Tuesday, August 30, 2016

மலேசிய தமிழினப் படுகொலையும் நேதாஜியின் ஒட்டுக்குழுவினரின் துரோகமும்


வ‌ர‌லாற்றில் ப‌திய‌ப் ப‌டாத‌ ம‌லேசிய‌த் த‌மிழினப் ப‌டுகொலை! இர‌ண்டாம் உல‌க‌ப்போர்க் கால‌த்தில், ம‌லேசியாவை ஆக்கிர‌மித்த‌ ஜ‌ப்பானிய‌ப் ப‌டையின‌ர், ம‌லேசிய‌த் த‌மிழ‌ர்க‌ளை கொத்த‌டிமைக‌ளாக‌ ப‌ய‌ன்ப‌டுத்தி, ச‌யாம் - ப‌ர்மா ர‌யில் பாதை அமைத்த‌ன‌ர். க‌டுமையான‌ வேலைப் ப‌ளு, ஜ‌ப்பானிய‌ அதிகாரிக‌ளின் சித்திர‌வ‌தைக‌ள் கார‌ண‌மாக‌ ஒன்றரை இல‌ட்ச‌ம் த‌மிழ‌ர்க‌ள் கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர். இத‌னால் ம‌லேசிய‌த் த‌மிழ‌ர்க‌ளின் எண்ணிக்கை க‌ணிச‌மான‌ அள‌வு குறைந்த‌து.

தமிழர்கள் மட்டுமல்லாது, பர்மியர்கள், மலேயர்கள், மற்றும் சிறைப்பிடிக்கப் பட்ட ஐரோப்பியர்களும், ஜப்பானியரால் கட்டாய வேலை வாங்கப் பட்டனர். அன்று நடந்த இனப்படுகொலையில் பல்லின மக்கள் கொல்லப் பட்டனர். ஆனால், பலியான தமிழர்களின் எண்ணிக்கை மற்றைய இனத்தவரை விட பல மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது. ஐரோப்பிய சிறைக் கைதிகள் பற்றிய தகவல்கள், The Bridge on the River Kwai என்ற ஹாலிவூட் திரைப்படம் மூலம் உலகம் முழுவதும் தெரிய வந்தன. ஆனால், தமிழர்கள் பற்றிய தகவல்கள் பல தசாப்த காலமாக மறைக்கப் பட்டு வந்துள்ளன. (The real Kwai killed over 1.50 lakh Tamils

இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில், ஜப்பானியப் படைகள் மலாயா தீபகற்பத்தையும், சிங்கப்பூரையும் ஆக்கிரமித்திருந்தன. ஜப்பானிய படையினர் ஆரம்ப காலங்களில் ஐரோப்பியர்களை சிறைப்பிடித்து சித்திரவதை செய்து வந்தனர். அதற்கு அடுத்த படியாக சீனர்களை துன்புறுத்தினார்கள். 

மலேசியாவை ஆண்டு வந்த பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களை அகற்றி விட்டு, அந்த இடத்தில் ஜப்பானியர்கள் ஆதிக்கம் செலுத்தினர். அதைத் தமது தேசிய இன விடுதலையாக கருதிய மலே பெரும்பான்மை சமூகத்தினர், குறிப்பாக சுல்த்தான்கள், மலே தேசியவாதிகள், இஸ்லாமியவாதிகள் ஆகியோர் ஜப்பானியருடன் ஒத்துழைத்தனர். 

இந்திய கூலித் தொழிலாளர்கள், மேற்குறிப்பிட்ட எந்தப் பிரிவுக்குள்ளும் அடங்கவில்லை. அதனால் தான் சயாம் - பர்மா ரயில்பாதைத் திட்டத்திற்கு தமிழர்களை அழைத்துச் சென்றனர். தமிழ்க் கூலித் தொழிலாளர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை தருவதாக ஆசை வார்த்தை காட்டித் தான் கூட்டிச் சென்றனர். 

காட்டு மிருகங்கள் மாதிரி வேட்டையாடப் பட்டு, பலவந்தமாக பிடித்துச் செல்லப் பட்டவர்களும் உண்டு. அனேகமாக ஓர் ஆண் குடும்ப உறுப்பினர் பிடித்துச் செல்லப் பட்டால், கூடவே முழுக் குடும்பமும் சென்றது. அதைத் தவிர, ஜப்பானிய இராணுவப் - பொலிசார் ரோந்து நடவடிக்கைகளின் போது அகப்பட்ட இளைஞர்களையும் கட்டாய வேலை செய்ய அனுப்பினார்கள்.

சயாம் - பர்மா ரயில் பாதை அமைக்கும் பணிகளுக்கு, இலட்சக் கணக்கான இந்தியர்கள் அடிமைகளாக பிடித்துச் செல்லப் பட்ட நேரம், இந்திய விடுதலைக்காக போராடிய இந்திய தேசிய இராணுவம் என்ன செய்து கொண்டிருந்தது? 

இந்திய தேசிய இராணுவம் அமைப்பதற்கு ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர்கள் உறுதுணையாக இருந்தார்கள். அதன் தலைவர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ், ஜப்பானியரின் அரவணைப்பில் சுதந்திர மனிதனாக வாழ்ந்து வந்தார். மலேயாவில் திரட்டப் பட்ட போராளிகளுடன் பர்மா - இந்தியா எல்லையை நோக்கி சென்று கொண்டிருந்தார். அங்கிருந்து தான், பிரிட்டிஷ் படைகளுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்கள் நடத்தப் பட்டன.

அதாவது, ஒரு பக்கம் ஜ‌ப்பானிய‌ர்க‌ளினால் ம‌லேசிய‌த் த‌மிழ‌ர்க‌ள் இன‌ப்ப‌டுகொலை செய்ய‌ப் ப‌ட்ட‌ நேர‌ம், நேதாஜி சுபாஸ் ச‌ந்திர‌போஸ் அதே ஜ‌ப்பானிய அட‌க்குமுறையாள‌ர்க‌ளுட‌ன் கூடிக் குலாவினார். இந்திய‌ தேசிய‌ இராணுவ‌ம் பர்மா எல்லையை நோக்கிய படை நகர்வுகளுக்கு, த‌மிழ் அடிமை உழைப்பாளிக‌ள் க‌ட்டிய‌, சாலைகள், ரயில் பாதைகளை ப‌ய‌ன்ப‌டுத்திய‌து. அப்போது அந்த சாலையும், ரயில்பாதையும் இந்தியத் தமிழர்களின் அடிமை உழைப்பால் உருவானவை என்ற எண்ணம் நேதாஜியின் மனதை உறுத்தவில்லை.

த‌ன‌து க‌ண்ணெதிரில் ந‌ட‌ந்த‌ த‌மிழ் இன‌ப்ப‌டுகொலையை க‌ண்டுகொள்ளாம‌ல் புறக்க‌ணித்த‌, பாசிச‌ இன‌ப் ப‌டுகொலையாளிக‌ளுட‌ன் கைகோர்த்த‌ நேதாஜியை த‌லையில் தூக்கிக் கொண்டாடும் த‌மிழ‌ர்க‌ள் இன்றைக்கும் இருக்கிறார்க‌ள். அவ‌ர்க‌ள் எந்த‌க் கூச்ச‌மும் இன்றி த‌ம்மை "த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள்" என்றும் அழைத்துக் கொள்கிறார்க‌ள்!

முள்ளிவாய்க்கால் இன‌ப்ப‌டுகொலையை எதிர்த்து ஆர்ப்பாட்ட‌ம் செய்யும் த‌மிழ் உண‌ர்வாள‌ர்க‌ள் வ‌ழ‌மையாக‌ ஓர் உண்மையை ம‌றைப்பார்க‌ள். வ‌ன்னியில் கொல்ல‌ப் ப‌ட்ட‌ த‌மிழ‌ர்க‌ளில் பெரும்பான்மையின‌ர் தாழ்த்த‌ப் ப‌ட்ட‌ சாதியினர், மலையகத் தமிழர்கள் அல்ல‌து அடித்த‌ட்டு ம‌க்க‌ள்.

ச‌யாம் - ப‌ர்மா ம‌ரண‌ ர‌யில்பாதை அமைக்கும் பணியில் கொல்ல‌ப் ப‌ட்ட‌ ம‌லேசிய‌த் த‌மிழ‌ர்க‌ளில் பெரும்பான்மையானோர் தாழ்த்த‌ப் ப‌ட்ட‌ சாதியின‌ர் அல்ல‌து இழப்பதற்கு எதுவுமற்ற பாட்டாளி வர்க்க ம‌க்க‌ள். ம‌லேசிய‌த் த‌மிழ‌ரில் வ‌ச‌தியான‌வ‌ர்க‌ளும், ஆதிக்க சாதியின‌ரும், நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து ஜ‌ப்பானிய‌ ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர்களுடன் ஒத்துழைத்த‌ன‌ர். அதனால் இனப்படுகொலைக்குள் அகப்படாமல் தப்பி விட்டனர். இவர்கள் மட்டுமா தப்பினார்கள்? மலேசிய சிங்களவர்களும் தான் தப்பிப் பிழைத்தனர். அந்தச் சிங்களவர்களும் வசதியான ஆதிக்க சாதியினர் தான். சாதியும், வர்க்கமும் சரியாக அமைந்து விட்டதால் இனப்படுகொலையில் இருந்து தப்பிப் பிழைத்து விட்டனர்.

நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் சிங்களவர்களும் சேர்ந்திருந்தனர்! (Sinhalese who Fought with the National Army of ‘Netaji’ Subhash Chandra Bose against Britainhttp://dbsjeyaraj.com/dbsj/archives/9596) அன்று மலேயாவில் கணிசமான அளவு சிங்களவர்களும் வாழ்ந்து வந்தனர். எண்ணிகையில் குறைவாக இருந்தாலும், இலங்கையில் இருந்து சென்ற சிங்களவர்களும், ஈழத் தமிழர்களும், மலேசியாவில் ஓரளவேனும் வசதியாக வாழ்ந்தனர். அவர்கள் யாரும் இந்தியத் தமிழர்கள் மாதிரி கூலித் தொழிலாளராக செல்லவில்லை. பெருந்தோட்டங்களில் சிங்கள அல்லது ஈழத் தமிழ் மேற்பார்வையாளர்கள் அமர்த்தப் பட்டிருந்தனர். அது அன்றிருந்த பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குள் அடங்கும்.

சிங்களவர்கள் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்வதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவது காரணம் தேசிய விடுதலைப் போராட்டக் கொள்கை. இந்தியா விடுதலை அடைந்தால், இலங்கையையும் விடுதலை செய்து விடலாம் என்று நினைத்தனர். மற்றைய காரணம் சந்தர்ப்பவாதம். இதை கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். 

அந்தக் காலகட்டத்தில், ஜப்பானியர்கள் பிரித்தானியாவுக்கு ஆதரவானவர்கள் என்ற சந்தேகத்தில் பலரின் தலைகளை வெட்டி பொது இடங்களில் பார்வைக்கு வைத்தனர். பிபிசி வானொலி கேட்ட சிங்களவர் ஒருவரும் கொல்லப் பட்டார். அதற்குப் பிறகு மலேயா சிங்களவர்கள் இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்து கொள்வது பாதுகாப்பானது எனக் கருதினார்கள். மரண ரயில் பாதை அமைக்கும் வேலைக்கும் செல்லத் தேவையில்லை. நேதாஜிக்கு ஜப்பானியரிடம் இருந்த செல்வாக்கு தெரிந்த விடயம் தானே?

இந்திய தேசிய இராணுவத்தில் இருந்த சிங்கள வீரர்களுக்கு கொத்தலாவல என்பவர் தலைமை தாங்கினார். யார் இவர்? இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் சில வருட காலம் பிரதமராக பதவி வகித்த சேர் ஜோன் கொத்தலாவலையின் மைத்துனர். சிங்கள மேட்டுக்குடி உறுப்பினர். கொவிகம (வெள்ளாளர்) உயர் சாதியை சேர்ந்தவர். காலனிய எஜமானர்களையும், முதலாளித்துவத்தையும் ஆராதிக்கும் தீவிர வலதுசாரிக் குடும்பத்தை சேர்ந்தவர். இந்திய தேசிய இராணுவத்தில் இணைவதற்கு இத்தனை தகுதிகள் போதாதா? இனம் இனத்தோடு தானே சேரும்? நேதாஜியும், கொத்தலாவலையும், ஜப்பானியர்களும் ஒன்று சேர்வதற்கு அடிப்படைக் காரணம் பாஸிசம் அல்லாமல் வேறென்ன?

பாஸிஸ‌ம் என்ப‌து இருப‌தாம் நூற்றாண்டில் உல‌க‌ம் முழுவ‌தும் பர‌விய‌ அர‌சிய‌ல் கோட்பாடு. வ‌ர்க்க‌, சாதிய‌ முர‌ண்பாடுக‌ளை புற‌க்க‌ணித்து இன‌த்தின் அல்ல‌து தேசிய‌த்தின் பெய‌ரில் ஒன்று சேர‌க் கோருகின்ற‌து. ஜ‌ப்பானிய‌ பாஸிஸ்டுக‌ளுட‌ன் ஒத்துழைத்த‌, நேதாஜி எவ்வாறு தூய்மையான‌வ‌ராக‌ இருக்க‌ முடியும்? நேதாஜி ஏற்க‌ன‌வே ஹிட்ல‌ருட‌ன் கைகோர்த்த‌வ‌ர் தானே?

ஈழ‌த்தில் சிங்க‌ள‌ இராணுவ‌த்துட‌ன் ஒத்துழைத்த‌ த‌மிழ் துணைப்ப‌டையின‌ரை "ஒட்டுக் குழுக்க‌ள்" என்கிறார்க‌ள். அப்ப‌டிப் பார்த்தால், நேதாஜியின் இந்திய‌ தேசிய‌ இராணுவ‌மும் அதே மாதிரியான‌ ஒட்டுக்குழு தான்.

ம‌லேசிய‌ த‌மிழின‌ப் ப‌டுகொலை இவ்வ‌ள‌வு கால‌மும் ம‌றைக்க‌ப் ப‌ட்ட‌த‌ன் பின்னணிக் கார‌ண‌மும் அது தான். இன்றைக்கும் மேல்தட்டு வ‌ர்க்க‌த்தின‌ர், சாதிமான்க‌ள் நேதாஜியை நாய‌க‌னாக‌ ஏற்றுக் கொள்கின்ற‌ன‌ர். அதே நேர‌ம், இன‌வ‌ழிப்பில் ப‌லியான‌ அடித்த‌ட்டு, தலித் த‌மிழ‌ர்க‌ளின் இழ‌ப்பு அவ‌ர்க‌ளை உலுக்கி இருக்க‌வில்லை.

இன‌ உண‌ர்வை விட‌ சாதிய‌ - வ‌ர்க்க‌ உண‌ர்வுக‌ள் உறுதியான‌வை. கால‌ங்க‌ட‌ந்தும் நிலைத்து நிற்கும்.

3 comments:

Anonymous said...

ஹிட்லரின் அச்சு நாட்டு படையில் உருப்பினராக இருந்ததுதான் நேதாஜியின் இந்திய தேசிய இரானுவம்..அதே நேரத்தில் ஹிட்லரின் அச்சு அணியை கடுமையாக எதிர்த்தவர் பண்டிட் நேரு மற்றும் அம்பேத்கர். ஜப்பானின் படை பிரிட்டீஸ் கட்டுப்பாட்டில் இருந்த அந்தமானிலும் பல படுகொலைகளை செய்துள்ளனர்.
.

புலியூரான் ராஜா said...

இது போன்ற மறைக்கப்பட்ட வரலாறுகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவரவேண்டும்.

Rajendran said...

இது போன்ற நிகழ்வுகளை பதிவு செய்த உங்களுக்கு மிகவும் நன்றி! உண்மைகள் வெளியாக வேண்டிய தேவை இப்போது!