Sunday, March 13, 2016

பேரினவாதத்திற்கு முண்டு கொடுக்கும் சீமானின் "வந்தேறுகுடி" கொள்கை

(தமிழரின் சுயநிர்ணயத்திற்கு எதிரான "நாம் போலித் தமிழர்" கட்சி - தொடர்)
[பகுதி - மூன்று] 


போலித் தமிழ் தேசியவாதிகள்: பேரினவாதத்திற்கு முண்டு கொடுப்பதற்காக, சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு கொள்கையை மாற்றி இரட்டைவேடம் போடுவோர். இவர்களது செயற்பாடுகளும் பேரினவாத நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்றவாறு அமைந்திருக்கும்.

சீமான் மற்றும் நாம் தமிழரின் அரசியல் அபிலாஷைகள், இந்துத்துவா - பார்ப்பனீய பேரினவாதத்திற்கு முண்டு கொடுப்பதாக அமைந்துள்ளன. அதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன. மும்பை சென்று, இந்து- பாசிஸ சிவசேனா இயக்கத்திற்கு ஆதரவாக பேசினார். தமிழகத்தில் பார்ப்பனர்கள் ஆதரித்த ஜெயலலிதாவை அவரும் ஆதரித்தார்.  இலங்கையில் ஒரு தமிழ்க் கட்சியின் தலைவர் இப்படிப் நடந்து கொண்டால், அவருக்கு எப்போதோ துரோகிப் பட்டம் சூட்டி இருப்பார்கள்.

சீமான் இந்துத்துவா வாதிகளின் மதவெறிக் கொள்கையை ஏற்று, "இஸ்லாமியர்கள் தமிழ்ப் பெயர் வைக்க வேண்டும்" என்று சொன்னார். "தமிழ் பேசும் பார்ப்பனர்கள் அனைவரும் தமிழர்களே" என்று கூறி, வட இந்திய வந்தேறுகுடி பார்ப்பனர்களை தமிழர்களாக அங்கீகரித்தார். சீமானும், நாம் தமிழர் ஆதரவாளர்களும், இந்துத்துவா பேரினவாதத்திற்கு முண்டு கொடுப்பவர்கள் என்பதற்கு இதை விட வேறென்ன ஆதாரம் வேண்டும்?  (பார்க்க: சீமானின் பார்ப்பன பாசம்! https://www.facebook.com/tamizachi.Author/videos/926925790739311/ )

"தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும். தெலுங்கு நாட்டை தெலுங்கன் ஆள வேண்டும். கேரளாவை மலையாளி ஆள வேண்டும். கர்நாடகாவை கன்னடன் ஆள வேண்டும்." இதுவே தமது கொள்கை என்று சொல்லிக் கொள்ளும் நாம் தமிழர் கட்சியினர், தமிழ்நாட்டிற்குள் வாழும் தெலுங்கு, மலையாள, கன்னட சிறுபான்மையின மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க மறுத்து வருகின்றனர். அது மட்டுமல்லாது, அவர்களை வந்தேறுகுடிகள் என்று தூற்றவும் செய்கின்றனர்.

சீமானின் வந்தேறுகுடி கொள்கைக்கு முரணான விடயமாக, மலேசியாவின் வந்தேறுகுடி சீனர்கள் சிங்கப்பூர் தீவை பிரித்து எடுத்தார்கள். அதற்கு காரணமாக இருந்த லீகுவான் யூ மரணமடைந்த நேரம், சீமான் அஞ்சலி செலுத்தினார். இந்த இரட்டை வேடத்தை சுட்டிக் காட்டினால், நாம் தமிழர் விசுவாசிகள் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஏதேதோ உளறிக் கொட்டுகிறார்கள்.

சிங்கப்பூரின் வரலாறு எதுவாக இருந்தாலும், சீமானின் கொள்கையின் அடிபப்டையில்,  சீனர்கள் மலேசியாவின் வந்தேறுகுடிகள் தான். மலேசியா மட்டுமல்லாது, மியான்மர் முதல் இந்தோனேசியா வரை வாழும் சீனர்கள், உள்ளூர் மக்களால் வந்தேறுகுடிகளாக கருதப் படுகின்றனர். பல நாடுகளில் நடந்த இனக் கலவரங்களால் சீனர்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டனர்.

சீன வந்தேறுகுடி லீகுவான்யூவை ஆதரிப்பதற்கு நாம் போலித் தமிழர் சொல்லும் காரணங்கள் இவை தாம். ஒன்று, அவர் தமிழை ஆட்சி மொழியாக்கினார். நாம் போலித் தமிழர் பன்னாடைகளின் மனத்தைக் குளிர வைக்கும் வகையில், ராஜபக்சே சிங்களவர்களும் தமிழ் படிக்க வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வந்தார். அதற்காக நாம் போலித் தமிழர்கள் ராஜபக்சேவை கொண்டாடுவார்களா? (அதற்கு முன்னரே சிங்கப்பூர் மாதிரி சிறிலங்காவிலும் தமிழ் ஆட்சிமொழியாகி விட்டது.)

லீகுவான்யூ ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பரிந்து பேசினார். அதனால், அவர் நல்லவர் என்று நாம் போலித் தமிழர் கட்சியினர் சொல்லித் திரிகின்றனர். சொந்த நாட்டு மக்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி, சர்வாதிகார ஆட்சி நடத்திய லீகுவான்யூ, தமிழர்களுக்கு ஆதரவாக பேசி விட்டதால் நல்லவராகி விட்டாராம். சிங்கப்பூரில் மலே தேசியவாதிகளையும், சீனக் கம்யூனிஸ்டுகளையும் சிறையில் அடைத்து வருத்திய லீகுவான்யூ, நாம் போலித் தமிழர் பார்வையில் நல்லவராம்.

ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசிய லீகுவான் யூ, அயலில் இருக்கும் அச்சே மக்களுக்கு ஆதரவாக பேசாத காரணம் என்ன? இந்தோனேசியாவின் அச்சே மாநிலம், சிங்கப்பூருக்கு மிக அருகில் இருக்கிறது. மொழியால், கலாச்சாரத்தால் வேறுபட்ட அச்சே மக்கள், நீண்ட காலமாக தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டம் நடத்தி வந்தனர். அச்சே மாநிலத்தில், இந்தோனேசிய படையினர் நடத்திய இனப்படுகொலையை கண்டித்து, லீகுவான்யூ ஒரு வார்த்தை பேசி இருப்பாரா? 

ஒரு ஆட்சியாளர் நல்லவரா கெட்டவரா என்பதற்கு இவர் வைத்திருக்கும் அளவுகோல் "தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவது" என்பது தான். ஒருவேளை ராஜபக்சே தமிழர்களுக்கு ஆதரவாக பேசினாலும், இவர்கள் ராஜபக்சே நல்லவர் என்று சொல்லித் திரிவார்கள். ஏன் ராஜபக்சே பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக பேசவில்லையா? அதனால் சிறிலங்காவின் சர்வாதிகாரி நாம் போலித் தமிழர் பார்வையில் நல்லவராகி விட்டாரா?

ஈழப்போர் நடந்து கொண்டிருந்த காலம் முழுவதும்,சிங்கப்பூரில் லீகுவான்யூ புலிகளை தடை செய்திருந்தார். புலிகளின் முகவர்களாக செயற்பட்டவர்களை, அல்லது ஆதரவாக இருந்தவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருந்தார். இந்தோனேசியாவில் இருந்து புலிகளுக்கு சென்று கொண்டிருந்த ஆயுதக்கப்பலை காட்டிக் கொடுத்தார். 

சிங்கப்பூரில் சில ஆர்வலர்கள், வன்னியில் நடந்த இனப்படுகொலையில் கொல்லப் பட்ட தமிழ் மக்களுக்கு அஞ்சலி தெரிவிக்க கூட்டம் கூடினார்கள். அது தடைசெய்யப் பட்டது. அதை ஒழுங்கு படுத்திய சிங்கை வாசிகளை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்தார்கள். இவ்வளவும் செய்த லீகுவான்யூ, எல்லாம் முடிந்த பின்னர் தமிழர்களுக்கு ஆதரவானவராக நீலிக் கண்ணீர் வடித்தார். அதைக் கண்டு போலித் தமிழ் தேசியவாதிகள் பொருமுகிறார்கள்.

ஈழப்போர் முடிந்து ஐந்தாறு வருடங்கள் கடந்து விட்ட நிலையில், இனி அதைப் பற்றி பேசி அரசியல் நடத்த முடியாது என்ற நிலைக்கு சீமானும், நாம் தமிழரும் வந்து விட்டனர். சிறிது காலம் "முப்பாட்டன் முருகன்" என்று கூறி, இந்துத்துவா அடிப்படைவாதிகளை குஷிப் படுத்தும் வகையில் நடந்து கொண்டார்கள்.

நூறாண்டு காலமாக திராவிட எதிர்ப்பு அரசியல் செய்து வரும் பிராமணர்களின் மனத்தைக் குளிர வைத்தார்கள். சோழர்கள் காலத்தில், வட இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய சமஸ்கிருத பிராமணர்களை தமிழர்களாக ஏற்றுக் கொள்கிறார்கள். அதே நேரத்தில் தமிழை தாய்மொழியாக கொண்டவர்களை தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் என்று பிரித்துப் பேச ஆரம்பித்தார்கள்.

சீமானும், நாம் போலித் தமிழரும், "தமிழ்நாட்டை பிற மாநில வந்தேறுகுடிகள் நாசமாக்கி விட்டதாகவும், தமிழன் ஆண்டால் எல்லாம் சரிவரும்" என்றும் கொக்கரித்துக் கொண்டு திரிகின்றார்கள். தெலுங்கு, கன்னட, மலையாள பூர்வீகத்தை கொண்ட தமிழர்களை குறி வைத்துத் தாக்குகிறார்கள். அதே நேரம், மராட்டிய பூர்வீகத்தை கொண்ட மார்வாடிகள், சம்ஸ்கிருத பூர்வீகத்தை கொண்ட பிராமணர்கள் பற்றி கள்ள மௌனம் சாதிக்கிறார்கள். இந்த இரட்டை வேடத்தை "உண்மையான தமிழ் இன உணர்வு" என்று பிதற்றித் திரிகின்றனர்.

(தொடரும்)

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள் :
1. தமிழரின் சுயநிர்ணயத்திற்கு எதிரான "நாம் போலித் தமிழர்" கட்சி
2. நாம் தமிழர் + நாம் சிங்களர் : ஒரே இனவாத மரத்தின் இரண்டு கிளைகள்

2 comments:

Murali said...

//மராட்டிய பூர்வீகத்தை கொண்ட மார்வாடிகள்// மார்வாரிகள் இன்றைய இராஜஸ்தான் மாநிலத்தவர்கள் அல்லவா?

balakumar said...

Mr kalaiy you have to know something already language states seperated from madras presidency except some parts of kerala. So that time asked the language people to go to thier own states. tamil people drow from the states to tamilnadu but from seperated madras presidency periyar asked the other language people it is not necessary to go to thier own states that why tamil people coud not able to develope in thier own state this is the problem
Regards
Balakrishnan