Wednesday, March 30, 2016

சர்வதேச புலி அழிப்பாளர்களும் இருபது உலக நாடுகளும்


சோவியத் யூனியனுக்கும் புலிகளின் தமிழீழத்திற்கும் இடையிலான ஒற்றுமை என்ன? 
சோவியத் யூனியன் உருவான நேரம், இருபது உலக நாடுகள் சேர்ந்து அதனை அழிக்கப் பார்த்தன. ஆனால், அந்த அழித்தொழிப்பு போரில் தப்பிப் பிழைத்த சோவியத் யூனியன் எழுபதாண்டுகள் நிலைத்து நின்றது. முப்பதாண்டுகளாக இருந்த புலிகளின் de facto தமிழீழத்தை, இறுதிப் போரில் இருபது உலக நாடுகள் சேர்ந்து அழித்து விட்டதாக சொல்கிறார்கள்.

கம்யூனிசத்திற்கும் தமிழ் தேசியவாதத்திற்கும் இடையிலான ஒற்றுமை என்ன? 
சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் பின்னர் கம்யூனிசம் தோற்று விட்டதாக இன்றைக்கும் பலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் வலதுசாரி தமிழர்கள், புலிகளின் தமிழீழத்தின் வீழ்ச்சியின் பின்னர் தமிழ் தேசியவாதம் தோற்று விட்டதாக இன்னமும் பேசத் துணியவில்லை.

சோவியத் யூனியன், தமிழீழம் இரண்டினதும் அழிவுக்கு காரணமாக இருந்த சர்வதேச சக்தியின் பெயர் என்ன? 
ஏகாதிபத்தியம்

2001 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ம் திகதி. 9/11 என்று அழைக்கப் பட்ட நிகழ்வுக்குப் பின்னர், அமெரிக்க அரசு "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" ஒன்றை அறிவித்தது. அது ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து, தாலிபான், அல்கைதா இயக்கங்களை அழிப்பதற்கான போர் என்று அறிவிக்கப் பட்டது. உலகில் எல்லோரும் அப்படித் தான் நம்ப வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்த்தது. அதே நேரம், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் என்றொரு பட்டியலை தயாரித்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரும் அதில் இருந்தது.

பயங்கரவாதப் பட்டியலில் இருந்து தமது பெயரை எடுப்பதற்கு, புலிகள் இயக்கம் பகீரதப் பிரயத்தனம் எடுத்திருந்தது. கோடிக்கணக்கான டாலர் பணம் செலவிடப் பட்டது. அமெரிக்காவின் பிரபலமான வழக்கறிஞர்கள் அமர்த்தப் பட்டு வழக்காடினார்கள். ஹிலாரி கிளிண்டனின் தேர்தல் நிதியத்திற்கு மில்லியன் டாலர்கள் நன்கொடை வழங்கினார்கள். ஆனால், அமெரிக்க அரசு பட்டியலில் இருந்து பெயரை எடுக்க மறுத்து விட்டது. 

உலகில் வேறெந்த இயக்கமாவது இந்தளவு பணத்தை தண்ணீராக செலவழித்திருக்குமா என்பது சந்தேகமே. உங்களுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சுயரூபம் தெரியாவிட்டால், அதன் கடந்த கால வரலாற்றில் இருந்து அதைக் கற்றுக் கொள்ளுங்கள். வரலாற்றில் இருந்து படிப்பினை பெற விரும்பாத, அமெரிக்கா சார்பான தமிழ் வலதுசாரிகள், புலிகளையும், ஈழத் தமிழரையும் முள்ளிவாய்க்கால் வரை நகர்த்திச் சென்றார்கள். இருந்த போதிலும், தீக்கோழி மண்ணுக்குள் தலையை புதைப்பது போல, தமக்கு "எதுவும் தெரியாது" என்று எங்களை நம்பச் சொல்கிறார்கள்.

புலி ஆதரவாளர்கள், புலி எதிர்ப்பாளர்கள் மாதிரி, 2009 ம் ஆண்டுக்குப் பின்னர் "புலி அழிப்பாளர்கள்" என்றதொரு அணியும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த அணியில் ராஜபக்சே சகோதரர்கள் முதல் நாடு கடந்த தமிழீழக்காரர்கள் வரை ஒன்று சேர்ந்திருந்தார்கள். "சிங்கள இனப்படுகொலையாளிகளுடன் புலம்பெயர்ந்த புலி ஆதரவு அமைப்புகளை ஒப்பிடலாமா?" என்று கேட்கும் அப்பாவிகள் யாராவது இருந்தால், அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஐக்கிய நாடுகள் ஆணைக்குழுவே அதைப் பற்றிய விரிவான அறிக்கை சமர்ப்பித்து விட்டது.

மேற்கத்திய ஏகாதிபத்திய நலன்களுக்கு விரோதமான விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிப்பதே இந்தக் கூட்டமைப்பின் ஒரேயொரு இலட்சியமாக இருந்தது. புலிகளின் அழிவுக்குப் பின்னர் பதுக்கப் பட்ட பில்லியன் டாலர்களை தமக்குள் பங்கு பிரித்துக் கொண்டு, தமிழ் மக்களின் நெற்றிகளில் நாமம் போட்டார்கள். போர் முடிவதற்கும், அமெரிக்காவில் புலிகளின் பிரதானமான நிதி வழங்குனர் கைது செய்யப் படவும் நேரம் சரியாகவிருந்தது.

அமெரிக்க பங்குச் சந்தை வணிகர் ராஜா ராஜட்னம், அவரது நிறுவனமான Galleon Group hedge fund பெயரில் நடந்த முறைகேடுகளுக்காக கைது செய்யப் பட்டு, பதினோரு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டார். அமெரிக்க குடியுரிமை பெற்ற ராஜா ராஜரட்ணம் கொழும்பில் பிறந்தவர். யாழ்ப்பாண மேட்டுக்குடியை சேர்ந்தவர். ஹெட்ஜ் பண்ட்ஸ் முதலீட்டு நிறுவனங்கள், 2007 ம் ஆண்டு அமெரிக்க பொருளாதார நெருக்கடிக்கு மூல காரணமாக இருந்துள்ளன. அதன் விளைவாக, ஹெட்ஜ் பண்ட்ஸ் முகாமையாளர்கள் பலர் கைது செய்யப் பட்டனர்.

ராஜா ராஜரட்னமும் பங்குச்சந்தை சூதாட்டம் காரணமாக FBI புலனாய்வின் பின்னர் கைது செய்யப்பட்ட ஒருவர் தான். பிற்காலத்தில், அவருக்கும் புலிகளுக்கும் இடையிலான தொடர்புகள் தெரிய வந்தததால் தண்டனைக்காலம் நீடிக்கப் பட்டது. அமெரிக்காவில் இயங்கிய புலிகளின் முகவர் அமைப்பான TRO வுக்கு, மில்லியன் டாலர் நிதி வழங்கியதும் நிரூபிக்கப் பட்டிருந்தது. இறுதிப்போர் தொடங்குவதற்கு முன்னரே CIA க்கு வேலை செய்த கேபி, ராஜா ராஜரட்ணம் தொடர்பான தகவல்களை வழங்கியதாக சந்தேகிக்கப் படுகின்றது. (Convicted Galleon Group Trader Raj Rajaratnam Now Faces Tamil Terror Finance Lawsuithttp://www.ibtimes.com/convicted-galleon-group-trader-raj-rajaratnam-now-faces-tamil-terror-finance-lawsuit-1698732

மேற்குறிப்பிட்ட தகவலை, பல தமிழர்கள் இப்போது தான் முதல் முறையாக கேள்விப் படுவார்கள். அதற்குக் காரணம், இந்தத் தகவல் ஏற்கனவே அமெரிக்க ஊடகங்களில் வெளியான போதிலும், தமிழ் ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப் பட்டது. அதை மட்டுமா மறைத்தார்கள்? 

2006 ம் ஆண்டு, நியூ யோர்க் நகரில், புலிகளுக்கு ஆயுதங்கள் வாங்கச் சென்ற சிலரை, ஆயுதத் தரகர்கள் போன்று நடித்த FBI அதிகாரிகள் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து கனடாவிலும், அமெரிக்காவிலும், இருநாட்டு புலனாய்வுத் துறைகளின் கூட்டு நடவடிக்கையின் விளைவாக பன்னிரண்டு புலி ஆதரவு தமிழர்கள் கைது செய்யப் பட்டனர். அவர்கள் இஸ்ரேலிய கிபீர் விமானங்களை தாக்குவதற்கு வேண்டிய ஏவுகணை வாங்க முயன்றதாக FBI அறிவித்தது. ஈழப் போர் நடந்த காலத்தில், இஸ்ரேலிய கிபீர் விமானங்கள் புலிகளுக்கு பெரும் அழிவை ஏற்படுத்தி வந்தன.

புலிகளுக்கு ஆயுதங்கள் கடத்தியது தொடர்பாக கைது செய்யப் பட்டவர்கள் எல்லோரும் தமிழர்கள் அல்ல. இறுதிப்போர் தொடங்குவதற்கு முன்னர், இந்தோனேசியாவில் ஹாஜி சுபாண்டி (Hadji Subandi) என்ற இந்தோனேசிய - முஸ்லிம் வணிகர் கைது செய்யப் பட்டு, அமெரிக்காவுக்கு அனுப்பப் பட்டு FBI இனால் விசாரிக்கப் பட்டார். சிங்கப்பூரில் பால்ராஜ் நாயுடு (Balraj Naidu) சிங்கப்பூர் - தெலுங்கு வணிகர் கைது செய்யப் பட்டு நான்காண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது.

இந்தோனேசியா முதல் அமெரிக்கா வரையில் நடந்த, ஆயுதத் தரகர்கள் கைது சம்பவங்கள் எதை எடுத்துக் காட்டுகின்றன? அமெரிக்கா பயங்கரவாத பட்டியலில் போட்ட இயக்கங்களுக்கு ஆயுத விநியோகம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் தான் அவர்கள் கைது செய்யப் பட்டனர். உதாரணத்திற்கு, FBI வெளியிட்ட இந்தத் தகவல் அறிக்கையை பாருங்கள்: Singapore Man Sentenced to More Than Four Years in Prison for Conspiracy to Provide Material Support to a Foreign Terrorist Organization; https://www.fbi.gov/baltimore/press-releases/2010/ba121610.htm 

இப்போது ஒரு கேள்வி எழுகின்றது. மேற்குறிப்பிட்ட தகவல் எதுவும், புலிகளின் வெளிநாட்டு முகவர்களுக்கு அல்லது ஆதரவாளர்களுக்கு தெரியாதா? தெரியும்!

"இருபது உலக நாடுகள் சேர்ந்து நடத்திய அழித்தொழிப்பு போர்", உலக வரலாற்றில் இது தானா முதல் தடவையாக ஈழத்தில் மட்டும் நடந்துள்ளது? 
இல்லவே இல்லை! 
  • 1917 - 1922 : சோவியத் யூனியன் என்ற உழைக்கும் மக்களுக்கான சோஷலிச தாயகத்தை அழித்தொழிக்கும் போரில், பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் உட்பட இருபது உலக நாடுகள் பங்குபற்றின. மேற்கத்திய ஆக்கிரமிப்புப் படைகளினால் இலட்சக் கணக்கான ரஷ்ய மக்கள் இனப்படுகொலை செய்யப் பட்டனர்.

  • 1950 – 1953 : கொரிய மக்களின் சோஷலிச தாயகத்தை அழித்தொழிக்கும் போரில், அமெரிக்கா தலைமையின் கீழ் இருபது உலக நாடுகள் பங்குபற்றின. ஐ.நா. கொடியின் கீழ் இந்தியாவும் தனது படைகளை அனுப்பி இருந்தது. அந்தப் போரிலும், அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு ஆக்கிரமிப்புப் படைகளினால், இலட்சக் கணக்கான கொரிய மக்கள் இனப்படுகொலை செய்யப் பட்டனர்.


நம்பினால் நம்புங்கள். பனிப்போர் காலத்தில், அமெரிக்கா, சோவியத் யூனியன் என்று, உலகம் இரண்டாகப் பிரிந்த பின்னர் தான், "இருபது உலக நாடுகளின் கூட்டு இராணுவ நடவடிக்கை" பெருமளவு குறைந்தது. பனிப்போர் காலத்தில் நடந்த எந்தப் போரிலும், இரண்டு அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகள் கலந்து கொள்ளவில்லை. 

இந்த நிலைமை எப்போது மாறியது? மிகச் சரியாக, சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு, அதாவது "கம்யூனிசத்தின் தோல்விக்குப்" பிறகு உருவான மாற்றங்கள் இவை. தொண்ணூறுகளுக்குப் பிறகு தான், உலகில் அமெரிக்கா தலைமையிலான ஒற்றைத் துருவ அரசியல் உருவானது. 
மறுக்க முடியுமா?

பனிப்போரின் முடிவில் தோன்றிய அமெரிக்கா தலைமையிலான ஒரு துருவ அரசியலுக்குப் பின்னர் தான், "இருபது உலக நாடுகளின் கூட்டு இராணுவ நடவடிக்கைகள்" மீண்டும் உலகை பயமுறுத்தத் தொடங்கின. 
  • 1990 – 1991: குவைத் பிரச்சினையில் நடந்த வளைகுடா யுத்தம். ஈராக்கிற்கு எதிராக இருபதுக்கும் பேற்பட்ட உலக நாடுகள் கூட்டுச் சேர்ந்து போர் தொடுத்தன. ரஷ்யாவும், சீனாவும் கூட அந்தப் போரை ஆதரித்தன.
  • 1999 : யூகோஸ்லேவியா நாட்டை துண்டாடி, காலனிய அடிமைப் படுத்துவதற்காக நடந்த, நேட்டோ தலைமையிலான கூட்டு இராணுவ நடவடிக்கை. ரஷ்யா, சீனா, கைகளை கட்டிக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தன. 
  • 2001 - 2014 : அமெரிக்கா தலைமையின் கீழ் இருபதுக்கும் மேற்பட்ட உலக நாடுகள் கூட்டுச் சேர்ந்து ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தன. அந்தப் போர் இன்னும் முடியவில்லை. பத்து வருடங்களுக்குள் இலட்சக் கணக்கான ஆப்கானிய மக்கள் அமெரிக்க ஆக்கிரமிப்புப் படையினரால் இனப்படுகொலை செய்யப் பட்டனர். 
  • 2003 : ஈராக் மீதான அமெரிக்கப் படையெடுப்பு. இருபதுக்கும் மேற்பட்ட உலக நாடுகள் ஆதரவில் நடந்தது. ஒரு சில வருடங்களுக்குள், அமெரிக்க ஆக்கிரமிப்புப் படையினர் இலட்சக் கணக்கான ஈராக் மக்களை இனப்படுகொலை செய்தனர்.


இந்த உதாரணங்கள் போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

புலிகளை ஆதரிப்பதாக நடித்து தமிழ் மக்களை ஏமாற்றி வந்த வலதுசாரி போலித் தமிழ் தேசியவாதிகளே! ஏகாதிபத்தியம் என்றால் என்னவென்று தெரியா விட்டால், அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அதற்குப் பிறகு தமிழ் தேசியம் பேசலாம். தமிழீழம் கேட்கலாம். ஆனால், ஏகாதிபத்தியம் பற்றிய எந்த அறிவும் இல்லாமல், "இருபது நாடுகள் சேர்ந்து புலிகளை அழித்தார்கள்" என்று சொல்வதால் யாருக்கு இலாபம்? அது மீண்டும் அப்பாவி தமிழ் மக்களை ஏகாதிபத்திய நுகத் தடியின் கீழ் இன்னலுற வைக்கும் என்பதை நீங்கள் உணரவில்லையா? வரலாற்றில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளாதவர்கள், அதை மீண்டும் செய்வதற்கு சபிக்கப் பட்டுள்ளனர்.

புலிகளின் அழிவுக்கு நீங்கள் அடிக்கடி காரணம் காட்டும் "இருபது உலக நாடுகளின் கூட்டணிக்கு" ஒரு பொதுவான பெயர் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அது தான் மூலதன ஏகாதிபத்தியம்! அமெரிக்கா உலகம் முழுவதையும் தனது அதிகாரத்தின் கீழ் ஆள நினைக்கிறது. ரஷ்யாவும், சீனாவும் கூட முதலாளித்துவ நாடுகள் என்பதால் மூலதன ஏகாதிபத்தியத்தின் விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும். 

இந்த உண்மையை மட்டும் மறந்து விடாதீர்கள். இன்றைக்கும் உலகில் சோவியத் யூனியனும், கம்யூனிசமும் நிலைத்து நின்றிருந்தால், இருபது உலக நாடுகள் சேர்ந்து புலிகளை அழித்திருக்கவே முடியாது! பனிப்போர் கால இரு துருவ அரசியல் சதுரங்கத்தை பயன்படுத்தி, புலிகள் தப்பிப் பிழைத்திருப்பார்கள். பாமர மக்களுக்கு தெரிந்த இந்த உண்மை கூட, மெத்தப் படித்த அறிவாளிகளுக்கு தெரியவில்லை.

*****


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

No comments: