Saturday, March 12, 2016

நாம் தமிழர் + நாம் சிங்களர் : ஒரே இனவாத மரத்தின் இரண்டு கிளைகள்

(தமிழரின் சுயநிர்ணயத்திற்கு எதிரான "நாம் போலித் தமிழர்" கட்சி - தொடர்)
[பகுதி - இரண்டு] 



சீமான் தமிழ் தேசியம் பேசுவதாக பலர் பிழையாக நினைத்துக் கொள்கிறார்கள். ஈழத்திலும், புலம்பெயர்ந்தும் வாழும் ஈழத் தமிழ் தேசியவாதிகளும் சீமான் வைத்த பொறிக்குள் வசமாக மாட்டிக் கொண்டு, மீள வழி தெரியாமல் தத்தளிக்கிறார்கள். உண்மையில் சீமான் பேசுவது, "தமிழ் நாட்டுக்கேற்றவாறு மாற்றியமைக்கப் பட்ட சிங்கள பேரினவாதக் கருத்தியல்" ஆகும். இதனை நாம் தமிழர் கட்சி ஆர்வலர்களுடனான உரையாடலில் புரிந்து கொள்ள முடிந்தது.

இலங்கை பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் வாங்குவதற்கு முன்னர் இருந்தே சிங்கள தேசியவாதம் என்ற போர்வைக்குப் பின்னால் அபாயகரமான சிங்களப் பேரினவாதம் வளர்ந்து வந்தது. ஆங்கிலேய காலனிய காலத்தில், இந்தியாவும், இலங்கையும் ஒரே நாடாக இருந்தது. அதனால், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் இந்தியாவில் இருந்து வந்து குடியேறிக் கொண்டிருந்தார்கள்.

பொருளாதார வளர்ச்சி காரணமாக, தமிழ் நாட்டில் சென்னை மாநகரம் மாதிரி, இலங்கையில் கொழும்பு மாநகரம், பல்லினக் குடியேறிகளை கவர்ந்திழுத்துக் கொண்டிருந்தது. கொழும்பு துறைமுகத்திலும், நகர சுத்திகரிப்பு பணிகளிலும் பெரும்பாலும் தென்னிந்தியத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப் பட்டனர். அதனால், சிங்கள இனவாதிகளின் ஆரம்ப கால அரசியல் பிரச்சாரங்களும் "வந்தேறுகுடிகளுக்கு" எதிராக அமைந்திருந்ததில் வியப்பில்லை.

இன்று சீமானும், நாம் தமிழரும் பேசுவது போலத் தான், அன்று சிங்கள இனவாதிகள் பேசிக் கொண்டிருந்தார்கள். "தெலுங்கு, தமிழ், மலையாள வந்தேறுகுடிகள் தான் இலங்கையை ஆள்கிறார்கள். சிங்கள நாட்டை சிங்களவன் ஆள வேண்டும்." என்று நாம் தமிழர் பாணியில், நாம் சிங்களவர் கோஷம் போட்டனர். உண்மையில், அன்றைய ஆங்கிலேய நிர்வாகத்தில் பெருமளவு தமிழர்கள் பிரதிநிதித்துவப் படுத்தினார்கள். யாழ்ப்பாண மேட்டுக்குடித் தமிழர்கள், சிங்களப் பிரதேசங்களில் கூட அரசாங்க ஊழியர்களாக வேலை பார்த்தனர்.

மலையக தோட்டத் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் சேர்த்துக் கொண்டால், அன்றைய இலங்கையில் தமிழரின் விகிதாசாரம் சனத்தொகையில் 40% இருந்திருக்கும். தமிழ் தேசிய தலைவர்கள் மத்தியில், தமிழர்கள் சிறுபான்மை இனம் என்ற உணர்வு இருக்கவில்லை. பாராளுமன்றக் கூட்டம் ஒன்றில், ஜி.ஜி. பொன்னம்பலம் இனப்பிரச்சினைக்கு தீர்வாக "ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை" வைத்ததும் அதனால் தான். 

இலங்கையில் தமிழரின் விகிதாசாரத்தை குறைக்கும் நோக்கில், சிங்கள இனவாதிகள் தந்திரமாக மலையக தோட்டத் தொழிலார்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பினார்கள். சாதி வேற்றுமை காரணமாக, யாழ் வேளாள மேட்டுக்குடியினரும் அதற்கு ஒத்துழைத்தனர். 

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில், இலங்கையில் இன உணர்வை விட, சாதிய உணர்வு முக்கியமாகக் கருதப் பட்டது. 1911 ம் ஆண்டு, ஆங்கிலேய காலனிய ஆட்சியின் கீழ் படித்த இலங்கையருக்கான தேர்தல் நடைபெற்றது. அப்போது ஒரு தமிழரான சேர் பொன் இராமநாதனும், ஒரு சிங்களவரான சேர் மார்குஸ் பெர்னாண்டோவும் ஒரே தொகுதியில் போட்டியிட்டனர். பெரும்பான்மை சிங்கள வாக்காளர்கள், இராமநாதனுக்கு ஓட்டுப் போட்டு வெல்ல வைத்தார்கள். என்ன காரணம்? மார்குஸ் பெர்னாண்டோ பிற்படுத்தப் பட்ட கரவா (தமிழில்: கரையார்) சாதியை சேர்ந்தவர். இராமநாதன் உயர்த்தப் பட்ட வெள்ளாள (சிங்களத்தில்: கொவிகம) சாதியை சேர்ந்தவர்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சிங்கள இனவாதிகளுக்கும் "யார் சிங்களவர்கள்? யார் தமிழர்கள்?" என்று தீர்மானிப்பதில் குழப்பம் ஏற்பட்டது. இன்று சீமானுக்கும், நாம் (போலித்) தமிழருக்கும் ஏற்பட்டிருக்கும் அதே குழப்பம் தான். ஏனென்றால், ஆங்கிலேய காலனிய காலத்தில், இந்தியாவில் இருந்து வந்த பல்லினக் குடியேறிகள், இலங்கையில் வாழ்ந்த சிங்களவர்களுடனும், தமிழர்களுடனும் கலந்து கொண்டிருந்தார்கள்.

ஆயிரக் கணக்கான தெலுங்கர்கள், மலையாளிகள், மற்றும் தமிழ்நாட்டுத் தமிழர்கள், வடக்கே பருத்தித்துறை முதல், தெற்கே அம்பாந்தோட்டை வரை குடியேறி இருந்தனர். அவர்கள் வாழ்ந்த பிரதேசத்தில் பேசப்பட்ட மொழி எதுவாகினும், அதை தமது தாய் மொழியாக்கிக் கொண்டனர். குறிப்பாக உயர் சாதியினர் இனக்கலப்பு செய்வதற்கு, சிங்களவர்களோ, தமிழர்களோ எந்த விதமான ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை.

ஏராளமான தென்னிந்திய செட்டியார்கள், முதலியார்கள், இரண்டு இனங்களிலும் சரி வரக் கலந்துள்ளனர். அதே மாதிரி, மலையாளிகளும் இன்று சிங்களவர்களாக, அல்லது தமிழர்களாக தம்மை அடையாளப் படுத்திக் கொள்கிறார்கள். எழுபதுகள் வரையில், யாழ்ப்பாணத்தின் வந்தேறுகுடிகளான மலையாள வர்த்தகர்கள், யாழ் குடாநாட்டில் இருந்து கேரளாவுக்கு புகையிலை ஏற்றுமதி செய்து வந்தனர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பமும் கேரளாவில் இருந்து வந்து குடியேறிய மலையாள வம்சாவளியினர் தான்.

ஏராளமான தமிழ் பேசும் செட்டியார்களும், முதலியார்களும், சிங்கள இனத்திற்குள் கலந்து விட்ட நிலையில், "யார் சிங்களவர் அல்லாதவர்" என்று வரையறுக்க வேண்டிய தேவை, சிங்கள இனவாதிகளுக்கு ஏற்பட்டது. தமிழ் பேசிய உயர்சாதியினரை சிங்கள சமூகத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்ட சிங்கள இனவாதிகள், தமிழ் பேசிய தாழ்ந்த சாதியினரை ஏற்றுக் கொள்ள மறுத்து வந்தனர்.  

கொழும்பு மாநகரில் வாழ்ந்த தீண்டாமை சாதியினரான பறையர்களும், சக்கிலியர்களும் வீட்டிலும் வெளியிலும் தமிழ் பேசி வந்தனர். இவர்களில் கணிசமான தொகையினர் தெலுங்கர்களாக இருந்த போதிலும் தமிழ் பேசினார்கள். ஆனால், தாழ்த்தப் பட்ட சாதியினர் என்பதால், சிங்களப் பெரும்பான்மை இனம் அவர்களை தம்முடன் சேர்த்துக் கொள்ளாமல் ஒதுக்கி வைத்திருந்தது.

உண்மையிலேயே சிங்களவர்கள் மத்தியில் பறையர் சாதி இருக்கிறது. சிங்களத்தில் அதை பெறவா என்று சொல்வார்கள். சிங்கள மொழியில் "பெற" என்பது பறை மேளத்தைத் குறிக்கும்.  சிங்கள பெறவா சாதியினரில் பெரும்பான்மையானோர் முன்னொருகாலத்தில் தமிழராக இருந்திருக்கலாம். குறிப்பாக, தமிழர்களுக்கு எதிராக இனவாதம் பேசி வந்த பாராளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ச ஒரு தமிழர். தமிழ்நாட்டில் இருந்து வந்தேறிய தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர் ! 

சிங்கள இனவாதிகளின் கூச்சலான "பறத் தெமளோ", "சக்கிலித் தெமளோ" என்பன மேற்குறிப்பிட்ட சாதிய மனோபாவத்தில் இருந்து வந்த சொற்கள் தான். இன முரண்பாடுகள் கூர்மையடைந்த பின்னர், சாதிப் பாகுபாடு காட்டாமல் அனைத்துத் தமிழர்களுக்கும்  "பறத் தெமளோ" பட்டம் சூட்டப் பட்டது. 

அது மட்டுமல்ல, யாராவது ஒரு சிங்களவர் தமிழர்களுக்கு ஆதரவாக பேசினால், அவரும் "பறத் தெமளோ" என்று தூற்றப் படுகின்றார். ஆகையினால், அது ஒரு சாதியை குறிப்பதாக கருத முடியாது. அது ஒரு வசைச் சொல்லாக தாராளமாக பாவிக்கப் படுகின்றது. எதற்காக இவ்வளவு வியாக்கியானம்? 

நாம் சிங்களர் பாவிக்கும் வசைச் சொல்லான "பறத் தெமளோ"போன்று, நாம் தமிழர் ஒரு வசைச் சொல் வைத்திருக்கிறார்கள். "வடுகர்" என்பது அந்தச் சொல்.  சிறுபான்மைத் தெலுங்கர்களுக்கு எதிரான வசைச் சொல்லான வடுகர் என்பது, சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு தமது கொள்கையை ஏற்றுக் கொள்ளாத தமிழர்களுக்கு எதிராகவும் பாவிக்கப் படுகின்றது. 

சிங்கள இனவாதிகள் "பறத் தெமளோ" என்று திட்டினால், தமிழ் இனவாதிகள் "வடுக தெலுங்கர்கள்" என்று திட்டுகிறார்கள். என்ன வித்தியாசம்?  இதற்கு முன்னர் சீமானை விமர்சித்து நான் எழுதிய விமர்சனக் கட்டுரைக்கு நாம் தமிழர் ஆர்வலர் ஒருவர் பின்வருமாறு எதிர்வினையாற்றி இருந்தார். "தமிழர்களிடையே நுழைந்துள்ள வடுக கூட்டம் பல வடிவங்களில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்கின்றது." (கவனிக்கவும்: இனவாத வசைச் சொல்லான "வடுக கூட்டம்")

இலங்கையில் ஈழத் தமிழர்கள் மாதிரி, தமிழ் நாட்டில் தெலுங்கர்கள் தான் அதிக எண்ணிக்கையில் உள்ள சிறுபான்மை இனம் ஆகும். கணிசமான அளவு நகர சுத்தி தொழிலாளர்கள் தெலுங்கர்கள் தான். அதாவது தாழ்த்தப் பட்ட சாதியினர். நாம் தமிழர் இனவாதிகளின் வடுகர் எதிர்ப்பு பிரச்சாரம், தெலுங்கு பேசும் தாழ்த்தப் பட்ட சாதி மக்களையும் குறி வைத்து நடக்கிறது. சிங்கள இனவாதிகளின் "பறத் தெமளோ" வும், தமிழ் இனவாதிகளின் "வடுக தெலுங்கர்களும்"  சாதிய மேலாதிக்க கருத்து அடிப்படையில் இருந்து வருகின்றது. 

நாம் சிங்களர் இயக்கம், ஈழத் தமிழர்களுக்கு எதிராக செய்து வந்த இனவாத பிரச்சார பாணியை பின்பற்றித் தான், நாம் தமிழர் இயக்கம் நடந்து கொள்கின்றது. நாம் சிங்களர் இயக்கத்தினர், "சிங்கள நாட்டை சிறுபான்மையான வந்தேறுகுடி தமிழர்கள் ஆள்கிறார்கள்" என்று சொன்னார்கள். நாம் தமிழர் இயக்கத்தினர், "தமிழ் நாட்டை சிறுபான்மையான வந்தேறுகுடி தெலுங்கர்கள் ஆள்கிறார்கள்" என்று சொல்கிறார்கள். இரண்டுக்கும் இடையில் என்ன வித்தியாசம்? 


(தொடரும்) 
 
இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள் :
தமிழரின் சுயநிர்ணயத்திற்கு எதிரான "நாம் போலித் தமிழர்" கட்சி

4 comments:

Anonymous said...


சாப்ட்வேர் ட்ரைனிங் விதேஒஸ் இன் தமிழ்
Software Training Videos In Tamil
http://goo.gl/pPk30v

TAMIL PSYCHOLOGY TIME - TPSA said...

தோழருக்கு வணக்கம் இனம் என்கிற வரையறை வெறும் மனிகுலத்திற்கு மட்டுமே உரியது அல்ல நீங்கள் தேவையில்லாமல் குழப்பம் ஏற்படுத்துகிறீர்கள் ஒரு இனத்தின் நீண்டகால வரலாற்றை அதன் முரண்பாடுகளை ஆங்கிலேயர் வருகையில் சுருக்குகிறீர்கள் இனம் என்கிற முரண்பாடு உயிரியல் அடிப்படையில் ஆனாது கலப்பினவாதிகள் அதாவது தெலுங்கு பெண்களை திருமணம் செய்த சில தமிழ் ஆண்கள் உங்களை போன்று தான்பேசுகிறார்கள் இரண்டு கெட்டான்களே

TAMIL PSYCHOLOGY TIME - TPSA said...

தோழருக்கு வணக்கம் இனம் என்கிற வரையறை வெறும் மனிகுலத்திற்கு மட்டுமே உரியது அல்ல நீங்கள் தேவையில்லாமல் குழப்பம் ஏற்படுத்துகிறீர்கள் ஒரு இனத்தின் நீண்டகால வரலாற்றை அதன் முரண்பாடுகளை ஆங்கிலேயர் வருகையில் சுருக்குகிறீர்கள் இனம் என்கிற முரண்பாடு உயிரியல் அடிப்படையில் ஆனாது கலப்பினவாதிகள் அதாவது தெலுங்கு பெண்களை திருமணம் செய்த சில தமிழ் ஆண்கள் உங்களை போன்று தான்பேசுகிறார்கள் இரண்டு கெட்டான்களே

Unknown said...

டேய் பரதேசி இந்தியா, இலங்கை இரண்டுமே தமிழ் மக்களோட நாடு தமிழரோட பூர்வீக பூமி. யாரு வந்தேறினு முடிவு பண்ணு.