Thursday, March 31, 2016

இலங்கை போர்க்குற்றங்களில் பிரிட்டனின் பங்கு - வெளிவரும் இரகசியம்


முன்னாள் பிரிட்டிஷ் காலனியான இலங்கையில் நடந்த புலி அழிப்பு போரில் அல்லது தமிழினப் படுகொலையில் பிரிட்டனின் பங்கு என்ன? சிறிலங்கா அரசு இது குறித்து எதையும் கூறாமல் மௌனமாக இருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால், வலதுசாரி போலித் தமிழ் தேசியவாதிகளும் கள்ள மௌனம் சாதிப்பது ஏன்? இவர்கள் எல்லோருக்கும் எஜமான் பிரிட்டன். எஜமான விசுவாசம் கொண்ட அடிமைகளிடம் இருந்து தமிழ் மக்கள் உண்மைகளை எதிர்பார்க்க முடியாது.

ஈழப்போரை தொடக்கி வைத்ததில் மட்டுமல்ல, முடித்து வைத்ததிலும் பிரிட்டனின் பங்களிப்பு குறைத்து மதிப்பிடத் தக்கதல்ல. 1977 ம் ஆண்டு, அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன "போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்" என்று சொல்லி தமிழர்கள் மீது போர்ப் பிரகடனம் செய்த நாளில் இருந்தே, பிரிட்டனின் ஒத்துழைப்பு கிடைத்து வந்தது. அன்று ஜே.ஆரின் அறிவுறுத்தலுக்கு அமைய, "மார்க்சிய விடுதலைப் புலிகளை" ஒடுக்குவதற்கு, அன்றிருந்த பிரிட்டிஷ் பிரதமர் தாட்சரின் அரசு உதவியது. கிழக்கிலங்கையில் அமைக்கப் பட்ட விசேட அதிரடிப் படைக்கு, பிரிட்டிஷ் கூலிப் படையான SAS பயிற்சி வழங்கியது. (பார்க்க: "மார்க்சிய விடுதலைப் புலிகளை" ஒடுக்க உதவிய மார்கரெட் தாட்சர்!)

இறுதிப் போரிலும், பிரிட்டனின் இராணுவ ஆலோசகர்கள் நேரடியாக களத்தில் நின்றனர். வன்னியில் புலிகளையும், அவர்களோடு சேர்த்து ஒரு இலட்சம் தமிழ் மக்களையும் அழிப்பதற்கு ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்தார்கள். இது பற்றிய தகவல்கள் யாவும் இன்று வரையும் இரகசியமாக வைக்கப் பட்டுள்ளன. VICE எனும் ஆவணப் படங்களை தயாரிக்கும் நிறுவனம் எடுத்த பெரு முயற்சியின் பயனாக அது வெளிவந்துள்ளது. மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில், பிரிட்டிஷ் ஆவணக் காப்பகத்தில் இருந்த இரகசிய ஆவணங்களை பார்வையிட்டுள்ளது. (Exclusive: Secret Documents Reveal How Britain Funded Possible War Crimes in Sri Lankahttp://www.vice.com/en_uk/read/sri-lanka-british-police-training-phil-miller)

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களில், பிரிட்டிஷ் அரசு நேரடியாகவே பங்கெடுத்திருந்தது என்ற உண்மை தற்போது தெரிய வந்துள்ளது. இன்னமும் எல்லா இரகசிய ஆவணங்களும் வெளிவரவில்லை. இதுவரை பார்வைக்கு வந்த ஆவணங்களில் இருந்தே பல அரிய தகவல்கள் கிடைத்துள்ளன. அழித்தொழிப்பு போரை நடத்துவது எப்படி என்பது குறித்து, பிரிட்டிஷ் ஆலோசகர்கள் சிறிலங்கா படையினருக்கு ஆலோசனை வழங்கி உள்ளனர். வட அயர்லாந்தில், IRA இயக்கத்தை அழித்தொழிக்கும் வேலையில் ஈடுபட்ட அதிகாரிகள், தமது அனுபவங்களில் இருந்து கற்ற பாடங்களை இலங்கை அரசுடன் பகிர்ந்து கொண்டார்கள்.

இறுதிப் போர் நடந்த காலங்களில், பொலிஸ், இராணுவம் ஆகிய பாதுகாப்புப் படைகள் அன்றைய பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்சேயின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. ஆகவே, பிரிட்டிஷ் இராணுவ ஆலோசகர்கள் கோத்தபாயவுடன் கலந்தாலோசிக்காமல் இராணுவ நடவடிக்கைகளில் இறங்கி இருக்க முடியுமா? பிரிட்டன் ஒரு பக்கம் போர்க்குற்றங்களில் பங்கெடுத்துக் கொண்டே, ஐ.நா. சபையில் போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று இரட்டை வேடம் போட்டது. அப்பாவித் தமிழர்களும் பிரிட்டனின் மாய்மாலங்களை நம்பி ஏமாந்தார்கள்.

இறுதிப் போரில் அழித்தொழிப்பு நடவடிக்கைக்கு பிரிட்டன் எத்தகைய ஆலோசனைகளை வழங்கியது? அது எவ்வாறு நடைமுறைப் படுத்தப் பட்டன? யாழ் குடாநாட்டில் நடந்த அழித்தொழிப்பு நடவடிக்கைகள் பற்றி, ஏற்கனவே பலர் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். வன்னியில் போர் தொடங்குவதற்கு முன்னரே, யாழ் குடாநாட்டில் இயங்கிய புலி உறுப்பினர்கள் அனைவரும் ஒருவர் விடாது தீர்த்துக் கட்டப் பட்டனர். புலி உறுப்பினர்கள் மட்டுமல்லாது, அவர்களுடன் சேர்ந்து திரிந்த நண்பர்களும் கொலை செய்யப் பட்டனர்.

ஒரு ஊரில் ஒருவர் புலிகளை ஆதரிக்கிறார் என்று சந்தேகம் வந்தால் போதும். அரச புலனாய்வுத்துறையினர், தக்க தருணம் பார்த்திருந்து சுட்டுக் கொன்றனர். அவர் புலிகளுக்கு பெருமளவு உதவி செய்தாரா,  கொஞ்சமாக உதவினாரா என்ற கணக்கே இல்லை. சிலநேரம் நண்பன் என்பதற்காக ஒரு தடவை சந்தித்து பேசி இருக்கலாம். இதனால், ஒரு கட்டத்தில் யாழ் குடாநாட்டு மக்கள் உயிர் தப்புவதற்காக புலிகளுடனான அனைத்துத் தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டார்கள்.

அது எப்படி சாத்தியமாகிற்று? யாழ்ப்பாண மக்களைக் கேட்டால் கதை கதையாக சொல்வார்கள். சந்திக்கு சந்தி இருக்கும் சோதனைச் சாவடிகளில், சோதனை என்ற பெயரில் சில இளைஞர்கள் தடுத்து வைக்கப் படுவார்கள். அவர்கள் அப்பாவிகளாகவும் இருக்கலாம் என்பது படையினருக்கு நன்றாகத் தெரியும். தடுத்து வைக்கும் நபரை கொஞ்ச நேரம் வைத்து அடித்து உதைத்து விட்டு விட்டு விடுவார்கள். இவ்வாறு இரண்டு மூன்று தடவைகள் நடக்கும்.

சிறிது காலத்தின் பின்னர், குறிப்பிட்ட இளைஞருடன் படையினர் நட்புடன் பழகுவார்கள். அவரை நண்பனாக்கிக் கொள்வார்கள். புலனாய்வுத்துறை தொலைபேசி இலக்கத்தை கொடுத்து வழியனுப்பி வைப்பார்கள். இப்படித் தான் ஒற்றர்கள் உருவாக்கப் பட்டனர். படையினரால் ஒற்றர்களாக மாற்றப் பட்ட தமிழ் இளைஞர்கள், ஊருக்குள் நடமாடும் புலி உறுப்பினர்கள் பற்றிய தகவல்களை கொடுத்து வந்தனர். இது ஒவ்வொரு ஊரிலும் நடந்தது. அப்போது இந்த ஆலோசனைகளை வழங்கியவர் யார் என்பது யாருக்கும் தெரியாது.

பிரிட்டிஷ் இரகசிய ஆவணங்களில் இருந்து தெரிய வருவதாவது: "புலிகளை அழிக்க வேண்டுமானால் முதலில் ஒவ்வொரு ஊரிலும் பொது மக்களின் விழிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும்." ஆமாம், பிரிட்டிஷ் ஆலோசனை மிகச் சரியாக நிறைவேற்றப் பட்டது. வன்னியில் போர் தொடங்குவதற்கு முன்னரே, யாழ் குடாநாட்டில் ஒரு புலி இல்லாமல் ஒழித்துக் கட்டப் பட்டனர். கிழக்கு மாகாணத்தில், TMVP என்ற பெயரில் இயங்கிய முன்னாள் புலிப் போராளிகள் அரச படைகளுக்கு உதவினார்கள். பொலிஸ் படையில் சேர்த்துக் கொள்ளப் பட்ட TMVP உறுப்பினர்கள், புலிகளையும், ஆதரவாளர்களையும் இனங் கண்டு அழிப்பதற்கு உதவினார்கள். அதுவும் பிரிட்டனின் ஆலோசனை தான்.

இதே நேரம், கொழும்பு நகரிலும், தென்னிலங்கையின் பிற பகுதிகளிலும், புலிகளுக்கு ஆதரவான சிங்கள இடதுசாரி இயக்கம் ஒன்று இரகசியமாக இயங்கி வந்தது. அரசினாலும், ஊடகங்களினாலும் "சிங்களப் புலிகள்" என்று நாமகரணம் சூட்டப் பட்ட அவர்கள், கொழும்பில் சில குண்டுவெடிப்புகளை நடத்தி உள்ளனர். அரசு அவர்களை கண்டுபிடிப்பதற்கு உதவியாக சிங்கள மக்கள் மத்தியில் விழிப்புக் குழுக்களை உருவாக்கியது. இந்த விழிப்புக் குழுக்கள் சிங்களப் புலிகளை மட்டுமல்லாது, அவர்களது உறவினர்கள், ஆதரவாளர்களின் நடமாட்டங்களையும் கண்காணித்தார்கள். பொது மக்களின் விழிப்புக் குழுக்கள் வழங்கிய தகவல்களை அடுத்து பலர் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர்.

இதிலே முக்கியமான விடயம் என்னவெனில், சிங்கள மக்களின் விழிப்புக் குழுக்கள் சிங்களப் புலிகளை பிடிப்பதற்கு மட்டும் உதவவில்லை. அரசை விமர்சித்து வந்த ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகளையும் கண்காணித்து வந்தன. ராஜபக்சே ஆட்சிக் காலத்தில், தென்னிலங்கையில் எத்தனை சிங்கள ஊடகவியலாளர்கள் கொலை செய்யப் பட்டனர், பயமுறுத்தப் பட்டனர் என்பதை நான் இங்கே விபரிக்கத் தேவையில்லை.

அன்று நடந்த நீதிக்குப் புறம்பான படுகொலைகள், மனித உரிமை மீறல்களுக்கு பிரிட்டிஷ் அரசும் பொறுப்பு என்பது ஆச்சரியத்திற்குரியது. சிங்கள மக்கள் மத்தியில் விழிப்புக் குழுக்களை அமைக்க வேண்டுமென ஆலோசனை கூறியது யார்? வேறு யார், பிரிட்டிஷ் இராணுவ ஆலோசகர்கள் தான்.

எதற்காக பிரிட்டன் இலங்கை அரசை ஆதரிக்க வேண்டும்? இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களில் பங்கெடுக்க வேண்டும்? இந்து சமுத்திரத்தின் மத்தியில், இலங்கைத் தீவு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. சர்வதேச கப்பல் போக்குவரத்து நடக்கும் இடத்தில் உள்ளது. ஆகவே, அந்தப் பிராந்தியத்தில் அமைதி நிலவ வேண்டியது அவசியம். இலங்கையில் எழுந்த தமிழர்களின் கிளர்ச்சியை ஒடுக்குவது, ஏகாதிபத்திய நலன் சார்ந்த விடயம்.

நாங்கள் ஈழப்போரை புலிகளின் நீதியான அறப் போராட்டமாக கருதினால், ஏகாதிபத்தியத்தின் கண்களுக்கு அது பயங்கரவாதமாகத் தெரியும். நாங்கள் அதனை ஒட்டு மொத்த ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டமாக கருதினால், ஏகாதிபத்தியம் அதனை தனக்கு எதிரான புரட்சி என்று கணித்து வைத்திருக்கும். 

நடந்து முடிந்த இனப்படுகொலையில் இருந்து, தமிழர்கள் இன்னுமா பாடம் எதையும் கற்றுக் கொள்ளவில்லை? தமிழரின் விடுதலைப் போராட்டம் ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் என்பதில் இன்னுமா உங்களுக்கு சந்தேகம்? தமிழ் மக்களின் எதிரி சிங்களப் பேரினவாத அரசு மட்டுமல்ல. அதனை பின்னால் நின்று இயக்கும் மேற்கத்திய ஏகாதிபத்தியமும் தமிழர்களின் எதிரி தான்.

மேலதிக தகவல்களுக்கு:இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
தமிழ்ச்செல்வன் கொலையின் பின்னணியில் அமெரிக்கா? - இரகசிய CIA ஆவணம்

No comments: