Monday, January 10, 2011

தெற்கு சூடான்: ஒரு புதிய தேசத்தின் ஜாதகம்

இதனை எழுதிக் கொண்டிருக்கும் பொழுது, தெற்கு சூடான் சுதந்திரத்திற்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஆரம்பமாகி விட்டிருந்தது. சூடானின் சக்தி வாய்ந்த அதிபர் பஷீர், தான் புதிய தேசத்தை வரவேற்பதாக ஏற்கனவே தெரிவித்தார். சந்தேகத்திற்கிடமின்றி, பெரும்பான்மை தெற்கு சூடான் மக்கள் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களிக்கலாம். ஆகவே "சுதந்திர தெற்கு சூடான் தேசம் உதயமாகின்றது...." என்ற நேர்மறையான பார்வையில் இருந்தே எழுத வேண்டியுள்ளது. முடிவுகள் எதிர்பார்த்ததற்கு மாறாகவும் அமையலாம். ஜனாதிபதி கருத்துக் கணிப்பு முடிவுகளை ஏற்க மறுக்கலாம். அதற்கு பல காரணங்களைக் கூறலாம். அவர் கூறக் கூடிய அதிகபட்ச காரணம், தெற்கு சூடானில் சாத்தியமாகக் கூடிய புதிய மோதல்கள்.

இன்று வரை, சமாதான ஒப்பந்தம் குறிப்பிடத்தக்க பிரச்சினைகள் எதுவும் இன்றி நடைமுறைப் படுத்தப் படுகின்றது. இருப்பினும் அரசு, கிளர்ச்சியாளர்கள் ஆகிய இரண்டு தரப்பும் அந்தப் பிராந்தியத்தில் ஆயுதங்களைக் குவிப்பது தொடர்பான செய்திகள் கிடைத்துள்ளன. அரசு எனும் பொழுது, அரச படைகளைத் தவிர, துணை இராணுவக் குழுக்களே அச்சமூட்டுகின்றன. எந்தவொரு நாட்டின் உள்நாட்டு யுத்தத்திலும் அரச ஆதரவுடன் இயங்கும் துணைப் படைகள் சட்டத்திற்கு புறம்பாக இயங்குவதால், அவை யாருக்கும் பதில் கூறக் கடமைப் பட்டவர்களல்ல. சூடானும் அதற்கு விதி விலக்கல்ல. போர் நிறுத்த ஒப்பந்தம், துணைக் இராணுவக் குழுக்களின் ஆயுதங்கள் களையப் பட வேண்டும் என்று கூறுகின்றது. ஆனால் அது பெருமளவில் நடக்கவில்லை என்று தெரிய வருகின்றது. இலங்கையில் புலிகள் அமைப்பில் இருந்து கருணா குழு பிரிந்து சென்றதைப் போல, முன்னாள் SPLA தளபதி ஒருவரின் குழு அரச படைகளுடன் சேர்ந்தியங்கி வருகின்றது.

அரபு மொழி பேசும் அரச படையினரை எதிர்த்து போரிட்ட கிளர்ச்சிக் குழுவான SPLA இயக்கம் தெற்கு சூடானை பிரதிநிதித்துவப் படுத்தியது. வெளியுலகில் இஸ்லாமிய வடக்கு சூடானும், கிறிஸ்தவ தெற்கு சூடானும் போரில் ஈடுபட்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஊடகங்களும் அவ்வாறு தான் செய்தி தெரிவிக்கின்றன. ஆனால் கள நிலைமை அந்தளவு எளிமையாக புரிந்து கொள்ளக் கூடியதல்ல. ஆப்பிரிக்க பழங்குடியினங்கள் வாழும் தெற்கு சூடான், பிரிட்டிஷ் காலனிய காலத்தில் தான் இணைக்கப்பட்டது. ஏற்கனவே அபிவிவிருத்தியடைந்த பகுதியான வடக்கு சூடானில் தான், பிரிட்டிஷாரின் காலனிய ஆட்சியதிகாரம் நிலவியது. தெற்கு சூடானை "நாகரிகமடையச் செய்யும் பொறுப்பை" கிறிஸ்தவ மிஷனரிகளிடம் ஒப்படைத்தார்கள். அவ்வாறு தான் தெற்கு சூடான் கிறிஸ்தவ மயமாகியது. பல பழங்குடியின கிறிஸ்தவர்கள் இன்னமும் தமது மரபுகளைப் பேணி வருகின்றனர். உதாரணத்திற்கு, கிறிஸ்தவ போதனைக்கு மாறாக பல தார மணம் இப்போதும் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது.

வடக்கு சூடானை விட பெருமளவு பின்தங்கியுள்ள தெற்கு சூடானில், வெளிநாட்டு கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் தான, தர்மம் செய்து கொண்டிருக்கின்றன. மறைமுகமாக SPLA க்கும் நிதி கொடுத்ததாக தகவல். அரபு-இஸ்லாமிய பேரினவாதத்தை, கிறிஸ்தவ தெற்கு எதிர்த்துப் போரிடுகின்றது என்று அவர்கள் தான் செய்திகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். தலைநகர் கார்ட்டூமில் இஸ்லாமியவாதிகளின் மத்திய அரசும் அவ்வாறான கருத்துகளைப் பரப்பி வருகின்றது. கிறிஸ்தவ சபைகளுக்கு போட்டியாக, அரச ஆதரவு பெற்ற இஸ்லாமிய அமைப்புகளும் தெற்கு சூடானில் மதம் பரப்புகின்றன. இரண்டு மதங்களும் "ஆப்பிரிக்க காட்டுமிராண்டிகளை, நாகரிக மனிதர்களாக்கும் நற்பணியில்" ஈடுபட்டிருக்கின்றன!
எனது சூடானிய நண்பர்களிடம் இருந்து பலதரப்பட்ட கருத்துகளைக் கேள்விப்பட்டேன். வடக்கை சேர்ந்தவர் இடதுசாரி நண்பர்கள் தெற்கு சூடானின் சுயநிர்ணய உரிமையை ஆதரித்தனர். தெற்கு சூடானை சேர்ந்த நண்பர்கள் பொதுவாக SPLA ஆதரவாளர்கள். சூடானை ஆளும் வர்க்கம், அரபு பேரினவாதத்தையும், இஸ்லாமிய மத தூய்மைவாததையும் கொண்டிருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அது அரசியல் சந்தர்ப்பவாதம் மட்டுமே என்பது ஆழமாக பார்ப்பவர்களுக்கு புரியும். பெரும்பாலும் மோதல்களின் நோக்கம் பொருளாதார வளங்களை பங்கு போடுவதற்கான போட்டியாகவே உள்ளது.

தெற்கு சூடான் தனியாகப் பிரிந்து செல்லும் வாக்கெடுப்பு நடப்பதைக் கேள்விப்பட்ட பல தமிழினவுணர்வாளர்கள், "இது போன்றே நாளை எமக்கு தமிழீழம் கிடைக்கும்." என்று நம்பிக்கை தெரிவித்தார்கள். சாதாரண மக்கள் எப்போதும் பிரச்சினைகளை ஆழமாக அலசி ஆராயாமல், செய்திகளை வைத்து அரசியல் பேசுகின்றனர். தமிழர்கள் மட்டும் தானா அப்படி நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்? சூடானிலேயே டார்பூர், மேல் நைல்நதிப் பிரதேச மக்கள் எல்லாம் தமக்கு தனி நாடு தேவை என்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். சூடான் ஆப்பிரிக்காவிலேயே மிகப்பெரிய நாடு. அதற்குள் எத்தனையோ வேறு பட்ட மொழிகளைப் பேசும், அல்லது வேறுபாடான கலாச்சாரங்களைக் கொண்ட இனங்கள் வாழ்கின்றன.
தெற்கு சூடானை முன்மாதிரியாகக் கொண்டு, பிற மாநிலங்களில் போர்கள் உருவாகலாம். கார்ட்டூமில் மத்திய அரசு, அரசமைக்க இயலாத பலவீனமான நிலை ஏற்படலாம். ஏற்கனவே டார்பூர் பிரதேச போரில் இனப்படுகொலை நடந்ததாக சர்வதேச சமூகம் குற்றம் சாட்டி வருகின்றது. இது சம்பந்தமாக விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிமன்றத்தினால், ஜனாதிபதி பஷீர் குற்றவாளியாக காணப்பட்டார். சர்வதேச நீதிமன்றத்திற்கு சவால் விடும் வகையில், பஷீர் அரபு நாடுகளுக்கு விஜயம் செய்து வருகின்றார். சர்வதேச அரங்கில் இன்னுமொரு போர்க்குற்ற விசாரணை நாடகம். உண்மையில் சர்வதேசத்தின் அக்கறை டார்பூரின் மேல் அல்ல. போர்க்குற்றச் சாட்டுகள் கூட பஷீர் மீதான அழுத்தத்தை பிரயோகிப்பதற்காக மட்டுமே. சர்வதேசம் (இங்கே, அமெரிக்காவையும் மேற்கு ஐரோப்பாவையும் குறிக்கும்) தெற்கு சூடான் மீது தான் அதிக அக்கறை கொண்டுள்ளது. அந்தப் பிரச்சினைக்கு தாம் விரும்பும் தீர்வை, அதாவது தனியான தேசம், கொண்டு வர எத்தனித்தனர். அதில் வெற்றியும் கண்டு விட்டனர்.

மேலுக்கு சுதந்திரம் பற்றி பேசினாலும், தெற்கு சூடானில் இருக்கும் எண்ணெய் வளம் மீது தான் எல்லோரும் கண் வைத்துள்ளனர். சூடானில் இருந்து எண்ணெய் அகழ்ந்து ஏற்றுமதி செய்யும் தொழிற்துறையில் சீனா மட்டுமே ஈடுபடுகின்றது. சீனாவை விரட்டி விட்டு, மேற்குலக எண்ணெய்க் கம்பனிகள் நுழையப் பார்க்கின்றன. இன்று சூடானின் மொத்த வருமானத்தில், எண்ணெய் உற்பத்தி 50 % பங்கை வகிக்கின்றது. தெற்கு சூடான் தனி நாடானால், அதன் நூறு வீத வருமானமும் எண்ணெயில் இருந்து தான் கிடைக்கும். பிரிவினைக்கான வாக்கெடுப்புக்கு முன்னர் எட்டப்பட்ட ஒப்பந்தப் படி, எண்ணெய் வருமானத்தில் அரைவாசிப் பங்கு, வடக்கு சூடானுக்கும், அரைவாசி தெற்கு சூடானுக்கும் செல்ல வேண்டும்.

மேலும் வடக்கு சூடானுக்கும், தெற்கு சூடானுக்கும் நடுவில் இருக்கும் அபெய் மாகாணம் தனியான வாக்கெடுப்பை நடத்துகின்றது. எந்த நாட்டுடன் சேர்வது என்பது குறித்து அந்த மாகாண மக்கள் முடிவு செய்யப் போகின்றார்கள். அந்த முடிவு மிக முக்கியமானதாக கருதப் படுகின்றது. ஏனெனில் மற்ற பகுதிகளை விட அதிகளவு எண்ணெய் அபெய் மாகாணத்தில் காணப்படுகின்றது. இன்னொரு விடயமும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும். தெற்கு சூடான் இறைமையுள்ள தனி நாடு என்ற அந்தஸ்தைப் பெற்றாலும், அது வெறும் அரசியல் சுதந்திரம் மட்டுமே. பொருளாதார ரீதியாக வடக்கு சூடானில் தங்கியிருக்க வேண்டும். வெளிநாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் குழாய்கள் வடக்கு சூடானூடாக சென்று தான் கடலை அடைகின்றன. இதனால் வடக்கு சூடானும், தெற்கு சூடானும் இரு தரப்பு நலன்களைக் கருத்தில் கொண்டு நல்லுறவைப் பேண வேண்டியிருக்கும்.

சூடான் குறித்த முன்னைய பதிவுகள்:
சூடான்: இஸ்லாமிய வடக்கும், கிறிஸ்தவ தெற்கும்
சூடான்: எண்ணைக்காக பிரிவினை கோரும் டார்பூர்
நைல் நதி: ஆப்பிரிக்காவின் நீளமான இரத்த ஆறு

4 comments:

கவி அழகன் said...

சிறந்த ஒரு படைப்பு

தமிழ் உலகம் said...

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்

Kalaiyarasan said...

தெற்கு சூடான் தனி நாடானால் விளையப்போகும் நன்மைகள் என்ன?
தெற்கு சூடானில் ஒரு மேட்டுக்குடி உருவாகும். எண்ணெய் ஏற்றுமதி வருமானத்தால் வளம் பெற்ற வர்க்கமாக இருக்கும். சூடான் அரசைப் பொறுத்த வரை மேற்குலகினால் தனிமைப் படுத்தப்படும் பொருளாதார தடைகளில் இருந்து விடுபடலாம். குறிப்பாக ஜனாதிபதி பஷீர் மீதான போர்க்குற்ற விசாரணை கிடப்பில் போடப்படலாம். இதைத் தவிர தெற்கு சூடான் மக்களுக்கு எந்த நன்மையையும் விளையாது.
சோறா, சுதந்திரமா எது முக்கியம்?

செந்திலான் said...

தேசியத்தை விட வயிறு முக்கியம் என்ற உங்கள் "தோழரின்" கருத்தை மறைமுகமாக தூவுகிறீர்கள் என்பது திண்ணம். ஆனால் நீங்கள் ஒன்றை மறந்து விடுகிறீர்கள் அதாவது வயிறை விடவும் உயிர் முக்கியம் அது தினம் தினம் மரணம் துரத்தும் இலங்கையில் சாத்தியமில்லை அதற்கு நிச்சயம் ஒரு நாடு தேவை அப்பொழுது தான் நிம்மதியாய் ஏதாவது வேலை செய்து வயித்தக் கழுவ முடியும். அதனால் தான் உங்கள் தோழரும் தப்பி சென்று உயிரைக் காப்பாற்றிக் கொண்டு இப்பொழுது உதார் விட்டுக்கொண்டுள்ளார்.