Tuesday, September 27, 2016

தோழர் என்று அழைக்க மறுப்பவன் ஒரு தமிழனாக இருக்க மாட்டான்!


புலிகள் யாரையும் தோழர் என்று அழைத்ததே இல்லையாம். அதனால் தோழர் என்பதே கெட்ட வார்த்தை என்பது போன்று சில தற்குறிகள் உளறுகின்றன. விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகள் மத்தியில், தோழர் என்று அழைத்துக் கொள்ளும் வழக்கம் இருக்கவில்லை. அது உண்மை தான். ஆனால், அதற்காக அவர்கள் குறிப்பிடும் காரணங்கள் அபத்தமானவை. படு முட்டாள்தனமானவை.

"புலிகளுக்கு எதிராக இயங்கிய ஒட்டுக்குழுக்கள் தோழர் என்று சொல்லிக் கொண்டதால் அந்த வார்த்தை தரக்குறைவாக கருதப்பட்டது(?)" என்று தொண்ணூறுகளுக்கு பிறகு இயக்கத்தில் சேர்ந்தவர்களும், ஆதரிப்பவர்களும் சொல்லித் திரிகின்றனர். அது ஒரு கலப்படமற்ற பொய். சிங்கள இராணுவத்தில் அதிகாரிகளை ஐயா என்றும், சக போர்வீரர்களை அண்ணா, தம்பி என்றும் சொல்லிக் கொள்வதால், இவர்கள் யாரையும் ஐயா, அண்ணா, தம்பி என்று அழைக்க மாட்டார்களாம்! நல்லாவே காதுல பூச் சுத்துறாங்க.

1986 ம் ஆண்டுக்குப் பிறகு தான் ஒட்டுக்குழுக்கள் தோன்றின. அதற்கு பல வருடங்களுக்கு முன்பே புலிகள் இயக்கத்தவர்கள் தோழர் என்பதற்கு பதிலாக அண்ணா, தம்பி என்று உறவுமுறையில் அழைத்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது. அது தமிழரசுக் கட்சிக் காலத்தில் இருந்து தொடர்ந்து வரும் வழக்கம். புலிகளும் அப்படியே பின்தொடர்ந்து வந்தனர். டெலோ இயக்கத்திலும், தோழர் என்பதற்குப் பதிலாக சகோதர முறை சொல்லும் வழக்கம் இருந்தது.

சுருக்கமாக சொன்னால், இது நிலப்பிரபுத்துவ பண்பாட்டில் உருவான வழக்கம். ஈழத் தமிழர்கள் மத்தியிலும் நிலப்பிரபுத்துவ பண்பாட்டுக் கூறுகள் இன்னும் மறையவில்லை. பெரியவர்களை ஐயா, அம்மா என்று சொல்லும் வழமை உள்ளது. ஐரோப்பியர்களுக்கு அது புதினமாகத் தெரியும். அவர்கள் பெற்ற தாயை தவிர வேறு யாரையும் அம்மா என்று அழைப்பதில்லை. அதே மாதிரி ஐரோப்பியர்கள் சொந்த சகோதரர்களை தவிர, வேறு யாரையும் சகோதர முறை கொண்டு அழைப்பதில்லை.

ஆனால், தமிழரின் பண்பாடு முற்றிலும் வேறுவிதமானது. வயதில் மூத்தவர்களை அண்ணா, அக்கா என்றும், இளையவர்களை தம்பி, தங்கச்சி என்றும் அழைப்பது, நிலப்பிரபுத்துவ காலத்தில் இருந்து தொடர்ந்து வரும் பாரம்பரியம். அதை புலிகள் கண்டுபிடிக்கவில்லை. மாறாக, "பழமைவாதம் பேணுவதை புலிகள் தடுக்கவில்லை" என்று சொல்வது தான் சரியாக இருக்கும்.

தமிழ் மொழியில் தோழர் என்றொரு சொல் இருக்கிறது. அதற்கெனத் தனியாக அர்த்தம் இருக்கிறது என்பதை பலர் அறிந்து வைத்திருக்கவில்லை. பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிப்பவர்களை, தொழிலகத்தில் சேர்ந்து வேலை செய்பவர்களை தோழர் என்று அழைக்கலாம். அதாவது குறிப்பிட்ட இலக்கிற்காக, ஒரே இடத்தில் சேர்ந்து உழைப்பவர்கள் தான் தோழர்கள். அது பள்ளிக்கூடமாக, தொழிலகமாக மட்டுமல்ல, ஒரு ஆயுதபாணி இயக்கமாகக் கூட இருக்கலாம்.

ப‌ள்ளிக்கூட‌த்தில் ஒன்றாக‌ப் ப‌டித்த‌வ‌ர்க‌ளை ப‌ள்ளித் "தோழ‌ர்க‌ள்" என்று அழைக்கும் வழமை த‌மிழ் மொழியில் உள்ளது. தமிழ்ச் சமூகத்தில் பரவலாக பயன்பாட்டில் உள்ளது. ஆனால், அந்த‌ வார்த்தையை பாவிக்க‌ மாட்டேன் என்று அட‌ம்பிடிப்ப‌து முட்டாள்த‌ன‌ம். தோழர் என்று அழைக்க மறுப்பவன் நிச்ச‌ய‌ம் ஒரு த‌மிழ‌னாக‌ இருக்க‌ மாட்டான். (தமிழ்த்) தேசியவாத அரசியல் கொள்கையின் படியும், தோழர் என்று அழைப்பது தான் சரியானது. இதை மறுப்பவர்கள் தமிழ்த்தேசியவாதிகள் அல்ல. மாறாக, மத அடிப்படைவாதிகள் அல்லது பழமைவாதிகள்.

தந்தையை "ஐயா" என்று அழைப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால், தமிழ்மொழியில் அதற்கு அப்பா என்ற அழகான சொல் இருக்கிறது. நீங்கள் ஐயா என்று அழைப்பதால், அவர் உங்கள் அப்பா இல்லை என்று ஆகிவிடுமா? ஐயா என்பது நிலப்பிரபுத்துவ பண்பாட்டில் உருவான சொல். அப்பா என்பது ஒரு உறவுமுறையைக் குறிக்கும் தமிழ்ச் சொல். அது மட்டுமே வித்தியாசம். சக போராளிகளை தோழர் என்று அழைப்பதற்கும், சகோதர முறை சொல்லி அழைப்பதற்கும் இடையிலான வித்தியாசமும் அது தான்.

தாலிபான், அல்கைதா, ஐ.எஸ். போன்ற‌ இஸ்லாமிய‌ ம‌த‌ அடிப்ப‌டைவாத‌ இய‌க்க‌ங்க‌ளிலும், போராளிக‌ள் ஒருவ‌ரையொருவ‌ர் ச‌கோத‌ர‌ர் முறை சொல்லித் தான் அழைப்பார்க‌ள். அவ‌ர்க‌ளும் தோழ‌ர் என்ற‌ சொல்லைப் பாவிப்ப‌தில்லை.

ஒரு கூலிப்படையான சிங்கள இராணுவத்திலும், போர்வீரர்கள் ஒருவரையொருவர் அண்ணா, தம்பி என்று தான் அழைத்துக் கொண்டார்கள். ஏனென்றால், அது அதிகார அடுக்குகள் கொண்டு அமைக்கப் பட்ட மரபுவழி இராணுவம். அதனால் அதற்குள் தோழர் என்று அழைப்பதற்கு அனுமதிக்கப் படவில்லை.

புலிகள் போன்றதொரு விடுதலை இயக்கம் கூலிப்படை அல்ல. அது அரச படை அல்ல. அதன் போராளிகள் ஒருவருக்கொருவர் தோழர்கள் தான். தமிழ் மொழியில் அதற்கு வேறு சொல் கிடையாது. இதை மறுப்பது அறியாமை.

விடுதலைப் புலிகள் "தோழர்" என்று அழைத்துக் கொள்ளும் வழக்கம் இருந்திரா விட்டாலும், இயக்கப் போராளிகள் ஒருவருக்கொருவர் தோழர்கள் தான். அதை மறுக்க முடியாது. நண்பன் வேறு, தோழன் வேறு. ஒரு இயக்கத்தின் சக போராளி நண்பன் அல்ல, தோழன்! அந்த வகையில் புலிப் போராளிகளும் தோழர்கள் தான். தமிழ் மொழியில் தோழர் என்ற சொல்லுக்கு வேறு அர்த்தம் கிடையாது.

இந்த உண்மை தெரியாத அறிவிலிகள், தோழர் என்ற சொல்லுக்கு உலகில் இல்லாத வியாக்கியானங்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பாவில் இயங்கிய வலதுசாரி- தேசியவாத அமைப்புகளிலும் தோழர் என்று சொல்லிக் கொள்ளும் வழக்கம் இருந்தது. மாறாக, அரச படைகள் மட்டுமே தோழர் என்று சொல்லிக் கொள்வதில்லை.

அதிகாரப் படிநிலையை வலியுறுத்துவதற்காக, பூர்ஷுவா மரபில் வந்த இராணுவத்திற்குள் அந்தச் சொல்லை அனுமதிப்பதில்லை. சிங்கள இராணுவத்திலும் தோழர் என்று சொன்னால் பிடிக்காது. புலி இயக்கப் போராளிகள், அண்ணா, அக்கா, தம்பி, தங்கை என்று சகோதர முறை சொல்லி அழைத்ததை, தோழர் என்ற சொல்லுக்கான பதிலீடாகக் கருதுவது அறிவீனம்.

அநேகமாக, சகோதர முறை கொண்டு அழைப்பது, கீழைத்தேய பழமைவாத மரபில் வந்த வழக்கம். உதாரணத்திற்கு, இஸ்லாமிய அல்லது கிறிஸ்தவ மதவாத அமைப்புகளுக்குள், ஒருவரையொருவர் சகோதர முறையில் அழைக்கும் வழக்கம் உள்ளது. அவர்களும் தோழர் என்ற வார்த்தையை பிரயோகிக்க மாட்டார்கள்.

"தோழர்" : இன்று பலரும் அர்த்தம் தெரியாமல் பாவிக்கும் சொற்களில் இதுவும் ஒன்று. நீங்கள் ஒருவரை தோழர் என்று அழைக்கும் நேரம், சமத்துவமான சமுதாயத்தை ஏற்றுக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம். "ஐயா... அம்மா..." என்று போலியான மரியாதையை எதிர்பார்க்கும், சாதிய சமூகத்தை நிராகரிக்கிறீர்கள் என்று அர்த்தம்.

நண்பன் என்ற அர்த்தம் தந்தாலும், தோழர் என்பது அதற்கும் மேலானது. இன்பத்திலும், துன்பத்திலும், இணை பிரியாத நட்பை உயிரினிலும் மேலானதாக மதிப்பவனே தோழன். பலர் தவறாக நினைப்பது போல, தோழர் என்பது கம்யூனிஸ்டுகளின் தனிச் சொத்து அல்ல. உலகம் முழுவதும் பல்வேறு பட்ட இடதுசாரி அமைப்புகள் அந்த வார்த்தையை பயன்படுத்தி வருகின்றன.

பாஸ்டில் சிறை தகர்த்து, மன்னராட்சிக்கு சமாதி கட்டிய பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக தோன்றிய அரசியல் கலைச்சொல் "தோழர்".

இனிமேல் யாரையும் "மேன்மை தங்கிய, மாட்சிமை பொருந்திய, மேதகு, ஐயா, அம்மா, திரு, திருமதி, என்றெல்லாம் அழைக்கத் தேவையில்லை. எல்லோரும் சமமான பிரஜைகள்" என்ற கொள்கை அடிப்படையில் பிறந்த வார்த்தை தான்: "தோழர்."

பிரெஞ்சுப் புரட்சியாளர்கள் ஒருவரையொருவர் சிட்டுவாயோன் (citoyen : பிரஜை) என்று அழைத்தனர். இடதுசாரி சோஷலிஸ்ட் புரட்சியாளர்கள் "காமராட்" (தோழர்) என்ற வார்த்தையை தேர்ந்தெடுத்தார்கள்.

பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக தோன்றிய சித்தாந்தம் தான் "தேசியவாதம்". ஆகவே, தமிழ்த் தேசியவாதமும் அந்தப் பாரம்பரியத்தை கொண்டுள்ளது. அதற்கு மாறாக பலர் இன்று தமிழ்த் தேசியத்தை, நிலப்பிரபுத்துவ பழமைவாதமாக புரிந்து கொள்கிறார்கள். அதன் விளைவாக பல தவறான கருத்துக்கள் உருவாகின்றன.

ஆப்கானிஸ்தானில் தாலிபான் இயக்கம், இஸ்லாம் என்ற பெயரில் கொண்டு வந்ததும் அதே கொள்கை தான். அவர்கள் ஆப்கானியரின் நிலப்பிரபுத்துவ கால பழமைவாத பழக்க வழக்கங்களுக்கு "இஸ்லாமிய பண்பாடு" என்று தவறான விளக்கம் கொடுத்து வந்தனர். அதே மாதிரியான போக்கு தான் தமிழ்த் தேசிய அரசியல் பேசுவோர் மத்தியிலும் காணப் படுகின்றது.



இது தொடர்பான முன்னைய பதிவுகள்:
"தோழர் பிரபாகரன்!" : புலிகளை கொச்சைப் படுத்தும் மே பதினேழின் புதிய சர்ச்சை

No comments: