Monday, March 23, 2009

சூடான்: இஸ்லாமிய வடக்கும், கிறிஸ்தவ தெற்கும்

ஆபிரிக்காவின் நிலப்பரப்பால் பெரிய நாடான சூடானின் அரபு-இஸ்லாமியப் பேரினவாத அரசுக்கும், தென்பகுதி ஆபிரிக்கப் பழங்குடியின மக்களின் விடுதலை இயக்கத்திற்கும் இடையில் நடந்த, இலட்சக்கணக்கான மக்களைப் பலிகொண்ட இருபதுவருட யுத்தம் மூன்றாம் தரப்பு மத்தியஸ்த்தினால், வெளிநாட்டு நிர்ப்பந்தங்களால், கென்யாவில் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டு, தீர்வு காணப்பட்டுள்ளது. மத்திய கிழக்கிற்கும், ஆபிரிக்காவிற்குமிடையில் சிக்குண்ட சூடான், ஆங்கிலேயரின் காலனித்துவ ஆட்சியில் உருவாக்கப்பட்ட நாடுகளில் ஒன்று.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, வடக்கே எகிப்திய நாகரீகம் உச்சத்தில் இருந்த அதே காலகட்டத்தில் இன்று சூடான் இருக்குமிடத்தில் "நுபியா" என்ற ஆபிரிக்கப் பேரரசு இருந்தது. நுபியாவில் சிறப்புற்றிருந்த பண்டைய கறுப்பின நாகரீகம் அழிந்ததற்கு வடக்கேயிருந்து வந்த எகிப்தியப் படையெடுப்பும் , பிற்காலத்தில் வந்த இஸ்லாமிய- அரேபியரின் படையெடுப்பும் முக்கிய காரணங்கள். 1500 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாமென்ற புதிய மதத்தைப் பரப்ப வந்த அரேபியர் சூடானின் வடபகுதியல் தங்கிவிட்டதுடன் உள்ளூர் நுபியப் பெண்களையும் மணம் முடித்தனர். இதனால்தான் இவர்களின் சந்ததியான சூடானிய அரேபியர்கள், பிற அரேபியரிடமிருந்து வித்தியாசமாக, கருநிற மேனியுடையவராகக் காணப்படுகின்றனர். உண்மையில் "அரேபியர்" என்ற சொல்லின் அர்த்தம் அரபுமொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களைக் குறிக்கும்.

பிற மத்திய கிழக்கு நாடுகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த வடக்குச் சூடானில் இஸ்லாமிய நாகரீகம் வளர்ந்தது. அதேநேரம் தெற்குச் சூடானில் வாழ்ந்த ஆபிரிக்கப் பழங்குடியினர் தமது பண்டைய மதநம்பிக்கைகளை, மரபுப்பழக்கங்களை (இன்றுவரை) பின்பற்றி வருகின்றனர். 19ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் சூடான் முழுவதையும் தமது காலனித்துவ ஆட்சியின் கீழ் கொண்டுவந்த போதும் இந்த "வடக்கு-தெற்கு" முரண்பாடு தொடர்ந்தது. புதிய வகை ஆட்சிமுறையை, நிர்வாக முறையை அறிமுகப்படுத்திய ஆங்கிலேயர்கள் அதற்காக அரேபியச் சூடானியரை மட்டும்தான் பயிற்றுவித்தனர். இதனால் சுதந்திரத்தின் பின்பு இவர்களின் கையில் ஆட்சியதிகாரம் கையளிக்கப்பட்டது.

ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூட்சி சூடானிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இஸ்லாமிய-அரேபியர்கள் ஆங்கிலேயரினால் செல்லப்பிள்ளைகள் போலவும், பழங்குடியின மக்கள் மாற்றாந்தாய் பிள்ளைகள்போலவும் நடத்தப்பட்டனர். பாடசாலைகள், பல்கலைக்கழகம், நிர்வாக அலகுகள் எல்லாம் வடக்கே மட்டும் கட்டப்பட்டன. தெற்கின் தலைவிதி "கடவுளின் பொறுப்பில்" விடப்பட்டது. கிறிஸ்தவ மதச்சபைகளிடம் பழங்குடியின மக்களை "நாகரீகப்படுத்தும்" பணி ஒப்படைக்கப்பட்டது. தெற்குச் சூடானிய மக்கள் வடக்கே வந்து வேலை செய்யவோ, குடியேறவோ அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் தென்பகுதி இன்றுவரை அபிவிருத்தியடையாமலே காணப்படுகின்றது.

சுதந்திரத்தின் பின்பு, ஆங்கிலேயரிடமிருந்து ஆட்சிப்பொறுப்பைப் பெற்றுக்கொண்ட இஸ்லாமிய-அரேபிய அரசாங்கம் தனது பேரினவாத முகத்தை வெளிக்காட்டியது. தெற்கில் செயற்பட்ட கிறிஸ்தவ மதப் பிரச்சாரச் சபைகளை நாட்டைவிட்டு வெளியேறப்பணித்தது. தொடர்ந்து, தெற்குப்பகுதியல் பல்வேறு மொழிகள் பேசும் பழங்குடியின மக்கள் அரபு மொழியைப் பயிலவேண்டுமெனக் கட்டாயப்படுத்தியது. சில வருடங்களின் பின்பு பழங்குடியினரின் அதிருப்தி வன்முறையாக வெடித்தது. இராணுவத்தில் இருந்த தென்பகுதி வீரர்கள் அரசுக்கெதிரான கிளர்ச்சியை நடாத்தினர். குறுகிய காலமே நீடித்த இந்தக் கிளர்ச்சி ஆயிரக்கணக்கான மக்களைப் பலிகொண்டு இறுதியில் சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுற்றது. தெற்குப் பகுதிக்குப் (பெயரளவில்) பிரதேசச் சுயாட்சி வழங்கப்பட்டது.

இதற்கிடையில், வடக்கே திடீர்ச் சதிப்புரட்சிமூலம், 1969 ல், கேர்ணல் நிமேரி ஆட்சிக்கு வந்தார். இவர் ஆரம்பகாலங்களில் இடதுசாரிக் கட்சிகளால் ஆதரிக்கப்பட்டார். ஆனால் விரைவிலேயே நிமேரியின் சாயம் வெளுத்துச் சுயரூபம் வெளிப்பட்டது. வலதுசாரி இஸ்லாமிய மதவாதக் கட்சிகளுடன் நிமேரி நெருங்கிய உறவு கொள்ளவே கம்யூனிஸ்ட் கட்சி சதிப்புரட்சிமூலம் ஆட்சியைக் கைப்பற்ற எத்தனித்தது. ஆனால் அயல்நாடுகளின் இராணுவ உதவிகளுடன் நிமேரி இந்தச் சதியை முறியடித்ததுடன் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் வேட்டையாடப்பட்டு சிறையிலிடப்பட்டனர். இதைத்தொடர்ந்து 1980 வரை சர்வாதிகார ஆட்சி நடாத்திய நிமேரி அமெரிக்கா போன்ற நாடுகளின் நண்பராகவிருந்தார்.

1983 ல் சவூதி ஆரேபியாவுடனும் நெருங்கிய நட்புக்கொண்டிருந்த நிமேரியின் அரசு, மத அடிப்படைவாத சவூதியின் விண்ணப்பத்திற்கிணங்க, நாடுமுழுவதும் இஸ்லாமிய "ஷரியா" சட்டத்தை அமுல்படுத்தியது. இது இஸ்லாமியரல்லாத தென்சூடானியர் மத்தியில் எதிர்ப்பலைகளைத் தூண்டிவிடவே "பொர்" என்ற நகரிலிருந்த இராணுவ முகாம் அரசுக்கெதிராகக் கலகம் செய்தது. இக்கலகத்தை அடக்கவென அரசால் அனுப்பப்பட்ட அதே 'பொர்' ஐப்பிறப்பிடமாகக் கொண்ட ஜோன் கரெங் என்ற இராணுவத் தளபதி கலக்காரர்களுடன் சேர்ந்து கொள்ளவே பிரச்சினை சூடுபிடித்தது. ஜோன் கரெங் தலைமையில் "சூடான் மக்கள் விடுதலை இயக்கம்" உருவானது. இதன் இராணுவப்பிரிவான "சூடான் மக்கள் விடுதலை இராணுவம்"(SPLA) அரசுக்கெதிரான ஆயுதப்போராட்டத்தைத் தீவிரப்படுத்தியது. போராட்டம் தொடங்கிச் சில வருடங்களிலேயே அரச படைகள் நகரங்களில் இருந்த முக்கிய இராணுவ முகாம்களுக்குள் முடங்கிக் கொள்ளவே அவர்களைச் சுற்றிவளைத்து நின்ற SPLA போராளிகள் நாட்டுப்புறங்களைக் கட்டுப்படுத்தினர்.

SPLA இனர் ஆரம்ப காலங்களில் சோஷலிசம் கதைத்தாலும், பின்னர் இப்போக்கைக் கைவிட்டு விட்டு அமெரிக்கக் கிறிஸ்தவ சபைகளுடன் உறவை ஏற்படுத்திக் கொண்டனர். அமெரிக்க அரசு கென்யா வழியாக ஆயுதத் தளபாடங்களை அனுப்பி உதவியது. SPLA ன் அரசியற் கொள்கைகள், சித்தாந்தங்கள் தெளிவற்றன. தென்சூடானின் பிரிவினையா அல்லது சுயாட்சியா எனபதிலும் குழப்பம். மேலும் ஜேன் கரெங்கின் 'டிங்கா' இனத்தவரே இயக்கத்தில் அதிகம் இருப்பதாகக் குற்றம் சாட்டி பிற இனங்களைச் சேர்ந்த ஆயுதக் குழுக்களின் மோதல்களும் ஆங்காங்கே நடந்துள்ளன. ஜோன் கரெங்கின் தலைமையுடன் முரண்பட்டு பிரிந்து சென்ற நசீர் குழு (குறிப்பிட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்) தான் SPLA ல் இடம்பெற்ற பெரிய பிளவு. இவர்களுக்கிடையிலான மோதலைப் பயன்படுத்திக்கொண்ட அரசபடைகள் பெருமளவு முனைப்புடன் (பிரான்ஸிலிருந்து பெற்ற) நவீன ஆயுதங்களுடன் படையெடுத்தது. SPLA ன் கட்டுப்பாட்டில் இருந்த பல இடங்கள் கைப்பற்றப்பட்டன.

தொண்னூறுகளின் ஆரம்பத்தில் நடந்த சதிப்புரட்சியின் மூலம் ஜெனரல் பஷீர் ஆட்சியைப்பிடித்து இராணுவ அரசை அமைத்ததுடன், சூடானை இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பாதையில் இட்டுச்சென்றார். முஸ்லீம் சகோதரத்துவக் கட்சியும் அதன் தலைவரான பாரீஸில் சட்டக்கல்வி பயின்ற ஹசன் துரபியும்தான் பஷீருக்கு ஆதரவாக் கொள்கை வகுத்துக் கொடுத்தவர்கள். ஓசமா பின் லாடனுக்கும் அவரது போராளிகளுக்கும் கூட சூடானில் அடைக்கலம் வழங்கப்பட்டது. சூடானின் போக்கில் வெறுப்படைந்த அமெரிக்க அரசு, ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன் இந்நாட்டுக்கெதிரான பொருளாதாரத்தடைகளை விதித்தது. 1998 ம் ஆண்டு சூடானில் மலேரியாத் தடுப்பு மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையொன்றில் இரசாயன ஆயுதங்கள் தயாரிப்பதாகக் குற்றம் சாட்டி, அமெரிக்க அரசு ஏவுகணை வீசி அத்தொழிற்சாலையை அழித்தது. இதன் விளைவாக பத்தாயிரம் நோயாளிகள் மருந்து கிடைக்காமல் மலேரியாவால் இறந்துபோன செய்தியை எந்தவொரு சர்வதேசச் செய்தி நிறுவனமும் கவனத்தில் எடுக்கவில்லை.

சர்வதேச மட்டத்தில் அமெரிக்கா கொடுத்த அழுத்தம் காரணமாக சூடான் பின்லாடனை வெளியேற்றியது. தொடர்ந்து மெல்ல மெல்ல அமெரிக்காவுடனும் இராஜதந்திர உறவுகளை விரும்புவதாகக் காட்டிக்கொண்டது. 11 செப்டம்பர் 2001 ல் மாறிய உலகைப்பார்த்து சூடானும் ஒரேயடியாக மாறிவிட்டது. ஒரு தசாப்தமாக சூடானில் அமெரிக்கக் கம்பனிகள் விட்ட வெற்றிடத்தை பிரான்ஸ், சீனக் கம்பனிகள் நிரப்பியுள்ளன. சூடானில் எண்ணையகழும் வேலையையும் அவை பொறுப்பெடுத்துள்ளன. மேற்குறிப்பிட்ட காரணங்களால் பொருளாதாரத் தடை மெல்ல மெல்லத் தளர்த்தப்பட்டது.

சூடான் அரசாங்கமே இறங்கி வருகையில் SPLA கிளர்ச்சியாளருக்குத் தொடர்ந்து உதவி செய்ய வேண்டிய தேவையிருக்கவில்லை. அனுமார் வால்போல் இழுபட்டுச் செல்லும் உள்நாட்டு யுத்தம் இனியும் தொடர்ந்தால் பெற்றோலிய உற்பத்தி போன்ற பொருளாதாரத்தை பாதிக்கும் என அச்சம் தெரிவிக்கப்பட்டது. இதனால் அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் நிர்ப்பந்தம் காரணமாகவே சூடானிய அரசும் SPLA ம் பேச்சுவார்த்தைக்குச் சம்மதித்ததாகக் கருதப்படுகின்றது.



சூடான் தொடர்பான முன்னைய பதிவு:

சூடான்: எண்ணைக்காக பிரிவினை கோரும் டார்பூர்

4 comments:

தங்கராசு நாகேந்திரன் said...

மிகத் தெளிவான தகவல்கள் உண்மையிலேயே மிகுந்த பயனுள்ளதாக இருந்தது பகிர்வுக்கு நன்றி

Kalaiyarasan said...

இந்தக் கட்டுரை சமீபத்திய தகவல்களை தெரிவிக்கும்.

தெற்கு சூடான்: ஒரு புதிய தேசத்தின் ஜாதகம்

vilvam said...

சூடான் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள உதவியது இந்தக் கட்டுரை

vilvam said...

சூடான் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள உதவியது இந்தக் கட்டுரை