Tuesday, July 12, 2011

சோதனையை எதிர்நோக்கும் தெற்கு சூடான் விடுதலை



(புதிதாக சுதந்திரமடைந்த தெற்கு சூடான் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்த விசேட அறிக்கை)

9 ஜூலை 2011, தெற்கு சூடான் என்ற புதிய தேசம் உதயமாகியது. அன்று முதல் ஆப்பிரிக்க கண்டத்தின் 54 வது நாடாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் 193 வது நாடாகவும் இணைந்துள்ளது. இந்தப் புதிய தேசத்தை அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் அங்கீகரித்துள்ளன. தெற்கு சூடானின் எண்ணை வளத்தை நுகரும் சீனாவும் இராஜதந்திர உறவுகளைப் பேண முன்வந்துள்ளது. இதற்கிடையே, தமிழ்த் தேசியவாதிகள் வழமை போலவே தெற்கு சூடானுடன், தமிழீழத்தை தொடர்பு படுத்தி பேச ஆரம்பித்து விட்டனர். இவ்விரண்டு தேசியப் பிரச்சினைகளுக்கு இடையில் சில ஒற்றுமைகள் காணப்பட்டாலும், இறுதிக் கட்ட தீர்மானம் தொடர்பாக பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. சூடான் நாட்டின் மொத்த எண்ணெய் வளத்தில் மூன்றில் இரண்டு பங்கு தெற்கு சூடானில் உள்ளது. ஒரு துளி எண்ணெய் கூட தமிழீழத்தில் கிடையாது என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. தெற்கு சூடான் சுதந்திர நாடாகிய போதிலும், அங்குள்ள வறுமை போன்ற பிரச்சினைகள் தீர்வதற்கு நீண்ட காலம் எடுக்கும். கடன் வழங்கும் நாடுகளும், இந்த நிலைமையைப் பயன்படுத்தி தெற்கு சூடானை அடிமைப் படுத்த முனையலாம். சுதந்திரமடைந்த தெற்கு சூடானின் இன்றைய நிலைமையை இங்கு ஆராய்வோம்.

ஈழப்போர் போன்று தான், தெற்கு சூடான் போரும் நீண்ட காலம் (1983 - 2005 ) இழுபட்டது. சூடான் இராணுவமும், பிரிவினை கோரிய தென் சூடான் மக்கள் விடுதலைப் படையும் (SPLA ), பல்லாயிரம் மக்களின் உயிரிழப்புகளுக்கும், சொத்தழிவுக்கும் காரணகர்த்தாக்கள். சுமார் இரண்டு மில்லியன் மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தார்கள். பெருமளவு இடம்பெயர்ந்தோர், சூடான் தலைநகரமான கார்ட்டூமில் தங்கிவிட, சிறு தொகை அகதிகள் அங்கிருந்து மேற்கு நாடுகளை நோக்கி புலம்பெயர்ந்தார்கள். இலங்கையிலும் இதே போன்ற நிலைமை காணப்பட்டதை, நான் இங்கே குறிப்பிட வேண்டியதில்லை. 2005 ம் ஆண்டு, இரண்டு பரம்பரை எதிரிகளும் ஒன்று சேர்ந்து பேச்சுவார்த்தையில் தீர்வு காண முன்வந்தார்கள். கார்ட்டூமின் "அரபு பேரினவாதி" பஷீரும், தெற்கு சூடானின் "தேசியத் தலைவர்" ஜோன் காரெங்கும் சந்தித்து சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். அந்த ஒப்பந்தப்படி, 2011 ஜனவரி மாதம், தெற்கு சூடான் விடுதலை குறித்து சர்வசன வாக்கெடுப்பு நடத்துவதென தீர்மானிக்கப் பட்டது.

இலங்கையிலும் 2002 ம் ஆண்டு, சிங்கள அரசுக்கும், புலிகளுக்கும் இடையில் மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் ஏற்பட்டது. நோர்வே மத்தியஸ்தத்துடன் சமாதான தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளும் நடந்தன. ஆனால், தெற்கு சூடான் சுதந்திரத்திற்கு வழிவகுத்த திருப்புமுனையான நிகழ்வை தமிழ்த் தேசியவாதிகள் புறக்கணிக்கின்றனர். இலங்கை, சூடான் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான மேலைத்தேய மத்தியஸ்தம் ஒரே மாதிரியாக அமைந்திருந்தது. ஆனால், சூடானில் எழுதப்பட்ட ஒப்பந்தத்தில், ஐந்து வருடங்களுக்குப் பின்னர் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படும் என்ற ஷரத்து சேர்க்கப்பட்டது. ஆனால் இது போன்றதொரு கோரிக்கையை, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட புலிகள் ஏனோ முன்வைக்கவில்லை. அத்தகைய கோரிக்கையை சிறிலங்கா அரசோ, அல்லது சர்வதேசமோ ஏற்றிருக்குமா என்பது வேறு விடயம். மத்தியஸ்தம் வகித்த நோர்வே கூட ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வு காணுமாறு வலியுறுத்தி வந்தது. இருப்பினும், பேச்சுவார்த்தையின் முடிவில் சமாதான ஒப்பந்தம் எட்டப்பட்டது என்பதையும், அதன் பெறுபேறாகக் கிடைத்த சர்வசன வாக்கெடுப்பு, தெற்கு சூடானின் சுதந்திரத்திற்கு வழி சமைத்தது என்பதை மறந்து விடலாகாது.

ஜனவரி 2011 ல் இடம்பெற்ற சர்வசன வாக்கெடுப்பில், 98 .3 சதவீத மக்கள் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்தனர். சர்வதேச கண்காணிப்பாளர்கள் பொறுப்பில், அமைதியாக அந்தத் தேர்தல் நடைபெற்றது. தெற்கு சூடான் விடுதலைக்காக போராடிய SPLA தான், புதிய தேசத்தின் அரசுப் பொறுப்பையும் ஏற்றுள்ளது. SPLA என்பது இராணுவப் பிரிவின் பெயர். SPLM என்பது கட்சியின் பெயர். கட்சிக்கும், இராணுவத்திற்கும் இடையிலான வித்தியாசம் மிகக்குறைவு. அது போலத்தான், தெற்கு சூடான் அரசு முழுவதையும் SPLM உறுப்பினர்கள் ஆக்கிரமித்துள்ளனர். தெற்கு சூடானின் தேசியத் தலைவர் ஜோன் காரெங் எதிர்பாராவிதமாக ஹெலிகாப்டர் விபத்தில் அகால மரணமடைந்து விட்டார். தற்போது முன்னாள் தலைவரின் வலதுகரமான Salva Kiir தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார். 2005 ம் ஆண்டு சமாதான ஒப்பந்தம் வந்த நாளில் இருந்து, தெற்கு சூடானில் SPLM ஆட்சி தான் நடந்து வருகிறது. பிற அரசியல் அமைப்புகள் SPLM ஆதிக்கத்தை எதிர்க்க முடியாமல் ஒதுங்கி விட்டன. புதிய தேசம் உதயமான அடுத்த நாள் பலரை ஆச்சரியப்பட வைத்த மாற்றம் ஒன்று இடம்பெற்றது. கார்ட்டூமில் ஆளும் கட்சியான, பஷீரின் "சூடான் தேசிய காங்கிரஸ்", தெற்கு சூடான் பாராளுமன்றத்திலும் ஒரு ஆசனத்தை வைத்திருக்கிறது. பெரும்பாலும் தெற்கு சூடானை சேர்ந்தவர்களே அங்கம் வகிக்கும் கட்சியின் மாநிலப் பிரிவு கார்ட்டூமுடனான தொடர்புகளைத் துண்டித்து விட்டு SPLM முடன் சேர்ந்துள்ளது.

புதிய தேசத்தின் பதவிகள் யாவும் SPLM செல்வாக்கு உள்ளவர்களுக்கே வழங்கப் படுகின்றது. சுதந்திர தேசத்தில் வாய்ப்புக் கிடைக்கும், என்று நம்பியிருந்த புலம்பெயர்ந்தோருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. தெற்கு சூடானில் முப்பது வருடங்கள் இடையறாது யுத்தம் நடந்து கொண்டிருந்த வேளை, அகதிகளாக புலம்பெயர்ந்த பலர் தாயகம் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக சூடானின் தலைநகர் கார்ட்டூமில் வாழ்ந்தவர்கள் பெருமளவில் திரும்பி வருகின்றனர். அவர்களில் பலர் தாயகத்தை கண்டிராத இளந்தலைமுறையை சேர்ந்தவர்கள். முப்பதாண்டு கால யுத்தம் ஒரு தலைமுறை இடைவெளியை ஏற்படுத்தி விட்டிருந்தது. புலம்பெயர்ந்த தெற்கு சூடானியர்கள் எதிர்காலம் குறித்த கனாக்களுடன் திரும்பி வந்தாலும், தாயகத்தில் அவர்களுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. "புலம்பெயர்ந்தவர்கள் அரபு பேரினவாதிகளுடன் ஒத்துழைத்த துரோகிகள்" என்று கூறுகின்றனர். கார்ட்டூமில் SPLA யின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இராணுவத் தாக்குதல்களுக்கு தகவல்களை வழங்கிய விசுவாசிகளுக்கும், அது தான் நிலைமை. "எமது தாயகத்தை விட்டோடியவர்கள் துரோகிகள்" என்று SPLM தெற்கு சூடானில் பிரச்சாரம் செய்து வந்ததை மறுக்க முடியாது. (மறுபக்கம் புலம்பெயர்ந்தோர் அனுப்பிய நிதியில் இயக்கம் வளர்ந்தது.) இருப்பினும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் அந்த நிலைமைக்கு காரணம். தெற்கு சூடான் அபிவிருத்தியால் பின்தங்கிய பகுதி. அங்கே தொழில் வாய்ப்புக் குறைவு காரணமாக ஏழ்மை நிலைமையில் இருந்து மீள்வது கடினம். அதற்கு மாறாக, கார்ட்டூமில் குடியேறியோர் தொழிற்துறை வளர்ச்சியடைந்த நகரத்தின் பலாபலன்களைப் பெற்றுக் கொண்டவர்கள். கடின உழைப்பால் வசதியான வாழ்வைப் பெற்றுக் கொண்டவர்கள். இந்த பொருளாதார வேறுபாடு, தெற்கு சூடானில் சமூகப் பிரச்சினையாக பரிணமித்துள்ளது.

கடந்த காலங்களில், புலம்பெயர்ந்தோர் மத்தியில் SPLM மின் பரப்புரைகள் பல எதிர்பார்ப்புகளை தோற்றுவித்திருந்தன. "தெற்கு சூடான் விடுதலை கிடைத்து விட்டால் போதும், நாடு சுபீட்சமடையும். சுதந்திரமடைந்த பின்னர், வறுமையும், சமுதாய வேற்றுமைகளும் மறைந்து விடும்." என்று பிரச்சாரம் செய்து புலம்பெயர்ந்தோர் ஆதரவைத் திரட்டினார்கள். "விடுதலையடைந்த தெற்கு சூடானில் பாலும், தேனும் ஆறாக ஓடும்," என்று சொல்லாத குறை. புலம்பெயர்ந்த மண்ணில் தெற்கு சூடான் தேசியத்தை தீவிரமாக ஆதரித்தவர்கள், தாயகம் திரும்பிய பின்னர் உண்மையை உணருகின்றனர். "இங்குள்ள குழந்தைகள் வாய்க்காலில் ஓடும் அசுத்த நீரை பருகுவதைக் கண்டேன். வறுமை காரணமாக வெறும் உப்புக்கட்டியைக் கூட ஆகாரமாக உண்கின்றனர். எனது பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணி கலங்கி நிற்கிறேன்..." இவ்வாறு கூறினார், கார்ட்டூமில் கணித ஆசிரியராக பணியாற்றிய ஒருவர். தெற்கு சூடானின் தலைநகரமாக மாறியுள்ள "ஜூபா"(Juba) வின் சனத்தொகை இரு மடங்காக உயர்ந்துள்ளது. நகரத்தில் குடியேறும் புதியவர்கள், காட்டுப்புறமாக உள்ள Güdel என்ற இடத்தில் வசிக்கின்றனர். தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவும் வறண்ட பிரதேசம் அது. "குடிநீர்க் குழாய் ஒன்று கூட இல்லை. பவுசரில் எடுத்து வரும் தண்ணீரை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும்." என்று அங்கலாய்த்தனர் புதிய நகர்வாசிகள்.

தெற்கு சூடான், சுதந்திரமடைந்த பின்னரும், வடக்கு சூடானில் தங்கியிருக்க வேண்டும். குறிப்பாக அதிக வருமானத்தை ஈட்டித் தரப் போகும் எண்ணை ஏற்றுமதிக்கு வடக்கு சூடானின் ஒத்துழைப்பு அவசியம். ஏற்றுமதிக்கு தேவையான குழாய்ப் பாதைகளும், துறைமுகங்களும் வடக்கு சூடானில் அமைந்துள்ளன. எண்ணெய் ஏற்றுமதியினால் கிடைக்கும் வருமானத்தில் கணிசமான பங்கு, வடக்கு சூடானுக்கு கிடைக்கும் வண்ணம் ஒப்பந்தம் போடப்பட்டது. மேலும், அமெரிக்கா போன்ற நாடுகளின் பொருளாதாரத் தடை விலக்கிக் கொள்ளப்படும். இத்தகைய காரணங்களால் தான்,கார்ட்டூம் அரசு தெற்கு சூடான் பிரிவினைக்கு சம்மதித்தது. எரிபொருள் விநியோகத்தை பொறுப்பேற்ற சீனா, வடக்கு சூடான் அரசுடனும், தெற்கு சூடான் அரசுடனும் புதிய ஒப்பந்தங்களைப் போட்டுள்ளது. யுத்தம் நடைபெற்ற காலத்தில், சீனா வடக்கு சூடான் அரசுக்கு ஆயுத விநியோகம் செய்துள்ளமை அனைவருக்கும் தெரியும். இருந்த போதிலும், மேலைத்தேய ஆதரவு கிட்டுமென்பதற்காக, SPLM ஒருபோதும் சீன எதிர்ப்பு பிரச்சாரம் செய்யவில்லை. அமெரிக்கா போன்ற நாடுகளின் நேரடி ஆதரவு இருந்த போதிலும், சுதந்திர தெற்கு சூடான் சீனாவை நட்பு நாடாக வைத்திருக்க வேண்டிய அவசியத்தை SPLM அரசு உணர்ந்திருந்தது. இனி வரும் காலங்களிலும், தெற்கு சூடான் எண்ணையை சீனாவே வாங்கப் போகின்றது. சந்தையில் எண்ணை விலை நிர்ணயிப்பதன் மூலமும், வட்டிக்கு கடன் வழங்குவதன் மூலமும் தான், அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் இலாபம் சம்பாதிக்கப் போகின்றன. தெற்கு சூடானை நிரந்தர கடனாளியாக்குவதன் மூலம், தமது காலனியாக வைத்திருப்பதே அவர்களின் நோக்கம்.

தெற்கு சூடான் பற்றிய முன்னைய பதிவுகள்:
1.
தெற்கு சூடான்: ஒரு புதிய தேசத்தின் ஜாதகம்
2. சூடான்: இஸ்லாமிய வடக்கும், கிறிஸ்தவ தெற்கும்

5 comments:

saarvaakan said...

நண்பரே,
வடக்கு சூடான் என்ன ஆகும் என்று எதுவுமே சொல்லவில்லையே!!!!!!!.
வடக்கு சூடானுடன் சேர்ந்து இருந்ததை விட தெற்கு சூடான் நன்றாகவே இருக்கும் என்றே எனக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது.உங்கள் கணிப்பு அதற்கு நெரெதிராக் இருக்கிறது.என்ன நட்க்கிறது என்றுபார்கலாம் .தென் சூடானின் எதிர்காலம் பல் எதிர்கால நாடுகளின் உருவா(க்கு)தலை தீர்மானிக்கும்.
நன்றி

ராஜ நடராஜன் said...

//ஒரு துளி எண்ணெய் கூட தமிழீழத்தில் கிடையாது என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.//

எண்ணெய் வளம் இருந்திருந்தால் வழமை போல் தமிழ் தேசியவாதிகள் இன்னும் ஏன் பல திசைகளிலும் ஒப்பீடு செய்து கொண்டிருக்கப் போகிறார்கள்:)

புது சுதந்திரம் தென் சூடானுக்கு சோதனைகளை உருவாக்கினாலும் உலக அரசியல் நீரோட்டத்தில் கலந்த பின்னர் அனைத்து சவால்களையும் எதிர்நோக்கும் வல்லமையை எண்ணெய் வள பொருளாதாரம் தரும்.

வாக்குரிமையென்ற ஷரத்தை விடுதலைப்புலிகளின் காலத்து பேச்சுவார்த்தையில் குறிப்பிட வில்லையென்று சுட்டிக்காட்டிய்மைக்கு நன்றி.இப்போதைய நிலையில் பழைய பேச்சு வார்த்தைகளின் சாரம்சங்களே கிடப்பில் போட்டு விட்ட பின்னர் அவற்றை தூசு தட்டிப் பார்ப்பதில் பலனில்லையென்ற போதிலும் புதிய களச்சூழ்நிலைகளின் அடிப்படையில் மக்கள் வாக்குரிமையையும் ஒருங்கிணைந்த இலங்கையா அல்லது தமிழீழமா என்பதை முன்னிலைப்படுத்துவோம்.

ADMIN said...

சார்வாகன் சொல்லவதைப் போல நடக்குமா? இல்லை நீங்கள் சொல்லும்படியாக நடக்குமா?

இறுதியில் என்னதான் நடக்கும் என்று பொறுத்திருந்து பார்க்கவேண்டியதுதான்..

Tsri1 said...

SPLM மின் பரப்புரைகள்
தெற்கு சூடான் விடுதலை கிடைத்து விட்டால் போதும், நாடு சுபீட்சமடையும். சுதந்திரமடைந்த பின்னர், வறுமையும், சமுதாய வேற்றுமைகளும் மறைந்து விடும்.
விடுதலையடைந்த தெற்கு சூடானில் பாலும் தேனும் ஆறாக ஓடும்.

புலிகளின் பரப்புரைகளும் அதே மாதிரியானவைகள் தான். புலிகளின் கட்டுபாட்டில் இருந்த பகுதிகளிலும் பாலும் தேனும் ஆறாக ஓடியதாக தானே புலி ஆதரவாளர்கள் பிரசாரம் செய்கிறார்கள். சூடான் -புலிஈழம் இரண்டிற்க்கும் உள்ள ஒற்றுமை இது.

எஸ் சக்திவேல் said...

நல்ல பதி கலையரசன். நம்மவர் திருப்ப "ஏன் திரும்பக் கத்தி தூக்க முடியாது?" எனக் கேட்கத் தொடங்கிவிடுவினம்.