Thursday, January 08, 2015

பாரிஸ் பத்திரிகை அலுவலக தாக்குதல் : மறக்கக் கூடாத சில குறிப்புகள்





பிரான்சில், பாரிஸ் நகரின் மையப் பகுதியில் உள்ள, சார்லி எப்டோ பத்திரிகை காரியாலயம், மூன்று தீவிரவாதிகளினால் தாக்கப் பட்டது. நடந்த சம்பவம் தொடர்பான ஆய்வுகள் எதுவும் இன்றி, எழுந்தமானமாக கருத்துக் கூறுவது, சமூகத்தில் பல எதிர்விளைவுகளை உண்டாக்கும்.

முகமூடி அணிந்த மூன்று ஆயுதபாணிகள், ரைபிள் துப்பாக்கிகளுடன் உள்ளே நுழைந்து, பத்திரிகை ஆசிரியரையும், மூன்று கார்ட்டூன் ஓவியர்கள், மற்றும் சில ஊடகவியலாளர்களை சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். அத்துடன், வெளியே காவலுக்கு நின்ற இரண்டு பொலிஸ்காரர்களையும் பக்கத்தில் சென்று தீர்த்துக் கட்டி இருக்கிறார்கள். மொத்தம் 12 பேர் பலியாகியுள்ளனர்.

ஏற்கனவே அந்தப் பத்திரிகை இஸ்லாமிய விரோத கார்ட்டூன் படங்களை பிரசுரித்து வந்தது. மூன்று வருடங்களுக்கு முன்னர் பெட்ரோல் குண்டு வீசப் பட்டது. அதனால் பொலிஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது. அதனால், கடும்போக்கு இஸ்லாமியவாதிகள், அல்லது அல்கைதா போன்ற இயக்கத்தினர் செய்திருக்கலாம் என பொதுவாக சந்தேகிக்கப் படுகின்றது.

ஆயினும், தாக்குதல் நடைபெற்ற முறையைப் பார்க்கும் பொழுது பல கேள்விகள் எழுகின்றன. அது ஒரு கமாண்டோ பாணியிலான தாக்குதல். நன்கு பயிற்சி பெற்ற ஆயுதபாணிகள், அமைதியாக பதற்றப் படாமல் கொலைகளை செய்துள்ளனர். பத்திரிகை அலுவலகத்தில் ஆசிரியர் மட்டத்திலான ஊழியர்களின் கூட்டம் நடைபெறுகின்றது என்ற துல்லியமான தகவல் தெரிந்திருக்கிறது. அந்த இலக்கை நோக்கி சென்று கொலைகளை செய்தவுடன், ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் வெளியேறி உள்ளனர்.

கொலையாளிகள் நன்றாக பயிற்சி அளிக்கப் பட்ட இராணுவ வீரர்கள் போன்று செயற்பட்டுள்ளனர். ரைபிள் துப்பாக்கிகளை கையாண்ட விதம், இலக்கை மட்டும் குறி வைத்து தாக்கியுள்ளமை, காரியமே கண்ணாக எந்தப் பதற்றமும் இன்றி அமைதியாக நடந்து கொண்டமை, இவை எல்லாம் சாதாரண தீவிரவாதிகளின் செயற்பாடுகளாக தெரியவில்லை.

Charlie Hebdo பத்திரிகை மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். அதன் அர்த்தம், சார்லி எப்டோ வின் இனவாத கார்ட்டூன்களை அங்கீகரிக்கிறோம் என்பதல்ல. 

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில், ஒரு மதத்திற்கு, சமூகத்திற்கு எதிரான துவேஷத்தை வெளிப்படுத்திய கார்ட்டூன்களை ஏற்றுக் கொள்ளவில்லை. அந்தப் பத்திரிகையின் சமூகப் பொறுப்பற்ற தன்மையை அலட்சியப் படுத்த முடியாது.

இலங்கையில் சிங்களப் பத்திரிகைகள், பல தடவைகள் தமிழர்களை மோசமாக சித்தரித்து கார்டூன்களை வெளியிட்டு வந்துள்ளன. அவற்றை நாங்கள் இனவாதம் என்றே ஒதுக்கி வந்துள்ளோம். சிங்களப் பத்திரிகையாக இருந்தாலும், பிரெஞ்சுப் பத்திரிகையாக இருந்தாலும், இனவாதக் கார்ட்டூன்கள் பிரசுரிப்பதை கருத்துச் சுதந்திரத்திற்குள் அடக்க முடியாது.

மூன்று வருடங்களுக்கு முன்னர், சிங்கள கார்ட்டூனிஸ்ட் ஒருவர், ஜெயலலிதாவை ஆபாசமாக வரைந்திருந்தார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்நாட்டில் பலர் கிளர்ந்தெழுந்தனர். ஜெயலலிதாவை ஆபாசமாக சித்தரித்த சிங்களப் பத்திரகையின் கார்ட்டூன் இனவாதம் என்றால், சார்லி எப்டோ பத்திரிகை முகமதுவை ஆபாசமாக சித்தரித்து, பல கார்ட்டூன் படங்களை வெளியிட்டதும் இனவாதம் தான்.

வெறுமனே மதத் துவேஷம் மட்டுமல்ல, இனத் துவேஷமும் அந்தக் கார்ட்டூன்களுக்கு பின்னால் மறைந்திருந்தன. ஐரோப்பாவில் எந்த நாட்டிலும், யூத மதத்தவரை புண்படுத்தும் கார்ட்டூன்கள் வெளியிட முடியாது. அது சட்டப் படி தடை செய்யப் பட்டுள்ளது.

Charlie Hebdo பத்திரிகை, ஏற்கனவே சில நிறவெறிக் கார்ட்டூன்களையும் பிரசுரித்திருந்தது. பிரான்ஸ் நாட்டில் நீதி அமைச்சராக இருக்கும் கருப்பின பெண்மணியை குரங்கு மாதிரி வரைந்திருந்தது. சார்லி எப்டோ என்ற ஊடகம் மீதான தாக்குதலுக்கு எதிராக, தன்னெழுச்சியாக கிளர்ந்தெழுந்த, ஐரோப்பிய மக்களின் தார்மீக கோபம், நியாயமாக இருக்கலாம். ஆனால், அவர்களின் உணர்வுகளை இஸ்லாமியருக்கு எதிரான துவேஷமாக திசைதிருப்பி விடும் வேலைகள் திரைமறைவில் நடந்து கொண்டிருக்கின்றன.

அது மத்திய கிழக்கில் வல்லாதிக்கப் போர்களுக்கு ஆதரவு திரட்டுவதாகவும் அமையக் கூடும். சிலநேரம், உள்நாட்டில் இனக் கலவரங்களை தூண்டி விடவும் உதவக் கூடும். இஸ்லாமிய வெறுப்புணர்வு "முஸ்லிம்களுக்கு மட்டுமே" எதிரானதல்ல. அது பிற மதங்களை பின்பற்றும் குடியேறிகள், அகதிகள் அனைவருக்கும் எதிரானது.

ஆகவே, ஊடகங்களின் மீதான அனைத்து வன்முறைகளையும் கண்டிப்போம். பாரிஸ் தாக்குதலில் பலியானவர்களுக்கு அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வோம். அதற்கும் அப்பால், கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையின் கீழ், இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு சமூகத்தை பிளவுபடுத்தும் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம்.

ஆகையினால்... எல்லோரும் சார்லி எப்டோவுக்கு பின்னால் அணிதிரளவில்லை என்பதை அறியத் தருவோம்.

#‎JeNeSuisPasCharlie‬

பாரிசில், Charlie Hebdo பத்திரிகை அலுவலகத்தில் நடந்த தாக்குதலில் பலியான 12 பேரில், காவல் கடமையில் இருந்த அஹ்மட் என்ற முஸ்லிம் பொலிஸ்காரரும் ஒருவர் என்பதையும் மறந்து விடக் கூடாது.

3 comments:

Good citizen said...

புடுங்கிதனமாய் பேசுவதில் சில பேர் கைத்தேர்ந்தவர்கள் !நீங்கள் எந்த வகை என்பதை நீங்களே எடைப் போட்டுக் கொள்ளுங்கள் ! பத்திரிக்கை தர்மம் இனவாதத்திற்கு எதிராக திரும்ப கூடாது என்னும் உங்கள் வாதம் நியாயமானதே ! ஆனால் அதற்கு எதிர்ப்பை தெரிவிக்க அகிம்சை முறையில் ஆயிரம் வழிகள் இருக்க ,,திட்டமிட்டு ,,பயிற்சி பெற்று ,,கனத்த ஆயுதங்களுடன் திடுமென உள்ளே புகுந்து 12 உயிர்களை இற்க்கமே இல்லாமல் பறித்த இஸ்லாமிய தீவிரவாத நாய்கள் ( இவர்களை மனிதர்கள் என்று குறிப்பிட்டால் உங்கள் பிறப்பில் எனக்கு சந்தேகம் எழும் )செய்தது தர்மம் என்று சொல்லப்போகிறீர்களா ? அப்படி உங்கள் வழிக்கே வந்தாலும் செய்து முடித்து இவர்கள் தற்கொலை செய்து கொண்டிருந்தால் மதத்திற்காக உயிர் விட்ட மாமேதைகள் லிஸ்டில் வருவார்கள் ! ஆனால் பன்னாடைகள் எல்லோரையும் கொன்றுவிட்டு தன் உயிரை காப்பாற்றி கொள்ள இன்னும் 6 உயிர்களை பலிகெடாவாக்கியது உங்ககள் பாசையில் மதத்திற்கெதிரான செயல் !பலே !பலே ! நல்ல வேளை நாடு உங்களை போன்ற நல்லவர்கள் ? ? ? !!!!!கையில் இல்லை !

காரிகன் said...

கலையரசன்,

இதுபோன்று மிக மலிவான முட்டாள்தனமான பதிவுகளை கொஞ்சம் தவிருங்கள். இவ்வளவு மேற்கத்திய வெறுப்பு கொண்டுள்ள நீங்கள் ஏன் அந்த நாடுகள் அளிக்கும் சௌகரியத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது புரியவில்லை. ஏதாவது அரேபிய நாடுகளில் வாசம் செய்வது உங்கள் எழுத்துக்கு அதிக வலு சேர்க்கும் என்று நினைக்கிறேன். முயற்சி செய்யுங்கள். தீவிரவாதத்தை மனசாட்சி உள்ள யாரும் உங்களைப் போன்று வித்தியாசமான கண் கொண்டு பார்க்கமாட்டார்கள்.

kumar said...

உன்னை போன்ற ஹிந்து,கிருத்துவ தீவிரவாத நாய்களே
இஸ்லாமிய தீவிரவாத நாய்கள் உருவாகவும் காரணம்.