முறைப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

வட கொரியாவுக்கு சுற்றுலா செல்லும் வெளிநாட்டுப் பயணிகள் கூட இந்த சிறுவர் மாளிகைக்கு நேரில் சென்று பார்க்கலாம். ஒரு சில மேற்கத்திய சுற்றுலா பயணிகள் இங்கு நடக்கும் சிறுவர்களின் நடன நிகழ்வை மட்டும் படமாக்கி விட்டு, அதை பிரச்சார நோக்கில் தவறாக பயன்படுத்துகிறார்கள். "இதோ பாருங்கள், வட கொரிய சர்வாதிகார மன்னராட்சி சிறுவர்களை கொடுமைப் படுத்துகிறது!" என்று திரித்து பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்கள் ஒருநாளும் அங்கிருக்கும் சிறுவர் மாளிகை பற்றிய தகவலை உங்களுக்கு சொல்லப் போவதில்லை.


தொழிலாளர்களுக்கான சுற்றுலா மையம்

Yangdok Hot Spring Resort in DPRK

இந்த ஆடம்பர சுற்றுலா விடுதி இருப்பது சுவிட்சர்லாந்தில் அல்ல, வட கொரியாவில்! மலைப் பகுதியான Yangdok எனும் இடத்தில் இந்த வெந்நீர் நீச்சல் தடாகங்களும், ஸ்கீ சறுக்கும் விளையாட்டு மைதானமும் அமைக்கப் பட்டுள்ளன. இவை சாதாரணமான தொழிலாளர்கள் தமது ஒய்வு நாட்களை உல்லாசமாக பொழுதுபோக்குவதற்காக கட்டப் பட்டுள்ளன.

ஒவ்வொரு வருடமும் சாதாரணமான வட கொரிய ஆலைத் தொழிலாளர்கள், தமது குளிர்கால விடுமுறைக் காலத்தில் இங்கே வந்து குடும்பத்தோடு தங்குகிறார்கள். மலையில் பனியில் ஸ்கீ சறுக்கி விளையாடி விட்டு வந்து, வெந்நீர் தடாகத்தில் குளித்து இன்பமாக பொழுதைக் கழிக்கிறார்கள். அவர்களது தங்குமிட செலவுகளில் பெரும்பகுதியை வேலை செய்யும் தொழிற்சாலையின் நிர்வாகம் பொறுப்பெடுக்கிறது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் கட்டிமுடிக்கப் பட்ட இந்த சுற்றுலா விடுதிகள் அதிபர் கிம் யொங் உண்ணால் திறந்து வைக்கப் பட்டது. அப்போது இதனை "உயர்ந்த சோஷலிச நாகரிகம்" என்று வட கொரிய ஊடகங்கள் புகழாரம் சூட்டின. வட கொரியா செல்லும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இங்கு சென்று தங்கலாம். Yangdok Hot Spring Resort என்று இணையத்தில் தேடிப் பார்க்கவும்.

1 comment:

Anonymous said...

ஆனால் அங்கே யாரும் இல்லையே?