Sunday, October 17, 2010

ஆப்பிரிக்காவில் சாதி தீண்டாமைக் கொடுமை

ஆப்பிரிக்காவில் சாதிகள் தொடர்பாக நான் முன்னர் எழுதிய குறிப்புகள்,(ஆப்பிரிக்காவில் தமிழரின் வேர்கள்) தமிழ் இலக்கிய வட்டத்தினுள் ஒரு வெடிகுண்டைப் தூக்கிப் போட்டது போன்ற அதிர்ச்சியை தோற்றுவித்தது. நிறையப் பேர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை அல்லது நம்பவில்லை என்பதை, எனக்கு கிடைத்த எதிர்வினைகளில் இருந்து அறிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது.
சாதி அமைப்பு தெற்காசிய நாடுகளுக்கே பொதுவானது என்ற பொதுப்புத்தியில் உறைந்த கற்பிதத்தை உடைப்பது அவ்வளவு இலகுவானதல்ல. முதலில் ஆப்பிரிக்க நாடுகளின் சமூக அமைப்பை ஆராய்ந்த பின்னரே, இந்திய சாதியமைப்புடம் ஒப்பிட முடியும். ஆய்வுக்கு தேவையான தரவுகளை சேகரிப்பதற்கு நீண்ட காலம் தேவைப்படுவதால், ஆப்பிரிக்க சாதிகளைப் பற்றி எழுதுவதை தள்ளிப்போட்டேன். இருப்பினும் அச்சில் வெளியான எனது முதலாவது நூலான "ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா" பல வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளானது. "ஆப்பிரிக்க சமூகங்கள் இனக்குழு, அல்லது கோத்திரங்களாக பிரிந்துள்ளன. அதனை இந்திய சாதிகளுடன் ஒப்பிட முடியாது." என்ற வாதம் ஆணித்தரமாக முன்வைக்கப்பட்டது. ஆப்பிரிக்காவில் அத்தகைய பிரிவுகள் இருப்பது உண்மை தான். ஆனால் அதற்குமப்பால் சாதிய தீண்டாமை முறையும் சில நாடுகளில் நிலவுகின்றது. இந்தக் கட்டுரையில் சோமாலியா பற்றி விபரிக்கிறேன்.

ஆப்பிரிக்காவில் சாதிகள் இல்லை என்று எதிர்வினையாற்றுபவர்கள் முதலில் பின்வரும் யதார்த்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுகிறேன்.
1. எமது ஆப்பிரிக்க உலகம் பற்றிய பார்வை ஐரோப்பியர்களுடையது. ஐரோப்பியர்கள், குறிப்பாக ஆங்கிலேயர்கள் எவ்வாறு உலகத்தை பார்க்கிறார்களோ, அப்படியே நாமும் பார்க்கிறோம். இதுவரை காலமும் தமிழில் சர்வதேசம் பற்றி வந்த தகவல்கள் ஆங்கில மூலத்தில் இருந்து பெறப்பட்டவை. அதனால் ஆங்கிலேயரின் எண்ணவோட்டத்தை நாமும் பின்பற்றுவது தவிர்க்கவியலாத விளைவாகிப் போனது.
2. ஆப்பிரிக்கா என்பது ஒரு கண்டத்தைக் குறிக்கும் சொல். பூகோள படிப்பை இலகுவாக்க மனிதன் வகுத்த பிரிவு அது. ஆகையினால் ஆப்பிரிக்க கண்டத்தில் வாழும் மக்கள் அனைவருக்கும் பொதுவான கலாச்சாரம், சமூகப் பின்னணி இருக்க முடியாது. தென் ஆப்பிரிக்காவில் வாழும் ஆப்பிரிக்க சமூகங்களை, சோமாலியா போன்ற வட ஆப்பிரிக்க சமூகங்களுடன் ஒப்பிட முடியாது. இரண்டுக்கும் இடையில் பெருத்த வேறுபாடுகள் உள்ளன. ஆசியா என்று கூறி விட்டாலே, இந்திய, சீன சமூகங்களை ஒரே மாதிரியானவையாக கருத முடியுமா?
3. இன்று வரை சாதி என்றால் என்னவென்று சரியான வரைவிலக்கணம் இல்லை. ஐரோப்பியர்கள் சாதிகள் என்பது செய்யும் தொழிலை அடிப்படையாக கொண்டது என்று கருதினார்கள். நூறாண்டுகளுக்கு முன்னர் நிலப்பிரபுத்துவ ஐரோப்பாவில் அப்படியான நிலைமை இருந்தது. மேலும் Caste என்ற சொல் போர்த்துகீச/ஸ்பானிய மூலத்தைக் கொண்டது. தென் அமெரிக்கா காலனியாதிக்கத்திற்கு உள்ளான பொழுது அந்தச் சொல் தோன்றியது. ஸ்பெயின்/போர்த்துகலில் இருந்து வந்து சென்ற ஆளும் வர்க்கம், தென் அமெரிக்காவில் பிறந்தவர்கள், கலப்பினத்தை சேர்ந்தவர்கள், இவர்களைக் குறிக்க Caste என்ற சொல்லை பயன்படுத்தினார்கள். அநேகமாக ஐரோப்பிய கோணத்தில் இருந்தே, இன்று பலர் சாதியத்தை புரிந்து கொள்கின்றனர். ஆனால் சாதியம் என்பது அந்தளவு இலகுவாக புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றல்ல.

சோமாலியாவில் 1991 ல் சியாத் பாரெயின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர் நாட்டை சின்னாபின்னப் படுத்திய உள்நாட்டு யுத்தம் வெடித்தது. வெளிநாடுகளில் அந்த யுத்தத்தை பலரால் புரிந்து கொள்ள முடியவில்லை. சோமாலியா முழுவதும் சோமாலியா மொழி பேசுகிறார்கள், அனைவரும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள். எதற்காக இப்படி குழுக்குழுவாக சண்டையிட்டு மடிகிறார்கள் என்று கேட்டுக் கொண்டனர். ஒன்றில் மதப்பிரச்சினைக்காக, அல்லது மொழிப் (இனப்) பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள மட்டுமே யுத்தங்கள் நடைபெறுகின்றன என்று தான் அவர்கள் கற்றிருக்கிறார்கள். ஓரளவு உள்நோக்கி ஆராய்ந்தவர்கள் மட்டும், சோமாலியாவில் இனக்குழுக்கள் (கோத்திரங்கள்) அதிகாரப் போட்டியில் ஈடுபட்டுள்ளன என அறிந்து கொண்டனர். உண்மை தான். சியாத் பாரே அரசாங்கத்தை கவிழ்த்தவர்கள் ஹவியே சமூகத்தினர். ஜெனரல் ஐடீத் அவர்களது தலைவர் தான். ஆரம்பத்தில் அது இனக்குழுக்களை பிரதிநிதித்துவப் படுத்திய யுத்த பிரபுக்களுக்கு இடையிலான மோதலாக இருந்தது. பின்னர் அது உட்பிரிவுகளுக்குள்ளும் நடந்தது.

ஆப்பிரிக்காவில் இனக்குழு அல்லது கோத்திரம் என்பது பொதுவான மூதாதையரைக் கொண்ட சமூகமாகும். ஒவ்வொரு இனக்குழு சமூகமும் தமது பாட்டன், பூட்டன் பெயரை எல்லாம் ஞாபகமாக வைத்திருக்கின்றன. அதாவது ஒரு இனக்குழுவை சேர்ந்தவர்கள் உறவினராக இருக்க வாய்ப்புண்டு. அகமண முறை மூலம் மட்டுமே அந்த பரம்பரைப் பெருமையை பேணுவது சாத்தியம். இந்திய சாதிய அமைப்பில் கோத்திரம் என்றும், சாதிய உட்பிரிவுகள் என்றும் அழைப்பார்கள். இந்திய அமைப்பில், கோத்திரங்கள் யாவும் அநேகமாக உயர் சாதியினரிடையே மட்டுமே காணப்படும் சிறப்பம்சம் ஆகும். சோமாலியாவிலும் அவ்வாறு தான். தரோட், ஹவியே, இசாக், டிர் என்பன நான்கு முக்கிய கோத்திரங்கள். இவைகள் எல்லாம் உயர் சாதியை சேர்ந்தவை. சோமாலியாவில் காணப்படும் உயர்சாதி கோத்திரங்கள் பின்வருமாறு: Kuulbeer, Hildid, Khayr, Hubane, Aden, Aarsade, Howie, Afarta Ganbar, Gaakaab, Madaraale,Magtal, Omar, Hussein . மேற்குறிப்பிட்ட கோத்திரங்கள் நிலவுடமையாளர்கள் மட்டுமல்ல, தம்மை உயர்வாகக் கருதிக் கொள்பவர்கள். அவர்கள் உயர்ந்தவர்கள் என்றால் தாழ்ந்தவர்களும் இருக்கத் தானே செய்வார்கள்? பின்வருவன சோமாலியாவில் தாழ்ந்த சாதிகளாக கருதப்படுகின்றன. Madhiban, Maxamed Gargaarte, Muuse-Darye, Tumaal, Yibir, Howle, Mahaad-Bare . இவற்றையும் நீங்கள் இனக்குழுக்கள் என்று அழைக்கலாம். ஆனால் சில நேரம், மிட்கன் என்ற தாழ்த்தப்பட்ட சாதியின் உட்பிரிவுகளாக கருதப்படுகின்றன என்பது மட்டுமே வித்தியாசம்.

இன்றைக்கு நாம் காணும் சோமாலியா தேசத்தில் மட்டும் சோமாலியர்கள் வாழவில்லை. அந்த நாட்டுடன் எல்லைகளைக் கொண்ட அயல் நாடுகளிலும் சோமாலிய இன மக்கள் வாழ்கின்றனர். குறிப்பாக எத்தியோப்பியாவின் கிழக்கு மாகாணத்திலும், ஜிபூத்தியிலும் சோமாலியர்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். கென்யாவிலும் கணிசமான அளவு சோமாலிய மக்கள் வாழ்கின்றனர். 1991 யுத்தத்தின் பின்னர், அகதிகளாக புலம்பெயர்ந்த சோமாலியர்கள், பிரிட்டன், நெதர்லாந்து, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழ்கின்றனர். மேற்குறிப்பிட்ட நாடுகளில் எல்லாம் சோமாலியாவில் இருந்தது போல சாதிய பிரிவினை காணப்படுகின்றது. குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளிலும், ஒரு சாதியினர், மற்ற சாதி வீடுகளுக்கு போகமாட்டார்கள். தேநீர் கூட அருந்த மாட்டார்கள். புலம்பெயர்ந்த நாடுகளிலும் அந்தந்த சாதிக்குள் திருமணம் செய்யும் கலாச்சாரம் நீடிக்கின்றது. புலம்பெயர்ந்த மேற்கத்திய நாடுகளில் பொருளாதார வசதி இருக்கிறது. அதனால் ஒருவர் மற்றவரில் தங்கியிருக்க தேவையில்லை.

புலம்பெயர்ந்த நாடுகளிலேயே சாதிப் பிரிவினை தொடர்கிறது என்றால், தாயகமான சோமாலியாவில் நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கும்? தாழ்த்தப்பட்ட சாதிகள் ஓரளவு உரிமை பெற்றவர்களாக வாழ்ந்தது, சியாத் பாரே ஆட்சிக் காலத்தில் தான். இத்தாலி/பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களிடம் இருந்து சுதந்திரம் கிடைத்த சில வருடங்களில், சதிப்புரட்சி மூலம் ஆட்சியை பிடித்தார் சியாத் பாரே. சோமாலியாவை சோஷலிச நாடாக அறிவித்தவுடன் நிற்காது, செயலில் இறங்கினார். வர்த்தக ஸ்தாபனங்கள தேசியமயமாகின. கூட்டுறவுப் பண்ணைகள் உருவாகின. காலனிய மொழியான ஆங்கிலம் அகற்றப்பட்டு, நிர்வாகத்தில் சோமாலிய மொழி புகுத்தப்பட்டது. சோமாலிய தேசியத்தை வளர்ப்பதன் மூலம், சாதிகளாக, கோத்திரங்களாக பிளவுண்ட சோமாலியர்களை ஒன்று சேர்க்கலாம் என நம்பினார். இந்திய சமூகங்களில் ஒருவர் என்ன சாதி என்று நேரடியாக கேட்பது போலவே, சோமாலியாவிலும் வழக்கம் இருந்தது. சியாத் பாரே அந்த வழக்கத்தை ஒழித்தார். (இதனால் வேறு வழிகளில் சாதி அறியும் முறை தொடர்ந்தது.) சாதிய அடக்குமுறைகளில் ஈடுபட்ட உயர் சாதியை சேர்ந்த பலர் சிறைகளில் அடைக்கப்பட்டனர். தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்தவர்கள் அரசுப் பணிகளில், குறிப்பாக இராணுவ அதிகாரிகளாக அமர்த்தப்பட்டனர். இவை யாவும் சியாத் பாரே காலத்தில் நடந்த புரட்சிகர மாற்றங்கள்.

தாழ்த்தப்பட்ட சாதியினர் இராணுவத்தில், அதுவும் அதிகாரிகளாக பதவிகளைப் பெற்றது குறிப்பிடத்தக்க விடயம். வரலாறு முழுவதும், (இன்றும் தான்) தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த மக்கள் ஆயுதம் வைத்திருக்க அனுமதிக்கப்படவில்லை. தங்கள் உரிமைகளுக்காக கிளர்ந்தெழுந்த போதெல்லாம், உயர்சாதியினரால் கொடூரமாக அடைக்கப்பட்டனர். உயர் சாதி கோத்திரங்கள் தமக்குள் மோதிக் கொள்ளும் போது மட்டும், தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்கள் கைகளில் ஆயுதம் கிடைக்கும். அதாவது உயர்சாதி நிலவுடமையாளர்களின் அடியாட்களாக மட்டுமே வைத்திருக்கப்பட்டார்கள்.

தமது சாதி முன்னேற்றத்திற்கு சங்கம் அமைக்கும் உரிமை, உயர் சாதி கோத்திரங்களுக்கு மட்டுமே உள்ளது. சோமாலியாவில் இன்று வரை தாழ்த்தப்பட்ட சாதியினர் நிறுவனமயப்பட முடியாது. இந்தியாவில் தலித் சாதியினரை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகள் இருக்கின்றன. சோமாலியாவில் அதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. எப்போதாவது தாழ்த்தப்பட்ட சாதியினர் தைரியத்தை வரவழைத்து சங்கம் அமைக்க முன்வந்தால், அவர்கள் மீது அடக்குமுறை ஏவிவிடப்படும். உரிமைக்குரல் எழுப்புவோரை கொலை செய்வது, அவர்கள் குடிசைகளை எரிப்பது, அவர்கள் குடும்பத்து பெண்கள் மீது பலாத்காரம் பிரயோகிப்பது, இவை எல்லாம் உயர்சாதியினர் ஏவிவிடும் வன்முறைகள். அதற்கு நீதி கேட்டு காவல்துறையிடமோ, நீதிமன்றத்திலோ முறைப்பாடு செய்ய முடியாது. ஏனெனில் அங்கேயிருப்பவர்களும் உயர்சாதியினர் தான்.

சோமாலியாவில் உயர்சாதியினர் மட்டுமே நிலங்களை சொந்தமாக வைத்திருக்க முடியும். அதனால் பெரும் நிலவுடமையாளர்களும், பணக்காரர்களும் உயர்சாதியினர் என்பது அதிசயமல்ல. அவர்கள் பண பலத்தால், ஆயுதங்களையும் சேர்த்து வைத்திருக்கின்றனர். அதனால் உயர்சாதி கோத்திரங்களுக்கு இடையிலான தகராறுகள் ஆயுத முனையில் தீர்க்கப்படுகின்றன. ஒரு கோத்திரத்தை சேர்ந்தவர் கொல்லப்பட்டால், அல்லது பெண்கள் மானபங்கப் படுத்தப்பட்டால், பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கி விடுவார்கள். ஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டும் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ள வேண்டும். தீங்கு செய்தவர்களுக்கு எதிராக ஆயுதம் தூக்க முடியாது.

சியாத் பாரேயின் புரட்சிகர அரசுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும் ஆதரவு வழங்கியதில் வியப்பில்லை. ஆனால் சியாத் பாரே அரசு கவிழ்ந்த பின்னர் ஏற்பட்ட உள்நாட்டுப் போரின் போது, அரசுக்கு கொடுத்த ஆதரவுக்காக பழிவாங்கப்பட்டார்கள். அதனை தட்டிக் கேட்கவோ அல்லது தாழ்த்தப்பட்ட சாதியினர் பக்கம் நிற்கவோ, எந்தவொரு உயர் சாதி கனவானும் வரவில்லை. இதனால் உள்நாட்டுப் போரில் தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனர். மேற்குலகில் சோமாலியருக்கு அரசியல் தஞ்சம் வழங்கிய நாடுகளில் இந்த விடயம் தெரியும். இதனால் சில உயர்சாதி அகதிகளும், தம்மை தாழ்த்தப் பட்ட சாதியை சேர்ந்தவர்களாக பொய் கூறி அகதி அந்தஸ்து பெற்றனர். (அகதிமுகாமில் வாழ்ந்த சோமாலியர்கள் வழங்கிய தகவல்.)

சோமாலியர்கள் செய்யும் தொழில் கூட அவர்களது சாதியை தீர்மானிக்கின்றது. இந்திய சமூகத்தில் செட்டியார்கள், வெள்ளாளர்கள் போல, சோமாலிய உயர்சாதியினரும் ஒன்றில் விவசாயத்தில் அல்லது வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பார்கள். இந்திய சமூகத்தில் உள்ளது போலவே, சோமாலிய தாழ்த்தப்பட்ட சாதியினர் உயர்சாதி வீடுகளில் குடிமை வேலை செய்து பிழைத்து வந்தனர். அவர்கள் சிறு துண்டு நிலமேனும் சொந்தமாக வைத்திருக்க முடியாது. ஆனால் குத்தகை விவசாயியாக இருக்க முடியும். உயர்சாதி வீடுகளில் ஆண் குழந்தை பிறந்தால், அல்லது பெண் பிள்ளை திருமணம் முடித்தால், யிபிர் சாதியினருக்கு சிறு தொகை பணம் கொடுப்பார்கள். அதாவது இந்திய சமூகத்தில் வண்ணார்கள் போன்றவர்கள் இபிர்கள்.
According to a Somali professor at the Department of African Studies, University of Florida in Gainsville, the Yibir are not a clan but an occupational class "found everywhere in Somalia"(http://www.unhcr.org/refworld/topic,463af2212,4860acd02,3ae6acab34,0.html)

இபிர் சாதியினர் இஸ்ரேலில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்று ஒரு கதை உண்டு. அதனாலும் அவர்கள் மீதான அடக்குமுறை அதிகம். சோமாலிய சாதிய அமைப்பில் வந்தேறு குடிகள், பூர்வீக மக்களுக்கு இடையிலான வேறுபாடும் முக்கிய பங்கு வகிக்கின்றது. சோமாலியா மொழி பேசும் உயர்சாதியினர் அரேபிய வம்சாவளியினர் என நம்புகின்றனர். இது இந்தியாவில் ஆரிய வம்சாவளியினராக கருதப்படும் பிராமணருடன் ஒப்பு நோக்கத்தக்கது. இந்திய பிராமணர்கள் பல வர்ணங்களாக அல்லது கோத்திரங்களாக பிரிந்துள்ளதைப் போலவே, சோமாலிய உயர்சாதியினரும் இனக்குழுக்களாக (clan) பிரிந்துள்ளனர். ஆனால் தாழ்த்தப்பட்ட சாதியினர் சோமாலியாவின் பழங்குடியினர் என சமூக-விஞ்ஞான ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதை மெய்ப்பிப்பது போல அவர்கள் பேசும் சோமாலிய மொழி சற்று மாறுபாடான வட்டார மொழிகளாக காணப்படுகின்றது. இதை விட வெளிப்படையாக தெரியக்கூடிய தோற்ற வேறுபாடுகள் எதுவும் கிடையாது.

சோமாலியாவில் உள்ள சாதி அமைப்பு அந்த நாட்டிற்கு உரிய தன்மைகளைக் கொண்டுள்ளது. ஆப்பிரிக்காவில் சாதி அடக்குமுறை பெருமளவில் காணப்படும் இன்னொரு நாடு மொரிட்டானியா. அதைப் பற்றி விரிவாக பிறிதொரு கட்டுரையில் பார்க்கலாம். சோமாலியாவில் நிலவும் சாதி அமைப்புமுறை, சாதிய ஒடுக்குமுறைகளை பற்றிய தகவல்களை தந்துதவிய, நெதர்லாந்து வாழ் சோமாலிய அகதிகளுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலதிக விளக்கம் தேவைப்படுவோர் கீழ்வரும் சுட்டிகளில் வாசிக்கலாம்.

The Yibir in Somalia: A Plight of a Caste Group
Brief Review of Somali caste systems
Siad Barre

4 comments:

மாசிலா said...

அருமையான கட்டுரையை தமிழில் அறியக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

Anonymous said...

தகவலுக்கு நன்றி! சோமாலியா விடயத்தில் மதம் தோற்றுவிட்டதுபோல் தெரிகிறதே?

என்னதான் சாதியமைப்பு ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் காணப்பட்டாலும் தங்களை உயர்குடிகளாகக் நினைத்துக்கொள்வோர் மேற்கத்தவரால் கீழ்மைப்பட்டவர்களாகவே பார்க்கப்படுகின்றனர். இவர்கள் செய்யும் தொழில்களும்கூட அப்படிப்பட்டதே. முடிந்தால் இதுபற்றி எழுதுங்கள். நன்றி

Kousalya Raj said...

உண்மையில் தெற்காசியாவில் அதுவும் முக்கியமாக இந்தியாவில் தான் சாதிய அமைப்புகள் அதிக அளவில் இருக்கின்றன என்பது தான் பரவலான ஒரு எண்ணம்..ஆனா நீங்க இங்கே எடுத்துவைக்கும் உதாரணங்கள் மிகவும் வியப்பாக இருக்கிறது. எனக்கு தெரியாத தகவல்கள் கூட....

ஆப்பிரிக்காவில் தமிழக வேர்கள் இன்னும் நான் படிக்கவில்லை....இனி படிக்கணும்.... தகவல்களுக்கு நன்றி.

Kalaiyarasan said...

நன்றி மாசிலா, கௌசல்யா மற்றும் பெயற்ற நண்பருக்கும்.
ஆப்பிரிக்காவில் இனக்குழுக்கள் மட்டுமே உள்ளன, சாதிகள் இல்லை என்று சிலர் வாதம் செய்த காரணத்தால் இந்தப் பதிவை கால அவசியம் கருதி எழுதினேன். ஆப்பிரிக்காவில் சாதியம் பற்றிய ஆய்வு இன்னும் முடியவில்லை. ஆப்பிரிக்காவில் சாதி அடக்குமுறைக்கு பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களையும் தொகுத்து வருகிறேன். அப்போது இன்னும் பல வியக்க வைக்கும் தகவல்கள் வெளிவரும் என நம்புகிறேன்.