Sunday, October 24, 2010

18 வது திருத்தம்: அனைத்து அதிகாரங்களும் ஜனாதிபதிக்கே!

Sri Lankan constitution and democratic rights

S. G. Punchihewa

சட்டத்தை கேள்விக்குள்ளாக்குவதும், உண்மை பேசுவதும் எமது நாட்டில் மரண பயத்தை உண்டாக்கியுள்ளது. இந்நாட்டில் எத்தனையோ சட்ட நிறுவனங்கள், ஆணைக்குழுக்கள், சுற்றறிக்கைகள், ஆணைகள் ஏராளம் இருக்கின்றன. ஆனால் நீதி மட்டுமே அரிதாகக் கிடைக்கின்றது. ஊழலை ஒழித்துக் கட்டுவதிலும் பார்க்க, அதனை பகிரங்கப் படுத்துபவரே ஒழித்துக் கட்டப் படுகின்றார். தாக்கியவர் இன்றி எவரும் காயப்படலாம். கடத்தியவர் இன்றி எவரும் காணாமல்போகலாம். மூன்று ஊடக நிறுவனங்கள் எரியூட்டப்பட்டன. போலிஸ் இன்னும் புலன் விசாரணை செய்து கொண்டிருக்கின்றது. சந்தேகத்தின் பேரில் தீப்பெட்டிகள் தடுத்து வைக்கப்படலாம். Text Color

ஜனாதிபதி எவ்வளவு சக்தி வாய்ந்தவர்?
1990 ல், யு.என்.பி. ஆட்சியில் இருந்த போது, கானாமல்போவதற்கும், கொலைகளுக்கும் எதிராக எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றன. ரிசார்ட் டி சொய்சா என்ற எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலரும் காணாமல் போன சம்பவத்தை குறிப்பிடலாம். பின்னர் அவரது பிணம் மொரட்டுவ கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டது. அவசரகால நிலைப் பிரகாரம் எதிர்ப்பு நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டிருந்தன. தடையை மீறி கருத்தரங்குகளும், சந்திப்புகளும் இடம்பெற்றன. ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் இருந்து இரண்டு பேர் கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர். "ரிசார்ட் சொய்சாவுக்கு என்ன நடந்தது?" அன்றைய ஜனாதிபதியை நோக்கி கேள்வி எழுப்பிய அந்த இருவரில் ஒருவர் மகிந்த ராஜபக்ச, மற்றவர் எமது நண்பரான பிரகீத் எக்னேக்ளிகொட. இன்று "பிரகீத்துக்கு என்ன நடந்தது?" என்ற அதே போன்ற கேள்வியை மகிந்த ராஜபக்சவிடமும் எழுப்ப வேண்டிய சோகமான முரண்நகை தோன்றியுள்ளது.

அரசியல் அமைப்பு சட்டத்தின் 18 ம் திருத்தம், பதவிக் காலத்திற்கு இருந்த வரையறையை நீக்கியுள்ளது. தற்போது அவர் தெரிவானால் நிரந்தரமாக (6 வருட தவணைகள்) பதவியில் நிலைக்கலாம். 18 வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம், சுதந்திரமான ஆணையகத்தினால் தேர்தல்கள் நடத்தப்பட மாட்டாது. மாறாக அனைத்து அதிகாரங்களும் கொண்ட ஜனாதிபதியே தீர்மானிப்பார். ஏனென்றால் ஆணையகத்தின் உறுப்பினர்களை அவரே நியமிக்கிறார். ஆணையகம் தேர்தல்களை நடத்துகின்றது. தேர்தல்களை நடத்துவதற்கு காவல்துறையின் சேவை அவசியம். போலிஸ் தலைமை அதிகாரியையும் அவரே நியமிப்பார். அரசாங்க ஊழியர்கள் அநேகமாக எல்லா தேர்தல் கடமைகளையும் முன்னெடுப்பார்கள். ஆனால் பொதுநல சேவைகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதியாலேயே நியமிக்கப்படுகின்றனர். யாராவது சுதந்திரமான, நீதியான தேர்தலை எதிர்பார்க்க முடியுமா? அப்படி ஒன்று இதுவரை இருந்ததுமில்லை, இனி இருக்கப் போவதுமில்லை.

தலைமை நீதியரசரையும், உச்ச நீதிமன்ற நீதிபதியையும், அரச சட்டத்தரணியையும் அவரே தீர்மானிக்கிறார். அதனோடு அவர் தன்னை பாதுகாப்பு அமைச்சராகவும், நிதி அமைச்சராகவும் நியமித்துக் கொள்கிறார். தேர்தல்களில் பெருமளவு பணத்தை செலவழிக்கிறார். எந்த திகதியில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதையும் அவரே தீர்மானிக்கிறார். கடைசி மாகாண சபை தேர்தல்கள் எல்லாம் ஒரே நாளில் நடத்துவதற்கு பதிலாக, தனித்தனியாக நடத்தப்பட்டன.

அரசியல் அமைப்பு சட்டத்தில் உறுதிப்படுத்தப் பட்ட அதிகாரங்கள் சில:
70 (1): ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு, ஒத்தி வைப்பதற்கு, அல்லது கலைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கலாம்.
70 (1a) பொதுத் தேர்தல் நடந்த திகதியில் இருந்து ஒரு வருட காலம் முடியும் வரையில், ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைக்காமல் வைத்திருக்கும் அதிகாரத்தை வழங்குகின்றது.
31 (3) A (a) (1): தற்போதைய பதவிக்காலத்தின் நான்காவது ஆண்டு நிறைவடைந்த பின்னர், ஜனாதிபதி எந்நேரமும் அடுத்த தவணைக்கான தேர்தலை அறிவிக்கலாம்.

அவர் தனது அதிகாரத்தை பிரயோகிக்கும் காலத்தில் இடம்பெறும் அதிகார துஷ்பிரயோகம், சட்ட மீறல், அல்லது தவறிழைப்பதற்கு எதிராக மக்களுக்கு எந்தவொரு சட்ட ரீதியான பரிகாரமும் கிடையாது. ஏனென்றால் (35) வது ஷரத்தின் பிரகாரம் அவர் தண்டனைகளுக்கு அப்பாற்பட்டவராவார்.

அரச ஊடகம் என்றாலென்ன, தனியார் ஊடகம் என்றாலென்ன, அனைத்து ஊடகங்களும் அவரது கட்டுப்பாட்டின் கீழே வருகின்றன. அரச ஊடகம் நேரடியாக அவரது செல்வாக்கின் கீழே உள்ளது. தனியார் ஊடகம் தனது சொத்துகளை இழந்து விடுவோமோ என்ற அச்சத்தில் அரச பரப்புரைகளுடன் ஒத்துப் போகின்றன. ஊடக பிரச்சாரம், பதாகைகள், விளம்பர தட்டிகள் எல்லாம், மக்களின் மனதில் ஜனாதிபதியின் மேலான மதிப்பை அதிகரிப்பதற்காக பயன்படுகின்றன. ஒவ்வொரு நாளும் மாபெரும் ஆட்சியாளர் பற்றிய சித்திரம் காட்சிப் படுத்தப் படுகின்றது.

மக்கள் திரளின் முன்னால் பேசப் போகும் போதெல்லாம், ஒரு குழந்தையை கையில் ஏந்திய பெண்ணை திடீரெனக் காண்கிறார். மாமனிதர் அந்தக் குழந்தையை வாங்கி தூக்கிப் பிடிக்கிறார், சிரிப்பூட்டுகிறார், தாயுடன் சில வார்த்தைகளை பரிமாறிக் கொள்கிறார். ஊடகவியலாளர்கள் இந்த நிகழ்வை படம்பிடித்துக் காட்ட தயாராக இருக்கின்றனர். தொடர்ந்து சில நாட்களுக்கு திரும்பத் திரும்ப ஒளிபரப்பாகும்.

உரிமை மீறல்களை எதிர்த்து மக்கள் போராடும் பொழுது, அது "தேசத்தின் பாதுகாப்புக்கு" அச்சுறுத்தலாக பார்க்கப்பட்டு, ER அல்லது PTA சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அது எப்போதும் அதிகாரத்தை கொண்டிருப்பவரின் மொழியிலேயே வரையறுக்கப்படும். அவர்கள் தேசத்தின் பிரஜைகள். அவர்கள் பாதுகாப்பு, தேசத்தின் பாதுகாப்பு. இந்த அமைப்பை அலட்சியப் படுத்தும் அனைவரும், அதனால் பயனடைபவர்களே ஆவர்.

பன்னிரண்டு பாராளுமன்ற குழுக்கள் உள்ளன. அவற்றில் இரண்டு:
* பொதுநல
அமைப்புகளுக்கான குழு
* பொதுநல நிதிகளுக்கான குழு.

இந்தக் குழுக்கள் அரசாங்கத்தின் செலவுகளை மேற்பார்வையிடலாம். கணக்கு நிலுவைகளை சரிபார்ப்பதற்கான இந்தக் குழுவின் தலைவரை எதிர்க்கட்சியில் இருந்து தெரிவு செய்வதே சம்பிரதாயமாகும். தற்போது அமைச்சர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஆகவே எந்த கையாடலும் அம்பலமாகலாம்.

பாராளுமன்றம் மேற்பார்வையிடும் அதிகாரத்தைக் கொண்டிருந்தது. ஆணைக்குழுக்களாலும், விவாதங்களாலும், கூட்டங்களாலும், கேள்விகளாலும் அந்த அதிகாரங்கள் நடைமுறைப் படுத்தப் பட்டன.

எமது சுதந்திரத்தின் அடிப்படை

எமது நாட்டின் நிலை என்ன? நாம் எமது தசைகளுக்கு உணவூட்டும் சுதந்திரத்தைப் பெற்றுள்ளோம். எமது உடலைப் பாதுகாப்பது எப்படி? சுகாதார அமைச்சினால் காக்கப்படும் நோய்கள் அவை.

ஆட்சியாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையே நாம் நினைக்க வேண்டும். நாம் பெறும் கல்வியின் அடிப்படை என்ன? அடிமையாகும் பயிற்சிக்கான பாடத்திட்டங்கள். சட்டம் என்பது காகிதத்தில் அச்சிடப்பட்ட எழுத்துக்கள் மட்டுமே. நீதியான தீர்ப்பு என்பது சட்டபூர்வ எந்திரன்களால் உச்சரிக்கப்படும் ஒரு தொகுதி சொற்கள். தேசபக்தி இனவாதிகளின் மூர்க்கமாகி விட்டது. அரசியல் பயிற்சியின் விளைவு என்ன? சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து சாக்கடையாக மாறி வருகின்றது. தற்போது அவர்கள் எமது இறுதிப் பொக்கிஷமான ஆன்மாக்களை திருடுகிறார்கள்.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நாட்டில் சுதந்திரத்தின் அடிப்படை என்ன? ஆயுதங்களை வைத்திருப்பவர்கள் சுதந்திரமாக சுடலாம். குற்றவாளிகளை அம்பலப் படுத்துபவர்கள் பட்டப் பகலில் கொலை செய்யப்படுவார்கள். போலிஸ் அதன் பிறகு என்ன செய்யும்? கொலையானது ஒரு இனத்தெரியாத நபரினால் செய்யப்பட்டது என்பதை நிரூபிப்பதற்காக, தகவல்களைத் தேடுவார்கள். இறந்தவனின் மரணத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறும்.

ஒரு பிரஜையின் கடமை என்ன? நடந்தவை எல்லாவற்றையும் மறந்து விட்டு, அரச ஊடகம் சொல்வதை நம்ப வேண்டும்.

ஒருவர் கேட்கக் கூடாத கேள்விகள் இவை:
- யார், எப்படி கொலை செய்தார்கள்?
- கடத்தல் புரியும் படைகளை அனுப்புவது யார்?
- கொலை செய்யும் துப்பாக்கிகளை யார் வைத்திருக்கின்றனர்?
-உயர் பாதுகாப்பு வலயத்தினுள் கொலைகள், தாக்குதல்கள், துப்பாக்கிச் சூடுகள் நடைபெறுவது எவ்வாறு சாத்தியமாகின்றது?

சட்டத்தை கேள்விக்குள்ளாக்குவதும், உண்மை பேசுவதும் எமது நாட்டில் மரண பயத்தை உண்டாக்கியுள்ளது. இந்நாட்டில் எத்தனையோ சட்ட நிறுவனங்கள், ஆணைக்குழுக்கள், சுற்றறிக்கைகள், ஆணைகள் ஏராளம் இருக்கின்றன. ஆனால் நீதி மட்டுமே அரிதாகக் கிடைக்கின்றது. ஊழலை ஒழித்துக் கட்டுவதிலும் பார்க்க, அதனை பகிரங்கப் படுத்துபவரே ஒழித்துக் கட்டப் படுகின்றார். தாக்கியவர் இன்றி எவரும் காயப்படலாம். கடத்தியவர் இன்றி எவரும் காணாமல்போகலாம். மூன்று ஊடக நிறுவனங்கள் எரியூட்டப்பட்டன. போலிஸ் இன்னும் புலன் விசாரணை செய்து கொண்டிருக்கின்றது. சந்தேகத்தின் பேரில் தீப்பெட்டிகள் தடுத்து வைக்கப்படலாம்.

வடக்கில் அவர்கள் கூறும் வெற்றியானது, திரைமறைவில் முழு நாட்டிற்குமான அடக்குமுறையாக உள்ளது. இந்த நிலைமை குறித்து நீங்கள் பேசினால், அது அந்நிய நாட்டு சாதியாகவோ, அல்லது புலிகளின் குரலாகவோ மாசு கற்பிக்கப்படலாம். இந்த தேசத்தில் இரண்டு வகையான மக்கள் மட்டுமே உள்ளனர். ஜனாதிபதி அவற்றை பின்வருமாறு வகைப்படுத்துகின்றார்: "இந்த தேசத்தை நேசிக்கும் ஒரு பிரிவினர். மற்றவர்கள் துரோகிகள்." இந்த நாட்டை நேசிப்பவராயின் நீங்கள் ஒன்றில் அடங்கிப் போக வேண்டும், அல்லது மௌனமாக இருக்க வேண்டும். அதிகாரத்திற்கான பேராசை இந்த நாட்டில் சட்டமாகி விட்ட மோசமான தருணம் இது. அதனால் வடக்கில் இருந்து தெற்கு வரை தெளிவை விருத்தி செய்வது பயங்கரமான கனவாக இருக்கும். மக்கள் போராட்டம் மட்டுமே இந்த நிலையை மாற்றும்.

ஜனாதிபதி தனது முதலாவது பதவிக்காலம் ஆரம்பமான போது எடுத்த உறுதிமொழி இது. நவம்பரில் இரண்டாவது தடவை அதே உறுதிமொழியை எடுக்கலாம்.
"நான்,... மனப்பூர்வமாக உறுதியாக அறிவிக்கிறேன்: நான் விசுவாசத்துடன் இந்த கடமையை நிறைவேற்றுவேன்.... இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரகாரம்.... இலங்கை குடியரசுக்கு நான் விசுவாசமாக இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியல் நிர்ணய சட்டத்தை பாதுகாப்பதற்கு முடிந்த அளவு பாடுபடுவேன். "

அது ஒரு உரையாக இருந்த போதிலும், வித்தியாசமாக அர்த்தப்படலாம். இதுவரை காலமும் அவரது செயல்களில் இருந்து உண்மையான அர்த்தத்தை பிரித்தறியலாம். யுத்தத்தை தவிர, அவர் கூறிய எதையும் நிறைவேற்றவில்லை. அவர் செய்தவை எல்லாம் சட்டத்திற்கு மாறானவை.

"நான், ... மனப்பூர்வமாக உறுதியுடன் அறிவிக்கிறேன்: நான் ஜனாதிபதிக்குரிய கடமைகளை நிறைவேற்ற மாட்டேன். இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியல் அமைப்பு சட்டத்தின் படியும், சட்டத்தின் படியும் நடக்க மாட்டேன். இலங்கை குடியரசுக்கு விசுவாசமாக இருக்க மாட்டேன். எனது குடும்பத்திற்கு விசுவாசமாக முடிந்த அளவு பாடுபடுவேன். சட்டத்தை மீறுவதுடன் அராஜகத்தை தூக்கிப் பிடிப்பேன். கொள்ளைக்காரர்களின் உரிமைகளுக்காக பாடுபடுவேன். நான் இத்தனை காலமும் செய்தவற்றை தொடருவேன் என உறுதி கூறுகின்றேன். "

அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னர், நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை இரத்து செய்வதாக கூறினார். அதைச் செய்வதற்குப் பதிலாக, இன்னும் அதிக அதிகாரங்களை திரட்டிக் கொண்டு, அனைத்து அதிகாரங்களையும் கொண்ட ஜனாதிபதியாகி விட்டார்.

மக்கள் போராட்டம் மட்டுமே நிலைமையை மாற்றும். அது நடக்கலாம்!

(S.G Punchihewa இலங்கையில் பலரும் அறிந்த எழுத்தாளர், கவிஞர், மனித உரிமைகள் ஆர்வலர். 2005 ம் ஆண்டு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் தேசிய மனித உரிமைகள் ஆணையகத்திற்கு நியமிக்கப்பட்டார். அரசமைப்பு பிரதிநிதிகள் குழுவொன்று அந்த நியமனத்தை செய்ய வேண்டும் என்ற காரணத்தைக் காட்டி, திரு. புஞ்சிஹேவ அந்த பதவியை ஏற்க மறுத்து விட்டார். இன்று இலங்கையில் பகிரங்கமாக மாற்றுக் கருத்துகளுக்காக குரல் கொடுக்கும் மிகச் சில நபர்களில் ஒருவர். அவரது அண்மையை உரைகளில் இருந்து எடுக்கப்பட்ட பகுதி இது.)
(ஆங்கில மூலப்பிரதியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது.)

No comments: