Saturday, March 19, 2016

"தமிழ்நாட்டை ஹிட்லர் ஆள வேண்டும்!" - நாம் நாஜித் தமிழர் கட்சி

(தமிழரின் சுயநிர்ணயத்திற்கு எதிரான "நாம் போலித் தமிழர்" கட்சி - தொடர்)
[பகுதி - நான்கு] 

தெருவில் போகும் நாயைப் பார்த்துத் தான் இன்னொரு நாய் குரைக்கும். அதே நாய் மனிதர்களைக் கண்டு விட்டு பேசாமல் போகும். வெள்ளையின எஜமானர்களை பக்திப் பரவசத்துடன் வழிபடும் "நாம் போக்கிரித் தமிழர்" கட்சி ஆதரவாளர்கள், தம்மைப் போன்ற சகோதர இனமான கருப்பர்களிடம்  தான் வீரத்தைக் காட்டுகிறார்கள். 

"இதோ பாருங்கள்! வெள்ளையர்கள் தமிழ்ப் பாடல் பாடுகின்றார்கள்!" என்று ஒரு வீடியோவை இனையத்தில் பெருமையுடன் பகிர்ந்து கொண்டார்கள். (https://www.youtube.com/watch?v=sNHlOW5t5JI) "என்ன அதிசயம்! ஒரு ஜெர்மன் பெண் சரளமாகத் தமிழ் பேசுகின்றாள்...பாருங்கள்!" என்று இன்னொரு வீடியோவை பகிர்ந்து மகிழ்ந்தார்கள். (https://www.youtube.com/watch?v=UXbtqSB2MqE)

ஆனால்... ஆனால்... அதே தமிழ் இன உணர்வாளர்கள்(?), தமிழக தொலைக்காட்சியில் நடக்கும் சுப்பர் சிங்கர் போட்டியில், மலையாளிகளும், தெலுங்கர்களும் தமிழ்ப் பாடல் பாடி பரிசு பெற்றுக் கொண்டு செல்கிறார்கள்!" என்று அறச்(?) சீற்றம் கொள்கின்றனர்.

வெள்ளையன் தமிழ்ப் பாடல் பாடினால், "தமிழன்டா" என்று சொல்லிச் சொல்லி பெருமைப் படுகிறார்கள். ஆனால், ஒரு கன்னடன், தெலுங்கன், மலையாளி தமிழ்ப் பாடல் பாடினால் மட்டும் அது தமிழர்க்கு சிறுமையோ? இன்னொரு இனத்தவன் எமது தமிழ் மொழியை சரளமாகப் பேசி, பாடலும் பாடினால், அதற்காக தமிழர்கள் பெருமைப் பட வேண்டுமல்லவா? இந்த இடத்தில் தான், நாயைப் பார்த்து குரைக்கும் நாய்களுடன், நாம் போக்கிரித் தமிழர்களை ஒப்பிட வேண்டியுள்ளது.

கன்னட, தெலுங்கு, மலையாள மொழிகளை பேசும் மக்களும், தமிழர்களைப் போன்று கருப்பர்கள் தானே? அதனால் தான், வெள்ளையின எஜமான்கள் தமிழ்ப்பாட்டு பாடினால் பெருமைப் படுபவர்கள், கருப்பின சகோதரர்கள் தமிழ்ப் பாட்டு பாடினால் சிறுமைப் படுகிறார்கள்.

சீமானும் அவரது தம்பிகளும், 'தமிழனை தமிழனே ஆள வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருவதால், "யார் தமிழன்?" என்ற கேள்வி எழுகின்றது. தமிழை தாய்மொழியாக கொண்ட அனைவரும் தமிழர்கள் தானே என்று யாராவது அப்பாவித்தனமாக கேட்டால் தொலைந்தீர்கள்? கன்னட ஜெயலலிதா, தெலுங்கு கருணாநிதி, மலையாள எம்ஜிஆர் போன்றவர்கள் தான் தமிழ்நாட்டை ஆண்டார்கள் என்று வகுப்பெடுக்க வந்து விடுவார்கள். அப்படியா? சீமான் கூட ஒரு மலையாளி என்று சொல்கிறார்களே?

இன்றைய காலத்தில் யார் அசல் தமிழன்? ஒவ்வொருவருக்கும் மரபணு சோதனை செய்து பார்த்து சான்றிதழ் கொடுப்பார்களா? இது முப்பதுகளில் ஜெர்மனியில் ஹிட்லர் செய்த "தூய ஆரிய இன சோதனைகளை" நினைவுபடுத்துகின்றது.

முப்பதுகளில், ஹிட்லரும் சீமான் மாதிரித் தான் பேசி வந்தான். "வந்தேறுகுடிகளான யூதர்கள், இத்தாலியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், போலிஷ்காரர்கள் ஜேர்மன் குடியுரிமை பெற்றுக் கொள்வதுடன், தூய ஜெர்மன் ஆரியர்களை ஆள்கிறார்கள் ... ஜெர்மனியை ஒரு ஆரியன் (தூய ஜெர்மனியன்) ஆள வேண்டும்..." என்று கூறினான். ஹிட்லர் எழுதிய மெய்ன் கம்ப் நூலில் நீங்கள் அதை வாசிக்கலாம்.

சீமான் போன்ற அரை வேக்காட்டு அரசியல்வாதிகள் வரலாறு தெரியாமல் உளறுவது மாத்திரம் அல்லாமல், தாம் நினைப்பதை வரலாறாக காட்ட முனைகின்றனர். ஆங்கிலேய காலனிய காலத்திற்கு முன்னர், மொழி வேறுபாடு பெரிதாக கருதப் படவில்லை.

ஒவ்வொரு பிரதேசத்திலும் ஏதோ ஒரு காரணத்திற்காக குடியேறி வாழ நேர்ந்தவர்கள் அந்தந்த பிரதேச மொழியை தாய்மொழியாக்கிக் கொண்டார்கள். வட இந்தியாவை ஆண்ட இஸ்லாமிய மொகலாயர்களுக்கு எதிராக, கர்நாடகாவில் விஜய நகரம் என்ற இந்து சாம்ராஜ்யம் உருவானது. அந்தக் காலத்தில் தமிழ்நாடு விஜயநகர அரசாட்சிக்கு உட்பட்டிருந்தது.

தெலுங்கும், கன்னடமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தோன்றும் நெருங்கிய மொழிகள். விஜய நகர ஆட்சிக் காலத்தில் தான் இரண்டாகப் பிரிந்தது. தமிழ்நாடு முழுவதும் விஜய நகர அரசின் நிர்வாகப் பொறுப்புக்களில் அமர்த்தப் பட்டவர்கள் அனைவரும் தெலுங்கர்கள் தான். 19 ம் நூற்றாண்டளவில் அவர்கள் தமிழர்களாக காட்டிக் கொண்டாலும், நிலவுடைமையாளர்களாக தொடர்ந்தும் இருந்தனர்.

இலங்கையில் கண்டி இராச்சியத்தின் கடைசி மன்னன் விக்கிரமராஜசிங்கன் தெலுங்கு பூர்வீகத்தை கொண்டவன். ஆனால், அவனது குடும்பத்தினர் தமிழ் பேசினார்கள். பௌத்த மதத்தை பின்பற்றினார்கள். அன்றைய காலத்தில் சாதாரணமாக கருதப்பட்ட இனக் கலப்புக்குக்கு இது ஓர் உதாரணம் மட்டுமே.

சீமான் கோஷ்டியினர் இது போன்ற வரலாறுகளை ஆதாரமாக காட்டி, இன்றைக்கும் தமிழ்நாட்டை தெலுங்கர்கள் தான் ஆள்கிறார்கள் என்று வாதிடுவது சிறுபிள்ளைத் தனமானது. நாங்கள் இப்போது 18 ம் நூற்றாண்டில் வாழவில்லை. இது 21 ம் நூற்றாண்டு. இடையில் வந்த நூறாண்டு கால ஆங்கிலேய காலனிய ஆட்சி, தமிழ்நாட்டில் எந்தவிதமான மாற்றத்தையும் உண்டாக்கவில்லையா?

19 ம் நூற்றாண்டின் இறுதியில் கூட, தென்னிந்தியாவில் மொழி வேறுபாடு எழவில்லை. அதற்குக் காரணம், இந்தியா முழுவதையும் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தார்கள். ஆனால், நிர்வாகப் பொறுப்புகளில் பிராமணர்கள் இருந்தார்கள்.

ஆங்கிலேய பிரபு மெக்காலே கொண்டு வந்த ஆங்கில வழி பொதுக் கல்வியை சரியாக பயனபடுத்தி முன்னேறியவர்கள் பிராமணர்கள் என்றால் மிகையாகாது. அதே நேரம், பிராமணர் அல்லாத பிற சாதியினர் மத்தியில் இருந்தும் படித்தவர்கள் உருவானார்கள். அவர்கள் பிராமண மேலாதிக்கத்திற்கு எதிராக உருவாக்கிய அமைப்பு தான் திராவிடர் இயக்கம்.

ஆரம்ப கால திராவிடர் இயக்கத்தை உருவாக்கியவர்களில் தமிழர்,தெலுங்கர், மலையாளிகள் போன்ற மூவினத்து அறிவுஜீவிகளின் பங்களிப்பு இருந்துள்ளது. "பிற மாநிலத்தவர்கள் தமிழர்களை ஆள்கிறார்கள்..." என்று கொந்தளிப்பவர்கள் அந்தக் காலத்து நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும். காலங் காலமாக பிராமணர்கள் மட்டுமே கல்வி கற்கலாம் என்றிருந்த நிலைமையை, மெக்காலே கொண்டு வந்த ஆங்கில வழிக் கல்வி மாற்றி அமைத்தது.

ஆங்கிலேயர் காலத்தில், அனைவரும் சாதி, மொழி வேறுபாடின்றி கல்வி கற்க முடிந்தது. அதனால், கற்றவர்கள் எல்லோரும் ஆங்கிலம் சரளமாக பேசத் தெரிந்திருந்தார்கள். உண்மையில், அவர்களது சொந்த மொழியை விட ஆங்கில மொழி அறிவு அதிகமாக இருந்தது.

இலங்கையிலும் அது தான் நிலைமை. சிங்கள, தமிழ் மேட்டுக்குடியினர் ஆங்கிலம் மட்டுமே பேசி வந்த படியால், அவர்களுக்கு இடையில் திருமண பந்தங்களும் ஏற்பட்டிருந்தன. தென்னிந்தியாவிலும், இலங்கையிலும், மொழி அடிப்படையிலான இனப்பிரச்சினை பிற்காலத்தில் தான் தோன்றியது.

தமிழ்நாட்டில் சென்னை மாநகரத்தில் தான் சனத்தொகை அடர்த்தி அதிகம். "இங்கே தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது" என்று சென்னை வாசிகளை கேட்டால் சொல்வார்கள். அதற்கு காரணம் "ஆக்கிரமிப்பாளர்களான பிற மாநில வந்தேறுகுடிகள்" என்று சீமான் பாணியில் பதில் சொல்லித் தப்ப முடியாது.

வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படையில் அது தவறாகும். உலகில் பல நாடுகளின் தலைநகரங்களில் பூர்வீக மக்களின் சனத்தொகை குறைந்து வருகின்றது. நாகரிக வளர்ச்சி காரணமாக ஏற்படும் நகரமயமாக்கலின் தவிர்க்க முடியாது விளைவு அது.

லண்டன் மாநகரில் ஆங்கிலேயர்களின் எண்ணிக்கை குறைந்து, வெளிநாட்டு குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களில் பெரும்பான்மையானோர் காலனிய காலத்தில் சென்று குடியேறினார்கள். அப்போது இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், கென்யா, ஜமைக்கா எல்லாம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மாகாணங்களாக இருந்தன.

ஆகவே, சென்னையில் பூர்வீக தமிழர்களை விட, வந்தேறுகுடிகளின் எண்ணிக்கை அதிகரித்தது எப்படி என்ற கேள்விக்கான பதிலை காலனிய காலத்தில் தான் தேட வேண்டும். ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்னர் சென்னை என்ற நகரமே இருக்கவில்லை. அது ஒரு சாதாரணமான மீன்பிடிக் கிராமமாக இருந்தது.

பிற்காலத்தில் தென்னிந்தியாவில் நிரந்தரமாக கால் பதித்த ஆங்கிலேயர்கள் அதைத் தமது இந்திய காலனியின் தலைநகரம் ஆக்கிக் கொண்டனர். (தெற்கில் சென்னை, வடக்கில் கல்கத்தா) சென்னையில் தளம் அமைத்திருந்து தான் தென்னிந்தியாவின் பிற பகுதிகளை கைப்பற்றினார்கள்.

ஆங்கிலேய காலனிய கால இந்தியாவிலும், சுதந்திரத்திற்குப் பின்னரும் கூட, மெட்ராஸ் (சென்னை) மாகாணம் என்ற நிர்வாகப் பிரிவு இருந்தது. அது இன்றைய தமிழ்நாடு மாநிலத்தையும், ஆந்திரா மாநிலத்தையும் உள்ளடக்கி இருந்தது. கர்நாடகா, கேரளாவின் சில பகுதிகளும் அதற்குள் அடங்கின. அந்த மாகாணத்தின் தலைநகரம் மெட்ராஸ்/ சென்னை.

ஆகையினால், தெலுங்கு, கன்னட, மலையாள மொழி பேசும் மக்கள் சென்னையில் சென்று குடியேறியதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? மேலும் அது ஆந்திராவை அண்மித்த பகுதி என்பதால், தெலுங்கு பேசும் மக்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக உள்ளது. இப்போதும் தமிழ் நாட்டின் வடக்குப் பகுதி மாவட்டத்தில் நிறைய தெலுங்கு பேசும் கிராமங்கள் உள்ளன.

ஒரு காலத்தில் மீன்பிடிக் கிராமமாக இருந்த மெட்ராஸ் பட்டணத்தை, இந்தியாவின் பெரிய நகரங்களில் ஒன்றாக மாற்றியதற்கு தமிழர்கள் மட்டும் உரிமை கோர முடியாது. ஆங்கிலேய காலனிகளில் இருந்து அங்கு வந்து குடியேறிய, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசும் அனைத்து உழைக்கும் மக்களும் பெருமைப் பட வேண்டிய விடயம்.

மெட்ராஸ் தமிழர்களின் பிரதேசத்தில் அமைந்திருந்த படியால், அங்கு குடியேறிய பிறமொழிக் காரர்கள் வீட்டிலும் வெளியிலும் தமிழை பேசி வந்தனர். பிறகாலத்தில் அவர்கள் தமிழராக மாறி விட்டனர். இதற்காக தமிழர்கள் பெருமைப் பட வேண்டும். ஆனால், நாம் போலித் தமிழர் கட்சியினருக்கு மட்டும் இது கண்களை உறுத்திக் கொண்டிருக்கிறது.

இன்று ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை கொடுப்பதற்கு முன் நிபந்தனையாக, அந்நாட்டு மொழியை எழுதப் பேச தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. அங்கெல்லாம் பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் குடியுரிமை பெற்றுள்ளனர். அவர்களில் சிலர் அரசியலிலும் பிரகாசிக்கின்றனர்.

நோர்வீஜிய குடியுரிமை பெற்ற, அந்நிய வந்தேறுகுடி தமிழ்ப் பெண் ஒருவர், துணை மேயராக தெரிவு செய்யப் பட்டதை, நாம் தமிழர் பேர்வழிகள் பெருமையுடன் கொண்டாடினார்கள். அதே நேரம், தமிழர்களைப் போன்று சம காலத்தில் இந்திய குடியுரிமை பெற்ற தெலுங்கர்களும், மலையாளிகளும், அரசியல் தலைமைக்கு வந்தால் வெறுக்கிறார்கள். இந்த இரட்டை வேடத்திற்குப் பெயர் தமிழ் தேசியமாம்!

தகுதி, திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் எந்த துறையிலும் பிரகாசிக்கலாம். அதைத் தடுப்பதற்கு இவர்கள் யார்? ஒருவர் பிறப்பால் எந்த இனம் என்று பார்த்து, அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது இனவாதம் ஆகாதா? இவர்கள் குறிப்பிடும் அரசியல் தலைவர்கள் தம்மை தமிழர்கள் என்று தான் காட்டிக் கொள்கிறார்கள். சரளமாக தமிழ் பேசுகிறார்கள். பொதுவாக தமிழர்கள் வைத்திருக்கும் பெயர்களை தமது பிள்ளைகளுக்கு சூட்டுகிறார்கள். அவர்கள் தமிழர்கள் தான் என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்?

இதிலே இன்னொரு வேடிக்கையும் நடக்கிறது. இந்தியாவின் பிற மாநிலங்களில் அந்தந்த மொழிக் காரர்கள் ஆட்சி செய்வதாக ஒரு பட்டியலை கொண்டு வந்து காட்டுகிறார்கள். அதில் உள்ள முதல் அமைச்சர்களின் பெயர்கள், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் அமைந்துள்ளன. அதை மட்டும் வைத்துக் கொண்டு, அதாவது பெயர்களை மட்டும் வைத்து, அவர்கள் அந்தந்த இனத்தவர்கள் என்று தீர்மானிக்க முடியுமா?

வந்தேறுகுடி எதிர்ப்பு அரசியல் செய்யும் சீமான் ஒரு பூர்வீகத் தமிழன் என்பதற்கான ஆதாரம் என்ன? சைமன், செபஸ்டியான் போன்ற பெயர்கள், மலையாள கிறிஸ்துவர்களிடம் மிகப் பெருமளவில் புழங்கும் பெயர்கள் ஆகும். சர்மா, ஐயர் போன்ற பெயர்களைக் கொண்டு பிராமணர்கள் அடையாளம் காணப் படுவதைப் போன்று, கேரளாவில் கிறிஸ்தவர்கள் தமது அடையாளமாக குடும்பப் பெயர்களை வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் செபஸ்டியான் என்ற குடும்பப் பெயர் கேரள கிறிஸ்தவர்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ளது.

இலங்கையை ஆண்ட சிங்களப் பேரினவாத பிரதமர்களான பண்டாரநாயக்க, ஜெயவர்த்தனே போன்றோருக்கும் சீமானுக்கும் இடையில் ஓர் ஒற்றுமை இருக்கிறது. இவர்கள் எல்லோரும் கிறிஸ்தவ மதத்தில் பிறந்தாலும், பெரும்பான்மை இனத்தின் மத அடையாளங்களை வலிந்து சூட்டிக் கொண்டவர்கள். தமது பூர்வீகத்தை மறைப்பதற்காக தீவிரமான இனவாதிகளாக காட்டிக் கொண்டவர்கள்.

பிறக்கும் போது பெற்றோர் வைத்த கிறிஸ்தவப் பெயர்களை வாழ்நாள் முழுவதும் மறைத்து வந்தனர். எதற்காக, நாய் வேஷம் போட்டால் குரைக்கத் தானே வேண்டும்? தேர்தல் வெற்றிகளுக்காக இனவாத அரசியல் பேசினால், சொந்த இனத்தையும் மறைக்க வேண்டி இருக்கும்.

உலகம் முழுவதும், இனவாதத் தலைவர்கள் மத்தியில் ஒரு பொதுவான ஒற்றுமை இருக்கிறது. ஹிட்லரின் குடும்பத்தில் யூதக் கலப்பு இருந்தது. பண்டாரநாயக்கவும், ஜெயவர்த்தனேயும் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட தமிழர்கள். ஆனால், மூன்றாவது தலைமுறையாக இலங்கையில் வாழ்வதால், சிங்களவர்களாக மாறி விட்டனர்.

தமது சொந்த இன அடையாளம் தெரிந்து விடக் கூடாது என்ற அச்சத்தில் பலர் இனவாதம் பேசுகின்றார்கள். தமிழகத்தின் வந்தேறுகுடி சீமானும் அதற்கு விதிவிலக்கு அல்ல. திருடனே, “திருடன் ஓடுறான்… பிடி… பிடி…” என்று கத்திக் கொண்டே ஓடுவானாம். அது போன்றது தான் சீமானின் வந்தேறுகுடி கோஷமும்.


பெரும்பாலான ஈழத் தமிழ் தேசியவாதிகளுக்கு, சீமான் இன்னொரு பந்தயக் குதிரை. கருணாநிதி, வைகோ வரிசையில் தற்போது சீமான், இந்தியாவில் தமது அரசியல் வர்க்க நலன்களை பிரதிதித்துவப் படுத்துகிறார் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.

சீமான் என்ற பந்தயக் குதிரை செய்யும் குரங்குச் சேஷ்டைகள் காரணமாக, பலரது கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகின்றார். சீமான் மீது பந்தயப் பணம் கட்டியவர்களுக்கு, இந்தக் குதிரையும் தோற்றுவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

அதனால், "ஈழத் தமிழர்களின் கடமைகள் என்ன? அவர்கள் எதைப் பற்றி பேச வேண்டும்? எதைப் பற்றி பேசக் கூடாது?" என்று அதிகாரத் தொனியில் உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். சுருக்கமாக, "சீமான் சரிப் பட்டு வர மாட்டான்.... இப்போதைக்கு மக்களின் கவனத்தை வேறு திசைக்கு திருப்ப வேண்டும்..." என்பது அந்த "அறிவு"ஜீவிகளின் எண்ணம்.

ஒரு காலத்தில், ஜெர்மனியில் ஹிட்லர் சொன்னதைக் கேட்டும் எல்லோரும் சிரித்தார்கள். பல ஜெர்மனியர்கள் அவரை ஒரு கோமாளியாக சித்தரித்து, கேலியும் கிண்டலும் செய்து வந்தனர். ஆகவே, இது போன்ற கோமாளிகளிடம் தான் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தமிழ் நாட்டில் சீமானின் நாம் தமிழர் இந்தத் தேர்தலில் அதிகளவு ஓட்டுக்களைப் பெறப் போவதில்லை. அந்த நிலைமை ஒரு காலத்தில் ஹிட்லரின் நாஸிக் கட்சிக்கும் இருந்தது. ஆனால், ஹிட்லர்களும், சீமான்களும், வருங்காலத்தில் பெரும் முதலாளிகளால் பயன்படுத்தப் படக் கூடிய சாத்தியக்கூறுகள் நிறைய உள்ளன.

இந்தியாவின் பொருளாதாரப் பிரச்சினைகள் தீவிரமடையும் நேரத்தில், வட இந்திய பார்ப்பனிய பேரினவாதக் கைக்கூலியாக, தமிழ்நாட்டில் சீமான் செயற்படலாம். அந்த நேரத்தில், சீமான் ஈழத்தமிழ் தேசியவாதிகளின் நலன்களுக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுப்பார். இது ஈழத் தமிழரின் பந்தயக் குதிரை அல்ல, பார்ப்பனியர்களின் வேட்டை நாய் என்பது அப்போது தெரியும். 

(முற்றும்)


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள் :
1. தமிழரின் சுயநிர்ணயத்திற்கு எதிரான "நாம் போலித் தமிழர்" கட்சி
2. நாம் தமிழர் + நாம் சிங்களர் : ஒரே இனவாத மரத்தின் இரண்டு கிளைகள்
3. பேரினவாதத்திற்கு முண்டு கொடுக்கும் சீமானின் "வந்தேறுகுடி" கொள்கை

9 comments:

Vijay said...

"தமிழ்நாட்டை ஹிட்லர் ஆள வேண்டும்!" - நாம் நாஜித் தமிழர்

« நாஜி » (Nazi) என்ற சொல்லுடன் “ தமிழ்” , “தமிழர்” என்ற வார்த்தைகளைச், சேர்க்க வேண்டாம்
உங்களுக்கு சீமானை யோ அல்லது மற்ற அரசியல்வாதிகளையோ திட்ட வேண்டும் என்றால், எந்த வார்த்தைகளால் வேண்டுமானாலும் திட்டுங்கள். ஆனால் தமிழ், தமிழர் என்ற வார்த்தைகளோடு «நாஜி » என்ற அடைமொழியைச் சேர்க்க வேண்டாம்.
அரசியல் ஆதாயம் மற்றும் காழ்ப்புணர்ச்சிக்காக இணையத்தில் பரவவிடும்.
இவ்வார்த்தைகள் வருங்காலத்தில் தமிழர்களாகிய நமக்கு எதிராராகப் பயன்படுத்தப்படலாம்.

Vijay said...

The word NAZI was derived from NAtionale soZIalist. (NAZI)

"The Nazis" is much easier than saying "The National Socialist Party”.

“Nazi” is a member of the National Socialist German Workers' Party, which controlled Germany from 1933 to 1945 under Adolf Hitler whose actions lead to World War II and the Holocaust (genocide of Jewish people). As a result of this worst crime against humanity, ”UNITED NATIONS was created with a slogan “”NEVER AGAIN”

Any extended (prefix or suffix) use of the word “Nazi” to any other group is unjust, in that it softens the terrible crimes of the German Nazis.


செர்மனிக்கே உறித்தான, இந்தியாவுக்கு ஒவ்வாத நாஜி என்ற ஒரு சொல்லை தமிழர் என்ற சொல்லுடன் இணைத்து இணையத்தில் உலாவுவதை தவிர்க்க வேண்டும் / தடை செய்யப்படவேண்டும். இல்லையேல், நாளை தெலுங்கு நாஜிகள், ரெட்டியார் நாஜிகள், செட்டியார் நாஜிகள், படையாட்சி நாஜிகள், கிருத்தவ நாஜிகள், திமுக நாஜிகள், காங்கிரசு நாஜிகள் என்று எழுதத் தொடக்கி விடுவார்கள்.


இட்லரின் கொள்கைக் கூட்டாளியான கொடுங்கோலன் முசொலினீகூட நாஜி என்றழைக்கப்படவில்லை.
ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிலும் கொள்கை பரப்புதலுக்காக இட்லரின் படமோ அல்லது அவர் பயன்படுத்திய நாஜி குறியீடுகளையோ பயன்படுத்துவது சட்டப்படி குற்றம்.

இந்தியாவில் அவைகள் குற்றமாகக் கருதப்படவில்லை. செர்மனி நாஜிகள் பயன்படுத்திய சுவச்திகா குறியீடு இந்துமதத்தின் பரவலாகப் பயன்படுத்தும் இலட்சினையாக உள்ளது. இந்தியத் தேர்தல்களில் வாக்குரிமை அளிக்கும் முத்திரையாகவும் பயன்படுத்தப் படுகிறது. மேலும் ஆங்கில ஆட்சியை எதிர்த்த இந்திய மக்கள் பெருமதிப்பைப்பெற்ற மகாத்மா காந்தியும், நேதாஜியும் நாஜி இட்லரின் உதவியை நாடினர்.

இந்தியாவில் எந்தக் கட்சியும் இட்லரின் படத்தைப் போட்டு அவர் கொள்கைகளை பரப்புவதை வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டும்.

தென்னிந்தியாவில் உருவான நக்சல்பாரிகளைப்போல சம உரிமைக்காகப் ஆயுதம் தாங்கிய தேசிய அமைப்புகள் உலகெங்கிலும் உள்ளன. அவைகளை செர்மனி நக்சல்பாரிகள் என்றும் பெல்ஜியம் நக்சல்பாரிகள் என்றும் கூறுவதில்லை. பிரான்சுக்கு சொந்தமான கோர்சிகா தீவின் தேசியக் கட்சி அமைப்புக்களையும், வட இத்தாலியின் பிரிவினை மற்றும் தேசிய கட்சியான Lega Nord / Padania
போன்ற அமைப்புகளை யாரும் நாஜி அமைப்புகள் என்று அடையாளப் படுத்துவதில்லை.

நாஜி என்னும் கொடுஞ் சொல்லை, தமிழர்கள் என்ற சொல்லுடன் இணைத்து எழுதுவது தமிழர்களுக்கு செய்யும் பெரிய துரோகம். இந்த சொல்லாடலை முளையிலேயே கிள்ளி எறிந்திருக்கவேண்டும்.

குறுகிய அரசியல் ஆதாயத்திற்காக "தமிழ் நாஜிக்கள்" என்ற சொல்லாடலை இணையத்தில் பரப்புவது, உலகெங்கும் பரவியிருக்கும் தமிழர்களுக்கு செய்யும் ஒரு அநீதி / பொறுப்பற்ற செயல்.

Kalaiyarasan said...
This comment has been removed by the author.
Kalaiyarasan said...

சாதாரண ஜெர்மன் மக்களிடம் இருந்து நாஜிகளை பிரித்துக் காட்டுவதற்காக, "நாஜி ஜெர்மானியர்கள்" என்று சொல்வார்கள். அதன் அர்த்தம் ஜெர்மானியர்கள் எல்லோரும் நாஜிகள் என்பதல்ல. நீங்கள் வேண்டுமென்றே திரிபு படுத்தி புரிந்து கொள்வது, உங்களது அறியாமையை காட்டுகின்றது.

//நாளை தெலுங்கு நாஜிகள், ரெட்டியார் நாஜிகள், செட்டியார் நாஜிகள், படையாட்சி நாஜிகள், கிருத்தவ நாஜிகள், திமுக நாஜிகள், காங்கிரசு நாஜிகள் என்று எழுதத் தொடக்கி விடுவார்கள்.//
இந்தக் கூற்றும் உங்களது அறியாமையை பறைசாற்றுகின்றது. நாஜி (Nazi) என்றால் நாஷியோனல் சோஷியலிஸ்ட் (National Socialist) என்ற கட்சிப் பெயரின் சுருக்கம். ஜெர்மன் மொழியில் ஒருவரது பெயரை சுருக்கி செல்லமாக அழைக்கும் போது, அந்தச் சொல் "zi" விகுதியுடன் முடியும்.

நாஷியோனல் (national) என்ற ஜெர்மன் சொல்லின் தமிழ் மொழிபெயர்ப்பு தேசியம். ஆகவே, நாஜிகள் தீவிர தேசியவாதிகள். அத்துடன், இனத் தூய்மை, இனப் பெருமை பற்றியெல்லாம் பேசுவோர்.

சீமானின் நாம் தமிழர் கட்சி, தீவிர தேசியவாதக் கட்சியாக காட்டிக் கொள்கின்றது. தூய்மையான தமிழ் இனம் பற்றிப் பேசுகின்றது. (ஜெர்மனியர்கள் தூய ஆரிய இனத்தவர்கள்.) மூத்தகுடி தமிழர்கள் குமரி கண்டத்தில் இருந்து வந்தவர்கள் என்று இனப் பெருமை பேசுகின்றது. (ஜெர்மானியர்களின் "குமரி கண்டம்" மத்திய ஆசியா.) இவ்வாறு கொள்கை அடிப்படையில் ஒன்று சேரக் கூடியவர்கள் தான் நாஜிகள்.

முசோலினியின் பாசிஸ்ட் கட்சி நாஜிகளுக்கு முதல் தோன்றியது. ஆனால், அது நாஜிகள் அளவிற்கு இனத் தூய்மை பற்றிப் பேசவில்லை. இத்தாலியில் பாசிஸ்ட் கட்சியில் பணக்கார யூதர்களும் அங்கத்தவர்களாக இருந்தனர். பிற்காலத்தில் வந்த ஜெர்மன் நாசிகளை பாசிஸ்டுகள் என்று அழைப்பது வழமை.

Kalaiyarasan said...
This comment has been removed by the author.
Kalaiyarasan said...

@Vijai, முதலில் சீமானும், நாம் "தமிழர்" கட்சியும், தமிழர் என்ற சொல்லைப் பாவிப்பதை தடை செய்து விட்டு உரையாட வாருங்கள். தமிழர் என்ற சொல்லை பாவிப்பதற்கு நாஜிகளுக்கு அருகதை இல்லை என்று தைரியமாகக் கூறுங்கள். "நாம் நாஜித் தமிழர்" என்பது நாம் தமிழர் கட்சியை மட்டுமே குறிக்கும். அது தமிழர்கள் எல்லோரையும் குறிப்பதாக நினைக்கும் அளவிற்கு, வடி கட்டிய முட்டாள்கள் யாரும் இருப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நாம் தமிழர் கட்சி மீதான விமர்சனம் ஒட்டு மொத்த தமிழர்கள் மீதான விமர்சனம் ஆகாது. உங்களது கிணற்றுத்தவளை மனப்பான்மையை எண்ணி வியக்கிறேன்.

balakumar said...

Mr kalaiy you have to know something already language states seperated from madras presidency except some parts of kerala. So that time asked the language people to go to thier own states. tamil people drow from the states to tamilnadu but from seperated madras presidency periyar asked the other language people it is not necessary to go to thier own states that why tamil people coud not able to develope in thier own state this is the problem.pls reply in tamil.
Regards
Balakrishnan

GUNA said...

YES SEEMAN A FASCIST

balajimobileshop said...

எவ்வளவு சாதுர்யமாக தமிழனுக்கு எதிரான கருத்து பதிவை சரியான பதிவு போல சித்தரித்துள்ளது திராவிட சிந்தனை
இந்த புத்திசாலி தனம் தான் தமிழனை அடிமைபடுத்தி வாழ்ந்தது திராவிடம்