Monday, October 25, 2010

சியோனிஸம்: ஏகாதிபத்தியத்தின் நவ காலனிய முகம்

["தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?"]
(பகுதி: ஐந்து)

"தமிழ் சியோனிஸ்ட்கள்" இருக்க முடியுமா? "ஆம்" என்று பதிலளிக்கின்றனர் யூத சியோனிச சித்தாந்திகள். ஒருவர் சியோனிஸ்ட் என்பதற்கு அவர்கள் கூறும் வரைவிலக்கணம் இது: "நீங்கள் யூதர்களை தனி இனம் என்று நம்புகிறவரா? யூதர்களின் தாயக உரிமையை ஏற்றுக் கொள்கிறவரா? அப்படியானால், இஸ்ரேலில் வசிக்கா விட்டாலும், யூதராக இல்லாவிட்டாலும், நீங்கள் ஒரு சியோனிஸ்ட்!" இஸ்ரேலுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கும் தமிழர்களுக்கு கச்சிதமாகப் பொருந்தும் வாக்கியங்கள் இவை.
If you believe that the Jews are a people, and support the right of the Jews to a national home, and you are willing to stand up for that right when it is challenged, then you can call yourself a Zionist, whether or not you belong to any organized Zionist group or accept any "official" definition, and whether or not you live in Israel or plan to live in Israel - and whether or not you are Jewish. (http://www.zionism-israel.com/zionism_definitions.htm )

"இரண்டு, மூன்று யூத மதகுருக்கள் (Rabi) ஒன்று சேர்ந்தால், அங்கே சண்டை சச்சரவு ஏற்படும்." என்பது ஒரு யூத பழமொழி. யூதர்கள் பல வகையான அரசியல் கருத்துகள் கொண்டவர்கள் என்பது இன்று வரை யதார்த்தமான விடயம். ஆரம்பத்தில் இருந்தே சியோனிஸ்ட் கொள்கையை பின்பற்றுபவர்கள், ஒன்றில் முதலாளித்துவ வலதுசாரிகளாக, அல்லது சோஷலிச இடதுசாரிகளாக இருந்து வருகின்றனர். இந்தப் பிரிவினர் ஒருவரோடு மற்றவர் கதைப்பதில்லை. இரண்டு வேறு உலகங்களில் வாழ்கின்றனர். ஆனால் இஸ்ரேல் என்ற தேசத்தின் இருப்பிற்கு, ஒருவர் மற்றவரில் தங்கியிருக்கின்றனர். பனிப்போர் காலத்தில், சோவியத் யூனியனை ஆதரித்த யூதர்களும், அமெரிக்காவை ஆதரித்த யூதர்களும் எவ்வாறு சேர்ந்து வாழ்ந்திருப்பார்கள் என்பதை கற்பனை செய்து பாருங்கள். இஸ்ரேலியரிடம் இருந்து தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இது. "தமது கருத்துகளுடன் உடன்படுபவர்கள் மட்டுமே தமிழர்கள்." என்று வாதாடும் இஸ்ரேலிய அனுதாபிகள், எந்த வகையிலும் யூதர்களுடன் ஒப்பிடப்பட முடியாதவர்கள்.

19 நூற்றாண்டில் ஆஸ்திரியாவை சேர்ந்த தியோடோர் எழுதிய "யூத தேசம்" என்ற நூல், இஸ்ரேலிய தேசியவாதத்தை அறிமுகப் படுத்தியது. பாசலில் (Basel) கூடிய முதலாவது சியோனிச இயக்க மாநாட்டிலும், யூத தேசம் எங்கே, எப்படி உருவாக்க வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்படவில்லை. சொல்லப்போனால், இரண்டாம் உலகப்போர் வரையில் இஸ்ரேல் சாத்தியமா என்பது, அவர்களுக்கே தெரியாமல் இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ரஷ்ய யூதர்கள், பாலஸ்தீனத்தை தாயகமாக் கருதி, அங்கே சென்று குடியேறினார்கள். அவர்கள் அங்கே சென்று குடியேறினார்களே தவிர இஸ்ரேல் என்ற தேசத்தை அமைக்க வேண்டும் என்று எண்ணியிருக்கவில்லை. 19 ம் நூற்றாண்டில், மேற்கு ஐரோப்பாவில் தேசியவாத அரசுகள் தோன்றின. அதனால் மேற்கு ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்கள் மத்தியில் இஸ்ரேலிய தேசியவாத சிந்தனை பரவியதில் வியப்பில்லை. அவர்களும் பாலஸ்தீனத்தில் நிலங்களை வாங்கி குடியேறுவதே சாத்தியமான நடைமுறை என நம்பினார்கள்.

1917 ம் ஆண்டு, பிரிட்டனின் தலை சிறந்த இரசாயனவியல் விஞ்ஞானி வைஸ்மன் (Weizman ), அன்றைய வெளிவிவகார அமைச்சர் பல்போர் (Balfour ) உடன் செய்து கொண்ட ஒப்பந்தமே, இஸ்ரேல் தேசத்திற்கான முதல் படி. அப்போதும் உகண்டாவில் இஸ்ரேல் என்ற புதிய தேசத்தை ஏற்படுத்துவதே பிரிட்டிஷாரின் திட்டமாக இருந்தது. தீவிர வலதுசாரி சியோனிஸ்ட் வைஸ்மன் அதற்கு உடன்படவில்லை. ஜெருசலேம் யூதர்களின் பாரம்பரிய பிரதேசம் என்றும், பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் உருவாக வேண்டும் என்றும் வலியுறுத்தினார். வெளிவிவகார அமைச்சர் ஒப்பந்தம் செய்ய உடன்பட்ட போதிலும், தான் சந்தித்த யூதர்கள் அத்தகைய தாயக கோட்பாட்டை கொண்டிருக்கவில்லை என்பதை தெரிவித்தார். "(அன்றைய) ரஷ்யாவில் கொடுமையான அடக்குமுறைக்கு உள்ளான யூதர்கள், எதற்காக அத்தகைய அடைக்கலத்தை தேடவில்லை?" என்றும் குழம்பினார்.(Balfour and Weizmann: The Zionist, the Zealot and the Emergence of Israel by Geoffrey Lewis)

பிரிட்டிஷ் அமைச்சரவையில் இருந்த ஒரேயொரு யூதரான எட்வின் மோந்தாகு (Edwin Montagu) இஸ்ரேலிய தாயக கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை. "பாலஸ்தீனத்தில் பத்து வீத சிறுபான்மையினரான யூதர்கள் எவ்வாறு இஸ்ரேல் என்ற தேசத்தை உருவாக்க முடியும்?" என்று வாதிட்டார். "அத்தகைய தேசத்தில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் அந்நியர்களாக கருதப் படுவார்கள். அதே நேரம் பிற உலக நாடுகளில் யூதர்கள் அந்நியர்களாக கருதப் படுவார்கள். பல்போர்-வைஸ்மன் ஒப்பந்தம் உலகம் முழுவதும் யூதர்கள் மீதான வெறுப்பை அதிகரிக்கும்." என்று தீர்க்கதரிசனத்துடன் கூறினார். யூதர்களின் பிரச்சினைக்கு ஐரோப்பாவினுள்ளே தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.(Balfour and Weizmann: The Zionist, the Zealot and the Emergence of Israel by Geoffrey Lewis) எட்வின் இந்தியாவுக்கான அரசு அதிகாரியாக பதவி வகித்தவர். அவரது காலத்தில் தான் ஜாலியன்வாலாபாக் படுகொலை இடம்பெற்றது. படுகொலைக்கு உத்தரவிட்ட ஜெனரல் டயரை, எட்வின் துணிவுடன் கண்டித்தார்.

பல்போர்-வைஸ்மன் ஒப்பந்தம் மத்திய கிழக்கின் பூகோள அரசியலை தலைகீழாக மாற்றியது. பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியில் முக்கியமான கொள்கை அது. பாலஸ்தீனத்தை காலனிப்படுத்திய பிரிட்டிஷார், யூதர்கள் கைகளில் ஆட்சியை ஒப்படைத்து விட்டு வெளியேறி விட்டனர். ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட தினத்தை இஸ்ரேலிய யூதர்கள் கொண்டாடி வருகின்றனர். பாலஸ்தீனர்கள் அதனை துக்க தினமாக அனுஷ்டிக்கின்றனர். இந்த இடத்தில் ஈழத்தமிழரும் ஆச்சரியகரமான ஒற்றுமையை கொண்டுள்ளனர். இலங்கையில் அரசியல் நிர்ணய சட்டமாக எழுதப்பட்ட பிரிட்டிஷ் அதிகாரி சோல்பரியின் யாப்பு, சிங்களவர்கள் கைகளில் அதிகாரத்தை ஒப்படைத்தது. அதனால் தமிழ் தேசியவாதிகள், சோல்பரி யாப்பு எழுதப்பட்ட சம்பவத்தை "தமிழரின் துக்க தினம்" எனக் கூறி வருகின்றனர்.

நிச்சயமாக யூதர்கள் மீது கரிசனை கொண்டு, பிரிட்டன் அந்த ஒப்பந்தத்தை செய்யவில்லை. சோழியன் குடுமி சும்மா ஆடாது. பிரிட்டிஷ் ஏகாதிபத்திய வரலாற்றை படித்தவர்களுக்கு தெரிந்த உண்மை அது. ஆகவே இஸ்ரேல் என்ற யூத தாயக கோரிக்கையை பிரிட்டன் (ஓரளவேனும்) ஏற்றுக் கொண்ட காரணம் என்ன?

1. ஒப்பந்தம் எழுதப்பட்ட காலத்தில் முதலாம் உலகப்போர் நடந்து முடிந்திருந்தது. ரஷ்யாவில் கம்யூனிச போல்ஷெவிக்குகள் ஆட்சிக்கு வந்தனர். ட்ராஸ்கி போன்ற பல யூதர்கள் போல்ஷெவிக் கட்சியில் தலைமைப் பொறுப்பில் இருந்தனர். அடக்கப்பட்ட யூதர்கள் மத்தியில், கம்யூனிச ரஷ்யா நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. இஸ்ரேலிய தேசியவாதத்தை வளர்ப்பதன் மூலம், ரஷ்ய யூதர்களை தான் பக்கம் ஈர்க்கலாம் என பிரிட்டன் நினைத்திருக்கலாம்.
2. முதலாம் உலகப்போர் முடிவில் உலக வல்லரசாக மாறிய அமெரிக்க அரசாங்கத்திலும் யூதர்கள் இருந்தனர். அங்கே யூத முதலாளிகளின் செல்வாக்கு அதிகரித்திருந்தது. ஒப்பந்தம் மூலம் அமெரிக்க அரசினதும், யூத முதலாளிகளினதும் ஆதரவு கிட்டும் என்று பிரிட்டன் நம்பியிருக்கலாம். உலகப்போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரிட்டனும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
3. துருக்கியரிடம் இருந்து அரபு பிரதேசங்களை விடுதலை செய்ய பிரிட்டன் உதவியது. ஜோர்டான், ஈராக் ஆகிய நாடுகள் அரேபிய விடுதலைப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டன. சிரியாவையும், லெபனானையும் பிரான்ஸ் பிரித்து எடுத்து தனதாக்கியது. பாலஸ்தீனத்தை பிரிட்டன் தனது பாதுகாப்பில் வைத்திருந்தது. பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் என்ற புதிய தேசத்தை உருவாக்குவதன் மூலம், ஐரோப்பிய நவ-காலனித்துவத்தை நிலை நிறுத்தலாம்.
4. 1917 ல் ஒப்பந்தம் எழுதப்பட்ட அதே காலகட்டத்தில் தான் வளைகுடா நாடுகளில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. எண்ணெய் வளத்தை கண்காணிக்க நம்பிக்கையான அடியாள் தேவை. இஸ்ரேல் அந்தக் கடமையை செய்யும்.
(தொடரும்)

4 comments:

Anonymous said...

"தமிழ் ஹமாஸ்" இருக்க முடியுமா? "ஆம்" என்பதற்கு இதோ வரைவிலக்கணம்:
1. தமிழர் பற்றியும் தமிழீழம் பற்றியும் அக்கறையற்று உலக விடயங்களில் மூக்கை நுளைப்பது.
2. பலஸ்தீனர்களுக்கு தனிநாடு அமைக்க பிரச்சாரம் செய்வது.
3. யூத எதிர்ப்பு, முதலாளித்துவ எதிர்ப்பு, இஸ்லாம் சார்பு, சோசலிச சார்பு பிரச்சாரம்
4. இலங்கைக்கு வெளியில் வாழ்வது

அப்படியானால், நீங்கள் ஒரு ஹமாஸ்!"
தமிழர்களுக்கு எதிராக வக்காலத்து வாங்கும் தமிழர்களுக்கு கச்சிதமாகப் பொருந்தும் வாக்கியங்கள் இவை.

நல்லவன் said...

உண்மையைச் சொன்னால் உண்மையான பயங்கரவாதிகளுக்கு நொந்துவிடுகிறது. ஈழத்தில் வாழும் மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லையெனக் கருதி, தாம் மட்டும் எந்த நரித்தனத்தைப் பயன்படுத்தியேனும் வசதியுடன் வாழ வேண்டுமென நினைக்கும் தமிழ்ச் சியோனிஸ்டுகள் நடத்தும் கபட நாடகம் நன்கு வெளிப்படுகிறது. வாழ்க கலையரசன்!

Anonymous said...

நல்லவன் எனும் பெயரில் ஒளிந்திருக்கும் தாங்கள் தமிழரா? ஈழத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு என்ன துரும்புச் சீட்டா? நீங்கள் எல்லாம் அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? வலைப்பூ நடத்தி தமிழீழம் அமைக்கவா போகிறீர்கள்? உங்கள் வலைப்பூக்கள் தமிழருக்காக என்ன செய்கின்றன?

Anonymous said...

நல்லவன் உங்கள் "பயங்கரவாதி" எனும் பதமே உங்களை யாரென்று காட்டுகிறது.