Sunday, September 25, 2016

சிங்களவரின் சாதிவெறியை மறைக்கும் தமிழ் அறிவுஜீவிக் கோமாளிகள்


தமிழ்த் தேசிய போலிகள், ஈழத் தமிழர் மத்தியில் சாதிகளே இல்லை என்று மூடி மறைப்பது தெரிந்த விடயம். ஆனால், சிங்களவர் மத்தியிலும் சாதியில்லை என்று மறைக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது? அதுவும் சிங்கள இனவாதம் பேசிய அரசியல்வாதியின் சாதிய பின்னணியை மறைக்க வேண்டிய காரணம் என்ன? எங்கேயோ உதைக்கிறதே?

"ராஜபக்சே குடும்பத்தில் யாழ்ப்பாணத் தமிழ் உறவினர்கள்" (http://kalaiy.blogspot.nl/2016/09/blog-post_23.html) என்ற தலைப்பின் கீழ் நான் எழுதிய கட்டுரைக்கு எதிர்வினையாற்றும் வகையில், Mynthan Shiva என்பவர் தனது முகநூல் பக்கத்தில் கிண்டலான பதிவிட்டுள்ளார். அது மேலெழுந்தவாரியாக பார்த்தால் என்னை தனிப்பட்ட முறையில் தாக்குவதாகத் தெரியும். ஆனால், உண்மை அதுவல்ல. சிங்கள சமூகத்தில் உள்ள சாதிய பாகுபாட்டையும், தீண்டாமையையும் மூடி மறைக்கும் குள்ளநரித்தனம் அதற்குள் ஒளிந்திருக்கிறது.மைந்தன் சிவாவின் நக்கலான பதிவு : 

//நம்ம கமூனிஸ்ட் கலை அண்ணன் செமையா காமெடி பண்ணுவார்ங்கிறது தெரிஞ்ச விசயம்..இன்னிக்கு புதுசா ஒரு குண்டை தூக்கிப்போட்டார். என்னடான்னு பாத்தா, "விமல் வீரவன்ச ஒரு தமிழர் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?" பயபுள்ள எங்கினயும் வாசிச்சு ஏதாச்சும் லிங் குடுக்கும்னு போய் பாத்தா, "விமலோட மூதாதையர் இந்தியால இருந்து வந்தாங்க.அதால அவர் தமிழர்.!" இதுதான் அவரோட வாதம். ஆதாரம்? அட அதான் அண்ணன் சொல்றார்லே? அப்புறம் என்ன ஆதாரம் வேண்டிக் கிடக்கு? ஆமா,அப்பிடி பாக்கப்போனா இலங்கையில இயக்கர் நாகர் தவிர மிச்ச சொச்சமெல்லாம் தமிழர்தானேய்யா! இன்னும் கொஞ்சம் பின்னாடி போய் கிண்டிப் பாத்தா மொத்தமா எல்லாரும் குரங்குகள் தானேப்பா..இதுக்கேன் இந்த ஆராய்ச்சி :) // (https://www.facebook.com/mynthan/posts/10210725862562610?pnref=story)

ஆதாரம் காட்டுவதற்கு எந்த இணைப்பும் தரவில்லை என்று புலம்பும் இவர், எனது கட்டுரைக்கான இணைப்பை கொடுத்தாரா? அவ்வாறு இணைப்புக் கொடுத்து விமர்சித்தால், அவரை பின்பற்றுவோரை அறியாமைக்குள் வைத்திருக்க முடியுமா? அவரது கிண்டல் பதிவுக்கு விருப்புக்குறியிட்டோர் பெரும்பாலும் அவரைப் போன்று சொகுசாக வாழும் மத்தியதர வர்க்க அறிவுஜீவிகள் தான். தமிழீழமே உயிர்மூச்சு என்று வாழும் தீவிர தமிழ்த்தேசியவாதிகளும் அதற்குள் அடக்கம்.

மைந்தன் சிவா ஒரு பூர்ஷுவா வர்க்கப் பிரதிநிதி. முதலாளித்துவத்திற்கு சேவை செய்வதை பெருமையாகக் கருதும் லிபரல்வாதி. பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் மடிப்புக் குலையாத சட்டையுடன் குளிரூட்டிக்குள் வேலை செய்யும் அறிவுஜீவித் தமிழர். மாதம் ஏழாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் அடிமட்டத் தொழிலாளர் வாழும் கொழும்பு நகரில், நாற்பதாயிரம் ரூபாய்க்கு குறையாமல் சம்பளம் எடுக்கும் நடுத்தர வர்க்க இளைஞர்.

இதை இங்கே குறிப்பிட வேண்டிய அவசியம் உள்ளது. அப்படியான சமூகப் பின்னணியை கொண்டவர்கள் கம்யூனிசத்தை வெறுப்பதில் ஆச்சரியம் இல்லை. என்னுடைய கட்டுரைகள் அவருக்கு எரிச்சலூட்டுவதிலும் வியப்பில்லை.

சிங்கள இனத்தவர் மத்தியில் சாதி இல்லை என்று மறுப்பதற்கும், சிங்கள இனவாதியின் தமிழக பூர்வீகத்தை மறைப்பதற்குமான அரசியல் அவரது வர்க்க உணர்வில் இருந்து தான் பிறக்கிறது. ஒரே நாட்டில் சொகுசாக வாழும் மேட்டுக்குடி வர்க்கத்தினர், தமக்குக் கீழே வாழும் அடித்தட்டு உழைக்கும் வர்க்க மக்களின் வாழ்வியல் குறித்து அக்கறை செலுத்துவதில்லை. இன்னும் சொல்லப் போனால் தாம் வாழும் சமூகத்தில் வர்க்க வேறுபாடு இல்லை என்று வாதாடுவார்கள். அப்போது தானே தமது மேலாண்மையை தக்க வைத்துக் கொள்ள முடியும்? மேட்டுக்குடி என்று சொன்னாலே அது உயர்சாதியை குறிக்கும் என்று விதண்டாவாதம் செய்பவர்களையும் கண்டிருக்கிறேன்.

மைந்தன் சிவா திரிப்பது மாதிரி, "விமலோட மூதாதையர் இந்தியால இருந்து வந்தாங்க. அதால அவர் தமிழர்.!" என்று நான் மேம்போக்காக கூறவில்லை. அதற்கான காரணங்களை அடுக்கி இருக்கிறேன்.

கட்டுரையில் இருந்து: 
//விமல் வீரவம்ச "பெறவா" சாதியை சேர்ந்தவர். பெறவா என்பது, தமிழில் பறையர் என்ற சொல்லின் சிங்கள மொழித்திரிபு... இந்தியாவிலிருந்து குடியேறிய பெறவா சாதியினர், அவர்களது வயல்களில் விவசாயக் கூலிகளாக வேலை செய்து வந்தனர். முதலியார்களும், கொவிகமக்களும், விவசாயக் கூலிகளான பெறவாக்களின் உழைப்பை சுரண்டியதுடன், தாழ்த்தப் பட்ட சாதியினராக நடத்தினார்கள்.// (http://kalaiy.blogspot.nl/2016/09/blog-post_23.html)

கொழும்பு நகரில், மைந்தன் சிவா பணி புரியும் அதே நிறுவனத்தில் கூட வேலை செய்யும் சிங்கள ஊழியர்கள் இருக்கிறார்கள். (இதை அவரே பல தடவைகள் கூறியிருக்கிறார்.) நான் கட்டுரையில் குறிப்பிட்ட விபரம் சரியா என்பதை, சக ஊழியர்களிடம் கேட்டு உறுதிப் படுத்தி இருக்கலாம். அதை அவர் செய்ய விரும்பவில்லை. காரணம் மிக இலகு. நான் சொன்னது உண்மையென்று அவரது மனச்சாட்சிக்குத் தெரியும்!

நான் சொல்வதில் உண்மை இருக்கிறதென்று மைந்தன் சிவா ஏற்றுக் கொள்வதற்கு வலுவான காரணம் இருக்கிறது. பிரபலமான தமிழ் அரசியல் தலைவர்களின் சாதிப் பின்னணி என்னவென்ற விபரம், பொதுவாக எல்லா ஈழத் தமிழருக்கும் தெரியும். ஆதிக்க சாதியினரை தவிர, பிற சாதிகளை சேர்ந்தவர்கள் உயர்ந்த அரசியல் பதவிகளுக்கு வந்தாலும் அறிந்து வைத்திருப்பார்கள். உதாரணம், புலிகள் அமைப்பின் தலைவர்களாக இருந்த பிரபாகரன், தமிழ்ச்செல்வனின் சாதிய பின்னணி பலருக்கும் தெரிந்திருந்தது.

வட இலங்கையில் தாழ்த்தப் பட்ட சாதிய சமூகத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் ஆனது தமிழர்களுக்கு தெரிந்திருந்தது. அதே மாதிரி, தென்னிலங்கையில் தாழ்த்தப் பட்ட சாதிய சமூகத்தை சேர்ந்த விமல் வீரவன்ச அமைச்சராக ஆனது சிங்களவர்களுக்கு தெரிந்திருக்காதா? நிச்சயமாகத் தெரிந்திருக்கும். முன்னொரு தடவை தாழ்த்தப் பட்ட சாதியை சேர்ந்த பிரேமதாச ஜனாதிபதியாக வந்திருந்தார். அப்போது ஆதிக்க சாதி சிங்களவர்கள், பிரேமதாசவின் சாதியை குறிப்பிட்டு இழிவாகப் பேசினார்கள். இந்த விடயம் அன்று பல தமிழர்களுக்கும் தெரிந்திருந்தது.


விமல் வீரவன்ச தாழ்த்தப்பட்ட பெறவா சாதியை சேர்ந்தவர். பெறவா என்பதும் பறையர் என்பதும் ஒரே சாதியைக் குறிக்கும் பெயர்கள் தான். பெறவா சாதியினர், ஆங்கிலேயர் காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள். அந்த விபரத்தை ஒரு சிங்கள ஊடகவியலாளர் தனது இணையக் கட்டுரையில் பதிவு செய்துள்ளார். //Beravas or drummers (from the South Indian root – parai).... Wimal Weerawansa, staunch anti Tamil, belongs to the Berava caste.// (Punya Perera, Caste And Exclusion In Sinhala Buddhism; https://www.colombotelegraph.com/index.php/caste-and-exclusion-in-sinhala-buddhism/)

ஆங்கிலேய காலனிய ஆட்சிக் காலத்தில் தான், இலங்கையில் நகரமயமாக்கல் இடம்பெற்றது. நவீன நகரங்களில் உருவாக்கப் பட்ட கழிவகற்றும் பணியில் வேலை வேலை செய்வதற்கு உள்ளூர் மக்கள் முன்வரவில்லை. அதனால், தமிழ்நாட்டில் இருந்து நகரசுத்தி தொழிலாளர்களை கொண்டு வந்தனர். ஆங்கிலேய ஆட்சியாளர்களும், தனியார் நிறுவனங்களும், தமிழ்நாட்டில் இருந்து பறையர், சக்கிலியர் ஆகிய சாதிகளை சேர்ந்த தொழிலாளர்களை தருவித்தனர். (ஆதாரம்: சாதியின்மையா சாதிமறைப்பா?)

கொழும்பு, கண்டி போன்ற பெரு நகரங்களில் மட்டுமல்லாது, இலங்கை முழுவதும் உருவான சிறு நகரங்களிலும் தமிழ்நாட்டுத் தொழிலாளர்களே சுத்திகரிப்பு பணிக்கு அமர்த்தப் பட்டனர். பருத்தித்துறை முதல் அம்பாந்தோட்டை வரையில், பறையர் சாதியினர் நகர் சார்ந்த சமூகமாக வாழ்கின்றனர். ஆகையினால், சிங்களப் பகுதிகளில் குடியமர்த்தப் பட்டவர்கள் தற்போது சிங்களவர்களாக மாறியிருப்பார்கள் என்பதற்கு ஆதாரம் வேறு வேண்டுமா?

மைந்தன் சிவா போன்ற அறிவுஜீவிக் கோமாளிகள், வெறுமனே என் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக மட்டும் தனிநபர் தாக்குதல் நடத்தவில்லை. தமிழர்களை அறியாமைக்குள் வைத்திருக்கும் அவர்களது பிழைப்பில் மண்ணள்ளிப் போட்டு விட்டதால் ஏற்பட்ட எரிச்சல். சிங்களவர்கள் மத்தியில் உள்ள சாதிய, வர்க்க முரண்பாடுகள், தமிழர்களுக்கு தெரிந்து விடக் கூடாது என்பதில் கூட  அவதானமாக இருக்கிறார்கள். 

No comments: