Wednesday, November 15, 2017

சிம்பாப்வே இராணுவ சதிப்புரட்சி - பின்னணித் தகவல்கள்


சிம்பாப்வே தலைநகர் ஹராரேயில், இராணுவம் அரச கட்டிடங்களை கைப்பற்றியுள்ளது. ஆனாலும் "அது சதிப்புரட்சி இல்லையாம்!" என்று இராணுவத் தளபதி தெரிவித்தார். 93 வயதான ஜனாதிபதி முகாபேயும், அவரது குடும்பத்தினரும் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டுள்ளனர்.

சமீப காலங்களில் முகாபே சுகயீனமுற்று இருந்த படியால், தேசத்தின் உண்மையான நிர்வாகத்தை அவரது 52 வயதான மனைவி கிரேஸ் தான் கவனித்து வந்தார். முகாபே குடும்பத்தினர் முன்னிலைப் படுத்தப் பட்டதற்கு ஆளும் ZANU-PF கட்சிக்குள் அதிருப்தி இருந்ததையும் மறுக்க முடியாது.

கடந்த சில வாரங்களாக, சிம்பாப்வே ஆளும் கட்சிக்குள் களையெடுப்புகள் நடந்து வந்தன. "களையெடுப்பு தொடர்ந்தால் இராணுவ சதிப்புரட்சி நடக்கும்" என்று ஒரு இராணுவ ஜெனரல் நேற்றுத் தான் எச்சரித்து இருந்தார். இன்று நடந்துள்ள சதிப்புரட்சிக்கு பின்னால் யார் இருந்தார்கள் என்பதை ஊகித்தறிவது கடினமான விடயம் அல்ல.

நேற்று முன்தினம், திங்கட்கிழமை தான், துணை அதிபர் எமர்சன் (Emmerson Mnangagwa) பதவி விலக்கப் பட்டார். "அதிபர் பதவியை கைப்பற்ற சூனியம் செய்ததாக" முகாபே அவர் மீது குற்றம் சாட்டி இருந்தார். (ஆப்பிரிக்காவில் இன்றும் பல மக்கள் சூனியம் செய்வதை உண்மை என்று நம்புகிறார்கள்.) ஆகவே, துணை அதிபர் எமர்சன் "தனக்கு பாதுகாப்பு இல்லை" என்று கூறி, அன்றைய தினமே நாட்டை விட்டு வெளியேறி இருந்தார்.

சதிப்புரட்சி நடந்த தினமான இன்று, பதவியிறக்கப் பட்ட முன்னாள் துணை ஜனாதிபதி எமர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கி உள்ளார். அவரே சிம்பாப்வே ஆட்சியை பொறுப்பேற்று நடத்துவார் என ஊகிக்கப் படுகின்றது. "முகாபேயின் சர்வாதிகாரம் ஒழிந்தது" என்று மகிழ்ச்சி தெரிவிப்போர் ஒரு விடயத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.

இதே எமர்சன் தான் முகாபேயின் இரும்புக் கரமாக செயற்பட்டவர். பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக்கு எதிராக நடந்த விடுதலைப் போராட்டத்தின் போது, எமர்சன் முகாபேயின் நம்பிக்கைக்குரிய தோழராக இருந்தவர். சுதந்திர சிம்பாப்வே அரசில் எமர்சன் பாதுகாப்பு அமைச்சராக இருந்த காலத்தில் தான், 1983 ம் ஆண்டு, நிதேபெலே(Ndebele) இனப்படுகொலை நடந்தது.

சிம்பாப்வே தெற்கில் வாழும் நிதேபெலே மொழி பேசும் சிறுபான்மை இனத்தவர்கள், பெரும்பான்மை மொழியான ஷோனா பேசும் முகாபே அரசுக்கு அச்சுறுத்தலாக இருந்தனர். இது இரண்டு மொழிகளைப் பேசும் மக்களுக்கு இடையிலான இனப்பிரச்சினையாகவும் இருந்த படியால், அரச பயங்கரவாத நடவடிக்கை மூலமே அந்த மக்களை பணிய வைக்க முடிந்தது. 

அன்று குறைந்தது இருபதாயிரம் நிதேபெலே மக்கள் இனப்படுகொலை செய்யப் பட்டனர். இராணுவத்தின் ஐந்தாவது படைப்பிரிவான, குகுரஹண்டி (Gukurahundi) என்ற பெயர் தாங்கிய சிறப்புப் படையணியினரே படுகொலைகளில் ஈடுபட்டனர். ஷோனா மொழியில் குகுரஹன்டி என்றால் "குப்பைகளை ஒதுக்கும் மழை" என்று அர்த்தம். இதுவே அன்றைய இனப்பிரச்சினையின் தீவிரத் தன்மையை புரிய வைக்கப் போதுமானது.

சிம்பாப்வேயில் நடந்த இராணுவ சதிப்புரட்சியை, மேற்கத்திய நாடுகளும், அவற்றின் அடிவருடிகளும் ஆதரிப்பதாகத் தெரிகின்றது. பதவியிறக்கப் பட்ட ஜனாதிபதி ரொபேர்ட் முகாபே, அங்கு நடந்த பொதுத் தேர்தல்களில் மக்களால் தெரிவு செய்யப் பட்டவர். ஆனால், மேற்குலகம் முகாபேயை ஒரு "சர்வாதிகாரி" என்று சொல்கிறது! அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளருக்கு, மேற்குலகம் தாராளமாக உதவிய போதிலும் தேர்தலில் வெல்ல முடியவில்லை.

மேற்குலகின் பார்வையில் "சிம்பாப்வே மக்களால் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியை அகற்றி விட்டு, சதிப்புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றியுள்ள இனப்படுகொலையாளி" சிறந்த நண்பராக தெரிகிறார். ஆட்சியில் இருப்பது சர்வாதிகாரி, இனப்படுகொலையாளி யாராக இருந்தாலும், மேற்குலக பொருளாதார  நலன்கள் பாதுகாக்கப் பட்டால் சரி தானே?

சிம்பாப்வே நாட்டில் ஆயிரக் கணக்கான ஆங்கிலேய, டச்சு "விவசாயிகள்" வாழ்கிறார்கள். காலனிய காலத்தில் குடியேறிய அவர்களை விவசாய- தொழில் அதிபர்கள் என்று அழைப்பது தான் முறையானது. ஆயிரக்கணக்கான ஏக்கர்களை சொந்தமாக வைத்திருந்து, அவற்றில் புகையிலை பயிர் செய்து மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தனர். பதினேழு வருடங்களுக்கு முன்னர், "முன்னாள் விடுதலைப் போராளிகள்" வெள்ளையரின் நிலங்களை வன்முறை மூலம் பறித்து வந்தனர்.

தற்போது பதவியிறக்கப் பட்டுள்ள ரொபேர்ட் முகாபேயும் முன்னாள் போராளிகளின் நடவடிக்கையை ஆதரித்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த மேற்குலக நாடுகள் சிம்பாப்வேக்கு எதிராக பொருளாதாரத் தடை கொண்டு வந்தன. குறிப்பாக, அந்நாட்டின் பிரதான ஏற்றுமதிப் பொருளான புகையிலையை வாங்க மறுத்து வந்தன. அதனால், சிம்பாப்வே பொருளாதாரம் பாதாளத்தை நோக்கி சென்றது. அதன் பணம் மதிப்பிறங்கி செல்லாக் காசாகியது. இதனால் அந்நிய நாணயங்களை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டது.

அட்சி மாற்றத்தின் பின்னர் இராணுவ சதிப்புரட்சியாளர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. முகாபேயின் மனைவியும் அரசியல் வாரிசுமான கிரேஸ் முகாபேயின் ஆதரவாளர்கள் வேட்டையாடப் படுகின்றனர். அதைத் தவிர நிலைமை சுமுகமாக உள்ளது. பொது மக்கள் தமது அன்றாட கடமைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம், அங்கு நடந்த சதிப்புரட்சிக்கும் தமக்கும் சம்பந்தம் இல்லை என்பதையும் மக்கள் உணர்த்தி உள்ளனர். 


சிம்பாப்வே தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 
எனது முன்னைய பதிவுகளையும் வாசிக்கவும் :

No comments: